Advertisement

அத்தியாயம் 3

வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை கைது செய்து கொண்டும் செல்வதாக தகவல்.

எங்கே எதிரிப்படை தனது கிராமத்துக்குள்ளும் புகுந்து அட்டூழியம் இழைத்தால், தனது மனம் கவர்ந்தவளுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சி வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்தலானான் அந்தப் போர்வீரன்.

அவன் அஞ்சியது போல் அவன் வந்து சேர்வதற்குள் அவனது ஊரே நாசம் செய்யப்பட்டிருந்தது. குடிசைகள் சூறையாடப்பட்டிருந்தன. ஆனால் உயிர் சேதம் எதுவுமாகி இருக்கவில்லை. எதிரிப்படை வருவது முன்கூட்டியே அறிந்த அவர்கள் ஊரை காலி செய்திருந்ததை புரிந்து கொண்டவன் நிம்மதி அடைந்தான்.

ஆனால் அவன் மனம் கவர்ந்தவள் எங்கே சென்றிருப்பாளோ என்று தூக்கத்தை தொலைத்தான். அவளை எங்கே சென்று தேடுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. நாடெங்கும் போர் சூழ்ந்த நிலையில் அவள் எங்கு சென்றாலும் அவளை ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நினைக்கையில் நிம்மதியை இழந்தான்.

அவளை எங்கே சென்று தேடுவான்? பலநாள் பசியோடும், தூக்கமில்லாமல் காடு, மலை என அவளை தேடியலைந்தான்.

அவளை தேடி அலையும் பொழுது எத்தனை எதிரிப்படை வீரர்களை அவன் கொன்று குவித்தான் என்று அவனுக்கே தெரியாது. அவனுக்கும் பல அடிகள் விழத்தான் செய்தது. வெட்டுக் காயங்களால் ஜுரத்திலும் விழுந்தான். அவன் காதலுக்கு சக்தி இருந்ததோ என்னவோ அவன் உயிர் அவனை விட்டுப் பிரியாமல் அவளைக் காண அவனை உயிர்ப்போடு வைத்திருந்தது.

எதிரிப்படைக்கு அஞ்சி ஊரை காலி செய்து சென்றவளும் மலையிலுள்ள குகையில் சிலரோடு தஞ்சமடைந்திருந்தாள். 

உண்ண உணவில்லை. பகலில் உணவு தேடிச் சென்றால், எதிரிப்படையிடம் மாட்டிக்கொள்ள நேரிடமோ என்று அச்சம். இரவில் வெளியே சென்றால் காட்டு விலங்குகளிடம் மாட்டிக்கொள்ள நேரிடுமோ என்று அச்சம். காட்டு விலங்குகளிடமிருந்தும் தப்ப தென்பில்லாமல், எதிரி படையிடமிருந்தும் உயிரை காத்துக் கொண்டு காதலனுக்காக காத்திருந்தாள் பெண்ணவள்.

பல உயிர்கள் பலியாகி, குருதி ஆறாக ஓடி மறைந்த பின், போரும் முடிவுக்கு வந்தது.

உயிரை கையில் பிடித்துக் கொண்டு அந்தப் போர்வீரன் காதலியை தேடி அலைந்து இறுதியாக அவள் முகத்தை கண்டு கொண்டான்.

இவனைப் பார்த்ததும் சூரியனை கண்ட செந்தாமரையாய் மலர்ந்தாள் அவள்.

எத்தனை மாதங்களாக பிரிந்திருந்த காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டதில், சுற்றுச்சூழலை மறந்து, இருக்கும் இடம் மறந்து, அருகில் இருப்பவர்களை மறந்து இறுக தழுவிக் கொண்டனர். இருவரும் தங்களை மறந்து முத்த மழையில் நனைந்து கொண்டிருக்க அவர்களை கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. அங்கிருந்தவர்களின் நிலையும் அவர்களைப் போன்று தான் இருந்தன.

உள்ளம் உவகையில் குதூகளிக்க, கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் சுவை கூட தித்திப்பாகத் தான் இருந்தது.

திடுமென நெஞ்சில் சுளீரென வலியை உணர்ந்தான் அந்தப் போர்வீரன். ஐந்து அங்குலம் உள்ள ஒரு கத்தி அவன் மார்பை துளைத்துக் கொண்டு இதயத்தை கிழித்திருந்தது. குருதி குபு குபுவென பாய இதயத்தில் சுளீரென வலியை உணர்ந்தான். அவன் ஆசை காதலியோ அவன் இதயத்தில் கத்தியை இறக்கிவிட்டு அவனைப் பார்த்து கொடூரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏன் ஏன் இப்படி செய்தாய்? உனக்காகவே பிறந்தவன் நானன்றோ. உன்னை காண வந்த என்னை கொன்று விட்டாயே பாதகி” என்று அவன் துடித்தான்.

“என்ன லவ் பண்ணிட்டு, அந்த ஸ்வேதா கூட ஊர் சுத்திட்டா வார? சாவுடா சாவு” என்று கூறியவாறு அவன் நெஞ்சில் குத்தி இருந்த கத்தியை பிடுங்கி மீண்டும் மீண்டும் மார்பில் குத்தினாள் அவள். அவள் அவன் மனைவி மிது. திடுக்கிட்டு கண் விழித்தான் தாஸ்.

“ராட்சசி… நிம்மதியா தூங்க விடுறாளான்னு பாரு. கனவுல வந்து கொலை பண்ணுறா” தூங்கிக் கொண்டிருக்கும் மிதுவை பார்த்து முணுமுணுத்தவன் “காதுல விழுந்தா தூங்கும் போது கல்ல தூக்கி தல்ல போடுவா” என்று திட்டியவாறு மீண்டும் தூங்க முயன்றான்.

கண்ட கனவு கண்களுக்குள் வந்து அவனை இம்சிக்கலானது.

“ஓஹ்… இந்த தடவ போர்வீரன் கெட்டப்பா? ஒரு போர்வீரன் நாட்டுக்காக உயிரை விடாமல் அவன் காதலியை தேடி வந்தா, ராட்சசி இப்படி கொன்னுட்டாளே. தலை வேற வலிக்குது. குந்தாணி. கொலை பண்ணுற மூடுலையே தூங்கி இருப்பா போல. எனக்கு கனவா வந்து தொலைக்குது. இவ என்னை கொலை பண்ண முன்னாடி நான் இவள போட்டு தள்ளனும்” மிதுவை கொலை வெறியோடு முறைத்தான்.

இது இவனுக்கு வரும் முதல் கனவல்ல. எப்போதெல்லாம் தாஸ் மிதுவோடு சண்டையிட்டு விட்டு தூங்குகிறானோ, அன்று அவனை அவள் கொலை செய்வது போல் அவனுக்கு கனவு வரும். விதவிதமான கனவுகள் எல்லாவற்றிலும் முதலில் காதல் செய்பவள் பின்பு அவனை கொலை செய்து விடுவாள்.

அப்படித்தான் ஒரு அழகான கனவு. ஒரு மலை கிராமம். அங்கே அவள் குடும்பமும், இவன் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்கு திருமணமும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

சிறு வயதில் இருந்து கூட விளையாடியவள் திடீரென்று மணமகளானதில் அவள் வெட்கப்படுகிறாள் என்று இவன் நினைக்க, அவளோ இவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.

இரவு வரும் வரையில் காத்திருந்தவன் எகிரிக் குதித்து அவள் அறைக்குள் நுழைய முயல, அவன் முதுகில் ஏதோ ஒன்று வந்து விழுந்தது. அது ஒரு சிறு கல். யாரோ அவனை குறி பார்த்து அடித்திருக்கிறார்கள் என்று புரிய, யார் அடித்தார்கள்? இவளுடைய அறைக்கு வருவது யாராவது பார்த்துவிட்டால் பிரச்சினையாகுமே என்று இவன் கலவரமாக சுற்றிலும் பார்வையை ஓட விட, மெழுகுவர்த்தியோடு குதிரை பண்ணையில் அவள் நிற்பது தெரிந்தது..

தான் அவளை வந்து சந்திப்பேன் என்று அவளுக்கும் தெரிந்திருக்கிறது அவளும் என்னை காண ஆவலாக இருந்திருக்கிறாள் என்று காதலை கண்ணில் நிரப்பி அவளை நெருங்கினான் இவன்.

கண்மணி காத்திருந்தாயா எனக்காக?

வந்தேன் நான் உனக்காக

தருவேன் நான் என்னையே நிஜமாக என்று இவன் வசனம் பேச

அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த மிது சட்டென்று கோபமாக அவனை ஏகத்துக்கும் முறைத்தாள். எதற்காக அவள் தன்னை முறைக்கிறாள் என்று இவன் பார்க்க, “அந்த ஸ்வேதா கூட கூத்தடிச்சிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று பாக்குறியா? சாவுடா… சாவு” மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவன் நெஞ்சிலேயே பலமாக குத்தினாள்.

“கனவுல கூட லவ் பண்ண மாட்டேங்குறாளே ராட்சசி. லவ் பண்ணும்போது தேவதையா தெரிஞ்சவ கல்யாணத்துக்கு பிறகு கனவுல ராட்சசியாக தெரியிறாளே. கொலைக்காரி கொலைக்காரி” என்று அவளை திட்டியவாறே தூங்கலானான் தாஸ்.

அவளை தேவதையாகவும் ராட்சசியாகவும் கூட அவன் கனவில் கண்டான். வானலோகத்திலிருந்து ஒரு தேவதை தரை இறங்கி வருவதை பார்த்து புரவியை வேகமாக செலுத்தியவன், அந்த தேவதையின் முன் சென்ற நிக்க தேவதையோ இவனைப் பார்த்து மெய்சிலிர்த்து நின்றாள். அக்கணமே இருவருக்குள்ளும் காதல் தீ பற்றி கொண்டது. வானலோகத்தில் இருந்து தேவதை இவனை காண வருவதும், இரவில் இவன் தேவதை காண புறப்படுவதும் வளமையாக நடந்து கொண்டிருக்க, ஒரு பௌர்ணமி இரவில் இவன் தேவதையை காண புறப்பட்டான். அந்தக் குளக்கரையில் இவன் தேவதைக்காக காத்திருக்க, வந்தாள் இவனது தேவதை.

“அன்பே நீ ஒரு தேவதை. நானோ ஒரு சாதாரண மானிடப் பிறவி. என் மேல் அன்பு கொண்டு நீ என்னை காண வருவதை உன் லோக மக்கள் அறிந்தால் உனக்கு என்ன ஆகுமோ என்று எண்ணுகையில் என் உள்ளம் பதறுகிறது என்று இவன் வசனம் பேச

“அச்சம் வேண்டாம் சுவாமி. உங்கள் அச்சத்தை போக்க தானே நான் இருக்கிறேன். கண்களை மூடுங்கள்” என்று அவள் சொல்ல அவளை நம்பி இவனும் கண்களை மூடினான். அவ்வளவுதான் மறுக்கணம் அவன் இதயம் சூறையாடப்பட்டிருந்தது.

கொடூரமான அரக்கியாக மாறி கூறிய நகங்களால் அவன் நெஞ்சை பிளந்து இதயத்தை வெளியே எடுத்து கொடூரமாக சிரிக்கலானாள் மிது. கண்களை திறந்து அதிர்ச்சியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் தாஸ்.

இவ்வாறெல்லாம் இவனுக்கு கனவு வந்தால் மனநிலை பாதிப்படையாதா? ஏதோ அவள் மீது கொஞ்ச நஞ்ச காதல் இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கின்றான். ஆனாலும் சினம் என்ற வேங்கை அவனை சீண்டி விடுவதால் அவர்களுக்குள் போர் மூண்டி கொண்டு தான் இருக்கிறது.

சண்டை வரும் பொழுதெல்லாம் மிது இவனைக் கொன்று விடுவாளோ என்று நினைக்கும் அளவுக்கு இவனை அடிப்பாள். இவன் அவளை அடிக்க என்ன? அடிக்கலாம் என்று நினைக்கக் கூட மாட்டான். கையை ஓங்கினால் போதும் பழைய திரைப்படங்களில் வரும் கதாநாயகி சரோஜாதேவி போல் “ஐயோ யாராவது வாங்கலேன். என்ன இவன் கொல்லப் பார்க்கிறான்” என்று அடிக்குரலில் அலறுவாள்.

கையை ஓங்கியதற்கு அந்த சத்தம் என்றால்? இவன் ஒரு அடி அடித்திருந்தால் இவனை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்திருப்பாள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவள் அலறலுக்கு அஞ்சியே இவன் அடங்கிப் போகிறான். எரிமலை எப்பொழுது வெடிக்குமோ?

அவனால் நிம்மதி போச்சு சந்தோஷம் போச்சு என்று அவள் வாய்விட்டு புலம்ப இவனோ புலம்ப முடியாமல் மனநல மருத்துவரை நாடினான்.

“என்ன பிரச்சினை உங்களுக்கு”

“என் பொண்டாட்டி தான் டாக்டர் பிரச்சினையே. கால சுத்தின பாம்பு அவ. கால உதரி அவள தள்ளவும் முடியல. கட்டிக்கிட்டு இருக்கட்டும் என்று விட்டு விடவும் முடியல. பேசாம சூசைட் பண்ணிக்கலாமா என்று தோணுது”

“சூப்பரான முடிவுதான். புருஷனுங்க எல்லாம் சூசைட் பண்ணிக்கிட்டா பொண்டாட்டிங்க விதவையா மட்டும் இருக்க மாட்டாங்க. நிம்மதியா, சந்தோஷமா இருந்துடுவாங்க. இருக்கலாமா? நீங்க உசுரோட இருந்து அவங்களை டார்ச்சர் பண்ணுங்க” என்று சத்தமாக சிரித்தார்.

பாவம் அவர் மனைவியால் அவருக்கு என்ன பிரச்சனையோ? என்று தாஸ் எழுந்துகொள்ள “என்னப்பா கிண்டல் பண்ணா எழுந்துகொள்ற? உட்காரு உட்காரு” என்று அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தார் அது அவனுக்கு பெரிதும் உதவியது.

மிது எவ்வளவு தான் கோபப்பட்டாலும் இவன் பொறுமையாக போவதற்கு காரணமே மருத்துவ ஆலோசனை தான் என்றால் மிகையில்லை.

இருந்தாலும் கனவுகள் அவனை தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதற்கு மட்டும் அவனுக்கு தீர்வே இல்லை.

நேற்று முன்தினம் ஒரு கனவு. எல்லா வசதிகளுடனும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய ஒரு அழகான குடியிருப்பு. இருவரும் இரு குழந்தைகளோடும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சிரித்தவாறு மகிழ்வாகத்தான் வாழ்ந்து வந்தனர்.

அன்று அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு அது மதுமிதாவிடம் இருந்து வந்திருந்தது. இவன் இயக்கி காதில் வைத்திருக்க அன்னையோ மிதுவை வண்ட வண்டையாக திட்டலானாள். அன்னை எதற்காக மனைவியை திட்டுகிறாள் என்று தாஸ் புரியாமல் பார்த்திருக்க மிது இவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதும் அவள் இவனோடு வாக்குவாதம் செய்யலானாள். காரணம் மாமியார் கூறியது அனைத்துமே இவள் காதில் விழுந்திருந்தது.

இவன் அவளை சமாதானப்படுத்த “உனக்கு எப்பொழுதும் உன் குடும்பம் தான் முக்கியம்” என்று சமையலறைக்குள் நுழைந்தவள் கத்தியை எடுத்து வந்து “சதக் சதக்” என்று அவன் நெஞ்சில் குத்தி விட்டு பன்னிரண்டாம் மாடியில் உள்ள பல்கனியில் இருந்து குதித்து விட்டாள். “மிது” என்று இவன் கத்தியவாறே கண் விழித்தான்.

“கிராதகி… இவ சாகுறதா இருந்தா செத்து தொலைய வேண்டியதுதானே. அது என்ன என் நெஞ்சில் கத்திய இறக்கிட்டு பால்கனிந்து குதிக்கிற பழக்கம்” மருத்துவரிடம் சென்று மனைவியைப் பற்றி புகார் வாசிக்கலானான்.

“உங்க மனைவிக்கு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்க அவங்க ட்ரீட்மென்ட்க்கு வந்தா தான் என்னால சொல்ல முடியும். ஆனா உங்களுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு அவங்க மேல லவ்வும் இருக்கு. அதுக்கு மேல பயமும் இருக்கு. அதனால தான் இந்த மாதிரி கனவுகள் வருது. அவங்க செத்தா சாகட்டும் என்று கனவுல கூட நீங்க நினைக்க மாட்டேங்கிறீங்க. அதனாலதான் அவங்க பால்கனில் இருந்து பாஞ்சபோ அவங்க பேர சொல்லி கத்திக்கிட்டு எந்திரிச்சிட்டிங்க” என்றார் மருத்துவர்.

“அதான் சொன்னேனே டாக்டர் அவ கால சுத்தின பாம்புன்னு சொல்லி” என்றான் தாஸ்.

“அவங்களுக்கு ஒரு மாற்றம் தேவ. இடமாற்றம் மனமாற்றத்தை கொடுக்கும் தானே. லீவு போட்டு ஊருக்காவது கூட்டிட்டு போங்க. இல்ல ஒரு ட்ரிப் போங்க”

“ஊருக்கு போக முடியாது அவ வீட்லயும் சேர்த்துக்க மாட்டாங்க. எங்க வீட்டிலயும் சேர்த்துக்க மாட்டாங்க” என்று முணுமுணுத்தவன் “எங்க ட்ரிப் போனாலும் பசங்கள கூட்டிகிட்டு தான் போகணும். அதுக்கு பேசாம வீட்டிலேயே இருந்திடலாம்” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

தனது குழந்தைகள் செய்யும் சேட்டையை அறிந்தமையாலேயே அவன் மிதுவை அழைத்துக் கொண்டு எங்கேயும் வெளியே செல்வதில்லை. அதை மருத்துவரிடம் கூற முடியுமா? மருத்துவரை சமாதானப் படுத்தியவனுக்கு மனைவியை சமாதானப்படுத்த முடியவில்லை அவன் நாட்களோ வளமை போல் தான் சென்று கொண்டு இருந்தன.

இதோ இன்று பார்ட்டிக்கு செல்லலாம் என்று இருந்தவனிடம் சண்டையிட்டிருந்தாள் மிது. வளமை போல் இவனும் தாழ்ந்து சென்று, அமைதியாக தூங்கி, கனவு கண்டு விழித்து, ஆபீஸ் கிளம்பி சென்று விட்டான்.

தாசந்தன் வேலைக்கு சென்ற பொழுது அவன் ஏன் பார்ட்டிக்கு வரவில்லையென்று நண்பர்கள் அவனை கேட்டுக் குடையலாயினர்.

வளமை போல் குழந்தைக்கு உடம்பு முடியவில்லை என்று கூறும் பொய்யை கூறி சமாளிக்க முயன்றான்.

“டேய்… டேய்… பாவம்டா பச்ச மண்ணு. இப்படி பொசுக்குன்னு உடம்பு முடியலன்னு பொய் சொல்லுறியே. உண்மையிலயே ஏதாவது ஆகிடப் போகுது. உனக்கு “குடும்பஸ்தன்” என்று பெயர் வச்சத்துக்கு “பொண்டாடிதாசன்” என்று வச்சிருக்கணும்டா. நீ உன் பொண்டாடி கிழிக்கிற கோட்ட தாண்ட மாட்டேங்கிறியே” என்று சிரித்தான் மேத்யூ.

“கோட்ட தாண்டினா, அவ என்ன கிழிப்பாளே” என்றது தாசந்தனின் மயின்ட் வாய்ஸ்.

“இப்படி எதுக்குடா பொண்டாட்டிக்கு பயந்து சாகுற? இதோ இவனப்பாரு லிவிங்ல ஆறு வருஷமா இருக்கான். நோ கமிட்மென்ஸ். எப்போ வேணாலும் பிடிக்கலைன்னா பிரிஞ்சி போய்டலாம். உன்னால முடியுமா? முடியாதே” ஆகாஷ் மேத்யூவை கைகாட்டி பேச, அதற்கும் எந்த பதிலையும் கொடுக்காமல் அமைதியாக வேலை பார்கலானான் தாசந்தான்.

“இவனுக்கு சூடு சொரணையே இல்லடா. பொண்டாட்டி பேச்ச கேட்டு அவ சொல்லுற வேலையெல்லாம் செஞ்சி கிட்டு இருக்கான். சொரணை கெட்டவன். அவ வேலை சொன்னா இவன் ரெண்டு அடி போட வேணாம்? முடியலன்னா ரெண்டு பேக்க உள்ள தள்ளிட்டு போக வேணாம்? தானாவே வீரம் வரும். முதுகெலும்பில்லாதவன். ஆம்பளையா கெத்தா இருக்கணும். இப்படி பொண்டாட்டிக்கு பயந்துகிட்டு, அடிபணிஞ்சுக்கிட்டு, அவ சொல்ற வேலையெல்லாம் செஞ்சுக்கிட்டே ஒருத்தன் இருப்பான்? கேட்டா லவ்னு புருடா விடுகிறான். பயந்தாங்கோலி. இவனையெல்லாம் மியூசியத்துல வெச்சு காரி துப்பனும்” என்று கமல் சொன்னதும் அவனை முறைத்தான் தாஸ்.

என்றோ ஒருநாள் பப்பில் வைத்து போதையில் மிது தன்னை டாச்சர் செய்வதாகவும், வேலை வாங்குவதாகவும் உளறியிருக்க, அதை அவன் நண்பர்கள் அனைவரிடமும் கூறி கேலி பேசியிருந்தான். இன்று அவன் கூறியதே தாஸுக்கு ஆப்பாக அவன் முன் வந்து நின்றிருந்தது.

“எதுக்குடா அவனை ஓட்டுறீங்க இன்னும் பத்து வருஷத்துல உங்க லைஃப்ல நடக்க போறத அவன் இப்பவே அனுபவிக்கிறான்” என்று வந்து நின்றார் மேலாளர்.

“ஆமா சார் இந்த கமல் அவனோட அத்த பொண்ண லவ் பண்றான். அந்த பொண்ணு இவன போன்ல மிரட்டுறத நானே பல தடவை பார்த்திருக்கேன். ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்ல கூடாது என்று நானும் அமைதியாக இருந்தா, இவனுங்க ஓவரா பண்ணுறாங்க” இவர்கள் தன்னைப் பற்றி சொல்வதெல்லாம் கட்டுக்கதை. ஆதாரம் இல்லாதவை என்று கூறவே நண்பனை பற்றி பேசியவன் “இந்த மேத்யூ லிவிங்ல இருக்கானே.. நினைச்ச உடனே அவனால விட்டுப் போக முடியுமான்னு கேளுங்க?” என்று தாசந்தன் என்ன சொல்லவா? என்பது போல் மேத்யூயை பார்க்க “வேணாம் மச்சான்” என்று பயப்பார்வையோடு கண்களால் கெஞ்சினான்.

தாங்கள் சுத்தவாளி போல் ஒருவன் அமைதியாக இருந்தால் அவனை கேலி கிண்டல் செய்து தொல்லை செய்வது. அவன் வாயைத் திறந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதுதான் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. கேலி கிண்டல் எல்லாம் ஓரளவுக்குத்தான் எல்லை மீறினால் நானும் அமைதியாக இருக்க மாட்டேன் என்று மறைமுக எச்சரிக்கை தான் விடுத்தான் தாசந்தன்.

“வேலை நேரத்தில் வெட்டி பேச்சு கூடாது முதல்ல போய் வேலையை பாருங்க” அனைவரையும் விரட்டினார் மேலாளர்.

தாசந்தான் பேசியதை தோழர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் பேசினால் இவர்களும் அவ்வாறு தான் பேசுவார்கள். மிதுவிடம் காட்ட முடியாத கோபத்தை தான் இன்று நண்பர்களிடம் இவ்வாறு தீர்த்துக் கொண்டிருந்தான் என்றால் பொய்யில்லை. இவனும் அதற்குப்பின் அவர்களை மிரட்டவில்லை. அவர்களும் இவனிடம் வம்பு வளர்க்காமல் வேலையை பார்க்கலாயினர்.

இவனை புரிந்து கொண்டு இவனுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லும் நண்பர்களும் இவனுக்கு இல்லை. மேலாளர் கூறியது போல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால் தான் இவன் பிரச்சினை புரியும் போலும். மேலாளருக்கு கூட குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர் கூட நண்பர்களை அதட்டுகிறாரே ஒழிய தனக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்வதில்லை. “அவர் தன்னை போல் காதல் திருமணம் செய்து கொள்ளவில்லையோ? என்னவோ! காதல் திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தை விட்டு விலகி வந்திருந்தால் தான் அவருக்கு என்னுடைய நிலைமை புரிந்து இருக்கும். இந்த உலகத்தில் பாவப்பட்ட ஒரே ஜீவன் தான் மட்டும் தான். தனக்கு மட்டும் தான் பிரச்சினை இருக்கிறது. மற்றவர்கள் எந்த பிரச்சினையுமே இல்லாமல் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வதாக எண்ணி தன்னிலையில் உழன்றான் தாசந்தன்.

உண்மையில் கடவுள் மனிதர்களை பிரச்சினையோடு தான் படைத்திருக்கின்றான். சில பிரச்சினைகளை மனிதர்களே தேடிக் கொள்வார்கள். கண்முன் தீர்விருந்தும் கண்டுகொள்ள மாட்டார்கள். சில பிரச்சனைகளை கடவுள் கொடுத்து விடுவான். அது அவனை சோதிக்க, நேர்வழிப்படுத்த அதையும் மனிதன் புரிந்து கொள்வதில்லை.

தாசந்தனின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்க, தீர்வு காணத்தான் அவன் தயாராக இல்லை. அவனுக்கு நேரமும் இல்லை. அவன் தீர்வை கண்டுபிடிக்கும் பொழுது காலம் கடந்து விடுமோ?

Advertisement