Advertisement

மூடி வைத்த மனம் திறந்ததே

அத்தியாயம் 17

அடுத்த மூன்று மாதத்தில் அவந்திகாவுக்கு ஒருவழியாக அவள் கேட்டது போல வீட்டோடு மாப்பிள்ளை அமைந்தது. பையனின் பெற்றோர் கிராமத்தில் இருக்க… பையன் மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்ததால்…. அவன் பெற்றோர் மாமனார் மாமியாரோடு சேர்ந்து இருப்பதற்குச் சம்மதம் சொல்லிவிட்டனர்.

திருமணத்திற்கு ராகவி மட்டும் சிங்கப்பூரில் இருந்து வந்து இருந்தாள். பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் இருந்ததால் அவர்களை அழைத்து வரவில்லை. அவளின் மாமனார் மாமியார் வருடத்தில் சில மாதங்கள் வந்து இவர்களோடு தங்கி இருப்பார்கள். இப்போது அவர்கள் இருந்ததால்…. அதோடு கணவனும் தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொன்னதால்… திருமணத்தைச் சாக்கிட்டு அம்மாவையும் தம்பி மகளையும் பார்க்கும் ஆவலில் வந்திருந்திருநாள்.

தம்பி மகளுக்கு உடைகள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைய வாங்கிக் கொண்டு திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பே வந்திருக்க… கார்னிகாவும் தன் அத்தையிடம் ஒட்டிக் கொண்டாள்.

ஈஸ்வரின் திருமணதிற்கு அவந்திகா வீட்டில் அவள் பெற்றோர் மட்டுமே வந்து கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல்… ஈஸ்வரின் வீட்டில் எல்லோரும் செல்வதாக இருந்தனர்.

சனிக்கிழமை மாலையே திருமண நிச்சயத்திற்குச் செல்ல அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். பாவனி மருத்துவமனையில் இருந்து வந்ததும், குளித்து உடை மாற்றியவள், முதலில் தான் கிளம்பிவிட்டு மகளைக் கிளப்பலாம் என்று அவள் தயாராகிக் கொண்டிருக்க… கட்டிலில் அவள் எடுத்து வைத்திருந்த அணி மணிகளைக் கார்னிகா எடுத்து பார்த்துக் கொண்டிருக்க… அப்போது ஈஸ்வர் அறைக்குள் வர… “என் பட்டு குட்டி இன்னும் ரெடி ஆகலையா?” என ஈஸ்வர் கேட்க….

இப்பவே போட்டா… கொஞ்ச நேரத்தில எல்லாத்தையும் களைச்சிடுவா… அப்புறமா போட்டுக்கலாம்.” என்றாள் பாவனி.

அதற்குள் மெத்தையில் இருந்த நெகப்பூச்சை எடுத்துத் தந்தையிடம் கொடுத்த கார்னிகா, அதை அவள் கால்களில் போட்டுவிடச் சொல்லி காலைக் காட்ட…. கட்டிலின் முன்பு தரையில் மண்டியிட்டு உட்கார்ந்த ஈஸ்வர், மகள் கேட்டுக் கொண்டதை சிரத்தையாகச் செய்தான்.

மகளின் குட்டி விரல்களுக்கு நெயில் பாலிஷ் போட்டுவிட்டு, அந்தச் சின்னப் பாதத்தில் முத்தமிட்டவன், கட்டிலில் இருந்த பட்டுப் பாவாடை சட்டையை அணிவித்து, பாவனி எடுத்து வைத்திருந்த நகைகளையும் போட்டு விட்டான். கைகளுக்குப் பிளாஸ்டிக் வளையலை அணிவித்தபடி, “பட்டுக்கு தங்க வளையல் வாங்கணும் டா…” என்றதும்,

வளர்ற குழந்தைக்குத் தங்க வளையல் வாங்குவீங்களா…” என பாவனி கண்ணில் மை வைத்துக் கொண்டே கேட்க…

ம்ம்… கவரிங்க நகை எல்லாம் நீ வேணா போடு… என் பொண்ணுக்குத் தங்கம் தான்.” என்றான்.

பெரிய ராஜ பாம்பரை.” எனப் பாவனி கிண்டலாகப் பார்க்க….

அதற்குப் பதில் சொல்லாது, “என் பொண்ணு ஜம்முன்னு கிளம்பிட்டா…” என்றவன், “அம்மாவை விட நீங்க தான் பட்டு அழகா இருக்கீங்க.” என்றான்.

கார்னிகா லிப்ஸ்டிக் எடுத்துக் கொடுத்து, அழகாக உதடு குவிக்க…. அதைப் பார்த்து ஈஸ்வருக்குச் சிரிப்பாக இருந்தாலும், மகளின் இதழில் லிப்ஸ்டிக்கை பேருக்கு ஒற்றி எடுத்தவன், “போட்டாச்சு டா குட்டி.” என, அப்பா மகள் செய்யும் அலும்பை பாவனி ரசித்துப் பார்த்திருந்தாள்.

மகளைத் தயார் செய்து அவளை அறையின் வெளியே விட்டு, ஈஸ்வர் உடைமாற்ற… பாவனியும் புடவைக் கட்டி முடித்தவள், அவனை அவளுக்கு நெக்லஸ் போட்டுவிடச் சொல்ல…

என்ன எல்லாம் வேலை வாங்கிற….” எனச் சொல்லிபடி ஈஸ்வர் நகையை அவளுக்குப் போட்டுவிட….

உங்க பொண்ணுக்கு பண்ணும் போது மட்டும் இதெல்லாம் தெரியாது. எனக்குப் பண்ணனும்னா மட்டும் எல்லாம் சொல்வீங்க.” என, ஈஸ்வர் சிரிப்பை வாயிக்குள் அடக்கியபடி நகையை அவளுக்குப் போட்டு விட்டவன், மனைவியைப் பின்னால் இருந்து அனைத்து, அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “நீயும் அழகா தான் டி இருக்க.” என்றான்.

சொல்லனுமேன்னு எல்லாம் சொல்லாதீங்க ஈஸ்வர்.” என்றதும், பெரிதாகச் சிரித்தவன், “நான் சொன்னாலும் சொல்லலைனாலும், என் பொண்டாட்டி அழகி தான்.” என்றான்.

அதைப் பார்த்து சிரித்த பாவனியும் ஒருமுறை கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்தவள், அறையின் கதவை திறக்க….அதற்காகவே காத்திருந்தது போல அவள் மகள் உள்ளே வந்தாள்.

நேராகத் தந்தையிடம் சென்றவள், “அப்பா குத்துது.” எனக் கழுத்தில் இருந்த நகையைக் காட்டி சொல்ல….

குத்துதா டா…” என்றவன் அந்த நகையைக் கழட்டி விட…. அணிந்திருந்த உடையும் குத்துவதாகச் சொல்லி அதையும் கார்னிகா அவளே கழட்ட ஆரம்பிக்க…

இதுக்குத்தான் சொன்னேன் போகும் போது போட்டுக்கலாம்னு. இனிமே இதைத் திரும்பி போட மாட்டா.” என்ற பாவனி கணவனை முறைக்க…. ஈஸ்வர் அங்கிருந்து நழுவினான்.

பாவனி வேறு நல்ல உடையை மகளுக்கு அணிவித்து வெளியே அழைத்து வந்தாள். விமல் கடையைப் பார்த்துகொள்ள… பாவனியின் அம்மாவையும் அழைத்துக் கொண்டு காரில் சென்றனர்.

நிச்சயம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் மணமேடையில் சேர்ந்து நிற்க…. இவர்களும் சென்று வாழ்த்திவிட்டு வந்தனர்.

மறுநாள் காலை திருமணதிற்கு மகளின் பட்டுப்பாவாடை சட்டையைப் பையில் வைத்து எடுத்துக்கொண்டு சென்ற பாவனி, மண்டபத்திற்குச் சென்றதும் அதைப் போட்டுவிட…. கார்னிகாவும் ஒன்றும் சொல்லாமல் அணிந்து கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டினர் பார்க்க நல்லடியாகத் தான் தெரிந்தனர். மண்டபத்தின் அருகே இருந்த ஹோட்டலில் தான் அறை எடுத்து தங்கி இருந்தனர். திருமணம் நல்லபடியாக முடிய… இவர்களும் விருந்துண்டு வீட்டிற்கு வந்தனர்.

கார்னிகா வரும் வழியிலேயே உறங்கி இருக்க… அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு, ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

அவந்திகா கேட்டபடியே மாப்பிள்ளை அமைஞ்சிடுச்சு. இனிமேயாவது அவ ஒழுங்கா இருந்த சரிதான்.” என ஊர்வசி சொல்ல….அவளாவது ஒழுங்காக இருப்பதாவது என ஈஸ்வர் நினைத்துக் கொண்டான்.

நீ இன்னைக்கே கிளம்பனுமா?” என மகளைப் பிரியும் வருத்தத்தில் ஊர்வசி ராகவியிடம் கேட்க….

ஆமாம் என்ன பண்றது. நீங்க எங்க வீட்டுக்கு வந்தே ரொம்ப நாள் ஆச்சே…. நீங்க எப்ப மா வர்றீங்க?” என்றாள் ராகவி.

வரணும் தான், ஆனா இந்தச் சின்னக் குட்டியை விட்டு எங்கும் கிளம்ப முடியாதே…” என்றார்.

அவளையும் தூக்கிட்டு வாங்க. நாம எல்லாம் பார்த்துக்கலாம்.” என்ற ராகவி பாவனிடம், “உனக்கு ஓகே வா பாவனி.” எனக் கேட்டதும், அவள் என்ன சொல்லுவாள். சரி என்றாள்.

சின்னக் குழந்தை டி அவ…. அவ அங்க போய் இருப்பாளா? உனக்கு எப்படி இருந்தாலும் வேலைக்குப் போகணும். பெண்ணைப் பத்தி எல்லாம் அக்கறை இல்லை.” என ஈஸ்வர் பாவனியிடம் கத்த… பாவனி அமைதியாக இருந்தாள்.

இங்க பக்கத்தில கூட்டிட்டு போனாலே… இவன் ஆயிரம் பத்திரம் சொல்லுவான். நான் இவன் பெண்ணைச் சிங்கப்பூர் கூட்டிட்டு வந்திட்டு, அங்க என்னை நிம்மதியா இருக்க விடுவானா என்ன?” என ஊர்வசி மகனை முறைக்க….

ஆமாம் அப்படித்தான்.” என்ற ஈஸ்வர், “கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொல்ல வேண்டியது. பண்ணிட்டு பொண்டாட்டி பிள்ளைன்னு இருந்தாலும், அதுக்கும் குறை சொல்ல வேண்டியது. இதுக்குதான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். இருக்க விட்டீங்களா.” என்றவன் எழுந்து கடைக்குச் சென்றுவிட…. இவன் என்ன இப்படிப் பேசுகிறான் என்பது போல ராகவி பார்த்தாள்.

தன்னையிட்டு பாவனியை வேறு அவன் கத்தியது ராகவிக்கு ஒருமாதிரி இருக்க… அவள் பாவனியை பார்க்க…. அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள்.

Advertisement