Advertisement

அத்தியாயம் 21

தீபாவளி நாளும் அழகாக விடிந்தது எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து தாஸின் குடும்பத்தார் அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடியிருந்தனர். மலர்களால் அகங்காரிக்கப்பட்ட கடவுள்களின் படங்களின் முன்னால் தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன.

முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட்ட பிறகு, குபேர, லட்சுமியின் துதிப் பாடி கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

மனநிறைவோடு பூஜையை முடித்துக் கொண்டு அனைவரும் பூஜை அறையை விட்டு வெளியே வர “டேய் தாஸு பட்டு வேட்டி சட்டையில் உன்ன பார்க்கையில உன்ற தாத்தன பார்க்குற போலயே இருக்குது” தாஸின் கன்னம் வழித்து நெட்டி முறித்தாள் சோலை.

“எந்த தாத்தாவை சொல்லுற?” தாஸ் புரியாமல் கேட்டானா? சோலையை சீண்டக் கேட்டானா? முறுவலோடு தான் கேட்டான்.

“உனக்கு எத்தனை தாத்தா இருக்காங்க?” சோலை கோபமாக கேட்க,

“நீ மாரிமுத்து தாத்தாவை சொன்னியோன்னு நினச்சேன்” என்று சத்தமாக சிரித்தான்.

தாஸை முறைத்த சோலை “நாச்சி புருஷன பத்தி நான் ஏன்டா பேசணும்? அவளுக்கு வேணும்னா அந்தாள் உசத்தியா இருக்கலாம். எனக்கு எப்பவும் என் புருஷன் தான் உசத்தி” என்றாள்.

“இரு இரு… அப்போ நீ எதுக்கு நாச்சி அப்பத்தா கூட மல்லுகட்டுற? மாரிமுத்து தாத்தாவ கல்யாணம் பண்ண முடியலன்னு தானே. இப்போ பாண்டியன் தாத்தாவ உசுருக்கு உசுரா லவ் பண்ணுறது போல பேசுற? எது உண்மை?” ஒரு கணம் புரியாமல் பார்த்தான் தாஸ்.

“நல்ல நாள் அதுவுமா என்ன பேச்சு இது?” எதுக்கு இப்போ இந்த பேச்சு என்று குறுக்கிட்டான் வேலன்.

“ஓஹ் நான் அவ புருஷனுக்காக சண்டை போடுறேன்னு அந்த நாச்சி சொன்னாளா? நான் அவ புருஷனுக்காக சண்டை போட்டிருந்தா? என் புருஷன் என் கூட குடும்பம் நடத்திருப்பாரா? அடிச்சி துரதியிருக்கமாட்டாரா? இப்படித்தான் யோசிப்பியா? உனக்குள்ள ஓடுறது நம்ம ரெத்தமென்று நினச்சேன். நாச்சி ரத்தமா?” கோபத்தை அடக்க முடியாமல் பேசினாள் சோலை.

“நாச்சி அப்பத்தா ஒன்னும் சொல்லல. எதுக்கு சண்டை போடுறீங்கன்னு நானேதான் கேட்டேன்” என்றான்.

“அவன் என் சிநேகிதி. எனக்கு பார்த்த மாப்புள என்று தெரிஞ்சே என் கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணுவாளாம். கல்யாணத்தையும் பண்ணிட்டு என்னையே கண்டபடி பேசுவாளாம். நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கோனுமாம். எந்த ஊரு நியாயமாம்?”

எத்தனை வருடங்களாக மனதில் இருந்த ரணம். கணவனிடம் மட்டும் தான் புலம்பித் தீர்ப்பாள். பாண்டியன் இறந்த பின் தனது மனதில் உள்ளதை புலம்பக் கூட யாரும் இல்லாத நிலையில் நாச்சியின் மேல் கோபம் அதிகமானதே ஒழிய குறையவே இல்லை. சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் நாச்சியோடு மல்லுக்கு நிற்பாள் சோலை.

இன்று தாஸ் கேட்ட கேள்வியில் சீறி எழுந்தவள் மனதில் உள்ளதை கொட்டலானாள்.

இது காதல் பிரச்சினையில்லை. ஈகோ பிரச்சினை என்று இப்பொழுதுதான் தாஸுக்கு புரிந்தது.

“ஆ… போதும்… போதும். நல்ல நாள் அதுவுமா தேவையில்லாம பேசிகிட்டு. முதல்ல எங்களை ஆசிர்வாதம் பண்ணு” என்று மிதுவோடு சோலையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டான்.

தங்களது குடும்பம் பிரிய ஒருவேளை அந்த நரசிம்மன் தான் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் சோலைக்குள் வந்ததால் சட்டென்று மிதுவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் முகம் திருப்பவில்லை. குத்தல் பேச்சுகளுமில்லை. அதற்க்காக அன்பாக பேசினாலென்றால் அதுவுமில்லை. அதட்டலாக வேலை வாங்கினாள். வேலை ஏவினாள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சோலையின் அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் மிது பணித்து செல்கின்றாளா? என்று கேட்டால் இல்லை. அவளோ சோலையை பதிலுக்கு மிரட்டிக் கொண்டிருந்தாள்.

மிதுவோடு மல்லுக்கு நிற்பது நாச்சியோடு மல்லுக்கு நிற்பது போலவே இருக்க, தாஸிடம் புகார் வாசிக்க மாட்டாள். “நாச்சி பேத்தி தானே நீ. இருடி உன்ன பாத்துக்கிறேன்” என்று கருவுவாள்.

“இந்தா நல்லா பார்த்துக்க” என்று மிதுவும் முன்னாடியும், பின்னாடியும் தனது உடலை ஸ்டைலாக திருப்பிக் காட்டி சோலையை வெறுப்பேத்துவாள்.

இவர்களுக்குள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பமாகியிருக்க, தாஸ் “பாவம்டி அப்பத்தா” என்று மிதுவிடம் கூறினால்,

“இதுக்கே அலறுற? உங்கம்மாவை என்ன பண்ண போறேன் பாரு?” என்று அவனையே கதிகலங்க வைப்பாள்.

“எக்கேடு கெட்டும் போ. உங்க ஆட்டத்துல என்ன இழுக்காம இருந்தா போதும்” என்று இவன் கண்டுகொள்ளாமல் இருப்பான்.

தாஸ் பேசும் பொழுது தன் பங்குக்கு மிதுவும் வம்பிழுத்திருப்பாள். இன்று தீபாவளியன்று ஒன்றும் அவள் அமைதியாக இருக்க எண்ணவில்லை. எப்படியாவது பேசி அனைவரையும் தங்களது வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதால் தேவையில்லாமல் பேசி யாரையும் சீண்ட வேண்டாமே என்று அமைதியாக அனைவருக்கு உணவு பரிமாறலானாள்.  

சாப்பிடும் பொழுதே தாஸ் ஆரம்பித்து விட்டான் “என்ன அப்பத்தா, இப்போதான் உன் தோழி மேலயும், அவங்க குடும்பத்து மேலயும் எந்த குத்தமும் இல்லனு தெரிஞ்சி போச்சே எப்போ உன் பிரெண்டு கிட்ட பேச போற?” கொஞ்சம் நக்கலோடுதான் கேட்டான்.

“நல்ல நாள் அதுவுமா என் வாய கிளற பாக்குறியா? நரசிம்மன் சொன்னதை நான் என் காதால கேட்டேன். ஆனா உன் பொண்டாட்டியோட அப்பன் சொல்லலைனு நீ இன்னும் நிரூபிக்கல. அதனால இவ குடும்பத்தை பத்தி பேசுறத நிறுத்து. போனா போகட்டும் என்று உனக்காக நான் இவள பொறுத்து போய் கிட்டு இருந்தா, நீ ரொம்பதான் துள்ளுற” மிதுவை முறைத்தவாறே கூறிய சோலை “என்ன மருமகளே உனக்கு இப்போ குளு குளுன்னு இருக்குமே” என்று மதுமிதாவையும் சீண்டினாள்.

“நானும் நல்ல நாள் அதுவுமா எதுவும் பேசக் கூடாதென்று தான் அமைதியா இருக்கேன்” என்ற மதுமிதா அனைவரையும் முறைத்து விட்டு உள்ளே சென்றாள்.

“அந்த நரசிம்மன் தாத்தா குடும்பத்தை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று தாஸ் தந்தையிடம் கேட்டிருக்க,

“எனக்கு அவ்வளவு தெரியாதப்பா… நம்ம சொந்தம் கிடையாதே. அவர் பையன கதிரவன் கூட பாத்திருக்கேன். முறைச்சிகிட்டே திரிவான்” என்றான்.

தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தந்தையிடம் நேரடியாகவே தாஸ் கூறியிருந்தாலும், மிதுவின் தந்தை கதிரவனிடம் அவ்வாறெல்லாம் கூறவில்லை. கூறாமல் தான் கதிரவனிடம் நரசிம்மன் குடும்பத்தை பற்றி விசாரித்தான்.

“நரசிம்மன் மாமா சொந்தமெல்லாம் இல்லப்பா… அப்பாவோட நண்பன் தான். எங்க குடும்ப எல்லா விஷயத்துலையும் கூப்பிடாமலையே வந்து கலந்துபாரு. உதவி செய்வாரு. எங்க நலம் விரும்பி அவர்” என்றான் கதிரவன்.

இப்படி நரசிம்மன் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருக்கும் மாமனாரிடம் தனது சந்தேகத்தை கூறத்தான் முடியுமா? கூறினால் நம்புவாரா? நிச்சயமாக நம்பவும் மாட்டார். தான் எதோ குடும்பத்துக்கு பாதகம் விளைவிக்க நினைக்கிறன் என்று என்னையே சந்தேகமாக பார்ப்பார்.

பார்ப்பதோடு விட்டு விட்டால் சரி. போய் நரசிம்மனிடம் கூறினால் அந்தாள் பாட்டுக்கு ஏதாவது புது திட்டம் கூட தீட்டக் கூடும். திரும்ப நம்ம குடும்பத்தில் தான் பிரச்சினை வரும். நன்கு யோசித்த பின் தான் கதிரவனோடு பேசவே சென்றிருந்தான். அதனால் தான் கதிரவனிடம் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கூறவில்லை.

வீட்டுக்கு வந்து தந்தையிடம் பேசிய பின், நரசிம்மன் மேல் தான் சந்தேகப்பட்டு மிதுவிடம் ஒருவேளை இது தனது ஊகமாக கூட இருக்கலாமென்று கூறியது உண்மை என்று தெரிய வந்த பின் நரசிம்மனின் வாயால் இந்த உண்மையை எவ்வாறு கொண்டு வருவது என்று தாஸும் மிதுவும் யோசிக்கலாயினர். உண்மை தெரிய வந்த பின் நடந்த ஒரே நல்ல விஷயம் வேலனின் மனம் மாறியது தான்.

“அந்த நரசிம்மன் தாத்தா வாயாலையே உண்மை வெளிய வரலானா அப்பத்தா நாச்சி அப்பாத்தா கூட சமரசமா போகாது போலயே” எதோ இந்த வயதான கிழவிகளுக்காகத்தான் உண்மையை வெளிக் கொண்டு வர போராடுவது போல் பேசினான் தாஸ்.

“நீ என்னமா சொல்லுற?” என்று மருமகளிடம் ஆலோசனை கேட்டான் வேலன். மிதுவை தாஸின் மனைவியாக மட்டும் பார்த்து, ஏற்றுக்கொண்டிருந்த, வேலன் இப்பொழுது கதிரவனின் மகளாகவும், நாச்சியின் பேத்தியாகவும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருந்தான். அதனால் சிறிதும் தயக்கமின்றி மிதுவிடம் கேட்டிருந்தான்.

“நரசிம்மன் தாத்தா கிட்ட கேட்டா உண்மைய சொல்ல மாட்டார். அவரை சொல்ல வைக்கணும். அதுக்கு நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா சேரனும்”

“என்ன? நரசிம்மனை பூச்சாண்டியாக்கி நீ உன் குடும்பத்தை எங்க கூட சேர்த்து வைக்க முயற்சி செய்யிறியா?” நக்கலாக கேட்டாள் சோலை.

“எங்க அப்பா மேல எந்த குத்தம் இல்லனு நிரூபிக்கவும் வேணுமாம். ஆனா நான் எந்த முயற்சியும் எடுக்கவும் கூடாதாம். அப்போ எப்படி நிரூபிக்கிறதாம்?” சோலையை ஏகத்துக்கும் முறைத்தாள் மிது.

“அப்படி என்ன சீமையிலிருந்து திட்டத்தை கொண்டு வந்திருக்க? கொஞ்சம் சொல்லேன் கேப்போம்” என்று அமர்ந்தாள் சோலை.

மதுமிதாவுக்கு அங்கு தான் இருந்தாள். வேலை செய்வது போல் இவர்களின் பேச்சில் கவனமாக இருந்தவள். இவர்களின் பேச்சுக்கு பதில் பேசவில்லை. 

“ஒவ்வொரு பண்டிகைக்கும் நரசிம்மன் மாமா குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வருவாங்க. கண்டிப்பா இந்த தீபாவளிக்கும் அவங்க வருவாங்க. அவங்க வரும் போது நீங்க எல்லோரும் எங்க வீட்டுல இருந்தா, அவரோட முகம் எப்படியெல்லாம் மாறும், அவர் என்ன பேசுவாரென்று பார்த்தா, அவரோட உண்மையான முகம் தெரிஞ்சிடுமில்ல” என்றாள் மிது.

“பாத்தியா? இவ சொல்லுறத? அந்த நரசிம்மன் வரானோ, இல்லையோ, எங்கள அவ வீட்டுக்கு கூட்டிட்டு போக பாக்குறா. ஒரு கல்லுல ரெண்டு மங்கா அடிக்கலாமென்று உன் பொண்டாட்டி நினைக்கிறான்னு நீ நினைக்கிறியா தாஸ்?

இல்லவே இல்ல. அந்த நரசிம்மனோட பேர சொல்லி இவ எங்கள நாச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போக திட்டம் போடுறா. இவளுக்கு உடம்பெல்லாம் மூள. ஆனா என்ன இவ என்ன திட்டம் போட்டாலும் அது என் கிட்ட பலிக்காது” சோலை கழுத்தை நொடித்த விதத்தில் தண்டட்டி ஆடி நின்றது.

“இது தான் ஒரே வழி. இப்போ என்னடா? பண்ணுறது?” என்று மிது தாஸை பார்த்தாள்.

“என் மாமனார் குடும்பத்துக்கிட்ட பேசிட்டேன். அவங்களுக்கு இங்க வர்றதுல எந்த சிக்கலுமில்ல. பிரச்சினையுமில்ல. ஆனா நரசிம்மன் தாத்தா இங்க வருவாரா? நாம அங்க போறதே அவரோட முகமூடியை கழட்டத் தானே. உண்மை என்னனு தெரிஞ்சிக்கணும் என்றா நாம கொஞ்சம் இறங்கிப் போய்தானாகணும்” என்றான் தாஸ்.

“அம்மா தாஸ் சொல்லுறத புரிஞ்சிக்க. அங்க போறதுல எனக்கொண்ணும் பிரச்சினை இல்ல. நான் மட்டும் போனா அதுக்கும் அந்த நரசிம்மன் ஏதாவது பேச, நாச்சி அத்த நம்ம மேல கோபத்தை வளத்துக்குவாங்க.

இதுல நீ முக்கியமா ஒண்ண கவனிக்கணும். என் கல்யாணத்துல கதிரவன் நம்மள பேசினானென்று நரசிம்மன் தான் சொன்னானென்றோ, கதிரவன் எதுவும் பேசல என்று நமக்கு தெரியும் என்றோ, நாச்சி அத்தைக்கோ, கதிரவனுக்கு தெரியாது. நாம அங்க போறது நம்ம மருமகளோட வீடு என்கிற முறைல.

அப்பா சாகும் போது கூட பகையை மறந்து நாச்சி அத்த கூட சமாதானமாகத்தானே நம்ம கிட்ட சொன்னாரு. நீதான் கேட்கல. மாரிமுத்து மாமா செத்தப்போ கூட நாங்க யாரும் போகல. அப்பா சாவுக்கு கூட நீ மதுவ அனுப்பல. அவங்க மேல எந்த தப்பும் இல்லனா, நாம பண்ணதெல்லாம் தான் தப்பா தெரியும். அதுக்கு நாமளே அவங்க வீட்டுக்கு போறது தான் சரி என்று எனக்குத் தோணுது. நீ என் அம்மா. நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லையே. யோசிச்சு முடிவெடு” என்றான் வேலன்.

அந்த நேரம் வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது. வண்டியிலிருந்து பார்த்தீபன் குடும்பத்தோடு இறங்கினான்.

குழந்தைகள் இருவரும் தாஸையும், மிதுவையும் கண்டு ஓடி வந்து கட்டிக் கொண்டனர்.

தீபாவளிக்கு வாங்கிய, துணி, ஸ்வீட் என்று கையேடு கொண்டு வந்ததை பார்த்தீபனின் கையில் கொடுத்த சுவேதா வீட்டாருக்கு கொடுக்கும்படி கண்களாளேயே உத்தரவிட்டாள்.

சுவேதா வருவாளென்று எதிர்பார்க்காத வீட்டார் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக வரவேற்க, குழந்தைகள் மிது மற்றும் தாஸிடம் ஒட்டிக் கொண்டதை பார்த்து மேலும் ஆச்சரியமாக பார்களாயினர்.  

“நேத்தே வரலாமென்று இருந்தோம். கட்ச்சி வேல, தொண்டர்களுக்கு தீபாவளி துணி கொடுத்ததுல லேட்டாச்சு. அதான் காலையிலையே கிளம்பி வந்தோம்” என்றாள் சுவேதா.

“உக்காருங்க அக்கா. ஏன் நின்னுக்கிட்டே இருக்கிறீங்க?” குழந்தைகளுக்கு அகல்யாவை அறிமுகப்படுத்தி அவளிடம் விட்டவாறே கூறினாள் மிது.

“நம்ம வீட்டுலையே என்ன உபசரிக்கிறியே. உனக்கு முன்னாடி நான் இந்த வீட்டுக்கு வந்தவ” என்றவாறே சுவேதா அமர்ந்து கொண்டாள்.

மாமியாரை பற்றி தன்னிடம் தவறாக பேசியவள். மாமியாரிடம் ஒட்டிக் கொள்வதற்காக, தன் வீட்டுக்கு வந்து சென்ற பின் தன்னை பற்றியும் தவறாக பேசியிருப்பாளோ? என்ற சந்தேகம் சுவேதாவுக்குள் வந்திருந்தது. தான் தான் இந்த வீட்டு மூத்த மருமகள் தன்னுடைய இடத்தை அந்த மிதுவுக்கு விட்டுக் கொடுப்பதா? என்ற எண்ணம் தலை தூக்க சுவேதா பார்த்தீபனை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தாள்.

கூடவே மிது கூறிய அறிவுரையையும் சுவேதா மறக்கவில்லை. மிது எந்த நோக்கத்துக்காக கூறினாளோ, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள எண்ணினாள். 

சுவேதாவின் பேச்சு ஒரு தினுசாக இருப்பதை மிது உணர்ந்தாலும், வழமையாக அவள் அவ்வாறு தானே பேசுவாள். அவள் பேசுவதெல்லாம் கண்டு கொண்டால் குடும்பம் ஒற்றுமையாக இருக்க முடியுமா? வரவே மாட்டாள் என்றவள் வந்து விட்டாள். இது போதும் என்ற நினைப்போடு வந்தவர்களை கவனிக்கலானாள் மிது.

ஆனால் சோலை அமைதியாக இருப்பாளா? “ஆமா வீட்டுக்கு மூத்த மருமக என்று தான் பேரு. புருஷன் வீட்டுல தங்குறதுமில்லை. தங்க வசதியுமில்லேனு சொன்னவளாச்சே நீ. சின்னவ வந்ததும் உரிம கொண்டாட வந்தியா? இல்ல உன் பணத்திமிரை காட்ட வந்தியா?” வெறுப்பை உமிழ்ந்தாள்.

“அம்மா என்ன பேசுற?”

“ஏன்டா நான் பேசக் கூடாதா? ஒரே ஊர்ல தானே இருக்கோம். கொள்ளுப்பேர பசங்களையாவது கண்ணுல காட்டுறாளா? ஓட்டு கேட்ட மட்டும் இவளும், இவ அப்பனும் வீடு வீடா பிச்சை எடுக்க போவாங்களே. நம்ம வீட்டு ஓட்டு வேணாமா?” என்று நக்கலாக கேட்க கோபத்தை அடக்க பல்லைக் கடித்தாள் சுவேதா.

“அப்பத்தா அதான் அவளே மனசு மாறி வந்திருக்காளே. இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசுற?” எங்கே மனைவி கோபத்தில் ஏதாவது அப்பத்தாவை பேசி விடுவாளோ? அல்லது வா கிளம்பலாமென்று அழைத்து சென்று விடுவாளோ என்று பதறினான் பார்த்தீபன்.

“என்ன அப்பாத்தா வீட்டுக்கு வர மாட்டான்னு சொல்லி புலம்புவ, வந்தா இப்படித்தான் பேசி துரத்தியடிப்பியா? அதான் அக்கா இந்தப் பக்கம் தலை வச்சி படுக்கக் கூட பயப்படுறாங்களா? சரிதான் போ. நீ இருக்குற வரைக்கும் நம்ம குடும்பம் ஒத்துமையா இருக்குறத பத்தி யோசிக்கணும் போலயே” யோசிப்பது போல் பாவனை செய்யலானாள் மிது.

சோலையின் கோபம் நியாயமானது தான். அதற்காக வீடு தேடி வந்தவளிடம் கோபப்பட்டால், இதுதான் சாக்கென்று சுவேதா இந்த வீட்டுக்கு வராமலே இருக்க முடிவெடுத்து விட்டால்? அதற்காவேண்டி குறுக்கிட்டு பேசினாள் மிது.

“நீ சரியா இவங்கள புரிஞ்சி வச்சிருக்க மிது. என்னமோ நீ சொன்னனனு நானும் தீபாவளி அதுவுமா இங்க வந்தா எப்படி வர வேற்கிறாங்க பாரு. இதுக்குத்தான் நான் இவங்கள ஒதுக்கி வச்சிருக்கேன். நானுமே ஒதுங்கியிருக்கேன்” என்றாள் சுவேதா.

“இவள் சொல்லி வந்தாளா?” என்று சோலையும் மதுமிதாவும் யோசனையோடு பார்க்க,

“சொந்தம் என்றா அப்படித்தான் அக்கா. அதுவும் புருஷன் வீடு என்றா, ஆயிரம் குறைகள் சொல்லத்தான் செய்வாங்க. அதுக்காக உறவை முறிச்சிக்கிட்டு இருக்க முடியுமா? புருஷனுக்காக, குழந்தைகளுக்காக நாம அவங்கள அனுசரிச்சிதான் போகணும். நாமளும் நம்ம மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவா பார்க்கணும்.

இதுவே என் புருஷன் என் அப்பா, அம்மாவ பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்று சொன்னா நான் கேட்பேனா? சண்டை போட மாட்டேன்?

   

இப்போ எல்லாம் மருமகளை மாமியார் கொடும படுத்துறத விட மருமகனை மாமனார் கொடும படுத்துறதும், பொண்டாட்டி கொடும படுத்துறதும் தான் அதிகம். இல்லையா தாஸ்?” மிது பார்த்தீபனின் நிலையை எண்ணி தாஸ் புலம்புவதை வைத்து கூற,

பார்த்தீபனின் நிலையை தான் மனைவி கூறுகிறாளென்று தாஸுக்கு புரியாதா என்ன? அது சுவேதாவும் புரிந்தால் மேலும் ஒரு களோபரம் நடக்கும் என்று “என் மாமனார் தங்கமானவர். பொண்டாட்டி தான் கொஞ்சம் ராட்சசி. மாமனாருக்காக பொண்டாட்டிய பொறுத்து போகலாம்” என்று மிதுவின் முறைப்பை பெற்றுக்கொண்டவன் “இந்த ராட்சசி இல்லனா நான் சூனியம் அதையும் ஒத்துக்கணும்” என்றான்.

“வீட்டாளுங்கள வச்சிக்கிட்டே ரோமன்ஸ் பண்ணுறியே. நீ கலக்கு. எனக்குத்தான் அந்த கொடுப்பன இல்ல” உள்ளே போன குரலில் கூறினான் பார்த்தீபன்.

அண்ணனின் நிலை தாஸுக்கு புரிந்தாலும் என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தான் புரியவில்லை. ஒரு பிரச்சினையை சமாளிக்கப் போய் புதுப் பிரச்சினை வந்து விடுமோ என்று முழித்த தாஸ் புன்னகையோடு தலையை கோதி முகபாவனையை சீர் செய்யலானான்.

பார்த்தீபன் கூறியது சுவேதாவின் காதிலும் தெளிவாக விழத்தான் செய்தது. அவள் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 

“நமக்கிருக்குற பிரச்சினையை விட இவங்க பிரச்சினை பெரிய பிரச்சினை போலயே” என்று நினைத்தாள் மிது.  

Advertisement