Advertisement

அத்தியாயம் 16

ஊரின் கடை தெருவுக்கு கிழக்கால் தாஸின் வீடும். மேற்கால் மிதுவின் வீடும் மற்றும் எம்.எல்.ஏவின் வீடும் அமைந்திருந்தது. அதனால் தீபாவளிக்கு துணிகளை வாங்கிய மிதுவும் தாஸும் மிதுவின் வீட்டுக்கு வந்து துணிப்பைகளை வைத்தவர்கள் பார்த்திபன் குடும்பத்தாரின் துணிப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள்.

தாஸ் ஆட்டோவை நோக்கி சென்றிருக்க மிதுவை தடுத்து நிறுத்தி “வந்தவுடனே எங்க கிளம்பிட்டீங்க?” மங்களம் மகளை ஆராய்ச்சி பார்வையோடு தான் கேட்டாள்.

சைத்ரன் தனது விளையாட்டு பொருட்களோடு சமத்தாக விளையாடிக் கொண்டிருக்க, அவன் அன்னையையும், தந்தையையும் கண்டு கொள்ளவேயில்லை. சாஸ்வின் மங்களத்தின் கழுத்தில் இருந்து வரமாட்டேன் என்று மிதுவிடும் முகம் திருப்பினான்.

டே கேயார் சென்டரில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்பவர்கள் தினமும் ஒரே குழந்தையை பார்த்துக்கொள்ள மாட்டார்கள். தினமும் ஒருவர் பார்த்துக் கொண்டால், அவர் விடுமுறை எடுத்துக் கொண்ட நாளன்று குழந்தையை பார்த்துக் கொள்வது சிரமம் என்று தினமும் ஆள் மாற்றித்தான் பார்த்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் வெளியாட்கள் யாராலும் சட்றென்று ஒட்டிக் கொள்வார்கள்.

அமிர்தாஷினி அழைத்துச் சென்ற பொழுதும் சரி, மங்களம் அழைத்து சென்ற பொழுதும் சரி, குழந்தைகள் மிதுவையும் தாஸையும் தேடாததற்கு காரணம் இதுதான். அதையும் தாண்டி இரத்த உறவு அல்லவா, இயல்பிலேயே மங்களம் காட்டிய பாசத்துக்கு குழந்தைகள் கட்டுப்பட்டிருப்பார்கள்.

“பார்டா… ஒரே நாள்ல அம்மாச்சி செல்லமாகிட்டான்” குழந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டவள் “நைட் தூங்கினானா? இல்ல சிணுங்கிகிட்டே தூங்காம உன்ன படுத்திட்டானா?” என்று கேட்டாள்.

“குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தா அவன் வயிறு நிறையுமா? அவன் ஆம்பள புள்ளடி. புட்டிப்பால் பத்துமா? அதான் அவன் சிணுங்கி கிட்டே இருக்கான். அது தெரியாம என்னத்த புள்ளய பெத்து வளர்க்கிறியோ” மகளை கண்டித்தாள் மங்களம்.

சைத்ரன் பிறந்த போது தங்கு தடையில்லாமல் தாய்ப்பால் கொடுத்தாள். சாஸ்வினுக்கு சரியாக தாய்ப்பால் சுரக்கவில்லை. பசும்பால் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. குழந்தையின் போசாக்கில் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்றஞ்சி மருத்துவரை நாடி பால் மாவை எழுதி வாங்கி அதைத்தான் கொடுத்து வருகிறாள் மிது.

இப்பொழுது தானே ஆறு மாதம் இனிமேல் தான் உணவு ஊட்டுவதை பற்றி யோசிக்க வேண்டும். ஆரம்பிக்க வேண்டும் என்று இருக்க, குழந்தையின் சிணுங்கலுக்கு காரணம் பசியா? மிது எந்த மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. அதிர்ச்சியை அப்பட்டமாக முகத்தில் காட்டியவளின் கண்கள் குழந்தையை பசியால் வாட விட்டு விட்டோமே என்று எண்ணுகையில் கலங்கி கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன.

“பால் சுரக்கலைன்னா புட்டிப்பால் தான் கொடுப்பியா? ஒரு துண்டு உருளைக்கிழங்கோட சாதத்தை குளச்சி சமைச்சி ஊட்ட மாட்டியா?” என்று கேட்க விழித்தாள் மிது.

“என்ன சொல்லுற சாதம் ஊட்டினியா? நான் இன்னும் அவனுக்கு பாலத்தவிர ஒன்றுமே கொடுக்கல”

“ஆமா… டிவில காட்டுற கண்ட கண்டதெல்லாம் கலக்கி, கரைச்சு பசங்களுக்கு கொடுத்தா மூளை வளருமா? சத்தான ஆகாரம் மட்டுமல்ல, ஆரோக்கியமான உணவு கொடுக்கணும்” என்று மகளை முறைத்தாள்.

“என்ன பண்ணி வெச்சிருக்க? மொத தடவ ஊட்டுறப்போ செரிக்காம குழந்தைக்கு ஏதாச்சும் ஆகிட்டா? பார்த்து, பக்குவமா சமைச்சு ஊட்டணும்” என்று அன்னைக்கே அறிவுரை செய்யலானாள்.

“ஆமா ரெண்டு புள்ள பெத்தவ, நாலு புள்ள பெத்த எனக்கே புத்தி சொல்ல வந்துட்டா. உனக்கு ஊட்டி வளர்த்த எனக்கு, உன் புள்ளைக்கு ஊட்டி வளர்க்க தெரியாதா?” அன்னையாக மகளை அதட்டினாள் மங்களம்.

“அம்மாவா அதட்ட மட்டும் தான் உனக்குத் தெரியும். நான் பசங்கள வலியோட பெத்துக்கும் போது மட்டும் அம்மாவா நீ கூட இல்ல” என்று மிதுவும் அன்னையோடு மல்லுக்கு நின்றாள்.

ஒரு அலைபேசி அழைப்பு கூட விடுக்கவில்லையே என்ற கோபம் மிதுவுக்குள் கனன்றுக் கொண்டிருக்க, அதுதான் இவ்வாறு வார்த்தைகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

“என்கிட்ட சொல்லிட்டா போனா? நீ இல்ல என்கிட்ட அனுமதி கேட்டுட்டா போனா? இல்ல அம்மா நீ வா என்று போன் பண்ணி தான் சொன்னியா?” மங்களம் மாமியார் மற்றும் கணவன் மீது இருந்த கோபத்தை மகள் மீது காட்டலானாள்.

குழந்தைக்காக பேச ஆரம்பித்து இப்பொழுது தங்களுக்கான பேச்சில் வந்து நின்ற இந்த பேச்சில் வேதனை, கோபம், இயலாமை என்று எல்லா உணர்வும் கலந்து தான் இருந்தது.

கோபத்தில் வார்த்தையை விட்டால் அள்ளவே முடியாது. உறவு முறிவதற்கு கோபம் தான் காரணம். அன்னை மகள் உறவு கோபத்தில் பேசி விட்டால் முறிந்து விடுமா? ஏன் நாச்சியும் மதுமிதாவும் கூடத்தான் தாய் மகள். அவர்கள் பிரியவில்லையா? கோபத்தில் யாரை பேசுகிறோம் என்பதில் தான் உறவும் நீடிக்கிறது.

மிதுவும் மங்களமும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அடுத்த கணம் மறந்து விடுவார்கள். ஆனால் மதுமிதாவுக்கும் நாச்சிக்கும் இருக்கும் பிரச்சினை “நீ என் கணவனை, கணவனின் வீட்டாரை பேசினாய் என்பதே” அந்தப் பிரச்சினை என்று ஓயுமோ?

தன் பின்னால் வந்தவள் எங்கே சென்றாள்? ஏன் இன்னும் வரவில்லை என்று சற்று நேரம் பார்த்து விட்டு உள்ளே வந்த தாஸ் “மிது என்ன பண்ணுற வா கிளம்பலாம்” என்று அழைத்ததில் அன்னை மகள் இருவரும் அமைதியாகினர்.

“ஏதாவது சாப்பிட்டுட்டு போங்க. மிது சொல்லு” மாப்பிள்ளையாக மட்டுமல்ல, சொந்தக்காரனாகவும் முதல் தடவையாக வீட்டுக்கு வந்திருக்கிறானே என்ற அர்த்தத்தில் மங்களம் சொன்னாள்.

பார்த்தீபனின் வீட்டுக்கு சென்றால் அங்கே ஏதாவது சாப்பிட கொடுப்பார்களே என்ற எண்ணத்தில் “ஒன்னும் வேணாம் அத்தை” என்றிருந்தான் தாஸ்.

அன்னையின் முகத்தைப் பார்த்த மிது “இப்போ தண்ணி கொடு. மதியம் சமைச்சு வை. இங்க சாப்பிட்டு தான் என் மாமியார் வீட்டுக்கு போறோம்” என்றாள்.

குழந்தைகளை கொஞ்சி விட்டு இருவரும் பார்த்திபனின் வீட்டுக்கு துணிக்கடைக்கு சென்ற ஆட்டோவில் சென்றிருக்க. வரும்பொழுது நடந்தே வரலாயினர்.

அண்ணன் வீட்டுக்குப் போகும் போது இருந்ததை விட வரும் பொழுது தாஸ் தெளிவாக இருந்தான். ஒன்பது வருடங்களுக்கு முன் மிதுவை முதன் முறையாக பார்த்த பொழுது அவன் மனதில் ஏற்பட்ட பரவசம் மீண்டும் தோன்றியது போல் உணர்ந்தான்.

“இல்லை இல்லை இந்த உணர்வு, இந்த பரவசம் என் மனதில் என்றும் இருக்கத்தான் செய்கிறது. நாளடைவில் அவளோடு பயணித்த திருமணப் பாதையில் ஏற்பட்ட கற்களாலும், முட்களாலும் நான் உணர தவறிவிட்டேன்” என்று தனக்குள் முறுவலித்துக்கொண்டான்.

கணவன் கையை பற்றியது மட்டுமல்லாது புன்னகைப்பதையும் பார்த்த மிது “என்ன தாஸ்? எதுக்கு கையை பிடிக்கிற? ஊர்ல யாராச்சும் பார்த்தா தப்பா சொல்லிட போறாங்க” என்று கூறினாலும் கையை விலக்கவில்லை.

“என் பொண்டாட்டி கையை நான் பிடிக்கிறேன். எவன் என்ன சொல்லுறான்னு பாக்குறேன்” என்ற தாஸ் சிரிக்கத்தான் செய்தான்.

சுற்றிலும் கண்களை அலச விட்ட மிது “பாரி மாமாவ காணோமே” என்றாள்.

கலவரமான தாஸ் “அவனை எதற்குத் தேடுற? அவன இங்க வர சொன்னியா?” என்று கேட்டான்.

“நான் வர சொல்லல. என்னிக்கும் இல்லாமல் நீ என் கையை பிடிச்சியே ஒருவேள பாரி மாமா எதிர்ல வராரோ என்று நினச்சேன்” அவன் முகம் பார்த்து சிரித்தாள்.

“குசும்புடி உனக்கு”  என்றவன் அவளை தன்னோடு அனைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அதை சற்றும் எதிர்பாக்காதவள் என்னடா பண்ணுற? யாராச்சும் பாக்க போறாங்க கடைசி வாக்கியத்தை முடிக்கும் பொழுது புன்னகைத்தாள்.

“அதனாலதான் கிஸ் பண்ணேன். இல்லனா நீ பேசின பேச்சுக்கு கடிச்சிருப்பேன். நீ கத்துற கத்துற ஊரே கூடி இங்கே வந்துட மாட்டாங்களா?” இவனும் சிரித்தான்.

மிது நல்ல மனநிலையில் இருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனோடு தனிமையில் ஒரு நடை பயணம்.

வானம் மெல்லிய தூறல் போட, கடை தெருவில் இருந்தவர்கள் வேகமாக வீட்டை நோக்கி நடையை தொடர்ந்து கொண்டிருந்தனர். வியாபாரிகள் கடும் மழை பொழியுமா? இல்லை மழை நின்று வெயில் வருமா? வியாபார நடக்குமா? என்று வானத்தை பார்த்திருக்க, இவர்களை கவனிக்கும் மனநிலையில் யாரும் இல்லை.

கல்லூரி நாட்களில் காதலிக்கும் பொழுது எதைப் பற்றியும் சிந்திக்காமல், ஏன் எதிர்காலத்தை பற்றி கூட சிந்திக்காமல் இருவரும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனம் கூட இல்லாமல் சிரித்து பேசுவார்கள். 

பேச்சு முடிவில் எந்த அர்த்தமும் இருக்காது. ஆனால் அந்த நாள் முழுவதும் இருவரின் முகத்திலும் புன்னகை மட்டும் வாடாமல் இருக்கும்.

அடுத்த நாள் மீண்டும் கல்லூரியில் சந்தித்துக் கொள்ளும் பொழுது மலரும் புன்னகை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

“உன்ன நெனச்சாலே என் கன்னம் வலிக்குது மாமா. கொஞ்ச நேரம் பேசாம இரு” என்பாள் மிது. இனிக்க இனிக்க பேசி அவன் அவளை சிரிக்க வைப்பதனால், அவள் வீடு சென்றாலும் அவன் நினைவில் புன்னகைத்துக் கொண்டே இருந்தால் கன்னம் வலிக்காதா?

“லூசு மாதிரி சிரிக்கிறேன்னு அம்மா திட்டுறாங்க. எல்லாம் உன்னால தான்” அவனை செல்லமாக அடிப்பாள்.

“என் நிலைமையும் அதேதான். நீ சொல்லிட்ட. நான் சொல்லல அவ்வளவுதான்” என்பான் தாஸ்.

திருமணமான பின் மனம் விட்டு பேசக்கூட நேரமில்லாமல் போனதால் தான் இருவருக்குமிடையில் மெல்லிய கோடாக விரிசல் ஏற்பட்டிருந்தது. ஊருக்கு வந்த பின் இருவருக்கிடையிலும் இருந்த இடைவெளி மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்திருக்க, அது அவர்களின் புன்னகையிலேயே வெளிப்பட்டிருந்தது. ஊருக்கு வந்ததில் பழைய ஞாபகங்கள் தட்டியெழுப்பப்பட்டதால் வந்த மாற்றமாகக் கூட இருக்கலாம்.

“இப்பவே லஞ்ச் டைம். அம்மா ரெண்டு தடவை போன் பண்ணுங்க. நான் எடுக்கல. பசங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போலாமா? இல்ல உங்க வீட்டுல விட்டுட்டு போலாமா?” அகல்யா மதியத்துக்கு சமைத்து வைத்த கொண்டு காத்திருப்பாளே என்ற சிந்தனையில் கூறினான் தாஸ்.

“காலையில எங்க வீட்டுக்கு போய் துணிப்பைகளை வெச்சிட்டு வரும் பொழுது அம்மா கிட்ட என்ன சொன்னேன்? கேட்டுகிட்டு தானே இருந்த?”

“என்ன சொன்ன பார்த்திபனின் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் மங்களம் பேசியதோ, மிது பேசியதோ தாஸ் சரியாக கவனித்திருக்கவில்லை.

“உனக்கு எப்பவும் என் குடும்பம் என்றா இளக்காரமா? நீயும் உன் அம்மா அப்பத்தா போலத்தான் யோசிப்பியா?” தாஸின் கையை உதறியவாறு அவனை முறைத்தாள் மிது.

“ஏய் என்னடி பேசுற? அப்படி நினைச்சா நான் என் பசங்கள உன் வீட்டில விட்டிருப்பேனா? லூசு மாதிரி பேசாதே?” விறு விறுவென நடக்கும் மிதுவுக்கு ஈடு கொடுத்து நடக்கலானான் தாஸ்.

தாஸ் செய்யும் தவறே இது தான். மங்களம் கூறியதை கவனித்திருந்தாலோ, அதற்கு மீது கூறிய பதிலை கவனித்திருந்தாலோ பார்த்தீபனின் வீட்டுக்கு செல்லும் பொழுதே மிதுவிடம் பேசியிருப்பான். கவனிக்காமல் மிதுவிடம் ஒன்றை பேசி வெறுப்பை சம்பாதித்துக் கொள்வான். அவர்களின் வாழ்க்கையிலும் விரிசல் வரக்காரணம் தாஸின் அலட்ச்சியம் தான். பிரச்சினை பூதாகரமான பின் தீர்வு தேடி மருவத்துவரை நாடுவான்.      

“மொத மொத மாப்பிள வீட்டுக்கு வந்து எதுவும் சாப்பிடாம போனா அம்மா மனசு கஷ்டப்படாதா? அம்மா மனசு கஷ்டப்படக்கூடாது என்று தான் தண்ணி வாங்கி குடிக்க கொடுத்தேன். அவங்க சந்தோஷத்துக்காக மதியம் என் வீட்டுல சாப்பிட மாட்டியா நடையை நிறுத்தியவள் அடிக் குரலில் சீறினாள்.

மங்களம் பேசியது கண்ணுக்குள் வர மிதுவின் கோபம் தாஸுக்கு புரிந்தது.

அலைபேசியை எடுத்தவன் அன்னையை அழைத்தான் “அம்மா நானும் மிதுவும் லஞ்சுக்கு வர மாட்டோம். லஞ்ச் என் மாமியார் வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஈவினிங் தான் வரோம்” என்றான்.

“என்ன? எதுக்கு அங்க போன? நீ வீட்டுக்கு வர வேண்டியதுதானே” எங்கே மகன் வீட்டுக்கு வராமல் போய் விடுவானோ என்று அச்சத்தில் “உன் பொண்டாட்டி வரலைன்னாலும் பரவாயில்லை நீ வா” என்றாள்.

“அதென்ன என் பொண்டாட்டி இல்லாமல் என்ன மட்டும் வெல்கம் பண்ணுற?  இதுவே என் மாமியார் என்ன எப்படி எல்லாம் வெல்கம் பண்ணுறாங்க தெரியுமா? நீயும் இருக்கியே” என்று மிதுவை பார்த்து கண்சிமிட்ட, மிது சிரித்தாள்.

தன் மகன் மங்களத்தின் அருமையை தன்னிடம் பேசுவானா? கோபத்தை அடக்கியவாறு “இப்போ எதுக்கு அங்க போன?” என்று கேட்டாள் மதுமிதா.

“என்னம்மா குழந்தை மாதிரி பேசுற? எங்க வீட்டு ஆளுங்களுக்கு மட்டுமா தீபாவளிக்கு துணி எடுக்க முடியும்? என் பொண்டாட்டியோட வீட்டாளுங்களுக்கும் துணி எடுக்கணும் இல்ல. அது கொடுத்துட்டே வரலாம் என்று தான் போனோம். மதியமாச்சு சாப்பிட்டுட்டே வரோம்” என்றவன் மதுமிதா அடுத்து பேச முன் அலைபேசியை துண்டித்தான்.

தாஸ் பேசி முடிக்கும் வரையில் மிது குறுக்கிடவில்லை. பொறுமையாக கேட்டவாறு கூட நடந்தவள் “என்ன சட்டென்று சரண்டர் ஆகுற?” நம்ப முடியாத பார்வையோடு கணவனை ஏறிட்டாள்.

மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி அன்னையா? மனைவியா? என்று வரும் பொழுது சரியான முடிவு எடுக்காவிட்டால் என்றும் பிரச்சினைதான்.

“இதுவே நாம நம்ம வீட்ல இருந்து, உன் அம்மா சமச்சி வச்சி காத்திருக்கிறாங்க என்று சொல்லி நீ கோபப்பட்டா, என் பதில் இப்போ நாம எங்க வீட்ல இருக்கிறோம். இங்கு சாப்பிட்டு நைட்டுக்கு உங்க வீட்டுக்கு போலாம் என்கிறது தான். நீ பிடிவாதம் பிடிச்சாலும் சரி, முறைச்சாலும் சரி, சண்டை போட்டாலும் சரி சூழ்நிலையை புரிஞ்சி நடந்துக்கணும். புரியுதா?” என்றான் தாஸ்.

அவன் சொல்லும் கூற்றை ஏற்றுக் கொண்ட விதமாக தலையாட்டியவாறு “பரவாயில்லையே… ஊருக்கு வந்த பிறகு காலநிலையோட நீயும் நல்லாவே மாறிட்ட” என்றாள் மிது.

கல்லூரி நாட்களில் தாஸ் இப்படித்தான் பொறுமையாக பேசுவான். புரியவைப்பான். திருமணமான பின், அதுவும் சாஸ்வின் பிறந்த பின் தங்களுக்குள் பொறுமையாக அமர்ந்து பேசக்கூட நேரமின்மை தான் தங்களுக்குள் பிளவு வர காரணம் என்பது மிதுவுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. இவன் அதே மாதிரி தான் இருக்கிறான் நான் தான் இவன் மீது கோபம் கொள்கிறேன் என்று அவனைப் பார்த்தாள்.

“என்ன?”

“நான் உன் மேல சும்மா சும்மா கோபப்படுறேன் இல்ல”

“ம்ம்… உனக்கு கோபம் வருது. அதுக்கு காரணம் நானா? நான் மட்டும் தானா? எனக்கு புரியல. ஆனா அந்த கோபத்தை காட்ட உனக்கு இருக்கிற ஒரே ஆள் நான் மட்டும் எங்குறது தான் உண்மை. அன்ப உரிமையா காட்டினா ஏத்துகிறேனே, கோபத்தையும் ஏத்துக்கிட்டேன். உன் கோபத்தை புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன். இன்னும் முடியல” என்று சிரித்தான்.

வேலைப்பளு, தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டிய சூழ்நிலை. மனஅழுத்தம் என்று என்னென்னவோ தான் தனது கோபத்துக்கு காரணம். அதை இவன் மேல் காட்டியது, அதற்குக் காரணம் இவன்தான் என்று குற்றம் சாட்டியது எல்லாம் இவன் மீது இருந்த உரிமையிலையா? அப்படித்தான் இவன் அதை எடுத்துக் கொண்டானா?

பொறுமையாக இருந்து என்ன சாதிக்க நினைக்கிறான்? இதற்கு இவன் தன்னிடம் மனம் திறந்து பேசிக்கிறக்கலாமே. மிதுவால் தாஸை புரிந்துகொள்ள முடியவில்லை. 

மகன் வீடு வரவில்லையென்றதும் மதுமிதாவின் கோபம் உச்சத்திற்கு சென்றது. காச், மூச் என்று கத்த ஆரம்பித்தாள்.  

அவளது சத்தத்தில் அங்கே வந்த சோலையம்மாளும் அகல்யாவும் என்ன? ஏது? என்று கேட்கலாயினர்.

தாஸ் வீடு வராமல் மிதுவின் வீட்டுக்கு சென்றிருப்பதை கூற, “அண்ணி எனக்கு வாங்கின சுடிதார எடுக்கப் போய் இருப்பாங்க. இதுக்கா கத்துற? வந்துடுவாங்க” என்றாள் அகல்யா.

“அண்ணியாம் அண்ணி. ஒரு துணி வாங்கிக் கொடுத்ததும் நாய் மாதிரி அவ பின்னாடி போயிட்ட, வெக்கம் கெட்டவ” மதுமிதா மகள் மீது பாய,

“இப்போ எதுக்கு இவ மேல பாயுற? வீட்டுக்கு போயிட்டு வரேன்னு தானே சொல்லிட்டு போனா” சோலையம்மாள் மருமகளை கடிந்தாள்.

“எனக்கு வந்து வாட்சிருக்காங்களே. புரியாம பேசிக்கிட்டு. அவன் அவனோட பொண்டாட்டியோட வீட்டுக்குப் போய் இருக்கான். அதுவும் அதுங்களுக்கு தீபாவளி துணி எடுத்துக்கிட்டு போயிருக்கான்” குரலை உயர்த்திக் கத்தினாள் மதுமிதா

“என்ன சொல்லுற?” மதுமிதாவை விட கோபமானாள் சோலை.

என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்காம கத்த வேண்டியது” மாமியாரை சந்தடி சாக்கில் திட்டியவள் “போன் பண்ணி கேட்டா மதியம் சாப்பிட்டுட்டு நைட்டுக்கு தான் வரேன்னு சொல்லுறான்”

“கோபப்பட்டா, நிதானமா யோசிக்க முடியாது. உன் விஷயத்திலும் அப்படித்தான். உனக்கு இருக்கிறது உன் அம்மா புத்தி தானே” மருமகளை திட்டிய சோலை பேத்தியிடம் திரும்பி “அகல்யா உன் அண்ணனுக்கு போன போடு. நான் சொல்றது சொல்றது போல பேசு” என்றாள்.

“அண்ணன் நம்ம வீட்டுக்கு வரணும் என்று நீங்க நினைக்கிற மாதிரி தானே, அண்ணியும் அவங்க வீட்டுக்கு போகணும் என்று நினைப்பாங்க” என்றெண்ணியவாறு தாஸுக்கு அழைப்பு விடுக்கலானாள் அகல்யா

வீட்டுக்குள் நுழையும் பொழுதே தாஸின் அலைபேசி மீண்டும் அடிக்க “யார் உன் அம்மாவா?” என்று கேட்டாள் மிது.

“இல்ல அகல்” என்ற தாஸ் அலைபேசியை எடுக்கலாமா? வேண்டாமா என்று யோசித்தான்.

“அம்மா பாசம் ஒர்க் அவுட் ஆகலைன்னு, தங்கச்சி பாசத்த வலை வீசுறாங்களா? போன் எடுத்துப் பேசு. நீ பேசலனா உனக்கு சோத்துல விஷம் வச்சிட்டாங்கன்னு என்று இங்கு ஓடி வந்திடப் போறாங்க” கிண்டலாக கூறியவாறு உள்ளே சென்றாள்.

நேற்று இரவு அவ்வளவு பேசியவர்கள் காலையில் மிது கிளம்பும் வரை அமைதியாக இருந்தது பூகம்பத்தை கிளப்பத்தான் என்று தாஸுக்கு மிதுவுக்கும் புரியாமல் இல்லை. யாரும் வேண்டாம் என்று சொல்ல ஒரு நொடி போதாதா? மிது தன்னிடம் கேட்டது குடும்பத்தை சேர்த்து வைக்கலாம் என்பதே. அதை செய்ய முயற்சி செய்துதான் பார்க்கலாம் என்று தாஸ் இறங்கி இருக்க, அலைபேசியை இயக்கி காதில் வைத்தவன் “சொல்லு அகல்” என்றான்.

“என்ன அண்ணா நீ. இங்க நான் ஆசையாசையா சமச்சீ வச்சா நீ உன் மாமியார் வீட்டில் சாப்பிடுகிறேன் என்று சொல்கிற. இது உனக்கே நியாயமா இருக்கா?” அண்ணி தான் உன்னை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனாங்களா என்று தான் கேட்டிருப்பாள். ஏனோ மிதுவை பற்றிய தவறான எண்ணம் தலைகீழாக மாறி இருந்ததில் அகல்யாவின் வாயில் இருந்து அப்படியான வார்த்தைகள் வரவில்லை.

“எல்லாருக்கும் துணி வாங்கினோம். பார்த்தியும் இந்த ஊர்ல தானே இருக்கான். துணி வாங்கிட்டு போய் அவன் பசங்களையும் பார்த்துட்டு வரலாம் என்று மிது சொன்னா. போய் பாத்துட்டு வர லேட் ஆச்சு. மிது ஃபேமிலிக்கும் டிரஸ் எல்லாம் கொடுத்துட்டு வரலாம் என்று பார்த்தா, அத்த சமைச்சு வச்சு சாப்பிட்டுட்டு போங்க என்று சொல்லுறாங்க. வீட்டு மாப்பிள்ளையா மொத தடவ வந்து சாப்பிடாம போறது நல்லதில்ல இல்லையா? அதான் சரின்னு சொல்லிட்டேன்.

அகல் சமச்சீ வச்சிருப்பானு உன் அண்ணி சொன்னா. நான் தான் அத நைட்டுக்கு போய் சாப்பிடலாம் என்று உன் அண்ணிய சமாதானப்படுத்தினேன். நானே அகலுக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னேன். அதுக்குள்ள நீ போன் பண்ணிட்ட.

ஒன்னு பண்ணு. மதியம் சமைச்சது மிச்சம் இருந்தா, நைட்டுக்கு எடுத்து வை. பத்தலைன்னா நாம வெளியில ஆர்டர் பண்ணிக்கலாம். சரியா?” அன்னையையும், மனைவியையும் சமாளிக்க முடிவு செய்தவனுக்கு அகல்யாவை சமாளிப்பது கஷ்டமா என்ன?

அண்ணன் சொன்னதை கேட்டு துள்ளிக் குதித்த அகல்யா சந்தோஷமாக அலைபேசியை அனைத்தாள்.

Advertisement