Advertisement

அத்தியாயம் 15

முன்பு எல்லாம் சொந்தக்காரர்களின் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டதா? அல்லது கலிகாலம் ஆரம்பமாகிவிட்டதா? அலைபேசி வந்த பின் வேலையாக இருப்பார்களோ? வீட்டில் இருப்பார்களோ என்று நாமே ஒரு காரணத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று அலைபேசி அழைப்பு விடுத்து உறவை நீடித்துக்கொள்ள வேண்டி தேடி செல்லும் காலம் இது.

அதுவும் தாஸும் மிதுவும் யாரைப் பார்க்க செல்கிறார்கள்? தாஸின் அண்ணனையும், அண்ணியையும். அவர்கள் இருப்பதோ அண்ணியின் தந்தையின் வீட்டில். அவர் ஒரு எம்.எல்.ஏ. தங்களது வருகை அவருக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று எண்ணித்தான், தாஸ் அண்ணனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தான்.

பார்த்திபனின் அலைபேசி எம்.எல்.ஏ-யின் கைக்கு சென்று அவர் பேசிய பின் தான் இவர்களுக்கு அனுமதியே கிடைத்தது. அப்படி இருக்க ஸ்வேதா “எதுக்கு வந்தீங்க” என்று கேட்டதில் மிதுவுக்கு கோபம் உச்சத்தில் ஏறியது.

ஸ்வேதா வந்தவுடனே வாயிலில் நடந்தேறிய சம்பவம் மட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் மிது அக்கா, அழகி என்று பேசி அவமானப்பட்டு இருப்பாள்.

சுதாரித்தவள் சுவேதாவின் உயரத்துக்கு எழுந்து நின்று “உங்கள பாத்துட்டு போகலாம் என்று தான் வந்தோம். நாங்க ஊர விட்டு போய் ஏழு வருஷம் ஆச்சு. உங்க கல்யாணத்துக்கும் நாங்க இல்ல. ஊர்ல இருந்திருந்தா எம்.எல்.ஏ அப்பாக்கு ஓட்டு போட்டு இருப்போம். நம்மளால கட்சிக்கும், உங்களுக்கும் ஏதாச்சும் உதவி செய்ய முடிஞ்சா பண்ணி இருப்போம். அதுதான் முடியல. ஆனா சொந்தம் விட்டு போகுமா?

பசங்க வளர்ந்தா நல்லது, கெட்டது என்று நடக்கும் பொழுது சொந்தக்காரங்க தான் வருவாங்க. உங்களுக்கு நாங்களும். எங்களுக்கு நீங்களும் தான்” பேச்சுவாக்களில் எம்.எல்.ஏயை அப்பா என்று அழைத்து நீ வேண்டாமென்றாலும் நீ எனக்கு உறவு தான் என்று பேசியவாறு மிது மாடி ஏறி இருக்க, அவள் பின்னால் வந்த ஸ்வேதா அவளை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள். மிது எந்த மாதிரியானவள் என்று அளவிடுகிறாளாம்.

சுவேதாவோடு பேசியவாறு மிது தாஸுக்கு “உன் அண்ணன் வந்தால் அவனை தனியாக அழைத்து சென்று பேசி விடு” என்று குறுஞ்செய்தி வேறு தட்டி விட்டிருந்தாள்.

“அத்தை உங்கள புகழ்ந்து பேசினாங்க. என் மூத்த மருமக அப்படி. என் மூத்த மருமக இப்படி. வீட்டுக்கு வந்தா எல்லா வேலையும் அவதான் பார்த்துப்பா. என்னைய எந்த வேலையும் செய்ய விடமாட்டா. என்ன பசங்களால இங்க வர முடியலன்னு சொன்னாங்க” என்று மிது ஸ்வேதாவின் முகம் பார்த்தாள்.

தாஸின் வீட்டில் யாருமே ஸ்வேதாவை பற்றி நல்லவிதமாக பேசவில்லை. சொல்லப் போனால் மிதுவை சுவேதாவோடு ஒப்பிட்டுக் கூட பேசவில்லை. தாஸிடம் சுவேதாவை தன் பக்கம் சாய்த்துக் கொள்வதாக சவால் விட்டு வந்தவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதாவது பேசியாக வேண்டுமே அதனால் மாமியாரை பற்றி பேசினாள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற காலகாலமாக பின் தொடரும் வழிமுறையை தான் கையாண்டாள்.

“அத்த என்ன பத்தி நல்ல விதமா சொன்னாங்களா?” நீ கற்பூரத்தின் மேல் அடித்து சத்தியம் செய்தாலும் நான் நம்ப மாட்டேன் என்பது போல் மிதுவை ஒரு பார்வை பார்த்தாள் ஸ்வேதா.

மதுமிதாவுக்கும் ஸ்வேதாவுக்கும் இடையில் எவ்வாறான உறவு இருக்கிறது என்று மிதுவுக்கு உணர்த்த அந்தப் பார்வையே போதுமானதாக இருந்தது.

தாஸ் மனநலமருத்துவரை நாடிய பின்னும் மனைவியின் மனதை படிக்க முடியாமல் தவிக்கிறான். ஒருவேளை பெண்களின் மனதை படிப்பது அவ்வளவு எளிதான காரியமல்லவோ என்னவோ. ஆனால் மிது சுவேதாவை பார்த்த உடனே இவள் இப்படித்தானா என்று கணித்து அதேகேற்றது போல் தான் பேசலானாள்.

“நீங்க வேற அக்கா. ஆமா அத்தைக்கு நான் யாரு? சொந்த அண்ணன் பொண்ணு இல்லையா? என்னையே அவங்க ஏத்துக்கொள்ளல்ல. உங்களை முழு மனச ஏத்துப்பாங்களா? அவங்க சொல்லும் போதே என்ன கஷ்டப்படுத்த தான் சொல்லுறாங்க என்று எனக்கு புரிஞ்சது. என்ன குத்திப் பேச உங்கள பயன்படுத்திக்கிட்டாங்க. உங்கள பேச என்ன பயன்படுத்திக்க முடியல. அவங்களுக்கு கொடுப்பனையும் இல்ல” என்று புன்னகைத்தாள்.

மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் என்ற உறவு தானே ஸ்வேதா மட்டும் விதிவிலக்கா என்ன?

“அந்த வீட்டுல ஒரு ஒரு கிழவி இருக்கே. அது என்ன பத்தி ஒன்னும் சொல்லலையா?” மிதுவை ஆழ்ந்து பார்த்தவாறே கேட்டாள் சுவேதா.  

“எது அந்த கிழவியா? அது நம்ம ஊட்டு குரைக்கிற நாய் அக்கா. கிழவிக்கு என்னமோ அது மருமகள, அதான் நம்ம அத்தைய ஆட்டிப்படைகிறதா நினைச்சுகிட்டு இருக்கு. உண்மையிலயே நம்ம அத்தைதான் அத வச்சி செய்யுது. விட்டா எங்களையே வீட்டு வேலைக்காரியா ஆக்கிடும்” என்றாள் மிது.

“ஆமா கல்யாணம் பண்ண பிறகும் பையன மடியில வச்சுக்கணும் என்று எண்ணுறாங்க. அந்த வீட்டில் இருந்தால், பார்த்தியையும் வேலை வாங்குறது பத்தாது என்று, என்னையும் வீட்டு வேலைக்காரியா ஆக்கி இருப்பாங்க. அதனால நான் அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு பிறகு இங்க தான் இருப்பேன் என்று சொல்லிட்டேன்” என்ன நினைத்தாளோ சுவேதா வாய் திறந்தாள்.

“அப்பத்தாவும், அத்தையும் இதை சொல்லித்தான் புலம்புவார்கள். இவளும் இதையே தான் சொல்கிறாள். ஒருவேளை இது இவள் முடிவா? அதை இவள் எம்.எல்.ஏ அப்பா செயல்படுத்தினாரா?” யோசனையாகவே சுவேதாவோடு பேசினாள் மிது.

“ஆமா அக்கா உங்க அப்பாகு அப்புறம் நீங்க தானே எலக்சன்ல நிக்க போறீங்க? அப்பாவோட கம்பீரமும், ஆளுமையும் உங்களுக்கு அப்படியே இருக்கு” தாஸ் கூறியது போல் பார்த்திபனை அரசியல் வாரிசாக அறிவிக்க எண்ணம் எம்.எல்.ஏவுக்கு இருந்தால், ஸ்வேதாவுக்கு தெரியாமளா இருக்கும் என்று போட்டு வாங்க முயன்றாள் மிது.

ஸ்வேதா மிதுவை “எதற்காக இவள் இதை கேட்கிறாள்?” என்று சந்தேகமாக பார்க்க, சுதாரித்த மிது

“உங்க கல்யாண ஆல்பம். பசங்க போட்டோஸ் இருந்தா காட்டுங்க. நாங்கதான் கல்யாணத்துக்கு வரலையே” என்று அவளை அறைக்குள் அழைத்து சென்றாள். பார்த்திபன் வந்தால் இந்த ஸ்வேதா தாஸோடு அவனை தனியாக பேச விடுவாளோ? அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியே அவளை அறைக்குள் அழைத்து சென்றாள் மிது. அது மட்டுமல்ல தான் கேட்ட கேள்வியால் அவள் பார்த்த பார்வையில் இருந்தும் அவளை திசைதிருப்ப வேண்டும் அல்லவா.

தாஸ் கூறியது போல் எம்.எல்.ஏவுக்கு தாஸின் அண்ணன் பார்த்தீபனை தன் அரசியல் வாரிசாக அறிவிக்கும் எண்ணம் இருப்பதாக ஏனோ மிதுவுக்கு தோன்றவில்லை. சுவேதாவை பார்த்த பின் அது உறுதியானது. அதனால் தான் அந்தக் கேள்வியை கேட்டாள். ஆனால் சுவேதா பதில் சொல்லாமல் மறுத்தாள். மறுத்தால் மிது விட்டு விடுவாளா? சுற்றி வளைத்து மீண்டும் எப்படி கேட்பது என்று யோசிக்கையில் சுவேதாவே கேட்டாள்.

“ஏன் என் புருஷன் எலக்சன்ல நிப்பாரா என்று கேட்காமல், நான் நிக்கிறேனா என்று நீ கேட்ட?” நீ கேட்டதை நான் மறக்கவில்லை. தான் ஒரு அரசியல்வாதியின் மகள் என்பதை நிரூபித்தவாறு கேள்வியால் மிதுவை துளைத்த ஸ்வேதா ஆல்பத்தை எடுத்துக் கொடுத்தாள்.

“பார்த்தி மாமாவ நான் இதுவரைக்கும் பார்த்ததில்ல. உங்க அப்பாக்கு ஆண் வாரிசு இல்ல. அதனால படிச்ச பையனா, நம்ம ஜாதிலேயே நல்ல பையனா பார்த்து உங்களுக்கு கட்டி வச்சதா ஊருக்கு வந்த உடனே அரசல் புரசலா காதுக்கு வந்து செய்தி. ஆனா அக்கா ஏன் பொம்பளைங்க அரசியல்ல ஈடுபடக்கூடாது? ஈடுபடாமலையா இருக்காங்க? இந்திரா காந்திய பத்தி நான் சொல்லிய உங்களுக்கு தெரியணும்? ஏன் நீங்க எலக்சன்ல நின்னா பார்த்தி மாமா சப்போர்ட் பண்ண மாட்டாரா?” என்று ஸ்வேதாவை உசுப்பேற்றுவது போல் கூறினாள்.

பாவம் மிது ஸ்வேதா எப்படிப்பட்டவள் என்று அறியாமலே அவளை பற்றி புட்டு புட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.

தனது தந்தைக்கே ஆலோசனை சொல்பவள் ஸ்வேதா. தந்தைக்குப் பின் தான் தான் எல்லாம் என்ற எண்ணம் மட்டுமல்ல, அதிகாரத்திலும் தான் தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவள் முடிவு. பார்த்திபனை படிப்புக்காகவும், ஜாதிக்காகவும், மணமகனாக தேர்ந்தெடுத்ததாக ஊரும், அவன் குடும்பத்தாரும் நினைத்திருக்க, மூன்றாவது காரணம் அவன் எம்.எல்.ஏவுக்கும், சுவேதாவுக்கும் அடிபணிந்து போவதுதான்.

ஸ்வேதாவுக்கு திருமணம் பேச வேண்டுமென்று எம்.எல்.ஏ கூறிய உடனே அவள் பார்த்திபனின் புகைப்படத்தை கொடுத்து “இவன்தான் எனக்கு மாப்பிள்ளையா வரணும்” என்றாள்.

“என்னமா சொல்ற நம்ம ஜாதி தான். ஆனா வசதி இல்லையே” என்றார் எம்.எல்.ஏ

பணத்த சம்பாதிக்கலாம் அப்பா. விசுவாசத்த சம்பாதிக்க முடியாது. எப்படியும் கல்யாணம் பண்ணி தானே ஆகணும் என்று ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நம்ம ஊர்ல, நம்ம ஜாதில, நம்ம குடும்பத்துக்கு ஏத்தது போல இருக்கிற பசங்க லிஸ்டெல்லாம் எடுத்தேன். அதுல அஞ்சு பேர்.

அஞ்சில ரெண்டு பேர் தான் பெஸ்ட். இவன்தான் நாம சொன்னபடி எல்லாம் கேட்பான். மத்தவன் ஏற்கனவே ஒரு பொண்ண லவ் பண்ணிக்கிட்டு இருக்கான். அவள மறந்துட்டு என்ன அவன் மனசுல பதிய வைக்கிறது எல்லாம் கஷ்டம். இல்லன்னா அவள கொன்னுட மாட்டேனா?” என்றாள்.

மகள் எது சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று அறிந்த எம்.எல்.ஏ உடனே தாஸின் வீட்டில் பேசி ஸ்வேதா மற்றும் பார்த்திபனின் திருமணத்தை நிகழ்த்தி வைத்தார்.

பார்த்தீபனை திருமணம் செய்ததே அவனை அடிமையாக வைத்துக் கொள்ள, அப்படிப்பட்ட சுவேதா கணவனின் வீட்டில் தஞ்சமடைவாளா? தலையணை மந்திரம் ஓதி கணவனை தன் பக்கம் சாய்த்துக் கொண்டவள் அவன் வீட்டுப் பக்கமே செல்வதில்லை. அவனையும் செல்ல விடுவதில்லை. செல்ல விடாதபடி அவனுக்கு கட்சி வேலைகள் குவிந்துக் கிடக்கும்.

ஊருக்குள் பரவும் வதந்தியை பற்றி ஸ்வேதாவுக்கு தெரியாதா? எது உண்மை என்று அவள் அறிந்திருந்தமைய்யால், வதந்தியை அவள் கண்டு கொள்ளாமல் இருந்தாள். இந்த மிது இவளிடமே வந்து உண்மைகளை கண்டுபிடித்தது போல் அத்தனையையும் சொன்னால், மிதுவை சுவேதா சந்தேகமாக பார்க்க மாட்டாளா?

“பொண்ணுங்க முன்னேறனும், எல்லாத்தையும் செய்யணும், எல்லாத்திலும் இருக்கணும் என்று நினைக்கிற நல்லது” மிதுவின் பேச்சின் நோக்கம் தான் என்ன என்று அறிய பட்டும் படாமலும் பேசினாள் சுவேதா.

“அக்கா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்கல்ல” பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள் மிது.

“என் மாமியார் பத்தி நான் தப்பா சொன்னா இவ வாயை திறப்பா என்று நினைத்தேன். உண்மையிலேயே இவ பாசமா தான் பேசுகிறாளா?” மிது ஸ்வேதாவிடம் போட்டு வாங்க பார்த்தால், அரசியல் வாரிசான ஸ்வேதா மிதுவிடம் தன் வேலையை காட்டிக் கொண்டிருந்தாள்  .

“என்ன சொல்லு?” சிரித்தாள் ஸ்வேதா.

“நீங்க அரசியல்ல நிக்கிறதாக இருந்தா, உங்க ஆட்டிடியூட மாத்தணும். உள்ள வந்த உடனே வேலைகாரன அடிச்சிட்டீங்க. வாட்ச்மேனையும் அடிச்சிட்டீங்க. அவங்க தப்பு செஞ்சாங்க அடிச்சீங்க என்று நீங்கள் நினைக்கிறீங்க. ஆனா பாக்குறவங்க பார்வையில நீங்க அடங்காபிடாரியா, அகம்பாவம் பிடிச்சவங்களாகத்தான் தெரியும்.

என் மேல கோபப்படாதீங்க. நான் சொல்றத பொறுமையா கேளுங்க. அவங்க உங்களை விட வயசானவங்க. வயசுல மூத்தவங்க. அவங்க தப்பை சுட்டி காட்டி மன்னிச்சு விட்டா, அவங்க நாலுபேர் கிட்ட உங்கள பத்தி நல்லவிதமா சொல்லுவாங்க. நாலு நாற்பதாகும்.  நாற்பது நானூறாகும். எல்லாம் ஓட்டு அக்கா. ஓட்டு” கண்கள் மின்ன சொன்னாள் மிது.

தான் சொல்வதை ஸ்வேதா பொறுமையாக கேட்க வேண்டுமே. கோபப்படக்கூடாதே என்று வார்த்தைகளில் நிதானத்தை கொண்டு வந்து, அவளை கூர்ந்து கவனித்தவாறு மேடை நடிகையை போல் தான் பேசினாள் மிது. ஸ்வேதாவும் இவள் பேசுவதை கோபப்படாமல் ரசித்துக்கொண்டிருந்தாள்.

“பேசாம நீயே இலக்ஷன்ல நில்லேன்” என்றாள் சுவேதா

“என்னக்கா கிண்டல் பண்ணுறீங்க? எனக்கு அந்த ஐடியா இல்ல. ஆனா என் அக்கா நீங்க நின்னு ஜெயிச்சா, நம்ம குடும்பத்துக்கே பெருமை தானே. அப்போ நம்ம மாமியார் பீத்திப்பாங்க இல்ல” ஏதோ மாமியாருக்கு விட்டுக் கொடுப்பது போல் கூற ஸ்வேதாவுக்கு சிரிப்பு வந்தது. சத்தமாக சிரித்தாள்.

மிது வெகுளி இல்லை என்று சுவேதாவுக்கு தெரியும். தாஸின் குடும்பத்தார் அவளை ஏற்றுக்கொள்ளாததால் தன்னோடு ஒட்டிக்கொள்ள எண்ணுகிறாள். அதனால் தனக்கு அறிவுரை கூறுவதாக எண்ணினாள் ஸ்வேதா. அப்படி ஒரு விம்பத்தை தான் மிதுவும் உருவாக்கினாள்.

“வேற என்ன பண்ணனும்” சுவேதாவும் மிது என்னென்ன திட்டங்கள் வகுத்திருக்கிறாள் என்று ஆர்வமானாள்.

“ம்ம்… வேலையாட்கள் அப்புறம் குடும்பம் உங்களுக்கு தூக்கி வச்சு கொண்டாடினா, அடுத்தது ஊரு தான். குடும்பம். முதல்ல நம்ம வீட்டு கிழவியையும், நம்ம மாமியாரையும் காக்கா பிடிக்கணும்.காக்கா பிடிங்க அப்புறம் பாருங்க. ராஜ யோகம் தான். இந்த தீபாவளிக்கே வரிங்க, அசத்துறீங்க. ஓட்டு. அக்கா ஓட்டு” என்று சிரித்தாள் மிது.

மிது சொல்வது சரிதான். அதிகாரத்தை கைப்பற்ற அதட்டலான முறை சரிவராது. அன்பாகத்தான் அணுக வேண்டும். தந்தை தன்னிடம் எவ்வளவு முறை எடுத்துக் கூறியிருப்பார். தன் புத்திக்கு எட்டாமல் கோபம் தடுத்துக் கொண்டே இருந்தது. இவள் அதை அழகாக புரிய வைத்து விட்டாளே என்று மிதுவை பார்த்து புன்னகைத்தாள் ஸ்வேதா.

அதன்பின் சுவேதா மிதுவோடு சகஜமாக பேசினாள் மிதுவும் வீட்டை சுற்றிப் பார்த்தவாறு, குழந்தைகளைப் பற்றியும் இதர விஷயங்களையும் அலசினாள்.

மிதுவும் ஸ்வேதாவும் படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தாஸோடு உள்ளே வந்தான் பார்த்திபன்.

“இப்பதான் வரிங்களா?” மிதுவோடு பேசியதில் பார்த்திபனை மறந்து விட்டோமே என்று பார்த்திபனை பார்த்து ஸ்வேதா கொஞ்சம் அதட்டும் குரலில் தான் கேட்டாள்.

“ஆ… ஆ… அது…” என்று பார்த்தீபன் திணற

“மாப்புள அப்போவே வந்துட்டாரே” என்றார் எம்.எல்.ஏ

“ஆமா…” என்று தலையசைத்தாலும் பார்த்திபன் அடுத்து என்ன சொல்வது என்று முழித்தான். தம்பியோடு தனியாக பேசினேன் என்று சொன்னால் மனைவி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவாள் என்று தெரியும். என்ன பேசினாய் என்று கேட்டாலும் சொல்ல முடியாது. சொல்லாமல் இருக்கவும் முடியாது.

“மாப்பிள்ளையோட தம்பிக்கு வண்டியென்டா உசுரு போல. மாப்பிள்ளை வந்த வண்டிய பார்த்ததும் சின்ன குழந்தை போல ஓடிப் போய் வண்டியை பார்த்தாரு” என்று சிரித்தார் எம்.எல்.ஏ.

“என்ன இந்த எம்.எல்.ஏ மகளிடம் மாப்பிள்ளையை போட்டுக் கொடுக்கிறாரே இப்படி இருந்தால் இவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? வாழ்க்கையே சூனியமாகாதா” என்று மிது யோசிக்கையில், எம்.எல்.ஏ அடுத்து பேசியதை பற்றி பிடித்துக்கொண்டவள் “ஆமா எம்.எல்.ஏ அப்பா இவர் இன்னும் பசங்க கூட சேர்ந்து குட்டி குட்டி வண்டியெல்லாம் வச்சு விளையாடுவார்” கேலிச் சிரிப்பே உதிர்த்தாள் மிது.

தாஸுக்கு வண்டிகள் என்றால் கொள்ளை பிரியம் என்று மிதுவுக்கு நன்றாகத் தெரியும். வண்டியை பார்த்த ஆர்வத்தில் ஓடியவன் கண்டிப்பாக அண்ணனோடு பேசி இருப்பான் என்று கணவனது முகத்தைப் பார்த்தே கண்டு கொண்டவள் பார்த்திபன் திணறுவது கண்டு எம்.எல்.ஏயின் கதைக்கு ஒத்தூதினாள்.

 பார்த்திபனின் குடும்பத்தோடு அவனை ஒன்ற விடக்கூடாது என்பதுதான் ஸ்வேதாவின் தீர்மானம். திட்டவட்டமாக தந்தையிடம் சொல்லி இருந்தவள், தான் இல்லாத நேரத்தில், இல்லாத இடத்தில் அவனை கண்காணிக்க வேறு ஆளை ஏற்பாடு செய்திருந்தாள். வீட்டுக்கு வந்தால் சுவேதா அல்லது எம்.எல்.ஏயின் பார்வை பார்த்தீபனை தொடரும்.

இன்று தான் தவற விட்டிருந்தாலும் தந்தை சொன்னதை கேட்டு தன்னை மீறி எதுவும் நடக்கவில்லை என்று எண்ணினாள்.

“சரி இருந்து சாப்பிட்டுட்டு போங்க” கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவாறே கூறினாள் ஸ்வேதா.

மனைவியை ஆச்சரியமாக பார்த்தான் பார்த்திபன்.

“ஓ… சாரிக்கா பசங்கள அம்மா வீட்டுல விட்டுட்டு நேத்து தாஸ் வீட்டுல இருந்ததால, பசங்க எங்கள தேடுவாங்க. நாம குடும்பமா ஒரு நாள் ஒன்னா விருந்தே சாப்பிடலாம்” என்று கண் சிமிட்டினாள் மிது.

அவளின் கண் சிமிட்டலுக்கு அர்த்தம் எதுவும் இல்லை. ஆனால் அதை ஸ்வேதா மாமியாரை வச்சு செய்யலாம் என்று எடுத்துக் கொண்டாலும் மிது மறுக்க மாட்டாள். இப்பொழுது அவளுக்கு தேவை ஸ்வேதா தாஸின் குடும்பத்தோடு ஒன்று சேர வேண்டும். அதுவும் தன்னால்.

பார்த்திபன் மற்றும் சுவேதாவிடம் விடைபெற்ற மிது மற்றும் தாஸ் நடை பயணமாகத்தான் மிதுவின் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

மிதுவின் மனதில் சுவேதா பேசியது அனைத்தும் படம் போல் ஓட “என்னையே போட்டுப் பாத்திருக்கா, யாரு கிட்ட நானே ஸ்கூல்ல ஹிட்லரா நடிச்சவ. காலேஜ்ல சீசரா நடிச்சவ” என்று சிரித்தாள்.   

      

மிது சிரிக்கவும் அவள் புறம் திரும்பிய தாஸ் “அங்க அப்படி என்ன காமடி நடந்தது சிரிக்க? போன காரியம் தான் கைகூடலையே. பார்தீய கல்யாணம் பண்ணது அவன அரசியல் வாரிசா அரவிக்க என்று நாம நினைச்ச, அங்க அவன் அடிமையா இருக்கான். அவன் கதைய கேட்டா என் தலையே சுத்துது” என்றான் தாஸ்.

“ஆமா உன் அண்ணன் என்ன சொன்னான்?”

“பார்தி வீட்டுல ரெண்டாவதா பொறந்தாலும் அவன் தான் வீட்டுக்கு மூத்த பையன் அதனாலயே அவனுக்கு கட்டுப்பாடு அதிகம். எதிர்த்தும் பேச மாட்டான். அதுக்காக அப்பாவியெல்லாம் கிடையாது. சொந்த கால்ல நிக்கணும். முடிஞ்ச அளவு வீட்டை விட்டு கண்காணாத இடத்துக்கு போய் தொலையனும். இந்த அப்பத்தா தொண தொணப்பு தங்களானு அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பான்.

அப்படிப்பட்டவன் வீட்டுல பார்த்த பொண்ணு என்று தான் அண்ணிய கட்டிக்க சம்மதம் சொல்லியிருக்கான். ஆரம்பத்துல நல்லாத்தான் போய் இருக்கு எப்போ பையன் பொறந்தானோ அப்போல இருந்து அண்ணி அவன மதிக்கிறதே இல்லனு புலம்புறான்”

“அப்போ நான் நினைச்சது சரிதான். உங்கண்ணன் அரசியல் வாரிசாக்கணும் என்று எம்.எல்.ஏ நினைக்கவே இல்ல. சொல்லப்போனா எம்.எல்.ஏகு எல்லாமே உன் அண்ணி தான். அவருக்கு அப்பொறம் உன் அண்ணி அந்த இடத்துக்கு வரணும் என்று நினைக்கிறாங்க. அவங்களுக்கு பிறகு அவங்க பையன். அதான் பையன் பொறந்துட்டனே உன் அண்ணன் செல்லா காசு”

அதையே தான் பார்த்தீபனும் தாஸிடம் சொன்னான். “நான் என்ன பண்ணுறேன், எங்க போறேன்னு பார்க்க கூடவே ஒருத்தன வச்சிருக்கா, அது கூட பரவால்ல. நான் என்ன பண்ணனும் என்றும் அவதான் முடிவு பண்ணுறா. பணம், பவர் இருக்கு என்று இவள கட்டிக்கிட்டு என் வாழ்க நாசமா போச்சு.

அந்த வகைல நீ கொடுத்து வச்சவன்டா. ஆசபட்ட பொண்ண காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட, ரெண்டு குடும்பமும் எதிர்த்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறீங்க. என்ன பிரச்சினை வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறீங்களே அது தாண்டா வாழ்க.

நான் வாழுறேனே ஒரு வாழ்க? கோடி கோடியா பணம் இருந்து என்ன பயன்? நான் வடக்கேயும், அவ தெற்கேயும் இருக்கா. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. வாழவும் முடியாம, சாகவும் முடியாம, சே…”

அக்கணம் தாஸுக்கு அவன் மிதுவிடம் சொன்ன அந்த வார்த்தைகள் சட்டென்று ஞாபகத்தில் வந்து தொலைத்தது. தான் காதலித்தவளிடம், அதுவும் மனைவிடம் இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருந்தால் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருந்திருப்பேன் என்று சொன்னது மட்டுமல்லாது, உன்னை திருமணம் செய்ததற்கு பதிலாக ஸ்வேதாவை திருமணம் செய்திருந்தால், கோடியில் புரண்டு இருப்பேன் என்றேனே. ஒருவேளை அந்த சுவேதாவை திருமணம் செய்திருந்தால் என் வாழ்க்கையும் பார்தியின் வாழ்க்கையை போல் தான் இருந்திருக்குமா?

தன்னை தன் அண்ணனுடைய இடத்தில் பொருத்திப் பார்க்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது. அச்சத்தும் மேல் அருவருப்பாக இருந்தது. ஒரு மனிதன் சுயத்தை தொலைத்து மாமனாரிடம் கைகட்டி, வாய்பொத்தி நிற்க வேண்டுமா? சுமரியாதை என்பதே கிடையாதா?  

மிதுவை பார்த்து இருக்கிறத விட்டு பறக்க ஆசைபடாதே என்றேன். ஆனால் உண்மையில் என் மனதில் தான் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது. அதனால் தான் அவ்வாறான வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்திருக்கிறது என்று நொந்து கொண்டான்.

மிது அவன் வாழ்வில் வந்த வசந்தம். அவனுக்கு கிடைத்த சுவர்க்கம். இந்த ஏழு வருட திருமண வாழ்க்கையில் நான் யார் என்பதை நானே மறந்து விட்டேன். அவள் யார் என்பதையும், என்னை எவ்வளவு காதலித்தாள் என்பதையும் மறந்து விட்டாள். தொலைந்து விட்ட அவளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று யோசனையாக நடந்து வந்து கொண்டிருந்த மனைவியின் கையை தன் கையேடு கோர்த்துக் கொண்டான் தாசந்தன்.

Advertisement