Advertisement

அத்தியாயம் 7
பஸ்ஸை பிடித்து ஒருவாறு தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி.
“பேசாம அம்மா வேலை பாக்குற கம்பனிலையே வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம். இவ்வளவு தூரம் பஸ்ஸுல அலைய வேண்டியதில்லை” முணுமுணுத்தவாறே மின்தூக்கியை நோக்கி நடக்கலானாள்.
கல்பனா நேற்றிரவு சாப்பிடும் பொழுது மகளிடம் “உனக்கு நா வேலை பாக்குற கம்பனிலையே வேலை கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்” முணுமுணுப்பது போல் கூறினாள்.
“எதுக்கு என் பொண்ணு பெரிய ஆபிசர் என்று பீத்திக்கவா?” அன்னையை முறைத்துப் பார்த்தாள் யாழினி.
“அடி போடி கூறுகெட்டவளே வீடு பக்கத்திலேயே பாக்டரிய வச்சிக்கிட்டு பஸ்ஸுல அலையிறியே என்ற நல்ல எண்ணத்துல சொன்னேன்”
“யாரு நீ? பஸ்ஸு காச எப்படி மிச்சம் பிடிக்கலாம் என்று யோசிச்சிருப்ப” கடுகடுத்தாள் மகள்.
சாதாரணமாக வீடுகளில் கேலியாகப் பேசக் கூடிய பேச்சுக்கள் கூட இவர்களுக்கிடையில் தீவிரமான பேச்சாகத்தான் இருந்தது.
“ஆமா பஸ்ஸு காச மிச்சம் வச்சி நா மாளிகை கட்ட போறேன் பாரு” கழுத்தை நொடித்த கல்பனா “நா சும்மா விசாரிச்சு பார்த்தேன். ஆறு மாசமோ ஒரு வருஷமா வேலை பார்த்த பிறகு. உனக்கு எங்க வேணுமோ அங்க மாத்திக்கலாமாம்”
தான் வேலை பார்க்கும் இடத்தில் மகள் வேலை பார்த்தால் பாதுகாப்பாக இருப்பாள். தனக்கும் அது பெருமை என்றும் எண்ணியே பேசினாள். ஆனால் அதை அன்பாகக் கூறவுமில்லை. யாழினிக்குப் புரியும்படி கூறவுமில்லை. ஏதோ காத்துவாக்கில் வந்த செய்தி போலவே கூற
“யாருகிட்ட விசாரிச்ச? முதலாளி கிட்டயா?” காரியத்தில் கண்ணாக நீ ஈஸ்வரமூர்த்தியிடமா விசாரித்தாய் என்று கேட்டாள் யாழினி.
சுதாரித்த கல்பனா “நா எப்படி டி அவரை பார்க்க முடியும். என்னையெல்லாம் அவர் சந்திப்பாரா? பேசுவாரா? நா மேனேஜர் கிட்டக் கேட்டேன்” தடுமாறியவாறே சமாளித்தாள்.
அன்னையின் பேச்சும், தடுமாற்றமும் யாழினிக்குச் சந்தேகத்தை மட்டுமே கொடுத்தது. அவளிடம் விசாரித்துப் பிரயோஜனமில்லையென்று அமைதியாகச் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றாள்.
ஆனால் அவளுக்குத்தான் தூக்கம் வருமா என்றிருந்தது. ஈஸ்வரமூர்த்தி மற்றும் கல்பனாவுக்கு என்ன உறவு? கோவில் வாசலில் தான் பார்த்தது என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு யதுநாத்தின் ஞாபகமும் வந்து ஒட்டிக்கொள்ள ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையாக இருக்கக் கூடாது என்று அவளையும் மீறி அவளது மனம் வேண்டலானது.
சிந்தனையிலும், குழப்பத்திலையுமே இருந்தவள் எப்பொழுது தூங்கினாளோ, முதல் நாளே பேருந்தைப் பிடித்து வேர்க்க விறுவிறுக்க நிறுவனத்துக்கு வந்து சேர்வதற்குள் போதும் போதும் என்றாக அன்னை சொன்னது ஞாபகத்தில் வந்து முணுமுணுத்தவளுக்குத் தான் எதற்காக இந்த நிறுவனத்துக்கு வேலைக்கு வந்தோம் என்பதையே ஒரு நொடி மறந்துதான் போனாள்.
“ஹேய் யாழினி” யதுநாத் இவளைக் கத்தி அழைக்க உள்ளே வந்துகொண்டிருந்த சிலர் இவர்களைத்தான் குறுகுறுவென்று பார்த்தனர்.
யாதுநாத் தொழிலாளர்களோடு சகஜமாகப் பழகக் கூடியவன்தான். பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு யார் இந்தப் பெண் என்ற பார்வைதான் அவர்களிடம்.
“ஐயோ” என்று யாழினி அவனை மருண்ட பார்வை பார்த்தாள்.
“அப்படி என்ன யோசனையில் போற? கூப்டுறது கூட கேக்கல. இந்த பைலை எல்லாம் என் அறையில் வச்சிடு. நான் கட்டிங் செக்ஷனுக்கு போயிட்டு வரேன்” சத்தமாகவே பேசியவன் அவளின் பதிலையும் எதிர்பார்க்காமல் நகர்ந்திருந்தான்.
அவன் பேச்சில் இவள்தான் அவனது பி.ஏ என்று புரிந்துகொண்டவர்கள் அவரவர்களின் வேலையைப் பார்க்கச் செல்ல, யாழினிக்குத்தான் பதைபதைப்பாக இருந்தது.
அங்கிருந்தவர்கள் முகத்தைக் கூட பார்க்காமல் மின்தூக்கிக்குள் நுழைந்தவள் இரண்டாம் தளத்திலுள்ள யதுநாத்தின் அறைக்குள் தஞ்சமடைந்தாள். 
“ஈஸ்வரமூர்த்திக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம் என்று இன்னைக்கே கண்டு பிடிக்கணும். அம்மா மறைச்சாலும் போட்டோ பார்த்ததும் அவர் ரியாக்ஷனை வச்சி நேரடியாக அவருடனே கேட்டிடலாம். அவர் சொல்லுற பதில வச்சி அவர் என் அப்பாவா? இல்லையா என்று முடிவு செய்யலாம்” கையேடு கொண்டு வந்த புகைப்படத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிய யாழினி தொலைப்பேசி அடிக்கவே புகைப்படத்தைக் கைப்பைக்குள் வைத்தவள் யார் அழைப்பது என்று பார்கலானாள்.  
பேசியது கிரிராஜ்தான் “ஏம்மா யதுவோட பி.ஏ தானே நீ. மீட்டிங்கு நீயும் வரணும் என்று தெரியாதா? சீக்கிரம் வாம்மா” என்று சொல்ல கூட்டம் எங்கே நடைபெறுகிறது என்று கேட்டாள்.
“நல்ல பொண்ணுமா நீ. தேர்ட் ப்ளோ வா” என்று அவன் கூற யதுநாத்தை வசைபாடியவாறு கைப்பையோடு கிளம்பினாள் யாழினி.
கட்டிங் செக்ஷனுக்கு சென்றவன் மீட்டிங்க்கு யாழினி அவசியமில்லை என்று அவனே முடிவு செய்து கிளம்பி சென்றிருந்தான். 
இவள் அங்கே சென்றால் ஈஸ்வரமூர்த்தி, கிரிராஜ், சஞ்ஜீவ், யதுநாத்தோடு ஆனந்தவள்ளியும் இருந்தாள்.
“இந்த பாட்டிமா யாரு?” என்ற சிந்தனையிலேயே இவள் உள்ளே வர
“இங்க வந்து உக்காருமா?” தர்மராஜ் அவளை தன்னோடு வந்து அமரும்படி கூறவும்தான் சுற்றி என்ன நடக்கிறது என்றே கவனித்தாள். 
அந்த அறை கூட்டங்களை நடத்துவதற்காக வேண்டியே அமைக்கப்பட்டிருந்தது. நீள்வட்ட வடிவிலான ஒரு மேசை நடுவில் போடப்பட்டு வலது பக்கத்தில் இரண்டு இருக்கைகள் இடது பக்கத்தில் இரண்டு இருக்கைகள் மற்றும் பிராதான இருக்கை என ஐந்து இருக்கைகள் மட்டும் போடப்பட்டிருந்தன.
வலது பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் யதுநாத்தும், சஞ்ஜீவும் அமர்ந்திருக்க, இடது பக்கத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஈஸ்வரமூர்த்தியும், கிரிராஜும் அமர்ந்திருந்தனர். பிரதான இருக்கையில் ஆனந்தவள்ளி அமர்ந்திருந்தாள். 
கிரிராஜுக்கு பின்னால் இருக்கைகள் போடப்பட்டு தர்மராஜும், அருணாச்சலமும் அமர்ந்திருக்க, அவர்களோடுதான் யாமினி அமர்ந்திருந்தாள்.
இவர்களுக்கு முன்னால் யதுநாத் மற்றும் சஞ்ஜீவுக்கு பின்னால் திரை இருக்க அதில் தொழிற்சாலை பற்றிய காணொளி ஓடிக்கொண்டிருந்தது. 
என்ன? ஏது? என்று இவளால் கேட்கக் கூட முடியவில்லை. யதுநாத்தான் காணொளிக்கான விளக்கத்தை சொல்லிக் கொண்டிருந்தான். அது அவர்களின் தொழிற்சாலைகள் உருவான கதை. வளர்ச்சியடைந்த கதை. நேற்றிரவு சரியாக தூங்காத யாழினிக்குக் அவன் அறுவையில் கொட்டாவி வரவே கையை வாயில் வைத்து அதைத் துரத்தலானாள். 
அதைக் கண்டுகொண்ட யதுநாத்தோ பேசிக் கொண்டிருந்தவன் பேச்சை நிறுத்தி குறும்பு தலைதூக்க “யாழினி ஒரு கப் காபி கிடைக்குமா? தூக்கம் தூக்கமா வருது” என்றதும் இவளுக்குத் தூக்கி வாரிப்போட அவனைக் கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.
“பேசிப் பேசி தொண்ட வறண்டு போச்சு. போய் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா” கண்கள் மின்ன புன்னகைத்தவன் கண்சிமிட்ட வேறு செய்தான்.  
அங்கிருந்தவர்களுக்கு அது அதிகாரத் தோரணையாகத் தெரிந்தாலும், அவன் உரிமையாகத்தான் அவளிடம் கேட்டிருந்தான்.
உண்மையிலேயே மேசையில் தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டுதான் இருந்தது. யாழினி முழிக்க “காபி கூட போட தெரியாதா? இந்த காலத்து பொண்ணுங்க படிச்சு வேலைக்கு வந்துடுவாங்க. சமயல புருஷன்தான் பார்க்கணும் போலயே” சம்பந்தமே இல்லாமல் பேசியவன் தண்ணீரை அருந்தி விட்டு பேச்சைத் தொடர, யாழினியின் தூக்கம் பறந்தோடி இருந்தது.
அவன் அவ்வாறு பேசியதே அவளை நடப்புக்கு கொண்டுவருவதற்குத்தான். அவள் நேராக நிமிர்ந்து அமரவும் தனக்குள் புன்னகைத்துக் கொண்டவன் பேச்சை தொடர்ந்தான்.
பேரனின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்த ஆனந்தவள்ளி அப்பொழுதுதான் யாழினியைக் கவனித்தாள். “தோற்றத்தை வைத்துப் பார்த்தால் சாதாரண குடும்பப் பெண்தான். பார்க்க அப்பாவிப் பெண்போலும் தெரியவில்லை. படித்த பெண் என்பதற்காகத் தலைக்கனம் உள்ளவள் போலும் தெரியவில்லை. இந்த காலத்தில் உடையை வைத்து யாரை எடை போட முடியும்?  பார்வையைப் பேரன் புறம் திரும்பினாள். இவனுக்கு இவளைப் பிடிக்குமா? கூடாதே. தான் இவனுக்காக வகுத்திருக்கும் திட்டங்களுக்கு இந்தப்பெண் தடையாக இருக்கக் கூடாது. ஒருகாலமும் தற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்” தான் அணிந்திருந்த மூக்குக்கண்ணாடியை சரி செய்தவாறே காணொளியை கவனிக்கலானாள்.
அவன் குணம் தெரியுமானதால் ஈஸ்வரமூர்த்தியை தவிர மற்றவர்களோ அவன் பேச்சில் புன்னகை செய்தார்களே ஒளியே எதுவும் பேசவில்லை.   
“சோ கைஸ் எழுபத்து ஐந்தாவது ஆண்டு விழாவை எப்படி செலெப்ரெட் பண்ணலாம்?” தனது பேச்சை முடித்துக் கொண்ட யாதுநாத்தின் பார்வை தானாக யாழினியின் புறம் சென்று உதடு குவித்து கண்களை சிமிட்டி முத்தமிடுவது போல் மெஸ்மரிசம்  செய்தவன் சட்டென்று ஆனந்தவள்ளியை பார்த்தான். 
விதிர்வித்துத்துப் போனாள் யாழினி. “இவன் அடங்கவே மாட்டான். இத்தனை பேரிருக்க எப்படியெல்லாம் நடந்துகொள்கிறான். இன்றே புகைப்படத்தை வைத்து ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டும்” உறுதியான முடிவுக்கு வந்தாள். 
இந்தக் கூட்டமே இவர்களின் ஆடைத்தொழிற்சாலை ஆரம்பித்து எழுபத்து ஐந்து வருடங்கள் நிறைவேறப் போகிறது. அதற்காகத் தொழிலாளருக்கு ஏதாவது செய்ய வேண்டுமா? என்பதில் இருக்க, வளர்ச்சியைப் பற்றிப் பேசியவன் பார்ட்டியைப் பற்றிக் கேட்டு முடித்தான். 
அதைக் கேட்டு கிரிராஜ் கேலியாகச் சிரிக்க, சஞ்ஜீவுக்கும் சிரிப்பாக இருந்தாலும் அமைதியாக இருந்தான்.
“கண்டிப்பாக பார்ட்டி உண்டு. அதுவும் ப்ளூமூன் ஹோட்டல்ல பாஸ்ட் ரேங்க் ஸ்டாப் எல்லாரும் கலந்துக்கலாம். அவங்க குடும்பத்தாரோடு” என்றாள் ஆனந்தவள்ளி.
அவர்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பர்ஸ்ட் ரேங்க், செக்கண்ட் ரேங்க் என இரண்டு விதமா பிரிப்பார்கள்.
ஆடையைத் தொழிற்சாலையில் துணி வெட்டும், தைக்கும் தொழிலாளர்களை செக்கண்ட் ரேங்க் ஸ்டாப் என்றும், இவர்களோடு கூட இருந்து வேலை பார்க்கும் பி.ஏக்கள், கணிணிப் பிரிவில் உள்ளவர்கள் போன்றவர்களை பர்ஸ்ட் ரேங்க் ஸ்டாப் என்றும் அழைப்பர். இவர்களை மட்டும்தான் பார்ட்டிக்கு அழைப்பதாகக் கூறினாள் ஆனந்தவள்ளி.
“நிஜமாவா?” மாமியாரைச் சந்தேகமாகப் பார்த்தார் ஈஸ்வரமூர்த்தி.
வீட்டில் சின்னதாக பார்ட்டி என்றாலே அலறும் ஆனந்தவள்ளி நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி கொடுப்பாளா? அதுவும் தொழிலாளருக்குச் சேர்த்து. என்ன ஒரு ஆச்சரியம்?
“ஆமாம் மாப்புள. கண்டிப்பா நூறு வருஷ விழாவுக்கு நான் இருக்கப் போறதில்ல. நீங்களும் இருக்க வாய்ப்பு குறைவு. இந்த பார்ட்டி நம்ம கடைசி பார்ட்டியாக இருக்கலாம் இல்ல” குதர்க்கமாகவே பதில் சொன்னாள்.
மாமியாரின் பதில் ஈஸ்வரமூர்த்தியின் முகம் சுளிக்க வைத்திருக்க, பாட்டி பார்ட்டி வைக்க சம்மதித்ததில் பேரன்கள் குஷியாகினர்.
“பார்ட்டி அரேஞ்மண்ட்ஸ் எல்லாம் யார் பாத்துக்கிறாங்க?” கேட்டது யதுநாத்தான்.
பேரன்களை பார்த்த ஆனந்தவள்ளி “இந்த தடவ ஆளாளுக்கு எந்த வேலையும் நான் பிரித்துக் கொடுக்க மாட்டேன். கிரியையும் கூட சேர்த்துக்கிட்டு நீங்க ரெண்டு பேருமே எல்லா அரேஞ்மண்ட்ஸையும் பார்க்கணும். அத வச்சி நான் சில முடிவுகளை எடுக்கணும்” என்றாள்.
ஆனந்தவள்ளியின் திட்டம்தான் என்ன என்று புரியாமல் குழம்பியது ஈஸ்வரமூர்த்தி ஒருவர்தான். அவரையும் சிந்திக்க விடாது “மாப்புள நீங்க வாங்கத் தொழிலாளருக்கு போனஸ் கொடுக்கிற விஷயமா நாம பேசலாம்” என்றவள் யாழினியைப் பார்த்து “நீயும் எங்க கூட வா” என்று அவளைக் கையேடு அழைத்துச் சென்றாள்.  
அவர்கள் சென்றது ஈஸ்வர மூர்த்தியின் காரியாலய அறைக்குத்தான்.
ஈஸ்வர மூர்த்தியின் இருக்கையில் ஆனந்தவள்ளி அமர்ந்துகொள்ள, எதிரே ஈஸ்வரமூர்த்தியும், யாழினியும் அமர்ந்து தொழிலாளர்களுக்கு எந்த மாதிரியான போனஸ் கொடுக்கலாம் என்று பேச ஆரம்பித்தனர்.
“உனக்கும் ஏதாவது தோணினா தயங்காம சொல்லலாம்” ஈஸ்வரமூர்த்தி யாழினியைப் பார்த்துக் கூற
“முதல்ல உன் நோட்பேட கைல எடுத்து குறிச்சிக்க. பி.ஏ என்றா என்ன வேலை என்று கூடவா தெரியாது?” குரலில் சற்று கடுமையைக் கொண்டு வந்து கூறினாள் ஆனந்தவள்ளி.
பதற்றமடைந்த யாழினி அவசர அவசரமாகக் கைப்பையை துழாவலானாள். அவள் பேனாவும், நோட்டும் கையில் சிக்குமா என்றிருக்க, பையில் இருப்பதையெல்லாம் கடை பரப்பலானாள்.
அவ்வாறு அவள் எடுத்து வைத்ததில் அவள் கல்பனாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படமும்தான்.
புகைப்படத்தை எவ்வாறு ஈஸ்வரமூர்த்தியிடம் காட்டுவது?  என்ன சொல்வது? எவ்வாறு கேட்பது? என்ற குழப்பத்திலிருந்தவளுக்கு சந்தர்ப்பம் தானாகவே அமைந்தது.
அவள் பதட்டத்தைப் பார்த்த ஈஸ்வரமூர்த்தி “வேலைக்கு புதுசு இல்ல அத்த அதான்” என்று மாமியாரிடம் கூறியவர் “அம்மா யாழினி அதோ அங்க ஒரு நோட்பேட் இருக்கு. இதோ இங்க ஏகப்பட்ட பேனா இருக்கு. எடுத்துக்க. முதல்ல இந்த எல்லா பொருட்களையும் உள்ள வை” என்றார்.
ஆனந்தவள்ளியை சங்கடமாக யாழினி நோக்க “பரவாலையே லிப்ஸ்டிக்கு, கண்ணாடி, பேஸ் பேக் என்று இந்த காலத்து பொண்ணுங்க கைப்பைல வச்சிருக்கிற நேரத்துல நீ அம்மா போட்டோவை வச்சிருக்க” புன்னகைத்தவாறே கூறினாள்.
சட்டென்று ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்த யாழினி, தான் எதைச் செய்ய இன்று இங்கு வந்தாளோ அதைச் செய்து விட்டேன். இவர் பிரதிபலிப்புதான் என்ன என்று அவர் முகபாவனையைப் படிக்க முயன்றாள்.
ஆனால் ஈஸ்வரமூர்த்தியின் முகத்தில் கல்பனாவைத் தெரிந்ததற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. அந்நியப் பார்வை பார்த்தவர் அவரே சென்று நோட்பேடை யாழினிக்கு எடுத்துக் கொடுத்தார்.
இங்குதான் யாழினியின் சந்தேகம் இன்னும் வலுத்தது.
புகைப்படத்தைப் பார்த்து விட்டு “நீ கல்பனாவின் மகளா?” என்று கேட்டிருந்தால் அது சாதாரணமாக இருந்திருக்கும். கல்பனாவைத் தெரியாதது போல் ஏன் இருக்கணும்? ஆனந்தவள்ளி இருப்பதனாலையா? ஏன்?
கல்பனா என்பவள் இவரின் உறவுக்கார பெண்ணோ, தெரிந்தவளோ ஆனந்தவள்ளியின் முன்னிலையில் “நீ கல்பனாவின் மகளா?” என்று கேட்பதில் என்ன பிரச்சினை?”
நிச்சயமாக இவர்களின் உறவு அவ்வாறானதல்ல என்று மாட்டு யாழினிக்கு புரிந்து போனது.
யாழினியை அடுத்து யோசிக்க விடாமல் ஆனந்தவள்ளி எழுபத்தைந்தாம் ஆண்டுவிழாவுக்கான திட்டமிடலை வகுக்கலானாள்.  
அதன்பின் யாழினிக்குப் புகைப்படத்தைப் பற்றிச் சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஆனந்தவள்ளியின் திட்டமிடலைப் பார்த்து ஒருநொடி அசந்து போனவள் பரபரவென குறிப்பெடுக்கலானாள்.
“அப்படியே பண்ணிடலாம் அத்த” ஈஸ்வரமூர்த்தி அமைதியாக பதில் சொன்னார்.
“நான் சொல்லுறதையே செய்யலாம் என்று சொல்லாதீங்க. உங்க முடிவையும் சொல்லுங்க” மருமகனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் ஆனந்தவள்ளி.
“ஆமா சொல்லிட்டாலும் அப்படியே செஞ்சிட போறீங்க” உள்ளுக்குள் கருவியவாறே “நீங்க எடுக்கிற முடிவு சரியா இருக்கும் பொழுது நான் எதுக்கு குறுக்கா” என்றார் பவ்வியமாக.
“ஆமா நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் தப்பாகாது. எங்க என் புருஷனுக்குத்தான் புரியல” ஈஸ்வரமூர்த்தியைக் கோமதிக்குத் திருமணம் செய்து வைத்ததை மறைமுகமாகச் சாடினாள். 
“என்ன பண்ணுறது அத்த சில விஷயங்கள் கடவுள் சித்தம்” என்று மருமகன் புன்னகைக்க,
“ஆமா, ஆமா” என்று ஆனந்தவள்ளியும் புன்னகைத்தாள்.
இவர்களின் சம்பாஷணையின் சாராம்சம் புரியாமல் முழித்தது யாழினி ஒருத்திதான்.
“அப்போ நான் கிளம்புறேன்” என்று அவள் விடைபெற ஈஸ்வரமூர்த்தியோடு அவரது அறையில் தனியாக விடப்பட்டாள் யாழினி.
“நீ கிளம்புமா. மத்த வேலைய நான் அருணாச்சலத்தை வச்சி பாத்துக்கிறேன்” என்றவர் மாமியார் கொடுத்த வேலையில் கவனமானார்.
ஆனந்தவள்ளி அவசரப்படுத்தியதில் யாழினி கடைபரப்பிய அவளுடைய பொருட்களை அவளால் உள்ளே வைக்க முடியவில்லை. பொறுமையாகவே தனது கைப்பையில் அவளது பொருட்களை வைக்கலானாள். ஓரக்கண்ணால் ஈஸ்வரமூர்த்தி அவளை கவனிக்கிறாரா? புகைப்படத்தைப் பற்றிக் கேட்பாரா என்று பார்த்தாள். அவரோ அவளைக் கண்டுகொள்ளவுமில்லை. புகைப்படத்தைத் திரும்பிக் கூட பார்க்கவுமில்லை.
ஏமாற்றமடைந்த யாழினி யோசனையாகவே நடையைக் கட்டினாள்.
அவள் சென்ற அடுத்த கணமே கல்பனாவின் அலைபேசி அலறியது.
தொழிற்சாலையில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவள் அழைத்தது ஈஸ்வரமூர்த்தி என்றதும் வெளியே வந்து பேசலானாள்.
“சொல்லுங்க சார்”
“என்ன கல்பனா பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா?” ஈஸ்வரமூர்த்தி அவள் சார் என்று அழைத்ததைக் குறிப்பிட்டுக் கேட்க
“இல்ல. இப்படியே கூப்பிடுறேன். தனியா இருக்கும் பொழுது ஒரு மாதிரியும், யாராவது இருக்கும் பொழுது ஒரு மாதிரியும் பேசுறது எனக்கு ஒரு மாதிரிதான் இருக்கு. எனக்கே படியளக்குற முதலாளி நீங்க”
“என்ன நீ முதலாளி தொழிலாளி என்றெல்லாம் பேசிகிட்டு. சரி அதவிடு. நான் போன் பண்ணது யாழினியைப் பத்தி சொல்ல. நல்லாத்தான் வேலை பாக்குறா. என் அத்தையே சபாஷ் என்று சொல்லிட்டாங்க. அவளுக்கு உன் மேல ரொம்ப பாசம். உன் போட்டோவை கைப்பைல வச்சிருக்கா”
“அவளா?” ஆச்சரியமாகக் கேட்டாள் கல்பனா?
“பின்ன நானா? வரும் புதன்கிழமை எங்க தொழிற்சாலையோடு எழுபத்தைந்தாவது ஆண்டுவிழா இருக்கு மறக்காம வந்துடு”
“நானா? என்னையெல்லாம் உள்ள விடுவங்களா”
“அடி போடி கழுத. யாழினி யாரு? நீ அவ அம்மா? உனக்கு இல்லாத உரிமையா? பேசாம வா. நான் பார்த்துகிறேன். நீ வர. அப்போ நான் வைக்கிறேன்” அலைபேசியைத் துண்டித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி.
பொருட்களை கைப்பையினுள் போடும் பொழுது அலைபேசியை கடைசியாக போடலாம் என்று தள்ளி வைத்தவள் மறந்து விட்டாள். அதை எடுக்க மீண்டும் வந்த யாழினி ஈஸ்வரமூர்த்தி கல்பனாவிடம் அலைபேசியில் பேசியதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.
மறுமுனையில் அன்னை பேசியது அவளுக்குக் கேட்கவில்லைதான். ஈஸ்வரமூர்த்தி கல்பனா என்றதும், யாழினி என்றதும் புகைப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும் அவளுக்குத் தெளிவாகக் கேட்டது.
“யார் இவர்? நிச்சயமாக அம்மாவுக்கும் இவருக்கும் இருப்பது சாதாரண உறவு கிடையாது?” என்றெண்ணியவள் அலைபேசியை எடுக்காமலே யதுநாத்தின் ஆபீசை வந்தடைந்தாள்.
அவள் வரும் பொழுது அண்ணனும் தம்பியும் மும்முரமாகப் பேசியவாறே காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் இவளின் இதயம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
எங்கே யதுநாத் இவளிடம் சஞ்ஜீவை பற்றிக் கேட்பானோ. அல்லது சஞ்ஜீவிடம் இவளைப் பற்றிக் கேட்டிருப்பானோ என்று அஞ்சினாள்.  
பாவம் அவளுக்குத்தான் தெரியவில்லை. அவள் கூறியது பொய்யென்று அவன் நேற்றே கண்டுபிடித்து விட்டானென்று.
“வா வா யாழினி காபி சாப்பிடுறியா?” யதுநாத்தின் கேள்வி யாழினிக்காக இருந்தாலும் பார்வை முழுவதும் சஞ்ஜீவின் மீதுதான் இருந்தது.
“இல்ல வேண்டாம்” என்று அவள் சொல்லும் பொழுதே முகம் சுளித்தான் சஞ்ஜீவ்.
வீட்டில் யதுநாத்தின் அறைக்குச் சென்று சஞ்ஜீவ் அரட்டையடித்ததுமில்லை. யதுநாத் அண்ணனின் அறைக்குச் சென்று பேசியதுமில்லை. எழுபத்தைந்தாம் ஆண்டுவிழா இருவரையும் ஒன்று சேர்த்திருந்தது.
“ஆமா பிரதர் உனக்குத்தான் யாழினிய ஏற்கனவே தெரியுமே. நீங்க ரெண்டு பேரும் பர்ஸ்ட் காலேஜ்லதானே மீட் பண்ணீங்க?” கேட்டுவிட்டான் யாழினி எது நடக்கக் கூடாது என்று நினைத்தாளோ அது நடந்து விட்டது.
யாழினி கூறியது உண்மையா? பொய்யா? என்று அறிந்துகொள்ள உனக்கு யாழினியைத் தெரியுமா என்று கேட்டிருக்கலாம். ஆனால் இந்த அண்ணன் தம்பிக்கிடையில் தான் தோழமையில்லையே. நம்மிடம் வேலை பார்க்கும் இவளை உனக்குத் தெரியும் தானே என்பதுபோல்தான் கேட்டான் யதுநாத். 
சஞ்ஜீவ் அவளைப் பார்க்கக் கூட இல்லை. “எனக்கா? நெவெர்” என்றான்
யாழினியைக் குறும்பு மின்னப் பார்த்த யதுநாத் “அப்போ நீ நம்ம பத்மஜா பக்டரிக்கு போன்னப்போ அங்க பார்த்திருப்ப” என்றவன் “யாழினி நீ இதற்கு முன்னால சஞ்ஜீவ மீட் பண்ணி இருக்க இல்ல” அவளிடமும் கேள்வியை எழுப்பினான்.
 அங்குதான் கல்பனா வேலை செய்கிறாள். 
“அத மாமாதான் பாத்துக்கிறாரு” வேண்டா வெறுப்பாக பதில் சொன்னான் சஞ்ஜீவ்.  
என்ன சொல்வாள்? அதுதான் சஞ்ஜீவ் தெளிவாகக் கூறி விட்டானே. தன்னுடைய குட்டு உடைந்ததில் முழித்தாள் யாழினி.
“ஓகே ப்ரோ ஹோட்டல் வேலையெல்லாம் நான் பாத்துக்கிறேன்” கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே எழுந்துகொண்ட சஞ்ஜீவ் ஒருதலையசைப்போடு விடைபெற்றான்.
“சோ மிஸ் யாழினி நேத்து நீங்க என்கிட்ட பொய் சொல்லி இருக்கீங்க” கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்க்க,
அவனை முறைத்தவன் “நான் மட்டும்தான் அவரை லவ் பண்ணேன். எங்க சந்திச்சீங்க? எப்போ சந்திச்சீங்க? யாரு ப்ரொபோஸ் பண்ணாங்க? என்று எரிச்சலூட்டுறது போலக் கேள்வி கேட்டா அப்படித்தான் பதில் சொல்லுவேன்”
அவள் சொல்வது உண்மையா பொய்யா என்று கூட யதுநாத் ஆராய்ச்சி செய்யவில்லை. “பாத்தியா பாத்தியா காதலிச்சேன் என்று இறந்த காலத்துலயே சொல்லுற. உன் லவ் ஒன்னு சைட் லவ்வாக இருந்தாலும் முடிஞ்சி போன சாப்டர். நாம நம்ம வாழ்க்கையைப் பத்தி பேசலாம்” கூலாகவே பேசினான்.
“ஏன் நீ என்னிடம் பொய் சொன்னாய்” என்று திட்டுவான். சண்டை போடுவான் என்று எதிர்பார்த்திருந்த யாழினி இவனின் அணுகுமுறையில் திண்டாடித்தான் போனாள்.
“சோ மிஸ் யாழினி என் கிட்ட நீங்கப் பொய் சொல்லுறீங்க என்றா ரெண்டே ரெண்டு காரணங்கள் இருக்க முடியும். ஒன்னு உங்களுக்கு என்ன பிடிக்காம இருக்கணும்” என்றவன் அவள் முகத்தைக் கூர்ந்து பார்க்க அவனைப் பிடிக்கும் என்று அவள் முகமே காட்டிக் கொடுத்து விடும் போல் இருந்தது.
மூக்குக் கண்ணாடியைச் சரி செய்வது போல் அவன் பார்வையை தவிர்களானாள்.
கண்களை மின்ன புன்னகைத்தவன் “ஆனா நான் முத்தம் கொடுக்கும் பொழுது ரகிக்கிறதையும், எனக்கு ஒத்துழைக்கிறதையும் பார்த்தா என்ன பிடிக்கலைன்னு தோணல” பெருவிரலால் அவன் உதட்டைத் தடவியவாறே கூற யாழினியால் அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.
“ரெண்டாவது காரணம் நீ என் அண்ணனை காதலிச்சேன்னு சொன்னது. நல்லா கவனி காதலிச்சேன்னு சொன்னது. அதுதான் முடிஞ்சி போன கதையாச்சே. சோ உன்ன நான் காதலிக்கிறத உன்னால கூட நிறுத்த முடியாது. இப்போ நாம வேலைய பார்க்கலாமா?” நேற்று போலவே அவளைக் கண்டுகொள்ளாது தனதிருக்கையில் வந்தமர்ந்தவன் கழுத்துப்பட்டியை தளர்த்திக் கோப்பை புரட்டினான்.
“டேய் முட்டாள் மூணாவதா ஒரு காரணம் இருக்குடா. அத கண்டு பிடிக்கிறவரைக்கும்தான் உன் கூட இருப்பேன்” மனதுக்குள் பொருமினாள் யாழினி.
அவளை திரும்பிப் பார்த்தவனுக்கோ நிச்சயமாக அவள் சஞ்ஜீவை காதலித்திருக்க வாய்ப்பே இல்லையென்றுதான் தோன்றியது.
“அங்க நின்னுகிட்டு டூயட் பாடுறீயா என்ன? வேல இருக்கு வா” அவன் போட்ட சத்தத்தில் அவனிடம் ஓடியிருந்தாள் யாழினி.

Advertisement