Advertisement

அத்தியாயம் 18

“என்ன மாமா ரெண்டு கையிலையும் பையோட தூக்க முடியாம தூக்கிகிட்டு வரீங்க?” உள்ளே வந்த செங்கதிரவனின் கையிலிருந்த பைகளை பார்த்தவாறு கேட்டான் தாஸ்.

புன்னகைத்த கதிரவன் மிதுவிடம் ஒரு பையை கொடுத்து அதில் குழந்தைகளுக்கான துணி மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பதாக கூறி உள்ளே அனுப்ப, தந்தையின் கையிலிருந்த மற்றுமொரு பையை வாங்க கையை நீட்டியிருந்தாள் மிது.

“இது மாப்பிளைக்கு” என்ற செங்கதிரவன் அந்தப் பையை கொடுக்காது கையை இழுத்துக் கொண்டான்.

“என்னப்பா… மாப்பிளைக்கு மட்டும் ஸ்பெஷலா கொண்டு வந்திருக்குறீங்க?” சந்தேகப்படுவது போல் முறைத்தவாறு கேட்டாலும் மெல்லிய முறுவல் மிதுவின் முகத்தில் படர்ந்திருந்தது.

வீட்டார் ஒரு அலைபேசி அழைப்பு கூட எடுக்கவில்லையே என்ற ஆதங்கம் ஒரு பக்கம் இருக்க, ஊருக்கு வந்த உடன் முதன் முதலாக சந்தித்த தந்தையின் முகத்திருப்பலும் மிதுவின் மனதை ரணப்படுத்தத்தான் செய்தது.

அன்று மாலையே தன் குடும்பம் தன்னை பார்க்க வந்தது மிதுவுக்கு சந்தோஷத்தையும், நிம்மதியையும் மட்டும் கொடுக்கவில்லை. ஏழு வருடங்களாக தன் மீது கோபமாக இருப்பார்கள் என்று எண்ணிய குடும்பத்தாருக்கு தன் மீதும் தன் கணவன் மீதும் எந்தக் கோபமும் இல்லை. அவர்கள் தங்களோடு பேசாமலிருந்ததற்கு காரணம் இரண்டு குடும்பங்களுக்குமிடையில் இருக்கும் பகை என்று புரிந்தது. 

அந்த பகை மேலும் வலுப்பெறக் காரணம் தாங்கள் இருவரும் தங்களது வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதும் தான். பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் ஏழு வருடங்களாக தங்களை ஒதுக்கி வைத்து விட்டார்களே.

ஊருக்கு வந்த உடன் இப்படி பாசத்தை பொழிபவர்கள் எதற்காக பகையை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும்? அந்த பகைக்கான காரணத்தை தேடி அழிக்க வேண்டும் என்று கணவனோடு கலந்துரையாடியவள் தந்தை வரும் வரையில் காத்திருந்தாள்.

வீட்டுக்கு வந்த பொழுது தனது குடும்பம் தனது கணவனிடம் ஒழுங்காக பேச கூடிய சூழ்நிலையில் இருக்கவில்லை. வீட்டில் நடந்த பிரச்சினையால் தாஸ் அவன் குடும்பத்தோடு கிளம்பி சென்றதால் அவன் மீது தன் குடும்பத்தாருக்கு கோபம் கூட இருக்கும். குறிப்பாக தந்தைக்கு இருக்கும். அவரை சமாதானப்படுத்துவது எப்படி? தந்தைக்கும், கணவனுக்கும் இடையில் சுமூகமாக உறவை ஏற்படுத்துவது எப்படியென்று மிது யோசித்துக் கொண்டிருக்க, தந்தையே கணவனுக்காக தீபாவளி பரிசோடு வந்து நின்றதில் அகமகிழ்ந்துப் போனாள்.

மனதில் இருந்த எண்ணத்தை” மறைக்க பொய்யான கோபசாயலை முகத்தில் பூசியவள் மாப்பிள்ளையும், மாமனாரும் பேசட்டும் என்று உள்ளே சென்றாள்.

“இந்தாங்க மாப்புள இது உங்களுக்கு” என்று பையை செங்கதிரவன் கொடுக்க, ஆர்வமாக பையை கையில் வாங்கிய தாஸ் அதை பிரிக்கலானான்.

ஷூ பாக்ஸ் போல இருந்தாலும் கனத்தது.

“ஷூ பாக்ஷில் அப்படி என்ன இருக்கு?” என்ற எண்ணத்தில் தாஸ் அசால்ட்டாக பிடித்திருக்க,

“மாப்புள பார்த்து விழுந்தா உடைஞ்சிடும்” என்றவாறு கதிரவன் பெட்டியை பிடித்துக்கொள்ள, அட்டையை திறந்து பார்த்தான் மருமகன். உள்ளே இரண்டு பாரின் சரக்கு பாட்டில்கள் “உனக்குத்தான் நான் உனக்கு மட்டும் தான்” என்று தாஸை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன.

“அடப்பாவி மனிஷா… மாப்பிளைக்கு நல்ல கிப்ட்டா கொண்டு வந்திருக்க, எந்த நேரத்துல என்ன கிப் கொடுக்குற? இதெல்லாம் சென்னைக்கு வரும் போது கொண்டு வந்து கொடுத்திருக்க வேணாம்? இங்க நான் இத எப்படி பத்திரம் பண்ணுறது? உன் பொண்ணு பார்த்தா செத்தேன். உன் பொண்ணு என்னடான்னா நீ குடிக்க மாட்டேன்னு சொல்லுறா, நீ என்னடான்னா…” தறிகெட்டு ஓடிய மயின்ட் வாயிசை இழுத்து நிறுத்தியவன் “மாமா மிது பார்த்தா என்ன உண்டு இல்லனு ஒரு வழி பண்ணிடுவா. இத நீங்களே வச்சிக்கோங்க” என்று கதிரவன் கையிலிருந்த பெட்டியிருந்து கைகளை அகற்றிக் கொண்டான்.

பாட்டில்களை பார்த்ததும் கண்கள் மின்னியது. நாக்கிலும் எச்சில் ஊறியது. மனம் குத்தாட்டம் கூட போட்டது. கூடவே மூளை மிதுவை ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்யவே “ஒரு பிரச்சினையை முடிச்சி வைக்க சொன்னா, ஒம்பது பிரச்சினையை இழுத்து வச்சிருக்கிறியே. உன்ன என்ன பண்ணலாம்” என்று அவள் தலையிலையே கொட்டுவது போல் காட்ச்சிகள் கண்களுக்குள் விரிய, “இந்த தீபாவளி பரிசு வேண்டவே வேண்டாம்” என்ற முடிவுக்கு வந்திருந்தான் தாஸ்.

“ஐயோ மாப்புள ரெண்டு பாட்டில் அதிகம்னா ஒண்ண வச்சிக்கோங்க. மத்தத நான் பாத்துக்கிறேன்” செங்கதிரவன் எந்த அர்த்தத்தில் சொன்னானென்று தெரியவில்லை. ஆனால் அது தாஸுக்கு அந்த பாடில்லை நான் குடிக்கிறேன் என்று தான் புரிந்தது.

“குடிகாரா… உன் குடியால நம்ம குடும்பம் பிரிஞ்சது பத்தாதென்று என் குடும்பத்துலையும் குட்டைய குழப்ப பாக்குறியா? இரு உன்ன வச்சிக்கிறேன்” கருவியவன் “மிது…” சத்தமாக மனைவியை அழைத்தான்.

“மாப்புள இப்போ எதுக்கு மிதுவ கூப்பிடுறீங்க?” பதறியவாறு கேட்டான் கதிரவன்.

“உன்ன போட்டுக் கொடுக்கத்தான்” என்று தாஸின் மயின்ட் வாய்ஸ் கூவினாலும் “மிது உங்க கூட முக்கியமான விஷயம் பேசணும் என்று சொன்னா மாமா. அதான் கூப்பிட்டேன்” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டான்.

“ஓஹ்… அப்படியா? அப்போ இந்த ரெண்டு பாட்டிலையும் ஒளிச்சு வைங்க. மிது பார்த்தா திட்டுவா” என்று செங்கதிரவன் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே,

“கூப்டீங்களா? அப்பா’ என்று வந்து நின்றாள் மிது.

“மிது அழைத்த உடன் வந்து விட்டாள். அவளிடம் சரக்கு பாட்டில் கொடுத்ததை உடனே கூற முடியுமா? அதுவும் மாமனாரை வைத்துக் கொண்டு?” தாஸ் யோசிக்கலானான்.

தந்தையும், கணவனும் தன்னை பார்த்து முழிப்பது போல் மிதுவுக்குத் தோன்ற, என்னவென்று கேளாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மகள் தங்களை சந்தேகமாக பார்ப்பதை பார்த்த கதிரவன் சுதாரித்து “என்னவோ பேசணும் என்று சொன்னியாமே மிதும்மா மாப்புள சொன்னாரு. அதான் கூப்பிட்டேன்” என்றான்.

தந்தை வந்த உடன் பேசாமல் சாப்பிட்ட பின் பேசுமாறு கணவன் எதற்காக இப்பொழுதே இதை பற்றி கூறினான் என்று புரியாமல் கணவனை முறைத்தவாறே “முதல்ல வந்து சாப்பிடுங்க அப்பா. சாப்பிட்ட பிறகு பேசலாம்” என்றாள்.

மிதுவை அங்கிருந்து அழைத்து செல்ல எண்ணி சரியென்ற கதிரவன் செல்லும் பொழுது தாஸிடம் கண்களால் பாட்டில் பாத்திரம் என்று கூறி விட்டு சென்றான்.

“நல்ல அப்பா, நல்ல பொண்ணு. நான் என்னத்த சொல்ல வரேன்னு இவ என்னைக்குமே புரிஞ்சிக்க மாட்டா. இவ அப்பன் அதுக்கு மேல. பிரச்சனை வரும் என்று தெரிந்து சரக்க கொண்டு வந்தாரா? வரணும் என்று கொண்டு வந்து கொடுத்தாரா என்று தெரியல” புலம்பியவாறு அமர்ந்தான் தாஸ்.

“என்ன பேராண்டி? ஆகாசத்த பார்த்த பூமி போல உக்காந்துட்ட? மழை வருமா? வராதான்னு யோசிக்கிறியா? இல்ல இடி, மின்னலோட மேகம் கடந்து போய்டுமேன்ரு நினைக்கிறியா?” என்றவாறே அவன் முன்னால் வந்தமர்ந்த நாச்சியார் தோட்டத்தில் பறித்த எதோ ஒரு கீரையை கையேடு கொண்டு வந்து சுத்தம் செய்யலானாள்.

“நான் ஒருத்தன் புலம்பிகிட்டு இருக்கேன். எனக்கு கம்பனிக்கு புரியாம பேச வந்துட்டா” என்று நாச்சியாரை பார்த்தவன் “புயல் வருமா? பூகம்பம் வருமான்னு தெரியல அப்பத்தா… நீ வேற கடுப்பேத்திக்கிட்டு” என்றான்.

என்னதான் மிது தான் தாஸ் வீட்டில்,இருப்பதாக கூறினாலும் மனம் தாங்காமல் மங்களம் பதறியவாறு கணவனிடம் வந்து விஷயத்தை கூறினாள்.

அது நாச்சியாரின் காதில் விழுந்திருக்க “என்ன இப்போ… அவ புருஷன் வீட்டுல, புருஷன் கூடத்தான் இருக்கா. எதுக்கு இப்படி தரையில விழுந்த மீன் போல துடிக்கிற?” கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கூறினாள்.

“அது இல்ல அத்த…” என்ற மங்களம் கனகா கூறியதை கூற,

“யாரு கனகா சொன்னாளா? ஈர பேனாக்கி, பேன பெருமாளாக்கி சொல்லியிருப்பா. அவ சொன்னத கேட்டுகிட்டு குதிச்சா, தரையில விழ மாட்டோம், பாதாளத்துலதான் விழுவோம். அதான் மிது கண்ணு ஒண்ணுமில்லன்னு சொல்லிச்சே. போய் படுங்க. காலையிலையே போன் போட்டுட்டு பாரு. அவ பேசலையா, போய் என்னனு பார்த்துட்டு வருவோம்” என்று மருமகளை சமாதானப்படுத்தியிருந்தாலும், கணவனையே சமாளிக்கும் திறமையுள்ள மிதுவால் அவன் குடும்பத்தை சமாளிக்கத் தெரியாதா என்ற எண்ணம் நாச்சிக்கு வலுத்ததால் பதறாமல் இருந்தாள்.

அத்தோடு வாய் சவுடால் விடும் தன் தோழியை பற்றியும் நங்கு அறிந்து வைத்திருக்கிறவள் அல்லவா. கொஞ்சம் கூட பதட்டமில்லாமல் இருந்தாள்.

அவள் எண்ணியது போல் மிதுவே அழைத்து தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்தெருவுக்கு செல்வதாக கூற, “உன் பொண்ணு சோலை வீட்டுல பொழச்சிக்குவா. சோலை கண்ணுல விரலை விட்டு ஆட்டாமா இருந்தா சரி” என்று சிரித்தாள் நாச்சியார்.

இதெல்லாம் சென்னையில் கிடைக்காது என்று இதோ இப்பொழுது கூட அறிய வகை கீரையை சுத்தம் செய்வது இவர்களுக்காகத்தான்.

“அப்படி என்ன தப்ப பண்ணிட்டு உக்காந்து முழிக்கிற? உன் முழியே சரியில்லையே. உன் பொண்டாட்டி உன்ன ரொம்பதான் அதிகாரம் பண்ணுறாளோ” மிது தாஸை கைக்குள் வைத்திருப்பதாக சொன்னது ஞாபகத்தில் இருக்கவே நக்கலாக கேட்டு சிரித்தாள்.

“ஏன் அப்பத்தா மாரிமுத்து தாத்தாவை நீ அதிகாரம் பண்ணி, அடக்கி ஒடுக்கி தானே வச்சிருந்த. உன்ன போல தானே உன் பேத்தியும். தெரியாத மாதிரி கேக்குறியே” நான் உனக்கும் தான் பேரன். உன் பேத்தியிடமிருந்து என்னை காப்பாற்றாமல் நக்கலா செய்கிறாய் என்று பதிலடி கொடுத்தான் தாஸ்.

“உன் தாத்தன் ஆம்பள சிங்கம்டா. அவரு அடக்காத காளையே இல்ல. இந்த ஜில்லாலயே அவரை போல வீரமான ஒரு ஆம்பளைய பார்க்க முடியுமா? அப்படிபட்ட ஒருத்தர நான் என் அன்பால அடக்கி வச்சிருந்தேன். அடாவடியா இல்ல. நீயும் இருக்கியே என் பேரன்னு சொல்லிக்கிட்டு. அவர் பண்ணதுல ஒண்ணாத்த பண்ணியா?” நாச்சியார் கணவரை பற்றி பெருமை பாட,

“ஏன் இல்ல? அவர் பேரன் என்று நிரூபிக்கத்தான் உன் பேத்தியை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணேன். அவரும் உன்ன தூக்கிட்டு போய் தானே கல்யாணம் பண்ணாரு. அண்டா சைஸ்ல இருக்க, உன்ன எப்படி தூக்கி இருப்பாரு?” என்று கிண்டல் வேறு செய்தான்.

“நான் இப்போ தான் இப்படி இருக்கேன். எனக்கு கல்யாணமாகும் போது ஒல்லியா, அழகத்தான் இருந்தேன். நான் அழகா இல்லாமத்தான். உன் அம்மா அழகா பொறந்தாளா? இல்ல நீ அழகா பொறந்தியா?” என்று தாஸின் மூக்கை துடைத்தாள்.

“என்ன நான் உன்ன போல அழகா? ஐயோ… சோலை அப்பாத்தா என்னடான்னா… நான் அவங்க கலர் என்று சொன்னாங்க” வேண்டுமென்றே வாம்பிழுக்க,

“அட்ட கறுப்பி அவ அழகியா? அந்த கலர் உன் கலராம? என் முன்னாடி சொல்ல சொல்லு நாக்க அறுத்து, நாய்க்கு போடுறேன்”

“கூல் அப்பத்தா… எதுக்கு பட்டென்று கொதிநிலைக்கு போற? என்ன இருந்தாலும் சோலை அப்பத்தா கட்டிக்க இருந்த மாரிமுத்து தாத்தாவை நீ கட்டிக்கிட்டது தப்பு தானே” கிண்டலாகத்தான் கூறினான் ஒழிய காதல்ல இதெல்லாம் சாதாரம் அப்பு என்ற எண்ணம் தான் தாஸுக்குள் இருந்தது.

“டேய் உன் தாத்தன் என்ன ஜில்லா கலெக்டரா? கட்டுனா இவரைத்தான் கட்டுவேன் என்று அடம்பிடிச்சி கட்ட? அந்த கிறுக்கு மனுஷன் கோவில்ல சாமி கும்பிட்டு கிட்டு இருந்த என் கழுத்துல பொசுக்கென்று தாலி கட்டிபுட்டாரு.

யோ என்னய்யா இப்படி பண்ணிபுட்டிக என்று கேட்டா, எனக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்கு என்று கூட்டிட்டு போய் பஞ்சாயத்துல நிப்பாட்டிட்டாரு. தாலி கட்டின பாவத்துக்கு குடும்பம் நடத்தி ரெண்டு புள்ளய பெத்தேன். நான் பண்ண குத்தம் என்ன தெரியுமா? அந்த மனுஷன் சொன்னான்னு உங்கம்மாவை, உங்கப்பனுக்கு கட்டிக்க கொடுத்ததுதான்” பொரிந்தாள் நாச்சி.

இது தான் நடந்திருக்கும் என்று தாஸ் ஏற்கனவே ஊகித்த தகவல்கள் தான் அதனால் தான் அவன் அப்பத்தாவிடம் மேலதிகமாக தோண்டித் துருவாமல் இருந்தான். அப்பத்தாவும் அதே தகவல்களை தான் கூறினாள்.

இப்பொழுது பிரச்சினை அதுவல்ல. தன்னுடைய பெற்றோரின் திருமணத்தின் பொழுது மிதுவின் தந்தை குடித்து விட்டு தனது குடும்பத்தை கண்டபடி பேசியது தான் பிரச்சினை. அது தான் மூலப்பிரச்சினை.

“மிது என்னடான்னா தன்னுடைய அப்பா குடிக்க மாட்டார் என்று சொல்லுறா. அந்தாளு என்னடான்னா மருமகனுக்கு பாரின் சரக்கு பாடில்லை பரிசா கொடுக்குறாரு. இதுல எது உண்மை?” யோசித்தவன்

நாச்சியாரை ஏறிட்டு “ஆமா அப்பத்தா உன் புள்ள, அதான் என் மாமனார் டேலி தண்ணியடிச்சிட்டு தான் வீட்டுக்கு வாறாரா?”

“யார பார்த்து என்னடா பேசுற? என் பையன் ஒன்னும் குடிகாரன் கிடையாது. எதோ, கல்யாணம், காட்ச்சினா மட்டும் கொஞ்சமா குடிப்பான்”

“குடிச்சா பிரச்சினை பண்ணாம ஓய மாட்டார்ன்னு சொல்லுற” என்ற தாஸை முறைத்தாள் நாச்சியார்.

“இங்க பாருடா…. ஊருக்குள்ள எவனெவனோ குடிச்சிட்டு விழுந்து கிடைப்பானுக. பொண்டாட்டிய போட்டு அடிப்பானுக. பெத்த அம்மான்னு பார்க்காம பேசுவானுக. அப்படிப்பட்ட ஊருல என் பையன் தங்கமான பையன்”

“சர்டிபிகேட் கொடுக்குறியா?”

“ஏன் உங்கப்பன் குடிக்கலையா? நீ குட்டிகல?”

நாச்சி பார்த்த பார்வையில் முழித்தவன் “நான் ஓகேஷனலி மட்டும் தான் குடிப்பேன். வித் மை வைப் பெர்மிஷன்” என்றான் கெத்தாக.

“தஸ்ஸு புஸ்ஸு இங்கிலீஷுல சொன்னா மட்டும் சரக்கு கூழாகுமா? போதை தான் ஏறாதா? வந்துட்டான் வரிஞ்சி கட்டிக்கிட்டு கல்லுக்கும், பாலுக்கும் வித்தியாசம் தெரியாதவன்” தாஸின் முகத்துக்கு நேரே வசை மாரியை பொழிந்தாள் நாச்சி.

“அப்பத்தா நாலு வார்த்த இங்கிலிஷ்ல பேசினேன்னு இப்படி வையாத. நீ திட்டுற வார்த்தைகள்ல பாதி புரியல” என்று தாஸ் அதற்கு புலம்ப ஆரம்பிக்க லுங்கியில் கையை துடைத்தவாறு வந்தான் கதிரவன்.

“டேய் கதிரவா… சோள காட்டுக்கு மருந்தடிக்கோணும்னு சொன்னியே. நாளைக்கு காலைல உன் மறுமவனையும் கூட்டிட்டு போ. நாம என்ன செய்யிறோம்னு இவன் தெரிஞ்சிக்க வேணாம்?”

“அத தெரிஞ்சிக்கிட்டு நான் விவசாயமா பண்ண போறேன்” என்று முழித்தவன் “மாமா மிது எங்க? உங்க கிட்ட பேசணும் என்றாளே” எங்கே பேச முன் கதிரவன் எங்கயாவது சென்று விடுவாரோ என்ற பதட்டம் தாஸுக்கு. கதிரவனோடு பேசிய பின் அவன் வீட்டுக்கு வேறு செல்ல வேண்டுமல்லவா. 

“என்னடா மாமாகிட்ட பேசணும், பேசணும் என்று பொண்டாட்டிய தூது விடுற? முடிஞ்சி போன கல்யாணத்துக்கு சீதனம் எதிர்பாக்குரியோ” நாச்சி நக்கலாக கேட்க,

“அப்பத்தா…” பல்லைக் கடித்தான் தாஸ்.

“எதுக்குமா… மாப்பிளையை போட்டு வாட்டுற? அவரு கேட்கலைன்னாலும் நாம கொடுக்கோணுமில்ல” என்றான் கதிரவன்.

“கேக்கலைனாலும் கொடுப்பீங்களா? எத அந்த சோள காட்டையா?” தாஸின் மயின்ட் வாய்ஸ் எகிறிக் குதித்தாலும், வாயிலிருந்து வெளி வருமுன் நாவை அடக்கியவன் “எனக்கொண்ணும் வேணாம் அப்பத்தா… உன் பேத்திக்கு ஏதாச்சும் பண்ணனும் என்றா பண்ணிக்க. அத நான் தடுக்க மாட்டேன். அதுக்காக கடனை, உடனே வாங்கி பண்ணிடாத சொல்லிட்டேன்” மிரட்டும் தொனியில் கூறினான் தாஸ்.

“நீங்க அப்படி சொன்னாலும், உங்க வீட்டுல கேப்பாங்களே மாப்புள” என்று கதிரவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே

அங்கே வந்த மிதுவோ”அப்போ உங்க தங்கச்சிக்கே பண்ணிடுங்க. உங்க தங்கச்சி இவன் அம்மா தானே. யாருக்கு பண்ணினா என்ன” என்றாள். 

“அவள கண்ணாலம் பண்ணிக் கொடுக்கும் போதே நகை, நட்டு தட்டு முட்டு ஜாமான் என்று எல்லாத்தையும் சீர்வரிசையா கொடுத்துத்தான் கண்ணாலம் பண்ணி அனுப்பினோம். கண்ணாலம் அன்னைக்கி இதோ இவன் குடிச்சிட்டு உன் அப்பத்தாவை எதோ பேசிட்டான்னு ஆத்தாளும், மகனும் குதிச்சாலும் சீர்வரிசை எதுவும் வேணாம்னு யாரும் சொல்லல. எல்லாத்தையும் வாரி வழிச்சி எடுத்துகிட்டுதான் போனாளுக. அவளுக்கு கொடுக்க வேண்டிய எல்லாத்தையும் கொடுத்தாச்சு. உனக்கு ஏதாச்சும் வேணும்னா சொல்லு. அதுக்கும் மேல சிறப்பா பண்ணிடுறேன்” மிதுவை பார்த்து கூறினாள் நாச்சி. 

மிதுவுக்கு சீதனமா வேண்டும்? தந்தையிடமிருந்து பதிலல்லவா வேண்டும். தந்தையிடம் எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது? அன்று தாஸின் அன்னை, தனது அத்தையின் திருமணத்தின் பொழுது என்னதான் ஆயிற்று என்று கேட்டால் தானே இரு குடும்பத்திற்கும் இடையில் இருக்கும் பகைக்கு ஒரு தீர்வை கொண்டு வர முடியும்.

எப்படி கேட்பது என்று மிது யோசித்தவாறு வாசலுக்கு வர, அப்பத்தாவே எடுத்துக் கொடுத்திருந்தாள்.

நாச்சியின் எல்லா பேச்சையும் ஒதுக்கிய மிதுவோ “ஆம்மாப்பா அத்தையோட கல்யாணத்துல அப்படி என்னதான் நடந்தது? நீங்க குடிச்சிட்டு பிரச்சினை பண்ணதாகத்தான் எல்லாரும் சொல்லுறாங்க. இதோ உங்க அம்மாவே சொல்லுறாங்க. நீங்க சொல்லுங்க. என்ன நடந்தது” என்று கதிரவனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“ஆகா… என் பொண்டாட்டி அறிவாளி என்று நிரூபிச்சிட்டாடா” என்ற பார்வையோடு தாஸ் கதிரவன் சொல்லப் போகும் கதைக்காக காத்திருந்தான்.

“நான் பாட்டுக்கு செவனேன்னு கல்யாண வேலையைத்தான் பார்த்துகிட்டு இருந்தேன். தாகமெடுத்ததுன்னு ஒரு கோலா தான் குடிச்சேன். கொஞ்ச நேரத்துல மட்டையாகிட்டேன். அப்பொறம் ஆளாளுக்கு கத்திக்கிட்டிருந்தாங்க. நான் என்ன சொன்னேன்னு எனக்கே தெரியல. எப்படி வீட்டுக்கு வந்தேன்னும் தெரியல. விடிஞ்சா பொறகுதான் நடந்த எல்லாத்தையும் என் பொஞ்சாதி சொன்னா.

சரி நாம தானே தப்பு பண்ணோம். போய் பேசலாமென்று உங்க வீட்டுக்கு போனா, மொத ஆளா என்ன தொரத்தியடிச்சதே என் தங்கச்சி தான்” என்றான் செங்கதிரவன்.

“என்னது கோலா குடிச்சி போதை ஏறிருச்சா?” என்ன உளருறாரு இவரு? என்று சத்தமாகவே கேட்டிருந்தான் தாஸ்.

“ஆமாம் மாப்புள குடிக்கும் போதே எனக்கு சந்தேகமா இருந்தது. கோலால சரக்க மிக்ஸ் பண்ணிட்டாங்களோன்னு. கூலா இருந்ததுல ஒன்னும் புரியல. நான் வேற தாகதுலையும், களைப்பாவும் இருந்தேனா யோசிக்காம குடிச்சிட்டேன்”

“அப்படினா கோலால என்னத்தையோ கலந்திருக்காங்கன்னு சொல்லுறீங்க” என்ற மிது “ஆமாம்பா… கோலா பாட்டில் எங்க இருந்தது? நீங்களா போய் குடிச்சீங்களா? இல்ல யாராச்சும் உங்களுக்கு கொடுத்தாங்களா? நல்லா யோசிச்சு சொல்லுங்க”

திருமணத்தை நிறுத்த வேண்டும், பிரச்சினை செய்ய வேண்டும் என்று யாராவது நினைத்திருந்தால் திருமணத்திற்கு முன் தினம் தானே தந்தைக்கு குடிக்க கொடுத்து பேச வைத்திருக்க வேண்டும். அத்தையின் திருமணம் நடந்தேறிய பின் இப்படி நடந்தது தற்செயலாக இருக்கலாம். ஆனால் திருமணத்தில் சரக்கை எதற்காக கோலா பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார்கள்? யார் வைத்திருந்தார்கள்? அங்கு தான் மிதுவுக்கு சந்தேகமாக இருந்தது.

“அதுவாம்மா… நம்ம நரசிம்மன் மாமா பையன் முத்துப்பாண்டி தான் வரவங்களுக்கு குடிக்க கூல்ரிங்க்ஸ் கொடுத்துக்கிட்டு இருந்தான். அவன் கிளாஸ்ல ஊத்தி கொடுத்தான். எனக்கிருந்த தாகத்துக்கு பத்தாதென்று நான் தான் ஒரு பாடில உடைச்சி குடிச்சேன்” என்றான் கதிரவன்.

மிதுவுக்கு முத்துப்பாண்டியை நன்றாகவே தெரியும். பாடசாலைக்கு செல்லும் பொழுது தனியாக சென்றால் “ஏன் தாயி தனியா போற? பத்திரமா போ” என்று நல்ல விதமாகத்தான் கூறுவான். அவன் வேண்டுமென்றே ஏதாவதை கலந்து கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்று புரிய, யாரோ யாருக்கோ கலந்து வைத்திருந்த சரக்கை தந்தை குடித்ததால் வந்த பிரச்சனை என்று எண்ணியவள் இதை எப்படி சரி செய்யப் போகிறோம் என்று கணவனை பார்த்தாள். ஆனால் தாஸோ வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான்.

Advertisement