Advertisement

அத்தியாயம் 13

“தூங்காம எங்க போற?”

“எச்சி கையோடவா தூங்க முடியும்? நீ தூங்கு நான் தட்ட கழுவிட்டு, கையையும் கழுவிட்டு வரேன்” என்றான் தாஸ். அவனுக்கு அவன் குடும்பத்தாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன. அதை மிதுவிடம் கூறினால் அவள் புரிந்து கொள்வாள். தன் குடும்பத்திடம் பேச செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்லவா வேண்டும்? சொல்லாமல் சென்றால் கூட அதை அவள் ஏற்றுக் கொள்வாள் என்பதினால் தாஸ் இவ்வாறு கூறினான்.

“இது உன் ரூம்தானே காலையிலேயே பிரஷ் பண்ணனும். குளிக்கணும் ஏற்பாடு பண்ணிடு” என்றவள் தலையணையை திருப்பிப்போட்டு தூங்க முயன்றாள்.

“சிங்கத்தோட குகைக்குள்ள இருக்கோம் என்று கொஞ்சம் கூட பயம் இல்ல” சிரித்தவாறு வெளியேறினான் தாஸ்.

உன்னுடைய அப்பத்தா எப்படி எல்லாம் பேசினாள் பார் என்று மிது தாஸிடம் சண்டை போடவில்லை தாஸும் அவளிடம் அதைப் பற்றி கேட்கவில்லை.

ஊருக்கு வந்தால் எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும். எந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று இருவரும் அறிந்து தான் இருந்தனர்.

ஏழு வருட திருமண வாழ்க்கையில் மிது தாஸையோ, தாஸ் மிதுவையோ சந்தேகப்பட்டது கிடையாது.

சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்ததே தவிர அது தீர்க்க முடியாத பிரச்சினைகளும் கிடையாது.

கோபத்தில் தாஸ் விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பொழுதிலும் மிது இல்லாத வாழ்க்கை தனக்கு சூனியம் என்று அவன் உணர்ந்துதான் இருந்தான். தாஸ் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க அஞ்சியே மிது விவாகரத்தை பற்றி யோசிக்காமல் இருந்தாள்.

தவறு, பிழை, குற்றம், துரோகம்.

தவறை திருத்தி கொள்ளலாம். 

பிழையை சரி செய்து கொள்ளலாம்.

குற்றத்துக்கு தண்டனை கொடுக்கலாம் அல்லது மன்னித்து விடலாம்.

ஆனால் துரோகம். அதை மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது.

சோலை மிது மீது வைத்த குற்றச்சாட்டு மிது தாஸுக்கு துரோகம் இழைத்தாள் என்பதே.

மிது மற்றும் தாஸின் வாழ்க்கையில் சிறுசிறு தவறுகளும், பிழைகளும் தான் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

தாஸ் செய்வது எல்லாம் மிதுவுக்கு பிழையாக தெரியவில்லை. தவறாகவும் தெரியவில்லை. எல்லாம் அவ்வாறாக தெரிந்தால்? அவன் குற்றம் செய்பவனாகவும், குற்றவாளியாகவும் அவள் கண்ணில் தென்பட்டு அவள் அவனுக்கு துரோகம் செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவாள்.

அவன் செய்யும் தவறுகளும், பிழைகளும் பேசி தீர்த்துக் கொள்ளக் கூடியவைகள். மிது கோபப்படாமல் பேசினாலே போதும். ஆனால் அவள் இருக்கும் மனநிலையில் பேசாமல் இருக்கின்றாள். அது அவள் செய்யும் தவறல்லவா?

தாஸ் செய்யும் தவறுகளையும், பிழைகளையும் பார்த்து மிது கோபம் கொண்டாலேயானால், தாஸ் மிது செய்யும் தவறுகளை பார்த்து ரசிக்கின்றான். சிரிக்கின்றான். அது அவன் அவள் மீது வைத்திருக்கும் காதலால் தானே.   

அது அவளை வெறுப்பேற்றுவது போல் இருக்க அவள் மேலும் கோபமடைகிறாள். அவள் எல்லை கடக்கும் பொழுது இவன் கோபம் அடைகிறான். அதனால் வாக்குவாதம் முற்றுகிறது.

என்னதான் பேச்சு நீண்டாலும் இதுவரையில் தாஸ் மிதுவை கைநீட்டி அடித்ததில்லை. மிது அடிக்க விட்டதும் இல்லை.

தங்களுக்கு ஒரு இடைவெளி தேவை. அது விவாகரத்தா என்று யோசித்த தாஸ். நிச்சயமாக அது விவாகரத்து இல்லை என்ற முடிவுக்கு வந்த பின், பேசாமல் தனது கம்பெனி வழங்கும் வெளிநாட்டு வேலைக்கு சென்று விடலாமா? என்று கூட யோசித்தான்.

இரண்டு வருடங்கள் மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்து இருக்க முடியுமா? என்று யோசித்தவனுக்கு இந்த பிரிவு மிது தன்னை உணரவும், புரிந்து கொள்ளவும் உதவும் என்றெண்ணினான்.

தான் இல்லை என்றால் மிது குழந்தைகளோடு தனியாக கஷ்டப்படுவாளே என்று எண்ணியவனுக்கு தான் என்ன பெரிய உதவியை அவளுக்கு செய்கிறோம் என்பது புரிந்தது. நான் இல்லாமல் கூட அவள் சமாளிப்பாள் என்று புரிய வெளிநாட்டுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தவன் கோப்பில் கையொப்பம் போடும் நேரம் தான் மிதுவிடமிருந்து சைத்ரன் காணாமல் போனதாக அலைபேசி அழைப்பு வந்திருந்தது.

வேலை செய்யும் இடத்தில் கூட அவளுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. நான் இல்லாத பொழுது இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் தவித்துப் போவாள் என்று நினைத்தவன் வெளிநாட்டுக்கு போகும் எண்ணத்தை கைவிட்டான்.

ஏன் வேலை பார்க்கும் இடத்தில் யாரும் அவளோடு ஒட்டி உறவாடுவதில்லை என்று யோசித்தவனுக்கு கிடைத்த பதில் கவலையானது தான். குடும்ப விழாக்களுக்கு அவர்கள் அழைப்பார்கள் தான், ஆனால் இவளால் தான் எந்த விழாவுக்கும் போக முடிவதில்லை. தங்களுடைய குழந்தைகளை பராமரிக்கவே தங்களுக்கு நேரம் பத்தாமல் இருக்க, வருவோரை கவனிக்க முடியாது என்பதனால் எந்த விழாவையும் வீட்டில் கொண்டாடுவதும் இல்லை. அதனால் அவளுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை.

மனம் விட்டு பேசக்கூட யாரும் இல்லாதவளை போய் அப்பத்தா பேசிய பேச்சு அதிகபட்சம் என்று கருதியவன் அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று தான் குடும்பத்தாரை அழைத்தான்.

“என்ன உன் பொண்டாட்டி மூச்சு நின்னு போச்சா எதுக்கு இப்போ எல்லாரையும் கூப்பிட்ட?” என்றவாறு வந்தமர்ந்தாள் சோலையாம்மாள்.

“அகல்யா எங்க?”

“அவ தூங்குறா” என்றாள் மதுமிதா.

“என்னப்பா விஷயம்? உன் பொண்டாட்டிக்கு ஒன்றும் இல்லையே” மயங்கி விழுந்த மிதுவுக்கு ஏதாச்சும் ஆயிருச்சோ என்று தணிகை வேலன் தான் கவலையாக கேட்டான்.

“முதல்ல எல்லாரும் உட்காருங்க” என்ற தாஸ் சோலையம்மாளை பார்த்து “என் பொண்டாட்டிய பார்த்து என்ன வார்த்தை கேட்டீங்க? உங்களுக்கு அவளைப் பத்தி என்ன தெரியும்?”

“என்னடா குறுக்கு விசாரணை பண்ணுறியா?” மதுமிதா தான் எரிந்து விழுந்தாள்.

“உனக்கு உடம்பு முடியல தானே. இப்படி கத்திப் பேசாதே. திரும்ப பிரஷர் கூடி மயங்கி விழுந்திடுவ. கொஞ்சம் அமைதியா உட்காரு” அன்னையை அதட்டியவன் “உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு தெளிவா சொல்லுறேன். என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்த பிரிக்கலாம் என்று நினைச்சீங்க, என்ன மறந்திடுங்க. என்ன புரிஞ்சதா?”

“டேய் அறிவு கெட்டவனே. உன் பொண்டாட்டி ஒரு நடத்தக் கெட்டவ. அவளை தூக்கி தல்ல வச்சி கொஞ்சிக்கிட்டு இருக்கிய” சோலையம்மாள் ஆரம்பிக்கவும்

“அவள தப்பா பேச அப்படி என்னத்த பாத்தீங்க நீங்க? அவ கூட ஏழு வருஷம் வாழ்ந்திருக்கேன். அதுக்கு முன்ன ரெண்டு வருஷம் அவளைத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்”

“ஆ… நீ நினைச்சுகிட்டு இருந்திருப்ப, அந்த சிறுக்கி மாவ வேறெவனையோ நினைச்சுக்கிட்டு இருந்திருக்கா?”

“யாரு? அதையும் தான் சொல்லுங்களேன்” தாஸ் கோபம் எல்லாம் படவில்லை. இன்றே பேசி இந்த பேச்சுக்கொரு முடிவை கொண்டு வரவில்லை என்றால், விடிந்த பின்னும் இந்த பேச்சு தொடரும். அதுவும் நாளை பின்ன பிறர் முன்னிலையும் பேசி விடுவார்கள். இவர்களின் வாயை மூடாவிட்டால் ஊரார் வாயை மூட முடியாமல் போய்விடும் என்று தான் நள்ளிரவு பன்னிரண்டு மணி என்றும் பாராமல் பேசிக் கொண்டிருந்தான் தாஸ்.

“வேற யாரு? எங்க வீட்டு முன்னால வந்து கத்திட்டு போனாளே ஒரு மகராசி. அவ பெத்த பையன் தான். அந்த போலீஸ்காரன்” என்றாள் மதுமிதா.

“நீ பாத்தியா? உண்மை என்ன என்று தெரியாம வாய்க்கு வந்தபடி பேச வேண்டியது. அம்மானு பாக்குறேன். இல்ல வாய்க்கு வந்தத சொல்லி திட்டுவேன் பார்த்துக்க” என்று தாஸ் கூறியதில் மதுமிதா கொஞ்சம் மிரண்டுதான் போனாள்.

“டேய் தாஸ் அம்மாவ மரியாதை இல்லாம பேசாதே” என்றான் தணிகை வேலன்.

“இப்போ புரியுதா? நாம யார் கிட்ட எப்படி பேசணும், என்ன பேசணும் எங்குறதுல இருக்கு மதிப்பும், மரியாதையும். அவ உங்க மருமக, அவள ஒழுங்கா நடத்தினா தானே அவ உங்கள மதிப்பா, மரியாதை கொடுப்பா.

வீட்டுல மாப்புள பார்த்துட்டாங்க, பரிசம் போட வரங்களாம் என்று மிது போன் பண்ணி சொன்னதால தான், நான் அவள கூட்டிட்டு போய் கல்யாணமே பண்ணேன். அந்த போலீஸ்காரன் தான் மாப்பிளை என்றே அவளுக்கு தெரியாது. இதுல நீங்களே கண், காது மூக்கு வச்சி பேசுறீங்க.

அவ யாரு உங்க அண்ணன் பொண்ணு தானே. அண்ணன் மேல கோவம் என்று பொண்ண கண்டபடி பேசுவீங்களா? அதுவும் சொந்த மருமகள? அகல்யாவ பத்தி யாராவது இப்படி தப்பா பேசினா பொறுமையா இருப்பீங்களா? அகல்யா இடத்துல மிதுவ வச்சி யோசீங்க. அப்போ தான் பேச தோணாது. பேசுற நாக்கையும் அறுக்கத்த தோணும்” மதுமிதாவை பார்த்து பேசியவன் முடிக்கும் பொழுது சோலையம்மாவை பார்த்தான்.

“நான் பேசினா என் நாக்க அறுக்க சொல்லி அவன் அம்மாவ சொல்லுறான். அவ பேசினா அவ நாக்க என்னய அறுக்க சொல்லுறான்” சோலையம்மாள் மனதுக்குள் நினைத்துக் கொண்டே கழுத்தை நொடிக்கு பொழுதே

“அவளும் அகல்யாவும் ஒண்ணா?” என்று சற்றும் யோசிக்காமல் கேட்டாள் மதுமிதா.

“இப்படித்தான் டா… நாம என்ன பேசுறோம்? எதுக்கு பேசுறோம்? என்று புரிஞ்சிக்காமலே உங்கம்மா பேசிகிட்டு இருக்கா… இவள…” என்று வேலன் மதுமிதாவை அடிக்க கையோங்கினான்.  

தந்தையை தடுத்தவன் “நான் ஊருக்கு வந்தது உங்க கூட சண்ட போடவோ, இல்ல சமாதானமா போகவோ இல்ல. என் பொண்டாட்டிக்காக. நீங்க தான் என் வீட்டு வாசல்ல வந்து நின்னீங்க. நான் தனி ஆள் இல்ல நான் என்றா என் பொண்டாட்டியும் தான். என் பொண்டாட்டி வேணாம் என்றா என்னையும் மறந்துடுங்க. முடிவு பண்ணிட்டு காலைல சொல்லுங்க. எங்களுக்கு போக வீடு இல்லாம இல்ல” மறைமுகமாக நாச்சியின் வீட்டுக்கு செல்வதாக அச்சுறுத்தியவன்

தந்தையை பார்த்து காலையில் கடைக்கு சென்று மிது கேட்ட பொருற்களை வாங்கி வரச் சொன்னவன் அன்னையிடம் திரும்பி “அகலோட ஏதாவது சுடிதார் இருந்தா எடுத்துக் கொடு” என்றான்.

“அகல் துணியெல்லாம் இங்க இல்ல. ஹாஸ்டல்ல இருக்கும். அவ கிட்ட கேட்காம எடுத்தா என்ன திட்டுவா” என்ற மதுமிதா உள்ளே செல்ல,

“அப்போ நான் வீட்டுக்கே போய் எடுத்துக்கிட்டு வரேன்” என்றவன் தேவையில்லை. நான் மிதுவ கூட்டிகிட்டு வீட்டுக்கே போறேன்” என்றான்.

தாஸுக்கு அப்படியொரு கோபம்.  அகல்யா கோபப்படுவாள் என்றது சரிதான். ஒரு அன்னையாக “சரிப்பா ஏதாவது பண்ணிக்கலாம்” என்று கூறாமல் “எனக்கென்ன” என்பது போல் அலட்ச்சியமாக உள்ளே செல்கிறாள் என்றால் தான் இவ்வளவு நேரமும் பேசிய பேச்சு கொஞ்சம் கூட அர்த்தம் இல்லை.

அர்த்தம் இல்லையென்று நான் பேசிய உடனே தான் “மிதுவும் அகல்யாவும் ஒண்ணா என்று” கேட்டுவிட்டாளே. குடும்பம் வேண்டும் பொறுமையாக போனால் என்னையே ஆட்டிப்படைக்க பார்க்கிறாளா? மிது மயக்கம் போட்டு விழும் பொழுதே வீட்டுக்கு போ என்று கூறியதை கேட்டிருக்கணும்” தனக்குள் பொருமிக் கொண்டிருந்தான் தாஸ்.

தாஸ் வீட்டுக்கு செல்கிறேன் என்றதும் தான் மதுமிதாவுக்கு தெளிந்தது. “இந்த நடுஜாமத்துல எங்க கிளம்பிட்ட? பேசாம போய் படு” என்றாள்.

“இங்க படுத்திட்டாலும் காலையிலையே எழும்பி வீட்டுக்கு போய் தான் குளிக்கணும். அதுக்கு நாங்க வீட்டுக்கே போறோம்” நானும், மிதுவும் வேற வேற இல்ல என்பதை ஆணித்தரமாக கூறினான்.

“டேய் அப்பாவோட லுங்கி இருக்கே. இருடா தரேன்” தாஸை இருத்திக் கொண்டால் போதும் என்று மதுமிதா பேச

“என் பொண்டாட்டிக்கு துணி எடுக்க, அவள தனியா அனுப்ப முடியுமா? நான் தானே போகணும். அதுக்கு நாங்க இப்போவே கிளம்புறோம்”

மதுமிதாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் வேறு வழியில்லை. அகல்யாவுக்கு தீபாவளிக்காக வாங்கிய சுடிதாரை எடுத்துக் கொடுத்தாள்.  

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்று விட்டு தாஸ் அறைக்கு செல்லும் பொழுது புது பிரஷ், டவல் என்று அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தான் வேலன்.

“நாங்க வரோம் என்று தெரிஞ்சே வாங்கி வச்சிருக்கீங்க போல” விசிலடித்தவாறே அறைக்கு சென்றான்.

இங்கே தூக்கம் வராமல் உருண்டுக் கொண்டிருந்த மற்றுமொரு ஜீவன் கனகா தான்.

வீட்டுக்கு வந்த உடனே மருமகளின் அடிவயிற்றில் தீயை பற்றவைத்துமில்லாமல், மங்களத்தின் நெஞ்சிலும் நெருப்பை எரிய விட்டிருந்தாள்.

இந்நேரம் நாச்சியார் செங்கதிரவையும் அழைத்துச் சென்று சோலையம்மாளின் வீட்டில் சத்தம் போட்டு மிதுவை கையேடு வீட்டுக்கு அழைத்து சென்றிருப்பார்கள்.

கணவனுக்கும், தனது இரு புதல்வர்களுக்கு இரவு உணவை வைத்தவாறே தாஸின் வீட்டில் நடந்ததை வத்தி வைத்துக் கொண்டிருந்தாள் கனகா.

“அம்மா… நீ தான் தேவையில்லாம பேசி ஏரியிற நெருப்புல பெற்றோல உத்திட்டியோன்னு எனக்குத் தோணுது” பாரியின் போலீஸ் மூளை கொஞ்சம் விழித்துக் கொண்டு பேச

“போடா கூறுகெட்டவனே. பாவம் அந்த புள்ள மிது. எங்க வீட்டுல வாக்க பட வேண்டிய பொண்ணு. அந்த வீட்டுல வாக்கப்பட்டு என்னென்ன இன்னல்கள அனுபவிக்குதோ. எங்க கண் முன்னாடியே என்னவெல்லாம் பேசுச்சு அந்த கிழவி. தனியா இருக்கும் போது என்னத்த பேசுமோ. பாவம் புள்ள” மிதுவுக்காக பொய்யாய் பரிதாபப்பட்டாள்.

“உனக்கு எத்தனை தடவ சொல்லுறது? மிதுவ இந்த வீட்டு மருமக போல பேசாதே என்று. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?”

“ஏழு வருஷத்துக்கு முன்னாடி உனக்கு அவள தானே பிடிச்சிருந்தது. அப்பொறம் பாக்குற எந்த பொண்ணையும் பிடிகளையே. ஒன்னு நீ நான் பாக்குற பொண்ண கட்டிக்கணும். இல்லியா நீயா ஒருத்திய கூட்டிட்டு வரணும்” என்றாள் கனகா.

தான் உண்மையை கூறாவிட்டால் அன்னை தன் இஷ்டத்துக்கு பேசிக் கொண்டு இருப்பாள் என்று மட்டும் பாரிக்கு நன்றாக புரிந்தது. தன்னால் இன்று மிது கைகூப்பி நின்ற தோற்றம் கண்ணுக்குள் வந்து போக பெருமூச்சு விட்டவன் “உன்ன நான் பொண்ணு பார்க்க வேணாம்னு சொல்லவே இல்லையே. எனக்கு பிடிச்சது போல பொண்ணு பாரு” என்றான்.

“உனக்கு மிதுவ தானே பிடிச்சிருக்கு. அதனால தானே யாரை பார்த்தாலும் பிடிக்கல, பிடிகலனு சொல்லுற” கனகா கூறி முடிக்கும் பொழுதே சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறியடித்தான் பாரிவள்லல்.

“டேய் என்னடா…” என்று அண்ணணனும், தந்தையும் பதற

“இதோ இதைத்தான் சொன்னேன். தேவ இல்லாம பேசுறாங்கன்னு. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோங்க “நான் காலேஜ் படிக்கும் போதே ஒரு பொண்ண லவ் பண்ணேன். அவ அவளோட குடும்ப சூழ்நிலை காரணமா என்ன வேணாம்னு சொல்லிட்டா. அவ நினைப்பா இருந்த நான் விரக்தில நீங்க பார்த்த பொண்ண கட்டிக்க சம்மதம் சொல்லிட்டேன். அது மிது என்று கூட அப்போ எனக்கு தெரியல.

என்ன ஒருத்தி வேணாம் என்று சொன்னதுக்காக நான் தற்கொலை பண்ணிக்க நினைக்கலையே. கல்யாணம் தானே பண்ணிக்கணும் என்று நினச்சேன். அது தான் நான் பண்ண பெரிய தப்பு.

எனக்கு பார்த்தவ லவ் பண்ணவனோட போனா என்ன தப்பு? அது தெரியாம ஓடிப்போனவ. ஓடிப்போனவ. இவ தான் நீ கட்டிக்க இருந்தவனு சொல்லி சொல்லியே மிதுவ பத்தி டேலி பேசுவீங்க. என்னமோ என்னோட நிலைக்கு மிது தான் காரணம், நான் பாக்குற பொண்ணுங்கள வேணாம்னு சொல்லுறதுக்கும் மிது தான் காரணம் எங்குறது போல பேசுறாங்க. ஒரு பொண்ணு வேணாம்னு சொன்னதுக்காக அவசரப்பட்டு கல்யாணம் பண்ண முடிவெடுத்துட்டோமே கொஞ்சம் நிதானமாக பார்க்கலாம் என்று இருந்தேன். அது குத்தமா?

கொஞ்சம் நாள்ல நான் தேறிட்டேன். சரி எனக்கு பிடிச்சது போல, என்ன பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம் என்று பார்த்தா என் விதி அமைய மாட்டேங்குது. இப்போ என்ன பண்ணுறது? நான் சந்நியாசியா போகட்டுமா?” கடுப்பாகத்தான் கேட்டான். 

பாரி சொன்னது எதுவும் கனகாவின் காதில் ஏறவில்லை. “என்னது மிது தன் மகனை வேண்டாம் என்றது பத்தாதென்று இன்னொருத்தியும் வேண்டாமென்கிறாளா? அப்படி என்ன என் மகனிடம் குறையை கண்டார்கள்? இவர்கள்” என்ற கோபம்தான் கனகவிடம் தலை தூக்கியது.

“பேசலடா… நான் எதுவும் பேசல. உனக்கு பிடிச்ச பொண்ணு கிடைச்ச உடனே கல்யாணம் பண்ணிக்க” என்றவள் அறைக்குள் நுழைந்து கதைவடைத்துக் கொண்டாள்.

எந்த பிரச்சினையும் நிகழாவிட்டால் அமிர்தாஷினையை அழைத்து வீட்டுக்கு அலைபேசி அழைப்பு விடுத்து பார்க்குமாறு கூறியிருக்கலாம். அதற்கும் வழியில்லை. தாஸும், மிதுவும் பிரிந்திருப்பார்கள் அந்த செய்தி காலையிலையே வந்து சேரும் என்ற நம்பிக்கையில் உறங்கலானாள் கனகா.

அறைக்கு வந்த தாஸ் தூங்க முயல “மாநாடு முடிஞ்சதா?” என்று கேட்டாள் மிது.

“நீ இன்னும் தூங்கலையா?”

“புது இடம் இல்லையா? அதான் தூக்கம் வர மாட்டேங்குது. விதிய பாத்தியா? நமக்கு கல்யாணமாகி உன் வீட்டுல, உன் ரூம்ல நம்ம பர்ஸ்ட் நைட் நடந்திருக்கணும். ஏழு வருஷம் கழிச்சி நான் உன் வீட்டுக்கும் உன் ரூமுக்கு வந்திருக்கேன்” என்றவள் சிரித்தாள்.

“அதுக்கென்ன? மாப்புள நான் ரெடி. பொண்ணு நீ இருக்க. ரூம்ல இருக்கோம் நீ மனசு வச்சா…” என்று தாஸ் இழுக்க

“நைட் பன்னெண்டு மணி தாண்டிருச்சு. நல்ல நேரம் முடிஞ்சிருச்சாம். பேசாம இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கு” என்றவள் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

அவளை தன் புறம் இழுத்தவன்  “இத்தனை வருஷமாகியும் உனக்கிந்த வாய் மட்டும் அடங்க மாட்டேங்குது” கடிப்பது போல் நெருங்கி வந்தவன் மெதுவாக முத்தமிட்டு விலகினான்.

“என்ன இன்னக்கி ஒரே ரோமன்ஸ் மூட்ல இருக்க? உன் அம்மா நடிக்கிறாங்க என்று சொன்னதுக்கு டெரெர் மூட்ல இருப்பான்னு நினச்சேன்” என்ற மிதுவும் கணவனோடு மனம் விட்டு பேசியதில் நல்ல மனநிலையில் தான் இருந்தாள்.

“அம்மா மயங்கி விழுந்ததும் ஒன்னும் தோணல. ஹாஸ்பிடல் போனா ஒரே தொண தொணப்பு அப்போ கூட அத நான் பெருசா எடுத்துகள. அகல்யாவை கூட்டிட்டு வான்னு ஒரு டாஸ்க் கொடுத்தாங்க. சரி அவளை வீட்டுல கொண்டு வந்து விட்டுட்டு நாம நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்னு பார்த்த சாப்பிட்டு போடான்னு சொன்னாங்க. அப்போ புரியல”

“என்ன புரியல?” மிது புரியாமல் கேட்க

“கொஞ்சம் இருடி கோர்வையா சொல்லிக்கிட்டு வாறென்னே. அவசர குடுக்க போல குதிக்காத” என்று தாஸ் சிரிக்கவும், எதோ விஷயம் இருக்கு என்று மிதுவும் கோபப்படாமல் சிரித்தாள். 

இதுவே வீட்டில் இருந்திருந்தால் இவள் அவனை ஏறி மிதித்திருப்பாளோ என்னவோ. இன்று அவ்வளவு நடந்தும், அவன் குடும்பம் அவ்வளவு பேசிய பின்னும். தன் பேச்சை கேளாமல் சென்றவன் என்றான பின்னும் மிது சிரித்துக் கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் அவள் மயக்கம் போட்டு விழுந்ததை அறிந்த பின்னும் மற்றவர்கள் முன்னிலையில் அவளை காட்டிக் கொடுக்காமல் அவன் காதலை நிரூபித்தது தான்.

கணவனும் மனைவியும் என்னதான் தனிமையில் இருக்கும் பொழுது சண்டை போட்டுக் கொண்டாலும் தங்களுக்குள் வீட்டாரை அண்டவிடக் கூடாது என்பதில் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் போலும்.

“ஏழு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கோம், அம்மா ஆசையா கேக்குறாங்களே வீட்டுல பொண்டாடி கோபமா இருப்பான்னு கூட நினைக்காம சாப்பிட்டு போலாம்னு உக்காந்தேன்” பேசியவாறே மிதுவின் நெற்றியில் முத்தமிட்டு உன்னை மறக்கவுமில்லை. உன் கோபத்தை மறக்கவுமில்லை என்று கூறி அவள் முறைப்பையும் பெற்றுக் கொண்டவன் தொடர்ந்தான்.

“அப்பாதாவோட தொணதொணப்போட கறி குழம்ப சாதத்துல ஊத்துறத்துக்கு பதிலா கீழ கிடந்த என் போன்ல ஊத்தி, அத கழுவுறேன்னு தண்ணில போட்டு. ரகள பண்ணிட்டாங்க”

“புரியலையே…” என்ன நடந்திருக்கும் என்று மிது புரியாமல் குழம்பினாள்.

“ஏற்கனவே என் போன் சார்ஜ் இல்லாம தான் இருந்தது. அது தெரியாம, போன் தண்ணில விழுந்தா, அது வேலை செய்யாது என்று தெரிஞ்சி வச்சிருந்த எங்கம்மா நான் ஐபோன் தான் வச்சிருக்கேன்னு தெரியாம போன் இனிமேல் வேல செய்யாது. உனக்கு போன் பண்ண முடியாம போகுமே என்று பதறாம. நீ பண்ணாத அவ என்ன நினைக்கிறான்னு பாரு அப்போ உனக்கே புரியும் என்று ஒரு ஸ்டேட்மென்ட் வச்சாங்க பாரு.

அப்போவே புரிஞ்சது நம்ம பிரிக்க பச்சயா திட்டம் போடுதுன்னு. இதுல என் அப்பாத்தா வேற. இதுங்களுக்கு சொல்லி பிரயோஜனமில்லை. ஏன் எங்கம்மா மயக்கம் போட்டு நடிச்சிருக்கக் கூடாது என்று யோசிச்சேன். கவனிச்சு பார்த்ததுல அது தான் உண்மை என்றும் புரிஞ்சது. அகல கொண்டு வந்து வீட்டு வாசல்ல இறக்கிட்டு அப்படியே வீட்டுக்கு வந்துடலாம்னு பார்த்தா நீ போலீஸ் படையோடு வாசல்ல வந்து நிக்கிற” என்று சிரித்தான்.

“அப்போ உங்கம்மா நடிச்சது உனக்கு தெரிய வரலைனா. நான் மயக்கம் போட்டு விழுந்தப்போ என்ன உண்டு இல்லனு ஒரு வழி பண்ணி இருப்ப” என்று மிது முறைக்க,

“உனக்கும் சொல்லி புரிய வைக்க முடியாதுடி. நீயும் எங்கம்மாவும் ஒண்ணுதான். எங்கம்மா யாரு? உன் குடும்பம் தானே” மிது முறைக்க முறைக்க தாஸ் பேச அவன் தலையில் “நங்” என்று கொட்டினாள் இவள்.

“உன் கிட்ட எல்லாம் இவ்வளவு நேரம் பேசினதே தப்பு. இன்னக்கி நம்ம டிஸ்டாப்பிங்ஸ் ரெண்டும் வேற கூட இல்ல. உன்ன என்ன பண்ணுறேன் பாரு” என்று அவளை முத்தமிட முயல, அவளோ இவனை தடுக்க முயற்சி செய்யலானாள்.  

இவனோ அவள் முயற்சியை லாவகமாக முறியடித்துக் கொண்டிருந்தான்.

Advertisement