Advertisement

அத்தியாயம் 6

“இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்” என்று மனைவியை முறைத்தான்.

“ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும் போல தோணுது. போக காரணமும் இருக்குது. போனா தான் என்ன?” இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றேயாக வேண்டும் என்று இரண்டு நாட்களாக முன்னும், பின்னும் நின்று  தாஸை நச்சரிக்கலானாள் மிது.

“பைத்தியமாடி நீ. சொன்னா புரியாதா? எனக்கு ஆபீஸ்ல லீவு கிடைக்காது. நாம லீவு போட்டு ஊருக்கு போனா மட்டும் கறி, விருந்து கொடுத்து நம்மள கவனிச்சுப்பாங்க பாரு. உன் வீட்டாளுங்க என்ன வெட்டி பொலி போடுவாங்க. என் வீட்டாளுங்க உன்ன வார்த்தையாலையே பந்தாடுவாங்க. இது தேவையா நமக்கு?” கடுமையாக எதிர்த்தான் தாஸ்.

“உண்மைய சொல்லு நீ உன் அம்மா கூட போன்ல செல்லம் கொஞ்சுறதாலத் தானே ஊருக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்கிற? எங்க நான் ஊருக்கு போனா, உன் வண்டவாளமெல்லாம் தண்டவாளமேறிடும் என்று பயப்படுறியா தாஸ்?” நக்கல் கலந்த தொனியில் கேட்டாள் மிது.

தாஸை அழைத்து பணம் கேட்க வேண்டி அகல்யா அடிக்கடி பேசுவாள். அது அண்ணன் என்ற உரிமையில் மட்டுமல்ல தாஸுக்கு அவள் மீது தனிப் பாசம் இருப்பதனால் தான் என்று மிதுவுக்கு நன்றாகவே தெரியும். அகல்யா பேசும் பொழுது அன்னையான மதுமிதா தாஸோடு பேசுகிறாளோ, கணவன் தன்னிடம் மறைகிறானோ என்ற சந்தேகம் மிதுவுக்கு இருந்தாலும் இதுவரை தாஸிடம் கேட்டதில்லை. 

மிதுவின் வீட்டிலிருந்து யாருமே அவளோடு பேசுவதில்லை. தன் வீட்டாருக்கு தன் மீது பாசமே இல்லையா? நான் அப்படி என்ன கொலை குற்றமா பண்ணி விட்டேன்? சொந்த அத்தை பையனை தானே காதலித்து திருமணம் செய்தேன். தாஸ் என் அப்பத்தாவுக்கு சொந்த பேரன். என் வீட்டாருக்கு என் மீது மட்டுமல்ல அவன் மீதும் பாசம் இருந்திருக்க வேண்டும் இதுவரை யாருமே அழைத்துப் பேசியது இல்லை. 

அவன் வீட்டாளுங்களுக்கு நான் தான் யாரோ. அப்படிப்பார்த்தால் என் வீட்டாரை விட தாஸின் வீட்டார் தான் என்னை திருமணம் செய்ததற்காக அவன் மீது கோபம் கொண்டு அவனோடு பேசாமல் இருக்க வேண்டும்.

தினமும் இல்லாவிட்டாலும் அகல்யா வாரத்தில் இரண்டு நாள், அல்லது ஒரு நாளாவது பேசுவாள். வீட்டில் இருக்கும் பொழுது அலைபேசி அழைப்பு வருவதால், அது தன் கவனத்துக்கு வருகிறது. இதுவே தாஸ் காரியாயத்தில் இருந்தால் அவன் வீட்டிலிருந்து யார், யாரெல்லாம் அவனோடு பேசுகிறார்களோ? அவன் அன்னை கூட அவனோடு பேசுவாளாக இருக்கும்.

மதுமிதா தாஸிடம் பேசுவதோ, செல்லம் கொஞ்சுவதோ மிதுவுக்கு பிரச்சினையில்லை. எங்கே தாஸ் மதுமிதாவோடு பேசுவதை தான் சகஜமாக எடுத்துக் கொண்டால் உன் வீட்டாருக்கு உன் மீது பாசமில்லை. உன்னை பற்றிய கவலையுமில்லை என்று கோபத்திலையோ, கேலியாகவோ தன்னை வெறுப்பேத்த, கடுப்பேத்த, கோபப்படுத்த தாஸ் வேண்டுமென்றே அன்னையிடம் தன் முன்னிலையில் செல்லம் கொஞ்சுவானோ என்கிற பயம். பயத்தை தாண்டி தனக்கு கிடைக்காத தாய் பாசம் அவனுக்கு கிடைக்கிறதே என்கிற பொறாமை.  அவனிடம் தான் தோற்றுப் போகக் கூடாது, சண்டையென்று வரும் பொழுது தன்னை பேச அவனுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்கிற ஒரு வித சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.

ஒருவேளை மாமியார் கணவனோடு பேசுவதாயின் தன்னை பற்றி விசாரிக்காமளா இருப்பாள்? கோபத்தில் இருக்கும் மாமியார் சீரியல் வில்லி போல் கணவனிடம் விசாரிப்பதும், தாஸ் அதற்கு பம்மியவாறே பதில் சொல்வதும் கண்ணுக்குள் வர, “அந்தம்மா கீ கொடுத்தா இவன் என் கிட்ட வந்து பாட்டு பாடுவானா? நான் காது கொடுத்து கேட்டா தானே” முறிக்கிக் கொள்பவள் அவனது அலைபேசி அடித்தால் யார் அழைக்கிறார்கள் என்று, என்ன பேசுகிறார்கள் என்று காதை கொடுப்பாளே ஒழிய அவனிடம் எதையும் கேட்க மாட்டாள்.

அவன் நேரம் பேசியே இவளிடம் மாட்டிக் கொண்டு வாங்கிக் கட்டியும் கொள்வான்.

அகல்யா பேசும் பொழுது ஒருவேளை மாமியார் பேசுவாளோ, அல்லது அகல்யா மூலம் தனது எண்ணங்களை சொல்லி விடுகிறாளோ மிதுவுக்கு தெரியவில்லை. காலங்காலமாக மாமியார் மருமகளுக்கிடையில் நடக்கும் சண்டை இங்கே ஒருவித மௌன யுத்தமாக நிகந்து கொண்டிருக்கிறது, இது தாஸுக்கே தெரியவில்லை. 

தாஸ் மிதுவை வெறுப்பேற்ற முன், அவளே அவனை சந்தேகப்படுவது போல் பேசி கடுப்பேற்றுவாள். இனி அவன் மதுமிதாவோடு பேசினால் கூட அவளிடம் கூறுவானா? இந்த ஜென்மத்தில் கூற மாட்டான்.

“அடியேய் அறிவுகெட்டவளே… அம்மா கூட போன்ல பேசினா, நான் தானே மொத ஆளா ஊருக்கு போக தயாராகி நிற்கணும். புரியாதா உனக்கு?” எரிந்து விழலானான்.

மதுமிதாவோடு தாஸ் பேசவில்லை என்றதும், நானும் தான் கண் கொண்டு பார்க்கவில்லை. காது கொடுத்து கேட்கவில்லை கணவன் கூறுவது உண்மையென்று ஒரேயடியாக அவனை நம்பத் தயாராக இல்லை மிது. ஒருவேளை தன்னை விட்டு விடும்படி இவன் அன்னை இவனை அலைபேசியில் நச்சரிக்கின்றாளோ அதை சொல்ல தயங்கின்றானோ? எப்படி இவன் வாயால் அதை பெறுவது? “அப்போ எதுக்கு நீ ஊருக்கு வர மாட்டேன்னு அடம்பிடிக்கிற?” அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“எதுக்கு இப்போ நாம ஊருக்கு போகணும்?” இவனும் விடா கொண்டனாக மல்லுக்கு நின்றான்.

“உண்மையைச் சொல்லு. எவ கூடயாவது எபயார் வச்சிருக்கிறியா? அந்த சிரிக்கிய விட்டுட்டு ஊருக்கு வர முடியாதுன்னு யோசிக்கிறியா? அவ கூட தீபாவளிக்கு சினிமாக்கு போக பிளான் பண்ணி இருக்கியா? ஊருக்கு போனா எல்லாம் நாசமாக போகும் என்று பயமா இருக்கா?” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு குற்றச்சாட்டை அடுக்கினாள். இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்தால் எந்த மனிதனுக்குத்தான் கோபம் வராது? கோபத்தில் தாஸ் வெடித்து மனதில் இருப்பதை கூறுவானென்று எதிர்பார்த்தாள் மிது.

அவள் ஸ்வேதாவின் பெயரை கூறாமல் யாரோ ஒருத்தியை பற்றி பேசும் பொழுதே அவள் அவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. ஊருக்கு வராததற்கு காரணமும் கேட்கவில்லை. அவனை வெறுப்பேத்துகிறாள் என்று தாசந்தனுக்கு நன்றாகவே புரிந்தது. இல்லாத ஒன்றை இவளால் மட்டும் தான் கற்பனை செய்து கூற முடியும் என்று மிதுவை மலைத்துப் பார்த்தவன் அமர்ந்து விட்டான்.

“இவள சமாளிக்க நான் ஏழு ஜென்மம் வனவாசம் போனாலும் பத்தாது போலையே” முணுமுணுத்தவன் “இங்க பாரு. என் ஆபீஸ்ல லீவு கொடுத்தா தான் ஊருக்கு போறோம். இல்லையா, ஊருக்கு போக மாட்டோம். நான் சொன்னா சொன்னது தான்” என்றான்.

கணவன் தன்னை கண்டு கொண்டதில் இவளும் மேலும் சீண்டாமல் கோபத்தை மட்டும் இழுத்துப் பிடித்தவாறு “ஓ… லீவு கேக்குறேன்னு என்கிட்ட சொல்லிட்டு, கேட்காமலேயே இருந்திடலாமான்னு எண்ணமோ? என் கண்ணு முன்னாடி மெயில் பண்ணு. அப்புறம் லீவு கிடைக்குமா? கிடைக்காதா? என்று பார்க்கலாம். அது எப்படி கிடைக்காமல் போகும்? ஏழு வருஷமா லீவு எடுக்காதவன் கேட்டா, ஒரு மாசம் கூட லீவு கொடுக்கணும் இல்லையா” என்றவளை தாஸ் ஏகத்துக்கும் முறைத்தான்.

“இப்போ எதுக்கு நீ ஊருக்கு போயே ஆகணும் என்று அடம்பிடிக்கிற? அந்த பாரிய வேணாம்னு சொல்லிட்டு வந்தோமே, அவன் போலீஸ்காரனா, சிக்ஸ்பெக்கோட இருக்கானே. அவன் எவள  கல்யாணம் கட்டியிருக்கானோ. எப்படி குடும்பம் நடத்துறான்னு பார்க்க போறியா?பொம்பளைங்களுக்கு இருக்கிறதை வச்சி வாழத் தெரியாது. எப்பவும் பறக்குறத பத்தி மட்டும்தான் யோசிப்பாங்க” “நீ மட்டும் தான் என்னை வார்த்தைகளால் பந்தாடுவாயா? நான் குட்ட குட்ட குனிஞ்சிகிட்டே இருக்கணுமா? இந்த வாங்கிக்க” என்று சந்தடி சாக்கில் அவளை திட்டலானான்.

வளமையாக இதுபோல் நெருஞ்சி முள்ளான வார்த்தைகளை உபயோகித்து மிது தான் பேசுவாள். பாரியின் மீதி இருந்த ஒரு வித அச்சம் கலந்த வெறுப்பும், மிது தான் சொல்வதை கேட்பதில்லை என்ற கோபமும் தாஸை இவ்வாறெல்லாம் பேச வைத்திருந்தது. எவ்வளவு தான் இவன் பொறுமையாக இருப்பான்? கொஞ்சமாச்சும் கோபத்தில் பேசிட மாட்டான்னா? பேசிவிட்டான்.

சில்லறையை சிதறவிட்டது போல் சிரித்தவள் “பாரி மாமாக்கு இன்னும் கல்யாணமே ஆகல” என்றாள்.

பாரியை அவள் மாமா என்று அழைப்பதே இவனை கடுப்பேற்ற அது வேறு இவன் முகத்தை சுளிக்க செய்ய, அவள் கூறிய செய்தியில் “என்ன சொல்லுற? இன்னும் கல்யாணமாகலயா? இது எப்படி உனக்குத் தெரியும்?” தாஸின் முகம் வெளுத்து விட்டது.

“நேத்து வீட்டுக்கு வந்தப்போ, ஏன் தனியா வந்திருக்குறீங்க? உங்க வீட்டாம்மா வரலையா? இல்ல தீபாவளிக்கு  ஊருக்கு போய் இருக்காங்களான்னு கேட்டேன். இல்ல இல்ல. டபுள் ட்ரீட்டா. தலதீபாவளி, தலைப்பிரசவம் என்று ஏதாச்சும் விஷேஷமான்னு தான் கேட்டேன்.

ஊருக்கு அனுப்பி வைக்க வீட்டம்மா இருந்தா தானே. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலானு சொன்னாரு”

பாரிவள்ளலுக்கு திருமணமாகவில்லையென்றதும் தாசந்தனின் மனதுக்குள் சொல்ல முடியாத ஒரு அச்சம் ஊடுருவியது. அது எந்த மாதிரி உணர்வென்றே அவனுக்குப் புரியவில்லை. மிதுவை இழந்து விடுவோமோ என்று ஒரு நொடி அவன் மனதில் தோன்றி மறையவும் செய்தது.

“மிது எனக்கென்னமோ அந்த போலீஸ்காரன் திட்டம் போட்டு நம்ம குடும்பத்துக்குள்ள நுழையிறான்னு தோணுது. நமக்கு அவன் சகவாசம் வேணாம்” என்றான் தாஸ்.

“என்ன உளறுற? சைத்ரன் காணாமல் போகலைனா, நாம போலீஸ் ஸ்டேஷன் போயிருக்க மாட்டோம், பாரிய பார்த்திருக்கவும் மாட்டோம். அவன் நம்ம வாழ்க்கைக்குள்ள வரல. நாம தான் அவன் வாழ்க்கைக்குள்ள எண்டராகியிருக்கோம்” என்றாள் மிது.

“ஆமா… எதேச்சேயா தான் நாம அவனை சந்திச்சோம். ஆனா அவன் நம்ம வாழ்க்கைல நுழஞ்சி பிரச்சினை பண்ண பாக்குறானோன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு”

தாஸ் கூறுவது போல் தவறான எண்ணமோ, பழிவாங்கவோ எண்ணியிருந்தால் அன்றிரவு பாரிவள்லல் அவன் வண்டியில் வரும் பொழுது பேசிய பேச்சுக்களில் கொஞ்சமாச்சும் பிரதிபலித்திருக்காதா? அன்று வீடுவரை வந்த அந்த அரைமணித்தியாலத்துக்கும் குறைவான பயணத்தில் குழந்தையை தொலைத்ததற்காக அவன் தாஸையோ, தன்னையோ குற்றம் கூறவில்லை. குடும்ப விஷயங்களை பற்றி பேசவுமில்லை. சைத்திரனோடு பேசினான் ஒழிய மிதுவை தொல்லை செய்யவில்லை. அதை எண்ணிப் பார்த்தவள்

“லூசு மாதிரி பேசாம, ஆபீஸ்க்கு மெயில் அனுப்பி லீவு கேளு” தாஸை முறைத்தாள் மிது.

குழந்தை காணாமல் போனதும் கண்டு பிடித்துக் கொடுத்தவன், அடுத்த நாளே எதற்காக வீடு தேடி வந்தான்? வந்தது மட்டுமில்லாமல் ஊருக்கு வரச்சொல்லி எதற்காக மிதுவின் மனதை கரைத்தான்? தாஸுக்கு நடப்பது எதுவும் சரியாக படவில்லை.

தனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி கலந்த அச்சத்தை மிதுவிடம் கூறி புரியவைக்க முடியாமல் தவித்தவன், நேராக சென்றது மனநல மருத்துவரை நாடித்தான்.

தன் வாழ்வில் புதிதாக நுழைந்து வேரூன்றி முளைக்க பார்க்கும் பிரச்சினையை தெளிவாக எடுத்துக் கூறினான் தாஸ்.

“உங்க வைப நீங்க சந்தேகப்படுகிறீர்களா?” நிதானமாக கேட்டார் மருத்துவர்.

“எனக்கு என் பொண்டாட்டி மேல எந்த சந்தேகமும் இல்ல. எனக்கு அந்த போலீஸ்காரன் மேல தான் சந்தேகமா இருக்கு. அவன் ஏதாவது ஏடாகூடமாக பண்ணிடுவானோ என்று பயமாயிருக்கு”

“இப்போ உங்க பயம்தான் என்ன? நீங்க சொல்லுற அந்த பாரி போலீஸ்காரனா இருக்கிறதுனால பயமா இருக்கா? இல்ல, உங்க மனைவிக்கு பார்த்த மாப்பிள்ளை என்கிறதால பயமா இருக்கா?”

“ரெண்டும் தான் டாக்டர். அவன் சாதாரண ஒருத்தன் என்றால், நானே அவனை அடிச்சு துரத்தி இருப்பேன். போலீஸா இருக்கானே, அவன் என் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவானோ, என்ன ஜெயில்ல களி தின்ன வச்சிட்டு, என் வைபையும், பசங்களையும் ஏதாவது பண்ணிடுவானோ என்று பயமா இருக்கு” என்றான் தாஸ்.

“ஆரம்பத்தில் உங்களுக்கு உங்க வைப் மேல பயம். அவங்க மேல லவ்வும் இருக்கு. இப்போ இந்த பாரி மேல பயம்.. ஆனால் வெறுப்பு. இல்லையா?”

“ஆரம்பத்துல மட்டும் இல்ல டாக்டர் இப்பவும் எனக்கு என் பொண்டாட்டி மேல பயம் தான். அது அவள் என்ன அடிக்கிறதுனாளையோ, இல்ல திட்டுறதுனாளையோ அவ மேல பயமில்ல. அவ என்ன விட்டுட்டு போய் விடுவாளோ, அவளுக்கு ஏதாவது ஆகிடுமோ என்கிற பயம் என்று பாரி எங்க வாழ்க்கைக்குள்ள வந்த பிறகுதான் நான் நல்லா உணர்ந்தேன்”

இத்தனை வருடங்கள் கடந்ததும் தனக்கு மிதுவின் மேல் இருக்கும் காதலை இவ்வாறு மருத்துவரிடம் கூறிக் கொண்டிருப்பவன் அதை மிதுவுக்கு உணர்த்தியிருந்தாலாவது அவள் இவனை புரிந்துகொண்டிருப்பாள். யாரிடம் சொல்ல வேண்டுமோ அதை அவர்களிடம் சொல்வதில்லை. யாருக்கு உணர்த்தவேண்டுமோ அதை அவளுக்கு உணர்த்தாமல் இங்கே வந்து புலம்பிக் கொண்டு நிற்கின்றான்.  

“இதையே இப்போதான் தெரிஞ்சுக்கிட்டீங்களா? பொண்டாட்டிய கூட்டிகிட்டு வெளியில போங்கன்னு சொன்னா நேரமில்ல. ஊருக்கு போங்கன்னு சொன்னா வழி இல்லன்னு காரணம் சொல்லுறீங்க. தீர்வு சொன்னா முயற்சியாவது பண்ணனும் தாஸ். இல்லன்னா பிரச்சினை தீராது” என்றார் மருத்துவர்.

“என் பொண்டாட்டி இந்த தீபாவளிக்கு ஊருக்கு போயே ஆகணும் என்று அடம்பிடிக்கிறா. எல்லாம் அந்த போலீஸ்காரன் பிரைன் வாஷ் பண்ணதால தான். இப்போ நான் இதுக்கு சம்மதிச்சா அவன் கிட்ட தோத்து போய்ட்டதா ஆகாதா? அது மட்டுமல்ல என் பொண்டாட்டியே என்ன மதிக்காம அவன் சொல்லித்தான் ஊருக்கு போறது போல பேசுவா”

ஐ.டி ஊழியர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சலுக்கு கம்பனியே ஊழியர்களுக்கு மருத்துவ ஆலோசனை கட்டாயப்படுத்தியிருக்க, அப்படித்தான் தாசந்தனும் இந்த மருத்துவரிடம் வந்திருந்தான்.

தாஸ் வேலையை பற்றி பேசுவதை விட, மிதுவை பற்றியும், வீட்டு விஷயங்களையும் தான் அதிகம் பேசுவான். ஒரு மருத்துவராக அவனை சரியாக புரிந்துகொண்டு அவரும் அவனுக்கு முறையான சிகிச்சை வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்.

இன்று பாரியின் வடிவில் புதிதாக ஒரு பிரச்சினையோடு வந்தவன் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஊருக்கு போனாலும் எனக்கு நிம்மதி இருக்காது. அவ வீட்டாளுங்க, என் வீட்டாளுங்க சொந்தபந்தம் எல்லார்கிட்டயும் நான் தான் அவளை ஊருக்கு கூட்டிட்டு வராம இருந்ததாக பேசுவா. ஊருக்கு வந்ததே அந்த போலீஸ்காரன் சொல்லி தான் என்று சொல்லுவா. எல்லாரும் என்ன காரி துப்ப மாட்டாங்களா?”

“அப்போ உங்களுக்கு ஊருக்கு போறதுலையோ, உங்க வீட்டாளுங்கள பார்குறதுலையோ எந்த பிரச்சினையும் இல்ல. குறிப்பா உங்க வைப்போட சொந்தபந்தங்களை சந்திக்கிறதுலையும் பிரச்சினை இல்ல. பிரச்சினை அந்த இன்ஸ்பெக்டர் சொல்லி ஊருக்கு போறது.

ஊருக்கு போனா என்னென்ன பிரச்சினை வரும் என்று சொன்ன நீங்க, ஊருக்கு போகாம இருந்தா, உங்க பொண்டாட்டி என்னனென்ன பிரச்சினை பண்ணுவாங்கன்னு நினைக்கிறீங்க?” என்று மருத்துவர் கேட்டதும் முழிக்கலானான் தாஸ்.

சாஸ்வின் பிறந்த பின் மிதுவோடு அவன் வெளியே எங்கும் செல்லவோ, நேரம் செலவிடவோ முடியவில்லை. முதன்முறையாக, பிடிவாதமாக அவள் அவனிடம் கேட்டது ஊருக்கு செல்லலாம் என்பது தான். அதை எதிர்த்து, கடுமையாக தாஸ் மறுத்து விட்டால் மீது அவனுக்கு எந்த மாதிரியானதோடு முகத்தை காட்டுவாளென்று நினைக்கும் பொழுதே அவன் மனதில் அச்சம் எழுந்தது.

அவன் முகத்தை பார்த்தே அதை சரியாக புரிந்துக்கொண்ட மருத்துவர் “ஒரு சின்ன கோட்டுக்கு முன்னால ஒரு பெரிய கோட்ட போட்டா சின்ன கோடு தெரியாது. பெரிய கோடு தான் தெரியும் என்று சொல்லுவாங்க. சின்ன கோட்டுக்கு மதிப்பே இருக்காது. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா?” என்று தாசந்தனை ஏறிட்டார்.

புரிந்தும் புரியாமலும் அவரை பார்த்தான் தாஸ்.

“ஊருக்கு போகாம இருந்தாலும் பிரச்சினை, போனாலும் பிரச்சினை என்று நீங்க சொல்லுறீங்க. போகாம இருந்தா நீங்க உங்க வைப்ப சமாளிக்கணும். போனா… ஊருல என்னென்ன பிரச்சினைகள் வருமோ? அத்தனையையும் நீங்க சமாளிக்கணுமா? உங்க வாய்போட சேர்ந்து சமாளிக்க போறீங்களா? அதுதான் அந்த பெரிய கோடு. ஒருவேளை ஊருல உங்களுக்கு யாராச்சும் ஹெல்ப் கூட பண்ணுவங்கள்ல.

புதுசு புதுசா பிரச்சினை வந்தா இருக்குற பிரச்சினை மறக்கலாம். இல்ல உங்களுக்கும் உங்க வைப்புக்கும் இடைல இடைவெளி கூட குறையலாம். அதுக்கு நீங்க அவங்க பக்கம் இருக்கணும். அவங்க உங்க பக்கம் நிற்கணும். ரெண்டு பேரும் ரெண்டு சைட்ல நின்னா ஒன்னும் பண்ண முடியாது”

“என்ன டாக்டர் ஐடியாவும் கொடுத்து, புட்டுக்கும் என்று சொல்லுறீங்க”

“உங்க வைப்போட பிரச்சினை என்னனு எனக்கு இன்னும் சரியா தெரியல. நீங்க சொல்லுறத வச்சி ஒரு ஊகத்துல தான் நான் சொலுஷன் சொல்லுறேன். ஊருக்கு போனா பிரச்சினை வரும். அப்போ நீங்க அவங்க கூட, பக்க பலமா நிற்கணும். எந்த சிட்டுவேஷன்லயும் உறுதுணையா நிற்கணும். அப்போதான் உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில இருக்குற பிரச்சினை தீரும்”

“நீங்க சொல்லுறது புரியிற மாதிரியிருக்கு. ஆனா புரியல” தலையை சொரிந்தான் தாஸ்.

“உதாரணத்துக்கு உங்க மனைவியும், உங்க அம்மாவும் சண்டை போட்டா நீங்க யார் பக்கம் நிற்ப்பீங்க?”

“யார் பக்கம் நியாயம் இருக்கோ அவங்க பக்கம்” யோசிக்காமல் பதில் சொன்னான் தாஸ்.

“அப்போ ரெண்டு பேர்ல ஒருத்தர விட்டுட வேண்டியது தான்”

“என்ன டாக்டர் இப்படி சொல்லுறீங்க? இப்படி சொன்னா எப்படி?”

“சண்டை போடுறவங்கள சமாதானப்படுத்த போனா நம்ம தலைதான் உருளும். அதுக்காக அமைதியா இருக்கவும் முடியாது. கோபத்துல இருக்குறவங்க கிட்ட போய் பொறுமையா புரிய வைக்கவும் முடியாது”

“அப்போ என்னதான் பண்ணுறது?”

“நாம பொறுமையா இருக்கணும். நிதானமா இருக்கணும். எந்த பக்கமும் பேசக் கூடாது. அவங்கள ஒன்னு சேர்க்க பாருங்க” என்றார் மருத்துவர். மருத்துவர் கூறியதை தாஸ் சரியாக புரிந்து கொண்டானா தெரியவில்லை. ஆனால் ஊருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

வீட்டுக்கு வந்து தாஸ் ஊருக்கு செல்லலாமென்று கூற முற்படுகையில் “ஆபீஸ்ல லீவ் கிடைச்சதா? பாரி மாமா அவர் வண்டியிலையே போறாராம். குழந்தைகளோடு வசதியாக போகலாம் என்று பாரி மாமா கூப்பிட்டார்” என்று மிது கூறும் பொழுதே பல்லை கடித்த தாஸ். தனக்கு லீவு கிடைத்து விட்டதாக சந்தோஷமாகத்தான் தெரிவித்தான்.

“நிஜமாவா? எங்க நீ ஊருக்கு வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்துடுவியோன்னு நினைச்சி, நான் பசங்கள கூட்டிகிட்டு பாரி மாமா கூட ஊருக்கு கிளம்பலாமென்று இருந்தேன்”

“அடிப்பாவி… புருஷன் நான் வந்தா என்ன வரலைனா என்ன என்ற முடிவுக்கே வந்துட்டியா? அவள் உண்மையாகத்தான் சொல்கிறாளா? கேலி செய்கிறாளா? என்று தாஸுக்கு சுத்தமாக புரியவில்லை. பாரி என்ற ஒருவனால் அவன் மனம் எதையும் சரியாக சிந்திக்க மறுத்தது. ஆனால் இந்தக் காரணத்துக்காகவும் அவன் மிதுவை இழக்காத தயாராக இல்லை என்பது மட்டும் உறுதி.

Advertisement