Advertisement

அத்தியாயம் 8
ஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குடும்பத்தாரோடு வருகை தரலாம் என்று கூறி இருந்தாலும் இளம் ஊழியர்கள் பெற்றோரை அழைத்து வந்திருக்கவில்லை. வயதானவர்கள் மனைவியை மாத்திரம்தான் அழைத்து வந்த்திருந்தனர். இந்த மாதிரியான பார்ட்டிகள் சலிப்புத்தட்டும் என்று இளம் வயதினர் மறுத்திருக்க, பெற்றோர்கள் வந்தால் வீணான கேள்விகள் கேட்டு குடைவார்களோ என்று இளம் ஊழியர்கள் நினைத்திருப்பார்கள் போலும். ஒருசிலர்தான் குடும்பத்தாரோடு வந்திருந்தனர் அதில் யாழினியும் ஒருத்தி. அவள் மொத்த குடும்பமே கல்பனா மட்டுமே.
பழைய யாழினி என்றால் அன்னையை இங்கெல்லாம் அழைத்து வர வேண்டுமா என்று நினைப்பாள். ஈஸ்வரமூர்த்தியோடு கல்பனாவைப் பார்த்த பின்பு விழாவுக்கு அன்னையை எவ்வாறு அழைத்து வருவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு ஈஸ்வரமூர்த்தி அன்னையோடு அலைபேசியில் உரையாடியது கேட்ட பின்பு அவளிடம் விளையாடிப் பார்க்க தோணவே வீட்டுக்குச் சென்றவள் எதுவும் கூறாமல் முகம் கழுவுவதும், காப்பியை உறிஞ்சுவதுமாக நேரத்தைக் கடத்தினாள்.
விழாவைப் பற்றி மகள் இப்போ சொல்வாள், அப்போ சொல்வாளென்று கல்பனாவும் மகளின் முகத்தையே பார்த்திருந்தாள். அமுக்கினி யாழினியோ அமைதியாகவே இருந்தாள். பொறுமையிழந்த கல்பனாவோ இரவு உணவின் பொழுது யாழினி வேலை பார்க்கும் ஆடை தொழிற்சாலையில் இன்று என்ன நடந்தது என்று விசாரித்தாள்.
அன்னையை ஆச்சரியமாகப் பார்ப்பது போல் முறைத்த யாழினி “நீ எப்போதிலிருந்து என் மேல அக்கறை எடுத்து ஸ்கூல்ல என்ன நடந்தது? ஆப்பீஸ்ல என்ன நடந்தது என்று விசாரிக்க ஆரம்பிச்ச?”
பாடசாலையில் கூட படிக்கும் மாணவர்களே அவளைக் கேலி கிண்டல் செய்த பொழுது வீட்டுக்கு வந்து முதல் நாளே யாழினி அன்னையிடம் கூறினாள். அதை கல்பனா கண்டுகொள்ளாமல் மகளைச் சமாதானப்படுத்தாமலும் விட்டு விட்டாள்.   
மாறாக யாழினி தனக்குள் இறுகி அன்னையிடம் சொல்வதையே விட்டவள் தோழர்களாகக் கருத வேண்டியவர்களைப் பழிவாங்கக் கிளம்பியதுதான் மிச்சம்.
இன்று கல்பனா ஈஸ்வரமூர்த்தி அவளை விழாவுக்கு அழைத்திருப்பதைக் கூற முடியாமல் மகள் அழைத்தால் மட்டும்தான் தன்னால் செல்ல முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்தமையால் மகளிடம் அக்கறையாக விசாரித்திருந்தாள்.
இதைச் சரியாக புரிந்துகொண்டமையினாலையே யாழினி பொய்யாய் ஆச்சரியம் காட்டி முறைகளானாள்.
ஆனால் அன்னையை அழைத்துக் கொண்டு சென்றால் தானே ஈஸ்வரமூர்த்திக்கும் அன்னைக்கும் என்ன உறவு என்பதைக் கண்டறிய முடியும்.
“நம்ம தொழிற்சாலையோட எழுபத்தைந்தாம் ஆண்டுவிழாவை ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல கொண்டாடுறாங்க. என்னையும் உன்ன கூட்டிகிட்டு வர சொன்னாங்க. நீ அங்க எல்லாம் வருவியா என்ன?” 
பொதுவாக அன்னை வெளியே எங்கும் செல்ல மாட்டாள். ஆனால் நிச்சயமாக இந்த விழாவுக்கு வருவாள் என்றறிந்தே கூறினாள்.
“ஏன் நானெல்லாம் இந்த மாதிரி விழாவுக்கு வரக் கூடாதா? கண்டிப்பா வருவேன்” மகளை முறைத்தாள் கல்பனா.
“உன் கிட்ட நல்ல சேலை கூட இல்ல” அன்னை வரவும் வேண்டும் அதே சமயம் அப்படி என்ன ஈஸ்வரமூர்த்தியை பற்றி கூறாமல் மறைப்பது என்ற கோபத்தில் யாழினியால் அன்னையை சீண்டாமலும் இருக்க முடியவில்லை.
“சேலை தானே வாங்கிக்கலாம். ஏன் நீயே ஒரு நல்ல சேலையா பார்த்து வாங்கிக் கொடு” என்றாள். 
கல்பனா அவ்வாறு சொன்னதும் யாழினி அவளை அதிசயப்பிறவியை பார்ப்பது போல் பார்த்தாள்.
இதோ யாழினியோடு சென்று எடுத்த சேலையில் கல்பனா விழாவில் மகளோடு அமர்ந்திருந்தாள்.
யதுநாத் எந்த காணொளியை ஓடவிட்டு விளக்கம் கொடுத்தானோ அதே காணொளி ஒரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தது.
யதுநாத்தின் குடும்பத்தார் திரைக்கு முன்னால் போடப்பட்ட மேசையில் அமர்ந்து காணொளியைப் பார்த்திருக்க, உணவுகளைச் சுமந்த வண்டிகளைத் தள்ளிக்கொண்டு ஊழியர்கள் மேசை மேசையாக வளம் வந்துக் கொண்டிருந்தனர்.
அவர்களோடுதான் சஞ்ஜீவ் திருமணம் செய்ய இருக்கும் நிவேதிதாவும் அவளுடைய பெற்றோரும் அமர்ந்திருந்தனர்.
காணொளி முடிவடைந்ததும் தனது இருக்கையிலிருந்து எழுந்த ஆனந்தவள்ளி திரைக்கு அருகே சென்று பேச ஆரம்பித்தாள்.
தங்களிடம் வேலை பார்க்கும் மூத்த ஊழியர்களைப் பாராட்டி பெருமையாகப் பேசியவள் அவர்களைக் கௌரவித்து பரிசாகப் பணமும் அவர்களின் துணையோடு வெளிநாடு சென்றுவர ஏற்பாடு செய்திருந்தாள். அதில் அருணாச்சலமும், தர்மராஜும் அடங்கினர்.
அதை எதிர்பாராத அவர்களின் முகங்கள் சந்தோசத்தில் திளைத்திருக்க, பேரன்கள் இருவரும் முத்தம்மாவின் அருகில் வந்திருந்தனர்.
ஆனந்தவள்ளி அவர்களை என்ன எனும் விதமாகப் பார்க்க யதுநாத் பேச ஆரம்பித்தான். “ஊழியர்களை மட்டும் பாராட்டினா போதாது. இந்த கம்பனி இந்த அளவுக்கு முன்னேற இத்தனை பேர் உழைப்பு இருக்கும் பொழுது அதில் முக்கிய பங்கு எங்க அப்பாகும் இருக்கு அவரையும் பாராட்டி ரெண்டு வார்த்த பேசிக்கலாம்ல” ஊழியர்களைப் பார்த்துக் கேட்பது போல் ஆனந்தவள்ளியைப் பார்த்து அனுமதி வேண்டிநின்றான்.
“எதோ பண்ணுங்க” எனும் விதமாக அவர்களைப் பார்த்தவள் அவளது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
ஈஸ்வரமூர்த்தி எங்குப் பிறந்தார்? எந்த மாதிரியான குடும்பத்தில் பிறந்தார்? எங்குப் படித்தார்? எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தார். கோமதியைக் காதலித்து திருமணம் செய்தது வரை சஞ்ஜீவ் மற்றும் யதுநாத் மாறி மாறி கூற ஈஸ்வரமூர்த்தியின் சிறுவயது புகைப்படங்கள் முதல் திருமண புகைப்படங்கள் வரை திரையில் வந்து வந்து போனது.
“இதெல்லாம் எப்போ ஏற்பாடு பண்ணாங்க?” பத்மஜா கிரிராஜிடம் கேட்க
“இவனுங்க எங்க ஏற்பாடு பண்ணாங்க. எல்லாம் நான்தான் பண்ணேன்” என்று பீத்தலானான்.
அது ஈஸ்வரமூர்த்தி, ஆனந்தவள்ளி மற்றும் கோமதியின் காதில் விழுந்தாலும் அதை அவர்கள் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் யதுநாத் மற்றும் சஞ்ஜீவ் பேசுவதில் கவனமாக இருந்தனர்.
ஈஸ்வரமூர்த்தியை திரையில் கல்பனா மெய் மறந்து பார்த்திருந்தாள்.
தனக்கு சாதகமான ஏதாவது விஷயம் சிக்குமா என்று யாழினியின் கவனம் முழுவதுமே புகைப்படங்களிலும் அண்ணன் மற்றும் தம்பியின் பேச்சிலையே இருந்தது. 
இருவரின் பேச்சும் முடிந்ததும் பலத்த கரகோஷம் அந்த இடத்தை நிரப்ப சட்டென்று அந்த இடமே அமைதியாக யதுநாத்தும் சஞ்ஜீவும் புரியாமல் குழம்பினர்.
திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து கல்பனா அதிர்ந்து எழுந்து நிற்க யாழினியும் அதிர்ந்து எழுந்து நின்றாள்.
“அதோ அந்த அம்மாதான்” அனைவரும் கல்பனாவை நோக்க யதுநாத்தும் சஞ்ஜீவும் திரையை நோக்கினர்.
திரையில் கல்பனாவும் ஈஸ்வரமூர்த்தியும் இளமை தோற்றத்தில் மாலையும் கழுத்துமாக நின்றிருக்க கல்பனாவின் கழுத்தில் புதிதாக தாலி வேறு இருந்தது. ஈஸ்வரமூர்த்தியின் சிறுவயது புகைப்படங்களிலிருந்து இன்றைய புகைப்படங்கள் வரை திரையில் ஒளிபரப்பப்பட்டதால் அது ஈஸ்வரமூர்த்தியென்று அங்கிருந்தவர்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை.
கல்பனா அன்று போலவே இன்றும் ஒல்லியாக இருந்தாள். வந்த உடனே அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதில் சட்டென்று கல்பனாவையும் இங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர்.
யதுநாத் அதிர்ந்து பார்த்திருக்க, ஆனந்தவள்ளி கோபமாக எழுந்து “சஞ்ஜீவ் முதல்ல அத ஆப் பண்ணு” என்று கத்தியதோடு “ஏன் டி உன் புருஷன் தான் இதையும் ஏற்பாடு பண்ணானா” என்று பத்மஜாவின் மேல் பாய்ந்தாள். 
அணைக்கப் போன அண்ணனைத் தடுத்த யதுநாத்துக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை.
“யாழினியின் அம்மாவும், எங்க அப்பாவும் ஒண்ணா?” தனக்குள் கேட்டுக் கொண்டவன் “யாழினி என் தங்கையா?” தலையில் கைவைத்தவனுக்கு அவன் முத்தமிட்ட பொழுது யாழினி அழுதது கண்ணுக்குள் வந்தது.
சட்டென்று அவன் அவளைப் பார்க்க அவளோ ஈஸ்வர மூர்த்தியை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
சஞ்ஜீவின் அருகில் செல்ல முயன்ற நிவேதிதாவை அவளுடைய தந்தை வல்லவராயன் தடுத்து தன்னோடு அமர்த்திக் கொண்டு அமைதியாக வேடிக்கை பார்கலானார். 
“அவளுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அதனாலதான் சஞ்ஜீவ காதலிக்கிறதா பொய் சொன்னாளா?” அவளைச் சந்தித்தது முதல் காதல் கொண்டது வரையிலான நினைவுகளில் உழன்றான் யதுநாத்.
அதிர்ச்சியடைந்த கோமதி “என்னங்க இது?” என்று கணவனை கேள்வி கேட்கையில் ஈஸ்வரமூர்த்தியின் அருகில் வந்திருந்த யாழினி.
“நீ தான் என் அப்பாவா? சின்ன வயசுல இருந்து அப்பா பேர் தெரியாதவ அப்பா பேர் தெரியாதவ என்று கூட படிக்கிறவங்க சொல்லுறத கேட்டுக் கேட்டு என் மனசு ரணமா கொதிச்சிருச்சு. அதோ என்ன பெத்த மகராசி. இதுவரைக்கும் உன் பேரச் சொன்னதே இல்லையே. உன்ன பத்தி கேட்டாளே என்ன அடிக்கிறா” கண்களில் கண்ணீர் கொட்ட யாழினி பேச அங்கிருந்தவர்களுக்கு யாழினி ஈஸ்வரன் மகள் என்பது மட்டுமன்றி கல்பனாவுக்கு அவருக்கும் இருக்கும் உறவு எத்தகையது என்றும் புரிந்து போனது.
தான் படித்து முடிந்த உடன் தந்தையை தேடிச் செல்ல வேண்டும். தந்தையோடு இருக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டவள் ஈஸ்வரமூர்த்திதான் அவளுடைய தந்தையென்றதும் மரியாதை பறக்கப் பேசினாள்.
“யாழினி நீ புரியாம பேசுற” ஈஸ்வரமூர்த்தி எதையோ சொல்ல முனைய
“அவ பேசட்டும் விடுங்க” என்றாள் கோமதி.
தான் காதலித்துக் கைப்பிடித்த கணவன் பொய்த்துப் போனதில் அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருந்த கோமதி சிடுசிடுத்தாள்.
யாழினி அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளவில்லை. அவள் மனவேதனையை வார்த்தைகளாக்கிக் கொண்டிருந்தாள்.
“கூடவே இருந்து பாசமா பாத்துக்க வேண்டிய நீ ஒருநாளாவது வந்து என்ன பாத்தியா? காலேஜ்ல சீட்டு வாங்கிக் கொடுத்த, ஆபீஸ்ல வேல போட்டுக் கொடுத்த அன்பா மகளே என்று கூப்ட்டியா? எங்கயோ இருந்து இதெல்லாம் பண்ணா நீ அப்பாவா?” ஈஸ்வரமூர்த்தியின் சட்டையை பிடித்து உலுக்கலானாள்.
“அப்பா கூடவேதானே நீங்க இருக்கீங்க. உங்களுக்கு இவங்கள பத்தி தெரியாதா?” பத்மஜா கணவனை முறைக்க
“எனக்கு எப்படி தெரியும்? அதுவும் இந்த மாதிரி விசயத்த மருமகன் கிட்ட சொல்லுவாரா?” மனைவியை பதிலுக்கு முறைத்தான் கிரிராஜ்.
மகள் பிரச்சினை பண்ணுவதைப் பார்த்த கல்பனா ஓடி வந்து யாழினியின் கன்னத்தில் அறைந்து அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல முனைந்தாள்.
கல்பனா யாழினியை அடித்ததும் அதிர்ச்சியில் உறைந்திருந்த யதுநாத் அவளிடம் ஓடி வந்திருந்தான்.
“ஏன் நான் பேசக் கூடாதா? பேசினா அடிப்பியா? அடி அடி அடிச்சி கொல்லு” யாழினி கத்த அவள் சொன்னது போல் ஈஸ்வரமூர்த்தியை பற்றி பேசினாலே கல்பனா அடிப்பது உண்மையென்றானது.
“கல்பனா என்ன நீ பொண்ண அடிக்கிற” ஈஸ்வரமூர்த்தி சாதாரணமாகச் சொல்ல அதைப் பார்த்து சிலர் யாழினி அவருடைய மகள் என்றே பேசலாயினர்.
“என்ன மாப்புள இதெல்லாம்” ஆனந்தவள்ளி முகத்தைச் சுளிக்கக் கோமதியும், பத்துமஜாவுக்கு அழுகவே ஆரம்பித்திருந்தனர்.
“வாய மூடுடி. அவர் எனக்கு அண்ணன்” என்றாள் கல்பனா.
கைகொட்டி சத்தமாகச் சிரித்த யாழினி “என்ன காமடி பண்ணுறியா? அந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகும் நீ சொல்லுறத நம்ப சொல்லுறியா? நீயும் இவரும் கோவில் வாசலில் நின்னு பேசல”
“பேசினது ஒரு குத்தமா?” மகளை முறைத்தாள் கல்பனா.
“இவர் கூட உனக்கு எந்த சம்பந்தமும் இல்லாமத்தான் ஊருல கதை கட்டி விட்டங்களா? சரி அதைக் கூட விடு. அப்படியே இவர் உன் அண்ணனாக இருந்தா? அத என் கிட்ட சொல்லுறதுல உனக்கு என்ன பிரச்சினை? இவரு உன் தலையை தடுவுறதும், நீ வெட்கப்பட்டுச் சிரிக்கிறதும் நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சியா?”
போதும் வாய மூடு” கல்பனா மகளை மீண்டும் அடிக்க கையோங்க யதுநாத் கல்பனாவை தடுத்தான்.
“ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கிறீங்களா?” கத்தி கல்பனாவையும் யாழினியையும் அடக்கியவன் தர்மராஜையும் சஞ்ஜீவையும் பார்த்தான்.
நிலைமை கைமீறி போய்க் கொண்டிருக்கிறது வந்தவர்களை வழியனுப்புமாறு தர்மராஜையும், குடும்பத்தாரை கவனிக்குமாறு அண்ணனையும் பார்த்த பார்வைதான் அது.
“ஏன் நான் பேசக் கூடாதா? நான் போசினா உங்க குடும்ப மானம் காத்துல பறக்குதா? சின்ன வயசுல இருந்தே நீங்க இவரோட பாசத்துல வளர்ந்தவாங்க தானே. நீங்க கேட்டதெல்லாம் இவர் வாங்கிக் கொடுத்திருப்பார் இல்லையா?” கோபமாக யதுநாத்திடம் யாழினி சீறினாள்.
 இத்தனை வருடங்களாக இறுகி இருந்த மனவேதனை வார்த்தைகளாகவும் கண்ணீராகவும் வெளிப்பட்டதில் அவளால் ஒழுங்காக பேசக் கூட முடியவில்லை. தொண்டையடைக்க குளறினாள். கேவலால் திணறினாள். ஏங்கி ஏங்கிப் பேசியவளின் நெஞ்சம் இன்னுமே வலியில் துடிக்க கதறினாள்
“அது எப்படி வாங்கிக் கொடுக்க முடியும்? என் பொண்ணுக்கு பொறந்திருந்தா எங்க வீட்டு காசுல இருந்து வாங்கிக் கொடுத்திருப்பாரு” குத்தலாகவே மொழிந்தாள் ஆனந்தவள்ளி.
“என்ன அத்த எரியிற நெருப்புல நீங்க வேற பெற்றோலை ஊத்திக்கிட்டு” கடுப்பானார் ஈஸ்வர்.
“போதும் யாழினி வா” அழுது அழுது பேசுபவள் இழுத்துச் சென்றான் யதுநாத்.   
வரமாட்டேன் என்று அடம்பிடித்தவளை வலுக்கட்டாயமாக அவனது வண்டியில் ஏற்றி வண்டியை வேகமாக கிளப்பி இருந்தான்.
“எல்லாரும் ஒருநிமிஷம் இருங்க” கத்தினாள் கல்பனா.
“எதுக்கு இப்போ கத்துற? என் புருஷன பங்கு போட்டதுக்கு உன்ன கொன்னிருக்கணும்” கோமதி கல்பனாவுக்கு மேல் கத்த
“இவள மட்டும் கொன்னா போதுமா? உன் புருஷன் தப்பே பண்ணலையா?” ஆனந்தவள்ளி கடுப்பாகக் கேட்டாள்.
“இது உங்க குடும்ப விஷயம் எத்தனை மணியானாலும் நீங்கப் பேசி தீர்வு காணலாம். நாங்க கிளம்புறோம். நடந்த நிச்சயதார்த்தத்தையும் மறந்துடுங்க. உங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்க எங்களுக்கு இஷ்டமில்லை” வல்லவராயன் நிவேதிதாவின் கையை பற்றியவாறு கூற அவள் அமைதியாகத்தான் நின்றிருந்தாள்.
“சம்பந்தி என்ன பேசுறீங்க? ஈஸ்வர் தப்பு பண்ணினதுக்காக நீங்கத் தண்டனையை சஞ்ஜீவுக்கு எதற்கு கொடுக்குறீங்க?” ஆனந்தவள்ளி மருமகனை முறைத்தவாறே கேட்க
“இங்க பாருங்க அப்பா பண்ணத் தப்ப பையன் பண்ண மாட்டான் அது, இது என்று அற்ப காரணங்களைச் சொல்லிச் சமாளிக்க எனக்கு இஷ்டமில்லை. ஒரு பொண்ண கட்டிக் கொடுக்கும் குடும்பம் மானம், மரியாதையான குடும்பமா இருக்கணும். அது எனக்கு ரொம்ப முக்கியம். அது இப்போ உங்ககிட்ட இல்ல” இதுக்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு அவர் வெளியேறினார்.
அவரை தடுக்க முயன்ற கல்பனாவைத் தடுத்த கோமதி “உன்னால என் வாழ்க மட்டுமில்ல என் பையன் வாழ்க்கையும் போச்சு” என்று கன்னம் கன்னமாக அறைந்தாள்.
“ஐயோ நான் சொல்லுறத ஏன் யாரும் கேட்க மாட்டேங்குறீங்க. ஆளாளுக்கு என்னையும் இவரையும் சம்பந்தப்படுத்தி பேசுறீங்க. என்ன நடந்தது என்று சொல்லத்தான் விடுங்களேன்” கத்தினாள் கல்பனா.
“இன்னும் என்னம்மா சொல்ல போற? போட்டோ ஆதாரம் ஒன்னு மட்டும் போதாதா?” ஆனந்தவள்ளி  எரிச்சலடைந்தாள். 
“கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று பெரியவங்க உங்களுக்குத் தெரியாதா? நீங்களே இப்படி பேசினா எப்படி?” ஆனந்தவள்ளியை அடக்கிய கல்பனா “ஏம்மா இவரை காதலிச்சு தானே கல்யாணம் பண்ண. கட்டின புருஷன கொஞ்சமாச்சும் நம்பனும்” கோமதிக்கு ஒரு குட்டு வைத்தவள்
“ஈஸ்வரும் நானும் பக்கத்துக்குப் பக்கத்துக்கு வீடுதான். சின்ன வயசுல ஒன்னாதான் வளர்ந்தோம். ஒன்னாதான் பள்ளிக்கூடம் போனோம். நாங்க ரெண்டு பேரும் கூடப்பொறக்காத அண்ணன் தங்கச்சிதான்” அதைச் சொல்லும் பொழுது பருவ வயதில் ஈஸ்வர் மீது மலர்ந்த காதலும் கண்களுக்குள் வந்து போனது.
“என்னம்மா காதுல பூ சுத்த பாக்குறியா?” என்று ஆனந்தவள்ளி ஆரம்பிக்கும் பொழுதே
“அத்த நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க என்றுதான் கல்பனாவைப் பேச விட்டு நான் வேடிக்க பார்த்து கிட்டு இருக்கேன். கொஞ்சம் அமைதியா இருந்தா தான் உண்மை என்னவென்று தெரியும்” என்றார் ஈஸ்வர்.
ஆனந்தவள்ளியை முறைக்க முடியாமல் தன் பேச்சைத் தொடர்ந்தாள் கல்பனா. “நான் ஒருத்தர காதலிச்சேன் வீட்டுல சம்மதிக்கல. ஈஸ்வரோட உதவியோடதான் அவரை கல்யாணம் பண்ணேன். அன்னக்கி ரெஜிஸ்டர் ஆபீஸ் முன்னால எடுத்த போட்டோதான் அது. அவர் கழுத்துல இருந்த மாலையை இவர் கழுத்துல போட்டு போட்டோவை எடுத்ததே என் புருஷன்தான்”
“நீ சொல்லுறது எதுவும் நம்புற மாதிரி இல்ல” என்றாள் கோமதி.
“நீங்க நம்பினாலும் நம்பலைனாலும் இதுதான் உண்மை. நான் சொல்லுறது உண்மையா? பொய்யா? என்று உங்களால கண்டுபிடிக்கிறது ஒன்னும் கஷ்டமில்லையே”
கல்பனா கூறிக் கொண்டிருக்கும் பொழுது  “இதுதான் நடந்ததா? இது தெரியாம அவ அப்பாவ அசிங்கப்படுத்தி, அத்தனை பேர் முன்னாலையும் அவமானப்படுத்திடா” சஞ்ஜீவுக்கு ஏற்கனவே யாழினியைப் பிடிக்காது. தன்னுடைய திருமண முறிவுக்கு அவள்தான் காரணம், அத்தனை பிரச்சினைக்கும் அவள் ஒருத்தியே காரணம் என்று அறிந்ததும் அவள் இப்பொழுது யதுநாத்தோடு அல்லவா இருப்பான் என்றறிந்து அவனை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றவாறே வெளியேறினான்.
“இங்கபாருமா நீ சொல்லுறது உண்மையாகவே இருக்கட்டும். உன் பொண்ணு எதுக்கு அப்படி சொன்னா? நெருப்பில்லாமல் புகையுமா?” ஆனந்தவள்ளி சொல்லுறத தெளிவாகவே சொல்லு எனும்விதமாக கேட்டாள்.
“நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவன் நல்லவன் கிடையாது. அதனால அவகிட்ட அவங்கப்பாவை பத்தி நான் எதுவுமே சொன்னதில்லை. இதுக்கு மேல என் கிட்ட ஒன்னும் கேட்காதீங்க. என்ன மன்னிச்சிடுங்க” கண்களில் கண்ணீர் வழிய வெளியேறினாள் கல்பனா.
“என்னங்க என்ன மன்னிச்சிடுங்க உண்மை என்னனு தெரியாம உங்கள சந்தேகப்பட்டுட்டேன்”  கோமதி கதற.
“எங்கள அவமானப்படுத்தவென்றே ஈஸ்வர் பத்தி தேடித் துருவி இந்த போட்டோவ நம்ம விழாவில் ஒளிபரப்ப செஞ்சது யாரு?  இதனால சஞ்சீவோட கல்யாணம் நின்னு போச்சு. தர்மராஜ் இந்த வேலைய பார்த்தது யார் என்று உடனே பாருங்க” உத்தரவிட்டாள் ஆனந்தவள்ளி.
“எனக்கென்னமோ உன் பாட்டிதான் இந்த வேலையை பார்த்திருப்பாங்க என்று தோணுது” மனைவியின் காதுக்குள் முணுமுணுத்தான் கிரிராஜ்.
அவனை முறைத்த பத்மஜா “பாட்டிக்கு எங்க அப்பாவ பிடிக்காதுதான். அதுக்காக குடும்ப மானத்த அத்தனை பேர் முன்னிலையிலையிலும் இப்படி சந்தி சிரிக்க வைக்க மாட்டாங்க”
பத்மஜா கூறிக் கொண்டிருக்கும் பொழுதே “என் பேத்தியை கட்டினவனே நீதானே இதையெல்லாம் ஏற்பாடு பண்ணேன்னு பீத்திகிட்ட அப்போ நீதான் இந்த போட்டோவையும் ஏற்பாடு செஞ்சியா?” என்று கேட்டு அவனை அலறவிட்டாள் ஆனந்தவள்ளி.
“சஞ்சீவ் எங்க போனான்?” என்று ஈஸ்வர் கேட்க,
“யதுநாத் எங்க போனான்” என்று கேட்டாள் முத்தம்மா.
“அவங்க ரெண்டு பேருமே கிளம்பிட்டாங்க. நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்ப நான் ஏற்பாடு பண்ணிட்டேன்” என்றார் அருணாச்சலம்.
விழாவிலிருந்து யாழினியை அழைத்து வந்தால் போதும் என்றிருந்த யதுநாத்துக்கு எங்கு செல்வது என்று கூட தெரியவில்லை. வண்டியை எங்கு நிறுத்தினான் என்று கூட தெரியவில்லை. இருள் சூழ்ந்திருக்க, அந்த இடமே அமைதியாக வேறு இருந்தது.
யதுநாத்தால் எதுவுமே பேச முடியவில்லை. யாழினியை சமாதானப்படுத்தவும் அவனால் முடியவில்லை. அவனே அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
இவர்கள் கிளம்பி வந்திருந்ததால் கல்பனா பேசியது எதுவுமே இவர்கள் அறிந்திருக்கவில்லை. சஞ்ஜீவின் திருமணம் நின்று போனதும் தெரியவில்லை.
யாழினி அவள் வாயால் ஈஸ்வரமூர்த்திதான் என் அப்பா என்று கூறியிருந்தால் கூட யதுநாத் நம்பி இருக்க மாட்டான். புகைப்படம் பொய் சொல்லுமா?
காலேஜ் டாப்பர் என்று கூறினாலும் யாழினி ஒன்றும் முதல் ரேங்க் வாங்கிய மாணவியல்ல. முதல் ரேங்க் வாங்கியவன் வெளிநாடு சென்றதால் அடுத்து இருந்த யாழினிக்கு வேலை கொடுத்ததாக அருணாச்சலம் கூறியது ஞாபகத்தில் வரவே யாழினியை வேலைக்கு அமர்த்தியதன் பின்னனிக் காரணம் தன் மகள் என்பதினாலையா? என்ற சந்தேகம் இப்பொழுது யதுநாத்துக்கு வந்தது.
“அன்னையைக் காதலித்து திருமணம் செய்த தந்தைக்கு அப்படியென்ன அவசியம் வந்தது யாழினியின் அன்னையைத் திருமணம் செய்ய?” யதுநாத்தின் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
“உலகத்தை பெண்ணே இல்லையென்பது போல் சொந்த தங்கையை போய் காதலித்த பாவியாகி விட்டேனே”
அவன் கண்களிலிருந்து கண்ணீர் அவன் துடைக்கத் துடைக்க வலிந்து கொண்டே இருந்தது. யாழினியைக் கவனிக்கும் மனநிலையிலில்லை.
யாழினி தனது பள்ளிக்ககூட வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைத்துக் கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள்.
எவ்வளவு நேரம் யாழினி அழுதாளோ. எவ்வளவு நேரம் யதுநாத் தனக்குள் உழன்றவாறு இருந்தானோ.
“போதும் யாழினி” அவள் புறம் திரும்பியவன் அவள் கையை பற்றிக் கொண்டு “உன் மனசுல எவ்வளவு ரணம் இருந்திருக்கும் என்று என்னால நினச்சிக்க கூட பார்க்க முடியல. இது எதுவும் தெரியாம நான் வேற உன்ன கஷ்டப்படுத்திட்டேன்” அவன் அதை கூறிமுடிக்கையில் ஆடை தொழிற்சாலைக்கு வந்த அன்று “தான் தங்கையென்று அறிந்தால் இவன் வருந்துவான். வருந்தட்டும்” என்று நினைத்த யாழினி இன்று அதற்கு மாறாக அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.
காதலியாக அணைத்து ஆறுதல் படுத்த வேண்டியவள் தங்கையான அதிர்ச்சியில் யதுநாத் அவளை சட்டென்று தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி “உனக்கு எதுனாலும் நான் இருக்கேன்” என்றான்.
“எப்படி சொல்ல வேண்டிய டயலாக்கை எந்த மாதிரியான சிட்டுவேஷன்ல சொல்ல வச்சிட்டியே கடவுளே” தன்னையே நொந்து கொண்டவன் “சரி வா நான் உன்ன வீட்டுல விட்டுடுறேன்” என்றான்.
யாழினி எதுவுமே பேசவில்லை. அவள் கண்களிலிருந்து வழியும் கண்ணீரும் நிற்கவில்லை.
அவளின் வீட்டுக்குச் செல்லும் தெருமுனையில் வண்டியை நிறுத்தியவன் அவள் முகத்தைத் துடைத்து விட்டான்.
அவன் தொடுகையில் தன்நிலையடைந்தவள் அவனைப் பார்க்க “இப்படியே போனா உன் தெருவுல இருக்குறவங்க எல்லோரு என்னனு கேட்க மாட்டாங்களா?” சோபையாகப் புன்னகைத்தான்.
இந்த நடு இரவில் யார் கேட்கப் போகிறார்கள். யாழினி சிரிக்கவில்லை.
யாதுநாத் வண்டியை அவள் வீடுவரை கிளப்ப முயற்சிக்க “இல்ல நான் இங்கேயே இறங்கிக்கிறேன்” என்றவள் இறங்கியும் கொண்டாள். 
“உங்கம்மா வந்திருப்பாங்களா? வீட்டுச் சாவி?”
“என் கிட்ட ஒன்னு இருக்கு” என்றவள் நடக்க ஆரம்பிக்க அவனும் கூடவே நடந்தான்.
சட்டென்று நின்றவள் “நீங்க எதுக்கு கூட வரீங்க?” என்று கேட்க
“இல்ல சும்மா” என்றவனை முறைத்தவள் “முதல்ல கிளம்புங்க” என்று அவன் வண்டி கிளம்பும்வரை அங்கேயே நின்றாள்.
அவன் வண்டி கிளம்பிய பின் வீட்டை நோக்கி நடந்தவள் சஞ்ஜீவால் கடத்தப்பட்டாள். 

Advertisement