Advertisement

அத்தியாயம் 9
கல்பனாவைப் பத்திரமாக வீட்டில் விடும்படி ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டதில் அவள் தர்மராஜோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
விழாவில் நடந்த சம்பவம் இன்னுமே அவள் மனதை விட்டு நீங்கவில்லை. திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து யாழினி தன்னிடம் தானே கேள்விக் கேட்க வேண்டும் மாறாக ஈஸ்வர்தான் தன்னுடைய தந்தையென்று எவ்வாறு முடிவு செய்தாள்?
ஊரில் தன்னைப் பற்றியும் ஈஸ்வரை பற்றியும் எழுந்த கட்டுக் கதையையும், கோவில் வாசலில் தங்களைப் பார்த்ததையும் வைத்து ஈஸ்வர்தான் அவளுடைய அப்பா என்று முடிவு செய்தாளா? அல்லது சந்தேகம் கொண்டாளா? அவளது சந்தேகத்தை உறுதிப் படுத்தும் விதமாக இந்த புகைப்படம் அமைந்து விட்டதே!
தன் கணவனைப் பற்றி மகளிடம் கூறாமல் விட்டது தப்போ என்று கல்பனா முதன் முறையாக எண்ணினாள்.
கண்களில் நீர் கோர்க்க கல்பனா தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கலானாள்.
பருவ வயதில் ஈஸ்வர் மீது உண்டான காதல் ஈஸ்வரின் அக்கா மஞ்சுளாவின் திடீர் திருமணத்தால் அவர்கள் ஊரை விட்டுச் சென்றபின் அவன் நினைவாகத் துவண்டாள்.
கல்பனா அன்னையை இழந்தவள் தந்தையின் அதீத பாசத்தால் சுதந்திரமாக சுற்ற ஆரம்பித்தது காலேஜ் செல்ல ஆரம்பித்த பொழுதுதான்.
காலேஜில் விக்னேஷை சந்தித்தவள் அவன் மீது காதல் கொண்டாள். ஈஸ்வர் மீதிருந்து ஈர்ப்பு விக்னேஷ் மேல் இருப்பதுதான் உண்மையான காதல் என்று நினைத்தாள்.
மகள் காதல் வயப்பட்டதை அறிந்த கல்பனாவின் தந்தை படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுரைக்குக் கூற, அந்த வயதில் அதை ஏற்றுக்கொள்ளப் பிடிக்காமல் காதல் புரட்சி செய்வதாக விக்னேஷை திருமணம் செய்ய முடிவு செய்தாள்.
அந்த நேரம்தான் அவர்களது கையை விட்டுச் சென்ற வீட்டை வாங்க ரொம்ப நாள் கழித்து தஞ்சாவூருக்கு வந்திருந்தான் ஈஸ்வர்.
அவனைக் கண்டு கல்பனா ஓடி வந்து பேச “ஹேய் கல்பனா ஆளே மாறிட்ட ரொம்ப வளர்ந்துட்ட”
தன்னை விட வயதில் சிறியவளை ஈஸ்வரமூர்த்தி பெயர் சொல்லி அழைப்பது பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. கல்பனாவும் அவனைப் பெயர் சொல்லித்தான் அழைத்தாள். அது அவர்கள் சிறு வயது முதலே தோழர்களாகப் பழகியதால் தான்.
ஈஸ்வர் கல்பனாவை தோழியாக பார்த்தாரா? தங்கையாக பார்த்தாரா? அல்லது சிறு வயது முதலே தெரிந்தவள் என்று பழகினாரா? அது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அவள் மீது ஈர்ப்போ, காதலோ ஈஸ்வருக்கு ஏற்படவில்லை.. அவள் மனதில் தன்னைப் பற்றி இப்படியொரு எண்ணம் வந்திருந்தது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
“ஹேய் ஈஸ்வர் எத்தனை வருஷம் கழிச்சு ஊருக்கு வந்திருக்கிறீங்க. நல்லா இருக்கிறீங்களா?” இப்பொழுது ஈஸ்வரை பார்த்த உடன் அவள் மனதில் எந்த சஞ்சலமும் இல்லை. தோழமையாகத்தான் பேசினாள்.
“நான் நல்லா இருக்கேன். என்ன உன் அப்பா என்னென்னமோ சொல்லுறாரு? ஒழுங்கா படிக்க மாட்டியா?” அவள் தலையில் கொட்ட
தலையைத் தடவியவாறே “ஓஹ்… அதுவா… லவ்  பண்ணுறது என்ன அவ்வளவு பெரிய குத்தமா? அப்பாதான் புரிஞ்சிக்காம பேசுறாருன்னா நீங்களுமா?” அவனை செல்லமாக முறைத்தாள் கல்பனா.
“இந்த வயசுல காதலிக்காம வேற எப்போ காதலிக்க நானும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணேன்” என்றான் ஈஸ்வரமூர்த்தி.
“நிஜமாவா. அட்வைஸ் பண்ணியே கொள்ளுவீங்க என்று நினச்சேன்” கல்பனா சிரிக்க
“சே சே நான் எப்போவும் லவ்வுக்கு சப்போர்ட் தான் பண்ணுவேன்” ஈஸ்வரமூர்த்தியும் சிரித்தான்.
“அப்போ ஹெல்ப் பண்ணுங்க. நானும் விக்னேஷும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என்று இருக்கோம். எனக்காக சாட்ச்சி கையெழுத்துப் போடுங்க” பருவ வயதில் அவன் மீது ஏற்பட்ட ஈர்ப்பை நினைத்து சிரித்தாள்.  
“இவ்வளவு தானா? எப்போ” எனக்கேட்டவன் அவள் சொன்ன அன்று ரெஜிஸ்டர் ஆபீசில் போய் நின்றான்.
கல்பனா வந்து சேர்ந்த சில நிமிடங்களில் விக்னேஷும் அவன் நண்பர்களோடு வந்து சேர்ந்தான்.
கல்பனாவின் சில தோழிகளும் வர அவர்களின் திருமணமும் இனிதே நடைபெற்றது.
“உங்க திருமணத்துக்கு என்னோட சின்ன கிப்ட்” என்று ஈஸ்வரமூர்த்தி பணம் நிறைந்த ஒரு உரையைக் கொடுக்க விக்னேஷ் அதை நன்றியோடு வாங்கிக் கொண்டான்.
“சார் ரொம்ப நன்றி சார். கல்பனாவுக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்கார் என்னு இவ சொல்லவே இல்ல” என்றவாறே தன்னுடைய கழுத்திலிருந்த மாலையை ஈஸ்வரமூர்த்தியின் கழுத்தில் போட்டு விட்டான்.
“சரி வாங்க ஒரு போட்டு எடுத்துக்கலாம்” என்ற விக்னேஷ் ஈஸ்வரமூர்த்தியை தங்களோடு நிற்க வைத்துக் கொண்டான்.
ஈஸ்வரமூர்த்தி மாலையைக் கழற்றப் போக இருக்கட்டும் சார் பரவாயில்ல என்றவன் புகைப்படம் எடுக்கும் பொழுது அலைபேசியடிக்கவே நகர்ந்து விட்டான்.
அதனால் புகைப்படத்தில் ஈஸ்வரும் கல்பனாவும் மட்டும் பதிய பல வருடங்கள் கடந்தும் அவர்கள் கணவன் மனைவியென்று கருத இந்த புகைப்படம் காரணமாக அமைந்தது.
“உங்க வீடு வந்தாச்சு” என்ற தர்மராஜின் குரலில் சிந்தனையிலிருந்து விடுபடாமலேயே வீட்டுக்குள் நுழைந்தாள் கல்பனா.
யாழினி வீட்டுக்கு வந்தாளா? இல்லையா? என்றெல்லாம் அவள் சிந்தனையில் இல்லை. கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்தவள் நேராகச் சென்று விழுந்தது அவளுடைய படுக்கையில்தான்.
திருமணம் செய்த கையேடு தேனிலவுக்காக ஊட்டிக்குப் பயணப்பட்டவர்கள் ஒரு மாதம் சந்தோசமாக இருந்து விட்டு தஞ்சாவூருக்கு வந்தனர். 
ஊருக்கு வந்தால் கல்பனா சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டுச் சென்ற அதிர்ச்சியில் கல்பனாவின் தந்தை மாரடைப்பால் மரணித்து விட்டதாக செய்தி மட்டும்தான் அவளுக்கு கிடைத்தது.
ஒரே மகளைச் செல்லம் கொடுத்து வளர்த்ததற்கு அவருடைய இறுதி காரியங்களில் கூட பங்கேற்ற முடியாமல் இப்படி அவரை அநாதை பிணமாக அனுப்பி வைத்ததாக ஊரே அவளைத் தூற்ற விக்னேஷ் தான் அவளுக்கு ஒரே ஆறுதலாக இருந்தான்.
கல்பனா வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்து அவர் கடன் வாங்கியதாக வீட்டை எழுதிக் கொடுக்கும்படி இரண்டு பேர் வீட்டுப் படியேறி வந்து நின்றனர்.
“கடனா? என்ன சொல்லுறீங்க எதுக்கு?” குழப்பமாகக் கேட்டது விக்னேஷ்.
“அம்மா ஆபரேஷனுக்கு அப்பா கடன் வாங்கி இருந்தார். அதன் பிறகு அம்மா படுத்த படுக்கையா இருக்கும் பொழுது மருத்துவச் செலவு நிறைய இருந்தது. யார் கிட்ட வாங்கினாரு. என்ன பண்ணாரு என்று எதுவுமே எனக்குத் தெரியாது” யோசனையாகக் கூறினாள் கல்பனா.
“எங்க கிட்டத் தான் வாங்கினார். உங்க காலேஜ் படிப்பு செலவுக்கும்” என்று ஒருவர் சொல்ல
“உங்க அப்பா இறந்த அன்னைக்கே நாம வந்தோம் நீங்கதான் இல்ல. நீங்க வரும் வரைக்கும் காத்திருந்தோம்” என்றார் மற்றவர்.
“எவ்வளவு பணம்?” என்று விக்னேஷ் கேட்க அவர்கள் கூறியதில் கண்டிப்பாக வீட்டை எழுதிக் கொடுத்தே ஆகா வேண்டும் என்று புரியக் கடுப்பானான்.
“உங்க அப்பா நேர்மையானவர், நம்பிக்கையானவர். அதனாலதான் கடனைக் கேட்டு அவரை நாங்க தொந்தரவு செய்யல. இப்போ அவரே உயிரோட இல்ல. அவர்கிட்ட வாங்கின கடனை அவர் பெத்த பொண்ணு உங்க மூலமா தான் வாங்கணும். உங்களுக்குக் கல்யாணம் ஆகாம இருந்தால் யாரும் இல்லைனு கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கச் சொல்லி இருக்கலாம்.
ஆனா இப்போ உங்களுக்கென்று ஒரு துணை இருக்காரு. அவர் உங்கள பார்த்துக் கொள்வார் தானே. அதனால கடனை மொத்தமா கொடுத்திடுங்க” இருவரும் மாறி மாறி கூறியவாறே கல்பனாவின் தந்தை கடன் வாங்கியதற்கான ஆவணங்களைக் கொடுக்க அதைப் படித்துப் பார்த்த விக்னேஷ் மேலும் கடுப்பானான்
தனது தந்தையைப் பற்றி அவர்கள் கூறும் பொழுது விசும்ப ஆரம்பித்த கல்பனா “இன்னும் ரெண்டு நாள்ல வீட்டை காலி பண்ணி கொடுத்திடுறோம்” என்று சொல்ல அவர்கள் நன்றி கூறி விட்டு விடைபெற்றுச் சென்றனர்.
“விக்னேஷ் நாம உங்க வீட்டுக்கே போகலாம்” என்று கல்பனா ஆரம்பித்ததும் அவளை “பளார்” என்று அறைந்தான் விக்னேஷ்.
“என்னது நம்ம வீடா? எது டி நம்ம வீடு? சேரி வீடா? உங்கப்பன் ஒத்த புள்ளைய பெத்து வச்சிருக்கானே, பார்க்க அம்சமா வீட்டை வேற கட்டி வச்சிருக்கானே, மாமியார்காரி மண்டைய போட்டுட்டா. ஒத்த பொண்ணு தங்கம், பணம் என்று கொட்டிக் கிடக்கும் என்று வீட்டோட மாப்பிள்ளையா சொகுசா வாழலாம் என்று பார்த்தா, அந்தாளு கடனை வாங்கி என் தலேல கட்டிட்டான்”
கணவன் அறைந்தததில் அதிர்ந்தவள் கன்னத்தில் கைவைத்தவாறு “என்ன பேசுற?” கல்பனாவின் விசும்பல் சட்டென்று நின்றது. 
சிரிக்கும் கண்களோடு இனிக்க இனிக்க பேசும் விக்னேஷின் இந்த அவதாரம் கல்பனாவுக்கு புதிது. தந்தையை இழந்தது. கடன் என்று வீடு பறி போனது. கணவனின் மறுமுகம். ஒரு நொடி தான் காண்பது கனவா? நனவா? என்று குழம்பினாள்.
“என்ன பேசுறேனா? நான் சொல்லுறது உன் மரமண்டைக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா? எனக்கு சொந்தமா வீடில்ல. உன் அப்பா தான் அம்சமா ஒரு வீட்டையும் கட்டி ஒத்த பொண்ணா உன்னையும் பெத்து வச்சிருக்கான் என்று உன்ன போய் காதலிச்சு கல்யாணம் பண்ணே பாரு. என்ன சொல்லணும்”
பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று அவள் கழுத்தை இறுக்கி “அதான் உன்னொண்ணன் கோடீஸ்வரன் ஈஸ்வர் இருக்கிறானே அவன் கிட்டப் பணம் கேட்டு வீட்டை மீட்கிற வழியப்பாரு இல்ல நான் பொல்லாதவனாகிடுவேன்” என்றான்.
அவனிடமிருந்து விடுபட முயன்றவாறே “ஈஸ்வர் எந்த ஊர்ல இருக்கிறார் என்றே எனக்குத் தெரியாது” என்றாள் கல்பனா. 
அதைக் கூட கேட்டு வைக்காமல் எதுக்கு நீ எல்லாம் உயிரோடு இருக்கிறாய் என்று அவளை மீண்டும் அறைந்தவன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
இரவில் வீடு வந்தவன் போதையில் தள்ளாடியவாறுதான் வந்தான். கல்பனாவைத் திருமணம் செய்து தான் ஏமாந்து போனதாக அவளைத் தூற்றி வார்த்தைகளால் மனதளவில் காயப்படுத்தியவன், அடிக்க ஆரம்பித்து கணவன் என்ற உரிமையை நிலைநாட்டி அவளை உடலளவிலும் படாத பாடுபடுத்தினான்.
இரண்டு நாட்களில் வீட்டைக் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் என்பதால் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்துக் கொண்டு சென்றனர்.
விக்னேஷ் வேலை தேடாமல், எந்த வேலைக்கும் செல்ல முயலாமல் கல்பனாவை வேலைக்குச் செல்லுமாறு அடி, உதை என்று வீட்டில் தினமும் சண்டைதான். 
தான் தேடிக் கொண்ட வாழ்க்கை இது. பட்டுத்தான் ஆகா வேண்டும் என்று பல்லைக் கடித்தவாறு கல்பனாவும் கணவனைத் திருத்தும் முயற்சியில் இறங்கியவாறு கிடைத்த வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.
வீட்டில் அவளுக்கு எந்த உதவியும் செய்யாத விக்னேஷ் சம்பளம் கொடுக்கும் அன்று மட்டும் அவள் வேலை செய்யும் இடத்துக்கே வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருவான். பாதி வழியில்லையே சம்பள பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அவளை அம்போ என்று விட்டு விட்டுச் சென்று விடுவான்.
மளிகைக் கடைக்குக் கொடுக்க வேண்டியது, பால் பாக்கி, காய்கறி வண்டி என்று யார் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களின் காலில் விழாத குறையாக கெஞ்சி அடுத்த மாதம் தந்துவிடுவதாக கூறுவாள்.
சிலர் திட்டி விட்டு செல்ல, இதுவே தொடர் கதையானால் “உன் உடம்ப கொடுத்து கணக்கை கழிச்சிக்க” என்று சிலர் கொச்சையாகவே பேசவும் செய்தனர்.
திருமணமாகி ஒரே வாரத்தில் திருமணம் கசந்த நிலையில் நான்காம் மாதம் கல்பனா கருவுற்றாள். அதைச் சந்தோசமாகக் கணவனிடம் சொல்லக் கூட அவளால் முடியவில்லை. அந்த அளவுக்கு அவனோடு அந்த வாழ்க்கை அவளுக்கு கசந்திருந்தது.
எத்தனை நாட்கள் மறைப்பது? குழந்தையைக் காரணமாக சொல்லியாவது அவனை நல்வழிப்படுத்த முடியுமா? என்று எண்ணி தான் கர்ப்பமாக இருப்பதைக் கணவனிடம் கூற அவள் நினைத்ததற்கு மாறாக விக்னேஷ் ரொம்பவே சந்தோசமடைந்தான்.
கடந்த சில நாட்களாக அவளிடம் பணம் பறிப்பதுமில்லை. அடிப்பதுமில்லை. நல்லவிதமாகத்தான் நடந்துகொள்கிறான். எல்லாம் குழந்தை வந்த நேரம் என்றே நினைத்தாள்.
இந்த ஆறு மாதங்களாகக் குடிப்பதுமில்லை. நல்ல துணி போடுகிறான். கையில் வாட்ச், கழுத்தில் தங்க செயின், கையில் மோதிரங்கள் என்று சமீப காலமாக ஆளே மாறி விட்டான்.
வேலைக்குச் செல்வது போலும் கல்பனாவுக்குத் தெரியவில்லை. என்ன? ஏது? என்று கேட்டால் கர்ப்பிணி என்றும் பாராமல் இவளை அடிக்க மனம் வெறுத்தாள்.
ஒருநாள் வேலைக்குச் சென்ற கல்பனா அதீத தலைச் சுற்றல் காரணமாக வீட்டுக்கு நேரங்காலத்தோடு வந்தாள். அவள் வீட்டையடையும் பொழுது விக்னேஷ் ஒரு பையோடு வீட்டுக்குள் செல்வது தெரிய இவளும் உள்ளே சென்றாள்.
பை நிறையப் பணத்தைப் பீரோவில் அவன் துணிகளுக்குக் கீழ் வைப்பதைப் பார்த்து அதிர்ந்தவள் “ஏங்க யார் பணம் இது? இம்புட்டு பணம்? யார் கொடுத்தாங்க? இல்ல நீங்க எங்கயாச்சும் திருடிட்டு வந்தீங்களா?”
அவள் போட்ட சத்தத்தில் திடுக்கிட்டவன் சட்டென்று அவள் வாயைப் பொத்தி “எதுக்கு இப்போ கத்தி ஊரக் கூட்டுற. இது என் பணம். நான் சம்பாதிச்ச பணம். அதுவும் உன்ன வித்து” என்று சத்தமாகச் சிரிக்க கல்பனாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன பாக்குற அதான் உன் கூட பொறக்காத அண்ணன் கூட நம்ம கல்யாணம் அன்னைக்கு ஒரு போட்டோ எடுத்தியே அத உன் அண்ணனுக்கு அனுப்பி ப்ளாக்மெயில் பண்ணி சம்பாதிச்சது”
“என்ன சொல்லுற?” அதிர்ந்தாள் கல்பனா.
“நீ தான் ஒன்னும் இல்லாதவ என்று ஆகிட்டா உன்ன வச்சிக்கிட்டு என்ன பண்ணுறது என்று யோசிச்சேன். நம்ம கல்யாண போட்டோஸ் என் கைக்கு வந்ததும் உன் அண்ணனும் நீயும் மாலையும், கழுத்துமா இருந்த போட்டோவை பார்த்ததும் என் மூள பலவிதமான திட்டங்களை போட்டிருச்சு. அப்படியொரு போட்டோவை என் ப்ரெண்டுக்கு எடுக்க சொன்னதே நான்தான். உன் அண்ணன் சென்னைல இருக்குறத கண்டு பிடிச்சி போட்டோவை அனுப்பி வச்சேன். உடனே பணம் அனுப்பிட்டான். மாசா மாசம் பணம் அனுப்பிகிட்டே இருக்கான். தங்க முட்ட போடும் வாத்துடி அவன். அடுத்து உன் வயித்துல இருக்குறது அவன் குழந்தைதான் என்று சொல்லி சாதிச்சு காச புடுங்குவேன்”
“ச்சி நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?” கல்பனா காரி துப்ப
முகத்தை துடைத்தவாறே “நான் ஆம்பளையா இல்லையா என்று நீ வயித்த தள்ளிக்கிட்டு இருக்குக்கும் போது கேக்குறியே உனக்கே காமடியா இல்லையா? உனக்கு இருக்குற சந்தேகத்தைப் பார்த்தா வயித்துல இருக்குறதுக்கு நான் அப்பா இல்ல போலயே. ஒரு வேல நீ அவனை காதலிச்ச என்று சொன்னியே எனக்கு தெரியாம..” கழுத்தைத் தடவியவாறு யோசிப்பது போல் பாவனை செய்தான் விக்னேஷ்.
அவளுக்கு திருமணமான அன்று ஈஸ்வர் தான் தன்னுடைய ஒருதலைக் காதல் என்றும், அதை இன்று வரை ஈஸ்வரிடம் கூறவில்லையென்று கல்பனா கூறியிருக்க, சில நேரம் அவளை அடிக்கும் பொழுது அதை சொல்லியே அடிப்பவன் இன்று குழந்தை விஷயத்தில் சம்பந்தப்படுத்தியிருந்தான்.
“அடப்பாவி” அவன் மேல் பாய்ந்த கல்பனா அவனை அடிக்க முயல அவளைப் பிடித்துத் தள்ளி விட்டதில் கல்பனா விழுந்து பிரசவ வலியில் கதறினாள்.
எட்டு மாதம் நிறைவடைந்து மூன்று நாட்கள் ஆனா நிலையில் பனிக்குடம் உடைந்திருந்தது.
விக்னேஷ் தள்ளி விட்டதால்தான் கல்பனாவுக்கு இந்த நிலமை. ஆனால் அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்.
அந்த நேரம் அங்கு வந்த ஈஸ்வர்தான் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.
பெண்குழந்தையைப் பிரசவித்த கல்பனா ஈஸ்வரிடம் தன் கணவன் செய்தவற்றுக்கு மன்னிப்பு கேட்க, கல்பனாவுக்கு எதுவும் தெரியாது என்று ஈஸ்வருக்குப் புரிந்து போனது.
தான் சொகுசாக வாழ வேண்டும் என்று கல்பனாவைத் திருமணம் செய்த விக்னேஷ் அவளால் எந்த பிரயோஜனமும் இல்லையென்றதும் கொலை கூடச் செய்ய அஞ்சியிருக்க மாட்டான். ஈஸ்வர் என்ற ஒருவன் அண்ணனாக இருப்பதால் அவன் மூலம் பணம் பெறலாம் என்று தான் கல்பனாவை விட்டு வைத்திருந்தான். பணம் கிடைத்துக் கொண்டிருக்க அடிக்காமல் இருந்தவன், குழந்தை உண்டானதும் குழந்தையை வைத்தும் பணம் தேட முயன்றான்.
கணவன் ஒரு ராட்சசன் என்றறியாமல் பணத்தாசை பிடித்தவன் என்று நினைத்து ஈஸ்வரிடம் மன்னிப்புக் கேட்டவள் தனக்கு நடக்கும் கொடுமைகளை ஈஸ்வரனிடம் கூறி இருக்கவில்லை.     
குழந்தை உண்டான பொழுது திருந்தாதவன் குழந்தை பிறந்த பின் திருந்துவானா?”
“சனியன் சனியன். எப்போ பார்த்தாலும் அழுதுகிட்டு. இதோட வாய நீ மூடுறீயா? இல்ல நான் மூடவா?” யாழினி அழும் பொழுதெல்லாம் கல்பனாவை அடிக்க ஆரம்பித்தான் விக்னேஷ். 
ஆறு மாத குழந்தையாக இருந்த யாழினிக்கு ஜுரம் விடாமல் அடிக்க அழுது கொண்டே இருந்தாள். தனக்கு ஆண் துணை வேண்டும், குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று விக்னேஷை சகித்து வாழ்ந்துக் கொண்டிருந்த கல்பனாவின் வாழ்க்கையின் அந்த இரவு தூங்கா இரவானது.
அன்றிரவு மழை வேறு விடாமல் பெய்து கொண்டிருந்த நேரம், நன்றாகக் குடித்து விட்டு வந்த விக்னேஷ் “கத்தாதே நான் தூங்கணும் சாப்பாடு எடுத்து வை கல்பனா…” என்று கத்த குழந்தை மேலும் வீறிட்டு அழுதது”  
“அழாதே என்று சொன்னா கேக்க மாட்டியா?” என்றவன் குழந்தையை ஒற்றைக் கையால் தூக்கி வீசி இருந்தான்.
குழந்தையை ஏதாவது செய்து விடுவானோ என்று  பூரி செய்து கொண்டிருந்த கல்பனா இதை கண்டு அலறியவள் பூரிக் கட்டையாலையே விக்னேஷின் தலையில் அடித்தாள். 
ஏற்கனவே போதையிலிருந்தவன் கல்பனா அடித்த அடியில் மயங்கி விட்டான் போலும் அவனை விட்டவள் குழந்தையைப் பார்க்கச் சுவரில் தலை மோதுண்டு கீழே விழுந்திருந்த குழந்தை அதிர்ச்சியில் மௌனமானதா? மயங்கி விட்டதா என்று கூட தெரியாமல் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டு அந்த இரவில் கொட்டும் மழையில் மருத்துவமனைக்கு ஓடினாள் கல்பனா. .
வெளிக்காயம் எதுவும் இல்லை. உள்காயம் இருக்குமா? என்று பரிசோதித்த மருத்துவர் எதுவுமில்லை என்று கூற, குழந்தையைக் கொல்லும் அளவுக்குத் துணிந்து விட்டவனோடு இனிமேலும் வாழ்வது கூடாது என்ற முடிவுக்கு வந்த கல்பனா இரவோடு இரவாகத் தஞ்சாவூரிலிருந்து கோயம்புத்தூர் பயணப்பட்டாள். 
விக்னேஷ் போல் ஒருவன் யாழினியின் தந்தையென்று அவள் அறிந்துகொள்ளக் கூடாது என்றே அவளிடம் அவனைப் பற்றி எதுவுமே கூறவில்லை.
தன்னை பாசத்தை ஊட்டி சீராட்டி வளர்த்த தந்தையின் இறப்புக்கு தானே காரணமாக அமைத்ததை எண்ணி எண்ணி தினம் தினம் வருந்தியவள் யாழினியின் பிஞ்சு மனதின் ஏக்கங்களைக் கவனிக்கவுமில்லை. புரிந்துகொள்ள முயலவுமில்லை.
கோயம்புத்தூரில்தான் கல்பனா ஈஸ்வரமூர்த்தியை மீண்டும் சந்தித்தாள். அவள் நிலைமையை கண்டு பதறியவனை சமாதானப்படுத்தியவள், தன் கணவனே ஈஸ்வரை தன்னோடு சம்பந்தப்படுத்தி பேசி விட்டான். ஊர் பேச எவ்வளவு நேரம் ஆகும்? தன்னால் அவன் குடும்பத்திலும் பிரச்சினை வர வேண்டுமா? தன்னை இப்படியே விட்டு விடும்படி கூறினாள்.
அவள் நினைத்தது போலவே ஊர் கதையும் கட்டியது. அதனாலயே யாழினியிடம் ஈஸ்வரை தெரியும் என்று கூற கல்பனாவுக்கு இஷ்டமில்லை.
ஈஸ்வர்தான் யாழினிக்கு காலேஜில் சீட் வாங்கிக் கொடுத்திருந்தார். தொழிற்சாலையில் வேலையும் வாங்கிக் கொடுத்திருந்தார். இது கல்பனா சொல்லி அவர் செய்யவுமில்லை.
அவளுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே உறவும், தெரிந்த நபரும் ஈஸ்வர் மட்டும்தான். அவளுக்கு ஒன்றென்றால் கண்டிப்பாக ஈஸ்வர் முன் வந்து உதவி செய்வான். அதனால் தான் என்னமோ ஈஸ்வரைப் பற்றிப் பேசும் பொழுது அவளிடம் சிறு ஆவல் எட்டிப் பார்க்கும். அதை யாழினிதான் தப்பாகக் கருதி இருந்தாள். அவளைச் சொல்லியும் குற்றமில்லை. ஆண்களோடு பேசியே இராத அன்னை ஈஸ்வரமூர்த்தியோடு வெக்கப்பட்டு சிரித்துப் பேசினால் இவள் சந்தேகப்படுவதில் என்ன தவறு?
சின்ன வயதில் தலையில் பட்ட அடியால்தான் யாழினிக்கு பார்வையில் குறைபாடு ஏற்பட்டு விட்டதாக பிற்காலத்தில் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.  
யாழினி காதல் என்ற மாயவலைக்குள் சிக்கக் கூடாது என்று கருதி அவளுக்கு அறிவுரை கூறினாலே ஒழிய அவளிடம் அன்பாகப் பேசி ஒரு தோழியாக நடந்துகொள்ள வேண்டும் என்று கல்பனா உணரவில்லை.
இன்று யாழினியின் மனவேதனை அத்தனை பேரின் முன்னிலையிலும் விஸ்வரூபம் எடுத்து வெடித்துச் சிதறி இருந்தது.
தன் கடந்த கால சிந்தனையில் உழன்றவாறு தூங்கிப் போய் இருந்தாள் கல்பனா. 
இங்கே மெதுவாகக் கண்விழித்தாள் யாழினி. தான் யதுநாத்தை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டு வீட்டு வாசற் கதவைத் திறக்க முயற்சிக்கும் பொழுது யாரோ அவளது வாயைப் பொத்திய ஞாபகம் வரவே கண்களை அகல விரித்தாள்.
அறை இன்னும் இருட்டாக இருக்க அவள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே ஒரு மின் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது.
யாழினிக்கு ஏற்கனவே பார்வைக் குறைபாடு இருக்கவே மூக்குக் கண்ணாடியும் இல்லாமல் அறையில் என்ன இருக்கிறது என்று அவளால் பார்க்க முடியவில்லை.
கையை அசைக்க முயன்றால் கைகள் இரண்டையும் பின்னால் இழுத்துக் கட்டப்பட்டிருக்க, கால்களை இரண்டும் கூட கட்டப்பட்டிருந்தன.
ஒரு உருவம் அவளுக்கு எதிராக அமர்ந்திருப்பது தெரியவே “யாரு? யாராவது… யாராவது இருக்கிறீங்களா? ” கண்ணைச் சிமிட்டியவாறு கேட்க அறையின் மின் குமிழை எரிய விட்டான் சஞ்ஜீவ்.
“நீயா? நீ எதுக்கு என்ன கடத்தின? ஓஹ்… உன் அப்பா… இல்ல இல்ல நம்ம அப்பாவைப் பத்தி உண்மையைச் சொன்னது உனக்கு பிடிக்கலையா?” தன்னை இவன் கடத்தி இருக்கிறான் என்று கொஞ்சம் கூட அச்சமில்லாமல் திமிராகக் கூறினாள் யாழினி.
“யாருக்கு யாரு அப்பா? உண்மை என்னவென்று தெரியாம நீ பாட்டுக்குக் கண்டபடி பேசி எங்க குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டல்ல. இதனால என் கல்யாணம் கூட நின்னு போச்சு” என்றவன் கல்பனா கூறிய அனைத்தையும் ஒரே மூச்சில் கூறி முடித்தான்.
“என்ன சொல்லுற?” என்றவளுக்கு யதுநாத்தின் முகம் சட்டென்று மனக்கண்ணில் வந்து போக உள்ளுக்குள் புதுவிதமான இதம் பரவியது.
“தப்பு பண்ணிட்ட பெரிய தப்பு பண்ணிட்ட. அதுக்கான தண்டனையை நீ அனுபவிக்க வேணாம்?” என்றவன் யாழினியை நெருங்கி அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவன் அப்படியே அவளைக் கட்டிலில் தள்ளி இருந்தான்.
‘டேய் என்னடா பண்ண போற? என்ன விடுடா” யாழினியின் கைகள் முதுகுக்குப் பின்னால் மாட்டிக் கொண்டதில் அவளால் சஞ்ஜீவை  தடுக்க முடியவில்லை. 
அவளுடைய கால் கட்டுக்களைக் கழற்றிய உடன் அவனை எட்டி உதைக்க முயன்றவளின் மேல் ஏறி அமர்ந்து தடுத்தவன் அவள் கன்னத்தில் அறைந்தான்.
அதே நேரம் அறைக் கதவைத் திறந்த அருணாச்சலம் “தம்பி என்ன காரியம் பண்ணுறீங்க” என்று அவனைத் தடுக்க
“இவளுக்கு இதுதான் தண்டன” வெறி பிடித்தவன் போல் கத்தினான் சஞ்ஜீவ்
“விடுங்க தம்பி, விடுங்க. சொந்த தங்கச்சியையே நாசம் பண்ணக் குற்ற உணர்ச்சி உங்களுக்கு வேணாம்” கண்கள் கலங்க அவனைத் தள்ளி விட யாழினி கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்து ஒரு மூலையில் போய் நின்றாள். இங்கிருந்து தப்பி ஓட வேண்டும் என்று கூட அவள் மூளைக்கு எட்டவில்லை.
“என்ன அங்கிள் இவள காப்பாத்த இவள் சொன்ன பொய்யையே சொல்லுறீங்களா?” கர்ஜித்தான் சஞ்ஜீவ்.
“இல்ல தம்பி நான் கடவுளா நினைக்கிற உங்க தாத்தா மேல சத்தியமா யாழினி உங்க தங்கச்சிதான்” என்றார் அருணாச்சலம்.

Advertisement