Advertisement

அத்தியாயம் 24

“நரசிம்மன் தாத்தா நீங்களும் மாரிமுத்து தாத்தாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்ஸா? இல்ல ஸ்கூல் காலேஜ் போறப்போல இருந்தே ப்ரெண்ட்ஸா?” உறவாடி கெடுக்கப் பாக்குறியாடா கிழவா? இரு போட்டு வாங்குறேன் என்று தாஸ் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

“ப்ரெஸ்ஸா… அப்படின்னா….”

“எங்கப்பாவும் நீங்களும் எப்போல இருந்து சிநேகிதங்களானீங்க என்று கேக்குறாரு மாப்புள” என்றான் செங்கதிரவன்.

“ஓஹ்… அதைத்தான் கேட்டானா? பள்ளிக்கூடம் போறப்போவே எனக்கு உன் தாத்தன தெரியும். எனக்கும் அவனுக்கு ஆகவே ஆகாது. எப்போ பார்த்தாலும் முட்டிகிட்டுதான் நிற்போம்.

வளர்ந்த பொறவும் மாறவே இல்ல. எப்போ பார்த்தாலும் முறிக்கிட்டிட்டு தான் திரிவோம். நம்மள உசுப்பேத்த நம்ம கூட நாலு பேர் கூடவே இருப்பாங்க”

“அப்போல இருந்தே எதிரிங்களாத்தான் இருந்திருக்காங்க. அப்போ எப்படி தாத்தா கூட சேர்ந்திருப்பாரு?” என்று தாஸ் யோசிக்க, மிதுவும் அதையே தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

“ஜல்லிக்கட்டு காளையை அடக்குறதுல உன் தாத்தன மிஞ்ச ஆளே இல்ல. எப்படியாவது உன் தாத்தன வெல்லணும் எங்குறது என் நீண்ட நாள் கனா. ஆனா அந்த வருஷம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி தான் என் வாழ்க்கையையே பொரட்டிப் போட்டுச்சு”

“அப்படி என்ன நடந்துச்சு?” ஆர்வத்தில் குறுக்க புகுந்து கேட்டிருந்தாள் மிது.

“அன்னைக்கு அந்த ஜல்லிக்கட்டு காளை என் நெஞ்சளவு ஒசரத்துல இருந்தது. எப்படியாச்சும் காளையை அடக்கிடலாமென்று நானும் போராடிகிட்டு இருந்தேன். ஆனா அந்த காளை என்ன தூக்கி வீசினப்போ நான் அதோட கொம்ப பிடிச்சிகிட்டேன். அதுக்கு கோபம் வந்திருக்கும் போல, ஒரு சுழற்று சுழட்டி என்ன தூக்கி அதோட முன்னாடி நிக்க வச்சி என் நெஞ்சிலையே குத்த வந்திருச்சு.

அவ்வளவுதான். அன்னைக்கே என் சோலி முடிஞ்சிருச்சுன்னு நினைச்சி கண்ண இறுக மூடிட்டேன். அந்த நேரம் உன் தாத்தன் தான் என்ன இழுத்துகிட்டு உருண்டு புரண்டு காப்பாத்திட்டான். அன்னைக்கு பொறவுல இருந்து நாங்க ரெண்டு பேரும் நல்ல சிநேகிதங்களாகிட்டோம்” என்று மீசையை நீவிவிட்டு கொண்டார் நரசிம்மன்.

“உன் உசுரக் காப்பாத்தினத்துக்கு என் தாத்தாக்கு நல்ல கைம்மாறு பண்ணுற. கூட இருந்தே குழி பறிச்சியிருக்க. இது தெரியாமளையே என் தாத்தா மேல போய் சேர்ந்துட்டாரு. உன் சுயரூபம் மட்டும் தெரிஞ்சிருந்தா, உன்னயெல்லாம் எங்க வீட்டுப்பக்கம் அண்ட விட்டிருப்பாரா? ” மிது நரசிம்மனை முறைக்கலானாள்.

“உசுரக் காப்பாத்தியும் நன்றியில்லாம, கூட இருந்தே குழி பறிக்கிற அளவுக்கு என்னவாகியிருக்கும்?” என்று யோசிக்கலானான் தாஸ்.

ஆனால் அவர்கள் அறியாது அந்த ஜல்லிக்கட்டு காளையே நரசிம்மனுடையது. மாரிமுத்துவை இந்த வருடம் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று பக்கத்து ஊரில் வசிக்கும் தனது மாமாவிடம் கூறி ஒரு காளையை மாமாவின் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து வளர்க்க சொல்லியிருந்தான்.

வாராவாரம் மாமாவை பார்க்கப்போகும் சாக்கில் காளையை பார்த்து விட்டு வருபவனுக்கு இந்த வருடம் தான் தான் ஜெயிப்போம் என்ற ஆணவம் தலைக்கேறியிருந்தது.

“ஏலே நரசிம்மா அப்பன், ஆத்தா இல்லாம உன்ன வளர்க்க நான் தனியா பாடுபட்டுக்கிட்டு நிக்குறேன். நீ கண்ட, கண்ட கழிசடை பயலுங்ககூட ஊர் சுத்திட்டு வாரியால. உனக்கு ஒரு கால்கட்டு போட்டா தான்ளே நீ உறுப்படுவ” நரசிம்மனின் அம்மாச்சி கத்தி விட்டு அவனுக்கு சோத்தை தட்டில் போட்டுக் கொடுத்தாள். 

வழமையாக நடப்பது தானே என்று நரசிம்மன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, “அந்த பேச்சிமுத்து மக நாச்சியாருக்கு உன்ன பேசி முடிக்கலாமென்று நினைக்கிறன். நீ என்ன சொல்லுற?” என்று அம்மாச்சி நரசிம்மனை ஏறிட்டாள்.

இந்த ஊரில் இருக்கும் அழகி என்றால் அது நாச்சி தான் என்று பிறந்த குழந்தையை கேட்டால் கூட சொல்லும். அப்படிப்பட்ட அழகியை கட்டிக்க, கசக்குமா? “உன் விருப்பம் அம்மாச்சி” மனதுக்குள் எழுந்த ஆசையையும், பேராவலையும் அடக்கியவாறே பதில் சொன்னவன் நாச்சியோடு வாழப்போகும் வாழ்க்கையை கனவு காணலானான்.

கனவு கண்டதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. போதையில் நண்பர்களிடம் தனக்கும் நாச்சிக்கும் திருமணமாகப் போவதாக பெருமை பாடியதோடு, நாச்சியின் அழகை புகழ்ந்தான்.

ஏற்கனவே மாரிமுத்துவுக்கு நாச்சியின் மேல் ஒரு கண். தந்தை தனது உயிர் நண்பனுக்கு உடம்பு முடியாமல் இருப்பதாகவும், அவனுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அன்னையோடு வீட்டில் பேசி விட்டு நண்பனை பார்க்க கிளம்பியிருந்தார்.

இதில் நரசிம்மன் போதையில் உளறியது வேறு மாரிமுத்துவின் காதுக்கு வந்து தொலைக்க, நாச்சிக்கும், நரசிம்மனுக்கு பரிசம் போட்டு விட்டால், நாச்சி நரசிம்மனை கணவனாகவே ஏற்றுக்கொண்டு விடுவாள். அதற்கு முன் அவளை தன் மனைவியாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவள் செல்லுமிடமெல்லாம் பின் தொடரலானான்.  தந்தை அவனுக்கு சோலையோடு பரிசம் போட்டு விட்டதை அறிந்த உடன் இனியும் பொறுமையாக இருக்க முடியாதென்று கோவிலில் வைத்து நாச்சியின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான்.

காளையிடமிருந்து உயிரை காப்பாற்றி விட்டு என் உயிரையே எடுத்து விட்டானா மாரிமுத்து என்று நரசிம்மன் மாரிமுத்துவின் மேல் வஞ்சம் வைத்து காத்திருந்தான்.

ஆனால் நரசிம்மன் நினைத்தது போல் மாரிமுத்துவை பெரிதாக எதுவும் செய்து விட முடியவில்லை. எதை செய்தாலும் அது நாச்சியை பாதிக்கக் கூடாதே என்ற எண்ணம் வேறு நரசிம்மனை தடுத்தது தான் விந்தை. அதனால் மாரிமுத்துவின் உயிரை எடுக்க ஒரு காலமும் நரசிம்மன் துணியவே இல்லை.

அம்மாச்சிக்காக திருமணம் செய்து கொண்ட நரசிம்மன், ஊருக்காக முத்துபாண்டியையும் பெற்றுக் கொண்டான்.

நாட்கள் கடந்தது மாரிமுத்து குடும்பம், பிள்ளைகள் என்று சந்தோசமாக வாழ்ந்தான். ஆனால் நரசிம்மன் உள்ளுக்குள் கனன்ற எரிமலையை மனைவியின் மீது கொட்டலானான்.

நாச்சி வேறு அவனை பார்க்கும் பொழுதெல்லாம் “வாங்கண்ணா… சௌக்யமாண்ணா…. அண்ணி எப்படி இருக்கங்கண்ணா… அண்ணிய ஏன் கூட்டிட்டு வரமாட்டிறீங்கண்ணா…” என்று நரசிம்மனை அண்ணனாக நினைத்து அழைக்க அது வேறு அவன் மனதில் ரணத்தை உண்டு பண்ணிக்க கொண்டே இருந்தது.

நாச்சியின் அண்ணன் என்ற அழைப்பால் கல்லால் அடிப்பதை விட சொல்லால் அடிப்பது தான் வலிக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட நரசிம்மன், மாரிமுத்துவுக்கு மரண அடி மனதில் விழ வேண்டும். அதற்கு அவன் பிள்ளைகளின் வாழ்க்கை சீர்குலைய வேண்டும். பிள்ளைகளின் வாழ்க்கை ஒழுங்கில்லாமல் இருந்தால் மட்டுமே மாரிமுத்து நிம்மதியில்லாமல் இருப்பானென்று முடிவு செய்து, திட்டம் போட்டு மதுமிதா மற்றும் செங்கதிரவனின் வாழ்க்கையில் விளையாடியிருந்தான். பாவம் இது அவர்களுக்கு தெரியவில்லை.

“வில்லன் வாயிலிருந்து கூட உண்மைய கொண்டு வரலாம் போலயே ஆனா வில்லாதி வில்லன் வாயிலிருந்து உண்மைய கொண்டு வர்றது மகா கஷ்டம்” தீந்தமிழன் பாரியிடம் புலம்பலானான்.

“உனக்கு உன் அத்தைய பிடிக்குமா?”

“எந்த அத்த? நான் பொறக்க முன்னாடியே கல்யாணம் பண்ணி நாம வேண்டவே வேணாம்னு போனாங்களே அவங்களா?” கொஞ்சம் கிண்டலாகத்தான் கேட்டான் தீந்தமிழன்.

“பிடிக்கலனாலும், இனிமேல் பிடிக்கணும். ஏன்னா அவங்க பொண்ணத்தான் நீ கட்டப்போற” என்று அவனை கிண்டல் பண்ண பாரி “நீ என்ன பண்ணுற உன் அத்தைய கூட்டிகிட்டு பின்னாடி தோட்டத்து பக்கம் போற”

“போய்….” பீதியோடு தான் கேட்டான்.

“அத்த உங்க பொண்ணுகிட்ட எதுக்கும் ஒரு வார்த்த கேட்டுடுங்க. அப்பத்தா சொல்லிச்சென்னு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடாதீங்க என்று பேச்ச போடு. அப்போ தான் அத்தையும் உன்ன பத்தி நல்ல விதமா நினைப்பாங்க. இந்த விஷயம் அத்த மூலமா கேள்விப்பட்டு அத்த பொண்ணும் இம்ப்ரெஸ் ஆவா”

“கடவுளே… நீங்க எங்கயோ போயிட்டீங்க…” பாரியை கட்டிக் கொண்ட தீந்தமிழன் மதுமிதாவை அழைத்துப் பேச தோட்டத்துப் பக்கம் சென்றான்.

அவர்கள் வாசல் புறமாக செல்ல அவர்களை பின் தொடர்ந்தான் முத்துப்பாண்டி. அவன் செல்வதை பார்த்து புன்னகைத்தான் பாரி.

தோட்டத்துக்கு வந்த மதுமிதா தீந்தமிழனோடு பேசிவிட்டு செல்லும் பொழுது மல்லிகைப் பந்தலின் அருகே பாரி யாருடனோ அலைபேசி உரையாடலில் இருந்தான்.

“என்ன நம்மள பேசச் சொல்லிட்டு காவல் வேறு காக்குறாரா?” என்ற பார்வையோடு தீந்தமிழன் பாரியை கடக்க, “எங்கம்மாவை வரச்சொல்லு” மெதுவான குரலில் தீந்தமிழனுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு அலைபேசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்யலானான்.

“தனியா நின்னு இவர் என்ன திட்டம் போடுறாரு? ஒரு இழவும் புரியல” முழித்தவாறே மதுமிதாவின் பின்னால் நடந்தான் தீந்தமிழன்.

“ஆமாண்டா எவனெவனுக்கோ கல்யாணம் நடக்குது. எனக்கொரு கல்யாணம் நடக்க மாட்டேங்குது. என்ன வேணாம்னு சொன்ன அந்த மிதுவ பார்க்கும் பொழுது கழுத்த நெரிச்சி கொல்லனும் போல தோணுது. என்ன பண்ணுறது? போலீஸ்காரனா போய்ட்டேனில்ல. நானே கொலை பண்ணி உள்ள போய் கம்பி என்ன முடியுமா? சொல்லு?”

“என்னடா…. கொலை, கொள்ளனு பேசிகிட்டு இருக்க? தீபாவளி அதுவுமா புது கேஸா?” என்றவாறே வந்தாள் கனகா.

“நமக்குத்தான் கேஸுக்கும் பஞ்சமில்லை, நிம்மதியுமில்ல. நான் அதப்பத்தி யோசிக்கல. அந்த பொடிப்பயலுக்கு கல்யாணம். அவன் அக்கா என்ன வேணாம்னு சொல்லிட்டு அந்த தாஸ் கூட சந்தோசமா இருக்கான். ரெண்டு குடும்பமும் ஒண்ணா இருக்குறத பாக்குறப்போ எரியுது” என்றான் பாரி.

“டேய் என்னடா… சட்டுன்னு இப்படி பேசுற? ஆனாலும் இன்னைக்கி தாண்டா நீ என் பையன் போல பேசுற” என்று மகனை மெச்சினாள் கனகா.

அன்னை கண்டிப்பாள் என்று எதிர்பார்த்த பாரிக்கு ஏமாற்றம் தான். ஆனாலும் மல்லிகைப் பந்தலுக்குள் மறைந்திருக்கும் முத்துப்பாண்டியின் காதுபட பேச வேண்டுமே.

மதுமிதாவை தொடர்ந்து வந்த முத்துப்பாண்டி மல்லிகை பந்தத்துக்குள் சென்று மறைவதை பார்த்த பாரி அவன் தீந்தமிழன் அங்கிருந்து சென்ற பிறகு மதுமிதாவோடு பேச முயற்சிப்பான் என்று புரிந்தது.

அது நடக்கக் கூடாது என்று தான் மல்லிகை பந்தலிலிருந்து முத்துப்பாண்டி வெளியே வராதபடி வராத அலைபேசி அழைப்பில் உரையாடிக் கொண்டிருந்தான்.

அன்னையும் கூட இருந்தால் மிதுவை பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் தான் கண்டபடி ஏசினால், பேசினால் கண்டிப்பாள். முத்துப்பாண்டி வந்து தனக்கு சாதகமாக பேசுவானென்று எதிர்பார்த்தான்.

ஆனால் கனகவே அவனுக்கு ஒத்தூதினால் முத்துப்பாண்டி மல்லிகை பந்தலை விட்டு வெளியே வருவானா? 

வர வைக்க வேண்டுமே. அது தானே போலீஸான பாரியின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“மிதுவ கொலை பண்ணி அந்த பழியை அவ புருஷன் மேல போடணும்” என்றாள் கனகா.

தான் அலைபேசியில் பேசியதை கேட்டவாறு தான் அன்னை வந்தாள் என்று மட்டும் பாரிக்கு புரியவில்லை. அன்னையின் மனதிலென்ன இருக்கிறது என்பதையும் நன்றாகவே புரிந்து கொண்டான்.

கோபம் கனன்றாலும் அதை காட்டும் நேரம் இதுவல்லவே “சே… சே… அவ புருஷன தூக்கி உள்ள வைக்கிறதுல என்ன கிக்கு? அவன் அம்மாவை தூக்கி உள்ள வைக்கணும். ஒரே கல்லுல மூணு மாங்கா” வில்லன் போல் சிரித்தான் பாரி.

முத்துப்பாண்டி மதுமிதாவை பார்த்த பார்வையை வைத்தே அவன் மனதில் மதுமிதாவின் மீது காதல் இருப்பது மட்டும் தெரிந்தது. அதை அவன் மறைக்க எவ்வளவு பாடு பட்டாலும் பாரியின் கண்களுக்கு அது தப்பவேயில்லை. காரணம் அவனும் ஒரு பெண்ணை மனதில் சுமந்து அவள் வேண்டாம் என்றதில் மனதில் அடிப்பட்டு வலியால் துடித்தவன் என்பதினாலே.

மதுமிதாவுக்கு முத்துப்பாண்டியும் காதலித்தார்களா? என்று பாரிக்கு தெரியவில்லை. தாஸை விசாரித்தவரையில் அவன் பெற்றோருக்கு நடந்தது கட்டாயத் திருமணமுமில்லை. கட்டாயத் திருமணமாக இருந்திருந்தால் நடந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு மதுமிதா முத்துப்பாண்டியோடு சென்றிருக்க மாட்டாளா? என்று தோன்ற இது முத்துப்பாண்டியின் ஒருதலைக் காதல் என்று பாரிக்கு தெளிவாக புரிந்தது.

கனகா சொன்ன கூற்றில் தாஸை தூக்கி விட்டு மதுமிதாவை உள்ளே கொண்டு வந்ததற்கான முக்கிய காரணமே முத்துப்பாண்டிதான்.

தாங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் முத்துப்பாண்டிக்கு இப்பொழுதும் மதுமிதாவின் மீது காதல் இருந்தால் கோபமாக சீறியிலுந்து பாரியோடு சண்டைக்கு வருவான்.

கோபமோ வன்மமோ இருந்தால் பாரியோடு கைகோர்ப்பான் என்று எதிர்பார்த்தான். எப்படியாவது முத்துப்பாண்டியின் வாயிலிருந்து உண்மையை கொண்டு வரலாமென்று எண்ணித்தான் இவ்வாறு பேசினான்.

“மூணு மாங்காவா?” கனகா கண்களை விரித்தாள்.

“ஆமா… பொண்டாட்டி செத்துட்டா… அம்மா உள்ள… மீண்டும் குடும்பப்பகை” என்றான் பாரி.

“டேய் உன்ன பெத்ததுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனும்டா….” மகனை நெட்டி முறித்தாள் கனகா.

“ஆனா உனக்கு பையனா பொறந்ததற்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன். நரசிம்மன் மேட்டர் முடியட்டும் உன்ன கவனிக்கிறேன்” என்று பாரி நினைக்கும் பொழுதே முத்துப்பாண்டி அவன் சட்டையை பிடித்திருந்தான்.

“ஏன்டா… அம்மாவும் பையனுமா சேர்ந்து திட்டமா போடுறீங்க திட்டம். அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்டுறியே நீயெல்லாம் ஒரு போலீஸா. உன்னயெல்லாம் வெட்டி போலிப்போடணும்டா” என்று முத்துப்பாண்டி கத்திய கத்தில் கனகா அரண்டு விட்டாள் என்றால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் அங்கே கூடலாயினர்.

“அட நான் சொன்னதுக்கே என் சட்டையை பிடிச்சிட்டீங்க. மது அத்தையோட கல்யாணத்த நிறுத்தி அவங்கள கல்யாணம் பண்ண பார்த்த உங்கள என்ன பண்ணலாம்? அதுவும் அவங்க சொந்த அண்ணனுக்கு சரக்க ஊத்திக் கொடுத்து?

கல்யாணத்துக்கு மொத நாள் சரக்க ஊத்திக் கொடுத்து கல்யாணத்த நிறுத்த முடியாம கல்யாணமன்னைக்கு சரக்க ஊத்திக் கொடுத்து நிறுத்தப் பார்த்தீங்களா?” என்று பாரி கேட்டதும்

“இது எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டு முத்துப்பாண்டி தான் தான் காரணம் என்று வாக்குமூலம் கொடுக்க,

“அடப்பாவி” என்ற முணுமுணுப்பு சத்தம் அடங்க சிறிது நேரம் எடுத்தது.

“கல்யாணம் தான் நடந்து முடிஞ்சிருச்சே. அதற்கு பொறகு எதற்கு மாமாக்கு சரக்க கொடுத்தீங்க? உங்க அப்பாவோட பகையையும் தீர்த்துக்கனுமில்லையா?”

“டேய் போலிஸ்காரா ஆதாரமில்லாம பேசாத” கோபமானார் நரசிம்மன்.

தாஸ் குடும்பத்துக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. அவர்கள் கோபமாக முறைத்துக் கொண்டு தான் இருந்தனர். மிது குடும்பத்தினர் தான் பாவம் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தனர்.

“போலீஸ்காரன் ஆதாரம் இல்லாம எதையும் பேசமாட்டான். இதோ உங்க பையன் அவர் வாயால ஒத்துக்கிட்டாரே அதுக்கு மேல என்ன ஆதாரம் எதிர்பாக்குறீங்க?

“அவன் போதையில உளறுறான்” என்று நரசிம்மன் சமாளிக்க முயல.

“யாரு உளறுறது. நீதான். உன்னாலதான் எல்லாம் உன்னாலதான். உனக்கு மாரிமுத்து மாமா மேல இருந்த வஞ்சத்தால தான் என் ஆசையெல்லாம் நிராசையா போச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டு கதறியழுதான் முத்துப்பாண்டி.

“எங்கம்மாவ இந்தாள் வேண்டா வெறுப்பாக கட்டிக்கிட்டு என்ன பெத்துக்கிட்டாரு. எங்கம்மா தினம், தினம் கண்ணீர் வடிச்சே செத்துப் போச்சு.சாகும் போது இந்தாள கைவிட்டுடாத, காட்டியுக் கொடுக்காத என்று சத்தியம் வாங்கிட்டு செத்துப் போச்சு. 

அம்மாக்கு பொறவு என்ன அன்பா பார்த்துக்கிட்டது மாரிமுத்து மாமா குடும்பம் தான். எனக்கு மதுமிதான்னா உசுரு. கட்டுனா மதுமிதாவைத்தான் கட்டணும் என்று என்ற அப்பன் கிட்ட சொல்லி பொண்ணு கேட்க சொன்னேன்.

இந்த கூறுகெட்ட மனுஷன் மாரிமுத்து மாமா மதுமிதாக்கு பகையாளி பையன மாப்பிள்ளையா பார்த்திருக்குறதா சொன்னாரு.

நான் போய் மாரிமுத்து மாமாகிட்ட பேசுறேன் என்று சொன்னப்போ “இந்த கல்யாணம் நடக்காதுடா… கொஞ்சம் பொறுமையா இரு” என்று அப்பன் என்ன தடுத்திட்டாரு.  எங்கப்பன் எனக்காக மாரிமுத்துமாகிட்ட பேசுவார்னு பார்த்தா,

பகையை முடிச்சிக்க பகையாளி பையனையே மதுக்கு மாப்பிள்ளையா கொண்டு வரச் சொல்லி என்ற அப்பன் தான் சொன்னான்னு மாரிமுத்து மாமா சொன்னதும் நான் என்ற அப்பன் முன்னாடி போய் நின்னேன்.

அந்த கல்யாணம் நடக்காது. கல்யாணம் நின்னுடும். பொண்ணு கல்யாணம் நின்ன கவலைல மாரிமுத்து உடைஞ்சி அழுவான். அவனுக்கு ஆறுதலா நின்னு உனக்கு மதுவை கட்டி வைக்கிறேன்னு அவரோட பகையை தீர்த்துக்க எனக்கு ஆச காட்டினாரு.

அப்போ நான் இருந்த மனநிலைல எனக்கு மதுகிடைச்சா போதும் என்று இருந்துட்டேன். கல்யாணத்துக்கு முந்தையநாள் வர இந்தாள் எதுவும் பண்ணாம இருக்கவும் எனக்கு சந்தேகம் வந்துச்சு. என்னனு கேட்டா, கல்யாணம் நின்னா கட்டிக் கொடுப்பான். பொண்ணு வாழாவெட்டியா வந்து நின்னா துடிப்பானில்லை என்றாரு.

எப்படியாச்சும் மது கல்யாணத்த நிறுத்தி அவளை கட்டிக்கணும் என்று கதிரவனுக்கு சரக்க குடிக்க கொடுத்து கலாட்டா பண்ணலாமேன்னு பார்த்தேன். முடியல. மதுவை கடத்தி கண்ணாலம் பண்ணலாம்னு பார்த்தா அதுவும் முடியல.

கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சு. எங்கப்பன் ஏதாச்சும் பண்ணிடக் கூடாதுன்னு அந்தாள் பின்னாடியே தான் இருந்தேன். எப்படியோ என் மூலமாகவே கதிரவனை குடிக்க வச்சி சோலையம்மா குடும்பத்தை கதிரவன் பேசிட்டான்னு பிரச்சினை உருவாக்கிட்டாரு.

நான் போய் உண்மைய சொல்லலாமேன்னு பார்த்தா கதிரவனுக்கு கோலால சரக்க ஊத்திக் கொடுத்ததே நீதானு சொல்லுவேன்னு என்னையே மிரட்டினாரு. என்னால எந்த பிரச்சினையும் வேணாம்னு நான் அமைதியா இருந்துட்டேன். இந்தாள் இனியும் ஏதாச்சும் பண்ணிடக் கூடாதுன்னு இத்தனை வருஷமா இந்தாள் கூடவே இருக்கேன். இத்தனை வருஷம் உயிர் நண்பனா கதிர் கூட கூடவே நின்னாலும் அவன் கிட்ட கூட என்னால உண்மைய சொல்ல முடியாத படி எங்கம்மாக்கு பண்ணிக்க கொடுத்த சத்தியம் வேற என் கைய கட்டிப் போட்டிருச்சு” என்றான் முத்துப்பாண்டி.

“என்னடா முத்துப்பாண்டிய வில்லன்னு சொன்னா, அவன் காதல் மன்னன் ரேஞ்சுக்கு பேசிகிட்டு இருக்கான்” என்று மிது தாஸின் காதை கடித்தாள்.

“முத்துப்பாண்டி என்றாலே லவர்பாய் தாண்டி. எல்லாரும் வில்லனாக்கிட்டாங்க” படுசீரியஸாக கூறியவனை முறைத்தாள் தாஸின் மனையாள்.

“முத்துப்பாண்டி தன்னை காதலித்தானா? தன்னை நினைத்துக் கொண்டு இத்தனை வருடங்களாக திருமணமே செய்யவில்லையா?” அதிர்ச்சியில் உறைந்த மதுமிதா கணவனின் கையை பற்றிக் கொண்டாள்.

சிறுவயதில் முத்துப்பாண்டியோடு ஒன்றாக விளையாடியவள் தான் வயதுக்கு வந்த பின் நாச்சி அவளை யாருடனும் பேச விடுவதில்லை. முத்துப்பாண்டியை வெளியே பார்த்தால் புன்னகை கூட சிந்த மாட்டாள். வீட்டுக்கு வந்தால் “அம்மா…” என்று நாச்சியை அழைத்து விட்டு மதுமிதா உள்ளே சென்று விடுவாள்.

சிறுவயதில் கூட சேர்ந்து விளையாடியவள் இப்பொழுது முகத்தை கூட பாராததினாலேயே என்னவோ முத்துப்பாண்டிக்கு மதுமிதாவின் மேல் ஆர்வம் அதிகரித்தது அது காதலாக மாறியிருந்தது. ஆனால் அதை அவளிடம் சொல்லத்தான் தைரியம் வரவில்லை. இன்றுவரை அது மதுமிதாவுக்கு தெரியாமளையே போய் இருந்தது. அவளை திருமணம் செய்து கொண்டதினால் வேலனை வேறு பார்க்கும் பொழுதெல்லாம் முறைக்கலானான் முத்துப்பாண்டி. 

“ஏன்டா நீ ஒரு கத சொன்ன. இவர் என்னடான்னா இந்த கதைல அவர் ஹீரோ போல பேசிகிட்டு இருக்காரு” என்று பாரி தீந்தமிழனை முறைத்தான்.

“யோவ் போலீஸ் என்ன முறைக்கிறத விட்டுட்டு வில்லாதி வில்லன பிடிக்கிறத பாரு”

“அதான் உங்க பையன் எல்லா உண்மையையும் சொல்லிட்டாரே இப்போ என்ன சொல்லுறீங்க?” என்று தாஸ் நரசிம்மனை முறைக்க,

“இப்போவாச்சும் உண்மைய சொல்லுறீங்களா?” என்று மிதுவும் சேர்ந்து முறைத்தாள்.

“ஆமாண்டா… உன் தாத்தனுக்கு மரண அடிய கொடுக்கணும் என்று தான் என் பையனையே பயன்படுத்திக்கிட்டேன்.

கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கல்யாணம் நின்னா மாரிமுத்து அவன் பொண்ண யாருக்கு வேணாலும் கட்டிக் கொடுப்பான். அது நடக்க கூடாது என்று தான் என் பையன் கலந்து வச்சிருந்த சரக்கு கோலாவை சமயம் பார்த்து கதிரவனுக்கு கொடுத்தேன்.

உளறிக்கிட்டு இருந்தவன் சோலையம்மாளை பேசிட்டான்னு நான் தான் பாண்டியன் கிட்ட போய் சொன்னேன். பாண்டியன் பெருசுபடுத்தல. என் நல்ல நேரம் அத இந்த சோலையம்மா கேட்டுட்டு என் திட்டத்தை நிறைவேத்திட்டாங்க.

என்ன ஒன்னு நான் எதிர்பார்த்தது போல மாரிமுத்து பொண்ணு வாழாவெட்டியா வீட்டுக்கு வரல. ஆனாலும் நான் நினைச்சது நடந்தது பையன நினைச்சி மனசுக்குள்ள அழுதுகிட்டு இருந்த முத்து பொண்ண பார்க்க முடியலன்னு அழ ஆரம்பிச்சான்” என்று காதை குடையலானார்.

“அடப்பாவி… அப்பா ஸ்தானத்துல உன்ன வச்சிருந்தேன்” என்று கதிரவன் நரசிம்மன் சட்டையை பிடித்து உலுக்க,

“அண்ணா முதல்ல அந்தாள நம்ம வீட்டுல இருந்து போக சொல்லு” என்று கதிரவனை உரிமையாக அண்ணன் என்று பலவருடங்கள் கடந்து அழைத்தாள் மதுமிதா.

Advertisement