Advertisement

அத்தியாயம் 23

பொறுமையாக தாஸும், மிதுவும் கூறியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரிவள்லல் “சந்தேகமே இல்ல அந்த நரசிம்மன் தான் வில்லன். சுத்தி வளைச்சி கத தான் சொல்லுவியா?” மிதுவை முறைத்தான்.

“அப்போ அந்தாளுக்கு எங்க குடும்பத்து மேல எந்த பகையுமில்ல. மிது குடும்பத்தோட உறவாடி கெடுக்கணும் என்று நினைக்கிறார் என்று சொல்லுறீங்களா? ஆனா எங்க அம்மா, அப்பா கல்யாணத்த நடத்திட்டு எதுக்கு பிரச்சினை பண்ணனும்? நடக்க விடாம பிரச்சினை பண்ணியிருக்கலாமே” அந்த ஒரு விஷயம் தான் தங்களுக்கு புரியவில்லை என்று தாஸ் தன்னோடு மிதுவையும் சேர்த்துக்கொள்ள, மிதுவும் தலையை ஆட்டுவித்தாள்.

சற்று நேரம் யோசித்த பாரிவள்லல் “அந்த ஆளோட பகைக்கு என்ன காரணம் என்று தெரியல. குறிப்பா உங்க அம்மா அப்பாவோட கல்யாணமன்னைக்கு எதுக்கு பிரச்சினை பண்ணணும் தெரியல. அத அந்தாள் வாயாளத்தான் அந்த உண்மைய வெளில கொண்டு வரணும். அத எப்படி கொண்டு வர்றது? ஏதாவது திட்டம் இருக்கா?”

“அந்தாளுக்கு இவன் குடும்பத்து மேல இல்ல. எங்க குடும்பத்து மேலதான் பகை என்று இப்போதான் எங்களுக்கே புரிஞ்சது. இதுல நாங்க என்ன திட்டம் போடுறது?” முகத்தை சுளித்த மிது “அந்தாள் நம்ம தாத்தாவோட ப்ரெண்ட்டு. அந்தாள் எப்படி நம்ம தாத்தாவோட ப்ரெண்டானான்? பகையை மறைச்சு ப்ரெண்டானானா? இல்ல ப்ரெண்டான பிறகு பகையாளியானானான்னு தெரியல” நரசிம்மன் வாயை திறந்தால் தான் எல்லா உண்மையும் தெரிய வரும். உண்மையை எவ்வாறு வெளியே கொண்டு வருவது என்று யோசனையாக கேட்டாள்.

“இவ என்னடான்னா அந்த கிழட்டு நரசிம்மன் வருவான், எங்க குடும்பத்தை பார்த்து முகம் மாறுவான். அத பார்த்து பேசி, அந்தாள தூண்டி விடலாம் என்று என் குடும்பத்தை கூட்டிட்டு வந்தா, ஆனா இப்போ கதையே மாறிருச்சு. அந்தாளுக்கு பகையே இவ குடும்பத்து மேல. இவ குடும்பத்த உறவாடி கெடுக்கணும் என்று முடிவுல இருக்கான். இதுல உண்மைய எப்படி வெளில கொண்டு வரப்போறோம் என்றே புரியல. உண்மை வெளில வரலைனா என் குடும்பம் குதிப்பாங்க” என்றான் தாஸ்.

“இதுல நீங்க ரெண்டு பேரும் ஒரு முக்கியமான விசயத்த கவனிக்காம விட்டுடீங்க?” என்று பாரிவள்லல் குறுக்கிட

“என்ன?” என்று தாஸும், மிதுவும் ஒரே நேரத்தில் கேட்டனர். 

“அந்த கிழட்டு கிழவன் உங்க அம்மா, அப்பா கல்யாணத்துல மிது அப்பா குடிச்சிட்டு உன் குடும்பத்தை பத்தி தப்பா சொன்னார் என்று பொய் சொல்லி கல்யாணத்துல குழப்பத்தை உண்டு பண்ணினான் என்ற உண்மை மட்டும் தான் உங்களுக்கு தெரியும். அதுவும் கதிரவன் மாமாவை விசாரிச்சதுலயும், தம்பி தாஸ்… உன் பமிலி சொன்ன விஷயங்களையும் வச்சி தான் அந்த உண்மைய கண்டு பிடிச்சிருக்குறீங்க. ஆ… அந்த சரக்கு பாட்டில் கிப்ட் பண்ண விஷம். அத வச்சி தான் உண்மையையே கண்டு பிடிச்சீங்க.

   

அந்தாள் இன்னும் என்னெல்லாம் பண்ணியிருக்கான் என்றே உங்களுக்கு தெரியல. இதுதான் உறவாடி கெடுக்கிறது என்கிறது. புரியுதா?” தான் ஒரு போலீஸ் என்பதை பக்காவாக நிரூபித்தான் பாரி.

“இதுக்குத்தான் போலீஸோட உதவி வேணும் எங்குறது” கிண்டலோடு கூறினாள் மிது.

“நான் என் அனுபவத்துல எத்தன கேஸ பார்த்திருக்கிறேன். படிச்சிருக்குறேன். அந்தாள பார்த்திருக்கேன் என்னாலேயே அந்தாளுக்கு இன்னொரு முகம் இருக்கு என்று கண்டு பிடிக்க முடியல” என்றான் பாரி.

“ஆமா…. பெத்த தாய்க்கு இருக்குற முகத்தையே கண்டுகொள்ள முடியல. இவனெல்லாம் போலீஸ்” என்று தாஸிடம் மிது முணுமுணுக்க

அவளை முறைத்த தாஸ் “பாசம்டி… அதுவும் தாய்பாசம் கண்ணை மறைக்கும்”

“என்ன?” என்று பாரி அவர்களை பார்க்க

“ஆ… அந்த கிழட்டு கிழவனை எப்படி பிடிக்கிறது என்று தான்…” என்று கணவனும், மனைவியும் ஒருமித்த குரலில் கூறியதில் போலீஸ்காரன் இருவரையும் சந்தேகமாக பார்த்தான்.

“எங்களை சந்தேகமாக பார்க்காம அந்த நரசிம்மன் வந்தா அந்தாள சந்தேகக் கண்ணை கழுக்குக் கண்ணா வச்சி பாருங்க போலீஸ்” பாரியை கிண்டல் செய்தாள் மிது.

“முதல்ல அந்த நரசிம்மன் வரணுமில்ல” மிதுவை பதிலுக்கு கிண்டல் செய்யலானான் பாரி.

“என்ன வயசானவங்ககூட விட்டுட்டு நீங்க எல்லோரும் மட்டும் தனியா இங்க என்ன மாநாடு போட்டுட்டிருக்குறீங்க?” என்றவாறே வந்தான் தீந்தமிழன்.

“இரு இரு என் அண்ணனையும் வயசானவன் என்று சொன்னதாக சொல்லிடுறேன்” என்று பாரி அவனை வம்பிழுக்க தாஸும் சேர்ந்து கொண்டான்.

“யாரோட முகமூடியை கிழிக்க திட்டம் போடுறீங்க?” தான் வரும் பொழுது எதோ பேசினார்கள். தன்னை கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டார்கள் என்று தீந்தமிழன் ஞாபகப்படுத்திக் கேட்டான்.

“போச்சுடா… இன்னும் யார் யாரெல்லாம் ஒட்டுக்கேட்டு இந்த பக்கம் வந்துடுவாங்களோன்னு பார்த்து பேச வேண்டியிருக்கே” தலையில் அடிக்காத குறையாக முணுமுணுத்தான் தாஸ்.

“இவன் ஒரு விடாக்கொண்டான் என்ன விஷயமென்று கேட்காம விடவே மாட்டான்” என்ற மிது தம்பியிடம் விஷயத்தை பொறுமையாக கூறிவிட்டு “நீ என்ன நினைக்கிற?” என்று கேட்டான்.

“அந்த நரசிம்மன் தாத்தா வில்லனா, இல்லையான்னு தெரியல. ஆனா அந்த முத்துப்பாண்டி மாமா பக்கா வில்லன் மெட்டீரியல்”

“என்னடா புதுசா சொல்லுற?” என்று மிது கதை கேட்க,

“நான் சொல்லுவேன் நீ கைநீட்டக் கூடாது”

“டேய் அடிவயித்துல புளிய காரைக்காம விசயத்த சொல்லுடா”

“அது நான் ஸ்கூல் படிக்கும் போது சிகரெட் வாங்க பயந்து உசுரோடவே இல்லாத தாத்தாக்கு பீடி வாங்கி நான் ஸ்டைலா புகை விட்டேன். அத அந்த முத்துப்பாண்டி மாமா பார்த்துட்டாரு.

பாசமா பொரடில தட்டி ஸ்கூலுக்கு அனுப்பாம ‘ஏன்டா பீடி குடிச்சா வாய் நாறாது? வீட்டுல தெரிஞ்சிடாது. இந்த காசு சிகரெட் வாங்கி குடி’ என்று பாசமா காசு கொடுத்து விட்டாரு. அப்போ அந்தாள் ஒரு வில்லங்கம் புடிச்சவன் என்று புரிய ஆரம்பிச்சது. இப்போ நீ சொன்னதை கேட்டப்போ முழுசா புரிஞ்சது” என்றான். 

“நரசிம்மன் தாத்தாக்கு தான் பகை என்று பார்த்தா முத்துப்பாண்டிக்கும் உங்க குடும்பத்து மேல பகையா? விளங்கும். அப்போ இது குடும்பப் பகையா?” என்று மிதுவை பார்த்தான் தாஸ்.

“குடும்பப் பகையா இருந்தா, நம்ம ரெண்டு குடும்பம் போல அடிச்சிக்கிட்டு இல்ல இருக்கணும். அந்தாளு நண்பனா கூட இருந்து குழி பறிச்சியிருக்கான். உறவாடி கெடுக்கணும் என்றில்லை நினைக்கிறான்” யோசித்து பேச மாட்டாயா? என்று கணவனை முறைத்தாள்.

“என்ன சொன்ன இப்போ நீ…” என்று இடை புகுந்த” பாரி “அந்தாள் உன் தாத்தாவோட நண்பன். அப்படியென்றா, உன் தாத்தா மேல எதோ ஒரு வன்மத்தை வச்சுதான் உங்க குடும்பத்தை டார்கட் பண்ணுறாரு. இதுல முத்துபாண்டியோட பகை வேற. நாமதான் ஒண்ணா போட்டு குழப்பிக்கிட்டு இருக்கோம்”

“வேற வேற காரணங்களால, வேற வேற பகை என்று சொல்லுறீங்களா?” தீந்தமிழன் கேட்க

“ஆமாம்” என்று தலையசைத்தான் பாரி.

“அப்போ எங்க அப்பா, அம்மா கல்யாணத்த நிறுத்த திட்டம் போட்டு நிறுத்தியது அந்த முத்துப்பாண்டி என்று சொல்லுற?” காரணம் தெரியாவிடினும், யார் என்பதை கண்டு பிடித்து விட்டோமே என்று பெருமையாக கூறினான் தாஸ்.

அவன் தலையில் கொட்ட கை பர பரத்தாலும் பாரியின் முன் அடிக்க முடியாமல் முறைத்தவள் “யோசிக்காம பேசாதே என்று இப்போ தானே சொன்னேன். அந்த முத்துப்பாண்டி கோலால சரக்க கலந்து கொடுத்து கல்யாணத்த நிறுத்தப் பார்த்தாலும் எங்கப்பா உன் குடும்பத்தை கண்டபடி பேசினதா சொன்னதே அந்த நரசிம்மன்தான். ரெண்டு பேரும் கூட்டுக களவாணிங்க” என்றாள் மிது.

“என்ன நீ.. அப்படியும் சொல்லுற. இப்படியும் சொல்லுற. இது போங்கு. இந்த ஆட்டத்துக்கு நான் வரல” தீந்தமிழன் முகம் சுளித்தான். 

“ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. அந்த நரசிம்மனுக்கு உங்க தாத்தா மேல் எதோ வன்மம் இருந்திருக்கு அதனாலதான் கூட இருந்தே குழிபறிக்க முடிவு பண்ணியிருக்கான். அதுக்கு அவனரோட மகனும் உடந்தை. காரணம் என்னனு தெரியாம நம்மளால அவர் வாயிலிருந்து உண்மைய வெளில கொண்டு வர முடியுமா எங்குறது சந்தேகம் தான்” என்றான் பாரி.

“அதுக்கு ஒருவழியிருக்கு” என்று யோசனையாக தீந்தமிழனை பார்த்தான் தாஸ்.

“மாமா நீங்க பாக்குறத பார்த்தா பலியாடு நான் தான் போலயே” என்று பயந்து நடுங்குவது போல் உடலை உதறினான்.

“டேய் இருடா… அந்த நரசிம்மன் வர முன் ஏதாவது திட்டம் போட்டு வைக்கணும். சீக்கிரம் சொல்லு தாஸ்” தம்பியை அதட்டி மிது கைக்கடிகாரத்தை பார்த்தவாறே கணவனை அவசரப்படுத்தினாள்.

“ஒரு கல்யாணத்துல பிரிஞ்சு நம்ம குடும்பம் இன்னொரு கல்யாணத்துல ஒன்னு சேர போகுது” என்று தாஸ் சத்தமாக சிரித்தான்.

“கடுப்படிக்காத தாஸ். புதிர்போடாம ஒழுங்கா சொல்லு” மிது பல்லைக் கடித்தாள்.

“வேற யாரு இதோ இருக்கானே உன் தம்பி, இவனுக்கும் அகல்யாக்கும் கல்யாணத்த பண்ணி வைக்க சொல்லலாம். அப்போ அந்த நரசிம்மன் என்ன சொல்லுறான்னு பார்க்கலாம். டேய் சின்ன மச்சான் சும்மா பேச்சுக்கு சொல்லப் போய் உண்மையிலயே என் தங்கச்சி கட்டிக்க நேரிட்டா கட்டிக்குவியா?” நரசிம்மனை மடக்க தாங்கள் திட்டம் போட்டால் அது தெரியாமல் வீட்டார் உண்மையென்று நம்பி திருமணத்தை நடத்தி விட்டால் என்ன செய்வது என்று யோசனையாகவே கேட்டான் தாஸ்.

“ஹேய் இது நல்லா இருக்கு” என்றான் பாரி.

“நான் தான் பலியாடா?” அத்த பொண்ணு என்று அகல்யாவை தீந்தமிழன் பார்த்திருக்கின்றான். ஆசையாக என்ன ஆர்வமாக கூட பார்த்ததில்லை. பார்க்கத் தோன்றாததற்கு காரணமும் மிதுவும், தாஸும் தான். ஏற்கனவே இவர்களால் பிரச்சினை இன்னொரு பிரச்சினை வேண்டுமா? என்று அகல்யா இருக்கும் திசை பக்கம் கூட செல்ல மாட்டான்.

அவள் மீது வெறுப்போ, பகையோ இல்லை. ஆனால் அவள் மனநிலை என்னவென்று தெரியாமல், அவள் சம்மதம் இல்லாமல் அந்த நரசிம்மனுக்காக அவளை திருமணம் செய்ய சம்மதம் சொல்ல முடியுமா? திருமணம் செய்த பின் அவளோடு மல்லுக்கட்ட வேண்டியது தான் தானே என்று தான் “நான் தான் பலியாடா?” என்று கேட்டிருந்தான் தீந்தமிழன்.

“ஆமா அகல்யாவை கட்டிக்கிட்டா சோலை அப்பத்தா கூட குடும்பம் நடத்துறது போலத்தான். இல்லையா தாஸ்” என்று தம்பியின் மனதில் பீதியை கிளம்பினாள் மிது.

“மீ பாவம் அழுத்துடுவேன்” தீந்தமிழன் அழுவது போல் பாவனை செய்ய,

“இந்த நடிப்பெல்லாம் அந்த நரசிம்மன் வந்தா நடிக்க கொஞ்சம் மிச்சம் வைடா” என்று அவன் தோளில் அடித்தான் பாரி.

“முதல்ல நம்ம டீமுக்கு நல்ல பெயர் வைக்கணும்” என்ற தீந்தமிழன் “போ ஸ்குவார்டு” என்றான்.

“உன் அண்ணன் வந்து சேர்ந்தா பைவ் ஸ்குவார்டு என்று பெற மாத்துவியா?” என்று பாரி அவனை வம்பிழுக்கலானான்.

சற்று நேரம் நரசிம்மனையும், முத்துப்பாண்டியையும் மறந்து மிதுவும், தாஸும் சிரித்தவாறே பாதையை பார்க்க நரசிம்மனும், முத்துப்பாண்டியும் வந்துகொண்டிருந்தனர்.

“வந்துட்டான்யா… வந்துட்டான்…” என்று தீந்தமிழன் இவர்களை சுற்றி வர

“டேய் நீயே காட்டிக் கொடுத்துடுவா போல இருக்கே” என்று மிது அவன் தலையில் கொட்டி நிற்க வைத்தாள்.

அவர்கள் அருகில் வந்ததும் “வாங்க வாங்க” என்று தாஸும், மிதுவும் வரவேற்றவாறே அவர்களுக்கு முன்னால் நடந்தவாறே உள்ளே செல்ல, பாரியும், தீந்தமிழனும் புன்னகை மட்டும் செய்தனர்.

“நேத்து வந்தவங்க எல்லாம் நம்மள வரவேக்குறாங்க” என்றான் முத்துப்பாண்டி.

அவன் நேரடியாகவே தாஸை தாக்குவானென்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

“தீபாவளி அதுவுமா காலையிலையே சரக்கடிச்சியா? உன்ன…” என்று ஆரம்பித்த நரசிம்மன் அமைதியானார்.

“நேத்து வந்தாலும் இந்த வீட்டு மருமகனாச்சே” என்று தாஸ் கூட இருந்தவர்களின் முகம் மாறியதை நரசிம்மனும், முத்துப்பாண்டியனும் கவனிக்காதவாறு  அவர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பியவன் “உள்ள வாங்க” என்று அழைத்து சென்றான்.

உள்ளே சென்ற நரசிம்மன் தணிகை வேலனை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பதை சட்டென்று முகத்தில் காட்டி விட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார். ஆனால் முத்துப்பாண்டியோ வெறுப்பை அப்பட்டமாக முகத்தில் காட்டியதோடு யாரையோ தேடுவது போல் உள்ளே எட்டிப் பார்த்தான்.

“அடடே ஓடிப்போன பொண்ணையும், பையனையும் ஏத்துக்கொண்டதுமில்லாம ரெண்டு குடும்பமும் ஒன்னாகிட்டீங்க போல” என்றவாறே அமர்ந்தார் நரசிம்மன்.

நரசிம்மனின் பேச்சில் வெறுப்போ, உள்குத்தோ இருப்பது போல் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் நரசிம்மன் மீது கழுக்குப் பார்வையை வீசியவாறே இருந்த போ ஸ்குவார்டு உறுப்பினர்களுக்கு நரசிம்மனின் ஒவ்வொரு வார்த்தையிலும் வேறொரு அர்த்தம் பொதிந்திருப்பது போலவே தோன்றியது.

“அப்பா… நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்த இந்த நல்ல நேரத்துல நான் ஒரு விஷயம் சொல்லுறேன். உங்க எல்லாருக்கும் சரியென்று பட்டா மேற்கொண்டு பேசலாம்” என்று ஆரம்பித்தான் தாஸ்,

அவன் என்ன பேசப் போகிறான் என்று அறிந்திருந்தமையால் மிது பெண்களையும் வாசலுக்கு அழைத்தாள்.

“அடடே வாங்க நரசிம்மன் அண்ணே” வரவேற்றவாறே நாச்சி சோலையோடு கைகோர்க்காத குறையோடு வந்து அமர்ந்து கொள்ள, கனகா தன் கணவனின் அருகில் வந்து அமர்ந்தாள்.

அம்ரிதா மிதுவோடு வந்து நிற்க, மதுமிதா, மங்களத்தோடு வந்து நின்றுகொண்டாள்.

மதுமிதா வந்து நின்றதும் அவளை பார்த்து முகம் மலர்ந்த முத்துப்பாண்டி சட்டென்று முகம் வாடினான். அது பாரியின் கண்களிலிருந்து தப்பவில்லை.

“என்னப்பா விஷயம்? எல்லாரும் வந்துட்டாங்க சொல்லு” என்றான் வேலன்.

“நம்ம குடும்பம் பல வருஷமா பகையால, பிரிஞ்சிருக்கோம். பகைக்கு காரணம் என்னவேணாவா இருக்கட்டும். உங்க கல்யாணத்தால பிரிஞ்சு நம்ம குடும்பம் ஏன் இன்னொரு கல்யாணத்துல நம்ம ரெண்டு குடும்பத்தை சேர்த்து வைக்கக் கூடாது?”

“ஏன்டா பேராண்டி அதான் நீ என் பேத்திய தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணியே. அதான் உங்க ரெண்டு பேரையும் நாம ஏத்துக்கிட்டோமே. என்ன திரும்ப உங்க ரெண்டு பேருக்கும் ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுறியா?” என்று கேட்டு கிண்டல் செய்தாள் நாச்சி.

“என்னைக்கோ நடந்த கல்யாணத்துக்கு சீதனம் கொடுக்க துணிஞ்சவதானே நீ அப்பத்தா. கல்யாணம் பண்ணா தான் என்ன?” என்று நாச்சியை வம்பிழுத்த தாஸ் “நான் எங்க கல்யாணத்த பத்தி பேசல உன் கடைக்குட்டி பேரன் கல்யாணத்த பத்தி பேசுறேன். பொண்ணு என் தங்கச்சி” என்றான்.

தாஸ் பேசும் பொழுது எல்லோருடைய பார்வையும் அவன் முகத்தில் இருக்க, மிது மட்டும் நரசிம்மனை குறு குறுவென பார்த்திருந்தாள். ஆனால் பாரியின் பார்வை முழுக்கு முத்துப்பாண்டியின் மீதிருந்து.

தாஸ் பேசி முடித்ததும் அங்கே சற்று நேரம் மயான அமைதி.

ஆனால் கனகாவின் உள்ளமோ குமுறிக் கொண்டிருந்தது. “இந்த வீட்டில பொண்ண கட்டுறேன் என்று சொன்ன என் பையன் கல்யாணமாக ஏழு வருஷமா தனிமரமா இருக்கான். இந்தப் பொடி பயலுக்கு இப்ப அவசரமா கல்யாணம் ஒரு கேடா?”

உள்ள குமரல்களை கேட்கும் சக்தி மட்டும் மனிதனுக்கு கடவுள் கொடுத்திருந்தால்? எத்தனை கொலை விழுந்திருக்கோமோ? எத்தனை குடும்பம் பிரிந்திருக்குமோ?

“என்ன யோசிக்கிறீங்க? பையன் உருப்படியான யோசனை சொல்லியிருக்கான். சட்டுபுட்டுனு கண்ணாலத்த பண்ணுறது பாருங்க” வில்லன் வில்லன் என்று போ ஸ்குவார்டு உறுப்பினர்களால் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட நரசிம்மன் தான் அமைதியை உடைத்துப் பேசினார்.

“ஆகா… ஓநாய் அழுவுதே… ஆட்ட பிரியாணி போடாம விடாது போலயே” தீந்தமிழன் முழித்தவாறே நின்றிருந்தான்.

“எனக்கு பரிபூர்ண சம்மதம். எனக்கு யோசிக்க ஒண்ணுமே இல்ல” வாய் திறந்து பேசியது சோலையம்மாள் தான்.

இங்கே மறுப்பு தெரிவிக்கவிருக்கும் ஒரே ஜீவன் என்றாள் அது சோலை அப்பத்தா மட்டும் தான் என்று மிது தாஸிடம் கூறியிருக்க,

“அப்பத்தா மறுத்தா, அந்த நரசிம்மனையே சம்மதிக்க வைக்க சொல்லலாம்” என்று கிண்டல் செய்தான் தாஸ்.

ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக இங்கே நரசிம்மன் அகல்யா-தீந்தமிழன் திருமணத்திற்கு பரிந்துரை செய்வதும், சோலையமால் உடனே சம்மதம் சொல்வதும் போ ஸ்குவார்டு உறுப்பினர்களுக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்தது.

“நாம கேங் போர்ம் பண்ணி உண்மைய வெளில கொண்டு வர திட்டம் போட்டா, இந்த கிழடுங்க எங்களுக்கே தண்ணி காட்டுதுங்க” என்றான் தீந்தமிழன்.

பெரியவர்கள் மறுத்தால் “முதலில் அகல்யாவிடம் கேளுங்கள். அவள் சம்மதிக்க வேண்டாமா? அவள் சம்மதமில்லாமல் நானும் தான் சம்மதிக்க மாட்டேன்” என்று நழுவ நினைத்திருந்தான் தீந்தமிழன்.

இப்பொழுது அவனால் மறுத்து பேசவும் முடியாது. அகல்யாவிடம் சம்மதம் கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்றும் கூற முடியாது. சோலையம்மாளே சம்மதம் கூறியதில் “நான் சொன்னால் என் பேத்தி கேட்பாள். என் பேச்சை என் பேத்தி மறுக்க மாட்டாள்” என்று கூறிவிடுவாள்.

அகல்யா சம்மதிக்காவிட்டால் இந்த திருமணம் நிச்சயமாக நடக்காது. அது இரண்டாவது கதை. ஆனால் இந்த திருமணக்கதையை தாஸ் கொண்டு வந்ததே நரசிம்மன் என்ன சொல்வாரென்று பார்க்கத்தானே.

“உறவாடி கெடுக்க ஆரம்பிச்சிட்டாரு” மிது தாஸின் காதில் முணுமுணுக்க,

“என்ன மருமகளே “இந்த கல்யாண யோசனை உன்னுடையதா?” என்று மதுமிதா மிதுவை ஏறிட்டாள்.

“இவனுக்கு பொண்ணு பார்க்கணும் என்று அத்த சொன்னாங்க. அகலுக்கும் ஊருளையே மாப்புள பார்க்கணும் என்று அப்பத்தா சொல்லிச்சு. எல்லாரும் ஒண்ணா இருக்குறத பார்த்தப்போ எனக்கு சட்டுனு தோணிருச்சு. கேட்டுட்டேன்” என்றான் தாஸ். அதுதான் உண்மையும் கூட.

மதுமிதாவுக்கு சம்மதம் தான். பார்த்தீபன் குடும்பத்தோடு வீட்டுக்கு வர மிது தான் காரணம். அது போல் இதற்கும் அவள் தான் காரணமென்றால் தன் குடும்பம் அவளை எந்த கசடுமின்றி ஏற்றுக்கொள்வார்களே என்ற எண்ணம் தான் அவளை அவ்வாறு கேட்க வைத்திருந்தது. அது புரியாமல் அன்னை வளமை போல் மிதுவை மட்டம் தட்ட கேட்பதாக எண்ணிய தாஸ் பதில் கூறியிருந்தான்.

“யாரு பேசினா என்னப்பா? நல்ல விஷயம் நல்லபடியா, கூடிய சீக்கிரம் நடந்தா நல்லது தானே” என்றார் நரசிம்மன்.

நரசிம்மனின் மறுமுகம் தெரியாமல் “அப்பா ஸ்தானத்துல இருந்து நீங்கதான் மாமா கல்யாணத்த சிறப்பா நடத்தி வைக்கணும்” நரசிம்மனை கையெடுத்து கும்பிடலானான் செங்கதிரவன்.

“இவன் தான் வில்லன் என்று தெரியாமளையே சரணடையிறாரே. பாவம்யா” என்று பார்த்திருந்தான் பாரி.

“நல்ல விஷயம் பேசி முடிவாகிருச்சு ஸ்விட் எடு கொண்டது. அம்ரு போய் நரசிம்மன் தாத்தாகும், முத்துப்பாண்டி மாமாகும் குடிக்க எடுத்துட்டு வா” என்றான் பாரிவேந்தன்.

“ரொம்ப முக்கியம்” என்று பாரி அண்ணனை முறைக்க,

“இது நம்ம லிஸ்ட்டுலயே இல்ல” என்று சிரித்தான் தீந்தமிழன். 

Advertisement