Advertisement

அவளைப் பார்த்து முறைத்தவன், “அவந்திகாவை கல்யாணம் பண்ணிட்டு நான் சந்தோஷமா இருக்கிறதா? ஏன் டி உனக்கு என் மேல கொலைவெறி… அவ அவங்க அப்பா அம்மா பேச்சையே கேட்க மாட்டா… இதுல என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்குச் சந்தோஷமான வாழ்க்கை வேற கொடுக்கிறவளா?”

அவகிட்ட இன்னைக்கு அதுதான் பேசினேன். ஏன் உங்க அப்பா அம்மாவை வீணா கஷ்ட்டபடுத்துற? உனக்குக் கல்யாணம் பண்ற எண்ணம் இருக்கான்னு கேட்டே கேட்டுட்டேன்.”

அவளுக்கு யார் வீட்ல போயும் அட்ஜஸ்ட் பண்ணி இருக்க முடியும்னு தோனலையாம். அதனால வீட்டோட இருக்க மாப்பிள்ளைனா ஓகேன்னு சொல்றா.”

உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லுன்னு சொன்னேன்.” என்றவன், “பாவனி உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். அவந்திகாவை நான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருந்தா… அது எப்பவோ நடந்திருக்கும். எனக்கு அவ மேல அப்படி ஒரு எண்ணமே இல்லை. அதனால நமக்குள்ள இந்தப் பேச்சு திரும்பி வர்றது எனக்கு இஷ்ட்டம் இல்லை.” என ஈஸ்வர் சொன்னதற்கு,

யார் ஆரம்பிச்சா… நானா ஆரம்பிச்சேன்? நீங்க தான் ஆரம்பிச்சீங்க.” என்றாள் பாவனி.

நீ வெளிப்படையா பேசலை… ஆனா உன் மனசுக்குள்ள இருந்தது, அது எனக்குத் தெரியும்.” என்றவன் திரும்பி படுத்துக்கொள்ள, பாவனியும் விளக்கை அனைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

விளக்கமாகப் பேசி விட்டோம், மறுநாளில் இருந்து தெளிவாக இருப்பாள் என்று பார்த்தால்… காலையில் எழுந்ததில் இருந்து ஒரு மாதிரி தான் இருந்தாள்.

என்ன ஒரு மாதிரி இருக்க?” என ஈஸ்வர் கேட்டதற்கு,

எனக்கு இன்னுக்கு வேலைக்குப் போக வேண்டாம்.” என்றவள், மருத்துவமனைக்கு அவளே அழைத்து இரண்டு நாட்கள் விடுமுறை என்று சொல்லிவிட்டாள். முழு நேரமும் மகளோடு தான் இருந்தாள். காலையில் சிறிது நேரம் அவள் வீட்டுக்கும் சென்றிருந்தாள். அவள் அம்மா வேலை பார்க்க கணினியின் முன் உட்கார்ந்ததும் தான் எழுந்து வந்தாள்.

மதியம் அவளே சமைத்தாள்… பிறகு அவளே மகளுக்கு மதிய உணவும் கொடுத்தாள்.

ஊர்வசியால் பேத்தியின் பின்னே எல்லாம் ஓட முடியாது. பேத்தியை இழுத்து கால்களுக்குள் வைத்து, பத்து நிமிடத்திருக்குள் ஊட்டி முடித்து விடுவார்.

பாவனி பொறுமையாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாதம் எடுத்து மகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். கார்னிகாவும் வீட்டை வளைய வந்தபடி உண்டவள், தந்தை இருக்கும் அறைக்கும் சென்றாள்.

ஈஸ்வர் வேலையில் கவனமாக இருந்தாலும், அப்பா என இவள் அழைப்பதற்கு அவன் பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் விட மாட்டாள். ஈஸ்வர் வேலை பார்த்தபடி, “என் செல்லம் வந்திருக்கா…” என்றதும், வாயில் உணவு இருந்ததால்… ஆமாம் எனத் தலை மட்டும் அசைத்தாள். மகளின் பக்கம் பார்வையைத் திருப்பிய ஈஸ்வருக்கு அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

இவள் இப்படி அடிக்கடி வருகிறாள் என அவன் கதவை சாற்றிக் கொண்டு வேலைப் பார்த்தால்…. அவன் திறக்கும் வரை கதவை தட்டிக் கொண்டே இருப்பாள். அவளுக்கு அடிக்கடி வந்து தந்தையை எட்டி பார்த்து விட்டு செல்ல வேண்டும்.

ஈஸ்வர் சொல்லாமலே மாலையில் மகளைத் தூக்கிக் கொண்டு கடையில் சென்று இருந்தாள். அங்கேயே மகளை விளையாட வைத்து விடுவாள். அன்று விமலும் வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

இரவு கணவனுக்கு நெய் விட்டு முறுகலாகத் தோசை சுட்டு அவள் கொடுக்க… சட்டினி சாம்பாரோடு ஈஸ்வர் உண்ண… பக்கத்தில் உட்கார்ந்து அவன் மகளும் உண்டாள்.

மறுநாளும் பாவனி வீட்டில் இருந்தவள், மாலையில் மகளோடு எங்காவது வெளியே செல்லலாம் என நினைத்து, “பார்க் போவோமே ?என மகளிடம் கேட்டவள், அப்பாவை போய்க் கூப்பிடு என்றாள்.

பார்க்கிற்குச் சற்றுத் தூரம் செல்ல வேண்டும். ஈஸ்வரோடு என்றால் வண்டியில் சென்று விட்டு வரலாம்.

கார்னிகா உள்ளே சென்று ஈஸ்வரின் வேட்டியை பிடித்துப் பார்க் பார்க் என இழுக்க….

இரு… இரு…” என்றவன், உள்ளே வந்த மனைவியை பார்த்து, “இவளுக்கு இப்போ யாரு பார்க்கை நியபகப்படுத்தினது?” எனக் கேட்க…

கொஞ்ச நேரம் போயிட்டு வரலாமே… அங்க போனா நல்லா விளையாடுவா.” என பாவனி சொல்ல….

ஹே… உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு. ஹவுஸ் ஹஸ்பண்டா இருந்தா இப்படித்தான். நானும் வெளியே வேலைக்குப் போயிருக்கனும்.” என்றான்.

வெளிய வேலைக்குப் போயிருந்தா கூட வேலை நேரத்தோட போயிருக்கும். நீங்க வீட்ல இருக்கேன் பேருன்னு பொழுதுக்கும் வேலைதான் பார்க்கிறீங்க. வாங்க கொஞ்ச நேரம் போயிட்டு வரலாம். அப்புறம் வந்து வேலை பாருங்க.” என்றாள்.

ஈஸ்வர் உடைமாற்றி விட்டு வர… மூவரும் வண்டியில் சென்றனர். பார்க்கின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே நடந்தனர். 

கார்னிகா பெற்றோரை விட்டுவிட்டு ஆளுக்கு முன்னே நடந்து செல்ல….

இரு இவ என்ன பண்றான்னு பார்க்கலாம்.” என்ற ஈஸ்வர் மனைவியோடு பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து கொள்ள…

சற்றுத் தூரம் சென்ற கார்னிகா திரும்பி பார்த்தவள், பெற்றோரை காணாமல் பயப்படவே இல்லை. பக்கவாட்டில் வந்து பார்த்தவள், பெற்றோறரைப் பார்த்ததும் சிரித்துவிட்டு மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.  

கொஞ்சம் கூடப் பயப்படுதா பாரு.” என ஈஸ்வர் சொல்ல….

அவளுக்கு அவங்க அப்பா அப்படி எல்லாம் விட்டுட்டு போக மாட்டருன்னு தெரியும்.” என்றாள் பாவனி பெருமையாக.

மகளை அங்கே சிறிது நேரம் விளையாட விட்டு, பிறகு பாவனி கோவிலுக்குச் செல்லலாமா எனக் கேட்க, மூவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு பிறகு அப்படியே இரவு உணவு உண்ண உணவகதிற்கும் சென்றனர்.

கார்னிகா அவளுக்காகப் போடப்பட்ட உயரமான இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அவளே உண்ண வேண்டும் என்று சொல்ல….

ஒண்ணரை வயது கூட இன்னும் ஆகலையே டி இவளுக்கு. ஹோட்டலுக்கு வந்து இந்தப் போடு போடறா….” என ஈஸ்வர் மகளை மிரண்டு போய்ப் பார்க்க….

பெரிசானதும் வார வாரம் எங்காவது கூட்டிட்டுப் போகச் சொல்லி கேட்பா… இப்பவே ரெடியா இருந்துக்கோங்க.” என்றாள் பாவனியும் மிரட்டுவது போல….

“வார வாரம் வெளிய போகணும்னா நான் எங்காவது முகமுடி போட்டு கொல்லை தான் அடிக்கப் போகணும்.” என அவன் சொன்னதும், அதை கற்பனையில் கண்டுவிட்டு பாவனி சிரித்தாள். 

ஊர்வசிக்கும் உணவை வெளியவே வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர். தாயும் மகளும் அறைக்குச் சென்று விட…. ஈஸ்வர் அவன் அம்மாவோடு பேசிக் கொண்டிருந்தான்.

பார்க்குன்னு போனோம், அப்படியே கோவில், ஹோட்டல்ன்னு போயாச்சு….” என ஈஸ்வர் சொல்ல…

அடிக்கடி இல்லைனாலும் எப்பாவது போகணும் தானே…. இன்னைக்குப் பாவனி வீட்ல இருந்ததுனால போனீங்க.”

பாவனி பார்த்துக்கிற மாதிரி என்னால கார்னிகாவை பார்த்துக்க முடியலை. பாவனி பொறுமையா சாதம் ஊட்டி விடுவா…. சாயங்காலமும் மகளுக்கு டிரஸ் மாத்தி விட்டு நல்லா பார்த்துக்கிறா…”

இந்த வயசுல குழந்தைகளும் வெளிய போய் விளையாட நினைக்கும் தானே….” என ஊர்வசி சொல்ல…. ஈஸ்வரும் ஆமோதித்தான்.

அதன் பிறகு ஈஸ்வர் கடைக்குச் சென்றவன் கடையைப் பூட்டியதும் தான் வீடு வந்தான். அறைக்குள் சென்றதும் பார்த்தது உறங்கிய மகளையும், சோகமாக இருந்த மனைவியையும் தான்.

பாவனி என்ன தான் டி உனக்குப் பிரச்சனை? நீ ரெண்டு நாளா ஆள் சரி இல்லை. நான் இன்னைக்கு வெளிய வந்தது கூட உனக்காகத்தான். அப்போ எல்லாம் நல்லா தான இருந்த…. இப்போ என்ன வந்தது?”

பாவனிக்கு முரளி இருக்கும் இடத்திற்கு வேலைக்குச் செல்ல இஷ்ட்டம் இல்லை. அதைச் சொல்ல முடியாமல் இருந்தவள், பிறகு சொல்லித்தான் ஆக வேண்டும் என நினைத்து ஈஸ்வரிடம் எல்லாம் சொல்லி விட்டாள்.

வேலைக்குப் போகதே என்றுதான் சொல்வான் என்று நினைத்தாள்.

“வெளிய போற இடத்தில… இல்ல பஸ்ல கூட இந்த மாதிரி ஆட்கள் இருப்பாங்க தான…. அதுக்காக வெளிய போகமலே இருக்க முடியுமா?

நீ அவன்கிட்ட பேசினது சரி தான். தப்பு பண்ண அவனே தைரியமா வரும்போது உனக்கு என்ன? நீ எப்பவும் போலப் போ…. எதுனாலும் பார்த்துக்கலாம்.” என்றான். அதன் பிறகே பாவனி தெளிவாக இருந்தாள்.

இன்னைக்கு நீ சொன்னது எல்லாம் நான் கேட்டேன் தான…  இப்போ நான் சொல்றது நீ கேளு.” என்றவன், மனைவியை இழுத்து அனைத்துக் கொண்டான்.

இரவு தாமதமாக உறங்கினாலும் பாவனி காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்குச் செல்லக் கிளம்பினாள்.

ஈஸ்வர் கடையைத் திறந்து வைத்துவிட்டு வந்தவன், மனைவியோடு காலை உணவை உண்டு…. அவனே அவளைப் பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றான். 

எப்போதும் வாயிலில் இறக்கி விடுபவன், இன்று வண்டியை நிறுத்திவிட்டு அவளோடு உடன் சென்றான்.

உள்ளே சென்றதுமே, “உங்களைச் சீப் வந்து பார்க்க சொன்னாங்க.” என நர்ஸ் வந்து சொல்ல…. பாவனியோடு ஈஸ்வரும் சென்றான்.

அவர்கள் மருத்துவமனையின் சீப் ஒரு பெண்மணி தான். வயது ஐம்பதுகளில் இருக்கும்.

திடிரென்று லீவ் எடுத்ததற்கு எதாவது சொல்வாரோ என பாவனி பயந்து கொண்டு செல்ல….

நர்ஸ் என்கிட்டே அன்னைக்கு நடந்தது பத்தி சொன்னாங்க பாவனி. நீங்க என்கிட்டையே வந்து நேர்ல பேசி இருக்கலாம்.” என்றார்.

அவ கொஞ்சம் பயந்திட்டா போல… நேத்து தான் என்கிட்டையே சொன்னா… அவளுக்கு வேலைக்கு வரவே இஷ்ட்டம் இல்லை. நான்தான் கூடிட்டு வந்தேன்.” என்றவன்,

வீட்ல சின்னக் குழந்தையை விட்டுட்டு வேலைக்கு வரா…. அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியலை… அவங்களையும் அவ தம்பியையும் அவதான் பார்த்துக்கிறா… ஏற்கனவே அவளுக்கு ஏகப்பட்ட டென்ஷன், இதுல வேலைக்கு வந்த இதத்திலேயும் அவளுக்குத் தொல்லைனா…. என்ன பண்றது மேடம் நீங்களே சொல்லுங்க.” என்றான் தெளிவாக.

நடந்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். இது மாதிரி இனிமேல் நடக்காது.” என்றவர், “நீங்க நல்ல மனிதர் ஈஸ்வர். எடுத்ததும் அடிதடின்னு இறங்காம பொறுப்பா பேசுறீங்க.” என்றதும்,

நான் கோபத்துல கை நீட்டினாலும், அது மேலும் சிக்கலை தான உருவாக்கும். எனக்கு மேலும் பிரச்சனை பெரிசு பண்ண வேண்டாம். தீர்வை மட்டும் சொல்லுங்க.” என்றான்.

என் மேல நம்பிக்கை வைங்க. நான் பார்த்துக்கிறேன்.” என்றதும் ஈஸ்வர் அவரிடம் விடைபெற்றுச் சென்றான்.

மருத்துவமனைக்கு வந்த முரளி, பாவனி அவள் கணவனோடு வந்திருக்கிறாள் என்றதும், மிகவும் பயந்து போனான்.

முரளியை அழைத்துச் சீப் விசாரிக்க…. “நான் சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினேன்.” என்றான்.

இது உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்.” என்றவர், அவனை அவர்களின் இன்னொரு கிளைக்கு மாற்றிவிட்டு, அங்கருந்த ஒருவரை இங்கே முரளியின் இடத்திற்குக் கொண்டு வந்தார்.

பாவனி அன்று மருத்துவமனையில் நிம்மதியாக வேலை பார்த்துவிட்டு சென்றாள்.

இரவு அவர்கள் அறையில் ஈஸ்வர் மனைவியைச் சீண்டினான்.

நான் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்வேன்னு தான நினைச்ச…. நான் அப்படிச் சொல்லி இருந்தா உன்னோட ஈகோ என்ன ஆகி இருக்கும் சொல்லு.” என்றதும்,

நான் என் ஈகோவை காட்றதுக்காக வேலைக்குப் போகலை ஈஸ்வர். என் குடும்பத்தோட சுயமரியாதைக்காகப் போறேன்.”

நாளைக்கு நீங்க உங்க பெண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுத்த சம்பந்தி வீட்டு தயவை எதிர்பார்த்து இருக்க விரும்புவீங்களா சொல்லுங்க. இல்லைனா உங்க பொண்ணு தான் அப்படி விட்டுடுவாளா?” என்றதும், ஈஸ்வர் யோசிக்க ஆரம்பித்தான்.

நாளைக்கு இது போல அவனுக்கு எதாவது நடந்தால்… அவன் மகளும் இதைத்தானே செய்வாள். அது எப்படி ஈகோ ஆகும். தான் இத்தனை நாள் சரியாக மனைவியைப் புரிந்து கொள்ளவில்லையோ என நினைத்தான்.

ஆண்களுக்கு நிறைய விஷயம் கணவனாக மட்டும் இருக்கும் போது புரியாது. தன் மகளோ மகனோ வந்த பிறகு தான் புரிந்து கொள்வார்கள்.

Advertisement