“டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா”
“சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன் குரல். அது அவளது கணவனின் குரல்.
“ஆமா சண்டேயானா கொஞ்ச நேரம் எக்ஸ்டராவா தூங்க வேண்டியது. மண்டேக்கும் உன் உடம்பு அந்த தூக்கத்த கொஞ்சி கேக்குறதால வேலைக்கு போக லேட் ஆகுறதுன்னு என்ன திட்டு. என்ன திட்ட காரணம் தேடிகிட்டுகிட்டு கிடக்குற கரம்பாம்பூச்சியாச்சே நீ. சீ… எந்திரி கழுத. உன் பெரிய பையன் முழிச்சி முன் முதுகுல உப்பு மூட்ட ஏறி உச்சா போறதுக்குள்ள எந்திரி. அவன் எந்திரிச்சா எந்த வேலையும் பார்க்க முடியாது” அடிக்குரலில் சீறினாள் அவன் பத்தினி.
மிது எனும் மிதுர்லாஷினி மற்றும் தாஸ் எனும் தாசந்தன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். ஏன்டா காதலித்தோம் என்று விடிந்தால் ஒரு சண்டை. பஞ்சாயத்து என்று வாழும் சராசரியான தம்பதிகள்.
இவர்களின் சண்டை இன்று, நேற்று ஆரம்பித்த சண்டையல்லவே. பரம்பரை சண்டை. பகை. தாசந்தனின் அப்பத்தா சோலையம்மாள் திருமணம் செய்யவிருந்த மாரிமுத்துவை மயக்கி மிதுலாஷினியின் அப்பத்தா நாச்சியார் திருமணம் செய்ததாக குற்றச்சாட்டு, அடிதடி, பஞ்சாயத்து, பகை என்று ஆரம்பமானது.
“எனக்கு அப்பன் பார்த்த பொண்ண பிடிக்கலைங்க. அதனால என் மனசுக்கு பிடிச்ச பொண்ண பார்த்ததும் கண்ணாலம் பண்ணிக்கிட்டேன்” என்றான் மாரிமுத்து.
பையன கேட்காம மாரிமுத்துவின் தந்தை திருமணம் பேசியது தப்பு என்று சிலரும், இந்த ஊரில் பெரியவர்கள் எடுப்பது தானே முடிவு. அது என்ன இவனா ஒரு முடிவெடுத்து கல்யாணம் பண்ணுறது? அந்த பொண்ணு வாழ்க என்னாகுறது? என்று சிலரும் பேசலாயினர். மாரிமுத்துவின் தந்தை பேச ஆரம்பித்த பின் கூட்டம் அமைதியானது.
“நடந்த கல்யாணம் இல்லையென்று ஆகாதே. சோலையம்மா என் நண்பனோட பொண்ணு. அவளுக்கு மாப்புள பாக்குறது என் பொறுப்பு” என்றதும் சோலையம்மாளின் அன்னை கையெடுத்து கும்பிட்டாள்.
உயிர் தோழன் இறந்து விட்டதால் தான் அவனது மகளான சோலையம்மாளை தனது மகன் மாரிமுத்துவுக்கு பேசி முடித்து விட்டு வந்தார். மகனிடம் கேளாமல் வாக்கு கொடுத்ததும் தவறு தான் என்று புரிந்து கொண்டு சோலையம்மாளின் வாழ்க்கைக்கு பொறுப்புதாரியாகி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார் மாரிமுத்துவின் தந்தை.
ஆனால் யாரும் அறியாத உண்மை சோலையம்மாளும், நாச்சியாரும் எதிரும் புதிருமாக இருக்கும் தோழிகள். தன்னை அவமானப்படுத்தவென்றே நாச்சி தனக்கு பேசிய மணமகனை மயக்கி திருமணம் செய்ததாக சோலையம்மாளின் மனதில் பதிந்து போனது.
மாரிமுத்துவை விட எல்லா விதத்திலும் சிறந்து விளங்கிய மணமகனாக பாண்டியன் அமைந்ததில் சோலையம்மாளின் பகை எரிமலையாய் தூங்கிப் போனது.
கல்யாண வயதில் நின்ற நாச்சியின் மகள் மதுமிதாவுக்கு மாப்பிள்ளையாக வந்தவன் தான் சோலையம்மாவின் மகன் தணிகை வேலன். திருமணமெல்லாம் சிறப்பாகத்தான் நடந்தேறியது. திருமணமன்று மதுபாலாவின் அண்ணன் செங்கதிரவன் போதையில் சோலையம்மாவின் குடும்பத்தை பற்றி எதோ பேச, அது வாய்தாக்கமாகி, பின்பு அடிதடியென்று சென்று இறுதியாக பஞ்சாயத்தில் நின்றது.
தன் அண்ணனால் தன் வாழ்க்கையே கேள்விக் குறியானதை எண்ணி அவன் மேல் கோபத்தோடு அழுது கொண்டு மதுமிதா நிற்க, நடந்த திருமணம் இல்லையென்றாகாதே, மணப்பெண்ணை அப்படியே அனுப்புவதா? என்ன நடக்கப் போகிறதோ என்று ஊர் மக்கள் வேடிக்கை பார்களாயினர்.
“கட்டின தாலிய கழட்டிவிட்டுட்டு இந்த புள்ளய திருப்பி அனுப்புற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சுக்காரியில்ல. நடந்த கண்ணாலம் நடந்தது தான். ஆனா ஒன்னு. இவ ஊட்டாரோட எந்த கொடுக்கல், வாங்கலும் இவ வச்சிக்கக் கூடாது. கூடாதுன்னா கூடாது தான். மீறி வச்சுக்கிட்டா, அவ ஊட்டுக்கே அனுப்பிடுவேன் பாத்துக்கோங்க. இது தான் என் முடிவு” தண்டட்டி குலுங்க முந்தானையை உதறி இடுப்பில் சொருகினாள் சோலையம்மாள்.
மகன் பக்கம் தவறிருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியுமா? மகளை விட முடியுமா? என்றோ நடந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு சோலையம்மாள் பிரச்சினையை பெரிதாக்குவதாக நாச்சியார் ஆர்ப்பாட்டம் செய்யலானாள்.
முடிவை எடுக்கும் உரிமை மதுபாலாவிடம் வந்தது. குடும்பமா? தாலி கட்டிய கணவனா? யாரை தேர்வு செய்வாள்? அண்ணன் செய்தது தானே தவறு சட்டென்று முடிவெடுத்தவள் கணவனுக்காக மொத்த குடும்பத்தையே துச்சமென தூக்கியெறிந்தாள் மதுபாலா.
எரிமலையாய் தூங்கிக் கொண்டிருந்த பகை அன்றிலிருந்து இரு குடும்பத்தாருக்கிடையிலும் கொழுந்துவிட்டெறிந்தது.
மதுபாலாவுக்கு ஐந்து பிள்ளைகள் தாஸ் என்கிற தாசந்தன் நாலாவதாக பிறந்தவன். மிது என்கிற மிதுர்லாஷினி செங்கதிரவனுக்கு மூன்றாவதாக பிறந்தவள்.
வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் படித்ததனால் அண்ணன், தங்கைகளின் பிள்ளைகள் சந்தித்துக் கொள்ளத்தான் இல்லை. ஆனால் ஊர் திருவிழா, விசேஷங்கள் என்று வந்தால் இரண்டு குடும்பங்களும் முறைத்துக் கொள்வதும், வாய்தாக்கமாவதும் வழக்கம். அது குழந்தைகளிடமும் கொஞ்சம் கொஞ்சமாக பகையை வளர்க்க காரணமாக அமைந்தது.
கல்லூரியென்று வரும் பொழுது எல்லோரும் ஒரே கல்லூரிக்குத்தான் செல்ல வேண்டும். யாரும் ஒரே வகுப்பில் படிக்க நேர்ந்ததில்லை. பார்க்க நேர்ந்தால் முறைத்துக் கொண்டு செல்வார்கள். அல்லது வம்பு வேண்டாமென விலகிச் சென்று விடுவார்கள்.
“இவள் தான் என் மாமன் மகளா?” என்று தாஸ் மிதுவை பார்க்க, அவனுக்குள் காதல் பூத்திருந்தது. இவன் பார்வையில் மிதுவுக்குள்ளும் காதல் தீ மூட்டிக் கொண்டது. கொஞ்சம் நாள் பிடிக்காததை போல் முறைத்துக் கொண்டு திரிந்தவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் காதலையும் பரிமாறிக்கொள்ள, வீட்டாரை திருமணத்திற்கு எவ்வாறு சம்மதம் சொல்ல வைப்பது என்பதில் வந்து நின்றது.
“ஆ… எனக்கு அண்ணா, அக்கா இருக்காங்க. அவங்களுக்கு கல்யாணமானாதான் என் கல்யாணம்” என்றாள் மிது.
“எங்க வீட்டுல மட்டும் என்னவாம்? அக்காங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாக்கிருச்சு. அண்ணனுக்கு கல்யாணமானா தான்மா என் பைல் மேல வரும். அவனுக்கு பிறகு தான் என்ன பத்தி யோசிப்பாங்க. தங்கச்சி வேற இருக்காளே. அவளுக்கு பண்ணிட்டு தான் உனக்கு என்று சொல்லுவாங்களோ தெரியல” பாவமாய் முத்தை வைத்துக் கொண்டு கூறியவன் அவளிடம் முத்தத்தை எதிர் பார்க்க, அவன் முகவாயில் இடித்தாள் மிது.
தங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறதே என்று இருவரும் சிரிக்க. விதி அவர்களை பார்த்து சிரித்தது.
தாஸ் சென்னையில் ஐடி கம்பனியில் சேர்ந்து இரண்டு வாரங்களாகும் பொழுது, மிது கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். மேற்படிப்பு சென்னை செல்லலாம். அங்கு சென்றால் தாஸோடு காதல் வாழ்க்கையில் ஐக்யமாகலாமென்று கனவு காணலானாள். அவள் கனவில் அலாரம் வைத்து எழுப்பியிருந்தாள் அவள் அப்பத்தா நாச்சியார்.
“வெளியூர் போய் படிக்கிறதாக இருந்தா, உன் புருஷன் கூட போய் படி. அவன் படிக்க வேணாம்னு சொன்னா… புள்ளய பெத்து சோத்த திணி. நீ என்ன வேணாலும் பண்ணு. முதல்ல கண்ணாலத்த பண்ணு” என்றாள் நாச்சியார்.
“என்ன கிழவி விளையாடுறியா? அக்காகே இன்னும் கல்யாணமாகல. படிக்கிறதுக்காக நான் கல்யாணம் பண்ணனுமா? இதோ இருக்கு சோத்தாங்கை. இங்க இருக்கு வாயி. இப்படி சோத்த உள்ள தள்ளுறத விட்டுட்டு எவனாச்சும் வம்படியா தலையை சுத்தி வாய்க்குள்ள சோத்த திணிப்பானா? நீ சொல்லுறது அப்படியில்ல இருக்கு” அப்பத்தாவை முறைத்தாள் மிது.
“பட்டணத்துக்கு படிக்க போனாளாம் ஒருத்தி, கட்டிக்கிட்டு வந்தானாம் ஒரு பொறுக்கிய. புள்ளய கொடுத்துட்டு கைவிட்டுட்டானாம் அவன் இந்த சிருக்கிய, வாழ்க போச்சேன்னு வச்சாளாம் ஒப்பாரி” எம்புட்டு கத கேட்டிருக்கோம் என்ற பாணியில் ராகத்தோடு தண்டட்டி ஆட கையை ஆட்டியவாறு அப்பத்தா பாட, மிது முறைத்துக் கொண்டே இருந்தாள்.
“அம்மா எதுக்கு அவள வம்பிழுக்குற?” அன்னையை கடிந்தவாறே வந்த செங்கதிரவன் மகளின் தலையை தடவிவிட்டு “உன் அக்காளுக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிளைக்கு தம்பி ஒருத்தர் இருக்காறாம். அவருக்கும் பொண்ணு பார்க்க சொல்லி இருக்காங்க. நம்ம வீட்டுல ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது எதுக்கு வெளில பார்க்கணும். அதான் பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டேன். போட்டோல உன்ன பார்த்து அவங்க சம்மதம் சொல்லிட்டாங்க” என்றான் மிதுவை பெற்றவன்.
“எனக்கு எதுக்கு இப்போவே கல்யாணம்” என்ன சொல்லி மறுப்பது என்று மிது முழிக்க,
ஆக அவர்கள் பெண் பார்க்க மட்டும் வரவில்லை. பரிசம் போடவும் தான் வருகிறார்கள் என்று புரிய மிதுவுக்கு அழுகை முட்டிக்கு கொண்டு வந்தது.
வீட்டாரை சமாளித்து தாஸுக்கு அலைபேசி அழைப்பு விடுத்தால் அவளால் பேசவே முடியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள்.
“ஏய் என்னடி ஆச்சு. இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற?” தங்களது காதல் விவகாரம் வீட்டாருக்கு தெரிய வந்து அதனால் அவளை அடித்து விட்டார்களோ என்ற பதை பதைப்போடு அமர்ந்தவாறு பேசிக் கொண்டிருந்தவன் எழுந்தே விட்டான்.
“வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டாங்க. பொண்ணு பார்க்க வராங்களாம்” அழுதவாறே அவள் சொன்னது அவனுக்கு தெளிவாக கேட்கவில்லை.
“அட சீ… அழுகைய நிறுத்து. தெளிவா சொல்லு. மனுஷன கடுப்பேத்திக்கிட்டு” சற்று முன் தான் வேலையில் எதோ குளறுபடி செய்து மேலாளரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தான். கோபத்திலும், எரிச்சலிலும் இருந்தவனுக்கு மிதுவின் அழைப்பு மழைச்சாரல் போல் மனதில் புது உற்சாகம் பாயத்தான் செய்தது. அவள் அழுகை பயத்தை கொடுத்ததும் உண்மை தான். ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு அவள் புரியாத பேச்சு மேலும் ஏறிச்சிலூட்டியதில் அவள் மீதிருந்த உரிமையில் சிடுசிடுத்தான்.
“பாத்தியா, பாத்தியா நீயும் என் மேல கோபப்படுற” மூக்கை உறிஞ்சியவாறு அழுகையை நிறுத்தியவள், அவனை குற்றம் சொல்ல ஆரம்பித்தாள்.
“இதுக்கொண்ணும் கொறச்சலில்ல” தலையில் அடித்துக் கொண்டவன் பல்லைக் கடித்தவாறு அவளை சமாதானப்படுத்தி விட்டு, அவளிடமிருந்து விஷயத்தை வாங்கினான்.
“பொண்ணு பார்க்கத்தானே வராங்க. என்னமோ குடிமுழுகிப் போனது போல அழுகுற” மீண்டும் சிடுசிடுத்தான்.
“புரியாம பேசாதே” என்று விலாவரியாக மிது கூறிய பின் என்ன செய்வது என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
அடுத்து வந்த நாட்களில் அவசரமாக திட்டம் போட்டு, மிதுவை வீட்டிலிருந்து சென்னைக்கு கிளப்பி, திருமணம் செய்து கொண்டிருந்தான் தாஸ்.
மிதுவை தேடிய வீட்டாருக்கு அவள் சென்னை சென்றிருப்பதும், தாஸை திருமணம் செய்திருப்பதையும் அறிய நேர்ந்ததும் மீண்டும் இரண்டு குடும்பங்களுக்கு நடுவே பூகம்பம் வெடித்தது.
“உன் புத்தி தானே உன் பேத்திக்கு இருக்கும். இழுத்துக் கிட்டு ஓடுற புத்தி. அதான் ஒன்னும் தெரியாத என் பேரன மயக்கி இழுத்துகிட்டு ஓடிட்டா…” என்றாள் சோலையம்மாள்.
“வந்துட்ட வாயை வாடகைக்கு எடுத்துக்கிட்டு” சோலையம்மாளை பார்த்து கழுத்தை நொடித்த நாச்சி “தேன் கூட்டக் கலைச்சது உன் பேரன். தேனையும் திருடிக்கிட்டு போயிட்டான். கொட்டு மட்டும் எங்களுக்கா?” வளமை போல் ஆரம்பித்தவள் “என் பேத்தியா இழுத்துகிட்டு ஓடினா? செவனேன்னு வீட்டுல கெடந்தவள, போன போட்டு என்ன பேசினானோ உன் பேரன். நடுராத்தில வீட்டை விட்டு கிளம்பிட்டா. வாய் கூசாம ஓடிட்டான்னு சொல்லுற.
ஒன்னும் தெரியாத பச்சை மண்ணாமே. பாத்தியாடா கதிரு… உன் தங்கச்சிய கண்ணாலம் கட்டின அன்னைக்கே மயக்கி, குடும்பமே வேணாம்னு சொல்ல வச்சவ சொல்லுற பேச்ச கேட்டியா”
மதுமிதாவுக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. “அம்மா… நடந்தது என்னன்னு தெரியுமில்ல. சும்மா என் குடும்பத்தை பத்தி தப்பா பேசாதே”
“போடி போடி போக்கத்தவளே… நான் உனக்கு அம்மானு இன்னும் ஞாபகம் இருக்கா? சந்தோசம். எது உன் குடும்பம்? நீ வாழ போனியே அதுவா? சரி இருந்துட்டு போகட்டும். அம்மானு கூப்பிட்டியே அதுக்கு மறுவாத கொடுத்து உன் பையன கூப்டு என் பேத்தி எங்கன்னு கேளு. நாளைக்கே ரெண்டு பேரும் ஊருக்கு வரணும்” என்றாள் நாச்சியா.
“எதுக்கு? உன்ற பேத்தியை என் வீட்டு மருமகளாக்கி ஒட்டிக்கலாம் என்று என்னமோ? அது ஒருநாளும் நடக்காது” என்றாள் மதுமிதா. எல்லா பிரச்சினைக்கும் காரணமே அண்ணன் செங்கதிரவன் தானே என்ற கோபம் அவளுள் இருக்க, அவள் மகள் என் மருமகளா என்ற வெறுப்பு அவளை அவ்வாறு பேச வைத்திருந்தது.
“அப்படி சொல்லு என் மருமகளே” மதுமிதாவுக்கு நெட்டி முறித்த சோலையம்மா “என்னைக்குமே நான் சொல்லுறது தான் தீர்ப்பு. என் பையன் அஞ்சு புள்ள பெத்தான். நாலாவதா பொறந்தவன் தாஸ் பொறக்கலைனு நினைச்சிக்கிறோம். அவன் தேவையே இல்ல. நீ அவனை சேர்த்திகிரியோ, செல்லம் கொஞ்சிரியோ உன் பாடு” என்று நாச்சியாரரை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
பெற்ற மகன் சோலையம்மாவின் சொல்லை மீறவே இல்லை அதனால் அன்று அப்படி முடிவை எடுத்தவள் சொல் பேச்சு கேளாத பேரனை விட்டு விட்டாள்.
தாஸ் நாச்சியாவுக்கு மகள் வயித்து பேரன் தான். இதுநாள் வரை மகளே முறைத்துக் கொண்டிருந்ததில் பேரப்பசங்களை கொஞ்ச முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சேரலாமென்று நினைக்க, அவள் எண்ணத்தை புரிந்து சோலையம்மாள் கிண்டல் செய்தது நாச்சியின் ஈகோவை தூண்டியிருந்தது.
“உன் பேரன நான் எதுக்கு கொஞ்சனும்? சொல் பேச்சு கேளாத மாடு வேலி தாண்டினா சூடு போடுறது ஒரு காலம். தலை முழுகிறது இந்த காலம். எனக்கு என் பேத்தியே வேணாங்குறேன். உன் பேரன் மட்டும் எதுக்கு” என்று விட்டாள்.
இரண்டு குடும்பங்களிலும் உள்ள கிழவிகள் செய்த அலப்பறையில் தாஸும், மிதுவும் குடும்பத்தாரோடு சேராமல் சென்னையில் தனியாக வாழ ஆரம்பித்திருந்தனர்.
திடீர் திருமணம், வாடகைக்கு வீடு, பொருட்கள் வாங்கியது, மிதுவின் மேற்படிப்பு என்று தாஸின் சம்பாத்தியம் கரையலானது. காதல் கண்ணை மறைக்க, செலவெல்லாம் அவனுக்குப் பெரிதாக தோன்றவில்லை.
மிதுவின் மேற்படிப்பு முடியும் தருவாயியில் முதற் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள்.
இருவரும் வேலைக்கு சென்றால் தான் வீட்டு வாடகை, வீட்டு செலவு, குழந்தையின் செலவு மற்றும் இதர செலவுகளை சமாளித்து கொஞ்சமாவது சேமிக்க முடியும் என்பதால் மிதுவும் வேலைக்கு செல்ல குழந்தையை யாரிடம் கொடுப்பது என்ற பிரச்சினை வந்து நின்றது.
ஒருவழியாக குழந்தை சைத்ரனை டே கேயார் சென்டரில் விட்டு இருவரும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்க, காதலிக்கும் பொழுதும், திருமணமான புதிதில் அவர்களுக்குள் இருந்த அன்பும், ஒற்றுமையும் இருவருக்கிடையில் மெல்ல மெல்ல காணாமல் போக ஆரம்பித்த நேரம் மீண்டும் கருவுற்றாள் மிதுர்லாஷினி.
இரண்டாவது குழந்தை சாஸ்வின் பிறந்த பின் இருவருக்கிடையில் எப்பொழுதும் போர் தான்.
இரவில் தூங்காது சிணுங்கி கொண்டே இருக்கும் குழந்தையை தட்டிக் கொடுத்தால் மட்டும் தான் தூங்குவான். தூக்கத்தை தொலைத்த மிது அடுத்த நாள் வேலைக்கு சென்று தூங்கி வழிய திட்டு தான் கிடைத்தது.
கோபத்தை யாரிடம் காட்டுவாள்? இருக்கிறானே… வீட்டில் கணவன் என்ற கைப்பொம்மை இருக்கிறானே. வீட்டுக்கு வந்தவனை வாங்கு வாங்கு என்று வெளுத்து வாங்கி விடுவாள்.
இவளிடம் பேச்சு வாங்க வேண்டுமா என்று நேரம் தாழ்த்தி வீடு வருபவனுக்கு வீட்டு வேலை தலைக்கு மேல் இருக்கும்.
“நல்லா கொட்டிகிட்ட இல்ல. பாரு பாரு உன் பையன் விளைட்டு ஜாமானெல்லாம் எப்படி போட்டு வச்சிருக்கான்னு. எல்லாம் அடுக்கி வைக்கிற. அப்படியே சிங்குல இருக்குற பாத்திரத்த அலசிடு, துணியெல்லாம் மடிச்சிட்டு வந்து தூங்கு. இல்ல செத்த நீ”
“ஏன்டி மனுஷன் வேல செஞ்சி வீட்டுக்கு வந்தா… வீட்டு வேலையும் செய்யணுமா? இவ்வளவு நேரமும் நீ என்ன பண்ண? உண்மைய சொல்லு டீவி தானே பார்த்த?”
திருமணமான புதிதில் இருவரும் தொலைக்காட்ச்சி பார்ப்பது, வாரம் ஒரு சினிமா, பார்க், பீச் என்று சென்றவர்கள் தான். குழந்தைகளின் வரவால் வீட்டு வேலைகளை செய்யவே நேரம் பத்தவில்லை. இதில் அவள் டீவி பார்த்தாள் என்றதும் கொதித்தாள்.
கையில் கிடைத்த தோசை கரண்டியால் அவனை வண்ட வண்டையாக திட்டியவாறு வெளுத்து வாங்கியவள் அவன் முடியாமல் அமர்ந்த பின் தான் அமைதியானாள்.
“மூணு வயசுலையே மூத்தவன ப்ரீஸ்க்கூல் சேர்க்கணுமான்னு கேட்டதுக்கு என்ன சொன்ன? உங்க குடும்பம் போல எங்க குடும்பம் தத்தி இல்ல. படிச்ச குடும்பம் என்று சொன்னியே. இப்போவே ஸ்கூல் போட்டதுக்கு… ஹோம் வர்க்கு, க்ராப்ட்டு, பேப்பர் வர்க்கு என்று உசுர வாங்குறானுங்க. எல்லாம் பண்ணுறதா? சாஸ்வின பார்த்துப்பேனா?” கண்களில் நீர் வழிய நின்றாள்.
என்றோ ஒருநாள் விளையாட்டாக சொன்னதை பிடித்துக் கொண்டு பேசியவளை மலைத்துப் பார்த்தவன் “ஆ… உ… னா… டேம தொர” எரிச்சலாக இருந்தாலும் அவன் சின்ன மகன் செய்யும் அழிச்சாட்டியம் நன்கு அறிந்ததால், நேரங்காலத்தோடு வீடு வந்திருக்க வேண்டுமோ என்று நொந்து கொண்டான்.
அவளை சமாதானப் படுத்தாமல் அமைதியாக சென்று வேலைகளை பார்க்க, அவளோ அறைக்கு சென்று மறைந்தாள்.
வேலைகளை முடித்து விட்டு இவன் தூங்க வந்தால் குட்டிப்பையன் இன்னும் தூங்காமல் அவளை படுத்திக் கொண்டிருந்தான்.
குழந்தையை தூங்க வை என்று கூறாமல் வேலை செய்ய சொல்வதே மேல் என்று எண்ணியவன் அமைதியாக அவனிடத்தில் தலை வைத்து தூங்கலானான்.
அன்றொரு ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு விடுமுறை நாள் என்பதால் கொஞ்ச நேரம் தூங்கலாமென்று தாசந்தன் தூக்கக்கலக்கத்தில் உளறியிருக்க, வளமை போல் அவன் மனையாள் அவனை வண்ட வண்டையாக திட்ட ஆரம்பித்தாள்.
“சே என்ன வாழ்க இது? காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டேன்னு பேரு. சந்தோசமா இருக்கேனா? ஒரு நாள் கூட நிம்மதியா தூங்கியிருக்கேனா? காலையில இவ நொய் நொய்யென்று உசுர எடுக்குறது பத்தாதென்று, எனக்கு பொறந்த குட்டிச் சாத்தான் ராத்திரில தூங்க விடாம சிணுங்கிகிட்டே இருக்கான்” புலம்பிக் கொண்டே இளையவன் சாஸ்வினை குளிப்பாட்டி உணவூட்ட ஆரம்பித்தான். மூத்தவன் சைத்ரன் எழுந்து வந்து விளையாட ஆரம்பிக்கவும், இளையவனை தொட்டிலில் போட்டவன் மூத்தவனை குளிப்பாட்டி உணவூட்டலானான்.
அதற்குள் ஒரு வாரம் சேர்த்து வைத்த துணிகளை துவைத்து காயப்போடலானாள் மிது.
இவன் குழந்தைகளை பார்த்துக் கொண்டால் தான் அவளால் வீட்டு வேலைகளை பார்க்க முடிகிறது.
இருவரில் யாராவது ஒருவருக்கு உடம்பு முடியாமல் போனால் அந்தோபரிதாபம் தான்.
வீட்டு வேலைக்கு ஆள் வைத்தால் தேவலாமென்று அதற்கும் ஏற்பாடு செய்து பார்த்தான் தாசந்தன்.
“வீடா அது? குப்பை கிடங்கு. எங்க பார்த்தாலும் விளையாட்டா சாமான் கொட்டிக் கெடக்கு. அத பொறக்கியே என் இடுப்பு ஒடஞ்சி போச்சு” பக்கத்து வீட்டில் கூறியிருந்தனர் இங்கு வேலைக்கு வரும் பல பெண்கள்.
மிது தாஸை முறைத்தாள். குழந்தைகளுக்கு விளையாட இவ்வளவு விளையாட்டு ஜாமங்கள் எதற்கு என்று அவள் கோப்பட்டதுண்டு. அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தி அள்ளிக் கொண்டு வருவான். பாதி அவன் பொருட்களாகவும், கேம் சீடிக்கலாக இருக்கும்.
“அடப்பாவி நைடீஸ் கிட். குழந்தைகளுக்கு வாங்கிட்டு வர்ற சாக்குல உனக்கு வாங்குறியா?” மிது பத்ரகாளியாகி அவனை வெளுத்து வாங்குவாள்.
குழந்தைகளோடு சேர்ந்து இவனும் விளையாடி பொருட்களை கண்ட இடத்தில் போட்டு விடுவான்.
“குழந்தையா அது? குட்டிச் சாத்தான். பொருட்களை அடுக்கி வச்சா பூராத்தையும் கொட்டிடுது. அந்த வீட்டுக்கு வேலைக்கு போக நம்மளால முடியாது” வேலைக்கு ஆட்கள் வர மறுக்கவே இவர்களே வேலைகளை பார்க்க வேண்டிய நிலை.
திருமணமான இந்த ஏழு வருடங்களில் நிம்மதியை தொலைத்து, சந்தோசத்தை தொலைத்து, சண்டை சச்சரவோடு எதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் இருவரும்.