Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 5

மாலை பாவனி அவள் வேலை பார்க்கும் கிளினிக்கில், முதுகு வலியின் காரணமாக வந்திருந்த நோயாளிக்கு… காலை நீட்டி மடக்கி பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்க… அப்போது அவளைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக நர்ஸ் வந்து சொன்னார்.

இதோ இப்போ முடிஞ்சிடும். உட்கார சொல்லுங்க.” என்றாள்.

பயிற்சி முடிந்து நோயாளி கிளம்பி விட… தனது கைகளைக் கழுவி கொண்டு வந்தவள், நர்சிடம் அவளைப் பார்க்க வந்தவரை உள்ளே அனுப்ப சொன்னாள்.

உள்ளே வந்தவனுக்குப் பின் இருபதுகளில் வயது இருக்கும். அவனைப் பார்த்தால் அவனுக்கு எதுவும் பிரச்சனை இருக்கும் போலத் தெரியவில்லை…. ஒருவேளை அவன் வீட்டில் வேறு யாருக்கும் முடியாமல் இருக்கலாம் என நினைத்துக் கொண்டாள்.

அவனை உட்கார சொல்லிவிட்டு, அவனே பேசட்டும் என அவள் காத்திருக்க…

என் பேர் விஷால், உங்க அப்பா ராஜீவ் அனுப்பினார்.” என்றதும், பாவனிக்கு முதலில் எரிச்சல் தான் வந்தது. ஆனாலும் இழுத்து வைத்த பொறுமையோடு…

அவர் அனுப்பினது இருக்கட்டும், நீங்க வந்த காரணத்தைச் சொல்லுங்க.” என்றாள் நேரடியாக.

எங்க வீட்ல எனக்குப் பொண்ணு பார்க்கிறாங்க. உங்க அப்பா தான் என் பெண்ணுக்கும் மாப்பிள்ளை பார்க்கிறோம். நேர்ல சந்திச்சு பேசி பாருங்கன்னு சொன்னார். உங்ககிட்ட சொல்லையா?”

நீங்க ஒரு போன் பண்ணி எனக்குச் சந்திக்க விருப்பமான்னு கேட்டுட்டு வந்திருக்கலாம். அப்படிச் செஞ்சிருந்தா, ரெண்டு பேருக்குமே நேரம் விரயம் ஆகி இருக்காது.”

ஒ… நான் உங்களைப் பார்க்க வந்தது வீண் வேலைன்னு சொல்லாம சொல்றீங்க. வந்ததுக்குக் கொஞ்சம் பேசிட்டு போயிடுறேங்க.” என்றவன்,

எனக்கு உங்க தம்பியை பத்தி எல்லாமே தெரியும். உங்க அப்பா சொன்னார்.”

நான் அபுதாபியில் ஒரு வங்கியில வேலை பார்க்கிறேன். நல்ல சம்பளம். உங்களுக்குமே அங்க நல்ல வேலை கிடைக்கும். நாம் ரெண்டு பேர் நல்லா சம்பாதிக்கப் போறோம். உங்க தம்பிக்கு வேண்டிய வசதி செஞ்சு பார்த்துக்கலாம்.” என்றதும்,

இப்போ எங்க குடும்பத்துல பணம் கஷ்ட்டோம்னு நாங்க உங்ககிட்ட சொன்னோமே… உங்க உதவி எல்லாம் தேவை இல்லை. நான் என் குடும்பத்தை விட்டு எங்கும் வர்றதா இல்லை. நீங்க கிளம்புங்க.” என்றாள்.

ஓகே… இதுக்கு மேல என்னாலும் இறங்கி வரமுடியாது.” என்றவன், விடைபெற்று சென்றுவிட….. பாவனி வெகு நேரம் யோசனையாக அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.

அன்று பாவனி வீடு திரும்பத் தாமதமாகிவிட்டது. கடையின் உள்ளே ஒரு பணியாளர் மட்டும் சுத்தம் செய்து கொண்டிருக்க…. ஈஸ்வர் வெளியே நின்றுதான் கைபேசியில் பேசிக் கொண்டு இருந்தான்.

பாவனி அவனைப் பார்த்ததும் தயங்கி நிற்க… ஈஸ்வரும் பிறகு பேசுவதாகச் சொல்லி கைபேசியை வைத்து விட்டான்.

பாவனி தன்னை நினைத்து மனதிற்குள் எதுவும் ஆசை வளர்த்துக் கொள்வாளோ… என ஈஸ்வருக்குச் சற்று அச்சமாக இருந்ததால்… அவன் இப்போதெல்லாம் அவளை நேராகப் பார்ப்பதைக் கூடத் தவிர்க்கத்தான் செய்கிறான்.

கடையைச் சுத்தம் செய்து விட்டு பணியாளர் கிளம்ப… ஈஸ்வர் உள்ளே செல்ல… பாவனியும் அவன் பின்னே சென்றாள்.

விமல் இங்க இல்லையா?” பாவனியே பேச்சை ஆரம்பிக்க…

அவன் படிக்கணும்னு அப்பவே போயிட்டான்.” என்றான் ஈஸ்வர்.

நீங்க ஏன் என்னைப் பார்த்தா விலகி போறீங்க. நான் அப்படி உங்களை என்ன செஞ்சிடுவேன்?” என நேரடியாக அவள் கேட்க…

தெரியலை… நீதான் எங்க அம்மாகிட்ட எதோ சொல்லி இருக்க… என்னைப் பிடிக்கலைனாலும் விமலை பிடிச்சா போதும் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு. அதுக்கு எதுவும் உள்ளர்த்தம் இருக்கா…” என ஈஸ்வர் திருப்பிக் கேட்க…

இப்பவும் சொல்றேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவருக்கு விமலை கண்டிப்பா பிடிச்சிருக்கனும் தான். அதுல எதுவும் மாற்றுக் கருத்து இல்லை.” என்றாள் பாவனி.

அது சரிதான். ஆனா அது என்ன என்னைப் பிடிக்கலைனாலும், விமலை பிடிச்சா போதும்னு சொல்றது. உன்னைப் பிடிக்காதவனை நீ கல்யாணம் பண்ணிப்பியா?” என்றதும்,

அது நான் உங்களுக்காக சொன்னது. உடனே என் மேல காதலான்னு கேட்காதீங்க. காதல் எல்லாம் இல்லை. எங்க அம்மா கல்யாணம் செஞ்சுக்க சொன்னாங்க.  உங்களுக்கு விமலை பிடிக்கும். அதனால நீங்கன்னா சரின்னு தோனுச்சு. அன்னைக்கு யோசிக்காம அப்படி சொல்லிட்டேன். ஆனா இப்போ எனக்குப் புரியுது இதெல்லாம் சரி வராது.”

இன்னைக்கு ஒருத்தன் வந்து கேட்டான். நாம கல்யாணம் பண்ணிட்டு உன் தம்பிக்குத் தேவையான பணம் கொடுத்திடலாம்னு.”

விமலுக்குத் தேவை பணம் இல்லை. அவனுக்குப் புரிஞ்சது அவ்வளவு தான். என்னால விமலை விட முடியாது.”

எனக்குன்னு ஒரு குடும்பம் வந்திட்டு, நான் விமலை கவனிக்காம விட்டுட்டா… அப்புறம் என்னையே என்னால மன்னிக்க முடியாது.” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட ஈஸ்வர்,

பாவனி, நீ இவ்வளவு எல்லாம் யோசிக்காத. விமலே நல்லபடியா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகலாம். அவனுக்காக நீ உன் வாழ்க்கையை வாழாம இருக்கணும்னு அவசியம் இல்லை.” என்றான்.

அதை நீங்க சொல்லாதீங்க. கல்யாணம் பண்ணிட்டு வாழுறது மட்டும் தான் வாழ்க்கையா… தனியா இருக்க முடியாதுன்னு தானே நீங்களும் நினைக்கிறீங்க.”

உங்களால இருக்க முடியும்னா… என்னாலையும் இருக்க முடியும். இதுக்கு மேல எனக்கு உங்களோட இதைப் பத்தி மட்டும் இல்லை… எதைப் பத்தியும் பேச விருப்பம் இல்லை.” என்றவள், அங்கிருந்து சென்று விட்டாள்.

பாவனி பிறகு ஈஸ்வரின் கண்களில் படவே இல்லை… ஊர்வசி வந்தால் கூட முன்பு மாதிரி அவரிடம் பேசுவது இல்லை. வளர்மதியே எதாவது சென்று அவர்கள் வீட்டில் கொடுக்கச் சொன்னாலும், விமல் வந்ததும் அவனைப் போகச் சொல்லுங்க என்றாள்.

ஊர்வசிக்கு தான் புரியவில்லை. வளர்மதிக்கு மகளின் எண்ணம் புரிந்து தான் இருந்தது. ஆனால் இப்போது அவள் இருப்பதை வைத்தே… நிலைமையைப் புரிந்து கொண்டார். அவர் விமலையுமே இப்போது ஈஸ்வரிடம் அடிக்கடி செல்ல விடுவது இல்லை.

நான் போனா என்ன மா?” என்றான் விமல்.

இதுக்கு முன்னாடி எல்லாம் யார் வீட்டுக்கும் போயிருக்கியா என்ன? இப்போ மட்டும் என்ன? ஒரு அளவுல இரு.” என்றுவிட்டார்.

ஒருமுறை ஈஸ்வர் அவன் வீட்டில் இருந்து வெளியே வந்தவன், விமல் அவன் வீட்டுக்கு செல்வது பார்த்து அவனை அழைத்தவன், “என்ன டா இப்போ எல்லாம் வரவே மாட்டேங்கிற?” என்றதற்கு, “அம்மா விட மாட்டேங்கிறாங்க.” என விமல் உண்மையைச் சொல்லிவிட்டான். விமலுக்குப் பொய் சொல்லவும் தெரியாது.

விமல் சென்றதும், “ஆமா இப்போ எல்லாம் பாவனி கூட நம்ம வீட்டுக்கு வர்றது இல்லை. அவங்க வீட்டுக்கு போனா நல்லா தான் கவனிக்கிறாங்க. ஆனா முன்னாடி மாதிரி பேசுறது இல்லை. நல்லாவே வித்தியாசம் தெரியுது.” என்றார்.

ஒருநாள் இரவு வேலை முடிந்து வந்த பாவனியை ஈஸ்வர், அவன் கடையின் முன்பு வழிமறித்துப் பேசினான்.

விமலை என்கிட்டே விட முடியாத அளவு நான் என்ன பண்ணேன்? அங்கிள்ன்னு முதல்ல என்னைத் தேடி வந்தது யாரு? இப்போ அவன் தள்ளி நிற்கிறது எனக்குக் கஷ்ட்டமா இருக்காதா?” என்றதும்,

நான் எதோ சொல்லி இப்படி நடக்கிறதா நினைக்கிறீங்களா? நாம பேசினதை நான் வீட்ல சொல்லவே இல்லை. எனக்கு விமல் சந்தோஷம் தான் முக்கியம். அவன் உங்களோட இருக்கும் போது சந்தோஷமா, பாதுக்காப்பா இருக்கான். அப்புறம் நான் ஏன் அதைக் கெடுக்கப் போறேன்?” என்றாள்.

இதுக்குதான் நான் எதுவும் வேண்டாம்னு நான் பாட்டுக்கு இருந்தேன்.” எனத் தனக்குள்ளையே புலம்புவது போலச் சொல்லிவிட்டுச் சென்றான்.

வீட்டிற்கு அடுத்த இடம் கடை தானே… இருவரும் வீட்டின் அருகே தான் நின்று பேசிக்கொண்டும் இருந்தனர். ஊர்வசி அவர்கள் இருவர் பேசுவதையும் கேட்டின் உள்ளே நின்று கேட்டிருந்தார்.

ஓ அப்போ அன்னைக்குப் பாவனி சொன்னது ஈஸ்வரை தானா.. இவன்தான் எதோ சொல்லி மறுத்து இருக்க வேண்டும் அதனால்தான் பாவனி இவர்கள் வீட்டிற்கு வருவதைக் கூடத் தவிர்க்கிறாள் என்று புரிந்தது.

வீட்டிற்கு வந்த பாவனி, “ஏன் டா இப்போ எல்லாம் உன் அங்கிளை பார்க்க போறது இல்லையா? என்கிட்டே கோபிக்கிறார்.” என்றதும், “அம்மாதான் போக வேண்டாம்னு சொன்னாங்க. எனக்கே அங்கிள்கிட்ட பேசாம ஒருமாதிரி இருக்கு.” என்றான்.

ஏன் மா?” என பாவனி அவள் அம்மாவை பார்க்க…

நான் பேச வேண்டாம்னு சொல்லலை… ஒரு அளவுல இருக்கச் சொன்னேன். நாம என்ன நிரந்தரமா இங்க இருக்கப் போறோமா… இந்த வீட்டுக்காரங்க காலி செய்யச் சொன்னா…வேற வீட்டுக்கு போய் தானே ஆகணும்.” என்றதும்,

அப்பவும் நான் வரமாட்டேன். இங்கதான் இருப்பேன்.” என்றான் விமல் சற்றுப் பிடிவாதமாக.

இப்போது எதாவது மறுத்துப் பேசினால்… அவ்வளவு தான். பெரிய ரகளையில் இறங்கி விடுவான்.

சரி டா நாம இங்கயே இருக்கலாம். நீ போய் உன் அங்கிள் கிட்ட பேசிட்டு வா..” என்றதும் விமல் குஷியாகச் சென்று விட்டான்.

அவன் சென்றதும், “பாவனி, நீ என்ன எனக்கு எதுவும் புரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா? இந்த வீட்டுக்கு போட்ட அக்ரீமென்ட் முடிஞ்சதும், நாம இங்க இருந்து வேற வீட்டுக்கு போறோம்.” எனச் சொல்லிவிட்டு வளர்மதி சென்றார்.

விமல் இங்கு வந்த பிறகு இன்னுமே நன்றாக மாறிக் கொண்டிருக்கிறான். அவனுக்குக் குடிக்கக் குளிர்பானங்கள் கொடுக்க மாட்டார்கள். அதனாலோ என்னவோ… விமலுக்கு அதைக் குடிக்க வேண்டும் என்று பேராவல் இருக்கும். சில நேரம் இவர்களுக்குத் தெரியாமல் குடித்தும் விடுவான். அன்றெல்லாம் சற்று ஹைப்பராக இருப்பான். ஆனால் ஈஸ்வர் தனக்குக் குளிர்பானம் பிடிக்கவே பிடிக்காது. அதனால கெடுதி தான். அதைக் குடிக்காமல் இருப்பதால் தான் எதையும் இழக்கவில்லை எனச் சொல்லியதில் இருந்து விமலே இப்போது குளிர்பானத்தைத் தொடுவதே இல்லை.

Advertisement