Advertisement

அத்தியாயம் 17

“என்ன சொன்னான் உன் அண்ணன்? உடனே வரேன்னு சொன்னானா?” மகளின் முகத்தில் ஏற்பட்ட அதீத சந்தோஷத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.

“பின்ன வராமலா இருப்பான்? யாரு பேச சொல்லிக் கொடுத்தா?” என்ற சோலை, அகல்யாவிடம் “சாப்பாட போட்டு வை. உன் அண்ணன் பசியோட வருவான்” என்றாள்.

திரு திருவென முழித்த அகல்யா “அண்ணன் வரேன்னு சொல்லவே இல்லையே” என்றாள்.

“அவன் வரலன்னு சொன்னானா? அப்போ நீ எதுக்கு ஆனந்த தாண்டவம் ஆடின? இதுல யாரு பேச சொல்லிக் கொடுத்தா என்று பீத்தல் வேறு” கடுப்பில் கேட்ட மதுமிதா கூந்தலை கொண்டையிட்டவாறு எழுந்தவள் மாமியார் மீதிருந்த கோபத்தையும் சேர்த்து அகல்யாவை அடிக்கலானாள்.

அவளிடம் இருந்து அகல்யாவை பிரித்தெடுத்த சோலை “புள்ளய இப்ப எதுக்கு அடிக்கிற நீ?” மருமகளை அதட்டி விட்டு தாஸ் என்ன கூறினானென்று அகல்யாவிடம் விசாரித்தாள்.

அன்னையிடம் தப்பி அப்பத்தாவிடம் சரணடைந்த அகல்யா தாஸ் கூறியதை பட படவென கூறினாள்.

“என்ன பார்த்தி வீட்டுக்கு போனாங்களா?” சோலை ஆச்சரியமாக கேட்க,

தன் மகன் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற கோபம் சற்றும் மதுமிதாவுக்கு குறையவில்லை. தாஸ் மீது காட்ட முடியாத கோபத்தை இங்கிருப்பவர்கள் மீது தானே காட்ட முடியும். அதுவும் பார்த்தீபன் விஷயத்திலும் கணவனும், மாமியாரும் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபம் இருக்க “என்ன பார்த்தி வீடு என்று அங்கலாய்க்குறீங்க. அது எம்.எல்.ஏயின் வீடு தானே” முகத்தை சுளித்தாள் மதுமிதா.

“யார் வீடா இருந்தா என்ன? அங்க தானே அண்ணன் இருக்கான்” குறிக்கிட்டாள் அகல்யா.

அவளை முறைத்த அப்பத்தாவும் அன்னையும் ஒரே குரலில் “அங்கு எதுக்கு போனாங்களாம்?” எம்.எல்.ஏவிடம் ஏதாவது உதவி கோரி போனார்களோ என்ற சந்தேகத்தில் தான் கேட்டார்கள்.

தாஸ் கூறியதை ஞாபகத்தில் கொண்டு வந்த அகல்யா “அண்ணி பார்த்தி அண்ணனோட பசங்கள பார்க்கணும். துணி வாங்கிட்டு போலாம் என்று சொன்னதாக சொன்னான்” அலைபேசியில் தாஸ் தெளிவாகக் கூறியிருந்தாலும் அகல்யாக்கு அதெல்லாம் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை. அவர்கள் அங்கே எதற்காக சென்றார்கள். எந்த நோக்கத்திற்காக சென்றார்கள் என்ற சந்தேகம் அவளுக்கு இல்லை. அவர்களை அவள் சந்தேகப்படவுமில்லை. தவறாக எண்ணவும் இல்லை.

“ஏழு வருஷம் கழிச்சி ஊருக்கு வந்தவன் வீட்டுக்கு வராம தனியா வீடெடுத்து தங்கும் போதே தெரிய வேணாம் சொந்த வேலையாகத்தான் வந்திருப்பானென்று. அவன் தேவையை விட அவன் பொண்டாட்டிக்குத்தான் தேவையா இருக்கும். அதானே அவளை கூட்டிட்டு போய் இருக்கான். ஆ.. அவன் எங்களுக்காக ஊருக்கு வரல அவன் பொண்டாட்டிக்காகத்தான் வந்தேன்னு சொன்னானே. அதான் எம்.எல்.யோட வீட்டுக்கு போய் இருக்கான். பொண்டாட்டியோட வேல விஷயமா போறோம்னு எங்க கிட்ட சொல்லிட்டா போக முடியும்? அதான் சொல்லாம போய் இருக்கான். திமிரு புடிச்சவன். எல்லாம் அவ சொல்லிக் கொடுத்துத்தான் செய்யிறான் அறிவு கெட்டவன். என்னைக்குத்தான் அவ மயக்கம் தெளியுமோ?” அண்ணனை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றால், அதுவும் மிதுவை அழைத்துச் சென்றால் வீண் பிரச்சினையென்று தாஸ் சொல்லாமல் சென்றிருக்க, அவன் எண்ணம் புரியாமல் மாமியாரும் மருமகளும் தாஸ் ஊருக்கு வந்ததே சொந்த வேலையாகத்தான் அதுவும் மிதுவின் சொந்த வேலையாகத்தான் எம்.எல்.ஏயின் வீட்டுக்கு சென்றிருப்பார்கள் என்று முடிவே செய்திருந்தனர்.

“இந்த தாஸு இருக்கிற கொழுப்பை பாத்தீங்களா அத்தை. எம்.எல்.ஏயோட வீட்டுக்கு ஏதோ வேலையா போயிட்டு, அவன் பொண்டாட்டி சொல்லிப் போனானாம். அதுவும் தீபாவளிக்கு துணி எடுத்துட்டு போனானாம்.

அந்த எம்.எல்.ஏ சோதனை போடாம இவங்கள வரவேற்று இருக்க மாட்டான். நாயை ஏவி விட்டு இருக்க மாட்டானா?” எம்.எல்.ஏயை நன்கு அறிந்தவளாக கூறினாள் மதுமிதா.

நல்லதோ, கெட்டதோ தாஸ் பார்த்திபன பார்க்க போனானே. அண்ணனும், தம்பியும் சந்திச்சு பேசிக்கிட்டாங்களே. முதல்ல தாஸ் வரட்டும் பார்த்தி வீட்டில் என்ன நடந்தது என்று விசாரிப்போம்” என்றாள் சோலை.

“அவன் வருவான் என்று எனக்கு நம்பிக்கை இல்ல. அவன் பொண்டாட்டி அந்த மேனாமினுக்கி அவன பேசி, மயக்கி அவ வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டா” மதுமிதா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தணிகை வேலன் வீட்டுக்குள் வந்தான்.

“மது… உனக்கு எத்தனை தடவைதான் சொல்லுறது. அவ உன் மருமக. அவள மருமகளா ஏத்துக்க முடியலன்னா உன் மகனோட பொண்டாட்டியா பாரு”

“ஆமா… அப்பா அண்ணன் நைட்டுக்கு வரேன்னு தான் சொன்னான். அதுக்குள்ள அம்மா என்னென்னமோ பேசுறாங்க” அன்னை தன்னை அடித்ததில் தந்தையிடம் வத்தி வைத்தாள் மகள்.

“வீட்டுக்கு வந்த மூத்த மருமகள் தான் வீட்டுக்கே வராமல் இருக்கா. பாசமா தேடி வர இளைய மருமகளையும் துரத்தி அடிக்கிற”

“பாசமா தேடி வந்தாளா? அவ எப்படி எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னா? யாரோட வந்து நின்னா? என்ன பேசினான்னு மறந்துட்டீங்களா?” மதுமிதா எகிறினாள்.

மிது தன் குடும்பத்தை அழைத்து வந்தால் பிரச்சினை செய்ய வந்தாள் என்று குற்றம் சாட்டுவார்கள். மிதுவின் குடும்பமும் சோலையின் வீட்டு வாசலை மிதிக்க விரும்ப மாட்டார்கள்.

அன்றைய சூழ்நியலையில் அது யாராக இருந்தாலும் மிது அழைத்து வந்திருப்பாள். அது பாரிவள்ளலாகிப் போனது அவள் தவறா? கூடவே கனகாவும் வந்தது அவள் தவறா?

விதியென்று சொல்வதா? சூழ்நிலையென்று சொல்வதா? இல்லை கனகா வந்தது சூழ்ச்சி.

“நம்மள போல அந்த சிவனேசன் குடும்பம் உன் அண்ணன் பொண்ண கட்டுன குடும்பம் தானே. அவன் பொஞ்சாதிக்கு என்ன கோபமோ, நமக்கும் உன் அண்ணன் குடும்பத்துக்கும் ஆகாது என்று தெரிஞ்சே கண்டபடி பேசினா. நானும் கோபத்துல பேசிட்டேன். நிதானமாக யோசிச்சா தான் அந்த பொம்பள பிரச்சனைய தீர்த்து வைக்க வரல அவளோட போலீஸ் பையனை கூட்டிகிட்டு வந்ததே பிரச்சனையை உண்டு பண்ண என்று புரிஞ்சது. அத பத்தி உன் பையன் தெளிவா பேசிட்டான். நீ திரும்ப இத பத்தி பேசிக்கிட்டு நிக்காதே” எச்சரித்தான்

“ஆ… ஆகாது இல்ல என் அண்ணன் குடும்பத்துக்கும் எங்களுக்கும் ஆகாது இல்ல. அவன் பொண்ணு மட்டும் எங்க வீட்டு மருமகளா?” தணிகை வேலன் என்ன சொல்லி புரிய வைக்க முயன்றான் என்பதை புரிந்து கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான். நீ என்ன சொல்றது என்று பிடிவாதமாக இருந்தாள் மதுமிதா.

 “நேத்து அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லியும் நீ திரும்பத் திரும்ப இப்படியே பேசிக்கிட்டு இருக்க. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. உனக்கு தாலி கட்டிய அன்னைக்கு உன் அண்ணன் பேசின பேச்சுக்கு உன் குடும்பத்தை மட்டுமல்ல உன்னையும் சேர்த்து தல முழுகி இருக்கணும் டி. அப்பத்தான் உனக்கெல்லாம் புத்தி தெளியும். உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்கு பதிலா, அதோ அந்த சுவத்துல போய் முட்டிக்கலாம்” என்றான் வேலன்.

 சோலையம்மாள் அதைப் பிடித்துக் கொண்டு “தப்புதான் மவனே… நான் பண்ணது தப்புதான். நாக்கும் வாக்கும் ஒன்னு தான். கொடுத்த வாக்க காப்பாத்தணும் என்று இந்த சிறுக்கிய கையோடு கூட்டிட்டு வந்தது என் தப்பு தான். அன்னைக்கே இவள அத்துவிட்டு வந்திருந்தா, அவளுங்க இம்புட்டு ஆடி இருக்க மாட்டாளுங்க” என்றாள்.

“இப்போ சொல்லு… நாக்கு சுத்தம் வாக்கு சுத்தம் என்று” அன்னையே முறைத்த தணிகை வேலன் மனைவியையும் முறைக்க தவறவில்லை.

“அப்பா… தாஸ் அண்ணா பார்த்தி அண்ணாவ பார்க்க போனானாம்” என்றாள் அகல்யா.

“ஆமாடா அந்த சிறுக்கி சொல்லி போனதா சொல்லுறான். யாரு சொல்லி போனா என்ன? கெட்டதுளையும் ஒரு நல்லது நடந்திருச்சு. அண்ணனும் தம்பியும் சந்திச்சு பேசிக்கிட்டாங்களே. இனியாவது நம்ம குடும்பத்துக்கு விடிவு காலம் வரட்டும். அப்பனே முருகா” முருகனை வேண்டலானாள் சோலையம்மாள்.

இங்கே தாஸும் மிது விடும் அப்படித்தான் கூறிக் கொண்டிருந்தான்.

“நல்லதுல எதுடா கெட்டது? கெட்டதுல எதுடா நல்லது? தேவையில்லாமல் எஸ்.ஜெ சூர்யா மாதிரி புலம்ப வைக்காதே” என்றாள் மிது.

“இல்லடி நாம போனதுனால தானே அண்ணியோட சுயரூபம் தெரிய வந்தது. இல்லனா தெரியாமளையே இருந்திருக்கும்” என்றான் தாஸ்

“உன் அம்மாக்கும், அப்பத்தாக்கும் ஏத்த மருமக உன் அண்ணி தான்” என்று மிது சிரிக்க, தாஸ் அவளை முறைத்தான்.

“என்ன முறைக்கிற? உன் அண்ணிகிட்ட அவங்க வாய் சவ்டால் எல்லாம் பழிக்காதென்று என் தலையை உருட்ட பாக்குறாங்க”

“சரி விடு… விடு… ஆமா அண்ணன அரசியல் வாரிசா அறிவிக்காம, அண்ணியே தேர்தல்ல நிக்க போறாங்க என்று எப்படி கண்டு பிடிச்ச?” தன் சந்தேகத்தை கேட்டான் தாஸ்.

“உன் வீட்டாளுங்க சும்மா புலம்புறாங்கன்னு தான் நினச்சேன். உன் அண்ணன் வீட்டுக்கு போக முன்னாடி எம்.எல்.ஏ பத்தியும், உன் அண்ணிய பத்தியும் கொஞ்சம் விசாரிச்சேன். உன் வீட்டாளுங்க சொன்னதைத்தான் சொன்னாங்க.

எப்பயும் ஒரு விசயத்த ஒரு கோணத்துல இருந்து பார்க்கக் கூடாது. இன்னொரு கோணத்துல இருந்தும் பார்க்கணும் என்று எனக்குள்ள இருக்குற பச்சி சொல்லும். சொல்லிச்சு. தீவிரமான விசாரணையா உன் அண்ணி கூட படிச்சவங்க யாராவது இருக்காங்களான்னு விசாரிச்சேன்.

விசாரணையை முடிச்சிட்டுத்தான் உன் அண்ணனை பார்க்கவே போனோம். ஆரம்பத்துல உன் அண்ணிகிட்ட போட்டு வாங்கலாமென்று தான் பேச்சுக் கொடுத்தேன். உன் அண்ணி என்னையே போட்டு பார்த்திருக்கா என்று போகப் போகத்தான் எனக்கே புரிய ஆரம்பிச்சது” அன்று சுவேதா உடனான பேச்சு வார்த்தையை ஞாபகத்தில் கொண்டு வந்த மிது கூறலானாள்.

உன் அம்மா இப்படி சொன்னாங்க, என்று சொல்லி நான் மாமியார் மருமக உறவை பத்தி பேசினா அவங்க சம்பந்தமே இல்லாம அப்பத்தாவை பத்தி கேட்டாங்க அப்போவே புரிஞ்சது எம்.எல்.ஏ பொண்ணு போட்டு வாங்குதுன்னு. நான் யாரு? உஷாரா போட்டு வாங்கிட்டேன்ல. நான் ரிவர்ஸ் கியர்ல விஷயத்தை போட்டு வாங்கலாம் என்று உங்க அண்ணன எலக்சன்ல நிக்க வைக்க பாக்குறீங்களா என்று கேட்காம, நீங்க தானே எலக்சன்ல நிக்க போறீங்கன்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துல அது எனக்கே ஆப்பா விழுந்திருக்கும். அவங்க திட்டத்தை எல்லாம் கண்டுபிடிச்சி அவங்க கிட்டயே சொன்னா எப்படி இருக்கும்? அப்படி ஒரு முழி. அவங்க பார்த்த பார்வையிலேயே நான் சொல்றது தான் உண்ம என்று தெரிஞ்சது.

அவங்க பார்வையே அப்படித்தானோ? நமக்கு தப்பா தெரியுதோ? இன்னும் கொஞ்சம் ஏத்தி விட்டேன். மறுத்து பேசலையே. அவங்களுக்கு அரசியலுக்கு வர எண்ணம் இல்லன்னா மறுத்து பேசி இருப்பாங்க. என் புருஷனுக்கு பக்கபலமா நான் இருப்பேன் என்று வசனமாவது பேசியிருப்பாங்க.

அவங்க அரசியல் பண்ணுறாங்களோ, அதிகாரம் பண்ணுறாங்களோ. நமக்கு அது பிரச்சனை இல்லை. நாம வந்தது குடும்ப பிரச்சினையை தீர்க்க. அரசியல் பேசுறது போல நச்சுன்னு நங்கூரத்தை பாச்சிட்டு வந்தேன். உங்க அண்ணி வீட்டுக்கு வருவங்களான்னு பாப்போம்”

“ஆமா எங்க அண்ணி அரசியலுக்கு வருவாங்கன்னு நீ எத வச்சு சொல்லுற? ஒருவேள நீ பேசினதுக்கு அவங்க ஒத்தூதி இருக்கலாம் இல்ல” தாஸ் நம்ப முடியாமல் கூற,

“ஏன்டா உன் அண்ணன பார்த்த பிறகுமாட அந்த எம்.எல்.ஏ உன் அண்ணன அரசியல் வாரிசு அறிவிப்பார் என்று நினைக்கிற?” சிரித்தாள் மிது.

தன்னுடைய அண்ணன் பார்த்தீபன் ஒரு அப்பாவி. எடுத்தார் கைப்பிள்ளை என்பதை தான் மிது அவ்வாறு கூறினாள். அவளை முறைத்த தாஸ் “என்ன வச்சி செய்றது பத்தாதென்று என் குடும்பத்தையும் பேசுற நீ”

“கோவிச்சுக்காதடா தாஸ்” அவன் முகவாய் பிடித்து ஆட்டியவள் “என்ன பண்ணுறது? ஊருக்கு வந்ததுல ஒரு என்டர்டைன்ட்மென்ட் வேணுமில்லையா?” என்று சிரித்தாள்.

“அடிப்பாவி…” என்ற தாஸ் “உங்க அப்பா வந்துடுவாரில்ல. சாப்பிடும் போது பேசாதே. சாப்பிட்ட பிறகு பொறுமையா பேசு” பொய்யாய் முறைத்தான்.

“எங்களுக்கு தெரியாதில்ல” இவளும் பதிலுக்கு முறைத்தாள்.

இங்கே கனகாவோ விடிந்தும் பிரளயம் ஏற்படவில்லையே என்று வீட்டுக்குள் நடைபயின்றுக் கொண்டிருந்தாள்.

“என்ன நானே போன் பண்ணி சொல்லியும் அந்த பக்கமிருந்து எந்த சத்தத்தையும் காணோம்? கிழவி தூங்கிட்டாளோ? மங்களம் புருஷன சமாதானப்படுத்தி காலைல போலாமென்று சொன்னாளோ? இருக்காதே… நாம போட்ட வெடிகுண்டு அப்போவே வெடிச்சிருச்சே. கிழவி இல்லாட்டியும் மங்களம் பொண்ண பார்க்க தெறிச்சு ஓடியிருப்பாளே”

மனதுக்குள் பேசியவள் “ஆமா… போயிருந்தா இந்நேரத்துக்கு அம்ரிதாவுக்கு போன் வந்திருக்குமே” என்று வாய் விட்டே புலம்பினாள்.

“என்னமா? யாரு அண்ணிக்கு போன் பண்ணுவாங்க?” என்றவாறே வந்தான் பாரிவள்லல்.

“எதுக்கு என் வாய புடுங்குற? நான் ஏதாச்சும் சொல்லி நீ என் மேல பயவா?” முகத்தை சுளித்தாள் கனகா.

அன்னை சொன்ன விதத்திலையே அது மிது விஷயம் என்று புரிந்தது. கனகா மிதுவை நினைத்து கவலை கொள்வதாக எண்ணினானே ஒழிய கனகாவின் மிதுவை பற்றி விசாரிப்பதற்கான நோக்கம் பாரிக்கு புரியவில்லை.

“ஒரு நிமிஷம் இரு உன் கவலைய இப்போவே போக்குறேன்” நேற்றிரவு அன்னையை சத்தம் போட்டதில் அன்னை முகத்தை தூக்கி வைத்திருக்கின்றாளே என்று அவளை சமாதானப்படுத்த எண்ணி உடனே தாஸை தொடர்பு கொண்டான்.

பாரிவள்ளலிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவும் எடுக்கலாமா? வேண்டாமா? என்ற எண்ணமெல்லாம் இப்பொழுது தாஸுக்கு வரவில்லை. எரிச்சல் வரவுமில்லை. “என்ன தான் சொல்லுகிறான்? பேசிப் பார்க்கலாம்” என்ற எண்ணத்தில் இயக்கி காதில் வைத்திருந்தான் தாஸ்.

தாஸோடு மிது கேட்டுக் கொண்டிருக்க, பாரிவள்லல் கனகாவுக்கு கேட்க்கும்படி போனை ஸ்பீக்கர் மூடில் போட்டு விட்டு “எங்க இருக்க தம்பி? ஒன்னும் பிரச்சினை இல்லையே” என்று கேட்டான்.

“ஒரு பிரச்சினையும் இல்ல. எல்லாருக்கும் தீபாவளிக்கு துணி எடுக்க வந்தோம். அப்படியே அத்த வீட்டுல லன்ச். லன்ச் முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்” என்றான் தாஸ்.

“கேட்டியா… ஒரு பிரச்சினையும் இல்லையாம் நீ தான் சும்மா பயந்து சாகுற” பாரி கனகாவிடம் கூறுவது மிது மற்றும் தாஸுக்கும் கேட்டது.

“இவன் ஒருத்தன் நான் இங்க நிக்குறேன்னு சொல்லியே ஆகணுமா?” மனதுக்குள் நொடித்தாள்  கனகா.

“யாரு பக்கத்துல கனகா அம்மாவா? பாவம் அவங்க ரொம்ப பதறிட்டாங்க” தாஸ் நக்கலாக கூற, அவன் தலையில் கொட்டினாள் மிது.

“ஆ…” என்று தாஸ் கத்த, “என்னாச்சு தம்பி” மறுமுனையில் பாரியின் குரல் கேட்டது.

“வேற யாரு நான் தான். கால மிதிச்சிட்டேன். அதுக்கு போய்…” என்ற மிது “என்ன இன்ஸ்பெக்டர் காலையிலையே கேஸ் வரும், ஸ்டேஷன் போக நேரிடும் என்று பயந்தே போன் பண்ணினீங்களோ”

பாரி கனகாவிடம் பேசியதை கேட்டப் பின் கனகா செய்வதற்கும், பேசுவதற்கும் பாரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று புரிந்தது. ஆனாலும் மிதுவின் நக்கல் பேச்சு தலை தூக்கியே இவ்வாறு கேட்டிருந்தாள்.

“ஆமா… இந்த குடும்ப வக்கீல், குடும்ப டாக்டர் போல நானும் உங்க குடும்ப போலீசா மாறிடலாமான்னு நினைக்கிறன்” பாரியும் மிதுவுக்கு பதில் கொடுத்தான்.

“தீபாவளி முடிஞ்ச கையோட சென்னைக்கு கிளம்பிடுவீங்களா? இல்ல. கலயாணம் பண்ணி பொண்டாட்டியோட தான் போவீங்களா?” இந்த கேள்வியை தாஸுக்காக மட்டுமன்றி, மறுமுனையில் கேட்டுக் கொண்டிருக்கும் கனகாவுக்காகவும் சேர்த்தே கேட்டாள் மிது.

“பொண்ணு இருந்தா என்ன தடை? உடனே கல்யாணம் பண்ணிக்கலாம். எந்த பொண்ண பார்த்தாலும் மனசுக்கு பிடிக்க மாட்டேங்குது. பிடிச்ச பொண்ணு வேணாம்னு சொல்லிட்டா” அவன் மனதில் உள்ள பெண்ணை பற்றிக் கூற, தாஸ் மிதுவை முறைத்தான்.

“என்ன இன்ஸ்பெக்டர் வன் சைட் லவ்வா? பொண்ணு யாரு? நமக்கு தெரிஞ்சவங்கன்னா சொல்லுங்க பேசி பார்க்கலாம்”

“அவ இப்போ எங்க இருக்காளோ, என்ன பண்ணுறாளோ. அது முடிஞ்சி போன சேப்டர். நமக்குன்னு ஒருத்தி வராமலா போவா. பார்க்கலாம்”

பொதுவாக யாராவது இன்னும் திருமணம் செய்யவில்லையா என்று கேட்டால் “எனக்கு ஏத்த பொண்ணு இருந்தா பாருங்க” என்றுதான் பாரியின் பதிலாக இருக்கும். நேற்று இரவு வீட்டில் நடந்த சம்பவத்தால், பழைய ஞாபகங்கள் கிளறப்பட்டு மனதில் இருந்த ரணத்தை மெல்ல கக்கி இருந்தான். 

“கனகா அத்தைய கவலை படாம இருக்க சொல்லுங்க. மருமக வந்தா கவனிக்க தெம்பு வேணுமில்ல” இரட்டை அர்த்தத்தில் கூறியவள் அலைபேசியை துண்டித்து விட்டு தாஸை முறைத்தாள்.

“இப்போ எதுக்கு என்ன முறைக்குற?”

“அமிர்த்தா காலையில போன் பண்ணி பாரி லவ் மேட்டர் சொல்லிச்சு தானே. அப்பொறம் என்ன பிடிச்ச பொண்ணு வேணாம்னு சொல்லிட்டா என்றதும் முறைக்கிற?”

என்னதான் பாரி தவறான நோக்கத்தோடு மிதுவோடு பழகவில்லை என்று புரிந்தாலும், மனதில் இருந்த அச்சம் முற்றாக நீங்காததால் அதை முகத்தில் காட்டி விட்டான் தாஸ்.

மருத்துவர் கூறிய பெரிய கோடு மிது மற்றும் தாஸின் வாழ்க்கைக்குள் வருமா? வராதா? என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினை கோட்டுக்கு நிகரான கோடுகளாக கனகா, மதுமிதா என்று இரண்டு கோடுகள் தாஸ் மற்றும் மிதுவின் வலது, இடது புறமாக நின்றதில் அவர்களுக்குள் இருந்த விரிசலை மறந்து இருவரும் இந்த இரண்டு கோட்டை அழிக்க முயற்சி செய்யலாயினர்.

Advertisement