Advertisement

அத்தியாயம் 10

“அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான்.

“டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்டானில்லை.

“நீ வரல” என்று கேட்டவனை முறைத்தாள் மிது.

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன கேக்குற?” என்று கோபம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் தாஸ் இல்லை. மிது பேசியதால் கோபம் கன்றாலும், பைத்தியக்காரத்தனமாக உளறுகிறாள் என்ற பார்வையும், எண்ணமும் தான் தாஸிடம். அதனால் தானே அன்னையின் துணைக்கு அன்னை நடிப்பதாக கூறிய மனைவியையே அழைத்தான். மருத்துவமனைக்கு சென்றால் அன்னை நடிக்கவில்லை என்று மனைவி புரிந்துகொள்வாள். பிரச்சினை முடிந்து விடும். இங்கே ஏதாவது பேசி, பிரச்சினையை பெரிதாக்க கூடாது என்பதுதான் அவன் முடிவு.

“பெத்த அம்மா மயங்கி கிடக்கிறா. நீ என்ன உன் பொண்டாட்டிய கொஞ்சிக்கிட்டு இருக்க. வண்டிய எடுடா ஹாஸ்பிடல் போகலாம்” தாஸை திட்டிய சோலையம்மாள் மிதுவை வசைபாடவும் மறக்கவில்லை.

அன்னையை அழைத்துக்கொண்டு தாஸ் மருத்துவமனைக்கு கிளம்ப, அவன் பின்னால் அவன் குடும்பம் கிளம்பி சென்றிருந்தது.

“போய் தொல. உனக்கு பட்டா தான் புரியும்” என்று மிது வாசலை தாண்டவில்லை.

தாஸ் குடும்பம் கிளம்பி செல்வதை பார்த்த மங்களம் அமிர்தாஷினியோடும், கனகாவோடும் மிதுவின் வீட்டுக்கு ஓடாத குறையாக வந்து சேர்ந்தாள்.

மங்களம் மாமியார் மற்றும் கணவனோடு தான் சின்ன மகளை பார்க்க வந்தாள்.

சின்ன மகள் வந்ததும் மூத்த மகளை மறந்து விட்டதாக கனகா பேசிவிடக் கூடாதே. அதனால் மிதுவுக்காக வீட்டில் செய்த சில உணவுகளை அமிர்தாஷினிக்கு கொடுத்துவிட்டு வருகிறேன் என்று மங்களம் இங்கே வந்திருக்க, மிதுவின் வீட்டில் கேட்ட சத்தத்தில் சோலையம்மாள் குடும்பம் வந்திருப்பது புரிந்தது.

என்ன செய்வது என்று மங்களம் யோசிக்க, கனகாவோ “வாங்க சம்பந்தி போய் என்னன்னு கேட்போம். இன்னைக்கு உண்டு இல்லைன்னு ஒரு கை பார்ப்போம்” என்று பேச, அமிர்தாஷினி மிரண்டவளாக அன்னையைப் பார்த்து தலையசைத்து மறுத்தாள்.

மிது தாஸை திருமணம் செய்து கொண்டது அவளுடைய தனிப்பட்ட விருப்பம். அது காதல் விவகாரம். ஆனால் கனகாவோ மிது பாரிவள்ளல் வேண்டாம் என்பதற்காக வேண்டியே தாஸை திருமணம் செய்து கொண்டது போல் தினமும் அமிர்தாஷினியின் காதுபட புலம்புவாள்.

பாரிவள்ளல் அழைத்து தான் மிதுவை சந்தித்ததாகவும், அவள் குடும்பத்தோடு இந்த தீபாவளிக்கு ஊருக்கு வருவதாகவும், எதிர் வீடு காலியாத்தானே இருக்கு. அதையே அவர்களுக்காக வாடகைக்கு பார்க்கலாமென்று அன்னையிடம் தான் கூறியிருந்தான்.

“வரட்டும், வரட்டும். என் பையன் வேணாம் என்று சீமையிலே போய் மாப்பிள்ளையை கட்டிக்கிட்டா இல்ல. அப்படி என்ன அவன்கிட்ட இருக்கு என்று நானும் பார்க்கிறேன்” என்று கருவியவள் மிது குடும்பத்தோடு வந்த பின் விழுந்து விழுந்து கவனிப்பதும், உபசரிப்பதும் அம்ரிதாஷினிக்கு சந்தோசத்தை கொடுக்கவில்லை. மாமியார் தங்கையிடம் எதுவும் பேசி வைக்காவிட்டாலும், பிறகு பெரிதாக ஏதாவது பிரச்சினை செய்வாளோ என்ற அச்சம் அம்ரிதாஷினியின் மனதுக்குள் கிலியை பரப்பியது. தன் மாமியாரை பற்றி தங்கையிடம் குறை கூறவும் மனம் வரவில்லை. அன்னையிடம் அலைபேசியில் பேசும் பொழுது வீட்டில் பேசி தங்கையோடு சமாதானமாகி அவளை வீட்டுக்கு கூடிய விரைவில் அழைத்து செல்லுமாறு மட்டும் தான் கூறியும் இருந்தாள்.

அக்காவின் மாமியாரை பற்றி மிதுவுக்கு தெரியாமல் இருக்கலாம். மகளை கட்டிக் கொடுத்த மங்களத்துக்கு தெரியாதா?

சின்ன விஷயத்தை தன் அத்தை ஊதி ஊதி பெரிதாக்குகிறவள். அங்கே சென்றால் பிரச்சினையை பூதாகரமாக்கி விடக்கூடும். இங்கேயே இருப்போம் என்று மகள் கூறியதை சரியாகப் புரிந்து கொண்ட மங்களம் “இல்ல சம்பந்தி. நான் போனா என் புருஷன் என்ன திட்டுவாரு. எங்கள பேசுற சாக்குல உங்களையும் அவங்க பேசிட்டா, என் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமே. நான் யாரு பக்கம் பேச?” என்று கனகாவை தடுத்தாள்.

“வட போச்சே…..” என்ற பாவனையில் அமர்ந்து விட்டாள் கனகா.

மிதுவின் வீட்டில் என்ன நடக்கிறது, என்ன பேசுகிறார்கள் என்று கனகா காது கொடுத்து கேட்டாலும், ஒரு சில வார்த்தைகள் தவிர வேறொன்றும் அவள் காதுக்கு வந்து சேரவில்லை. வேண்டாத எதையும் அவள் கேட்டு விடக் கூடாது என்று அமிர்தாஷினி பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

எப்போ சோலையம்மாளின் குடும்பம் வெளியேறும் என்று காத்துக் கொண்டிருந்த மங்களம் மிதுவின் வீட்டுக்கு விரைந்து சென்று இருக்க, கனகாவும் அவள் பின்னாடி விரய, அமிர்தாஷினியும் கூடவே வந்திருந்தாள்.

“அம்ரிதா என்ன நீ என் பின்னால் ஓடி வந்திருக்க. உன் பசங்களை யார் பார்த்துப்பாங்க”  நீ வந்தது பத்தாது என்று. உன் மாமியாரையும் கூட்டிட்டு வந்து இருக்கியே, அறிவு இருக்கா உனக்கு? மகளை முறைக்கவும் முடியாமல், சின்ன மகளோடு பேசவும் முடியாமல் மங்களம் மாமியாரை பார்த்தாள்.

நாச்சியாருக்கும் கனகாவின் குணம் தெரியும்  அல்லவா. “ஏம்மா கனகா… மிது இருக்கிற மனநிலைல அவளால அவ பசங்கள பார்த்துக்க முடியாது. உன் பேரன்களோடு சேர்த்து என்னுடைய இந்தக் கொள்ளும் பேரபசங்களையும் பார்த்துக்க” அவளுக்கு ஒரு வேலையை கொடுத்து, பேத்தியை ஏறிட்டு “அமிர்தா நீ போய் எங்களுக்கு ஏதாச்சும் சாப்பிட சமச்சி வை. நாங்க வரோம்” சைத்ரனையும், சாஸ்வினையும் கனகா மற்றும் அம்ரிதாஷினியின் கையில் கொடுத்து அவர்களை வீட்டுக்கு அழகாக அனுப்பி வைத்தாள் நாச்சியார்.

வயதில் மூத்தவள் நாச்சியார். அவள் சொன்னால் கனகாவால் மறுக்க முடியுமா? கனகா எதுவும் பேசாமல், முகத்தில் கோபத்தை கூட காட்ட முடியாமல், நாச்சியாரை மனதுக்குள் வைத்தவாறே மருமகளோடு கிளம்பினாள்.

கனகாவின் தலை மறைந்ததும் மிதுவை தன் புறம் இழுத்த மங்களம் “அறிவு இருக்கா உனக்கு? உன் அத்தை நடிக்கிறான்னு தெரியுது இல்ல. அத மாப்பிள்ள கிட்ட போட்டு கொடுப்பியா? பெத்த தாயோட பாசத்துக்கு முன்னாடி எல்லாமே தூசு தான். அதைத்தான் ஆயுதமா வச்சி விளையாடி உன் புருஷன என் நாத்தனார் கூட்டிட்டு போயிட்டா”

“என்ன சொல்ற?” மிது புரியாது கேட்க,

“சொல்லுறாங்க… வானம் இடி இடிச்சா மழை வரும்னு. ஆனா வருமா? வராதா? என்று யாருக்கும் தெரியாது” வளமை போல் ஆரம்பித்தாள் நாச்சியார்.

“ஏய் கிழவி.…. வியாக்கியானம் பேசாம விஷயத்தை சொல்லு” கடுப்பானாள் மிது.

“ஆமாடி… உன் கோபம், ரோசம் எல்லாத்தையும் எங்க மேல காட்டு. என் பொண்ணு. அதான் உன் அத்தை. உன் புருஷனோட அம்மா… நாடகமாடி உன் புருஷன கூட்டிட்டு போய்ட்டா”

“அது தெரிந்த விஷயம் தானே ….” மதுமிதா நடித்ததை தான் மிது கண்கூடாக பார்த்தாளே,

“அடியே…  அந்த சோலை வந்ததே அவன் பேரன உன்கிட்ட இருந்து பிரிச்சி அவ கூட கூட்டிட்டு போக. அதுக்கு உன் மாமியார்காரியும் உடந்தை. நீ பேசின பேச்சுல அதுங்க ரெண்டும் சிறப்பாக காரியத்த பண்ணிட்டு போயிட்டாங்க” என்றாள் நாச்சியார்

“நான் பேசுன பேச்சுலையா?” மிது புரியாது முழிக்க,

 “ஆமா இவ புருஷன கைக்குள்ள போட்டு வச்சுக்கிட்டதும் இல்லாம, அவன காலடியில் வெச்சிருக்கா. அது அவன் அம்மா கிட்ட சொன்னா நெஞ்சு வலி வராத? அதான் வந்துருச்சு. அவன் அம்மா கூட போய்ட்டான்” “என்ன அம்மா கூட இருந்தா ரோசம் வருதா? வீரம் வருதா? நான் சொல்லுறபடி கேட்டு வீட்டுல அடங்கி தானே இருப்ப”  என்று மிது கூறியதன் பின் தான் மதுமிதா பக்காவாக திட்டம் போட்டு நடித்தாள் என்று முணுமுணுப்பது போல் நாச்சி கூற

“அவன் அம்மா கூட தானே போனான். வந்துடுவான்” என்றாள் மிது.

“இலவு காத்த கிளி போல நீ பார்த்துக்கிட்டே இரு. அவளுங்க தினமும் ஒரு காரணம் சொல்லி உன் புருஷனை உன்ன பார்க்க விடாம பண்ணிடுவாளுங்க”

“அப்படியும் கூட செய்வார்களா?” நம்ப முடியாமல் அப்பத்தாவை மிது பார்க்க,

“அத சோலையம்மா வந்த உடனே சொன்னாங்க. நாங்க வந்ததே என் பேரனையும், கொள்ளுப்பேர பசங்களையும் கூட்டிட்டு போக மட்டும் தான் என்று” என்றான் செங்கதிரவன்.

“எப்போ அப்படி சொன்னாங்க? நான் வரும் போது நீங்க ரெண்டு பேரும் செத்துப் போன மாரிமுத்து தாத்தாவ பங்கு போடுறத பத்தி இல்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க” என்று நக்கலடித்தாள் மிது. அவர்கள் அப்படி எதுவும் பேசவில்லை. நீங்கள் கற்பனையாக அப்படி பேசியதாக கூறுகிறீர்கள். அல்லது எனக்கும் எனது கணவனுக்கும் மத்தியில் பிரச்சினையை உண்டு பண்ண பேசுகிறீர்கள் என்று நினைத்து தான் மிது நக்கல் செய்தாள்

 “ஆமாண்டி எனக்கு சக்காளத்தியா வர முடியலைன்னு மூக்கை சிந்துறவ, உனக்கு சக்காளத்திய ஏற்பாடு பண்ணத்தான் உன் புருஷன கையோட கூட்டிகிட்டு போயிருக்கா” என்னயா கிண்டல் செய்யிற? நான் உன் அப்பத்தாடி என்று மிதுவை பார்த்தாள் நாச்சியார்.

“என்னது இன்னொரு பொண்ணா? தாஸுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? என்னை தவிர இன்னொரு பொண்ண தாஸ் நினச்சிக் கூட பார்க்க மாட்டான் என்று சிரித்தாள் மிது.

“நினைக்கத் தேவையில்லை. அதையும் இதையும் சொல்லி கட்டி வெச்சிடுவாங்க” என்றாள் மங்களம்.

“உயிர் பயம். உயிர் பயம் இருந்தா, மரம், மாடு, ஆடு, நாய் எது மேலேயும் தாலி கட்டுவன் ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டானா? ஜாதகம், தோஷம், பரிகாரம் என்று ஆயிரம் காரணத்தைச் சொல்லி அவன் மண்டைய கழுவி, அவனுக்கு இன்னொரு பொண்ண கட்டி வச்சிடுவாங்க. நீ புறங்கைய நக்கிக்கிட்டு நிக்க வேண்டியதுதான்” என்று பேத்தியை பயமுறுத்தலானாள் நாச்சி.

“அப்படி ஒரு நிலைமை வந்தால் அவன் சூசைட் பண்ணிக்குவானே தவிர, அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட மாட்டான்” என்று சத்தமாக சிரித்தாள் மிது.   

தன்னிடம் விவாகரத்து கேட்டவனிடம் தான் எந்த மாதிரி பேசினோம். அதற்கு அவன் எவ்வாறு நடந்து கொண்டான். தன்னுடைய பதிலில் அவன் ஆடி நின்றது தனக்கு மட்டும் தானே தெரியும் என்று ஒரு நொடி நினைத்துப் பார்த்துவிட்டு தான் மிது சத்தமாக சிரித்திருந்தாள்.

இன்னொரு பெண்ணை திருமணம் செய்தால், செய்தால் என்ன செய்தால், செய்ய நினைத்தாலே இந்த மிது அந்த பெண்ணை கொலை செய்து, அந்தப் பழியை தாஸ் மீது சுமத்தி, அவனை சிறைக்கு அனுப்பி விடுவாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும். கணவனுக்காக கொலையும் செய்வாள் பத்தினி. மிதுவும் அவளுடைய கணவனுக்காக கொலையும் செய்வாள். ஆனால் அந்தக் கணவனே துரோகம் இழைத்தால், அவனை கொலை செய்ய மாட்டாள். வெச்சி செய்வாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். வீட்டார் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதை விட, தனது கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டுவதே மேல் என்று தூக்கில் தொங்கி விடுவான் தாஸ். இன்னொரு பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி மிதுவால் மட்டுமின்றி அந்த பெண்ணாலும் அவனுக்குத் தானே துன்பம் நேரும். அதைவிட சாவு மட்டும் தான் அவனுக்கு நிம்மதியை கொடுக்கும் என்று அவனுக்குத் தெரியாதா?

அதனால் தான் அப்படி ஒரு நிலைமை வந்தால் தாஸ் சூசைட் பண்ணிக்குவான் என்று உறுதியாக கூறினாள் மிது.

ஸ்வேதா விஷயம் வேறு. ஸ்வேதாவும் தாஸும் காதலிக்கவில்லை. ஸ்வேதா தாஸை விரும்பி இருக்கிறாள். காதலை விட எதிர்கால வாழ்க்கை முக்கியம் என்று வெளிநாடு சென்றவள் இங்கே வந்ததும் எதிர்ச்சையாக தாஸை சந்தித்திருக்க, அவள் விருப்பத்தை கூறினாள். அவனுக்கு திருமணமானது அறிந்த பின் அவள் விலகி சென்றுவிட்டாள்.

அத்தோடு தாஸ் விட வேண்டியது தானே. தவளை தான் வாயால் கெடும் என்பதைப் போல் தாஸ் கோபத்தில் “உன்னை திருமணம் செய்ததற்கு பதிலாக ஸ்வேதாவை திருமணம் செய்திருந்தால், நான் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருந்திருப்பேன். என்று கூறியதோடு கோடியில் புரண்டு இருப்பேன்” என்று கூறியதுதான் மனைவியான மிதுவின் கோபத்திற்கு காரணம்.

“எப்படி நீ அப்படி கூறலாம்?” என்ற கோபம் கனரும் பொழுதெல்லாம் ஸ்வேதாவை சம்பந்தப்படுத்தி அவனை வெறுப்பேத்துவாள் மிது. அதற்காக வேறொருத்திக்கு கணவனை விட்டுக் கொடுப்பாளா? அவன் தான் அவளை விட்டு செல்ல விடுவாளா? கொன்று விடமாட்டாள்?

“தேவையில்லாமல் பேசாம உன் புருஷனுக்கு போன் போடு. இல்ல வேணாம். வேணாம். ஹாஸ்பிடல் போலாம்” என்றான் கதிரவன்.

“போய் அங்கேயும் இவ பேசி வச்சா, வீண் பிரச்சின” என்றாள் மங்களம்.

“யாரும் எங்கேயும் போக வேண்டாம். அவன் என் புருஷன். எங்க போனாலும் வீட்டுக்கு தானே வரணும். ஊரைவிட்டு ஓடிப்போய் ஏழு வருஷம் அதனால எங்களுக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் என்று தானே தெரியும். கல்யாணமாக முதல்ல ரெண்டு வருஷமா லவ் பண்ணது தெரியாதே. மொத்தமா ஒன்பது வருஷம் எனக்கு அவனைத் தெரியும். வந்துடுவான். எங்க போயிடப் போறான். பார்க்கலாம்” என்றாள் மிது.

அவள் அவ்வாறு கூறியதற்கு காரணம் அவள் கணவனை அவள் நன்கு அறிந்திருந்தமையே. அவன் தன் மீது வைத்திருக்கும் காதலும், கணவன் மீதும் அவளுக்கு இருந்த நம்பிக்கையும் அவளை அவ்வாறு பேசத் தூண்டி இருந்தது. ஆனால் அவனைப் பெற்ற மதுமிதாவை அவள் அறிந்து வைக்காதது மிது செய்தது பெரும் தவறு.

இங்கே மருத்துவமனைக்கு அழைத்து வந்த மதுமிதாவை பரிசோதித்த மருத்துவர், வீட்டில் நடந்த பிரச்சினையை சோலையம்மாள் புலம்பியதில் பிபி அதிகரித்ததால் மதுமிதா மயங்கி விழுந்திருப்பாள் என்றும், ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்றும், அதன் பின் வீட்டுக்குச் செல்லலாம் என்றும் கூறியிருந்தார்.

தாஸ் மதுமிதாவின் கையை விடாது பிடித்திருக்க, கண்விழித்தவளும் தாஸை நகரவிடாது இத்தனை வருடங்கள் அவன் பிரிவு அன்னையான அவளுக்கு எவ்வளவு கொடியது என்பதை புலம்பலானாள்.

இடை இடையே சோலையம்மாள் “உங்கம்மா இந்த நிலைமையில் இருக்கா உன் பொண்டாட்டி என்னடான்னா நடிக்கிறான்னு சொல்லுறா. மனசாட்சி இருக்கா அவளுக்கு. நாச்சி பேத்தி தானே அவ. இதுவும் பேசுவா. இதுக்கு மேலயும் பேசுவா. அவளை கட்டிக்கிட்டு நீ என்னதான் அனுபவிச்சியோ. உன்ன கொடுமை படுத்துறேன்னு எங்க கிட்டயே சொல்லுறா. என்ன நெஞ்சு அழுத்தம் அவளுக்கு. ரெண்டு புள்ளைய வேற பெத்து வச்சிருக்க. நல்லவேளை ரெண்டும் ஆம்பள பசங்களா போயிட்டானுங்க. பொட்டச்சியா மட்டும் இருந்துச்சு. சுத்தம். உன்ன பத்தி கவலைப்பட்டு கவலைப்பட்டு உங்க அம்மா போய் சேர்ந்துடுவா போல”

“ஏழு வருஷமா நான் இருக்கேன்னா செத்தேனா என்று யாருமே தேடிப் பார்க்கல. நான் ஊருக்கு வந்ததும் ஆளாளுக்கு பாசத்தை கொட்டுறீங்க” கொஞ்சம் கடுப்பாகத்தான் கூறினான் தாஸ்.

“ஏன்டா நீ பாட்டுக்கு நாங்க ஒதுக்கி வச்ச வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணி சென்னைல குடியேறிட்ட. பழிவாங்கத்தான் பொண்ண தூக்கினான்னு அந்த நாச்சி பஞ்சாயத்தை கூட்டி சந்தி சிரிக்க வச்சிட்டா. நாங்க உன்ன அப்படியாடா வளர்த்தோம்? துஷ்டனை கண்டா தூர விலக்குனு சொல்லி சொல்லியில்ல வளர்த்தோம். உன்னால எங்க குடும்பத்துக்கு பேச்சு வந்தா கொஞ்சுவாங்களா? அதான் கோபத்துல பேசாம இருந்தோம். அதுக்காக நீ எங்க கூட பேசாம இருந்துடுவியா?

அம்மா நான் பண்ணது தப்பு, அப்பா நான் பண்ணது. அப்பத்தா நான் பண்ணது தப்புனு போன் பண்ணியாவது கெஞ்ச வேணாம். நீ வீறாப்பா யாரும் வேணாம்னு இருக்க முடிவு பண்ணிட்ட. பகையாளிய கட்டி கூடவே வச்சிருக்க நாங்க உன் வீடு தேடி வந்து கெஞ்சி, கொஞ்சி உன்ன வெத்தல, பாக்கு வச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போகனுமோ? எங்களுக்கும் மானம், ரோஷம் இருக்கில்ல. மானம் ரோஷம் பார்க்காமல் பேரன்னு பாசமா உன்ன பாக்க வந்தா, அதுக்கும் அந்த நாச்சி நாக்கு மேல பல்ல போட்டு பேசுவா. அவ கெடக்குறா கூறுகெட்ட குப்பை. அவ எப்பவும் பேசிக்கிட்டு தானே இருப்பா. அவ பேச்செல்லாம் கேட்கக்கூடாது மதிக்கக் கூடாதுன்னு உன் வீட்டுக்கு வந்தா, உன் வீட்டில் நிக்கிறது யாரு நாச்சி பேத்தி தானே, உன் பொண்டாட்டி மரியாதை குறைவா எங்களை நடத்தினா, உனக்கும் அவளுக்குமிடையில எங்களால பிரச்சினை வரும். அது வேற யோசிச்சு தான் வரல. வந்திருந்தா அன்னைக்கே உன் பொண்டாட்டியோட வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கும்”

மிதுவோடு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன் நீ என்று கூறாமல், நாச்சியாரின் குடும்பம் தீண்டத்தகாதவர்கள் போல் ஒதுக்கி வைத்ததாக கூறிய சோலையாம்மாள் தாஸ் மீது தான் முழு தவறு என்பது போல் பேசியதோடு மிது உனக்கு பொருத்தமில்லாதவள், அவளிடம் பொறுமை என்பதே இல்லை. எங்கள் குடும்பத்துக்கு அவள் ஏற்றவளே இல்லை என்பதை சூசகமாக கூறினாள்.

காதலித்து திருமணம் செய்தது ஒரு குத்தமா? என் காதல் உங்க பகையாளி வீட்டு பொண்ணு மேல வந்தது தான் குத்தம் என்ற முகபாவனையிலையே அப்பத்தா மற்றும் அன்னை புலம்புவதை கேட்டிருந்தான் தாஸ்.

சோலையம்மாள் மற்றும் மதுமிதா புலம்புவதை அங்கிருந்து கேட்டுக் கொண்டிருந்த மற்றுமொரு ஜீவன் தணிகை வேலன்.

தணிகை வேலன் வீட்டிலிருந்து வரும் பொழுதே அன்னையிடமும், மனைவிடமும் “அதிகப்பிரசிங்கித்தனமாக எதையும் பேசி வைக்காதீங்க. நமக்கு தாஸோட குழந்தைகள் முக்கியம் போல, அவனுக்கு அவனோட பொண்டாட்டியும் முக்கியம். அவனுக்கு அவன் பொண்டாட்டியும் வேணும் பசங்களும் வேணும். அம்மா இல்லாம பசங்க வளரக் கூடாது. அம்மா கிட்ட இருந்து பசங்கள பிரிக்க நினைக்காதீங்க. நான் சொல்லுறத புரிஞ்சிக்கோங்க” என்று பலதடவை எடுத்துக் கூறியவாறு தான் தாஸின் வீட்டு வாசலில் வந்து அழைப்பு மணியை அழுத்தியிருந்தான்.

“படிச்சு, படிச்சு சொன்னேன். இவன் பொண்டாட்டிய பத்தி தப்பு தப்பா பேசாதீங்கன்னு. இவன் எந்திரிச்சு போனா தான் ரெண்டு பேருக்கும் புத்தி வரும்” அன்னையையும் மனைவியையும் எரிச்சலோடு பார்த்திருந்தான் தணிகை வேலன்.

ஆனால் தாஸுக்கு அன்னை மயக்கம் போட்டு விழுந்தது நடிப்பாக தெரியவுமில்லை. அப்பத்தாவும் அன்னையும் புலம்புவது அவன் மீது இருக்கும் பச்சாத்தாலும், நாச்சியாரின் குடும்பத்தின் மீதிருக்கும் கோபமும் என்று நினைத்திருந்தமையால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

மதுமிதாவை வீட்டுக்கு அழைத்து செல்லும் வரை, சென்று கொண்டிருக்கும் பொழுதும், சென்ற பின்னும் அவள் புலம்பல் மட்டும் குறையவே இல்லை.

மாலை ஐந்து மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற தாஸ் இரவு பத்து மணியாகியும் வீடு வரவில்லை என்றதும் மிது அவனுக்கு அலைபேசி அழைப்பு விடுக்கலானாள். அந்தோ பரிதாபம் அவன் அலைபேசியோ அனைத்து வைக்கப்பட்டிருந்தது.

அப்பா, அம்மா, அப்பத்தா என்று அனைவரும் பேசிய அனைத்தும் மாறி மாறி கண்ணுக்குள் வந்து போக என்ன செய்வது என்று மிது விழி பிதுங்கி நிற்க, “என்ன பிரச்சினை?” என்று அவள் முன்னாள் வந்து நின்றான் பாரிவள்லல்.

Advertisement