Advertisement

அத்தியாயம் 2

“சொல்லுடா… மச்சான்” அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன்.

“டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான் மேத்யூ.

தாஸ் திருமணத்துக்கு முன்பு ஒரு பார்ட்டியை விடுவதில்லை. திருமணமான பின்பு மிதுவை அழைத்து செல்ல முடியுமானவற்றுக்கு மட்டும் அவளோடு சென்று வந்து கொண்டிருந்தவன், குழந்தைகளின் வரவால் எந்த பார்ட்டிக்கும் செல்ல முடியாமல் பஸ்ட்ரேஷனுக்கு ஆளாகி இருந்தான். இதில் அவன் நண்பர்கள் அவசரமாக திருமணம் செய்ததாகவும், குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் கேலி பேசி இவனுக்கு “குடும்பஸ்தன்” என்று செல்லமாக பட்டப்பெயர் வைத்து தான் அழைப்பார்கள்.

ஞாயிறு என்பதால் எல்லா வேலைகளையும் முடித்து தான் இருந்தான். மாலை 5 மணிக்கு கிளம்பினால் இரண்டு மணித்தியாலயங்கள் பார்ட்டியில் ஐக்கியமாகி என்ஜாய் பண்ணிவிட்டு, ஏழு மணிக்கெல்லாம் வீடு வந்து விடலாம் என்று கணித்து விட்டவன் “நான் இல்லாமலையா? கண்டிப்பாக வருவேன்” என்றான்.

பாவம் தாசந்தன். இவன் முடிவுகளை எடுக்கத்தான் கூடவே தாலி கட்டி ஒருத்தியை வீட்டோடு வைத்திருக்கிறான் என்பதை மறந்து நண்பனுக்கு வாக்கு கொடுத்து விட்டான். அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்ததை மிது கண்டு கொண்டாலில்லை. அலைபேசி உரையாடலையும் அவள் கண்டு கொள்ளவில்லை. இவன் பார்ட்டிக்கு வருவதாக கூறியதும் அவளுக்கு புசுபுசுவென கோபம் தலைக்கேறியது.

காலையில் கழுவி காயப்போட்டிருந்த துணிகளை அள்ளிக் கொண்டு வந்து அவன் மடியில் கொட்டியவள் “வாஷிங் மெஷின் ரிப்பேர் ஆகி ஒரு மாசம் ஆகுது. அத ரிபயாருக்கு கொடுக்கச் சொன்னா.. சாருக்கு நேரமில்லை. 10 நாளைக்கு அப்புறம் கொடுத்தா, அவன் பழைய மாடல். இப்போ இதுக்கு பாட்ஸ் வரதில்ல. புது மாடல் வாங்கிக்கோங்க என்கிறான். ஆஃபரில் வாங்கலாம் ஆஃபர்ல என்றியே. நான் தானே சோப்பு தேய்வது போல இடுப்பு தேய துணி துவைக்கிறேன் அதான் சாருக்கு வலி தெரியல. பசங்க துணி எல்லாம் நான் உடனே மடிச்சு வைக்கிறேன் இல்ல, சுமையும் தெரியல. இன்னைக்கு என்ன பண்ணுற, எல்லாரோட துணியையும் மடிச்சு வை. அப்புறம் அஞ்சு நாளும் ஆபீஸ் போக வேண்டிய மொத்த துணியையும் அயன் பண்ணி வை. அப்போ தான் வீட்டு வேலை என்றால் என்ன என்று உனக்கு புரியும்” கோபத்தை அடக்கியவாறு கடுப்போடு கூறினாள் மிது.

திடுமென எங்கிருந்தோ வந்தவள் மள மளவென வேலைகளை சொல்லியதில் அதிர்ந்து  “ஏண்டி காலையிலிருந்து வேலை செஞ்சுகிட்டு தானே இருக்கேன் கொஞ்சம் மனுசன ரிலாக்ஸ் பண்ண விடுறியா?” என்றான் இவனும் கடுப்போடு. ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை சாமான், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், இதர பொருட்கள் என்பவற்றை ஞாயிறு அன்று தான் சென்று வாங்கி வருவான். வேறு நாட்களில் சென்று வாங்கி வர அவனுக்கு நேரமும் இல்லை. வீடு வர இரவும் ஆகிறதே.

“எப்படி எப்படி… ஐயா மட்டும் பார்ட்டி, பப்பு, டிஸ்கோ கூட போவீங்க. நான் மட்டும் உன் பசங்கள பார்த்துகிட்டு வீட்டோட இருக்கணுமா? உன் பசங்களை நீ பார்த்துக்க. நான் வெளியில போயிட்டு வாரேன்” என்றாள் பிடிவாதமாக

“என்னடி உன் பிரச்சனை? நாடு எவ்வளவோ கெட்டுக் கிடக்கு. நீ நைட்டுல பார்ட்டிக்கு போயிட்டு வரும் பொழுது ஏதாவது ஏடாகூடமாக நடந்தா, என்னவாகும் யோசிக்க மாட்டியா??” அவன் கூறியதில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. அதற்கு மேல் சுயநலம் தான் கொட்டி கிடந்தது. அவனால் தனியாக இரண்டு குழந்தைகளை சமாளிக்க முடியாதே.

“ஏன் எவனாச்சும் என்ன கடத்திட்டு போய் ரேப் பண்ணுவானா? ரேப் பண்ணி கொலை பண்ணுவானா? உன் கூட வாழறதுக்கு விட சாகறது மேல்” என்றாள் நக்கலாக.

“என்னடி பேசுற? உன்ன கட்டிக்கிட்டதுக்கு நான் வேற யாராச்சும் கட்டிக்கிட்டு நிம்மதியா இருந்திருப்பேன்” எதற்கெடுத்தாலும் ஒரு சண்டை. எதை ஆரம்பித்தாலும் ஒரு சண்டை என்று தாசந்தனின் வாழ்க்கையே தினமும் ஒரு போராட்டம். வெறுப்பின் உச்சக்கட்டத்தில் தான் அவன் வாயிலிருந்து இந்த வார்த்தையே வரும். கூறிய பின் ஏண்டா கூறினோம் என்று எண்ணும் அளவுக்கு அவன் மனைவி அதற்கும் பேசி விடுவாள். அவன் முயற்சி செய்தாலும் அவனால் அவ்வாறு கூறாமல் இருக்க முடியாது. மிது அவனை அவ்வாறு பேச வைத்து விடுவாள். இதோ இன்று போல்.

“எதுக்கு யாரையோ போல சொல்லுற? அந்த மேனாமினுக்கி சுவேதா தானே” கோபமாக சீறினாள் மிது.

திருமணமான புதிதில் இருவரும் சினிமாவுக்கு சென்றிருக்க, ரெஸ்ட்  ரூம் சென்று வருகிறேன் என்று மிது சென்றிருந்த நேரம், தாஸ் தனியாக நின்றிருப்பதை பார்த்து ஸ்வேதா அவளிடம் வந்து பேசி இருந்தாள்.

“ஹாய் சீனியர். இங்க என்ன பண்ணுறீங்க? ஃப்ரெண்டுக்காக வெயிட்டிங்கா?” என்று அவளே காரணத்தை கண்டுபிடித்தவள், அவனை தனியாகப் பார்த்த ஆனந்தத்தில் மனம் திறந்தாள்.

“காலேஜ் படிக்கும் போதே எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும். படிப்பு தானே முக்கியம் என்று சொல்லாம இருந்துட்டேன். அப்பொறம் மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு போய்ட்டேன். அங்க போன பிறகு உங்க கிட்ட பேசிட்டு வந்திருக்கணுமோ என்று பலநாள் யோசிச்சிருக்கேன். வந்த உடனே உங்கள மீட் பண்ணுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கல. ஐம் வெரி ஹாப்பி” கண்கள் மின்ன அவள் பேச அதிர்ந்து நின்றான் தாசன்தான். 

மிதுவும் தாஸும் காதலித்தது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. திருமணமானதும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அவ்வாறு கூறியிருக்கவும் மாட்டாள். அவள் பேச ஆரம்பிக்கும் பொழுதே மிது வந்து கொண்டிருக்க, அவள் இறுதியாக கூறியது சரியாக மிதுவின் காதில் விழுந்திருந்தது.

“ஐம் மிஸிஸ் தாசந்தன்” என்று தன்னை மிது அறிமுகப்படுத்தியதும் அதிர்ந்து, அசடு வழிந்த ஸ்வேதா சோகமான முகத்தை மறைத்து மன்னிப்பு கூறியவாறு சென்றுவிட்டாள்.

ஸ்வேதா சென்னையிலுள்ள பிரபல தொழிலதிபரின் மகள் என்று அறிய வந்ததும் தாஸ் பெரிதாக எண்ணவில்லை. அவன் வாழ்க்கையில் அடிமேல் அடி, பிரச்சனைக்கு மேல் பிரச்சினை வரவும் ஒரு நாள் மிதுவோடு சண்டையிடும் பொழுது “உன்னை திருமணம் செய்ததற்கு பதிலாக ஸ்வேதாவை திருமணம் செய்திருந்தால், கோடியில் புரண்டு இருப்பேன்” என்று வார்த்தையை விட்டிருந்தான்.

அவ்வளவுதான். அன்று மட்டன் பிரியாணி செய்திருந்தாள். அதன் எலும்புகளை பக்கத்து வீட்டு நாய்க்கு கொடுப்பதால் அதை ஒரு தட்டில் சேமித்து வைத்திருக்க, மொத்த எலும்பும் அடியாக அவன் மீது விழுந்தது.

அதன் பின் சுவேதாவை பற்றி வாய் திறப்பானா தாஸ்?

இரண்டாவது குழந்தை பிறந்த பின் தாம்பத்திய வாழ்க்கை என்பதை தூரவே நிறுத்தி இருந்தாள் மிது.

காலையில் பம்பரமாக சுழன்று சமைத்து, குழந்தைகளின் உணவுகளையும் ஏற்பாடு செய்து டே கேயா சென்றலில் விட்டு வேலைக்கு சென்று வரும் பொழுது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து அவர்களை சமாதானப்படுத்தி, குளித்து, சமைத்து, வீட்டு வேலைகளை முடித்து தூங்கவே அவளுக்கு நேரம் சரி. இதில் எங்கே அவள் கணவனை கவனிப்பாள்?

அவன் ஆசையாக அவளை நெருங்கினால் “என்ன மூன்றாவது குழந்தைக்கு அடி போடுறியா? சீ போ..” என்று அவனை துரத்துவாள்.

“இல்ல சேப்டியெல்லாம் கைவசம் இருக்கு” என்றாலும் “நான் செம்ம கடுப்புல இருக்கேன் பேசாம தூங்கு” என்பாள். அவள் உடல் அசதி அப்படி இருக்கும். அதைவிட அவள் மனம் சோர்ந்து போய் இருந்தது. எதிலும் பிடித்தமில்லை. ஈடுபாடு இல்லை. எல்லாவற்றின் மீதும் ஒரு வெறுப்பு. ஒரு கடுகடுப்பு. அவன் மேல் சிடுசிடுப்பு என்று அவளையே வெறுக்கும் மனநிலையில் இருந்தாள்.

“இதுக்கு நான் பக்கத்து வீட்டு கதவையா தட்ட முடியும்? எவ கூடயாவது அப்பயார் வச்சுக்கிட்டா தாண்டி உனக்கு புத்தி வரும்” கடுப்பில் கத்துவான் இவன்.

“உன் மூஞ்சி… நானும் வேலைக்கு போறேன் அடுத்தவன் பொண்டாட்டிய எப்படியாவது கரெக்ட் பண்ணலாமென்று அலையுற ஆம்பளைங்க எங்க ஆபீஸ்லயும் இருக்காங்க. அப்படிப்பட்ட ஒருத்தனோட வந்து உன் கண்ணு முன்னால நிக்கிறேன் பாக்குறியா. பேசாம தூங்கு”

“ராட்சசி. என்ன பேச்சு பேசுற? கட்டின புருஷன் கிட்ட பேசுற பேச்சாடி இது?” அவள் கழுத்தை நெரித்தான் தாசந்தன்.

தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யாமல் மிதுவும் பதிலுக்கு அவன் கழுத்தை நெரிக்கலானாள்.

வீம்புக்கென்று அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கு சிரிப்பை மூட்ட, இதுவும் அது போலவே தான் இருந்தது. பிடிவாதம் பிடிக்கும் குழந்தை அவள். அதனாலேயே என்னவோ அவனுக்கு அவளை ரொம்பவே பிடித்திருந்தது. அவள் மீது கோபம் வந்தாலும், காதல் குறையவில்லை. அவளை தன் புறம் இழுத்து, இதழோடு இதில் பொருத்தி வன்மையாக முத்தமிடலானான்.

அவளும் அவனுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள். அவர்கள் அடுத்த கட்டத்துக்கு மெல்ல மெல்ல முன்னேற, அவர்களது இரண்டாவது புதல்வன் சிணுங்கி தான் இருக்கும் வரையில் உங்களுக்கு இடையில் சந்தோஷம் ஏது என்று இடைப் புகுந்தான்.

அவனை தள்ளி விட்டவள் “போ போய் தூங்கு. உனக்கு இது மட்டும் தான் குறைச்சல்” என்று சிடுசிடுத்தாள்.

அவள் எதற்காக கோபப்படுகிறாள்? ஏன் கோபப்படுகிறாள் என்று அவனுக்கு சில நேரம் புரிவதே இல்லை. இதோ இன்று போல் அவளிடம் வம்பை விலை கொடுத்து வாங்கக் கூடாதென்று கவனமாக சுவேதாவின் பெயரை தவிர்த்திருக்க, அவளே எடுத்துக் கூறியிருந்தாள்.

அவன் பொறுமையும் ஒரு அளவு தானே! ஆமாண்டி சுவேதாவ கல்யாணம் பண்ணியிருந்தா நிஜமாவே நான் நிம்மதியாக இருந்திருப்பேன். உன்னை கட்டிக்கிட்டு நான் படுற பாடு” பல்லை கடித்தான்.

அவன் விதியை யார் தடுப்பது?

“ஆமா நானும் ஒழுங்கா என் வீட்டில பார்த்து மாப்பிள்ளை கட்டி இருந்தா… பொங்கல், தீபாவளி, திருவிழா என்று குடும்பத்தோடு கொண்டாடி சந்தோஷமா இருந்திருப்பேன். 

உன்ன கட்டிக்கிட்டதுல முதல்ல என் குடும்பம் போச்சு. சந்தோசம் போச்சு. நிம்மதி போச்சு. ஒரு சினிமாவுக்குத்தான் போறோமா? பார்க்? பீச்? கடைசியா எப்ப வெளிய போனோம்? எங்க ட்ரிப் போனோம்? நீ மட்டும் பார்ட்டி, சினிமா என்று வாழ்க்கைய நல்லா என்ஜாய் பண்ணுற. உன்னை கட்டிக்கிட்ட நான் உன் வேலைக்காரியா இல்ல இருக்கேன்” என்றாள்.

அவன் பார்ட்டிக்கு வருவதாக அலைபேசியில் மேத்யூவிடம் கூறியதை கேட்டுத்தான் மிது இவ்வளவும் பேசினாள் என்று புரிய தாசந்தனுக்கு ஆயாசமாக இருந்தது.

“என்னடி உன் பிரச்சினை? எனக்கு வர்க் டென்சன் இருக்கு. நான் நாலு ப்ரெண்ட்ஸை பார்க்கக் கூடாதா? என்னமோ நான் டைலியும் பார்ட்டிக்கு போய் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றது போலவே பேசுற. இருந்தாப்பல ஒரு பர்த்டே பார்ட்டி வரும் அதுக்கு கூட என்ன போகக் கூடாதென்று அழிச்சாட்டியம் பண்ணுறியா?” கடுப்பாகத்தான் கேட்டான்.

“யார் உன்ன போக வேணாம்னு சொன்னாங்க? நீ போ. நானும் வெளிய போகணும். உன் குழந்தைகளை பார்க்க ஏற்பாடு பண்ணிட்டு நீ எங்க வேணாலும் போ” என்றாள் மிது.

“அம்மா தாயே நான் பார்ட்டிக்கே போகல. நீ போய் உள்ள ஏதாச்சும் வேல இருந்தா பாரு. நான் துணியெல்லாம் மடிக்கிறேன்” அவள் சொல்வது நடக்கக் கூடிய காரியமா? என்று வேலையை பார்கலானான்.

மிது அவனை திட்டியவாறே உள்ளே சென்றாள்.

மிதுவோடு பேசியதில் தாசந்தனுக்கு தலைவலியே வந்திருந்தது. “எது இல்லாட்டியும் சண்டே ஆனா இந்த தலைவலி மட்டும் வந்து சேருது. பேசாம சண்டேயும் ஆபீஸ் இருந்தா தேவலாம்” வீட்டில் இருந்தால் மிது சண்டை போடுவாள் என்பதை இவ்வாறு முணுமுணுத்தான். தலைவலி என்று அவன் மாத்திரை போட எண்ணவில்லை. அதுவே நாளடைவில் பழக்க தோஷமாகி விடுமே. ஒரு கப் காபியை கலந்து வந்தவன் துணிகளை மடித்தவாறு அருந்தலானான்.

பேசாமல் மிதுவை விவாகரத்து செய்து விடு என்று அவன் மனம் வெளியே தாவி எதிரொளித்தது. வேறு வினையே வேண்டாம் அதற்கும் பிரச்சனை செய்வாள் என்று முணுமுணுத்தான். வாய்விட்டு கூறினால் தானே பிரச்சினை செய்வாள். கூறாமல் நோட்டீஸ் அனுப்பிவிடு என்றது அவள் மீது கோபமாக இருந்த மனம்.

“அடங்கு. அடங்கு. நடந்தது உனக்கு ஞாபகம் இல்லையா? அல்லது மறந்தது போல் நடிக்கிறாயா?” என்று அவன் அவனுக்கே சொல்லிக் கொண்டான்.

கோபத்தில் ஒரு நாள் “உன்னோடு என்னால் இனி மேலும் வாழ முடியாது. நாம் பிரிந்து விடலாம். விவாகரத்து செய்து கொள்வோம்” என்று கூறியிருந்தான். ஆம் கோபத்தில் தான் கூறி இருந்தானே ஒழிய, அவனால் அவளை விட்டு விலகி இருக்கும் எண்ணமெல்லாம் இல்லை.

அதற்கு அவள் “ஏன் என்னை துரத்திவிட்டு அந்த ஸ்வேதாவை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று என்னமோ? சரி உனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்றால் கொடுத்து விடுகிறேன். எனக்கு நஷ்ட ஈடு வேண்டும்” என்றாள்

நஷ்ட ஈடாக இவள் பணம்தானே கேட்கப் போகிறாள். அப்படி எவ்வளவு தான் கேட்பாளென்று தாசந்தன் அமைதியாக அவளைப் பார்த்தான்.

“உன்னை திருமணம் செய்து 7 வருடங்கள் வாழ்ந்ததில் என் இளமை பறிபோய் விட்டது. இரண்டு குழந்தைகளைப் பெற்றதில் என் அழகும், பொலிவும் மங்கி விட்டது. அதெல்லாம் நீ திருப்பி தருவாயேயானால் நான் உனக்கு விவாகரத்து தருகிறேன்” என்றாள் படு சீரியஸாக.

அவள் கேலி செய்வதாக எண்ணி தாசந்தனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கலானான். 

அவன் சிரிப்பதை பார்த்த மிது அவனை அடிக்கலானாள். அவளது அடிகள் ஒவ்வொன்றும் இடியாய் அவன் மீது விழும் பொழுது தான் அவள் கேலி செய்யவில்லை என்று அவனுக்குப் புரிந்தது.

அவள் மாறிவிட்டாள். சுயத்தை தொலைத்து விட்டாள். கேலி இல்லை. புன்னகை இல்லை. முற்றாகவே மாறிவிட்டாள். அவளை மீட்டெடுப்பது எப்படி என்று அவனுக்கு புரியவில்லை. கோபம் மட்டும் தான் அவளிடம் எஞ்சியிருக்கிறது. எதற்கு கோபப்படுகிறாள் என்றும் அவனுக்கு புரியவில்லை. முயன்ற மட்டும் அவள் கோபப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் எண்ணுகிறான். ஆனால் அவள் பேசும் பேச்சுக்களால் சீண்டப்பட்டு இவனும் கோபத்துக்குள்ளாகி பேசி விடுகிறான். அதன்பின் இவனே சமாதானமடைந்து தாழ்ந்து போகிறான்.

எத்தனை நாள் தான் பொறுப்பான்? ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் எல்லையும் தாண்டி வெடிப்பான்.

அவன் அலைபேசி மீண்டும் அடித்தது. யார் அழைக்கிறார்கள் என்று பொறுமையாக பார்த்து, இந்த முறை உஷாராக இயக்கி காதில் வைத்திருந்தான்.

அழைத்தது அவன் தங்கை தர்ஷினி. வீட்டிலிருந்து அவள் மட்டும் தான் அவனிடம் அலைபேசியில் உரையாடுவாள். அது மிதுவுக்கும் தெரியும். தர்ஷினி மிதுவிடம் பேச மாட்டாள். மிதுவும் அவளை கண்டுகொள்ள மாட்டாள். என்று தாசந்தன் மற்றும் மிதுவுக்கு இடையில் சமூகமான உறவு குறைய ஆரம்பித்ததோ அன்று தர்ஷினியும் மிதுவுக்கு ஒரு பிரச்சனையாகத் தான் தோன்றியது. ஆகவே தாசந்தன் தர்ஷினி பேசுவதை கேட்டு “ம்” மட்டும் கொட்டலானான்.

கல்லூரியில் சுற்றுலா செல்கிறாராம் கை செலவுக்கு பணம் தான் கேட்டிருந்தாள் தர்ஷினி.

“ம்..ம்  சரி சரி” என்று அலைபேசியை துண்டித்திருந்தான் தாசந்தன்.

“என்ன உன் தங்கச்சி பணம் கேட்டளா? எவ்வளவு கேட்டாள்” என்று வந்து நின்றாள் மிது.

பல்லை கடித்த தாசந்தன் “அவ என் தங்கச்சி. ஒரே தங்கச்சி. அவ பணம் கேட்டால், நான் கொடுப்பேன். அதுல நீ தலையிடக்கூடாது. அதைப்பற்றி நீ கேட்கக் கூடாது” என்றான்.

“ஆமா நீ ஏ டி எம் மெஷின் பாரு. அவ கேட்டுக்கிட்டே இருப்பா. நீ வாரி கொடுத்துக்கிட்டே இருக்க. அண்ணி என்று ஒருத்தி இருக்காளே, என்கூட பேசணும் என்று எப்பவாச்சும் நினைக்கிறாளா?  சரி பேச வேணாம். உன்கிட்ட அண்ணி நல்லா இருக்காங்களா? பசங்க நல்லா இருக்காங்களா என்று கேட்கிறாளா? இல்லையே. நீ அவளுக்கு பணம் காய்க்கிற மரம். மரம் மட்டும்தான்” கோபமாக கத்திவிட்டு சென்றாள் மிது.

கோபத்தில் மிது கூறினாலும், அது உண்மையும் கூட என்று தாசந்தனின் மனம் கூற, தங்கையின் மீது கோபம் வந்தது. மிதுவை பிடிக்கிறதோ, பிடிக்காதோ அவள் அண்ணி. அவளைப் பற்றி இதுவரையில் கேட்டதில்லை. சரி அவளைத்தான் பிடிக்காது, குழந்தைகளே பற்றியாவது கேட்க மாட்டாளா? மிதுவின் கோபம் நியாயமானது என்று புரிய தங்கைக்கு பணம் போடக் கூடாது என்று முடிவு செய்தான்.

அண்ணன் இன்னும் பணம் போடவில்லையே என்று தர்ஷினி தாசனுக்கு அலைபேசி அழைப்புகள் விடுத்துப் பார்த்தாள், அவன் எடுக்கவில்லை. குறுஞ்செய்தியும் அனுப்பி பார்த்தாள், அதற்கும் பதில் இல்லை என்றதும் அன்னையிடம் மிது தான் அவனை பண்ம் போட விடாது தடுத்து இருக்கிறாள் என்று தப்பு தப்பாக பேசலானாள்.

தர்ஷினிக்கு பணம் போடக் கூடாது என்று மிது தாசந்தனிடம் சண்டை போடவில்லை. அவளுக்கு பணம் போடக் கூடாது என்று முடிவு செய்தது தாசந்தன். இதைத்தான் பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்று கூறுகிறார்களோ!  தான் என்ன தவறு இழைக்கிறோம் என்று தெரியாமல் மற்றவரை குறை கூறுவது தான் மனித இயல்பு. அதைத்தான் தர்ஷினியும் செய்து கொண்டிருந்தாள்.

தன் மகன் மிதுவை திருமணம் செய்து கொண்டு என்ன பாடு படுகின்றானோ என்று அன்னையாக மதுபாலா கவலை கொண்டாள். அவளிடம் இருந்து தன்மகனை எவ்வாறு காப்பது என்று யோசனைக்கு உள்ளானவளுக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.. மாமியாரிடம் ஆலோசனை கேட்கலானாள்.

மிது தன்னை திட்டுகிறாள். அடிக்கிறாள் அதனால் தனக்கு மன உளைச்சல். வேலையால் பஸ்ட்ஸ்ரேஷன். நண்பர்களோடு பாட்டிக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று என்னும் தாசந்தன் மனைவியின் மனநிலையை என்ன தவறினான்.

அவளும் உயிருள்ள ஜீவன் தானே. அவளும் வேலைக்கு செல்கிறாள். அவன் என்னதான் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும், சின்னவனால் அவள் தூக்கம் கெடுவதால் அவளுக்கு இருக்கும் பிரச்சினையை அவன் உணர மறுக்கிறான்.

அவள் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவன் அமர்ந்து அவளிடம் பேசினாலே போதும் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். பேச இருவருமே தயாராக இல்லை. அவளிடம் பொறுமை இல்லை. இவனிடம் நேரமில்லை. இப்படியே சென்றால் இருவரில் ஒருவர் மற்றவரை கொலை செய்து விடுவார் என்பது உறுதி..

Advertisement