Advertisement

அத்தியாயம் 12

என்னதான் மிது மிரட்டினாலும் தாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்று அவன் அறையில் உள்ள கட்டிலில் கிடத்தினான்.

சோலையம்மாள் அதற்கும் சத்தம் போட “நீங்க பேசுன பேச்சுல தான் அவ அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டா. சாப்ப்டீங்களா? மாத்துற போட்டீங்களா? போய் படுங்க” அப்பத்தாவை சிடுசிடுத்தவன் யாரும் அறைக்கு செல்லாதவாறு அறைக் கதவை சாத்தி விட்டான்.

இவன் பேசினால் சோலையம்மாள் அமைதியாவாளா? “ஏய் உன் பொண்டாட்டி நடிக்கிறாடா… நீ அவளை நம்பிகிட்டு இருக்க”

“இவங்க வேற…. மிது பசிக்குதுனு சொன்னா…” தன் மனதோடு பேசலானான்.

 மிதுவை கட்டிலில் கிடத்தும் பொழுதே “அவசரப்பட்டு கண்ண தொறந்துடாதடி” என்று தாஸ் சொல்ல,

“எனக்கு பசிக்குது” என்றிருந்தாள் மிது. வீட்டில் நடந்த அமளி துமளியில் சாப்பிடாதவள் மங்களம் ஆசையாக ஊட்டி விட்ட இரண்டு வாயோடு தான் முழு நாளும் இருந்தாள். கணவனை பார்த்ததும் வேதாளம் முருங்கை மரம் எரிய கதையாய் எல்லாவற்றையும் புறம் தள்ளியவள் அவனை அதிகாரம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

சோலையம்மா தாஸை திட்டிக் கொண்டிருக்க, காதில் வாங்கிக் கொண்டவாறே சமயலறைக்குள் சென்று தனக்கும், மிதுவுக்குமான உணவை பரிமாறிக் கொண்டு அறைக்குள் சென்று கதைவடைத்துக் கொண்டான் தாஸ்.

மிதுவை தாஸ் உள்ளே தூக்கி சென்றதும் வெளியே நின்று கொண்டிருந்த பாரியும், கனகாவும் உள்ளே வந்து விடக் கூடாதென்று வாசக் கதவை பூட்டி விட்டு தான் வந்திருந்தாள் சோலையம்மாள்.

உள்ளே செல்லும் எண்ணம் கனகாவுக்கு இல்லை. ஆனால் தான் வந்த காரியம் நிறைவேறுமா என்ற பதை பதைப்பில் மிதுவுக்கு என்ன ஆகுமோ என்று பொய்யாய் பதறினாள்.

“அவ கூட அவ புருஷன் இருக்கானே. பார்த்துப்பான். இனி இது அவங்க பிரச்சினை. நாம போகலாம்” என்றான் பாரி.

ஆனால் பிரச்சினையை பெரிதாக்க நினைக்கும் கனகா அமைதியாக இருப்பாளா? வீட்டுக்கு செல்லும் முன்னே நாச்சியாரை அழைத்து மிது சோலையம்மாளின் வீட்டில் இருப்பதை கூறி, அங்கே நடந்ததையும் கூறினால் சோலையம்மாளின் குடும்பத்தாரிடமிருந்து பேத்தியை காப்பாற்ற நாச்சியார் குடும்பத்தாரோடு பதறி துடித்துக் கொண்டு வருவாள். இன்னொரு சண்டையை பார்க்கலாம். ஆனால் மகனின் முன்னிலையில் பேசினால் அவன் வேறு திட்டுவான் என்று அமைதியாக வீட்டுக்கு சென்று அமிர்தாஷினியை அழைத்து விஷயத்தை கூறினாள். 

அச்சப்பட்ட அம்ரிதாஷினியோ அன்னைக்கு அழைக்க, அலைபேசியை பறித்து கனகா மூச்சு விடாமல் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, மங்களத்தின் நெஞ்சுக்குழிக்குள் அச்சம் ஊடுருவி என்ன செய்வது என்று பதறினாள். 

“அம்மா….” என்று தாவி வந்து மதுமிதாவை கட்டியணைத்துக் கொண்ட அகல்யா “உனக்கு என்னம்மா ஆச்சு? எல்லாம் அவளாலத் தானே. அண்ணன் வேற அவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டான்”

அகல்யா மிதுவை பார்த்ததுமில்லை, பழகியதுமில்லை அவ்வாறிருக்க அவளை பற்றி தப்பாக எண்ண காரணமே மதுமிதாவும், சோலையும் பேசும் பேச்சுக்கள் தான். தெரிந்தோ, தெரியாமலோ தாங்கள் பேசும் பேச்சில் பிள்ளைகளின் மனதில் நஞ்சை இருவரும் விதைத்திருந்தாலும் தாஸ் மனதில் மட்டும் அது காதலாக முளைத்தது தான் விந்தை. மிதுவோடு பேசிப், பழகினால் அகல்யாவின் எண்ணங்களும் மாறி விடுமா?

“முதல்ல தள்ளி உக்காருடி. எனக்கு ஒண்ணுமில்ல. உங்கண்ணன் அவன் வீட்டுக்கு போன் பண்ணனக் கூடாதுன்னு தான் அவன் சாப்பிடும் போது அவன் போன தண்ணில போட்டேன். வீட்டுக்கு போகக் கூடாது. இங்கயே தங்க வைக்கணும் என்று தான் எனக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு சொல்லி உன்ன கூட்டிட்டு வரச் சொல்லி அனுப்பி வச்சேன். இல்லனா தீபாவளிக்கு ரெண்டு நாள் இருக்க நீ வந்தா போதாதா?

அவன் உன்ன அழைச்சிட்டு வர்றதுக்குள்ள அவன் பொண்டாட்டி, அந்த மேனாமினிக்கி இங்க வந்து நிப்பான்னு எனக்கெப்படித் தெரியும்? நான் ஒன்னு நினச்சா, இங்க ஒன்னு நடக்குது”

“நான் வாசல்ல அந்த கத்து கத்துறேன். மாமியார் எங்குற மரியாத கொஞ்சம் கூட இல்லாம நீ அறைக்குள்ள கிடக்குற. நான் தனியாளா உன் மருமகளையும் எவளோ ஒருத்தியையும் சமாளிக்கணுமாக்கும். என்ன என்னைய உன் மருமக கிட்ட கோர்த்து விட்டு வேடிக்கை பாக்குறியா? இல்ல அண்ணன் பொண்ணு மேல பாசம் பொத்துகிட்டு வருதோ? மருமகளா ஏத்திகிட்டியாக்கும்” மதுமிதாவை முறைத்தாள் சோலையம்மாள்.

“ஆமா அஞ்சு மணியானதும் டீவி முன்னாடி உக்காந்துக்க வேண்டியது. சீரியல்ல இருக்குற மாமியார், மருமகள், வில்லினு பேசுற எல்லாத்துக்கும் பதில் பேச வேண்டியது. இதுல நீங்க வெளிய சத்தம் போடுறீங்களா? டீவியோடட மல்லுகட்டுறீங்களான்னு எனக்கெப்படித் தெரியும்?” மாமியாரை முறைக்க முடியாமல் மகளை முறைத்தவள் “நடந்தத பத்தி பேசாம அவளை வீட்டை விட்டு எப்படி துரத்துறதுன்னு பாருங்க” என்றாள்.

வயதான காலத்தில் சோலையின் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்ச்சி தான். அதுவும் ஐந்து மணிக்கு பின் யாரையும், எக்காரணத்தைக் கொண்டும் தொலைக்காட்ச்சியை நெருங்க விட மாட்டாள். இன்று தாஸின் வீட்டுக்கு சென்றது. மதுமிதா மயங்கி விழுந்தது என்று ஒருசில நாடகங்களை தவறவிட்டவள் புலம்பியவாறே வர, கடுப்பில் இருந்த மதுமிதா அதையும் நினைவு கூர்ந்து தான் திட்டினாள்.

அன்னை சொன்ன விதத்தில் கிழுக்கிச் சிரித்தாள் அகல்யா.

“என்னடி…” சோலையம்மாள் அகல்யாவை அதட்ட முற்பட 

“இவ்வளவு நடந்தும் உங்களுக்கு புத்தி வரல இல்ல. தாஸ் அவன் பொண்டாட்டிய விட்டுட்டு வருவான்னு இன்னுமா நினைச்சுகிட்டு இருக்கிறீங்க? யாருமே வேணாம் என்று போனவன் அம்மாக்கு ஒன்னென்னதும் திரும்ப வந்தான். திரும்ப அவனை சீண்டாதீங்க. கண்ணுளையே படாம போயிடுவான்” என்று எச்சரித்தான் தணிகை வேலன்.

அறைக்குள் வந்த தாஸின் கையிலிருந்த உணவுத்தட்டை பார்த்ததும் எழுந்து அமர்ந்த மிது “ஊட்டி விடு” என்றாள்.

“எங்கம்மா நடிக்கிறாங்கன்னு சொல்லிட்டு. நீ செம்மயா நடிக்கிற” சிரித்தவாறே அவளுக்கு ஊட்டலானான் தாஸ்.

மிது மயக்கம் போட்டு விழுந்தது  போல் நடித்ததற்காக தாஸ் அவள் மீது கோப்பட்டிருக்க வேண்டும். அவன் முன்னிலையிலையே அவளை இவ்வளவு பேசிய அவன் அப்பத்தா, அவன் இல்லாத பொழுது என்னவெல்லாம் பேசியிருப்பாள் என்று அவனால் ஊகிக்க முடிந்தது.

அன்னையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதிலிருந்து அவன் கேட்டதெல்லாம் மிது தப்பானவள், அவள் தனக்கு பொருத்தம் மற்றவள் என்பதை மட்டுமே.

அப்படியிருந்தும் பாரிவள்ளலோடு அவளை பார்த்ததும் அவன் மீதுதான் எரிச்சல் கொண்டானே ஒழிய, மிதுவின் மீது கோபம் கொள்ளவில்லை. காரணம் இரண்டு வருடங்கள் அவளை காதலித்து, திருமணம் செய்து ஏழு வருடங்கள் அவளோடு வாழ்ந்திருக்கிறான். அவள் தனக்காகவும், குழந்தைகளுக்காகவும் என்னவெல்லாம் செய்கிறாள் என்று கூட நின்று பார்த்தவன் அல்லவா அவளை சந்தேகப்பட்டால் மழை இல்லாத இடி அவன் தலையில் விழாதா?

மிது சுவேதாவை தாஸோடு சேர்த்து வைத்து பேசுவது கோபத்தால் மட்டுமே ஒழிய, அவள் அவன் மீது சந்தேகம் கொண்டு பேசவில்லை என்பது தாசந்தனுக்கு நன்றாகவே தெரியும். அந்த கோபத்துக்கும் தான் பேசியது தான் காரணம் என்று அவனுக்கு புரியவில்லை. புரிந்திருந்தால் அவளை சமாதானப்படுத்தியிருப்பான்.

அதேபோல் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையான பாரிவள்ளல் அவர்களின் வாழ்க்கைக்குள் வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அவனோடு மிதுவை சேர்த்து வைத்து பேசினால், சந்தேகப்பட்டால் தகுமா? பூமி தாங்குமா? அவனுக்கு மிதுவின் மீது சந்தேகம் கிஞ்சத்திற்கும் இல்லை. பாரியால் ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என்று உள்ளுக்குள் ஒரு அச்சம் அதனால் பாரியை பார்க்கும் பொழுது ஒரு சிடுசிடுப்பு. கடுகடுப்பு அவ்வளவுதான்.

தாஸ் அகல்யாவை அழைத்து வரும் பொழுதே மிதுவுக்கு மதுமிதாவின் திட்டம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது. உள்ளறையில் இருந்தவளுக்கு தொலைக்காட்சியின் சத்தால் வெளியே நடப்பவைகளை கேட்டிருக்காது. தாஸ் வந்ததால் வெளியே வரலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் மிது மயக்கம் வருவது போல் நடித்தாள். அதுவும் தாஸை வீட்டுக்கு அழைத்து செல்ல எண்ணி. இல்லையென்றால் அவள் மாமியார் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்து அவள் கணவனை இங்கே இருத்திக் கொண்டிருப்பாள். கனகா மிதுவால் பிரச்சினை வந்து விடும் என்று இவளை இழுத்துச் சென்றிருப்பாள்.

மயக்கம் போட்டு விழுந்த மிதுவும் பிரச்சினை வரக் கூடாது என்று எண்ணித்தான் வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணினாள். ஆனால் தாஸ் வேறு விதமாக யோசிச்சு மிதுவை உள்ளே அழைத்து சென்றான்.

“உன் அப்பத்தாவையே சமாளிக்க முடியல. இதுல கூட கனகா அத்த வேற. போதாததற்கு உன் தங்கச்சி வேற, உன் அம்மா ரூம்ல இருந்து எட்டிப் பாக்குறத பார்த்ததும் மயக்கம் வரும் போல இருந்தது. அதையே செஞ்சிட்டேன்” என்றாள். இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாள் மயக்கம் போட்டுத்தான் விழுந்திருப்பாள். பசியால் விழுந்திருப்பாளோ, மனஅழுத்தத்தால் விழுந்திருப்பாளோ என்று தான் தெரியாது.

தன்னாலையே அன்னையையும், அப்பத்தாவையும் சமாளிக்க முடியவில்லை. இவள் தனியாளாக எப்படி நாள்வரை சமாளிப்பாள்? தான் செய்தது தான் சரி என்பது போல் பேசியவளை பார்த்து புன்னகைத்தான் தாஸ். அவள் முகபாவங்கள் நீண்ட நாட்களுக்கு பின் கல்லூரி செல்லும் பொழுது அவள் செய்யும் சேட்டைகளை ஞாபகப்படுத்தவே அவன் மனதில் காதல் வேறு ஊற்றெடுத்தது. 

அவளை முத்தமிட மனம் துடித்தது. கையில் தட்டை வைத்துக் கொண்டு அவளை நெருங்க முடியுமா? அவள் வேறு உண்டு கொண்டிருக்கிறாள். பட்டென்று நெருங்கினாள் அடித்து விடக் கூடும். தலையை உலுக்கிக் கொண்டவன் 

“ஆமா நீ பாட்டுக்கு இங்க கிளம்பி வந்துட்டியே. பசங்க எங்க?”

“இப்போ தான் உனக்கு பசங்க ஞாபகம் வருதா? லூசு. அம்மா கூட போனவன் போன் பண்ணி இங்க என்ன நடக்குது என்று சொல்ல மாட்டியா? பசங்கள அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க” என்றவள் “ஐயோ… அந்த கனகா அத்த போன போட்டு என்னத்த சொல்லி வச்சாங்களோ, எங்க வீட்டாளுங்க இங்க வந்து நிக்க போறாங்க” என்றவாறே அன்னையை அழைத்தாள்.

அக்கணம் தான் கனகா பேசி விட்டு வைத்திருக்க, மிது அழைக்கவும் உடனே எடுத்திருந்தாள் மங்களம்.

எடுத்த உடனே கனகா கூறியதை கூறியவாறே “நீ ஒன்னும் பயப்படாத. நான் இப்போவே அப்பாவை கூட்டிகிட்டு உன்ன கூட்டிட்டு போக உடனே வரேன்”

“என்ன அந்த கனகா அத்த என்ன சோலை அப்பத்தா கொன்னுடுவாங்கன்னு சொன்னாங்களா? நம்ம வீட்டு கிழவியை போல இந்த வீட்டு கிழவியும் குரைக்கிற நாய் தான். நீ நான் தாஸ் வீட்டுல இருக்கிறேன்னு மட்டும் சொல்லு. கனகா அத்த சொன்னதை சொல்லி பீதியை கிளப்பாதே. பசங்கள பார்த்துக்க. என்ன தேடினா வீடியோ கால் பண்ணு” என்று அலைபேசியை துண்டித்து விட்டாள்.

“ஆமா அந்த பாரியோட அம்மாக்கு என்னதான் பிரச்சினையாம்? நாம ஊருக்கு வந்த உடனே என்ன மட்டம் தட்டி பேசினாங்க. உன்ன தூக்கி வச்சி கொஞ்சினாங்க. இப்போ என்னடான்னா நல்லவங்க மாதிரி பேசி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல கலகம் பண்ண பாக்குது. எனக்கென்னமோ அந்த போலீஸ்காரனும் கூட்டுனு தோணுது. அவன் சவகாசத்தை முதல்ல கட் பண்ணனும்” பேச்சு வாக்கில் பாரியோடு எந்த பேச்சு வார்த்தையும் நமக்கு வேண்டாம் என்றான் தாஸ். 

சொல்லி முடித்தவன் மிது அடிப்பாளோ என்று நகர்ந்து விட அவனை உற்றுப் பார்த்தவள் பக்கென்று சிரித்தாள்.

அவள் சிரிக்கவும் “நான் என்ன காமெடியா பண்ணுறேன்?” கடுப்பானாலும் அடக்கியே வாசித்தான் தாஸ்.

“நீயும் சாப்பிடு. நீ வெளில போய் சாப்பிட்டா. எனக்கு ஊட்டிவிட்டனு தெரிஞ்சிடும்” என்றவள் “கனகா அத்தைக்கு நான் அவங்க பையன வேணாம்னு சொன்னது தான் பிரச்சினை. அம்ரிதா கிட்ட டைலி புலம்பித் தள்ளுறாங்களாம். எனக்கென்னமோ கனகா அத்த பேசுறதுக்கு பண்ணுறதுக்கும் பாரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு தான் தோணுது”

தான் என்ன சொல்ல விழைகிறோம் என்று புரியாமல் பேசுபவளை முறைத்தான் தாஸ்.

அந்த பாரியின் அன்னையே மிதுவுக்கும், பாரிக்கும் தொடர்ப்பு இருப்பது போல் ஒரு விம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறாள். அப்பாத்தா வேறு பேசிவிட்டாள். தொடர்ந்து அவனோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டால் மற்றவர்கள் கண், காது, மூக்கு என்று உருவமைத்து பேச மாட்டார்களா? தன்னால் எத்தனை பேரை தான் சமாளிக்க முடியும்? அதையெண்ணி உனக்கு மனஉளைச்சல் வராதா? அப்பத்தா பேசியதை கேட்டு தாங்க முடியாமல் தான் நீ மயங்கி விழுந்ததாக நான் நினைத்தேன். மனதளவில் நீ திடமாகத்தான் இருக்கிறாய். ஆனால் இந்த மாதிரியான பேச்சுக்களால் மனதைரியம் எப்படியெல்லாம் சோதனைக்குள்ளாகும் என்று நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. ஊட்டியவாறே மிதுவுக்கு புரிய வைக்க முயன்றான் தாஸ்.

“அப்பத்தா பேசியதை கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது உண்மை தான். ஊருக்கு வந்தா இந்த மாதிரி பேச்சும் வரும் என்று தெரிஞ்சே தானே வந்தோம். பாரி கூட பேசாம, சிரிக்காம இருந்தா எந்த சம்பந்தமும் இல்லனு சர்டிபிகேர்ட் கொடுப்பங்களா?” என்று கணவனை முறைத்தாள்.

“அடியேய் நான் சொல்லுறத புரிஞ்சிக்க…. அவங்கம்மா கூட சேர்ந்து அவனும் ஏதாவது பண்ண திட்டம் போட்டிருந்தா நாம விலகி இருக்கிறது தான் நல்லது” கடுப்பானான் தாஸ்.

“உன் பயம் எனக்கு புரியுது. அந்த சுவேதா… முறைக்காத என்ன சொல்லவிடு. அந்த சுவேதா உன்ன உண்மையாவே லவ் பண்ணியிருந்தா… வெளிநாடு போக முன்ன வந்து உன் கிட்ட அவ மனசுல என்ன இருக்குனு சொல்லிட்டு போய் இருப்பா. எதோ எதேச்சையா திரும்ப பார்த்தா காலேஜ்ல இருந்ததா விட பார்க்க நல்லா இருந்த அதான் வந்து சொன்னா, கல்யாணமாக்கிருச்சு என்றதும் கிளம்பிட்டா”

“அடிப்பாவி நான் அவளை லவ் பண்ணலன்னு தெரிஞ்சே திட்டுறான்னு நினச்சா, அவ என்ன லவ் பண்ணலன்னு தெரிஞ்சும் என்ன வெளுத்து வாங்கியிருக்க. உன்ன என்ன பண்ணலாம்?” பேசும் அவளை தாஸால் முறைக்க மட்டும் தான் முடிந்தது. சுவேதாவை சம்பந்தப்படுத்தி மிது பேசவும், அடிக்கவும் காரணம் தாஸ் பேசிய வார்த்தைகள் தானென்று அவன்தான் உணர்ந்தானில்லை. 

“பாரி விஷயம் அப்படி இல்ல. முதல்ல நான் பாரிக்கு பார்த்த பொண்ணே இல்ல. மாமாவ அக்காக்கு பார்க்க, வீட்டுல இன்னொரு பொண்ணு இருக்கு மாப்பிளையோட தம்பியும் இருக்கான்னு தான் பாரிக்கு என்ன பேசினாங்க. பாரி என்னய பார்க்கவே இல்ல.

அப்படி எங்கயாச்சும் பார்த்து, லவ் பண்ணியிருந்தா ஒரு தடவையாச்சும் நேர்ல வந்து நின்னிருப்பானே. இல்ல இந்த ஏழு வருஷத்துல என்ன தேடியாச்சும் இருப்பான். ரெண்டு வருஷமா நம்ம ஏரியாலதான் இன்ஸ்பெக்டரா இருக்கான். அவனுக்கு நம்மள தெரியல. நமக்கு அவனை தெரியல. இதுல இருந்து என்ன தெரியுது?”

“அவன் உன்ன பார்த்த உடனே கண்டு பிடிச்சிட்டான்” மீது சொல்வது எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்றான் தாஸ்.

“நீ கூடத்தான் அவன் பேர சொன்னதும் அவன் யார் என்று கண்டு பிடிச்சிட்ட. முன்ன பின்ன பார்த்திருக்கியா என்ன? சம்பந்தப்பட்ட எனக்கே ஞாபகமில்லாத போது உனக்கு மட்டும் எப்படி அவனை கரெக்ட்டா ஞாபகம் இருந்தது? இது தான் பொண்ணுன்னு என் போட்டோவ காட்டியிருக்கலாம். என் அக்கா அந்த குடும்பத்துல வாக்கப்பட்டிருக்குறதால எங்க வீட்டுக்கு வந்திருப்பான், என் போட்டோஸ் பார்த்திருப்பான். எதுவேனாலும் நடந்திருக்கலாம்.

ஆனா கனகா அத்தை பண்ணுறதுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. பிரச்சினை வரும் என்று தெரிஞ்சா அவனே விலகி இருப்பான். ஊருக்கு வர ட்ரைன்ல தான் வருவேன் என்று நீ அடம்பிடிச்சதும் சரியென்று விட்டு விட்டானே. பழிவாங்க, இல்ல பிரச்சினை பண்ண நினைக்கிறவன் அவன் கூடத்தான் வரணும் என்று உனக்கு மேல பிடிவாதம் பிடிச்சிருக்கா மாட்டானா?” மிது கூறியவை ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க தாஸ் யோசிக்கலானான்.

“இப்போ நமக்கு பாரி பிரச்சினை இல்ல. அவன் கல்யாணம் பண்ணா பேசுற வாயெல்லாம் மூடிடும். உன் வீட்டாளுங்க தான் பிரச்சினை” என்றாள் மிது.

“ஏன் உன் வீட்டாளுங்களால பிரச்சனை இல்லையா? பிரச்சினை பண்ணவே மாட்டாங்களா? எல்லா பிரச்சினையையும் உன் அப்பா ஆரம்பிச்சு வச்சது தானே. அவர் மட்டும் என் அப்பா அம்மா கல்யாணத்தைப்போ குடிக்காம, கல்யாண வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு அமைதியா இருந்திருந்தா, இன்னைக்கு நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணா, ஒத்துமையா இருந்திருக்கும். நம்ம கல்யாணமும் எல்லாரோட சம்மத்தோட, சந்தோசமா நடந்திருக்கும்” ஆதங்கத்தோடு தான் சொன்னான் தாஸ்.

“விட்டா எங்கப்பாத்தா மாரிமுத்து தாத்தாவை இழுத்துகிட்டு ஓடினது தான் பிரச்சினைன்னு சொல்லுவ போல இருக்கே” என்று எட்டி தாஸின் தலையில் கொட்டினாள் மிது.

“ராட்சசி… வலிக்குது….” தட்டை எச்சில் கைக்கு மாற்றி, இடது கையால் தலையை தடவிக் கொண்டவன் “அது லவ் மேட்டர். இப்போ அந்த பாரி எக்கேடு கேட்டாலும் நமக்கென்னன்னு  நாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணோமே அது போல தான் மாரிமுத்து தாத்தாவும் பண்ணியிருப்பாரு. எங்கப்பாத்தா மனசோடஞ்சி இன்னைக்கு வரைக்கும் அத சொல்லிக்கிட்டு திரியுதுன்னா, அந்த பாரி ஆம்புள அவமானத்துல பழிவாங்கனு ஏதாச்சும் செய்யாம இருக்க மாட்டான்”

“நீ அங்க சுத்தி, இங்க சுத்தி பாரிலேயே வந்து நில்லு. அவன் பழிவாங்குறானோ, பாவக்கா விக்கிறானோ அவனை அப்பொறம் பார்க்கலாம். எனக்கு என் குடும்பம் வேணும் உன் குடும்பம் தான் பிரச்சினை பண்ணுது” தாஸை முறைகளானாள்.

“மாரிமுத்து தாத்தா ஆரம்பிச்சு வச்ச பிரச்சினை முடிவுக்கு வந்ததுனால தானே எங்கப்பாவுக்கு உன் அத்தை, அதான் எங்க அம்மாவ கல்யாணம் பேசினாங்க. உங்கப்பா தான் குடிச்சிட்டு எங்க குடும்பத்தை கண்டபடி பேசி பிரச்சனை பண்ணினாரு. எங்க குடும்பம் சமாதானமாகி வந்தாலும் உங்க வீட்டாளுங்க பிரச்சினை பண்ண மாட்டாங்க என்று என்ன நிச்சயம்?”

“எங்கப்பா என்னமோ மோடா குடிகாரன் போல பேசுற. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து எங்கப்பா குடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் இல்ல. சண்டை போட்டதும் இல்லை. எங்கப்பாவ பத்தி தப்பா பேசாதே. ஏழு வருஷமா சொந்தபந்தம் வேணாம்னு இருந்தோமே அது போல இருந்தடலாம் என்று சொல்லுறியா?”

“உன் கூட மனுஷன் தனியா இருப்பானா? பிசாசு. உன்ன எங்க அம்மா கூட கோர்த்து விட்டா தாண்டி எனக்கு நிம்மதி” மிதுவை பார்த்து புன்னகைத்தவன் “அப்படியில்ல…. மூல பிரச்சினை என்னன்னு ஆராய்ந்து தீர்வு கண்டால் நம்ம குடும்பம் மீண்டும் ஒன்னா, ஒத்துமையா இருக்கலாம். கனகா அத்தை போல யாரும் நடுவுல நாட்டாமை பண்ண மாட்டாங்கல்ல”

“நம்ம பசங்களுக்கு சொந்தபந்தம் வேணும். அது புரியாம பெருசுங்க சண்டை போடுதுங்க. ஆமா ரெண்டு குடும்பத்தையும் ஒண்ணாக்க நீ என்ன திட்டம் வச்சிருக்க?”

“சந்தோஷ் சுப்பிரமணி படத்துல வர்றது போல ஆளாளுக்கு தூண்டில் போடலாமா? இல்ல வலையே வீசலாமா?”

“ஆளப்பாரு… ஐடியா கொடுக்குறானாம். வலை வீசி கல்யாணமா பண்ண போற? கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க. லூசு லூசு”

“நான் என்ன சொன்னாலும் என்ன திட்டு. உனக்கு என்ன திட்டலைனா தூக்கம் வராதே”

ஆமா… உன் அப்பத்தாவும், அம்மாவும் என்ன துரத்த்திட்டு உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போடுறாங்க. உன்ன பேசி கூட்டிட்டு போலாம் என்று தான் வந்திருக்காங்க” என்றவள் தாஸ் மருத்துவமனைக்கு சென்ற பின் தனது வீட்டார் கூறியதை கூறினாள்.

அன்னையும், அப்பத்தாவும் பேசிய பேச்சுக்களை யோசித்துப் பார்த்தவனுக்கு அவர்கள் மிதுவை தனது வாழ்க்கையிலிருந்து விலக்க முனைவது தெளிவாக புரிந்தது.

“என்ன யோசிக்கிற?” தான் கூறியதை தாஸ் நம்பவில்லையோ என்று பார்த்தாள் மிது.

“ம்ம்… என் வீட்டாளுங்க உன்ன ஏத்துக்கணும்னா, மூல பிரச்சினை தேடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரணும்”

“உங்கம்மா கல்யாணத்துல என்ன நடந்தது என்று எங்கப்பா கிட்ட முதல்ல கேட்கணும். உன் அண்ணன் வீட்டுக்கு வரதே இல்லனு சொல்லுறாங்களே முதல்ல அவனை போய் பார்த்து பேசு. அவனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தா கொஞ்சம் பிரச்சினை சுமூகமாகும். நான் என் அப்பாகிட்ட பேசுறேன். நீ உன் அண்ணனை பார்த்து பேசு எது பண்ணாலும் நமக்கு தீபாவளி வரைக்கும் தான் டைம்”

“நான் போய் பேசுறதோ, கூட்டிட்டு வரதனாலையோ உன் மேல கோபம் தீராது. நீயும் என் கூட வா. உன்னால நடந்ததாக இருந்தாதான் எங்க வீட்டாளுங்க அடங்குவாங்க” என்றான் தாஸ்.

அவன் கூறுவதும் சரிதான் என்று புரிய “அப்போ முதல்ல உன் அண்ணன் வீட்டுக்கு போலாம். அப்பொறம் அப்பாவை பார்த்து பேசலாம்” என்றாள் மிது.

Advertisement