Advertisement

அத்தியாயம் 22

மது அழைத்து தாஸின் வீட்டார் வருவதாக கூறியதும் மங்களத்துக்கு கை, கால் ஓடவில்லை.

“அத்த… இத்தனை வருஷம் கழிச்சி எதுக்கு வரங்களாம்?”

“எனக்கெப்படிடி தெரியும்? வந்தா தானே தெரியும்? முதல்ல வரட்டும். மிது என்ன சொன்னா? எல்லாரும் வரங்கலாமா? இல்ல அவ புருஷன் மட்டும் வரானா?” நாச்சிக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.

தாஸ் ஏதாவது பேசியிருப்பான். அவனை சமாதானப்படுத்த வருவதாக கூறியிருப்பார்கள். அவர்களாவது வருவதாவது என்று நாச்சி கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

“ஏழு வருஷம் கழிச்சி அக்கா ஊருக்கு வந்திருக்கான்னு அம்மா சொன்னதும் நானும் லீவ் கேட்டு வந்தா, அக்கா பசங்கள இங்க விட்டுட்டு மாமா வீட்டுல இருக்கா. அங்க போய் பார்க்க முடியாம அக்கா எப்போ வீட்டுக்கு வருவா, சண்டை போடலாமென்று நான் காத்துகிட்டு இருக்கேன்” என்று மிதுவின் தம்பி தீந்தமிழ் சாஸ்வினை தூக்கிக் கொஞ்சியவாறே கூறினான்.

“சண்டை மட்டும் தான் போடுவீங்களா? இல்ல? அடிதடி வெட்டு, குத்து எல்லாம் நடக்குமா? எங்க நம்ம மூத்த மச்சான்?” என்று கேட்டான் அமிர்தாஷினியின் கணவன் பாரிவேந்தன்.

“அண்ணன் அண்ணியோட வீட்டுக்கு போய் இருக்கான்”

“நாம இங்க வந்தா அவர் அங்க போய்ட்டாரா? எல்லாரும் ஒரு நேரத்துல ஒரு இடத்துல இருக்க மாட்டோமா? போன போட்டு மிது வர்றத சொல்லி வர சொல்லுப்பா”

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்க, மனைவியின் பதட்டம் கண்ட கதிரவன் “மங்களம் மிது சொன்னா அவங்க வர்றதாகத்தான் இருக்கும். வந்தா குடிக்க, சாப்பிட கொடுக்க எல்லாம் வீட்டுல இருக்கு. அவங்க சாப்பிடுவாங்களோ, மாட்டாங்களோ. எல்லாத்தையும் எடுத்து தயாரா வை. அமிர்தா நீ அம்மாக்கு உதவி செய்” என்று கதிரவன் எது வேண்டுமெனாலும் நடக்கலாமென்று சாதாரணமாக இருந்தான்.

ஆனால் அமிர்தாஷினியோடு வந்த கனகாவால் அவ்வாறு அமைதியாக இருக்க முடியவில்லை.

“இப்போ எதுக்கு அவங்க இங்க வரங்களாம்? அன்னைக்கி அந்த அம்மா பேசினத கேட்டா இனி மேல் மிதுவ வீட்டுலையே சேர்க்க மாட்டாங்க என்று நினச்சேன். இன்னைக்கி திடிரென்று இங்க வரேன்னு சொல்லுறாங்கன்னா மிதுக்காக வரதட்சணை கேட்க வாரங்களோ?”

“மிதுக்காக நாம ஒண்ணுமே பண்ணலையே சம்மந்தி. அவங்க என்ன கேட்டாலும் கொடுக்கணுமே” தந்தையாக கதிரவன் பேச.

“ஆமா… மூத்த பொண்ணுக்கு அப்படியே செஞ்சி கிழிச்சிட்டாரு” முகத்தை சுளித்த கனகா “என்ன சம்பந்தி இப்படி சொல்லுறீங்க? அவங்க கேக்குறதெல்லாம் கொடுத்தா. கேட்கும் போதெல்லாம் கொடுக்க நேரிடும்” அச்சுறுத்துவது போல் கூறினாள்.

அதெல்லாம் கதிரவனின் தலையில் ஏறவில்லை. மிது தாஸோடும், அவன் குடும்பத்தோடும் ஒன்றாக, ஒற்றுமையாக இருந்தால் போதும் என்ற எண்ணம் தான் கதிரவனுக்குள் இருந்தது. “அதனாலென்ன சம்பந்தி. என் பொண்ணுக்காகத்தானே செய்யிறோம்” என்றான்.

“மாமா நீங்களே அம்மாக்கு ஐடியா கொடுக்குறீங்க. சின்ன மகளுக்கு இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா, மூத்த மகளுக்கு எங்கம்மா கேட்டு வாங்குவாங்க” கிண்டல் செய்தான் பாரிவள்லல்.

“இன்னைக்கி நைட்டே சென்னை போகணும் என்று சொன்னியே. துணியெல்லாம் எடுத்து வைக்கணும். சீட, முறுக்கு எல்லாம் பேக் பண்ணி கொடு என்று சொல்லிட்டு. என்ன கிண்டல் பண்ணவே இங்க கிளம்பி வந்தியா?” என்று மகனை முறைத்தாள் கனகா.

அவனே எப்பொழுதாவது தான் ஊருக்கு வருகிறான். சொல்லாமல் கொள்ளாமல் செல்ல முடியுமா? சொல்லிவிட்டு செல்லலாமென்று தான் வந்திருந்தான். தாஸின் வீட்டார் வருவதாக அறிந்ததும் சட்டென்று கிளம்ப முடியுமா? அன்று தாஸின் வீட்டில் நடந்த சம்பவத்தினால் இங்கே இருக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கையில் தான் அவன் அன்னை பேச அவனும் பதில் பேச இருக்கணுமா? கிளம்பலாமா? என்று மனதில் எழுந்த எண்ணம் தூர ஓடியிருந்தது. 

“அவன் சொல்லுறதுல என்ன தப்பு கனகா?” என்று அவள் கணவன் சிவநேசனும் சேர்ந்துகொள்ள, அமிர்தாஷினியின் கணவன் பாரிவேந்தனும் சேர்ந்து கனகாவை ஓட்ட ஆரம்பிக்க, அவர்கள் முறைத்தவள் மங்களத்தின் வயிற்றில் புளியை கரைக்க சமயலறைக்குள் நுழைந்தாள்.

கதிரவனிடம் என்ன கூறினாளோ அதையே மங்களத்திடம் கூற, “அதெல்லாம் அவர் பார்த்துப்பார்” என்று மங்களம் முடித்துக் கொண்டாள்.

அங்கே அமர்ந்திருந்த நாச்சிக்கு கனகாவின் பேச்சில் உள்குத்து இருப்பது போலவே தோன்றியது. சோலை வரும் நேரத்தில் கனகா ஏதும் பேசி வைக்கக் கூடாதே “பரவாயில்லையே மங்களம் அமிர்தாவை கட்டிக் கொடுக்கும் போது கனகா சீர்வரிசை வேணும் என்று கேட்கல. ஆனா நாம பண்ண வேண்டியதை பண்ணிட்டோம். இப்போவும் மிது கட்டியிருக்கிறது என் பொண்ணு வயித்து பேரன் என்கிறதையும் மறந்து எங்களுக்காக பேசுறாளே. இவ குடும்பத்துல நம்ம அமிர்த்தாவ கொடுக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்” நாச்சி பேச்சிலையே கனகாவை உச்சாணி கொம்பில் உக்கார வைத்தாள்.

உச்சி குளிர்ந்தாலும் தாஸின் குடும்பத்தை பற்றி கனகாவால் தவறாக இனி ஒரு வார்த்தை பேச முடியவில்லை. அதான் நாச்சி என் மகள், என் பேரன் என்று சொல்லி விட்டாளே. வாயை கப் என்று மூடிக் கொண்டாள் கனகா.

வாசலில் “வாங்க வாங்க” என்று கதிரவன் வரவேற்கும் குரல் கேட்கவே “அதுக்குள்ள வந்துட்டாங்களா?” என்று கலவரமானாள் மங்களம்.

பார்த்தீபன் குடும்பத்தோடு வீடு வந்ததற்கு காரணமே மிது என்றானத்தில் சோலையம்மாள் கொஞ்சம் மனமிரங்கி நாச்சியின் வீடு செல்ல முன்வந்திருந்தாள். 

“தாஸ் உன் பொண்டாடி அவ வீட்டுக்கு போகணும் என்று சொன்னாளே எத்தனை மணிக்கு போகணுமாம்?”

தனது வீட்டுக்கு செல்ல அப்பத்தாவே சம்மதம் கூறியதில் மிதுவுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

“மதியம் உண்ட உடனே கிளம்பலாம். அப்பத்தா” என்றாள்.

“என்ன மருமகளே நீ வரியா? இல்ல வீட்டுலயே இருக்கப் போறியா?” மதுமிதாவை வம்பிழுத்தாள் சோலை. 

“போறதா இருந்தா எல்லாரும் தானே போறதாக பேச்சு. அதான் போறதா முடிவு பண்ணிட்டீங்களே. அப்பொறம் என்னத்துக்கு என் கிட்ட கேக்குறீங்க?” முறுக்கிக் கொண்டவாறே பல வருடங்கள் கடந்து வீடு செல்ல தயாரானாள் மதுமிதா.

திடீரென்று கணவனின் வீட்டார் தனது வீட்டில் வந்து நின்றாள் அவர்களுக்கு அதிர்ச்சியோடு, எதற்காக வந்தார்களோ என்ற பதைபதைப்பும் இருக்குமல்லவா? முன்கூட்டியே தெரிவித்தால் மனதளவில் தயாராவார்கள் என்ற எண்ணம் மிதுவுக்கு வர தாஸிடம் ஆலோசனை கேட்டாள்.

“நாம வீட்டுல இருந்து புறப்படும் போது போன் பண்ணி சொல்லிடலாம். இப்போ சொல்லி அது அந்த நரசிம்மன் காதுக்கு போய், அந்தாளு பாட்டுக்கு புதுசா திட்டம் போட்டுட்ட போறான். நாம உஷாரா இருக்கணும்”

அந்த நரசிம்மன் தாத்தாக்கு ஒரு வாய்ப்பை கூட கொடுக்கக் கூடாது என்று கணவன் பிடிவாதமாக இருக்கிறான் என்று எண்ணுகையில் உள்ளுக்குள் பூரித்தாலும் தாஸ் சொன்ன விதத்தில் சிரித்தவள் “நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் என்று சொல்லுற” என்று அவனை கிண்டல் செய்ய, அவனும் சிரித்தான்.

அவன் கூறியது போலவே வீட்டிலிருந்து புறப்படும் பொழுது “தாஸ் வீட்டுல இருந்து எல்லாரும் வரோம்” என்று மட்டும் மிது கூறி விட்டு வண்டியில் ஏறியிருந்தாள்.

அதற்குள் கனகா இவ்வளவு பேசி முடிக்க, அவர்களும் வந்திறங்கியிருந்தனர்.

வாசலில் வரவேற்கும் சத்தம் கேட்டு நாச்சி வாசலுக்கு விரைந்து சென்று சோலையை வரவேற்றாள்.

அதை யாருமே எதிரிபார்க்கவில்லை. அனைவரும் அதை முகத்தில் அப்பட்டமாக காட்டியுமிருந்தனர்.

ஆனால் அதை சோலை எதிரிபார்த்தாள். தாங்கள் வருவதாக மிது கூறிய பின், அதுவும் தீபாவளி போன்ற நல்ல நாளன்று வருவதாக கூறிய பின் கண்டிப்பாக நாச்சி நல்ல முறையில் வரவேற்று உபசரிப்பாள் என்று சோலைக்கு தெரியும். அதனால் எந்த சங்கடமும் இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தாள். 

இருவரும் ஒரே மாதிரி சேலை அணிந்திருக்க, அது தாஸ் வாங்கிக் கொடுத்தது என்று இருவருக்கும் புரிந்தது.

“ஓஹ்… என் பேரன் வாங்கிக் கொடுத்தானா?” என்று சோலை நக்கலாக கேட்க,

“ஆமா… என் பேரன் வாங்கிக் கொடுத்தான்” என்று அதே நக்கலோடு பதில் கூறினாள் நாச்சி.

எங்கே அவர்கள் சண்டை போடுவார்களோ என்று வீட்டார் பாதை பதைப்போடு பார்த்திருக்க

சோலையம்மாளோ நாச்சியை பார்த்து புன்னகைத்து “நீ யார் என்று எனக்குத் தெரியும், நான் யாரென்று உனக்குத் தெரியும். இதுங்களுக்குத்தான் தெரியல” என்று ஒரு இடத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

யார் நீ? யார் நான்? என்று நன்கு அறிந்து வைத்திருக்கும் தோழிகள் இவர்கள். தங்களுக்குள் நானா? நீயா? என்று போட்டியோடும், பொறாமையோடும் சண்டை போட்டுக் கொண்ட தோழிகள்.

எந்த ஒரு தருணத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள். அதனால் தான் இத்தனை வருடங்களாக பகையை வளர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இன்று சோலையே வீடு தேடி வந்ததில் நாச்சி பகையை மறந்து, வரவேற்று பழங்கதை பேச ஆரம்பித்தாள்.

சோலையும் தாஸுக்காகவும், மிதுக்காகவும் நாச்சியின் வீட்டு படியை ஏற முடிவு செய்ததனால் பகையை மறந்து நாச்சியின் பேச்சில் ஐக்கியமாகியிருந்தாள்.

அவர்களை தொந்தரவு செய்யாது ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் ஒரு புறமும் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

கதிரவனும், வேலனும் ஒரே மாதிரியான பட்டு வேட்டி தான் அணிந்திருந்தனர். ஒரு புன்னகையோடு அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர்.

மங்களமும், மதுமிதாவுக்கு கூட ஒரே மாதிரி சேலையை தான் அணிந்திருந்தனர். மிது அன்று “விலை அதிகம் அத்த. துணியோட தரமும் அதிகம். வெயில்ல கட்டிக்கிட்டு போனா கலர் அம்புட்டு வித்தியாசம் தெரியாதே” என்று நக்கலாக கூறியதன் பின்னணி இருவருக்கும் ஒரே மாதிரி துணி எடுத்ததினால் தான் என்று மதுமிதாவுக்கு இப்பொழுது புரிய மிதுவை முறைத்தாள். 

“ஐயையோ முறைக்கிறாங்களே… ரெண்டு நாளா அமைதியா இருந்துட்டு இன்னைக்கு எந்த பூகம்பத்தை கிளப்ப போறாங்களோ” என்று மிது மாமியாரை கவனிக்காதது போல் அம்ரிதாவோடு ஐக்கியமானாள்.

சாதாரண நல விசாரிக்குப் பின் “அம்ரிதா நீ போய் எல்லாருக்கும் குடிக்க கொடு. மிது நீயும் போய் அக்காக்கு உதவி செய்” என்று மங்களம் மகள்களை அனுப்பி வைக்க,

“அத்த நீங்களும் எங்களுக்கு ஒத்தாசை பண்ணலாமே” என்று மிது கனகாவை கையேடு அழைத்து சென்றாள்.

மங்களம் அம்ரிதாவிடம் கூறினாலும் கனகாவை பார்ப்பதும், மதுமிதாவிடம் பேச தயங்குவதும் போல் மிதுவுக்கு தோன்றியதால் தான் கனகாவை கையேடு அழைத்து சென்றாள். 

“உனக்கு என் மேல அப்படி என்ன கோபம் மது?” என்று மங்களம் கேட்டதும் தான் தாமதம் மதுமிதா, மங்களத்தை கட்டிக் கொண்டு ஓவென அழ ஆரம்பித்து விட்டாள்.

“என்ன மன்னிச்சிடுங்க அண்ணி. அண்ணன் மேல இருந்த கோபத்துல. நான் எல்லார் மேலயும் கோபத்தை வளர்த்துக்கிட்டேன். மிதுவ அண்ணன் பொண்ணா பார்த்த நான் உங்க பொண்ணு என்கிறது மறந்துட்டேன். என்ன மன்னிச்சிடுங்க”

மதுமிதாவுக்கு, மங்களத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். மங்களம் செங்கதிரவனை திருமணம் செய்து கொண்டு வந்த பின் அவளுக்கு இந்த வீட்டில் இருந்த ஒரே தோழி மதுமிதா மட்டும் தான்.

மருமகளிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கணவனோடு தோட்டத்துக்கு செல்லும் நாச்சி மாலை தான் வருவாள். அவர்களுக்கான காலை உணவை மதுமிதா தான் தோட்டத்துக்கு எடுத்து செல்வாள்.

அதிகாலையில் செல்லும் பொழுதே நாச்சி மகளை எழுப்பி விட்டு தான் செல்வாள். மதுமிதாவோ அன்னையின் தலை மறைந்ததும் மீண்டும் துயில் கொள்வாள்.

சின்ன பெண் திருமணமாகி சென்றால், மாமியார் வீட்டில் இந்த சுகமெல்லாம் கிடைக்குமா? என்று மங்களம் நாத்தனாரை எதுவும் சொல்லாமல் எல்லா வேலையையும் பார்ப்பாள்.

சூரியன் புறமுதுகில் படும் பொழுது விழிப்பவள் குளித்து விட்டு பெற்றோருக்காக, அண்ணி கட்டிக் கொடுத்த உணவோடு கிளம்பி தோட்டத்துக்கு செல்வாள். இது தான் மதுமிதாவின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை.

மங்களம் அவளை தோழியாகவும், சகோதரியாகவும், மகளாகவும் பார்த்துக் கொண்டதில் மங்களம் என்றால் மதுமிதாவுக்கு தனிப்பிரியம்.

அதனால் தான் கதிரவன் மங்களத்தை கைநீட்டிய போது குறுக்கே புகுந்திருந்தாள்.

அண்ணனோடு அண்ணிக்காக சண்டை போட்டவளுக்கு அண்ணன் அடித்ததை விட “என் புருஷன் என்ன அடிச்சாரு அதை கேக்க நீ யாரு?” என்று மங்களம் கேட்டது தான் வலித்தது.

அதன் பின் மங்களத்திடம் முகம் திருப்பாவிடினும், முகம் கொடுத்து பேசவில்லை. வேலனுடனான திருமணத்தின் பொழுது தனக்கு தன் கணவன் தான் எல்லாம், அவன் தான் இனி தன் குடும்பம் என்று முடிவுக்கு மதுமிதா வரக் காரணமும் மங்களம் அன்று பேசிய வார்த்தைகள் தான்.

வருடங்கள் கடந்தாலும், வயதுதான் கடந்தாலும் பேசிய வார்த்தைகள் மறக்கவில்லை. ஆறாத ரணமாக மனதில் பதிந்ததன் வினைதான் மிதுவை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்ற முடிவை எடுக்க வைத்திருந்தது.

மகனும் கணவனும் தங்களது திருமணத்தன்று என்ன நடந்தது என்று பேசிய அனைத்தையும் மதுமிதா கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.

“உண்மையிலயே அண்ணன் எதுவுமே பேசவில்லையா? நரசிம்மன் மாமா அப்படி சதி பண்ண வாய்ப்பே இல்லையே” என்று மனதுக்குள் அரற்றினாள்.

தனது அண்ணனை ஒரு குடிகாரன் என்று அறிந்திருந்தவள் அவன் எதற்காக குடிக்கு அடிமையானான் என்று அறிந்திருக்கவில்லை. அதே போல் பாசமாக தலையை தடவி நலம் விசாரிக்கும் நரசிம்மனுக்குள் இன்னொரு முகம் இருக்கும் என்றும் மதுமிதா எதிர்பார்த்திருக்கவில்லை.

தான் பேசினால் வீண் பிரச்சினையென்று அமைதியாகவே வீட்டில் நடப்பதை கவனித்தவள் முடிவு மாமியார் கையில் என்றதும் எவ்வாறு மாமியாரை வீட்டுக்கு அழைத்து செல்ல சம்மதம் தெரிவிப்பது என்று யோசனையில் இருக்கும் பொழுதுதான் பார்த்தீபன் குடும்பத்தோடு வந்திறங்கினான்.

மிதுவால் இதோ இன்று இரு குடும்பத்தாரும் ஒன்றாக, ஒரே இடத்தில் கூடியிருக்கிறோம். குடும்பம் பிரிய நரசிம்மன் மாமா காரணமோ இல்லையோ இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரிந்த குடும்பம் ஒன்றானால் போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்த மதுமிதா மங்களத்திடம் மனமுருகி மன்னிப்பு வேண்டினாள்.

“எனக்கு உன் மேல எந்தக் கோபமும்மில்ல மது. எந்த பொண்ணும் புருஷன் பக்கம், புருஷனுக்கு சாதகமாகத்தான் முடிவெடுப்பா” என்று மங்களம் அவளை சமாதானப்படுத்தலானாள்.

அனைவருக்கும் சிற்றுண்டிகளை பரிமாறிய மிதுவின் சிந்தனையில் “இன்று நரசிம்மன் தாத்தா வருவாரா? மாட்டாரா?” என்றே ஓடலானது.

“நரசிம்மன் தாத்தா குடும்பத்தோடு வருவாரோ, தனியாக வருவாரோ வந்தால் போதும் என்றவளுக்குள் மேலும் ஒரு சந்தேகம் முளைத்தது. திட்டம் போட்டு குடும்பத்தை பிரித்த நரசிம்மன் தாத்தா தாஸின் குடும்பத்தை பார்த்ததும் வெறுப்பையோ, கோபத்தையோ முகத்தில் காட்டுவாரா?

இத்தனை வருடங்களாக திட்டம் போட்டு செயல்பட்டவர் அவ்வளவு எளிதாக கோபத்தை முகத்தில் காட்டுவாரா? இரண்டு குடும்பமும் ஒன்றாக இருப்பதை பார்த்து மனதில் உள்ள பகையை மறைத்து சிறப்பாக நடிக்கக் கூட செய்வார். 

அவருக்கு தாஸ் குடும்பத்தின் மேல் அப்படி என்ன பகை என்றே புரியவில்லையே.

அன்று சோலை அப்பத்தா நரசிம்மன் தாத்தாவுக்கோ, அவர் குடும்பத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்றாங்க. சம்பந்தமில்லாம பகை இருக்குமா? அப்படியிருக்க…” என்று யோசித்துக் கொண்டிருந்தவளை உலுக்கினான் தாஸ்.

“என்ன பொண்டாட்டி மண்டைய உடைக்கிற அளவுக்கு யோசிக்கிற?”

“வேற என்ன? வில்லன் வருவானா? மாட்டானா? என்ற பதட்டம் தான்”

“பகைக்கு என்ன காரணமா இருக்கும் என்று யோசிச்சியா? என்ன காரணம் ன்று தெரிஞ்சா தான் அவர் கோபத்தை தூண்டி பேச வைக்க முடியும். அப்போதான் அவர் முக மூடி தானா கழரும்” என்றான்.

“உங்க குடும்பத்து மேல இருக்குற பகைக்கு பாசமா பழகுற எங்கப்பாவையே பகடை காயா பயன்படுத்திக்கிட்டாரு. அத நினச்சா தான் கடுப்பா இருக்கு”

“என்ன புருஷனும் பொண்டாட்டியும் ஒரு பக்கமா ஒதுங்கிட்டீங்க? ஏழு வருஷம் கழிச்சி ஊருக்கு வந்ததுமில்லாம ஒரு வழியா ரெண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்த்துட்டீங்க. வாழ்த்துக்கள்” என்றவாறே மிது மற்றும் தாஸின் பேச்சின் நடுவே குறுக்கிட்டான் பாரி.

“தாங்கள் பேசியதை பாரி கேட்டு விட்டானோ” என்று தாஸ் பார்க்க,

“போலீஸ்காரன்கிட்ட நாம ஹெல்ப் கேட்டா என்ன?” என்று தாஸிடம் கேட்டாள் மிது.

“என்ன முழிக்கிறீங்க? ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா? எதோ பகை, பகடை என்று பேசிகிட்டு இருந்தீங்க?”

“என்ன போலீஸ் போட்டு வாங்க பாக்குறீங்களா?” மிது முறைத்தாள்.

“நீ உசார் தான்.இவ கூட எப்படிடா தம்பி நீ குடும்பம் நடத்துற? உன் நிலமை பாவம் தான். அன்னக்கி உன் பையன் காணாம போனப்போ இவ புலம்புறதையும், அழுறதையும் பார்த்து என்னமோ நீ இவள ஒழுங்கா பாத்துக்கிறதில்ல. நடத்துறதில்ல. நீ பொறுப்பில்லாதவன் என்று உன்ன தப்பா நினச்சேன். அதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் தம்பி. ஆனாலும் ஒரு ராட்ச்சசிய கட்டி குடும்பம் நடத்துறியே நீ கிரேட் டா” தாஸின் தோளை தட்டிக் கொடுக்க, மிது முறைத்துக் கொண்டே இருந்தாளென்றால் தாஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான்.

“சரி சரி முறைக்காம தாய்க்குலத்துக்கு என்ன பிரச்சினை என்று சொன்னா என்னாலான உதவிய செய்யிறேன்” என்றான் பாரி.

“டாக்டரையும், வக்கீலையும் நம்பலாம் ஆனா போலீஸ நம்பக கூடாது. அதனால உங்க உதவி வேண்டாம்” என்றாள் மிது.

“பார்டா… கிண்டல் பண்ணதும் ஒதுக்குறா. அட சும்மா சொல்லுமா. நீ சொல்லு தம்பி” என்று தாஸின் புறம் திரும்பினான்.

எங்கே கணவன் சொல்லி விடுவானோ என்று “நான் சொல்லுறேன்” என்றாள்.

“பைத்தியக்காரி, அவசரகுடுக்க, முந்திரிகொட்ட” மிதுவை முறைத்தவாறே முணுமுணுத்தான் தாஸ்.

மிதுவின் வீட்டுக்கு தனது குடும்பம் வருவதையே நரசிம்மன் அறிந்துக்கொள்ளக் கூடாது என்று தான் வீட்டிலிருந்து புறப்படும் பொழுது மிதுவை அலைபேசி அழைப்பு விடுக்கச் சொன்னான். பரியிடம் விஷயத்தை கூறப் போய் அது மிதுவின் வீட்டாரின் காதுக்கு சென்றால், பிரச்சினை பெரிதாகுமோ என்ற அச்சம் தான் தாஸ் மிதுவை மனதுக்குள் திட்டித் தீர்க்கக் காரணம்.

தாஸ் எண்ணியது போல் மிது பாரியிடம் நரசிம்மனை பற்றி கூறவில்லை. “உதவி செய்யவும் ஒரு தகுதி வேணும். அது இந்த போலீசுக்கு இருக்கான்னு ஒரு டெஸ்ட் வைக்கிறேன். அதுல பாஸானா உதவி கேக்குறேன்” புதிரோடு பேசினாள் மிது.

“டெஸ்டடா? உலகத்துல உதவி செய்யிறவன டெஸ்ட்டு வச்சி கண்டு பிடிச்ச முதல் வர்க்கம் நீயா தான் இருப்ப” கடுப்பானாலும், “சரி சொல்லு” எனும் விதமாக மிதுவை பார்த்தான் பாரி.  

“நல்லா கேட்டுக்கோங்க… ரெண்டு ப்ரெண்ட்ஸ் ஒருத்தருக்காக ஒருத்தர் உயிரக் கூட கொடுப்பாங்க. ஒருத்தன நாம பிரென்ட் என்றும் மத்தவன நாம வில்லன் என்றும் வச்சிக்கலாம். வில்லன்  தன் உயிர் நண்பனோட பையன பகடையா உபயோகித்து நண்பனோட எதிரியை வீழ்த்த திட்டம் போடுறான். இதுல என்ன வேடிக்கை என்றால் எதிரி கூட சமரசமா போலாம் என்று நண்பன் முடிவு பண்ணியிருக்கான் என்று தெரிஞ்சே அப்படியொரு காரியத்தை வில்லன் பண்ணுறான்.

அப்படியென்றா அவனோட உள்நோக்கம் என்ன? நண்பனோட எதிரி வில்லனோட எதிரி எங்குறதால பையன பலி கொடுத்துட்டானா?” கேட்டு விட்டு பாரியை கூர்ந்து பார்த்தாள் மிது.

“தீபாவளி அதுவுமா உன் புருஷன் கிட்ட பகடை, பலி என்று விடுகதை தான் கேட்டுகிட்டு இருந்தியா? தானா வந்து நான் தலையை உள்ள விட்டேனேனா?” நொந்த குரலில் பாரி பேச,

“பதில் தெரியலைனா தாராளமா இடத்தை காலி பண்ணலாம்” கையை நீட்டி செல்லுமாறு மிது கூறினாள்.

“இதெல்லாம் ஒரு கேள்வின்னு வந்துட்டா கேக்க. முதல்ல அவன் நல்ல பிரென்ட் இல்ல. ப்ரெண்டா இருந்தா, பிரெண்டோட பையன யூஸ் பண்ண யோசிப்பானா? அவனுக்கு வில்ல என்று பேர் வச்சியே அது தான் பொருத்தம். நண்பனத்தான் எதிரியா பாக்குறான். அதனாலதான் பையன யூஸ் பண்ணியிருக்கான்”

“என்ன சொல்லுறீங்க? அப்போ அந்த நம்மனோட எதிரி இவனுக்கு எதிரியில்லையா?”

“வில்லன் நண்பன் போல கூட இருந்தே குழி பறிக்கனும் என்று முடிவு பண்ணியிருக்கான். அதனால யாரையும் நெருங்க விட மாட்டான். எதிரியோடு சமரசமா போக விட்டுடுவானா?”

பாரி சொல்லும் கோணம் கூட மிதுவுக்கும், தாஸுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருந்தது. அப்படியானால் தாஸின் பெற்றோரின் திருமணம் நடக்க முன்பே நிறுத்தியிருக்கலாம். ஏன் நடக்க விட்டு குட்டையை குழப்ப வேண்டும்? என்று தாஸும் மிதுவும் ஒருவரை ஒருவர் பார்களாயினர்.

“என்ன பதில் சரி தானே” என்று கேட்டான் பாரி.

தாங்கள் யோசிக்காத ஒரு கோணத்தில் பாரி கூறியது பெரிய திருப்பமாக இருவருக்கும் தோன்றியது. கூடவே பாரியிடம் உண்மையை கூறாமல் அவனிடம் உதவியையும் பெற முடியாது என்பதையும் புரிந்த்து கொண்டவர்கள் உண்மையை கூறலாயினர்.

Advertisement