Advertisement

அத்தியாயம் 14

மிது நேரம் சென்று எழுவாள். அதை வைத்து அவளை பேசலாமென்று திட்டம் போட்டு வைத்திருந்த மதுமிதாவும், சோலையம்மாளும் எழுந்து வர, அவர்களுக்கு முன்பாக எழுந்த மிது காபி கலந்து தாஸுக்கும், தணிகை வேலனுக்கும் கொடுத்தவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அருந்திக் கொண்டிருந்தாள்.

அதை பார்த்து சோலையம்மாள் கழுத்தை நொடிக்க “அப்பத்தா நீ காபி தண்ணி சக்கர போட்டு குடிக்கிறியா? இல்ல உப்பு…” என்றவள் நாக்கை கடித்து விட்டு “கருப்படியோட குடிப்பியான்னு தெரியல. அதனால உனக்கு காபி போடல” என்றாள்.

“இவ கையாள காபி குடிக்கிற அளவுக்கு நான் சூடு சொரணை கெட்டு போகல. இவ கையால காபி குடிக்கிறதுக்கு பதிலா, காபில உப்பு போட்டே குடிக்கலாம்” முணுமுணுத்தாலும் மிதுவின் பேச்சில் நக்கலும், குத்தலும் கொட்டிக் கிடக்க, அவளை ஏதாவது சொல்ல வேண்டும் என்று சோலையம்மாளின் வாய் நமநமத்தது.

“எனக்கென்ன வியாதியா? சக்கர போட்டே குடிப்பேன். நீ உன் மாமியாரையே கவனிக்கல. என்னய எங்க கவனிப்ப?” மிது மதுமிதாவுக்கு காபி கொடுக்கலவில்லை என்பதை குத்தலாக கூறினாள் சோலை.

மிது இதை எதிர்பார்க்காமளா இருப்பாள்? கைவசம் பதில் வைத்திருந்தவள் “ஐயோ அப்பத்தா… அவங்க நேத்து ப்ரெஷர் கூடி மயக்கம் போட்டு விழுந்தது மறந்து போச்சா? அவங்க டீ, காபி எல்லாம் வாயில வைக்கக் கூடாது, உப்பு சுத்தமா சேர்க்க கூடாது. அவங்களுக்கு நான் உப்பில்லாத கஞ்சி வச்சிருக்கேன். அத கொடுங்க” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பதறினாள்.

“ஆமா அப்பத்தா… அம்மாக்கு டாக்டர் மாத்திரை கொடுத்திருக்குறாருல்ல. கண்டதெல்லாம் சாப்பிடக் கூடாது. அம்மாவை வேல வாங்க கூடாதுன்னு என் பொண்டாட்டி காலைலயே அம்மாக்கு கஞ்சி காச்சி வச்சிட்டா” மிதுவின் குசும்பு தாஸுக்கு புரியவில்லை. அன்னை நடிப்பது தங்களுக்கு தெரிந்தது போல் கட்டிக்க கொள்ள வேண்டாமென்று கூறியதோடு, தன்னுடைய வீட்டாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். ஒழுங்காக நடந்து கொள். வாயை விடாதே என்று நேற்றிரவு மனைவிக்கு புத்திமதி கூறியிருந்தான். மனைவி அதை புரிந்து கொண்டு உடல்நலமற்று இருக்கும் அன்னையை உபசரிக்கிறாள் என்று அவளை மெச்சினான். தன்னை மீறி அவள் எதையும் செய்து விட மாட்டாள் என்று அவனுக்கு அவள் மீது நம்பிக்கை. ஆனால் அவளோ இவர்களோடு கொஞ்சமேனும் விளையாட வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

“இவனொருத்தன் அம்மா நடிக்கிறது தெரியல. பொண்டாட்டி நடிக்கிறதும் தெரியல. இவன இவ காலடில தான் வச்சிப்பா. உஷாரா இருந்தா தானே தலைல தூக்கி வச்சிக்க முடியும். எனக்கு பேரனா பொறந்தவனுங்க எல்லாமே தத்திங்க, பொண்டாட்டிதாசனுங்க. இவ இவன ஆட்டிப்படைக்கிறது தப்பே இல்ல” முணுமுணுத்தாள் சோலை.

“அம்மா… காபி, டீ என்று எதையும் குடிச்சிடாத. உன் மருமக உனக்காக கஞ்சி வச்சிருக்கா” இன்முகமாக சொன்னான் தாஸ்.

முகத்தை சுளிக்க பெரும் பாடுபட்டவள், அவனிடம் முகத்தை திருப்பவும் முடியாமல் திண்டாடினாள்.

மதுமிதா மிதுவின் கையால் பச்சை தண்ணீர் கூட அருந்துவாளா? கஞ்சியை வாயில் கூட வைக்க மாட்டாள். உடம்புக்கு ஒன்றென்றால் தானே கஞ்சியை பற்றி யோசிப்பாள். காலை உணவையும் இந்த மிது செய்து வைத்தால் அதை எவ்வாறு சாப்பிடுவது “சமைத்ததெல்லாம் கொட்ட வேண்டியது தான்” என்ற முணுமுணுப்போடு காலை உணவுக்கு மற்றவர்களுக்காக என்ன சமைத்தாய் என்று மிதுவிடம் கேட்டாள். முகம் கடுகடுவென்று இருந்தாலும், மகனுக்காக அதையும் மறைத்துக் கொண்டு குரலிலும் தன்மையை கொண்டு வந்திருந்தாள்.

மதுமிதா என்ன அர்த்தத்தில் கேட்கிறாளென்று மிதுவுக்கு புரியவில்லை. அவளை பழிவாங்க வீட்டு வேலைகள் அனைத்தையும் தலையில் கட்டி விடுவார்கள் என்று தான் எண்ணியிருந்தாள். தன் கையால் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள் என்று அறிந்திருந்தால் விழுந்து விழுந்து உபசரித்திருக்க மாட்டாளா? இது தெரியாமல் மிது சமயற்கட்டு பக்கம் தலை வைத்தும் படுக்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்தாள்.  

தான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா? வந்த உடன் சமையற்கட்டை பொறுப்பேற்க? கடுப்போடு மாமியாரை முறைத்தவள் “யார் யாருக்கு என்னென்ன சமைக்கிறது என்று தாஸ் கிட்ட கேட்டேன். இந்த ஏழு வருஷத்துல எல்லாமே மாறி போயிருக்கும். எனக்கும் எதுவும் தெரியாது. அகல்யா பார்த்துப்பா. நாளைக்கு கல்யாணமாகி இன்னொரு வீட்டுக்கு போற பொண்ணு இல்லையா. கத்துக்கவும் சேர்த்து செய்யட்டும் என்றான்” என்று தாஸை கோர்த்து விட்டாள்.

“அடிப்பாவி…” என்று மனைவியை பார்த்தவன் அவள் கூற்றை மறுக்க முடியுமா? மறுத்தால் அவள் மீது வீட்டாருக்கு கோபம் அதிகரிக்காதா? அவள் கூற்றை ஏற்றுக்கொண்ட விதமாக “ஆமாம். அது மட்டுமல்ல நானும் மிதுவும் வெளில போகணும்” என்றான்.

எங்கே செல்கிறோம் என்று சொல்ல அவன் விரும்பவில்லை. அண்ணனை பார்க்க செல்ல தடுக்க மாட்டார்கள் மிதுவை அழைத்து செல்ல வேண்டாம் என்பார்கள். அவளை அழைத்து சென்றால் தானே தான் நினைக்கும் காரியம் நடக்கும்.

தன்னை வேலை சொல்ல இவள் யார் என்று கோபமாக அங்கே வந்த அகல்யா, அண்ணன் சொன்னான் என்றதும் முகம் சுருங்கினாள். 

“காலங்காத்தால எங்க போறீங்க?” மிது தாஸை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புகிறாளோ என்று தான் கேட்டாள் மதுமிதா.

மிது வீட்டுக்கு செல்வதில் அவளுக்கென்ன பிரச்சனை. சொல்லப்போனால் சந்தோஷமாக வழியனுப்பி வைப்பாள். ஆனால் அவள் மகனை அவளோடு செல்ல விடாமல் என்ன சொல்லி தடுப்பது என்பதுதான் மதுமிதாவின் இப்போதைய கவலை.

“ஊருக்கு வரும் போதே எல்லாருக்கும் தீபாவளிக்கு துணி வாங்கிட்டு வரலாமென்று நான் சொன்னேன். அத்தனை பேருக்கும் வாங்கலாம். ஆனா ட்ரைன்ல கொண்டு வர்றது தான் கஷ்டம். நாம உருளையே வாங்கிக்கலாம் என்று தாஸ் சொன்னான். குழந்தைகளோட சாமான்களோட துணிப்பைகளை பத்திரமா கொண்டு வர்றதும் கஷ்டம் என்று நானும் சரியென்று சொல்லிட்டேன். அதான் இன்னைக்கு போய் எல்லாருக்கும் துணி வாங்கிட்டு வரலாமென்று….” மிது கூறி முடிக்கவில்லை வெளியே செல்ல காரணம் வேண்டும் அல்லவா தாஸும் ஒத்தூதினான்.

“எங்க ஊருல வாங்குறதுக்கு துணியே வாங்காம இருக்கலாம்” என்றாள் அகல்யா.

சென்னையில் வாங்கினால் புது டிசைனில், கலர், கலராக வாங்கலாம் மிது வேண்டுமென்றே மறுத்திருப்பாள் என்பது போல் அவளை முறைக்க வேறு செய்தாள்.

“எனக்கு வாங்கும் போது உனக்கு ஒரு சுடிதார் வாங்கினேன். அது வீட்டுல இருக்கு. வரும் போது எடுத்துட்டு வரேன். எங்க உன் அண்ணன் வாங்க விட்டா தானே. ஒன்னு தான் வாங்கினேன். அமிர்தாக்கு கூட வாங்கல” தான் சொந்த அக்காவை கூட நினைக்காமல் உனக்காக வாங்கினேன் என்பதாகத்தான் பறைசாற்றினாள்.

உண்மையில் தீபாவளிக்கு யாருக்கும் துணி வாங்கவும் இல்லை. வாங்க எண்ணவும் இல்லை. ஊருக்கு வந்தால் இவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்களோ, சண்டை போடுவார்களோ என்ற சிந்தனையில் இருந்தவர்கள் துணி வாங்க நினைப்பார்களா? தனக்காக வாங்கிய துணியை தான் அகல்யாவுக்கு கொடுக்கலாம் என்று சட்டென்று முடிவு செய்தவள் இவ்வாறு பேசியிருந்தாள்

இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் மூன்று பெண்களில் ஒருத்தியாவது தன் பக்கம் இருக்க வேண்டும் சோலையம்மாளையும், மதுமிதாவையும் அவ்வளவு எளிதில் தன் பக்கம் சாய்க்க முடியாது என்று மிதுவுக்கும் நன்கு தெரியும். அதனால் அவளது ஒரே குறி அகல்யா தான். அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதும் தாஸுக்குத் தெரியும். நேற்றிரவு தூங்கும் பொழுது அதை பற்றி பேசியவள், காலையில் அதற்கேற்றது போல் பேசினாள்.

“மிது தனக்காக யோசித்தாளா?” அகல்யா அவளை ஆச்சரியமாக பார்க்க, 

“ஆமா… நான் உனக்கு எடுத்து அனுப்புற எல்லாம் இவ செலெக்ட் பண்ணுறது தான்” மிதுவின் மேல் நல்லெண்ணம் வர வேண்டும் என்று தாஸ் வேறு தன் பங்குக்கு பேசினான்.

“அப்படியா.. இதுவரைக்கும் நீ சொன்னதே இல்ல. அண்ணி உங்க செலக்சன் எல்லாம் சூப்பர்” என்றாள் அகல்யா.

வாங்கிக் கொடுத்த நானே மறந்துட்டேன் அகல். இவனும் சொல்ல மறந்திருப்பான். உனக்கு பிடிக்கவில்லையோ, என்னவோ அதனால இவன் சொல்லாம இருந்திருப்பானோ என்று நானும் கேட்காமல் இருந்துட்டேன்” சமாளித்தாள் மிது.

தாஸும் புன்னகைத்து சமாளித்தானே தவிர பதில் எதுவும் பேசவில்லை

“என் கூட ஷாப்பிங் பண்ணத்தான் உனக்கு நேரமில்ல. உன் தங்கச்சிக்கு என்றா நேரமும், பணமும் கொட்டுது இல்லையா?” நக்கலாக மிது தாஸை பார்த்தாள்.

“இவள என் குடும்பத்தோட சேர்த்து வைக்கலாமென்று நான் பேசினா, இவ என்ன போட்டுத் தாக்குறதிலேயே குறியா இருக்கா. சரியென்றா இவ தான் பொறுப்பான அண்ணியா, நாத்தனாருக்கு துணி எடுத்து கொடுத்திருக்கணும். அதையும் செய்ய மாட்டா. நான் சொன்னா அதுக்கும் குத்தம் சொல்லுவா” மனைவியை முறைக்க முடியாமல் புன்னகைத்தான் தாஸ்.

“நான் வாங்கி அனுப்பினதால, இன்னைக்கு பேரும், புகழும் உனக்கு தானே எனக்கா? அனுபவி ஹாப் பாயில்”

“என் மூள முட்டை சைஸ்ல இருக்குன்னு சொல்றியா? இல்ல என் அறிவு முட்டனு சொல்றியா?” அதுக்கும் மிது தாஸை முறைக்க,

“ஏண்டி அஞ்சு நிமிஷம் சண்டை போடாம உன்னால இருக்க முடியாதா? சிரிச்சுக்கிட்டே சண்டை போட உன்னால மட்டும்தான் முடியும். கடுப்படிக்காத. அப்புறம் நான் பாட்டுக்கு கிளம்பி வெளியே போயிடுவேன். நீதான் இவங்க கூட மல்லுகட்டனும்” என்று மிரட்டினான்.

“கோர்த்து விட பாக்குறியா தாஸ்? விட்டுட்டு போனா நான் உன்ன கோர்த்து விடுவேன். பாக்குறியா? பாக்குறியா?” மிதுவும் பதிலுக்கு மிரட்டினாள்.

“என்ன குசு குசுன்னு பேசுறீங்க?” சோலையம்மாள் மிதுவை அதட்டியவாறே முறைத்தாள்.

“எல்லாருக்கும் என்னென்ன வாங்கலாம் என்று கேட்க சொன்னா, இவன் வேணாம் நாமலே வாங்கிட்டு வரலாம் என்று சொல்லுகிறான் அப்பத்தா. வாங்கிட்டு வந்து உங்களுக்கு பிடிக்கலைன்னா அப்புறம் என்ன பண்றது? அதான் முன்கூட்டியே கேட்கலாம் என்று நான் சொன்னேன்” தாஸை அழகாக கோர்த்து விட்டாள்.

“அடிப்பாவி… சொன்னது போலையே கோர்த்து விட்டியே” தாஸ் வாய் பிளந்து நிற்க,

“ஏழு வருஷமா நமக்கு ஒண்ணுமே வாங்கி கொடுக்காதவன் செலவாகும் என்று யோசிக்கிறானா?” என்று மதுமிதா சொல்ல, அண்ணனை முறைத்த அகல்யா யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்பதை எழுதலானாள்.

“இப்படி எழுதிக்கிட்டு இருக்கறதுக்கு பதிலா நாமளே போய் வாங்கலாமே” என்றாள் மதுமிதா. எங்கே மிது தாஸை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு சென்று விடுவாளோ என்று அச்சம் அவளுக்கு.

“நானும் அப்படித்தான் நினைத்தேன் அத்தை. ஆனால் உங்களுக்கு தான் உடம்பு முடியாதே. அப்பத்தா வேற வயசானவங்க அவங்களால நடந்து நடந்து கடை கடையா ஏறி இறங்க முடியுமா?” பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள் மிது.

தான் இயற்றிய நாடகம் தனக்கே எதிராக நிற்பதை பார்த்த மதுமிதா என்ன செய்வது என்று யோசித்து “அப்போ அகல்யாவ கூட்டிட்டு போங்க” என்றாள்.

“ஆமா இல்ல அகல்யாவ கூட்டிட்டு போலாமே” என்ற மிது “ஐயோ அகல்யாவை கூட்டிட்டு போனா மதியத்துக்கு யாரு சமைப்பாங்க? உங்களால முடியாதே. பாவம் நீங்க. உடம்பு முடியாம இருக்கீங்க” என்றவள் தாஸின் புறம் குனிந்து “பேசுடா…. அமைதியா இருக்க” என்று மிரட்டினாள்.

“ஆமா… ஹோட்டல்ல வாங்கிட்டு வந்திருக்கலாம். அம்மாவுக்கு வேற உடம்பு முடியல. வெளியில எல்லாம் சாப்பிடக்கூடாது. அகல்யா நீ அம்மாவ வேலை வாங்காம நீயே சமைச்சு வை. இல்லன்னா உன்ன கூட்டிட்டு போய் இருக்கலாம்” என்றான் தாஸ்.

அம்மாவுக்கு உடம்பு முடியாமல் இருப்பதாக எண்ணி தான் அண்ணனும் அண்ணியும் பேசுகிறார்கள் என்று புரிய அகல்யாவும் “நீங்க ரெண்டு பேரும் மட்டும் போயிட்டு வாங்க அண்ணி நான் பார்த்துகிறேன்” என்றாள்

அகல்யா தன்னை அண்ணி என்று அழைத்ததிலையே அவளால் இனி எந்த பிரச்சினையும் வராது. அவள் தன் பக்கம் நிற்பாள் என்று புரிய “கடைசி விக்கெட் அவுட்” என்று மிது தாஸுக்கு சைகை செய்ய, வேண்டா வெறுப்பாக சோலையம்மாளும், மதுமிதாவும் தங்களுக்கு வேண்டியதை கூறிக் கொண்டிருந்தனர்.

அண்ணனை பார்க்க வெறுங் கையோடு செல்ல முடியுமா? தீபாவளி வேறு வருது. முதல் முறையாக அவன் வீட்டுக்கு செல்வதால், அண்ணன் குடும்பத்துக்கு துணிமணிகளும், ஸ்வீட், காரம் என்று எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றனர் தாஸ் தம்பதியினர்.

பெரிய முற்றத்தோடு கூடிய இரண்டடுக்கு மாடி வீடு தான் எம்.எல்.ஏயின் வீடு. ஆறு நாய்கள் வேறு வாசலில் கட்டிப்போட்டிருக்க, மிதுவையும் தாஸையும் பார்த்து குறைத்துக் கொண்டே இருந்தன.

“நல்லவேள நீங்க வரத போன் பண்ணி சொன்னீங்க. இல்லன்னா வாட்ச்மேன் உள்ள விட்டிருக்க மாட்டான். நாய வேற ஏவி விட்டிருப்பான்” என்ற எம்.எல்.ஏ “கத்தாதே” என்று நாய்களை சத்தம் போட்டுவிட்டு இவர்களை உள்ளே அழைத்து சென்றார்.

சொந்த அண்ணனை பார்க்க வர அவனுக்கு அலைபேசி அழைப்பு தொடுத்து வருவதாக கூறியது பத்தாது என்று இந்த எம்.எல்.ஏ இடமும் அனுமதி வாங்க வேண்டுமா? என்று மிது தாஸை முறைக்கத்தான் செய்தாள்.

“அந்த ஆளுக்கு ஆண் வாரிசு இல்ல. ஊரிலேயே படிச்ச பையனா, அதுவும் அவரோட ஜாதில யார் இருக்கா என்று பார்த்திருப்பார், என் அண்ணன் வந்து சிக்கிட்டான். அவன அரசியல் வாரிசா ஆக்கணும் என்கிறது தான் அவர் கனவு. இது புரியாம அண்ணி தான் காரணம் என்று எங்க வீட்டுல நினைக்கிறாங்க” என்றான் தாஸ்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” மிது அவனை சந்தேகமாக பார்த்தாள்.

“பின்ன… மாப்பிள்ளை மட்டுமாம்னா, நம்ம வாறத அண்ணிகிட்ட மட்டும்தான் சொல்லணும். என் அண்ணன் வருங்கால அரசியல்வாதி என்கிறதால தானே மாமனார் வரைக்கும் சொல்ல வேண்டியிருக்கு”

“நீயா நினைக்கிற. கற்பனை பண்ணாதே” என்று மிது முறைத்தாலும், தாஸின் அண்ணன் பார்த்திபனோ அண்ணியோ அவர்களே வரவேற்காமல் எம்.எல்.ஏ இவர்களை வரவேற்கவும் தாஸ் சொன்னது உண்மை என்பது போல் தான் மிதுவுக்கு தோன்றியது

இவர்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்து வருமாறு பணியாளரை பணித்த எம்.எல்.ஏ “அப்புறம் தம்பி. என்ன வேலை பாக்குறீங்க? அம்மா நீயும் வேலை பாக்குறியா? தம்பிக்கு சொந்தக்கார பொண்ணு தானே” என்று விசாரிக்கலானார்.

“ஏழு வருஷமா நாம ஊர்ல இல்ல. அதனால உங்க குடும்பத்தை பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியல. அக்கா, மாமா கல்யாணத்துக்கும் நாங்க வரல. அப்படியே அவர்களையும் பார்த்துட்டு, தீபாவளிக்கு பசங்களுக்கு துணி வாங்கினோம். அதையும் கொடுத்துட்டு போகலாம் என்று வந்தோம்” என்றாள் மிது.

மிதுவும் தாஸும் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல காதல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்றது எம்.எல்.ஏக்கு பார்த்திபனை தனது ஒரே மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது தெரிந்த விஷயம் தான். ஏழு வருடம் கழித்து இவர்கள் எதற்காக ஊருக்கு வந்தார்கள்? வந்தவர்கள் திடீரென்று எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அதை சற்றென்று கேட்டு விட முடியாதே. அதனால் சுற்றி வளைத்து கேட்க முயற்சி செய்ய, மிது அதை சரியாக புரிந்து கொண்டு போட்டு உடைத்தாள்.

பொதுவாக ஒரு அரசியல்வாதியை யாராவது காண வந்தால், அது அவர்கள் உதவி கோரி வந்ததாகத்தான் அர்த்தம். இவர்களும் பார்த்திபனை சந்தித்து அவன் மூலம் தன்னிடம் உதவி கோர முற்படுகிறார்களோ என்று எம்.எல்.ஏவுக்கு சந்தேகம் முளைத்திருக்க, அவரே இவர்களை சந்தித்து பேச்சு கொடுத்தார். ஆனால் இவர்கள் பார்த்திபனையும் அவன் குடும்பத்தையும் பார்க்கத்தான் வந்தோம் என்பதில் புன்னகைத்த எம்.எல்.ஏ

“ஸ்வேதா… பசங்கள ஸ்விம்மிங் கிளாசுக்கு கூட்டிட்டு போனா, இப்ப வந்துடுவா. மாப்புள கட்சி விஷயமா வெளியே போய் இருக்காரு. இப்ப வந்துடுவாரு” பணியால் கொண்டு வந்த குளிர்பானத்தை எடுத்துக் கொள்ளும்படி பணித்தாவாறே கூறினார்.

அதை பெற்றுக்கொண்ட மிது “என்னடா உன் அண்ணி பேரு சுவேதாவாம். பணக்கார பொண்ணுங்க என்றாலே  பேரு ஸ்வேதா தானா?” என்று தாஸை பார்த்து சிரித்தாள்.

எம்.எல்.ஏ கூறும் பொழுது கவனிக்காத தாஸ் மிது கூறியதும் அவளை முறைக்க முடியாமல் முழித்தான்.

வாயிலில் வந்து நின்ற வண்டி வெகு நேரமாக ஹான் அடிக்கவும் “வாட்ச்மேன் எங்க போனான்? சுப்பையா யார் வந்திருக்காங்கன்னு பாரு” எம்.எல்.ஏயின் குரலுக்கு பணியாள் சுப்பையா வாயிலை நோக்கி ஓடி இருந்தார்.

உள்ளே வந்த வண்டியில் இருந்து இறங்கிய தாஸின் அண்ணி ஸ்வேதா  குழந்தைகளை உள்ளே அனுப்பிவிட்டு சுப்பையாவிடம் வாட்ச்மேன் எங்கே என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.

“தெரியல சின்னம்மா…” என்றவரின் கன்னம் அவள் அடித்த அடியில் எறிந்தது.

“இந்த வீட்டில நீ எடுபிடி. வாட்ச்மேன் கேட்ல இல்லனா நீ தான் அந்த வேலையை பார்க்கணும் என்று உனக்குத் தெரியாதா?” என்று சுப்பையாவை திட்டிக் கொண்டிருக்கும் பொழுதே தொப்பியை சரி செய்தவாறு வாட்ச்மேன் ஓடி வந்தார்.

இயற்கை உபாதை அழைத்ததால் பாவம் அவர் கழிவறைக்கு சென்று விட்டார். அந்த நேரம் ஸ்வேதா வந்துவிட்டாள்.

“மன்னிச்சுக்கோங்க சின்னம்மா…” என்று அவர் காரணம் சொல்ல முற்படும் பொழுதே அவர் கன்னமும் எறிந்தது.

உள்ளே வந்த குழந்தைகளை எம்.எல்.ஏ தாத்தாவை கொஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே இத்தனையும் அரங்கேறிக் கொண்டிருக்க மிதுவும் தாஸும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எம்.எல்.ஏ மகளின் நடத்தையை கண்டிக்காமல், கண்டு கொள்ளாமல் பேரக்குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுதே, ஸ்வேதா வேலையாட்களை அதிகாரம் செய்வதும், கைநீட்டுவதும் இன்று, நேற்று நடக்கும் கூத்தல்ல, வளமையாக இந்த வீட்டில் நடக்கும் சாதாரண நிகழ்வு என்பது தாஸுக்கு மிகவும் தெளிவாக புரிந்தது.

பெண்களை புகழ்ந்தால். அதுவும் அழகி என்று புகழ்ந்தால் மனம் கனிவார்கள். ஸ்வேதாவை அக்கா, அழகி என்று பேசி தன் பக்கம் சாய்த்து கொள்வேன் என்று மிது தாஸுக்கு சவால் விட்டு வந்திருக்க, அவளோ பணத்திமிரின் மொத்த உருவமாக காட்சியளித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் அன்பாக பேசினாளோ, புகழ்ந்தாளோ, மிது நடிப்பதாக இகழ்ச்சியாக பார்த்து அவமரியாதையும் செய்து விடுவாள் என்று தாஸ் மற்றும் மிதுவுக்கு உடனே புரிந்தது.

தாஸ் மற்றும் மிது வெளியே நடக்கும் அக்கப்போரைக் கண்டு கொள்ளாது தங்களை ஆர்வமாக பார்க்கும் குழந்தைகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வாங்கி வந்த பொருட்களை கொடுக்கலாயினர்.

தாஸும் மிதுவும் திருமணம் செய்து கொண்ட பின் தான் பார்த்திபனுக்கு திருமணம் நிகழ்ந்தது. ஆனால் இவர்கள் குழந்தைகளை தாமதமாக பெற்றிருக்க, பார்த்தீபன் மற்றும் ஸ்வேதா திருமணமாகி முதல் இரண்டு வருடங்களுக்குள்ளேயே இரண்டு குழந்தைகளை பெற்றிருந்தனர். முதல் குழந்தை பெண் குழந்தை. அடுத்த பிறந்தது ஆண் குழந்தை.

துணி மட்டுமல்லாது குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களும் வாங்கி வந்ததில் சித்தப்பாவையும் சித்தியையும் குழந்தைகளுக்கு பிடித்த தான் செய்தது. ஆசையாக பொருட்களோடு விளையாட ஆரம்பித்தனர் குழந்தைகள்.

மகளின் சத்தம் அடங்காமல் இருக்கவே எம்.எல்.ஏ வெளியே சென்று சுவேதாவை அமைதிப்படுத்தி உள்ளே அழைத்து வந்தார்.

உள்ளே வந்தவளோ இவர்களைப் பார்த்து “எதுக்காக வந்தீங்க?” என்று அலட்சியமாக கேட்டாள்.

Advertisement