Advertisement

அத்தியாயம் 6
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? குறிப்பாக யாழினிக்கு அவர் மீது சந்தேகம் வர கல்பனா தான் காரணம். யாழினிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கல்பனா பிற ஆண்களும் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டாள்.
ஆடியபாதம் நல்லவராக இருக்கவே அவரிடம் மட்டும்தான் ஓரிரு வார்த்தை பேசி இருப்பாள். அதுவும் அவர் சம்பளம் கொடுக்கும் பொழுது நலம் விசாரித்தால்.
அப்படி இருப்பவள் திடீரென்று ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்துச் சிரித்துப் பேசினால் யானிலிக்கு சந்தேகம் வருமா? வராத? அவர் அவளுக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளி அவரோடு இவள் பெயரைச் சேர்த்து வைத்து ஊரில் பேசி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் சென்னைக்கு வந்து அவரை சந்தித்திருக்கிறாள்.
அவர் கல்பனாவின் உறவுக்காரராக இருந்திருந்தால் நிச்சயமாக வீட்டுக்கு வந்திருப்பார். முதலாளி என்பதினால் வர முடியாது என்று எடுத்துக் கொண்டாலும் தன்னை அறிமுகப்படுத்துவதில் எனச் சிக்கல்? தான் நினைப்பது தான் உண்மையோ என்று நினைத்தாள் யாழினி. 
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? யாழினியால் உறுதியாகவும் கூற முடியவில்லை. அவள் இங்கு வேலைக்கு வந்ததே அதைக் கண்டுபிடிக்கத்தானே.
ஒருவேளை அவர் அவளுடைய தந்தையொன்றாகிப் போனால்? யதுநாத் அவளுக்கு அண்ணன் ஆகிவிடுவான். 
அவன் இவ்வாறு அவளிடம் நடந்துகொள்வதைத் தடுக்க வழி தெரியவில்லை. தன் மனம் வேறு அவனிடத்தில் பாய்ந்து செல்வத்தையும் தடுக்க வழி தெரியாமல்தான் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்ட ஆரம்பித்திருந்தது.
தொலைப்பேசி சத்தமெழுப்பி அவளை அவனிடமிருந்து காப்பாற்றி விட்டிருக்க, அங்கிருந்த கழிவறைக்குள் சென்று முகத்தை அடித்துக் கழுவிக்கொண்டு இவள் வெளியே வந்தால் அவனோ இவளைக் கேள்வி கேட்டு குடைந்தான்.
என்ன பதில் சொல்வது? உண்மையைச் சொல்ல முடியாமல் திணறியவளின் கண்களில் கண்ணாடி தடுப்பினூடாக சஞ்ஜீவ் நடந்து செல்வது தெரிந்ததும் அவள் சிறு மூளை சட்டென்று ஒரு திட்டம் போட்டுத் தான் சஞ்ஜீவை காதலித்ததாகக் கூறினாள். அண்ணனைக் காதலித்தவள் என்றால் இவன் அடங்கி, ஒதுங்கி இருப்பான் என்று நினைத்தாள் யாழினி.
அவள் சொன்னதைக் கேட்டு தன் காதையே யதுநாத்தால் நம்ப இயலவில்லை. “இது எப்பொழுது நிகழ்ந்தது? “நீ நீ என்ன சொல்லுற? பொய் சொல்லாத. பொய் தானே! நீ சொல்லுகிறது பொய்தானே”
இவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருப்பாள் என்று இவன் எதிர்பார்ப்போடு வந்தால் என்ன சொல்கிறாள் இவள்? அவனுக்குப் பைத்தியமே பிடித்து விடும் நிலைதான். அதிர்ச்சியால் அவனால் எதையும் சிந்திக்க முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் அவன் மனதில் அலைக்கழிக்க ஆரம்பித்திருந்தது. 
“இவள்தானே சஞ்ஜீவை விரும்புவதாகக் கூறுகிறாள். அப்படியாயின் இது ஒருதலை காதலாயிற்றே” இவளுக்குப் புரியவைத்து இவள் மனதை மாற்றிவிடலாம் என்று இவன் எண்ணுகையில் மீண்டும் இடியை இறக்கினாள் யாழினி.
யாழினி பொய் சொல்வதாக யதுநாத் கூறியதும் வெகுண்டெழுந்தவள் “நாங்க எங்க சந்திச்சோம் எப்போ சந்திச்சோம் என்றெல்லாம் உங்க கிட்டச் சொல்ல வேண்டிய அவசியமில்ல. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் நேசிச்சோம்” அவ்வளவுதான் என்பது போல் அவனைப் பார்த்தவள், இதற்கு மேல் என்ன சொல்வது? கீழுதட்டைக் கடித்தவாறு நின்றிருந்தாள். சின்ன வயதில் தன்னை பழிப்போரைப் பழிவாங்கப் பட்டென்று பொய் பேசுபவள்தான் யாழினி. ஏனோ இவனிடம் மட்டும் சட்டென்று கூறமுடியாமல் திண்டாடினாள். 
அதைக் கேட்டு மேலும் அதிர்ந்தவன்  “அண்ணனும் நீயும் எப்போ சந்திச்சீங்க? எங்க சந்திச்சீங்க? அவன் எப்போ உன்ன காதலிக்க ஆரம்பிச்சான்? அவனுக்கு நிச்சயதார்த்தம் ஆகிருச்சே. அவன் ஒரு முடிவெடுத்தான்னா நிச்சயமாக பின் வாங்க மாட்டானே” யாழினி சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவள் சொன்னது உண்மையில்லையென்று அவள் வாயால் அவளே கூறமாட்டாளா என்று ஏதேதோ காரணங்களை அடுக்கியவனுக்கோ சஞ்ஜீவின் குணம் அறிந்திருந்தும் சொல்வது தனது உயிர் காதலி என்றதும் மூளை மங்கிச் சிந்திக்கத் தவறினான்.
“நீங்க வேணும்னா நடந்த நிச்சயதார்த்தம் அவர் சம்மதத்தோடதான் நடந்ததா என்று அவர்கிட்டயே கேளுங்க? உண்மை என்ன என்று தெரியும். நானும் அவரும் சேர்ந்து வாழ முடியாது என்று ஆகிற்று. இது அவரோட கம்பனி என்று தெரியாம வேலைக்கு வந்துட்டேன். இங்க உங்கள சந்திப்பேன்னு தெரியாது. நீங்க அவரோட தம்பி என்றும் தெரியாது. நான் வரேன்” என்றாள்.
இவனிடமிருந்து தப்பிப்பதற்காகத் தான் சஞ்ஜீவை காதலிப்பதாக பொய்யுரைத்தவள் இவன் நம்பவில்லையென்றதும் தாங்கள் இருவருமே காதலித்ததாக பொய்யுரைத்தாள். அதை இவன் நம்ப வேண்டுமே என்று இவள் அவனைப் பார்த்திருக்க, அவளது நெஞ்சம் கூடு வெறுமையாகிக் கொண்டிருந்தது.
தான் காதலித்தவள் அண்ணனைக் காதலிக்கிறாள் என்பதே பெரும் கொடுமை. இதில் அவள் வேலைக்கும் வரவில்லையென்றால் அவன் நிலைமை?
தான் சஞ்ஜீவின் தம்பி என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் இது தங்களுடைய கம்பனி என்று தெரியாமல் வேலைக்கு வந்ததாக அவள் கூறியது பொய் என்று யதுநாத்துக்கு புரிந்தது. ஒருவேளை அண்ணனைத் தினமும் பார்க்கலாம் என்று வேலைக்கு வந்தாளோ? ஒருவேளை அண்ணனே இவளை வேலைக்கு வரச் சொன்னானோ? வந்த இடத்தில் எனக்கு பி.ஏவாக வந்து நிற்கின்றாளே. இதுதான் விதியின் விளையாட்டா?
நான்கு வருடங்கள் யாருக்காக காத்திருந்தானோ அவள் அண்ணனின் காதலி என்றாகிப் போனாள். வந்தவளை இப்படியே வழியனுப்பி வைப்பதா? ஒருகாலமும் முடியாது அவன் காதல் கொண்ட மனம் முரண்டு பிடிகளானது. 
“நீ வேலைக்கு வாரதுக்கும், காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே. வேலைக்கு வரலாம்ல” தன்மையாக ஒலித்தது அவன் குரல்.
“அப்படி வாடா வழிக்கு” உள்ளுக்குள் குசியானவள். முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு “இல்ல அது சரிப்பட்டு வராது. நானும் அவரும் பேசித்தான் பிரிஞ்சோம். நடுவுல எங்களை ச் சேர்த்து வைக்க நீங்க நாட்டாமை பண்ணா அது உங்க வீட்டுல வீண் பிரச்சினையை உண்டு பண்ணும்” என்று இவள் பேச
“நான் எதுக்கு அப்படி பண்ண போறேன். அதான் பிரேக்கப் ஆகிருச்சே. அவன் வேற பொண்ண பார்த்துட்டு போய்ட்டான். என் ரூட்டு க்ளியர்” என்றான் இவன்.
“என்ன?”  அதிர்ந்தாள் யாழினி. 
எங்கே இவளுக்கு நல்லது செய்வதாக நினைத்து வீட்டில் பேசி பிரச்சினையை உண்டு பண்ணுவானோ? சஞ்ஜீவிடம் போய் சண்டை போட்டாலே போதுமே தன் குட்டு குடைந்து விடும், இவனிடம் மாட்டிக்கொள்ள நேரிடும் என்று அஞ்சியே அவள் அவ்வாரு கூறினாள்.
ஆனால் அவனோ அவள் கூறியதை தனக்குச் சாதமாக எடுத்துக் கொண்டான். 
ஏற்கனவே சில பெண்கள் இவனை பிரேக் அப் செய்திருக்கிறார்கள். அவன் பல பெண்களை பிரேக் அப் செய்திருக்கிறான். அதுவும் இவனை விட இவன் நண்பன் தான் பொருத்தமாக இருப்பதாகச் சொல்லி இவனை விட்டுச் சென்ற கதையும் உண்டு. அதையே சாதாரணமாக எடுத்துக் கொண்டவனுக்கு யாழினி கூறிய விசயமொன்றும் தப்பாகத் தெரியவில்லை.   
தன் அண்ணனோடு அவனுக்கு எப்பொழுதும் ஒட்டுதல் இருக்கவில்லை. யாழினி சொன்னதை வைத்து அவர்கள் முறையாகப் பிரிந்து விட்டார்கள். சஞ்ஜீவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டான். இனி இவள் வாழ்க்கையில் அவனுக்கு இடமில்லையென்று ஆகிப்போன நிலையில் தான் இவளைக் காதலிக்க யார் குறுக்க நிற்பார்கள்?
யாழினி? இவளா? சஞ்ஜீவும் இவளும் சந்தித்துக்கொள்ள முன்பாகவே நான் இவளைச் சந்தித்து காதல் கொண்டு, காதலையும் இவளிடம் கூறிவிட்டேன். அவள் கூறியது அனைத்துமே பொய்யென்று அறியாதவனின் மனம் அவளை விட்டு விடக் கூடாதென்று பல காரணங்களை அடுக்கலானது.
அவளின் அதிர்ந்த முகம் பார்த்தவன், எங்கே இவள் இப்படியே ஓடிவிடுவாளோ என்று சத்தமாகச் சிரித்தான்.  
அவன் எதற்காகச் சிரிக்கிறான் என்று அவனையே குழப்பமாகப் பார்த்தாள் யாழினி.
“என்ன பயந்துட்டியா? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நீ எந்த டென்ஷானும் இல்லாம வேலைய பாரு” என்றவன் தனதிருக்கைக்கு சென்றமர்ந்து கழுத்துப்பட்டியை தளர்த்தி விட்டு அவளைக் கண்டுகொள்ளாது வேலையை பார்கலானான்.
“என்னடா இவன் சின்னதா ஒரு பொய் சொன்னதும், சரியென்று ஒத்துக் கொண்டு ஒதுங்கி விட்டானே. இவன் காதல் அவ்வளவுதானா?” யாழினியின் மனம் மகிழ்வதற்குப் பதிலாக சுணங்கியது.
அவன் அறையில் நடந்த அனைத்தையும் பொருத்தியிருந்த கேமரா வழியாக பார்த்திருந்த உருவமோ அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று கேட்க முடியாமல் போனதால் “இருவரும் காதலர்களா?” என அதிர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசனையில் ஆழ்ந்திருந்ததது.
இமைகளை படபடவென தட்டி தலையை உலுக்கியவள் அவனிடமே போய் நின்று அன்றைய வேலைகள் என்னவென்று கேட்டாள்.
அவளுக்கு வேலைக் கொடுத்தவனுக்குத்தான் எந்த வேலையும் ஓடவில்லை. கடைக்கண்ணால் அவளையே பார்த்தவாறு அன்றைய நாளைக் கடத்தியவன் அவள் மனதை எவ்வாறு கொள்ளைகொள்வது என்ற சிந்தனையிலேயே வீடு வந்திருந்தான்.
வீட்டுக்கு வந்தவன் வளமை போல் முத்தம்மாவிடம் செல்லம் கொஞ்சினான் இல்லையென்றால் அவள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்திருப்பாளே.
சஞ்ஜீவை பார்த்தவனுக்குக் கோபம் வரவில்லை. மாறாகக் கட்டியணைக்கத்தான் தோன்றியது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சுமூகமான உறவுதான் இல்லையே.  இருந்திருந்தால் நல்ல சகோதரனாகக் காதலித்த பெண்ணை கைவிட்ட கயவன் நீ என்று யாழினிக்காகச் சண்டை போட்டிருப்பான். அல்லது வீட்டிலாவது விஷயத்தைச் சொல்லி இருவருக்கும் திருமண ஏற்பாட்டைச் செய்ய முயற்சி செய்திருப்பான். வீட்டார் எதிர்த்திருந்தால் யாழினியின் சந்தோசம்தான் முக்கியமென்று தனது அண்ணனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்திருப்பான்.
தன் காதல் என்று வந்ததும் சுயநலமாகச் சிந்தித்தவன் நடப்பது நன்மைக்கே என்று அமைதியைக் கடைப்பிடித்து சஞ்ஜீவிடம் எதுவும் கேட்காமல் விட்டு விட்டான்.
“உன்ன எப்படி டி சம்மதிக்க வைக்க போறேன்” கட்டிலில் கவிழ்ந்து விட்டத்தைப் பார்த்தவாறு புலம்பலானான் யதுநாத்.
இதுநாள்வரை பிடிக்கவில்லையென்று கூறிய எந்த பெண்ணையும் அவன் தொந்தரவு செய்ததில்லை. ஆனால் யாழினி அவன் உயிரானவள். அவளை எவ்வாறு விடுவது அவன் இதயம் அவளைச் சுற்றியே இருக்க, “உன் முத்தம்மா அவளைத் திருமணம் செய்யச் சம்மதிப்பாளா?” என்றொரு குரல் அவனுள் ஒலித்தது.
“முத்தம்மாவை நான் பார்த்துக்கிறேன். முதல்ல யாழினி சம்மதிக்கட்டும்” கண்களை மூடி அவளைக் கண்ணுக்குள் கொண்டு வந்தவன் “ஐயோ என்ன கொல்லுறியே” என்று கத்தினான்.
இங்கே யாழினியும் யதுநாத்தை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
காதலைச் சொன்னவன் ஓடிவிட்டான் என்று இவள் நினைத்திருக்க, நான்கு வருடங்களாகியும் இவள் நினைவாகவே இருந்தான் என்றது இவளுக்கு ஆச்சரியம்தான். அதை விட ஆச்சரியம் அவன் ஈஸ்வரமூர்த்தியின் வாரிசு என்பது. 
ஒருத்தனுக்கு தன்மீது இவ்வளவு காதல் இருக்குமா? இருந்து என்ன பயன் அவனுடைய அண்ணனை காதலித்தவள் என்றதும் சீ போ என்று விட்டானே. அவள் மனம் அவனுக்காகப் பரிந்துரை செய்ய, வேண்டாம், வேணடாம் அவன் வேண்டவே வேண்டாம் என்று குழம்பியும் நின்றாள்.
“நல்லதுதானே யாழி அவனைப் பற்றி சிந்திக்காம ஈஸ்வரமூர்த்தி உன் அப்பாவா என்று கண்டுபிடிக்கிற வழிய பாரு” அவள் மனம் கூவியது.
“ஏன்டி கூப்டுகிட்டே இருக்கேன். என்னத்த யோசிச்சுகிட்டு இருக்க?” யாழினியின் முதுகில் பட்டென்று அடித்தாள் கல்பனா.
அன்னை கொடுத்த அடியில் சிந்தனை கலைந்தவள் என்னவென்று அன்னையை ஏறிட்டாள்.
“வேலைக்கு போனியே பிடிச்சிருக்கா? அவரை பார்த்தியா? என்ன சொன்னாரு?” கல்பனாவின் கண்களில் தான் எவ்வளவு எதிர்பார்ப்பு.
“யார?” அன்னையைக் கூர்மையாகப் பார்த்தாள் மகள்.
தப்பித்த தவறியாவது இவள் வாயிலிருந்து “உன் தந்தையை” என்ற வார்த்தை வராதா?” அல்லது ஈஸ்வரமூர்த்தி யார் என்ற உண்மையையாவது சொல்லமாட்டாளா?
சுதாரித்த கல்பனா “அதான் உன் முதலாளி” என்று சமாளித்தாள்.
“ஆ பார்த்தேன் பார்த்தேன். காலேஜ் முதல்வர் சொல்லித்தான் எனக்கு வேலைக் கொடுத்தாராம். நீ என்னமோ அவரை ரொம்பத் தெரியும் போலவும், நீதான் வேலை கொடுக்கச் சொன்னது போலவும் கேட்குற?” கிண்டலாகக் கூறுவது போல் கூறியவள் அன்னையின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
என்னதான் ஈஸ்வரமூர்த்தி முதல்வர்தான் இவளை வேலையில் அமர்த்துமாறு கூறியிருந்தாலும், அன்னையும் கூறி இருப்பாளோ என்ற சந்தேகம் யாழினிக்கு இருந்தது. அதை நிவர்த்தி செய்துகொள்ளவே கேட்டாள்.
“அடி போடி கூறுகெட்ட கழுத எங்களை மாதிரி ஏழைபாழைங்க கூட எல்லாம் அவரு பேசுவாரா?” என்ற கல்பனா சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்.
கோவில் வாசலில் தான் கண்டது என்ன கனவா? என்று கேலி செய்தது யாழினியின் மனம். 
சமையலறைக்குள் வந்த கல்பனாவின் கண்களுக்குள் தான் பள்ளிச் செல்லும் பொழுது கல்லூரி சென்றுகொண்டிருந்த ஈஸ்வரமூர்த்தியின் உருவம் வந்து சிரித்தான்.
ஈஸ்வரமூர்த்தியும் கல்பனாவும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள். சின்ன வயதிலிருந்தே கல்பனாவுக்கு ஈஸ்வரமூர்த்தியை ரொம்பவே பிடிக்கும். அவன் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது இவளையும் கையேடு அழைத்துச் செல்வான்.
சில சமயம் மிதி வண்டியில் கூட இவளைப் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றிருக்கிறான். அப்படி அழைத்துச் சென்ற பொழுது இருவருமே விழுந்து விட ஈஸ்வரமூர்த்திக்குக் கையில் காயம். கல்பனாவின் துணி அழுக்காய் போனது.
அந்த நிலைமையிலும் அவள் துணியிலிருந்த தூசியைத் தட்டி விட்டு பையை மாட்டி அவளை வகுப்பறையில் விட்டவன்தான் ஈஸ்வரமூர்த்தி. ரொம்பவும் பொறுப்பானவன்.
அவன் சென்னையில்தான் காலேஜ் படித்தான். விடுமுறைக்குத் தான் ஊருக்கு வருவான். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனைக் கண்டத்தில் அவன் தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கல்பனாவின் மனதில் சாரல் அடித்து. கல்பனாவும் வயதுக்கு வந்திருந்தாள்.  தனக்கு ரொம்பவே பிடித்த ஈஸ்வரமூர்த்தி மீது கல்பனாவுக்குப் பருவ வயதில் ஏற்படும் மயக்கம் இருந்தது. அவன் நினைவாகவே சுற்றினாள். அவனைக் காணும் பொழுது நாணிக் கோணி சிரித்தாள். அவனை மறைந்திருந்து ரசித்தாள்.
“அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இன்னுமா காபி போடுற? சீக்கிரம் கொடு” யாழினியின் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டவள்
ஒருபெருமூச்சோடு “இருடி வரேன்” என்றாள் கல்பனா.
கல்பனா கொடுத்த காபியை உறிஞ்சியவாறே ஈஸ்வரமூர்த்தி தனது தந்தையா? இல்லையா? எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்த யாழினிக்கு அவர் தன்னை பார்த்து அதிர்ச்சியடையவுமில்லை. ஆனந்தமடையவுமில்லை என்பது அப்பொழுதுதான் ஞாபகத்தில் வந்தது.
“தன்னை அவருக்குத் தெரிந்திருந்தால் கல்லூரியில் முதன் முதலாகப் பார்த்த பொழுது அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால் சாதாரணமாகத்தான் பேசினார். அப்படியென்றால் அவருக்கு என்னை ஏற்கனவே தெரிந்திருக்கணும். யார் சொல்லி இருப்பா? வேறு யார் அம்மாதான் சொல்லி இருக்கணும். ஒருவேளை உண்மையிலயே தெரியாவிட்டாலும் அதிர்ச்சியடைய மாட்டாரே” அவள் மனம் கேட்க குழம்பினாள் யாழினி. 
காபியின் ஒரு மிடறு அருந்தியவள் “ஈஸ்வரமூர்த்தி என் தந்தையா? இல்லையா? இதுதான் கேள்வி. தான் அவர் மகள் என்றால் நெஞ்சின் ஓரம் கொஞ்சமாவது பாசம் இருக்க வேண்டும் தன்னை தொழிற்சாலையில் பார்த்த பொழுது மகிழ்ச்சியாகக் கட்டியணைக்க முடியாவிட்டாலும், என்னைப் பற்றி ஓரிரண்டு வார்த்தையாவது கேட்டிருப்பார்.
அப்படியென்றால் அவர் என் தந்தை இல்லையா?
இல்லை. இல்லை. அன்று அம்மா கோவில் வாசலில் அவரோடு பேசிய விதம் சந்தேகமாகவே இருக்கு. அம்மா எதற்கு அவரை தெரியாதது போல் பேசணும்? அவருக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றால் அவர் யார் என்றும். அவரை தெரியும் என்றும் தன்னிடம் கூறி இருக்கலாமே எதற்காக மறைக்கணும்?
அவரை பற்றி நான் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அம்மா நினைக்கிறாள் என்றால் நான் நினைத்துப் போல் அவருக்கும், அம்மாவுக்கும் தகாத உறவில் பிறந்தவள் தானோ நான்?
யாழினியால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அன்னையைப் போலவே ஈஸ்வரமூர்த்தியும் கல்பனாவைத் தெரியும் என்று கூறாதது உறுத்தியது.
“உன் அம்மா பேர் கல்பனா என்று சொன்ன. ஒருவேளை அம்மா உன்னை அவருக்கு அறிமுகப் படுத்தாததனால அவர் அதிர்ச்சியடையாம இருக்கலாம். அதனால உன் அம்மா பெயரைச் சொன்ன உடனே நீ யார் என்று தெரியாம இருக்கலாம். உன் அம்மா என்ன ப்ரைமினிஸ்டரா? பேரச் சொன்ன உடனே தெரியும் என்று சொல்ல? புகைப்படமாவது காட்டி இருந்தால் காண்போர்ம் பண்ணி இருக்கலாம்” என்று தோன்ற ஒரு முடிவோடு அவளும் அன்னையும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைக் ஆபீஸ் கொண்டு செல்லும் கைப்பையில் வைத்தாள். 
யதுநாத்தின் வீட்டில் கோமதியும் பத்துமஜாவுக்குப் பரிமாறிக் கொண்டிருக்க, அனைவரும் காலை உணவுக்காக அமர்ந்திருந்தனர்.
“புதுப் பி.ஏ பேர் என்ன சொன்ன நாத்?” சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பேரனைக் கூர்மையாகப் பார்த்தவாறே கேட்டாள் ஆனந்தவள்ளி.
தன்னிடம் பேரன் யாழினியைப் பற்றி எதையும் கூறாதது ஆனந்தவள்ளிக்குச் சந்தேகத்தைக் கிளப்பி இருந்தது.
“ஆகா அவளைப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தேன். முத்தம்மாகிட்ட விசயத்தைச் சொல்ல மறந்துட்டேனே. இப்போ கேள்வி மேல கேள்வி கேப்பாங்களே” யதுநாத்தின் மனம் ஓலமெழுப்ப, ஆனந்தவள்ளியைப் பார்த்தவன் “மாலினி இல்ல. யாழினி. இல்ல இல்ல மாலினி. அட எதோ ஒன்னு. ஆமா நீங்கதானே எனக்கு பி.ஏவா அந்த பொண்ண செலெக்ட் பண்ணீங்க? அப்பொறம் எதுக்கு நீங்களே என் கிட்டப் பேர கேக்குறீங்க” முறைத்துப் பார்த்தான்.
ஆனந்தவள்ளி கேள்விக்குக் கேட்டால் அதற்கும் அவளுக்கும் சம்பந்தமில்லையென்று யதுநாத்துக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவனை முறைத்துப் பார்த்துக் கூறியது என் விருப்பத்துக்கா எல்லாம் செய்கிறாய்? எல்லாமே உன் விருப்பம் தானே என்று மட்டுமல்லாது, இவன் அவ்வாறு பார்த்தால்தான் அவளது சந்தேக வட்டத்தை அவள் தளர்ப்பாள்.
யாழினி தன் காதலி. அவளைத் தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று யதுநாத்தால் முத்தம்மாவிடம் நேரடியாகக் கூற முடியவில்லை. யாழினி அவன் காதலை ஏற்றுக்கொண்டு அவனுக்குக் காதலன் என்ற பதவியைக் கொடுத்திருந்தால் இவள் தான் நான் கரம் பிடிக்கப் போகும் பெண் என்று தைரியமாக அறிமுகப்படுத்தலாம். 
அவனுக்கு அந்த சந்தர்ப்பத்தை யாழினி வழங்கவில்லையே. “மன்னிச்சிக்கோடி யாழி கூடிய சீக்கிரம் உன் அனுமதியோட முத்தம்மாகிட்ட உன்ன அறிமுகப்படுத்துறேன்” மனசுக்குள் யாழினியிடம் மன்னிப்பு வேண்டி நின்றான்.
இந்த நிலையில் அவள் பெயரை இவன் சரியாகக் கூறினால் ஆனந்தவள்ளி யாழினியைப் பேரனின் பி.ஏ என்ற பதவியிலிருந்தே தூக்கி விடுவாள். அதைத் தடுக்கவே அவள் பெயர் கூட இவனுக்குத் தெரியாதது போல் நடித்தான்.
“பேர் கூட தெரியாது ஆனா முத்தம் மட்டும் கொடுக்குற?” மனதில் நினைத்ததை அவனிடம் கேட்கவில்லை. பேரனை ஆழ்ந்து பார்த்தவள் “உனக்கு அந்த பொண்ண பிடிக்கலைன்னா மாத்திடலாம்” தனக்கான உணவைப் பரிமாறியவாறே கூறினாள் முத்தம்மா.
தன்னுடைய பேரன் எப்படிப்பட்டவன்? பெண்களோடு எவ்வாறு நடந்துகொள்வான் என்று முத்தம்மாவுக்கும் நன்கு தெரியும். காலை வேலைக்குச் சேர்ந்த பெண்ணை முத்தமிடும் அளவுக்குத் தரம் தாழ்ப்பவனல்ல யதுநாத். அவளை இவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அப்படியே தெரிந்திருந்தாலும் முத்தமிடுமளவுக்கு என்ன உறவு? இவன் வேறு நான்கு வருடங்களாக ஊரில் இல்லை. அந்த பெண் வேறு பார்க்கச் சாதாரண குடும்பத்துப் பெண் போல் தெரிகிறாள். இவர்களுக்குள் என்ன உறவு? இதுதான் முத்தம்மாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
“நல்லாத்தான் வேல பாக்குறா. சொல்ல எந்த குறையுமில்லை. மாத்தணும்மா மாத்திடுங்க” முத்தம்மாவின் முகத்தை பாராமல் கூறியவன் கோமதி தட்டில் வைத்த இட்டிலியை முழுங்கினான்.
“நீ என்ன சொல்லுற சஞ்ஜீவ்?”
ஆனந்தவள்ளி தொழில் சார்ந்த முடிவானாலும், குடும்பத்தில் எந்த முடிவானாலும் கலந்தாலோசிக்காமல் எடுக்க மாட்டாள். ஆனால் யாரிடம் பேச வேண்டும்? என்ன பேச வேண்டும் என்பதை அவள் முடிவு செய்வதில்தான் குடும்பத்தாருக்குப் பிரச்சினையாக அமைகிறது.
அண்ணனிடம் கேட்டவுடன் யதுநாத்தின் பார்வை அவனின் புறம் சென்றது. அவன் என்ன பதில் சொல்வானோ? இவன் கண்களில் சுவாரஸ்யம் கூடியது.
யாழினி வேண்டாம் என்று பிரேக்கப் செய்தவன் அவளை வேலைக்கு வரச் சொன்னானா? அல்லது அவளாக வந்தாளா? என்று இப்பொழுது தெரிந்துகொள்ளலாம்?
“ஸ்டாப்னா நீட்டா இருக்கணும். எனக்கு அந்த பொண்ண பார்க்கும் போதே பிடிக்கல” வளவள கொழகொழ என்றில்லாம பட்டென்று சொன்னான் சஞ்ஜீவ்.
அவன் கூறிய விதத்திலையே அவன் யாழினியைக் காதலிக்கவே இல்லையென்று யதுநாத்துக்கு புரிந்து போனது. அப்படியென்றால் அவள் சொன்னது பொய். ஒருதலை காதலா? அதுவும் பொய்யா? யாழினி கூறியவற்றைப் பற்றி யதுநாத் சிந்தித்துக் கொண்டிருக்க,
ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்து “நாத்துக்கும் அந்த பொண்ண பிடிக்கல. சஞ்ஜீவுக்கும் பிடிக்கல அந்த பொண்ண வேலைல இருந்து நிறுத்திடுங்க மாப்புள” என்றாள் ஆனந்தவள்ளி.
யாழினியை வேலைக்கு எடுத்தது ஈஸ்வரமூர்த்தி. அவள் வேலை செய்வது யதுநாத்திடம். யதுநாத்தை கண்டித்து யாழினியை வேலையை விட்டு நீக்குவதில் ஒரு நியாயம் இருக்கும். அல்லது வேலைக்கு எடுத்த ஈஸ்வரமூர்த்தியிடம் விஷயத்தைக் கூறி யாழினியை வேலையை விட்டு நிறுத்தியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் சஞ்ஜீவிடம் எதற்குக் கேட்டாள்?  பேரன்கள் இருவரிடமும் கேட்டவள் மருமகனிடம் தன் முடிவைக் கூறி இருந்தாள். ஆனந்தவள்ளி ஒரு புரியாத புதிர்.
“வேலைக்குத்தானே எடுத்திருக்கோம் பாட்டி. என்னமோ பொண்ணு பார்த்து வீட்டு மருமகளாக்க போறோம் என்கிறது போல சொல்லுறீங்க” கேலியாகச் சொல்வது போல் கூறினான் கிரிராஜ்.
“கிரி பெரியவங்க கிட்ட இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று உனக்கு எத்தனை தடவ சொல்லுறது” அவனை அதட்டிய ஈஸ்வரமூர்த்தி “சரி அத்த வேற செக்ஷனுக்கு மாத்திடுறேன்” என்றார்.
யதுநாத்தின் இதயத்தில் பூகம்பமே வெடித்தது. “அவன் வேண்டாமென்றால் ஏன் என்ற கேள்வி வரும். என்ன செய்வது? சட்டென்று ஒன்றும் தோன்றாமல் முழித்தான்.
“இன்னிக்கிதான் வேலை கொடுத்திருக்கீங்க உடனே வேற வேலைக்கு மாத்திட்டா அந்த பொண்ணு என்ன? ஏது? என்று கேட்க மாட்டாளா?”  கேட்டது பத்மஜாதான்.
“யதுநாத்துக்கு பிடிக்கல என்று சொல்லிட வேண்டியதுதான்” என்றான் சஞ்ஜீவ்.
“எனக்கு உன்ன போல வேலை பாக்குறவங்க ட்ரெஸ்ஸோ, தோற்றமோ முக்கியமில்ல. ஒழுங்கா வேலை செஞ்சா போதும். அவ ஒழுங்காகத்தான் வேல பாக்குறா. சட்டென்று அவளை மாத்தினா புதுசா ஆள் வரும் வரைக்கும் நான்தான் இன்னல் படணும்” இதுதான் சந்தர்ப்பம் என்று கூறினான் யதுநாத்.
“ஆமா ஒவ்வொரு வருஷமும் காலேஜ் டாப்பருக்கு வேலை கொடுக்குறோம் இந்த வருஷம் இந்த பொண்ணு. இந்த பொண்ணுக்கு வேற வேலை பார்த்து கொடுக்குறதே பெரிய வேலை. இதுல புதுசா ஒருத்தன எங்க இருந்து வேலைக்கு எடுக்குறது?” யதுநாத்துக்கு ஒரு ஆணை பி.ஏவாக போட்டிருந்தால் எந்த பிரச்சினையுமில்லை. ஒரு பெண்ணை போட்டதுதான் பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்ட ஈஸ்வரமூர்த்தி மாமியாரைப் பார்த்தவாறே கூறினார்.
“இருக்குற பிரச்சினை போதாததற்கு அந்த பொண்ணுக்கு வேலை கொடுத்தது வேற ஒரு பிரச்சினையா பேசணுமா? அமைதியா சாப்பிடுங்க” என்றாள் கோமதி.
அதன்பின் அனைவரும் அமைதியாக உண்டு விட்டு தொழிற்சாலைக்குக் கிளம்பிச் சென்றனர்.

Advertisement