Advertisement

அத்தியாயம் 20

சுடச் சுட தேநீரோடு வடையும், பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு அகல்யாவும், மிதுவும் சிரித்துப் பேசியவாறு வந்து தணிகை வேலனுக்கும், தாஸுக்கும் மதுமிதாவுக்கும் கொடுத்தார்கள்.

“அண்ணா… அம்மா நீ சென்னையில பட்டினி கெடக்குறது போல பேசுவாங்க. ஆனா அண்ணி நல்லாவே சமைக்கிறாங்க” என்று சிரித்தாள் அகல்யா.

“எல்லாம் யூ டியூபின் மகிமை” என்று தாஸ் சிரிக்க,

“போ…ண்ணா நானும் யூ டியூப் பார்த்து எத்தன ரெசிபி ட்ரை பண்ணியிருக்கேன். ஒன்னு கூட உருப்படியா, அவங்க சொல்லுறது போல வராது. அத விடு. அண்ணி டிப்ஸ கைவசம் வச்சிருக்காங்க. நல்ல சமைக்கிறவங்களால மட்டும் தான் கேட்டும் போதே பட்டு பட்டுனு சொல்ல முடியும், என்ன மாதிரி கத்துகுட்டினா, ஆயிரம் தடவ வீடியோ பார்த்திருப்பேன்” மிதுவை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் அகல்யா.

தாஸை முறைத்துக் கொண்டிருந்த மிது அகல்யாவின் பேச்சில் கண்கள் மின்ன கணவனை பார்த்தாள். ஒருவழியாக அகல்யா தன்னை புரிந்து கொண்டாலே என்ற நிம்மதியும், மகிழ்ச்சியும் அவள் முகத்தில் பிரதிபலித்தது.

தாஸ் சாப்பிட்டவாறே பேசிக் கொண்டிருக்க, இத்தனை வருடங்கள் கழித்து இந்த வருடம் தான் வீடே திருவிழா கோலம் பூண்டது போல உணர்ந்த தணிகை வேலன் பிள்ளைகள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.

மதுமிதாவோ மிது செய்த உணவுகளை சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற போராட்டத்தில் இருக்க, சோலையம்மாள் ஒரு தட்டோடு வந்தமர்ந்து பஜ்ஜியை ருசி பார்க்கலானாள். 

“பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு திங்கிறத பாரு” மதுமிதா மாமியாரை முறைத்துப் பார்த்தாள்.

அவள் மனதை படித்தது போல் சோலை “என்னடி பாக்குற? எனக்கு வயித்த வலி வந்துட போகுது. உன் நொள்ள கண்ண அங்குட்டு திருப்பு. என்ன? அவ செஞ்சத சாப்பிடுறேன்னு பக்குறியா? அவ செஞ்சாலும் பொருளெல்லாம் என் வீட்டு பொருள். தனியாவா செஞ்சா? கூட அகலும் இருந்தாலே” என்று விட்டு மதுமிதாவுக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டாள் சோலை.

“திங்கிறத பாரு? பஜ்ஜியை பார்த்தது இல்லாதது போல, இதுல திங்க காரணம் வேற” மாமியாரை முறைத்த மதுமிதா “தாஸ் வந்தா எதுக்கு பார்த்தீ வீட்டுக்கு போனான்னு கேக்கணும் என்று கங்கணம் கட்டிக்கிட்டு இருந்துச்சு. சோத்த பார்த்ததும் எல்லாத்தையும் மறந்து தட்ட கட்டிக்கிட்டு நிக்குது” மனதுக்குள் வசைபாடிக் கொண்டே இருக்க, சோலையம்மாளுக்கு புரையேறியது.

மிது தான் தலையை தட்டி தண்ணீர் புகட்டினாள். அந்த நேரத்தில் யார் தண்ணீர் கொடுத்தது, யார் நெஞ்சையும், முதுகையும் நீவி விட்டார்கள் என்றெல்லாம் பாராமல் மட மடவென தண்ணீரை அருந்தியிருந்தாள் சோலை.

இது தான் விதியின் விளையாட்டோ? சற்று முன் தான் தன் கையால் தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்றாள். கடவுளாய் பார்த்து சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்தானே என்று  மிது சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டிருக்க, தாஸ் சத்தமாக சிரித்து விட்டான்.

“எதுக்குடா சிரிக்கிற?” கோபமாகவும், புரியாமலும் வேலன் மகனை ஏறிட சோலை கூறியதை கூறியவாறே சிரிப்பை அடக்கினான் தாஸ்.

அகல்யாவுக்கும் சிரிப்பாகத்தான் இருந்தது. சிரித்து பின் திட்டையும் வாங்க வேண்டும் என்று பல்லைக் கடித்தவாறு நின்றிருந்தாள்.

வாய் சவடால் விடும் மாமியாருக்கு இது தேவைதான் எனும் விதமாக மதுமிதா பார்த்திருந்தாளே ஒழிய எதுவும் பேசவில்லை.

“நான் படிச்சு, படிச்சு சொன்னேன் தேவையில்லாம வீண் பேச்சு பேசாதீங்கன்னு. கடவுளே இன்னைக்கி பேசின வாய்க்கு…” என்ற வேலன் மனைவியை பார்த்து “அடுத்து நீ தான்” என்று கண்களாளேயே கூறினான்.

“இவ சமைச்ச பஜ்ஜியை சாப்பிட்டதால் எனக்கு வந்த வினை” மிதுவை முறைத்துப் பார்த்து விட்டு புலம்பியவாறே உள்ளே சென்றாள் சோலை.

மதுமிதாவுக்கு கோபம் சுர்ரென்று ஏறினாலும் கணவனை கடிய முடியாமல் “தாஸ் நீ பார்த்தீ வீட்டுக்கு போனியா? எதுக்காக அந்த எம்.எல்.ஏயோட வீட்டுக்கு போன? உன் பொண்டாட்டிக்கு ஏதாவது தேவையாக இருந்தா? அவ அப்பன் கிட்ட சொல்லி செஞ்சிக்க மாட்டாளாமா? நீ எதுக்காக அங்க போன? ஏற்கனவே உங்கண்ணி எங்களை மதிக்க மாட்டா, நீ வேற உதவி என்று அங்க போய் பிச்சை கேட்டா, எங்க மானம், மரியாதை என்னவாகும்? யோசிக்க மாட்டியா?” என்று பொரிந்து தள்ளலானாள்.

சுவேதா மனம் மாறி மாமியார் வீட்டுக்கு வருவாளோ, மாட்டாளோ தெரியாது. அதனால் எம்.எல்.ஏயின் வீட்டுக்கு சென்றதை வீட்டில் சொல்ல வேண்டாமென்று மிது தாஸிடம் கூறியிருந்தாள்.    

அன்று அகல்யா அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது மிது கூறியதையும் மறந்து பேச்சு வாக்கில் தாஸ் கூறியிருக்க, தாங்கள் பார்த்தீபனின் வீட்டுக்கு சென்ற நோக்கம் புரியாமல் அன்னை பேசுவதை பார்த்த தாஸ் என்ன சொல்வது என்று பெருமூச்சு விட, மிது அவனை முறைக்கலானாள்.

“என் பொண்டாட்டியோட வேலைக்காக போனோம்னு நான் சொன்னேனா? எத பேசினாலும் அவளை குத்தம் சொல்லாம உன்னால இருக்க முடியாதா?” மிது முறைத்த முறைப்பில் தாஸ் அன்னையை கடிந்தான்.

“நீ சொல்லாமத்தான் நான் பேசிகிட்டு இருக்கேனா? நீ தானே சொன்ன. உன் பொண்டாட்டி சொல்லித்தான் ஊருக்கு வந்தேன். உன் பொண்டாட்டிக்காகத்தான் ஊருக்கு வந்தேன். உன் பொண்டாட்டிக்காகத்தான் எல்லாம் செய்வேன் என்று”

தான் ஊருக்கு வந்தது உங்களோடு சண்டை போடவோ, சமாதானமாகவோ இல்லை. என் மனைவிக்காக என்று சொன்னதன் அர்த்தத்தை இவ்வாறு எடுத்துக் கொண்டாளா? என்று அன்னையை பார்த்த தாஸ் “மிது என் பொண்டாட்டி என்று உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கே. அதுவரைக்கும் சந்தோசம்” மதுமிதா யார் என்ன சொன்னாலும் அதன் அர்த்தத்தை விட்டு இன்னொரு அர்த்தத்தையல்லவா கண்டெடுப்பாள். அதனால் அவள் பாணியிலையே பதில் கூறினான்.

“நான் என்ன கேட்டா நீ என்ன உளறுற?” தான் இவ்வாறு பதில் கூறினால் மற்றவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? எரிச்சல் உண்டாகும்? கடுப்பாக இருக்கும்? என்றெல்லாம் யோசிக்காதவளுக்கு தாஸின் பதில் நன்றாகவே எரியத்தான் செய்தது. 

“அப்போ நீ இத்தனை நாளும் உளறிக்கிட்டுத்தான் இருந்தான்னு நீயே சொல்லிட்ட. உங்கண்ணன் போட்ட சரக்கோட போதை உனக்கு ஏறிருச்சா?” வேலன் தான் குறிக்கிட்டான்.

இப்பொழுது மதுமிதா கணவனை வெளிப்படையாகவே முறைத்தான்.

“இவளை சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டா. இவ அண்ணனை சொன்னா முறைப்பா” என்று வேலன் சிரிக்க, மிது புரியாமல் பார்த்தாள்.

வேலனுக்கு செங்கதிரவன் மேல் தனிப்பட்ட எந்த பகையுமில்லை. குடும்ப பகையின் காரணமாக மிதுவின் குடும்பத்தை பற்றி வேலன் பேசினால் மதுமிதா கணவனின் மேல் எரிந்து விழுவாள்.

குடும்பத்தார் மீது கொஞ்சநஞ்ச பாசம் இருப்பதால் எரிந்து விழுகிறாளா? அல்லது தனது குடும்பத்தாரை பற்றி பேசப் பிடிக்காமல் எரிந்து விழுகிறாளா? தெரியவில்லை. குடும்பத்தார் மீதிருக்கும் பாசத்தால் தான் மனைவி முறைக்கிறாளென்று வேலன் இப்பொழுது கூறினான்.

மதுமிதா எதுவும் பேசாமல் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

குடித்த டீ டம்ளர்களை எடுத்துக் கொண்டு மிது உள்ளே செல்ல முற்பட “அத அகலோட கைல கொடுத்துட்டு நீ இப்படி உக்காரு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று வேலன் கூற, கணவன் மாமனாரிடம் என்ன பேசினானோ! அவர் என்ன பேச போறாரோ என்ற பார்வையோடு மிது தாஸை பார்த்தவாறே அமர்ந்து கொண்டாள்.

“உங்கப்பாவ பத்தி சொல்லுமா. உங்கப்பா குடிச்ச என்னெல்லாம் பண்ணுவாரென்று சொல்லு”

“அப்பா குடிச்சிகிட்டு வீட்டுக்கு வந்ததுமில்லை. சண்டை போட்டதுமில்லை. அப்பாக்கு கல்யாணமாக முன்னாடி குடிச்சாரு. கல்யாணமான பிறகு குடிய நிறுத்திட்டாரு என்று அம்மா சொன்னாங்க” என்றவள் மேற்கொண்டு தந்தையிடம் தாஸின் பெற்றோரின் திருமணத்தின் பொழுது என்ன நடந்தது என்று பேசியதை கூறவில்லை.

தாஸ் தந்தையிடம் திருமண நாளன்று இதுதான் நடந்ததென்று கதிரவன் கூறியதை கூறியிருந்தபடியால் “உங்கப்பாகிட்ட பேசும் பொழுது நீயும் கூட இருந்தியா?” என்று மிதுவிடம் கேட்டான் வேலன்.

“இருந்தேன் மாமா. உருப்படியா எந்த தகவலும் கிடைக்கல” சோகமானாள் மிது. பிரிந்து, பிளவு பட்டிருக்கும் குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டியல்லவா பழைய ரணத்தை மீண்டும் கிளறியிருக்கின்றாள்.

“அப்போ தாஸ் சொன்னது” என்று வேலன் கேட்க, தாங்கள் சந்தேகப்பட்டதெல்லாம் கூறவேண்டாமென்றேனே அதையும் சொல்லிவிட்டானா? என்று மாமனாரின் முன்னிலையில் கணவனை முறைக்க முடியாமல் பார்த்தாள் மிது.

தந்தை அப்படி என்ன கணவனுக்கு பரிசாக கொடுத்திருப்பாரென்று மிதுவின் சிறுமூளை குடைந்தாலும் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். தாஸ் வாய் திறப்பது போல் தெரியவில்லை பொறுமையிழந்தவள் “டேய் தாஸ் எங்கப்பா அப்படி என்ன கிப்ட்டுடா தந்தாரு?” நெளிஞ்சி, கொளஞ்சி மிது கேட்டா விதத்தில் தாஸின் காதல் நெஞ்சம் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு பாயத்தான் செய்தது.

ஆனால் கதிரவன் கொடுத்த இரண்டு பாரின் சரக்கு பாட்டில்களும் தன் கையில் இருப்பது போலவும், அதை பார்த்து மிது பத்ரகாளி போல் அவன் முன் நின்று மூச்சு வாங்குவது போலவும் காட்ச்சி கண்ணுக்குள் வந்து நிற்க,

“உங்கப்பா கொடுத்த கிப்ட்டுல பாதி உனக்கும் வேணுமா?” கேலிப் புன்னகையை உதடு வளைத்து மறைத்தவாறே கேட்டான்.

“உனக்கு தாராள மனசுடா…” மிது ஆனதாக கூச்சலிட கதிரவன் கொடுத்த ஷூ பாக்ஸை கட்டிலின் மீது எடுத்து வைத்திருந்தான் தாஸ்.

“ஷூவா?” பங்கு போட முடியாததினால் தான் உனக்கும் தருகிறேன் என்றானா? என்று முகம் சுளித்தாள் மிது.

மிது முகம் சுளிப்பதை பார்த்த தாஸ் “பாதி தரேன்னு சொன்னேன்டி. ஏமாத்த மாட்டேன்” என்றான்.

“பேச்சு மாற மாட்டியே” என்று ஆசையாக மிது பெட்டியை திறக்க, உள்ளே இருந்த சரக்கு பாட்டில்களை பார்த்து முகம் சுளித்தவள், தாஸை முறைக்கலானாள்.

“என்ன பாதி வேணுமா? வேணாமா?” என்று இவன் சிரிக்கலானான்.

“கிண்டலா இருக்கா?”

“கிண்டல் இல்ல. நக்கல். நீ என்னடான்னா உங்கப்பா குடிக்க மாட்டார்னு சொல்லுற. உங்கப்பா என்னடான்னா… மாப்பிளைக்கு பாரின் சரக்கு பாட்டில் கிப்ட்டா கொடுக்குற அளவுக்கு அப்டேட்டாகி இருக்காரு”

“உன்ன…” என்று தந்தையின் மேல் வந்த கோபத்தையும் சேர்த்து தாஸை அடிக்கலானாள்.

சில அடிகளை வாங்கிக் கொண்டவன் அவளை தடுத்தவாறே “இருடி… எங்கம்மா, அப்பா, கல்யாணத்துல நடந்த குளறுபடிக்கும் விடை கிடைச்சிருச்சு” என்றான்.

அடிப்பதை நிறுத்திய மிது “என்ன சொல்லுற?” என்று கேட்க,

“ஒரு ஊகம் தான். சரியா தெரியல. என் ஊகம் சரியென்றா காரணத்தை தேடி கண்டு பிடிக்கணும்”

“புதிர் போடாம சொல்லுடா…” மிது எரிச்சலெல்லாம் படவில்லை. அவளுக்கு சஸ்பென்சோடு பேசுவது பிடிக்காது.  

“உங்க அப்பா தாகத்துக்கு கோலா குடிச்சதாக சொன்னாரு. அந்த கோலாலதான் எதோ கோளாறு. கல்யாணத்த நிறுத்த நினைச்சி உங்கப்பாக்கு கோலாவை கொடுத்திருந்தா? கல்யாணம் நடக்க முன்னாடி தானே கொடுத்திருக்கணும்? என்று நீ யோசிச்ச.

ஆனா நான் ஏன் குடும்பத்துல குழப்பம் வந்தா போதும் என்று யாராச்சும் கோலால ஏதாவது கலந்து கொடுத்திருக்கக் கூடாது என்று நினச்சேன்.

யார் மேல சந்தேகப்படுறது? அதனால உங்கப்பா கிட்ட கல்யாணத்துக்கு முந்தய நாள் சரக்கடிக்கலையான்னு கேட்டேன்.

“ஏகப்பட்ட கல்யாண வேல இருந்தது அதனால சரக்கடிக்கல மாப்புள. சரக்கடிச்சா நான் தான் நிதானத்துலையே இல்லையே. முத்துப்பாண்டி வற்புறுத்திக் கூப்பிடும் நான் மறுத்துட்டேன்” என்றாரு.

“முத்துப்பாண்டியா?” என்ற மிதுவுக்கு எதோ புரிவது போல் இருந்தது. ஆனாலும் தெளிவில்லாமல் இருந்தது.

“சரி மாமா மாப்பிளைக்கு சரக்கு கொடுக்கணும் அதுவும் பாரின் சரக்கு பாட்டில் கிப்ட்டா கொடுக்கணும் எப்படி உங்களுக்கு தோணிருச்சு?” என்று கேட்டேன்

“என்னடா மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறது போல கல்யாண நாளிலிருந்து உனக்கு சரக்கு கொடுத்த நாளுக்கு தாவின? மண்டை காயுது?” மிது சிடுசிடுப்போடு புரியாமல் கேட்டாள்.

“அடி இருடி அவசரக்குடுக்க” அவள் தலையில் கொட்டியவன், அவள் முறைப்பையும் பொருட்படுத்தாது தொடர்ந்தான். “உங்கப்பாவே குடில இருந்து மீண்டு வந்தவர். அப்படிப்பட்டவர் மாப்பிளைக்கு சரக்கு பாடில கிஃப்டா கொடுக்க யோசிப்பாரா? நிச்சயமா மாட்டாருல்ல”

“ஆமா…”

“அதனால யாரு ஐடியா கொடுத்தாங்க என்று தான் கேட்டேன். ஐடியா மட்டுமில்ல சரக்கு பாட்டிலையும் கொடுத்தது முத்துப்பாண்டியோட அப்பா நரசிம்மன் மாமா என்றார்”

“நீ என்ன சொல்ல வர?”

“நரசிம்மன் மாமாவோட மிலிட்டரி பிரென்ட் அவருக்கு பாரின் சரக்கு பாட்டில் அஞ்சி கொடுத்ததாகவும் அது வீட்டுல இருந்தா முத்துப்பாண்டி குடிச்சி தீர்த்து விடுவான் என்று ரெண்டு பாடில உங்கப்பாக்கு கொடுத்திருக்காரு. எந்த மிலிட்டரி பிரெண்டு அந்த கிழவனுக்கு அஞ்சி பாட்டில் சரக்கு கொடுத்திருப்பான்னு நீ நினைக்கிற? அதுவே பொய் தானே. உங்கப்பாக்கு அதையே கண்டு பிடிக்க தெரியல”

தந்தையை சொன்னதும் மிது முறைத்தாலும் அந்த நரசிம்மன் தாத்தா கூறியது பொய் தான் என்று புரிந்தது. ஆனாலும் தாஸ் என்ன கூற விழைகிறான் என்று அவளுக்கு புரியவில்லை

“நான் தான் இப்போ குடிக்கிறதே இல்லையே மாமா என்று உங்கப்பா மறுப்புதான் சொல்லியிருக்காரு.

அதுக்கு அந்த பெரிய மனுஷன் “நீ குடிக்காட்டி என்ன உன் மாப்புள குடிப்பானில்ல. கொண்டு போய் கொடுடா. கண்ட கண்ட சரக்க குடிக்கிறதுக்கு, சந்தோசமா குடிக்கட்டும்” என்று வலுக்கட்டாயமாகத்தான் கைல கொடுத்திருக்காரு.

அவர் என்ன நோக்கத்துல கொடுத்திருப்பார் என்று நீ நினைக்கிற?” என்று மிதுவை ஏறிட்டான்.

“நிச்சயமாக நல்ல நோக்கமாக இருக்காது” என்றாள் மிது.

“ஆமாம் சென்னையில இருக்கிறவன். ஐடில வேலை பாக்குறவன் பார்ட்டி, பப் என்று தினமும் குடிக்கிறவனாக இருக்கும் என்று என்ன பத்தி தவறா கணிச்சி பாடில கண்டா நான் கண்ட்ரோல் இல்லாம குடிப்பேன் என்று நினைச்சி கொடுத்தாரோ இல்ல. உங்கப்பா பழையபடி குடிக்க ஆரம்பிக்கணும் என்று கொடுத்தாரோ தெரியல”

“ஆதாரமில்லாம பேசக் கூடாது”

“அதனாலதான் இது என் ஊகம் என்று சொன்னேன். உங்க அப்பாக்கு கோலாவை கொடுத்தது அந்த நரசிம்மன் மாமாவோட பையன் முத்துப்பாண்டி. அவன் தெரிஞ்சி கொடுத்தானா? தெரியாம கொடுத்தானா? வேணும்னே கொடுத்தானா? என்று தெரிஞ்சிக்க உங்கப்பா கண்டபடி பேசினான்னு யார் முதல்ல சொன்னாங்க? யார் கிட்ட சொன்னாங்க? என்று கேட்டா உங்க அப்பா நிதானத்துலையே இல்லை. உங்க அம்மாக்கு ஒண்ணுமே தெரியல. அப்பத்தாவை பத்தி சொல்லவே வேணாம். சத்தம் மட்டும் தான். ஒன்னும் ஞாபகத்துல இல்ல. அன்னைக்கி நடந்தத பத்தி கேட்க தாத்தாவும் இல்ல. நம்ம வீட்டாளுங்க கிட்டத்தான் கேட்கணும். 

நம்ம ரெண்டு குடும்பமும் பிரிய அந்த நரசிம்மன் தாத்தா குடும்பம் தான் காரணம் என்றா? முதல்ல அந்த குடும்பத்துக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று தெரிஞ்சிக்கணும். அப்பொறம் தான் நம்ம குடும்பத்துக்கும் அந்த நரசிம்மனுக்கும்  என்ன பகை என்னனு தேடணும்”

“உண்மை எது என்று தெரியாம உங்க வீட்டுல உளறி வைக்காத” என்று மிது கூறியிருக்க, தாஸ் மாமனாரிடம் கூறி விட்டானா என்று தான் மிது முறைத்தாள்.

“மாமாதான் கோலானு நினைச்சி சரக்க குடிச்சிட்டாரே. அவர் நிதானத்துலையே இல்ல. அவர் பேசினாரா இல்லையானு அவருக்கே தெரியல. நாச்சி அப்பத்தாக்கு ஞாபகமில்ல. அதுக்கும் மேல புள்ளய பேசியதும் பொண்ண கொடுத்தோம் எங்குறதையும் மறந்து குதிச்சிருச்சு. என்ன நடந்தது என்று கேட்க மாரிமுத்து தாத்தாவும் இல்ல. அத்தைக்கு ஒண்ணுமே தெரியல.

அதனாலதான் மாமா நம்ம குடும்பத்த பத்தி பேசினாரா? பேசினது யார் பார்த்தாங்க? இல்ல பார்த்த யாராச்சும் உங்க கிட்ட சொன்னாங்களான்னு கேட்டேன்” என்றான் தாஸ்.

தாங்கள் பேசிய எதையும் கணவன் கூறவில்லை என்றதும் மிது நிம்மதியடைந்தாள். இருக்கிற பிரச்சினை பத்தாதென்று நரசிம்மன் தாத்தா குடும்பத்தோடும் பிரச்சினை வேண்டுமா? என்றுதான் அவள் யாரிடமும் இதை பற்றி பேச வேண்டாமென்றிருந்தாள்.

ஆனால் தாஸ் நினைத்தது போல் தங்களது இரு குடும்பமும் பிரியக் காரணமே அந்த நரசிம்மன் தாத்தா என்றான பின் உண்மை வெளி வரத்தானே செய்யும்.

“கதிரவன் பேசினதை நாங்க யாரும் கேட்கல.பேசினதா அம்மாதான் கத்தினாங்க. அப்பொறம் நாச்சி அத்த”

“ஆ… அவங்க ரெண்டு பேரும் பேசினா போதும். இல்லாத பிரச்சினையை உண்டு பண்ணுவாங்க” என்று தாஸ் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

“நான் எதுக்குடா… இல்லாத பிரச்சினையை உண்டு பண்ணனும்? உன்ற தாத்தன் கிட்ட அந்த நரசிம்மன் தான் கதிரவன் குடிச்சிட்டு உன் குடும்பத்தை பத்தி கண்டபடி உளறிக்கிட்டு இருக்கான்னு சொல்லிக்கிட்டு இருந்தான். உன் தாத்தன் பெரிய மனசு பண்ணி. இதோ இவளோட குடிகார அப்பன எங்கயாச்சும் தூங்க வைக்க சொன்னாரு. என் குடும்பத்தை பேசினவன சும்மா விட முடியுமா? நிக்க வச்சி கிழிக்க மாட்டேன்?” இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சோலை மிதுவை முறைத்தவாறே பதில் கூறிக் கொண்டு வந்தமர்ந்தாள்.

“அப்போ அந்த நரசிம்மன் தாத்தா, நம்ம தாத்தா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தத நீ கேட்டுத்தான் குதிச்சிருக்க. கதிரவன் மாமா பேசினதை நீ உன் கண்ணால பார்க்கவுமில்ல. காதால கேட்கவுமில்ல.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவங்க சொல்லியிருக்காங்க.

நீ நாலெழுத்து படிச்சிருந்தா தானே உனக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். புரிஞ்சிருக்கும். நீ தான் சண்டைக்கே அலையிறியே.

தாத்தாக்கு நரசிம்மன் தாத்தாவை பத்தி தெரிஞ்சதனால் தானோ, என்னவோ கண்டுக்காம இருந்திருக்காரு. அப்படி இல்லையா? கல்யாண வீடு எந்த பிரச்சினையும் வேணாம் என்று நினைச்சாரு. ஆனா நீ வம்ப வா, வான்னு கூப்பிட்டு உக்கார வச்சி கறி, விருந்து போட்டு வழியனுப்பி வச்சிருக்க. ஆமா நமக்கும் அந்த நரசிம்மன் தாத்தாகும் அப்படி என்ன பகை?” என்று அப்பத்தாவை வாங்கு, வாங்கு என்று வாங்கினான்.

“அந்தாளுக்கு நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே பகையாம் பகை. உன் பொண்டாட்டி கத சொன்னா, நீ இங்க வந்து தாலாட்டு பாடுறீயா? கூறுகெட்டவன்” சோலை தாஸை வசைபாடலானாள்.      

வேலனுக்கு தன் அன்னை அன்று வந்து கூறியதில் உண்மை இருக்குமோ? யார் சொன்னார்கள் என்றெல்லாம் யோசிக்கத் தோணவில்லை. தோணாததற்கு காரணம் கதிரவன் குடித்தது தான். அதுவே ஒரு சதி என்றானால் தங்களது இரு குடும்பமும் இத்தனை வருடங்களும் முட்டிக்கு கொண்டிருப்பதன் அர்த்தம் தான் என்ன?

இத்தனை வருடங்கள் ஊரிலிருந்தும் கதிரவனை பார்க்கும் பொழுது முறைத்தவாறு, முகத்தை திருப்பிக் கொண்டு தான் செல்கிறான். அதற்கு அர்த்தமே இல்லை. காரணம் யாரோ என்றதில் வேலனின் மனதில் ஒரு வலி ஏற்பட்டது. நெஞ்சை நீவி வீட்டுக் கொண்டான்.

“என்னப்பா…” தந்தையின் முக மாறுதலை பார்த்து பதறினான் தாஸ்.

“ஒண்ணுமில்லப்பா… கதிரவனோட நான் ரோட்டுல உருண்டு, புரண்டு சண்டை போட்டதில்லை. ஆனா சிரிச்சி பேசினதுமில்லை. நமக்கு ஆகாத குடும்பம் என்று சொல்லி சொல்லியே ஒரு வெறுப்பு. அதுவும் அர்த்தமில்லாதது. அவன் எதோ சொல்லிட்டான் என்று தான் இத்தனை வருஷமா நாம சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம். அதையே அவன் சொல்லலைனா? இந்த சண்டை எதுக்கு? நினச்சா நெஞ்சே வலிக்குது”

“நம்ம குடும்பம் பிரிய காரணமான அந்த நரசிம்மன் மாமா குடும்பத்துக்கு நம்ம மேல என்ன வன்மம் என்று முதல்ல தேடணும் ப்பா… அத கண்டு பிடிச்சா தான். எல்லா உண்மையும் வெளிச்சத்து வரும்” என்றான் தாஸ்.

அதை எவ்வாறு கண்டு பிடிப்பது? கேட்ட உடன் அவர்கள் உண்மையை சொல்லி விடுவார்களா? என்று மிது தாஸை பார்த்தாள்

Advertisement