Advertisement

அத்தியாயம் 19

“பரவாயில்லையே நம்ம ஊருல இம்புட்டு நல்ல துணி கிடைக்குதா?” என்றவாறு சோலையம்மாள் தாஸ் வாங்கி வந்த புடைவையை பார்த்துக் கொண்டிருக்க, அகல்யா அவள் கையில் மிது கொடுத்த சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“துணிய பார்த்ததும் பஞ்சபரதேசிங்க மாதிரி ரெண்டும் எப்படி குஷியாகுதுங்க. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு மாமியார் வீட்டுக்கு போயிட்டு, அங்க சாப்பிட்டு வந்தானே, அதுங்களுக்கு துணி வாங்கிக் கொடுத்திருக்கானே அத பத்தி கேக்கணும் என்று சொல்லிக்கிட்டு இருந்துட்டு புடவைய பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு வாயப் பொளந்து நிக்கிறத பாரு?” மதுமிதா மனதுக்குள் பொறுமியவாறே தனக்கு கொண்டு வந்திருந்த புடவையை கையில் வைத்துக் கொண்டு மாமியாரை முறைத்துக் கொண்டிருந்தாள்.

கதிரவனோடு பேசிய உடனே தாஸ் மிதுவை அழைத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டான்.

தன் பேச்சை மகன் கேட்கவில்லையே என்ற கோபம் தாஸை பார்த்த உடனே தலை தூக்கியிருக்க, மதுமிதா அவனை பார்த்த உடனே “அப்பா உனக்காக சாப்பிடாம காத்துகிட்டு இருந்தாரு, நீ வரலனதும் கோபமா கிளம்பி போய்ட்டார்” என்றாள்.

மிதுவை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும் தணிகை வேலனுக்கு தாஸ் மற்றும் மிது மிதுவின் குடும்பத்தோடு ஒட்டி உறவாடுவது பிடிக்கவில்லை. மதுமிதாவை போல் அடம்பிடித்து அடாவடியாக மகனிடம் சண்டை போடாமல் பொறுமையாக பேசிப் பார்த்தான்.

ஆனால் தாஸ் தெளிவாக தந்தைக்கு புரியும்படி எடுத்துக் கூறியிருந்தான். அதன் பின் வேலன் மகனை கட்டாயப்படுத்தவில்லை. தந்தை கோபமாக சென்றார் என்று அன்னை சொல்வதெல்லாம் தன்னை பயமுறுத்தவென்று தாஸுக்கு புரியாதா என்ன?

“நான் அப்பா கிட்ட பேசிட்டேன். வீட்டு வந்த பிறகு பேசலாமென்று சொல்லிட்டாரு” என்ற தாஸ் அன்னை சொன்னதை பொருட்படுத்தவில்லையென்று கூறியதோடு, அலட்ச்சியப்படுத்தவில்லையென்றும் தெளிவுபடுத்தினான்.

பேச்சை ஆரம்பிக்கவென்று கணவன் கோபமாக கிளம்பி சென்றார் என்று மதுமிதா கூறியிருக்க, தாஸ் கூறியதை கேட்டு மேலும் கோபமடைந்தாலே ஒழிய அவள் கோபம் குறையத்தானில்லை.

அது புரியாமல் “என்ன அத்த உங்களுக்கு கொண்டு வந்த புடவை உங்களுக்கு பிடிக்கல போலயே” என்று மிது நக்கலடிக்க,

“நான் சொன்ன கலருக்கு கொஞ்சம் கம்மி தான்” என்று மருமகளின் மூக்கை உடைக்க முயன்றாள் மதுமிதா.

மிது விடுவாளா? “விலை அதிகம் அத்த. துணியோட தரமும் அதிகம். வெயில்ல கட்டிக்கிட்டு போனா கலர் அம்புட்டு வித்தியாசம் தெரியாதே” என்று கண்சிமிட்டினாள். அவள் என்ன அர்த்தத்தில் கூறினாளென்று அவளே அறிவாள். அதை மதுமிதா அறியும் பொழுது கொதிநிலைக்கு செல்வாளென்பதில் எந்த ஐயமுமில்லை.

“அண்ணி உங்க செலெக்ஷன் எல்லாமே சூப்பர்” என்றாள் அகல்யா. காலேஜ் செல்லும் பெண்ணல்லவா என்று அவளுக்கு மேலும் ஐந்து சுடிதாரை வாங்கி இருந்தாள் மிது. அகலுடைய சுடிதாரை கொடுத்த மாமியார் அவள் மண்டையை கழுவினால் மீண்டும் வேதாளமாகி முருங்கை மரம் ஏறிடக் கூடாதல்லவா அதற்காக வேண்டியும் இந்த ஏற்பாடு.

தாஸ் வேடிக்கை பார்த்திருந்தானே ஒழிய எதுவும் பேசவில்லை. பெண்களின் சமாச்சாரம் என்று அவன் ஒதுங்கியே அமர்ந்திருந்தான்.

ஆனால் மதுமிதாவுக்கு பேச வேண்டிய விஷயங்கள் இருந்தனவே ஆரம்பித்து விட்டாள். “ஏன்டா உன் பசங்கள உன் மாமியார் வீட்டுலையே விட்டுட்டு வந்திருக்கியே. பசங்களுக்கு அப்பன் வீடு என்று ஒன்று இருக்கு என்று காட்ட கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா?” பொண்டாட்டி சொல்லித்தான் விட்டுட்டு வந்தியா? என்பதைத்தான் உங்களுக்கு என்று சேர்த்து கேட்டிருந்தாள்.

“உனக்குத்தான் உடம்பு முடியலையே. என் பசங்கள கூட்டிட்டு வந்தா உன்னால பார்த்துக்க முடியுமா? இல்ல அப்பத்தாவாலத்தான் பார்த்துக்க முடியுமா? அகல்யாதான் வீட்டு வேலைகளை பண்ணிக்கிட்டு பசங்கள பார்த்துக்குவாளா? உங்க சௌகரியத்த நினைச்சி பசங்கள அங்க விட்டுட்டு வந்தா, நீங்க எங்களையே குத்தம் சொல்லுறீங்களா?” என்று அன்னையை முறைத்தயவன் மிதுவை ஏறிட்டு “பசங்கள இங்க விட்டுட்டு நாம தீபாவளியை உங்க வீட்டுல கொண்டாடலாமா?” என்று கேட்டான் தாஸ்.

“டேய் என்னடா பேசுற? பசங்கள இங்க கூட்டிட்டு வர சொன்னா, பசங்கள இங்க விட்டுட்டு நீ அங்க போறேன்னு சொல்லுற, அறிவிருக்கா?” மதுமிதா கத்தியதில் அகல்யாவும், சோலையும் என்னவாகிற்று என்று துணியிலிருந்த கவனத்தை விட்டு இவர்கள் புறம் திரும்பினர்.

“கேட்டீங்களா அத்த இவன் என்ன சொல்லுறான்னு?” என்ற மதுமிதா அழுகுரலில் தாஸ் கூறியதை ஒப்புவிக்க, மிது அமைதியாக நின்றிருந்தாள்.

“ஏன்டா உன் பொண்டாட்டிதான் இப்படி செய்ய சொல்லி கொடுத்தாளா?” என்ற சோலையம்மாள் தனது அருகில் அமர்ந்திருந்த மிதுவை முறைக்க,

“நான் இவ்வளவு நேரமும் உன் பக்கத்துல தானே உக்காந்திருந்தேன். நான் என்ன சொன்னேன்?” எனும் விதமாக மிது சோலையம்மாளை பார்த்தாள்.

“நான் என்ன சொன்னாலும் என் பொண்டாட்டி சொல்லி சொன்னான்னுதான் அர்த்தமா? அப்போ அப்பா பேசுறது எல்லாம் அம்மா சொல்லிக் கொடுத்துதான் பேசுறாங்களா?” என்று மதுமிதாவின் முறைப்பையும் பெற்றுக் கொண்டவன் “சரி அத விடுங்க. ஏழு வருஷமா பசங்களுக்கு சொந்தபந்தங்க யாறென்னே தெரியல. நாம கூட இருந்தா நம்மகிட்ட ஓட்டிகிட்டே இருப்பாங்க. உங்க கிட்ட நெருங்க மாட்டாங்க என்று நான் தான் மிதுகிட்ட சொன்னேன். அதனாலதான் பசங்கள அங்க விட்டுட்டு வந்தோம்.

அத்த என் பையன இடுப்புல வச்சிக்கிட்டே பலகாரம் செய்யிறாங்க. பாரமா நினைக்கல. மிது இங்க இருந்தா, நீ கண்டிப்பா என் பையன் என்று பார்க்க மாட்ட, மிது பையனாகத்தான் பார்ப்ப. அதான் பசங்கள இங்க விட்டா நாம அங்க இருக்கிறதா முடிவு பண்ணியிருக்கோம்” என்றான் தாஸ்.

அப்படி எதுவும் மிதுவிடம் தாஸ் பேசவில்லை. மங்களம் தான் ஏழு வடங்கள் கழித்து வீடு வந்தும் வீடு தங்காமல் மிது கணவனின் வீடு சொல்கிறாளே, பேரக் குழந்தைகளையாவது விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள்.

தான் தனது குடும்பத்தை பிரிந்திருந்தது போல் மிதுவும் பிரிந்திருந்தாள். இரண்டு குடும்பத்தோடும் பேச்சு வார்த்தை என்பது இல்லாத போதும், மிதுவின் குடும்பம் அவளை ஏற்று கொண்டது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் தன்னை பகையாளியாக பார்க்காமல், மிதுவின் கணவனாகவும், சொந்தக்காரனாகவும் பார்க்கிறார்கள். அந்த எண்ணம் தன் குடும்பத்திற்கு இல்லை.

“என் குடும்பம் எங்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். உன் குடும்பம் தான் பிரச்சினை. நாம அங்கேயே தங்கலாம்” என்று மிது தாஸிடம் கூறியதோடு, குழந்தைகளையும் அழைத்து செல்லத்தான் எண்ணினாள்.

தன்னோடு ஒட்டிக் கொண்ட குழந்தைகளை பிரிய முடியாமல் மங்களம் கோரிக்கையாக வாய்விட்டே கேட்டதும் தாஸ் குழந்தைகள் மங்களத்திடம் இருக்கட்டும் என்று மிதுவிடம் கறாராக கூறி, அங்கேயே விட்டு வந்தான்.

தாஸின் வீட்டுக்கு வரும் வழியில் “என்ன உங்கம்மாவை பார்த்ததும் அவங்க காத்து பட்டு என்ன அதட்டுறியா?” என்று மிது தாஸை கிண்டல் செய்திருக்க,

“எங்கம்மா உங்க வீட்டு பொண்ணு தானே. உனக்கிருக்கிறது தானே அவங்களுக்கும் இருக்கும். அதுல கொஞ்சம் எனக்கு வராதா?” என்று இவன் பதில் கிண்டல் செய்தான்.

குழந்தைகளை பற்றி தன் வீட்டார் கேட்பார்களென்று தெரியும். கேட்டால் இந்த மாதிரி தான் பதில் சொல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தவன் அவ்வாறே பதிலும் கூறினான்.

மதுமிதாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தான் என்ன பேசினாலும் அதற்க்கு பதில் வைத்திருப்பவனிடம் என்னவென்று பேசுவது? “ஓஹோ… இது உன் முடிவு மட்டுமல்ல, உன் பொண்டாட்டியோட முடிவும் தானே. எதுக்கு நீ அங்க போகணும். உன் பொண்டாட்டிய அங்க அனுப்பி பசங்கள இங்க கூட்டிட்டு வந்தா சரிதானே” என்றாள் மதுமிதா.

மதுமிதாவுக்கு மிது மட்டும் சென்றால் போதுமே.

“அம்மா நீ ஒண்ண மறந்துட்ட. நான் என்றா நான் மட்டுமில்ல. என் பொண்டாட்டியும் தான். பசங்கள அங்க விட்டுட்டு நாங்க இங்க வந்ததுக்கு காரணமே உனக்கு உடம்பு முடியல எங்குறதுனாலதான். இல்லனா மிதுவோட அண்ணன், அக்கானு சொந்தபந்தமெல்லாம் தீபாவளிக்கு வர்ற நேரம் நாம இங்க இருப்போமா? இங்க யார் சமைப்பா? உன்னாலயும் முடியாது. அகலால எல்லாத்தையும் தனியா செய்ய முடியுமா?”

மங்களம் இருந்து இரவாகி செல்லலாமே என்று கூறிய பொழுது “ஏற்கனவே துணிவாங்கிக்கிட்டு லன்ச்சுக்கு வர்றதா சொல்லிட்டோம். நேரங்காலத்தோட போகலானா அதுக்கும் அத்தையும், அப்பத்தாவும் கோபப்படுவாங்க” என்றாள் மிது.

“தீபாவளிக்கு நம்ம வீட்டுலதானே இருப்ப. அம்ரிதா, இங்க பக்கத்துலதானே இருக்கா, அவ வந்துடுவா. உன் அண்ணன் குடும்பத்தோட வரேன்னு சொன்னான். தம்பிக்கும் லீவ் கிடைச்சிருச்சாம் அவன் வந்தான்னா அவனுக்கொரு கல்யாணத்த பண்ணனும்” என்றாள் மங்களம்.

“அத்தைக்கு உடம்பு முடியாம இருக்கையிலே நான் இங்க இருந்தா நல்லாவா இருக்கும்?” என்றதோடு மிது நிறுத்திக் கொண்டாள். மதுமிதா நடிக்கிறாளென்று எல்லோருக்கும் தெரிந்தாலும், மிதுவும், தாஸும் அவளின் கோபத்தை தணிக்க, அதையே பயன் படுத்திக்கொள்ளலாமென்று முடிவு செய்திருந்தனர். அதனால் தான் தான் மதுமிதாவிடம் முகம் திருப்பாமல் “உனக்கு உடம்பு முடியலையே” என்று அதையே சொல்லி பேசலாயினர்.

“யாரு இவ சமைச்சி நாங்க சாப்பிடணுமா? இவ கையாள பச்சை தண்ணி கொடுத்தா கூட குடிக்க மாட்டேன்” என்றாள் சோலை.

சோலை வார்த்தைகளால் சொன்னதை மதுமிதா முகத்தில் அப்பட்டமாக காட்டினாள்.

தாஸுக்கு கோபம் தலைகேறினாலும் பல்லை கடித்தவாறு அமைதியாக நின்றிருந்தான்.

சோலையின் பக்கத்தில் அமர்ந்திருந்த மிதுவின் துடுக்குத்தனம் தலை தூக்கவே “ஏன் அப்பத்தா நாச்சி பேத்தி எங்குறதாலத்தானே என் கையால பச்சத்தண்ணி கூட குடிக்க மாட்டேன்னு வீம்பு பிடிக்கிற? நாச்சி பொண்ணு கையால சமச்சத்த இத்தனை வருஷம் ரசிச்சி, ருசிச்சு சாப்பிட்டதுமில்லாம, புறங்கையை வேற நக்கிட்டு திரிஞ்சியே அப்போ எங்க போச்சு உன் ரோஷம்?” மதுமிதாவை கண்களாளேயே காட்டிக் கேட்க, சோலையால் மிதுவை முறைக்க மட்டும் தான் முடிந்தது.

“ஒழுங்கு மருவாதையா நான் ஆக்கி போடுறத நக்கிட்டு கெட, இல்லையா நீ நடக்கைல எண்ணெயை ஊத்தி உன்ன வழுக்கி விழ வச்சி, உன் இடப்ப உடைச்சி, வைத்தியம் பாக்குறேன்னு உன்ன சென்னைக்கு கூட்டிட்டு போய் என் வீட்டுல வச்சி கஞ்சி தண்ணி ஊட்டி விடுவேன் பார்த்துக்க” மெல்லிய குரலில் மிரட்டினாள்.

“நீ நாச்சி பேத்தி தான்லே” என்ற சோலையின் சத்தத்தில் அனைவரும் இவர்களை பார்க்க,

“எனக்கு என்னெல்லாம் சமைக்க தெரியும் என்று லிஸ்ட்டு போட்டேன். அப்பத்தா சர்டிபிகேட் கொடுக்குறாங்க” என்று மிது சோலையம்மாளுக்கு கண்சிமிட்டி விட்டு அவள் அடுத்து பேசும் முன் அங்கிருந்து நகர்ந்து தாஸிடம் வந்தமர்ந்தாள்.

“அகல் இரவைக்கு அலாதியான சமைக்கணுமா? இல்ல நீ பகல் வச்ச சாதம் மிச்சம் மீதி இருக்கா?” சோலையம்மாளை பார்த்தவாறே கேட்டாள் மிது.

மிது எந்த நோக்கத்தோடு கேட்கிறாளென்று அகல்யாவுக்கு புரியவில்லை “நீங்க ரெண்டு பேரும் சாப்பிடல இல்ல. ஆனா மூணு பேருக்கு சாப்பிட சாப்பாடு இருக்கு” தான் சமைத்ததை சாப்பிடவில்லையே என்று முகம் சுணங்கியவாறே கூறினாள்.  

“அப்போ அப்பத்தா, அம்மா, அப்பா அத சாப்பிடட்டும், நாம வெளில சாப்பிடலாம்” என்று தாஸ் கூற, அகல்யா துள்ளிக் குதித்தாள்.

காலேஜ் ஹாஸ்டலுக்கு சென்றால் அந்த சாப்பாடு, வீட்டுக்கு வந்தால் வீட்டு சாப்பாடு ஆசையாக கடையில் வாங்கி சாப்பிட வேண்டும் என்று எண்ணினாலும் வீட்டில் கூற முடியாது. மதுமிதாவோ, சோலையோ அனுமதிக்க மாட்டார்கள். தணிகை வேலன் “எப்பயாவது ஒருநாள் தானே என்று வாங்கிக் கொண்டு வந்தாலும் மதுமிதா ஆடித் தீர்த்து விடுவாள். அதனாலயே அகல்யா தந்தையிடம் கேட்பதில்லை.

இப்பொழுதுதான் அன்னையை சமாளிக்க அண்ணன் வந்து விட்டானே அந்த ஆனந்தம் தான் அவளை ஆட்டிப் படைத்தது.

“ஏன் உன் பொண்டாட்டி உனக்காக சமைக்க மாட்டாளாமா? இல்ல அவளுக்கு சமைக்கவே தெரியாதா? நீ தான் உன் வீட்டுல சமைக்கிரியா?” தங்களுக்குத்தான் சாப்பாடு இருக்கிறதே என்ற எண்ணத்தில் மதுமிதா பேசவில்லை. மிதுவை மட்டம் தட்ட எண்ணியே பேசினாள்.

“ஐயோ முருகா எனக்கு சமைக்கவெல்லாம் தெரியாதே. எங்கம்மா சொல்லிக் கொடுக்கவே இல்லையே” என்று கைகளை தலைக்கு மேல் உயர்த்தி வணங்கினான் தாஸ். 

ஆம் அவனுக்கு சுடுநீர் மட்டும் தான் வைக்கத் தெரியும் என்றால் பொய்யில்லை. டீ கூட ஒழுங்காக போட மாட்டான். இன்று சக்கரை ஒழுங்காக போட்டால் நாளை அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும். அல்லது டீ தூளை பாலில் கலந்து கொதிக்க வைத்து சக்கரைக்கு பதிலாக மீண்டும் டீ தூளை கலந்து அது டீ யா அல்லது வேறு ஏதாவதா? என்று கேட்கும் அளவுக்கு கொண்டு வந்து கொடுப்பான்.

“இத்தனை வருஷத்துல உனக்கு ஒழுங்கா ஒரு டீ போட தெரியல” என்று மிது திட்டினால்,

“நான் இன்ஸ்டன் காபி நல்லா போடுவேன்” என்று இளிப்பான்.

“டாட் லிட்டில் பிரின்சச கட்டிக்கிட்டா கஷ்டகாலமென்று பசங்க மீம்சா போடுறாங்க. மம்மீஸ் பேபி பிரின்ச காதலிச்சு கல்யாணம் பண்ணாலும் கஷடம் தான்பா” என்று தலையில் அடித்துக் கொள்வாள் மிது.

தணிகை வேலன் வந்த உடனே அவனுக்கு வாங்கிய பச்சை கரவேட்டி கொண்ட பட்டு வேட்டி சட்டையை தாஸ் கையில் கொடுக்க, முகமெல்லாம் பல்லாக வாங்கிக் கொண்டான்.

ஒவ்வொரு வருடமும், தீபாவளிக்கு துணி வாங்குவது, தாஸின் குழந்தை பருவத்தில் அவனுக்காக துணிவாக சென்ற அனுபவம் என்று பழைய கதைகளை ஞாபகப்படுத்திய தணிகை வேலன் மகன் முதன் முதலாக துணி வாங்கி வந்த ஆனந்தத்தில் இருந்தான்.

“என்னப்பா… உங்க கல்யாண நாள் ஞாபகம் வந்திருச்சா?” தாஸ் கிண்டல் செய்யவில்லை. சந்தர்ப்பத்தை பயன் படுத்தி பேச்சை ஆரம்பித்திருந்தான்.

“என்னப்பா கேட்ட?” என்ற தணிகை வேலனுக்கு தாஸ் கேட்ட கேள்வி புரிந்த உடன் கல்யாண நாளன்று நடந்த அசம்பாவிதமும் ஞாபகத்தில் வந்து தொலைக்க, முகம் சுருங்கினாலும் அடுத்த கணம் புன்னகைத்து சமாளித்தான்.

இதுவே மதுமிதாவாக இருந்தால் கல்யாண நாளின் நினைவில் கோபத்தில் கத்தியிருப்பாள். அவளிடம் பேச முடியாதென்று தானே தணிகை வேலன் வரும் வரையில் காத்திருந்தான் தாஸ்.

எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்றிருந்தவனுக்கு சந்தர்ப்பம் அமையவே ஆரம்பித்து விட்டான். “என்பா… மாரிமுத்து தாத்தா நாச்சி பாட்டிய கல்யாணம் பண்ணதால வந்த பிரச்சினை தீர்ந்ததனால தானே அம்மாக்கு உங்கள கல்யாணம் பேசி வச்சாங்க. மாமா குடிச்சிட்டு கல்யாணம் பண்ணதால தானே இப்போ நம்ம ரெண்டு குடும்பமும் இப்படி பகையாளியா மாறி நிக்கிறோம்”

“ஏன்டா உனக்கு பாலூட்டும் போதே பகையையும் ஊட்டி தானே வளர்த்தேன். சோறூட்டும் போது, தூங்க வைக்கும் போது கதை சொல்ல சொன்னா எங்க கல்யாண நாளன்று நடந்த கதையைத்தான் சொல்லுவேன். அப்படியிருந்தும் நீ இவள கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தையை வேற பெத்திருக்க, இப்போ வந்து கத சொல்ல சொல்லி கேக்குறியா?” கடுப்பாக குறுக்கே பேசியது மதுமிதா தான்.

“யேன்மா மாமா உன் கூட பொறந்தவர் தானே. அவர் குடிப்பாரா? குடிச்சா என்னவெல்லாம் பண்ணுவாரென்று உனக்கு தெரியாதா? அப்படி பட்டவர் உன் கல்யாணத்துல அப்படி நடந்துக்கிட்டாரென்றா அதுக்கு ஏதாவது காரணம் இருக்குமென்று உனக்குத் தெரியாதா?” என்று அன்னையையும் தந்தையையும் மாறி மாறி பார்த்தான் தாஸ்.

“இப்போ நீ என்ன சொல்ல வர?” வேலன் மகனை ஏறிட்டான்.

“ஒரே ஊர்ல தானே இருக்கிறீங்க? மாமா எப்படி என்று உங்களுக்குத் தெரியாதா?” 

“இங்க பாருபா… உன் அம்மாவ கல்யாணம் பண்ணிக்க முன்னாடியும், சரி அப்போறமும் சரி உன் மாமா குடும்பத்தோட நாங்க யாருமே எந்த கொடுக்கல், வாங்கலும் வச்சிட்டதே இல்ல” என்று வேலன் கூற

“அது எனக்குத் தெரியும். நான் கேட்டது மாமாவ வெளில, கடைத்தெருவுள பார்த்திருப்பீங்கள்ல. மத்தவங்க சொல்லுறத கேட்டிருப்பீங்கள்ல. அத கேக்குறேன்” என்றான் தாஸ்.

“எதுக்கு உன் அப்பாவை போட்டு படுத்துற? நான் சொல்லுறேன்” என்ற மதுமிதா “நல்லா கேட்டுக்க, எங்கண்ணன் ஒரு கோபக்காரன், மூர்க்கன், குடிச்சிட்டு வந்து பொண்டாட்டிய அடிப்பான். கூடப் பொறந்தவன்னு கூட பார்க்காம என்னையும் அடிப்பான். போதுமா?”

“ஓஹ்… உன்ன அடிச்சான்னு மாமாவ பொல்லாதவன், கொடியவன், கொடூரமானவன் என்று சொல்லுற”

ஒவ்வொருத்தரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. கதிரவன் காதலித்த பெண் எங்கே சென்றாள்? என்ன ஆனால் என்றே தெரியவில்லை. அந்த பெண்ணின் நினைவால் தான் கதிரவன் குடிக்கவே ஆரம்பித்திருந்தான்.

யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத துயரத்தில் இருந்த கதிரவனின் நிலை தந்தையான மாரிமுத்துவுக்கு எந்த மாதிரி புரிந்ததோ, சொந்தத்தில் பார்த்து மங்களத்தை திருமணம் செய்து வைத்தான்.

கட்டாயத் திருமணம். மங்களத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவள் பக்கம் சாயும் மனம் என்று குடித்து விட்டு வந்து மங்களத்தை அடிக்க, தடுக்க வந்த மதுமிதாவின் மேலும் அடிகள் விழத்தான் செய்தன.

அண்ணனின் மனநிலை புரியாதவளுக்கு அவன் நடத்தை கொடியவன் போலவும், கொடூரமானவன் போலவும் தோன்றியதில் ஆச்சரியமில்லை.

பகையாளியின் குடும்பம் என்றாலும் பரவாயில்லை. சொந்த வீட்டை விட்டு சென்றால் போதும் என்று தணிகை வேலணை திருமணம் செய்துகொள்ள சம்மதித்த மதுமிதா திருமணமன்று நடந்த சம்பவத்தில் தனது வீட்டாருக்கு சாதகமாக ஒரு வார்த்தையாவது பேசுவாளா? மாட்டாள். நிச்சயமாக மாட்டாள்.

அண்ணன் மீதிருந்த வெறுப்பு வருடங்கள் கடந்தும் கரையாமல் இருப்பதற்கு மாமியார் சோலையும் ஒரு காரணம் தான். ஆரிய புண்ணை கீறி வீட்டுக் கொண்டே இருந்தால்? ரணவேதனை குறையாதே. அதனால் தான் மதுமிதாவுக்கு தன் சொந்த வீட்டார் மீது இவ்வளவு கோபம்.

மாரிமுத்துவின் வழி காட்டலில் கதிரவன் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு இன்று முற்றாக கைவிட்டிருந்தான். அதனால் தான் மிது தந்தை குடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததை தான் பார்த்ததே இல்லையென்றிருந்தாள்.

தாஸ் நாச்சியிடம் கேட்ட பொழுது மதுமிதா கூறியதை வைத்து தான் தாஸ் கேட்கிறானென்று தான் நாச்சி பேரனுக்கு பதில் கூறியிருந்தாள்.

“தாஸ் நீ இப்போ இந்த பேச்சு எடுத்திருக்கன்னா காரணமில்லாம இருக்காது. என்ன விஷயம்?” மதுமிதாவை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு தாஸை ஏறிட்டான் வேலன்.

“என்ன பிரச்சினை நடந்தது என்று தெரிஞ்சா தானே, பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் அதனால நான் மாமாகிட்ட உங்க கல்யாண நாளன்று என்ன நடந்தது என்று விசாரிச்சேன்” என்றதும் குறுக்கிட்டாள் மதுமிதா.

“என்ன உன் பொண்டாட்டி சமரசம் பண்ண சொல்லி கெஞ்சினாளா? அப்போ தானே எங்க கூட ஒட்டிக்கலாம்”

“என்ன கொஞ்சம் பேச விடுறியா?” அன்னை சொல்லும் காரணத்துக்காகத்தானே விசாரித்தான். ஆனால் அதை இப்பொழுது ஒத்துக்கொள்ள முடியாதே. தன்னுடைய தந்தையோடு தான் பேசும் தருவாயில் நீ இருக்காதே என்று மிதுவை தாஸ் அகலோடு உள்ளே அனுப்பியிருந்தான்.

“மது கொஞ்சம் அமைதியா இரு” என்று தணிகை வேலன் சொன்னதும் கதிரவன் கூறியதை பொறுமையாக தெளிவு படுத்தினான் தாஸ்.

பொறுமையாக கேட்ட வேலனோ யோசித்தவாறே “ஆமாப்பா அன்னைக்கு அவன் அதிகமா போதைல இருந்தான். பேச கூட திறன் இல்லாம இருந்தான்”

“அப்படின்னா… மாமா கண்டபடி பேசினது நீங்க யாரும் பார்க்கல. யாரோ உங்க கிட்ட சொல்லியிருக்காங்க. யார் சொன்னாங்க?” என்று தாஸ் கேட்டதும் யோசனைக்குள்ளானான் வேலன்.

Advertisement