Advertisement

அத்தியாயம் 11

“எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல்.

“பிரச்சினை பண்ணனும் என்று வந்தாங்களான்னு தெரியல. வந்ததுனால பிரச்சினை ஆயிருச்சு. என் மாமியார் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. என் புருஷன் அவங்கள கூட்டிகிட்டு  ஹாஸ்பிடல் போனவன். இன்னும் வீட்டுக்கு வரல போன் பண்ணா போன் சுவிட்ச் ஆஃப் என்று வருது” என்றாள் மிது.

தாஸின் குடும்பம் என்னதான் பகையை பாராட்டினாலும், அது தன் கணவனின் குடும்பம். அது மட்டுமல்ல தாஸின் அன்னை மதுமிதா தனக்கு சொந்த அத்தை. அவர்களைப் பற்றி பாரியிடம் தரைகுறைவாக பேசக்கூடாது. அது அவர்களை அவமரியாதை செய்வது மட்டுமல்ல, தன் கணவனையே அவமதிப்பது போல் ஆகும் என்று மிதுவுக்குத் தெரியாதா?

அன்று வீட்டுக்கு வந்தவனிடம் தன் கணவனை குற்றம் சாட்டினாள் தான். அப்பொழுது அவள் இருந்த மனநிலையும், சொந்தக்காரனை பார்த்ததும் தனக்கொன்றென்றால் கேட்க ஒருவன் இருக்கின்றான் என்ற எண்ணத்தில் பேசிவிட்டாள். என்ன இருந்தாலும் தான் பேசியது தவறு என்று மிதுவுக்கு புரியாமலில்லை. அதே தவறை மீண்டும் செய்யவது தான் தவறு. உணர்ந்து விட்டாள். திருந்தி விட்டாள்.

அதற்காக எந்த பிரச்சினையும் நடக்கவில்லை என்று பூசி முழுகவும் முடியாது. அமிர்தாஷினியோடு கனகாவும் வந்திருந்தாள். அவள் கூறியதாகத்தான் பாரி மிதுவிடம் கேட்டான். மாமியாரின் முன்னிலையில் கொழுந்தன் கேட்கிறான் என்று அமிர்தாஷினி அவள் பங்குக்கு என்ன கூறினாளோ தெரியாது.

“இல்லையே ஒரு பிரச்சினையும் இல்லையே” என்று முகத்தில் அடித்தது போல் பதில் சொல்ல பாரி மிதுவுக்கு நெருங்கிய நண்பன் கிடையாது. சொந்தக்காரன். சைத்ரனை கண்டுபிடித்து கொடுத்த உரிமையில் கூட பாரி கேட்டிருக்கலாம். அதனால் பிரச்சினை ஆனது உண்மை. ஆனால் என்ன நடந்தது என்பதை நான் என் வாயால் சொல்ல மாட்டேன் என்பது போல் தான் அவளுடைய பதில் இருந்தது.

“சொந்த வீட்டுக்கு தானே போயிருக்கான். உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்று அவன ஆணவக் கொலை பண்ணியிருப்பார்களோ என்று பயப்படுறியா? உள்ளுக்குள்ள பதட்டமா இருக்கா?” சிரித்தான் பாரி.

“அவனுக்கு அவ்வளவு ஸீன் எல்லாம். இல்ல போன் சார்ஜ் போட மறந்து இருப்பான்” கணவனை அறிந்தவளாக கூறினாள் மிது.

“அவன் அம்மா, அப்பா இல்ல, வீட்டு போன் நம்பர் கூட உனக்கு தெரியாது இல்ல. உன் புருஷன் போகும் போது கேட்டு வைக்க வேணாம்” ஏழு வருடங்கள் ஊருக்கே வராத மிது தாஸின் குடும்பத்தோடு எவ்வாறு தொடர்பில் இருப்பாள் என்று புரிந்தது மட்டுமல்லாது, ஒரு போலீஸாகவும் மாறித்தான் கேட்டான்.

“ஆமா அவனே என் மேல கடுப்பாக போனான். இதுல நான் எங்க போன் நம்பரை கேட்க. ஞாபகம் கூட வரல” மனதுக்குள் நினைத்தவள் முகத்தை சுளித்தாள்.

அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து சிரித்தவன் “போலீஸா போய் அவன் வீட்டில் அதிரடியாக ஒரு விசாரணை போடவா? என்ன சொல்ற?” என்று கேட்டான்

பாரிவள்ளல் சொன்ன விதத்திலேயே அவன் கிண்டல் செய்வது புரிய மிதுவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

“காதலிச்சு கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுறவங்கள செருப்பாலேயே அடிக்கணும். ஏழு வருஷமா அவன் கூடத்தான் இருந்தேன். வீட்டை விட்டு வந்து ரொம்ப நேரமாச்சே பொண்டாட்டி வீட்டுல என்ன செய்கிறாளோ? போன் ஆப் ஆகி இருக்கு பதட்டமடைவாளே. தகவல் சொல்லணும் என்று தோணுதா அவனுக்கு. இதுவே அரேஞ்ச் மேரேஜ் என்றா, நீங்க சொல்றது போல அவன் விட்டாளுங்களுக்கு போன் பண்ணி கேட்டிருக்கலாம். இல்ல என் வீட்டு ஆளுங்கள போன் பண்ணி கேட்டிருப்பாங்க. இல்ல நானே என் விட்டாளுங்களுக்கு சொல்லி போன் பண்ணி கேட்டு இருக்கலாம். இல்ல அவங்களே போய் பார்த்து இருப்பாங்க. இங்க ஒண்ணுத்துக்கும் வழியைக் காணோம்”

“உன் மாமியாருக்கு ஏதாவதாகி இருக்குமோ” தாசந்தன் வீட்டுக்கு வராமல் இருக்கிறான் என்றால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் அல்லவா என்ற அர்த்தத்தோடு கேட்டான் பாரி.

“ஒரேயடியா மேல போயிருந்தா, வரச்சொல்லி அவன் போன் பண்ணி இருக்க மாட்டானா?” கேலியாக சொல்வது போல் மொழிந்தாள் மிது.

அப்படி ஏதாவது நடந்திருந்தா… போன் பண்ண உன் புருஷன் சுயநினைவுல இருக்கணுமே. அம்மா செத்தா அதிர்ச்சியில மூள மங்கி போகாதா? அவன் சுயநினைவுக்கு வந்து உனக்கு போன் பண்ண முன்னாடியே விஷயம் ஊர் பூரா பரவி இருந்திருக்கும். நீயும் அடிச்சு பிடிச்சு ஓடிப்போய் இருப்ப” என்று சிரித்தான் பாரி.

“அவங்களுக்கு எதுவும் ஆகாது என் உசுர வாங்க இன்னும் பல வருஷம் உசுரோட இருப்பாங்க” என்றவள் “என் புருஷனுக்கு என்னாச்சு என்று தான் தெரியல” என்றாள். இயல்பில்லையே மிது வாயாடி. துடுக்காகத்தான் பேசுவாள். யார் என்ன என்றெல்லாம் யோசிக்க மாட்டாள். பாரியோடும் அதே போல் தான் வாயாடினாலே ஒழிய தன் குடும்பத்தை பற்றி இகழ்ந்து பேச எண்ணவில்லை.

அவனும் இவளிடம் நட்பு பாராட்ட எண்ணி பேசினானே ஒழிய தவறாக எதுவும் எடுத்துக் கொள்ளவுமில்லை. சிந்திக்கவுமில்லை. அந்த எண்ணமும் அவனுக்கு இல்லை.

“இங்கேயே பேசிக்கிட்டு நிக்காம வா போய் என்னன்னு பாத்துட்டு வரலாம். உன் அத்தைக்கு ரொம்பவே உடம்பு முடியலையோ என்னவோ. நீயும் போய் பார்த்தா அவங்க சமாதானம் அடைவாங்க தானே” என்று மிதுவை அழைத்தான் பாரி.

செல்லலாமா? வேண்டாமா? என்றெல்லாம் மிது யோசிக்கவே இல்லை பாரிவள்ளோடு கிளம்பி விட்டாள்.

“ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க” என்றவாறே இருவரும் வண்டியில் ஏறும் போது அங்கே வந்து நின்றாள் கனகா.

தனியாக இருக்காதே வா எங்க வீட்டுக்கு போலாமென்று மங்களம் மிதுவை அழைத்த பொழுது கனகாவை பற்றி சாடைமாடையாக கூறிச் சென்றிருக்க, கனகாவிடம் சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசிக்கலானாள் மிது.

தன் பிள்ளைகள் என்று வரும் பொழுது எல்லா அன்னையர்களும் ஒரே மாதிரி தான். மிதுவுக்கு மறுமுகத்தை காட்டும் மதுமிதா தாசந்தனுக்கு பாசமான தாய். அது போல் தான் பாரிவள்ளலுக்கு கனகாவும். அவள் எண்ணம் புரியாமல் பாரி எங்கே செல்கிறோம் என்று கூறினான்.

“என்னது… அந்த வீட்டுக்கா? நீங்க ரெண்டு பேரும் தனியாக போனா என்னவெல்லாம் பேசுவாங்களோ! நானும் வரேன்” என்று மிது பேசும் முன் வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்.

இந்த அத்தை என்ன நோக்கத்தோடு கூட வராங்கன்னு தெரியலையே” முறைக்கவும் முடியாமல், புலம்பவும் முடியாமல் வண்டியில் ஏறினாள் மிது.

மிது பாரிவள்ளலோடும், கனகாவோடும் வந்திரங்கியதை வாசலில் அமர்ந்திருந்த சோலையம்மாள் பார்த்து “இவ எங்க எங்க வந்தா? ஓஹ் புருஷனை கூட்டிட்டு போக வந்தாளா என்ற முணுமுணுப்போடு வெளியே வந்தாள்.

“எங்க என் புருஷன்?” இறங்கியவாறு கேட்டாள் மிது.

“உன் புருஷனா அப்படி யாரும் இங்கு இல்ல” என்று தெனாவட்டா பதில் சொன்னாள் சோலை.

வீட்டுக்கு வந்த பொழுது தேனொழுக பேசிய சோலையம்மாளா இது? என்றென்றும் அளவுக்கு அவள் பேச்சின் தொனியும், முகத்தில் இருந்த அலட்சியமும் மிதுவின் வீட்டார் சொன்னது உண்மையோ என்று அவளை எண்ண வைத்தது. 

அது உண்மையாகவே இருந்தாலும் மிது இந்த சோலையம்மாளிடம் அடிபணிந்து, தன்மையாக பேச வேண்டுமா? என் வீட்டுக்கு நீ வந்த பொழுது நீ இன்முகமாக பேசினாய். நானும் உனக்கு கண்ணாடியின் விம்பம் போல் நடந்து கொண்டேன். இப்பொழுதும் நான் உனக்கு கண்ணாடி விம்பம் தான் என்று  “இன்ஸ்பெக்டர் சார் இவங்க தான் என் வீட்டுக்காரரோட அப்பத்தா. என் புருஷன் இவங்க கூடத்தான் போனான். இன்னும் வீட்டுக்கு வரல” என்றவள் அழுதவாறே “ஐயோ என் புருஷனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டாள்.

பாரிவள்ளல் சீருடையில் வரவில்லை. வரவேண்டிய அவசியமும் இல்லை. வந்தாலும் அவன் மிதுவுக்கு தோழனாக வர முடியுமே தவிர, இன்ஸ்பெக்டராக வந்து இங்கே அதிகாரம் செய்ய முடியாது. அவனுடைய எல்லை சென்னையில் அல்லவா இருக்கிறது. பாரி ஊருக்கு வந்ததோ தீபாவளியை கொண்டாட. வந்த இடத்தில் இப்படி ஒரு பஞ்சாயத்து வரும் என்று அவன் கனவாக கண்டான்?

மிதுவும் தாஸும் ஊருக்கு வருகிறார்கள் என்றதும் இப்படியெல்லாம் நடக்கும் என்று பாரிவள்ளல் எதிர்பார்த்து இருக்க வேண்டும் என்பதை மிது ஆர்ப்பாட்டத்தோடு தெளிவு படுத்திக் கொண்டிருந்தாள்.

சாதாரண உடையில் இருப்பவன் ஆய்வாளரா? இல்லையா? என்று சோலையம்மாளுக்குத்தான் தெரியுமா? அதுவும் அவள் பாரியை இன்று தான் பார்க்கின்றாள். பாரி தான் ஊரிலையே இருப்பதில்லையே. அவன் மிதுவின் அக்கா அமிர்தாசனின் கொளந்தன் என்றும் சோலையம்மாளுக்கு தெரியவில்லை. நாச்சியையும் அவளுடைய குடும்பத்தாரையும் தவிர பெண் கொடுத்தது பெண் எடுத்தது என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவள் எண்ணவும் இல்லை. கனகாவை பார்த்திருக்கிறாள். நாச்சி வீட்டில் பெண் எடுத்தவள் என்றதும் கனகாவிடமும் அதே முகத்திருப்பள்.

“யாரு இவன் போலீஸா? கடை வாசலில் நிற்கிற கூர்க்கா மாதிரி இருக்கான்” சோலை சொல்ல,

“டோட்டல் டேமேஜ்” என்றான் பாரி.

பாரி அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், அவனை பெற்றவள் தன் மகனை பேசினால் அமைதியாக நிற்பாளா? அதுவும் எப்படியெல்லாம் பிரச்சினையை பெரிதாக்கலாம் என்று எண்ணியவாறே மிதுவோடு வந்திறங்கிய கனகா.

“ஏய் கிழவி யாரய் பார்த்து என்ன பேசுற? என் பையன் உனக்கு கூர்காவா? உன்னயெல்லாம் உள்ள வச்சி முட்டிய பேத்தா தான் புத்தி வரும்” கனகா ஆரம்பிக்க,

“அம்மா அமைதியா இரு” குறுக்கிட்டான் பாரி.

“இவன் ஒருத்தன் என்ன பேசவே விடமாட்டேங்குறான். இவன் ஆசைப்பட்ட இந்த உலக அழகி இந்த கிழவி பேரன் கூட ஓடிப் போனதுல இருந்து என் பையன் கல்யாணமே வேணாம்னு இருக்கான். இவ மட்டும் குடும்பம், கொழந்தைன்னு சந்தோசமா இருக்க விட்டுடுவேனா?

“என் முட்டிய பேத்துருவியா?” கனகாவை முறைத்த சோலையம்மாள் மிதுவை பார்த்து “என்ன சண்டை போட ரௌடிய கூட்டிகிட்டு வந்தியா?” என்று கேட்டாள்.

சோலையம்மாளின் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த தணிகை வேலன் மிதுவை பார்த்து “ஏன் வெளியே நிற்கிற? உள்ள வாமா” என்று உள்ளே அழைத்தான். அவனுக்குத்தான் தாஸும் மிதுவும் ஒன்றாக இருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லையே. மிதுவை மட்டும் தான் அழைத்தான். அங்கே பாரி என்ற ஒருத்தன் நிற்பதோ, கனகா என்று அவன் அம்மா நிற்பதோ அவன் கண்களுக்கு தெரியவேயில்லை.

சோலையம்மாள் வாசலை அடைத்துக் கொண்டு நிற்கும் தோரணையை பார்த்த மிது இன்று அல்ல, இந்த ஜென்மத்தில் இந்த வீட்டுக்குள் போக முடியாது என்று மட்டும் புரிய “மாமா தாஸ் எங்க?” என்று கேட்டாள்.

தணிகை வேலன் மருமகளுக்கு தன்மையாக பதில் சொல்லியிருப்பான். அவனை பேச விடாது குறுக்க இந்த கனகா வந்து நின்றாள். 

“என்னமா நீ பேசிகிட்டு இருக்க, இந்த கிழவி இவ்வளவு கத்தியும் உன் புருஷன் வெளிய வரலைனா என்ன அர்த்தம்? இந்நேரத்துக்கு உன் புருஷன கொன்னுட்டாங்களோ என்னவோ” மிதுவின் அடி வயிற்றில் பீதியை கிளம்பினாள் கனகா.

ஆக அவள் பாரியும், மிதுவும் பேசியதை ஒட்டுக்கு கேட்டிருக்கிறாள். இது பொலிஸான பாரியின் கவனத்துக்கு வரவில்லை.

“இங்க ஒரு கிழவி, உள்ள என் மாமியார். போதாததற்கு பிரச்சினையை மடில கட்டி கூடவே கூட்டிட்டு வந்திருக்கேன்”  கனகாவை முறைத்தாள் மிது.

“என்னம்மா? மருமகளே வீட்டுக்கு முதல் முறையா வந்திருக்க, பெரியவங்க பேசினாலும் பொறுமையா போவான்னு பார்த்தா நீ பிரச்சினை பண்ணவே வந்திருக்க போலயே” தணிகை வேலன் கோபமானான்.

“ஆமாய்யா… என் பையன் போலீஸ். பிரச்சினை பண்ணத்தான் கூட்டிட்டு வந்தோம். மரியாதையா உன் பையன் எங்கன்னு சொல்லு. இவ பாட்டுக்கு வீட்டுல பார்த்த மாப்பிளையான என் பையன கல்யாணம் பண்ணி குடும்பத்தோட சந்தோசமாக இருந்திருப்பா. உன் பையன் இவளை காதலிக்கிறேன்னு சொல்லி, இழுத்துகிட்டு ஓடி குடும்பத்தை மொத்தமாக தலைமுழுக வச்சான். இப்போ ஊருக்கு வந்ததும் அம்மா கொண்டா பொண்டாட்டிய விட்டுட்டு ஓடிட்டானா? முதுகெலும்பில்லாத கோழை”

“இதோம்மா வார்த்தையை அளந்து பேசு. என் பையன பத்தி தப்பா பேசினா நாக்க இழுத்து வச்சி அறுப்பேன்” என்றான் வேலன்.

பெற்ற பிள்ளைகள் என்ன தவறு செய்தாலும் தண்டனையோ, மன்னிப்போ அது பெற்றோர்கள் வசம் தான். மற்றவர்களின் விரல் நுனியை கூட நுழைக்க விட மாட்டார்கள் என்று அறிந்தே தாஸை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டலானாள் கனகா. அவள் உள்நோக்கம் புரியாமல் தூண்டப்பட்டு வேலன் பேச, இருவருக்கிடையில் வாய்தாக்கமானது.

அன்னையை பேசினால் பாரியின் இரத்தம் கொதிக்காதா? அவனும் தணிகை வேலணை மிரட்ட ஆரம்பித்தான்.

நிலைமை கைமீறுவதை புரிந்துக் கொண்ட மிது “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?” என்று கத்தினாள்.

அவள் குரலும், சத்தமும் குட்டி நாச்சியாராக எதிரொலிக்க அனைவருமே அமைதியாக அவளை பார்த்தனர்.

“என்ன இவ நாச்சியையே மிஞ்சிடுவா போல இருக்கா…” கொஞ்சம் அதிர்ந்த சோலை சுதாரித்து “எதுக்குடி என் வீட்டு வாசல்ல வந்து கத்துற? புருஷன் மாமியாரை கூட்டிகிட்டு ஹாஸ்பிடல் போனானே. மாமியாருக்கு என்ன ஆச்சோன்னு ஒரு போன் பண்ணி கேட்டியா? நீ எங்க கேட்ப? நீ தான் உடம்பு முடியாதவ நடிக்கிறான்னு சொன்னவளாச்சே.

நானும் எதோ நாச்சி வீட்டு பொண்ணு, நாச்சி சொல்லிக் கொடுத்து புத்தி கெட்டு பேசுறன்னு அமைதியா இருந்தா, நீ புருஷன் எப்போ வெளிய போவான், உன் சிநேகிதன எப்போ வீட்டுக்கு கூப்பிடலாம்ன்னு இருந்திருக்க. அவனையே கூட்டிகிட்டு என் வீட்டு வாசலிலேயே வந்து நிக்கிற உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம். உன் அப்பத்தா புத்தி தானே உனக்கு. உன் அப்பாத்தா ஒருத்தனோட நிப்பாட்டிக்கிட்டா. நீ எப்படி?” தன் மகனான பாரிக்கு மிதுவை திருமணம் பேசியதாக கனகா கூறியதை பிடித்துக் கொண்ட சோலை மிதுவை தரக்குறைவாக பேச ஆரம்பித்தாள். இவ்வாறு பேசினால் தானே மிது கோபமடைவாள் அதை வைத்தே அவளை தாஸுக்கு பொருத்தமற்றவள் என்று அவன் வாழ்க்கையிலிருந்து துரத்தலாம் என்பது சோலையின் எண்ணம்.  

கனகா வந்த வேலையே சிறப்பாக செய்து விட்டதனால் அமைதியாக வேடிக்கை பார்கலானாள்.

“ஏய் கிழவி யாரப் பார்த்து என்ன பேசுற? என் புருஷன வரச்சொல்லு, நான் அவன் கிட்ட பேசுகிறேன்” கோபத்தின் உச்சத்துக்கே சென்றிருந்தாள் மிது.

“உன் புருஷன் உன் வண்டவாளம் தெரிஞ்சி இப்போ எந்த தண்டவாளத்துல தலையை கொடுத்து படுத்திருக்கானோ” சோலையம்மாளும் மிதுவோடு சரிக்கு சமமாக மல்லுக்கு நின்றாள்.

வெளியே இவ்வளவு அமளி துமளி நடக்கிறது. தன் கணவன் அத்தனையும் கேட்டுக் கொண்டு உள்ளே அமைதியாக இருக்கிறானா? அல்லது பாரி கூறியது போல் அவனை ஆணவக் கொலை செய்து விட்டார்களா? என்று ஒருநொடி எண்ணினாள்.

“இல்லை. மாமா என்னை பார்த்ததும் அன்பாகத்தான் பேசினார். இந்த கனகா அத்தை தான் குறுக்கப் பேசி அவரை பேச விடாமல் செய்து விட்டாள்” என்று புரிந்து போக பாரியின் புறம் திரும்பிய மிது

“எனக்கு உதவி பண்ண வந்ததற்கு ரொம்ப நன்றி. நீங்க பண்ண உதவியால என் மானத்தையே விலை பேசி, என் கணவனையே என் கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்க போல. நீங்க முதல்ல உங்கம்மாவ கூட்டிகிட்டு போங்க” என்று கைகூப்பினாள்.

“என்ன நீ உனக்கு உதவி செய்ய வந்தா நீ இப்படி பேசிகிட்டு இருக்க” மிதுவின் மேல் பாய்ந்தது கனகாதான்.

தன் பேச்சால் சோலையம்மாளை தூண்டி விட்டிருந்தாள். இப்பொழுது கிளம்பினால் இவர்கள் மிதுவோடு சமாதானமாகி கூட செல்லலாம். அது நடக்கக் கூடாது என்றால் இங்கே இருந்து தூபம் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மிது கிளம்பச் சொன்னதும் தன்னை அறியாமலே கொதித்து விட்டாள் கனகா.

“அம்மா… அமைதியா இரு. நீ பேசி வச்சது போதும்” அன்னையை கடிந்தான் பாரி.

“ஆகா இவன் வேற உஷாராகிட்டானே” மகனை முறைத்தவள் “என்னடா நீ நாம இவளுக்கு உதவத்தான் வந்தோம்…”

“உபத்தரம் பண்ணாம இருந்தாலே போதும். வா கிளம்பலாம்” என்று பாரி அன்னையை வண்டியில் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, அகல்யாவை அழைத்துக் கொண்டு வந்திறங்கினான் தாஸ்.

அவன் வீடு செல்லக் கூடாது என்பதற்காக வேண்டி தனக்கு உடம்பு முடியவில்லை என்று காரணம் கூறி, காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் அகல்யாவை அழைத்துக் கொண்டு வரும்படி கூறியிருந்தாள் மதுமிதா.

மிதுவோடு பாரியை பார்த்ததும் தாஸின் முகத்தில் அப்பட்டமாக எரிச்சலை காட்டினான். அது கழுகு பார்வையோடு தாஸையும், மிதுவையும் கவனித்துக் கொண்டிருக்கும் கனகா மற்றும் சோலையம்மாளின் கண்களுக்கு தப்பவில்லை.

“எங்கடா போய் தொலைஞ்ச? எங்க போனாலும் போனை எடுத்துட்டு போக தெரியாதா?” தாஸை பார்த்ததும் சீறிப்பாய்ந்தாள் மிது. அவள் சாதாரணமாக பேசக்கூடிய சூழ்நிலையையையா சோலையம்மா ஏற்படுத்தி வைத்திருந்தாள். அதுவும் மிது சாதாரணமாக பேசினாளே அதட்டுவது போல் தான் இருக்கும். கோபமாக பேசினால் சொல்லவா வேண்டும்?

மிது நாச்சியின் மறு உருவம் என்றால், அகல்யா மட்டும் தக்காளி தொக்கா. அவள் தான் சோலையம்மாளையே தத்தெடுத்து பிறந்தவளாச்சே. அண்ணனை மிது கோபமாகவும், அதிகாரமாக அதட்டியும் பேசினால் அண்ணனுக்காக அவள் வரமாட்டாளா? மிதுவின் மேல் சீரிப்பாய்ந்தாள் அகல்யா.

“ஏய் எங்க வந்து யாரை பேசிகிட்டு இருக்க? நீயெல்லாம் எங்க வீட்டுக்கு வரலைன்னு நாங்க யாரும் இங்க உக்காந்து அழல”

அவளை அலட்ச்சியமாக பார்த்த மிது “நான் என் புருஷன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன். நடுவுல நீ யாரு?”

“அகல்யா நீ உள்ள போ…” என்றான் தாஸ்.

“டேய் நான் உனக்காக பேசிகிட்டு இருக்கேன்” என்று அகல்யா தாஸை முறைக்க,

“டேய் தாஸு உன் தங்கச்சிய அடக்குறது இருக்கட்டும். உன் பொண்டாட்டி என்ன காரியம் பண்ணுறான்னு கேளு. அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையாமே இவன். ரெண்டு பேரும் ஜோடியா வந்திறக்கினாங்க. இவன எதுக்கு இங்க கூட்டிகிட்டு வந்திருக்கான்” என்று சோலையம்மா தாஸின் முக மாற்றத்திலையே இந்த விஷயம் அவனுக்குத் தெரியும் என்று அறிந்து கொண்டு மிது ஒரு நடத்தை கெட்டவள் என்று பேரனின் மனதில் பதிய வைக்க முயன்றாள்.

“இது வேறயா?” பாரியை கேவலமாக பார்த்தாள் அகல்யா.

“நீ யாரு என் கேரக்டரை ஜட்ஜ் பண்ண?” அவன் அகல்யாவை முறைத்தான்.

மிதுவை ஒரு பார்வை பார்த்த தாஸ் “இவ என்ன அவன் கூட தனியாவா வந்தா? கூட அவன் அம்மாவும் வந்திருக்காங்க இல்ல. அதுவும் எங்க வந்திருக்கா? நம்ம வீட்டுக்கு. மனசுல விகல்பம் இருந்தா அவனை இங்க கூட்டிகிட்டு வந்திருப்பாளா?” என்று அப்பத்தாவை பார்த்து கேட்டான் தாஸ்.

“ஆகா… பாய்ண்ட புடிச்சிட்டானே. கிழவி என்ன பேசுவாளோ” என்று பார்த்திருந்தாள் கனகா.

“உங்கம்மா நடிக்கிறான்னு சொன்ன இவ தாண்டா நடிக்கிறா. நடிச்சி… நடிச்சியே… உன்ன ஏமாத்துறா. இவன கூடவே வச்சிருந்தா தானே நீ இவளை சந்தேகப்பட மாட்ட. நீ ஒரு முட்டாள். இவ உன்ன நல்லா ஏமாத்துறா?” இன்னும் என்னவெல்லாம் சோலையம்மாள் சொன்னாளோ மிதுவுக்கு கோபத்தை அடக்கவே முடியவில்லை.  

“பாரு… பாரு… என்னெல்லாம் சொல்லுறாங்க பாரு… எல்லாத்தையும் கேட்டுகிட்டு நீ மரம் மாதிரி நிக்கிற. இப்போவே முடிவு பண்ணு. உனக்கு நான் வேணுமா? இல்ல இந்த கிழவி முக்கியமான்னு. கிழவி தான் முக்கியம்னா நீ என்னையும், நம்ம பசங்களையும் மறந்துடு” விழி தாண்டும் கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியவளின் தொண்டை கமறியிருந்தது. பிடிவாதமாக கத்திப் பேசினாலும், கோபத்தோடும், ஆத்திரத்தோடும் வெளிப்பட்ட அவள் வார்த்தைகளில் வேதனை கொட்டிக் கிடந்ததை தாஸ் நன்றாகவே உணர்ந்தான்.

“மிது ரிலாக்ஸ்… தாஸ் எதோ சொல்ல முயல மிது மயங்கி விழலானாள்.

“மிது…” என்று தாஸ் பதறியவாறு அவளை தாங்கிப் பிடித்திருக்க, சோலையம்மாளும், அகல்யாவும் முகத்தை சுளித்தனர்.

தணிகை வேலனோ பதட்டமாக மிதுவை உள்ளே தூக்கிக் கொண்டு வருமாறு கூறினான்.

“உள்ள மட்டும் போன கொன்னுடுவேன். என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போ…” தாஸின் காதுக்குள் கிசுகிசுத்தாள் மிது.

Advertisement