Advertisement

அத்தியாயம் 5
யதுநாத்துக்கு ஞாபகம் இருந்த நாளிலிருந்து அவன் ஆனந்தவள்ளியின் மடியில்தான் தவழ்ந்தான். அவனைப் பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தாலும், அவனுக்கு உணவூட்டுவது, தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது என்று எல்லாமே ஆனந்தவள்ளியே செய்தாள்.
அன்னை கோமதியை ஆசையாகப் பார்த்தாலும் சஞ்ஜீவ் இவனை அன்னையிடம் நெருங்க விடுவதில்லை. அவளும் சஞ்ஜீவிடம்தான் மொத்த பாசத்தையும் கொட்டுவாள். யதுநாத் கொஞ்சம் வளர்ந்ததும் இதைப் பற்றி ஆனந்தவள்ளியிடம் குடையலானான்.
“ஏன் பாட்டி அம்மாக்கு என்ன பிடிக்காதா? அண்ணனை மட்டும் தூக்கி வச்சி சோறூட்டுறாங்க. எனக்குக் கொடுக்கவே மாட்டேங்குறாங்க” உண்மையிலேயே கோமதி ஊட்ட நினைத்தாலும் சஞ்ஜீவ் விடுவதில்லை. தட்டி விடுவான். அல்லது யதுநாத்தை அடிப்பான். இல்லாவிடில் கீழே தள்ளி விடுவான். அதனால் கோமதி யதுநாத்தின் பொறுப்பை அன்னையிடம் கொடுத்திருந்தான். ஆனால் குழந்தை வளர்ந்தால் கேள்வி கேட்கத்தானே செய்யும்.
“நீ பொறந்தப்போ உன் அம்மா ஆறு மாசமா படுத்த படுக்கையா கெடந்தா. சொல்ல போனா உன்ன பெத்துக்கவே கூடாது என்றுதான் எல்லாரும் சொன்னோம். பிடிவாதமா பெத்துக்கிட்டா. புள்ளய பெத்தவளுக்கு புள்ளைக்கு பால் கொடுக்கக் கூட முடியாம படுத்து கெடக்குறாளே என்று எல்லாருக்கும் கவலை. உன் அக்கா “அம்மா எழுந்து வா, வா” என்று சொல்லிகிட்டே இருப்பா”
“அதான் அண்ணனுக்கு என் மேல இவ்வளவு கோபமா?” சோகமாகக் கேட்டான் சின்னவன்.
அவன் கேள்வியில் பழைய சிந்தனையிலிருந்து மீண்ட ஆனந்தவள்ளி “ஆமாம்டா தங்கம். உன்னாலதான் அம்மாக்கு உடம்பு முடியாம போச்சு என்று அவன் நினைக்கிறான். பெரியவனானா புரிஞ்சிப்பான். உனக்கு நான் இருக்கேனில்ல” பேரனை இறுக அணைத்து முத்தமிட்டுச் சமாதானப்படுத்தினாள்.
அதன்பின் அவன் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனந்தவள்ளியின் முந்தியைப் பிடித்தவாறே அலைந்தான். அவள் என்ன சொன்னாலும் செய்பவன் அவள் என்ன சொன்னாளோ அதையே படித்தான்.  
ஆடை தொழிற்சாலையிலிருந்து வரும் வருமானத்தை மேலும் பெருக்க, வெவ்வேறு துறைகளில் பங்குகளை ஆனந்தவள்ளி வாங்கி வைத்திருக்கிறாள். அப்படி வாங்கிய ஒரு காலேஜில்தான் யதுநாத் படித்தான். அங்குதான் அவனுக்கு யாமினி மீது காதல் மலர்ந்தது.
யதுநாத்துக்கு அன்னை பாசம் கிட்டவில்லை. சகோதரர்கள் ஒட்டவில்லை. ஆனந்தவள்ளியின் அதீத பாசத்தால் அவன் ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் வளர்ந்தான்.
யதுநாத் சராசரியாகப் படிப்பவன். எதையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் விளையாட்டுத்தனமாகத்தான் எடுத்துக்கொள்பவனும் கூட. பாஸ் ஆகிறானே என்று ஆனந்தவள்ளியும் கண்டுகொள்வதில்லை. 
பேரனுக்கு மறைமுகமாகச் சொல்லும் அறிவுரை சொந்தபந்தம் ரொம்ப முக்கியம். காதல் திருமணம் கூடாது என்பதேயாகும்.
ஆனால் அவளுக்குத் தெரியாமல் நண்பர்களோடு ஊர் சுற்றுவது, பார்ட்டி, பாப் என்று செல்வான். எங்குச் சென்றாலும் இரவு எட்டு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்று ஆனந்தவள்ளி கூறி இருப்பதால் சரியாக நேரத்துக்கு வந்து விடுவான். வந்தவனிடம் கேள்வி கேட்கும் முத்தம்மாவிடம் குடித்து விட்டு வந்து மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவன் படும் பாடு அவன் மட்டும்தான் அறிவான். அப்படி மாட்டிக் கொண்டு அடிவாங்கினாலும் பரவாயில்லை. அடித்த போதை இறங்கும் அளவுக்குப் பாடம் நடத்துவாள் முத்தம்மா. அதற்கு அஞ்சியே பாட்டியிடம் பம்முகிறான் பேரன்.
யதுநாத்துக்கு ஆண், பெண்ணென்று பாலின வித்தியாசமில்லாது நண்பர்கள் உண்டு. வீட்டுக்கும் அழைத்து வந்து முத்தம்மாவுக்கு அறிமுகப்படுத்தியும் இருக்கிறான். ஆனால் யாரை அறிமுகப்படுத்தினாலும் பெயரை மட்டுமே கூறுவானே ஒழிய அவர்களுடைய பெற்றோருடைய பெயர் கூட அவனுக்கு தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் எண்ணமும் அவனுக்கு இல்லை. அவசியமும் ஏற்படவில்லை. அவர்கள் அறிமுகப்படலத்தின்  போது கூறி இருந்தாலும் காதில் வாங்கியவனுக்குக் கருத்தில் பதியவில்லை.
“என்னப்பா அப்பா பேர் சொல்ல மாட்டியா?” என்று ஆனந்தவள்ளி பேரனை ஏறிட
“உன் அப்பா பேர் என்ன? என்று தோழர்களைத்தான் கேட்பான் யதுநாத்.
அவன் நண்பனாக இருக்க, ஜாதியோ, மதமோ, அல்லது நண்பனின் தந்தை பணவசதியோடு இருக்க வேண்டும் என்று அவன் எண்ணவில்லை. தனது எண்ணங்களோடு ஒன்றிப்போனால் போதும் என்று இருந்தான்.
ஆனால் ஆனந்தவள்ளி அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டாள். ஆண் நண்பர்களை விட்டு விடுவோம். தோழியாக இருக்கும் பெண்களை பற்றி அவன் எதையுமே அறிந்துகொள்ள முயல வில்லையென்றால் அவர்கள் மீது அவனுக்கு எந்தவிதமான ஈர்ப்பும் இல்லையென்று கணித்தாள்.
இதை வைத்தே அவன் எந்த பெண்ணோடு வந்தாலும் அவனிடமே அந்த பெண்ணை பற்றி கேள்வி கேட்டான். அவன் அவளுடைய அப்பா பெயரை சொல்லி இருந்தால் போதும் இவனுக்கு அவள் மீது எதோ ஒன்று இருப்பதை ஆனந்தவள்ளி புரிந்துகொண்டிருப்பாள். ஆனால் அவன் ஆசைப்பட்ட யாழினியை ஆனந்தவள்ளிக்கு அவன் அறிமுகப்படுத்தும் போது அவள் தந்தை பெயரை அவனால் கூறத்தான் முடியுமா?
“she is my girlfriend முத்தம்மா” என்று அறிமுகப்படுத்தும் பெண்ணின் முழுப் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. எதோ ஒரு செல்லபெயரைக் கொண்டு அழைப்பான். பெயரைக் கூறினால் அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாமல் உணவு மேசையில் முத்தம்மாவை பார்த்து முழிப்பான்.
இவன் அழைத்து வந்த மற்ற பெண்கள் போல்தான் இவளும் தீவீரத்தனமையற்ற காதல் அவனே இவளை அனுப்பி விடுவான் என்பதை புரிந்து கொள்ளும் முத்தம்மா சிரித்தவாறு பரிமாறுவாள்.
யாழினியைப் பொறுத்தவரையில் யதுநாத் அவளை முதன் முதலாகச் சந்தித்தது காலேஜ் ராகிங் நடக்கும் பொழுது. ஆனால் அவனோ அவளை அதற்கு முன்பே மாலில் பார்த்தான்.
இவன் நண்பர்களோடு சினிமா பார்க்க சென்றிருக்க, யாழினி சுற்றிப்பார்க்க வந்தாளோ?ஷாப்பிங் பண்ண வந்தாளோ? தற்செயலாக இவன் கண்ணில் விழுந்தாள்.
அவள் அணிந்திருந்த சுடியும், அவளது மூக்குக்கண்ணாடியும் இந்த இடத்துக்குச் சற்றும் பொருந்தவில்லை என்று பார்த்த உடனே கண்டு கொண்டவனுக்கு அவள் தனியாக நிற்பது கண்ணை உறுத்த கூட்டத்தில் தொலைந்து போன குழந்தையாகத்தான் தெரிந்தாள்.
ஆனால் அவனறியாதது. யாழினி அங்கிருக்கும் கடைகளில் துணிகளின் விலைகளைப் பார்த்துத்தான் மருண்டு விட்டாளென்று.
“யப்பா பிளாட்போர்ம்ல விக்கிற துணிய ஏசில கொண்டு வந்து வச்சி என்ன விலை சொல்லுறாங்க. இங்க ஒரு துணி வாங்குறதுக்கு அங்க நான் நாலு துணி வாங்கிப்பேன்” அலறியவாறே இவள் படிகளில் இறங்கலானாள். ஓடும் படிகள்தான் இவளுக்குப் பழக்கமில்லையே.
யதுநாத் சினிமா தியேட்டர் இருக்கும் நான்காம் மாடியிலிருந்து தாவி, குதித்திராங்கி இவள் இருந்த மூன்றாம் மாடியை வந்தடைய, அவள் காணாமல் போய் இருந்தாள்.
அவளை மால் முழுக்க தேடியும் கிடைக்காததால் அவளை மீண்டும் பார்க்க மாட்டோமா என்று அவன் மனம் ஏங்க ஆரம்பித்தது.
மூக்குக்கண்ணாடியினுள் தெரிந்த அவள் மருண்ட விழிகள் அவன் மனதை விட்டு நீங்காமல் அவள் முகமும் அவனை இம்சிக்கப் பசிக்கவில்லை. தூக்கம் கூட தூர ஓட, ஆனந்தவள்ளி கேள்வி கேட்க்கும் அளவுக்கு வந்து நின்றான். அதன்பின்தான் தன்னை நினைத்தே சிரித்தவன் தனது வேலைகளில் கவனமாக எண்ணினான்.
ஆனால் விதி மீண்டும் அவளைப் பார்க்க வைத்து அவள் மீது இருப்பது ஈர்ப்பல்ல காதல்தான் என்று புரிய வைத்திருந்தது.
ஆண் பெண் என்று வேறுபாடின்றி தோழமையாக பழகியவனுக்குக் காதல் என்ற சொல் கொஞ்சம் விசித்திரமானதாகத்தான் இருந்தது. அவனிடம் எந்த பெண்ணும் காதல் என்று வந்து நின்றதில்லை. சதா பெண்களோடு சுற்றுபவனிடம் பிற பெண்கள் எவ்வாறு காதலைச் சொல்வார்கள்?  தினமும் ஒரு பெண்ணோடு பைக்கில் காண்பவனை பிளே பாய் என்றே கருதினர்.
எந்தப் பெண்ணாவது நாணிக் கோணி காதலை சொல்லி இருந்தால் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமாவது தேடி இருப்பான்.
காதல் என்றாலே தனக்குப் பிடித்த பெண்ணின் சம்மதம் கிடைத்தால் முத்தமிடுவது. அவள் சம்மதத்தோடு எந்த எல்லைக்கும் போவது என்றுதான் எண்ணி இருந்தான். அவன் நண்பர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.
அப்படி எண்ணிக் கொண்டிருப்பவனின் வாழ்க்கைக்குள் யாழினி சொல்லாமல் கொள்ளாமல் சட்டென்று வந்து நின்றாள்.
அவள் விழிகளால் கவர்ந்திழுக்கப்பட்டவனுக்கு அவள் தோற்றமும் அவள் மருண்ட பார்வையும் அவள் அந்த இடத்துக்குப் பொருத்தமில்லையென்று தோன்றவே அவனது துடுக்குத்தனம் தலை தூக்க, சினிமா பார்ப்பதைக் காட்டிலும் அவளைச் சீண்ட மனம் தூண்டவே அவளைத் தேடியதாக எண்ணினான்.
அதன்பின்பும் அவள் இம்சித்தாலும் தனக்கு அவளைப் பிடித்திருக்கிறது என்று புரிந்துகொண்டவன் அவளைத் தேட முயலவில்லை.
ஏற்கனவே இது போல் அவனுக்குப் பிடித்த பெண்களிடம் தன் விருப்பத்தைக் கூறி இருக்கின்றான். சிலர் நிராகரித்திருக்க, சிலர் ஏற்றுக்கொண்டும் இருக்கின்றனர்.
ஏற்றுக்கொண்டு காதலர்களாகச் சுற்றிய பெண்கள் தோழிகளோடு பேசக் கூடாது பைக்கில் போகக் கூடாது என்று அவன் சுதந்திரத்தில் கைவைக்க தனக்கே ரூல்ஸ் போடும் இந்த இழவெடுத்த காதல் வேண்டாம் என்று இவன் சில பெண்களைத் துரத்தியடித்தான்.
“ஏன்டா இப்படியே போனா உனக்கு எந்த பொண்ணுமே கிடைக்க மாட்டா. அவளுங்க சொல்வாளுங்க சரி சரியென்று சமாளிக்கனும்டா” நண்பர்களின் புத்திமதியில் தெளிந்தவன் ஆறுமாதமாக ஒரு பெண்ணோடு சுற்றினான்.
அவளும் அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று இவனைப் படுத்தத்தான் செய்தாள். சமாளித்தவன் அவளிடம் மாட்டிக் கொண்டு கன்னத்தில் அறைவாங்கி பிரேக்கப் ஆனான்.
அதன் பின்தான் யாழினியைச் சந்தித்தான். தன் மானம் கெட்ட மனம் அடங்கவே மாட்டேங்குது. பிரேக்கப் ஆன சோகத்தைப் போக்க நண்பர்கள் சினிமாவுக்கு அழைத்து வந்தால் அங்கே ஒரு பெண்ணை பார்த்து அலையுது. தன்னையே திட்டிக் கொண்டவன் அவளைத் தேடி ஓடி இருந்தான்.
அவள்தான் மாலிலிருந்து மாயமாய் மறைந்த்திருந்தாளே. எங்குச் சென்று தேடுவது? மாலிலையா? நிச்சயமாக அவள் அங்கு வரமாட்டாள் என்று அவன் உள்ளம் சொல்ல அவளைத் தேடுவதைப் பற்றி அவன் சிந்திக்கக் கூட இல்லை.
ஆனால் விதி அவனிடமே அவளைக் கொண்டு வந்து சேர்ந்திருந்தது. தான் படிக்கும் காலேஜில் அவளை அவன் சற்றுமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளின் தோற்றத்திலிருந்த கிராமத்து மணமும், மருண்ட பார்வையும் அவனை அவளின்பால் ஈர்க்க, அது காதல் என்று உணராதவன் அவளைச் சீண்டத்தான் அவளை நெருங்கினான். யாழினி இவனைக் கண்டு கொள்ளாது கடந்து செல்வதினாலேயே இவன் விடாது அவள் முன்னால் பிரசன்னமானான்.
அவள் சாதாரணமாகப் பேசியிருந்தால் கூட இவன் அவளை மறந்து அவனுடைய வேலைய பார்க்கச் சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கும். அவனை முறைத்துப் பார்த்தே அவன் மனதில் நங்கூரமாய் காதலைச் சத்தமில்லாமல் இறக்கி இருந்தாள்.
நாளாக நாளாக அவள் புறக்கணிப்பில் யதுநாத்தின் தூக்கம் பறி போனது மட்டுமன்றி யாழினிதான் அவனுக்கான ஜோடி. அவனுடைய சரிபாதி என்று உணரலானான். அதை உணர்ந்துகொள்ளவே அவனுக்கு நான்கு மாதங்கள் சென்றிருக்க, உணர்ந்துகொண்ட நொடியே அவள் முன் நின்றவன் எந்த வித தயக்கமுமின்றி தான் அவளைக் காதலிப்பதாகக் கூறியே விட்டான்.
அந்தோ பரிதாபம் காதலைச் சொன்ன கணமே நிராகரிக்கப்பட்டுவிட்டான்.
தான் நிராகரிக்கப்பட்டு விடுவேன் என்று அறிந்துதான் கூறியும் இருந்தான் யதுநாத்.
சாதாரணமாகப் பெண்களைச் சீண்டினாலே அவர்களின் புறமிருந்து மெல்லிய புன்னகை பதிலாகக் கிடைக்கும். அல்லது முறைப்பு பரிசாகக் கிடைக்கும். ஆனால் யாழினியிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பும் இருக்கவில்லை. யாருக்கு என்று இருந்தவள் தன்னைத்தான் வம்பிழுக்கிறான் என்று புரிந்துகொண்டபின்தான் முறைக்கவே ஆரம்பித்திருந்தாள்.
இவள் முறைக்க ஆரம்பிக்கும் பொழுது யதுநாத் காதலிக்க ஆரம்பித்திருக்கக் காதலைச் சொல்லி விட்டான்.
ஆனால் அதை அவள் உணர்ந்தாளா? அவள் புறத்திலிருந்துதான் அவனுக்குச் சாதகமான எந்த பதிலும் வருவதில்லையே. பொறுமையாக காத்திருக்கலானான். 
காத்திருந்ததோடு மட்டுமல்லாது அவளை நெருங்கப் பலவழிகளிலும் முயற்சி செய்தான்.
அவள் செல்லுமிடமெல்லாம் சென்று அவள் கண்பார்வையில் நின்று ஏதேதோ பேசிப்பார்த்தான். அவள் இவனைத் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. தன் மனதை உணர்ந்துகொண்டபின் நேரடியாக அவளோடு பேசுவதில் அவனுக்கு எந்தவொரு தயக்கமும் இருக்கவில்லை. அவள் அடித்தால் கூட ஏற்றுக்கொண்டிருப்பான். பிரச்சினையாகி முத்தம்மாவின் காதுக்குச் செல்லுமோ என்றுதான் அஞ்சினான்.
ஏன் அவள் வேலை செய்யும் இடத்துக்கும் சென்றானே. இவன் யார் என்று அறிந்திருந்தும் ஒரு புன்முறுவலாவது பூத்தாளா? இல்லையே.
அவள் வீடு வரைதான் இவனால் செல்ல முடியவில்லை. அது அவர்களது தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி இவன் சென்றால் அங்கிருப்பவர்கள் இவனை அடையாளம் கண்டுகொள்வார்கள். இங்கு எதற்காக வந்திருக்கின்றாய் என்ற கேள்வியும் வரும். அது முத்தம்மாவின் காதுக்குச் சென்றால் யாழினிக்குத்தான் பிரச்சினை என்று அவன் குடியிருப்புக்கு மட்டும் செல்லவில்லை.
மற்ற பெண்களிடம் இல்லாத எது? என்னை இவளிடம் ஈர்க்கிறது என்று அவனுக்குமே புரியவில்லை. சரிதான் போடியென்று மற்ற பெண்களைப் போல் யாழினியை அவனால் விடவும் முடியவில்லை. அவள் யார்? எங்கிருந்து வந்தாள்? அவள் அப்பா பெயர் என்ன? என்றெல்லாம் கண்டறியலானான். 
அவனுக்குக் கிடைத்த தகவல்கள் அரையும் குறையுமாகத்தான் இருந்தது. மேலும் தகவல்கள் தேவையென்றால் ஒரு துப்பறிவாளரைப் தான் நாட வேண்டும். தான் அவளைதானே காதலிக்கிறேன். அவளுடைய குடும்பத்தையா? சொத்தையா? வேண்டாம் என்று விட்டு விட்டான்.
அவள் தன்னை காதலிக்க மாட்டாளா என்று உள்ளம் ஏங்கிக் கொண்டிருந்த வேலை கல்லூரியின் இறுதி நாள் அவளை முத்தமிட்டவன் அவளுக்கும் அவன் மீது விருப்பம் இருப்பதாக எண்ணினான்.
ஆனால் அடுத்த இரண்டு நாட்களாக அவளை சந்திக்க முயன்று தோற்றுப்போனான். அவள் காலேஜுக்கு வரவில்லை. இவன் செல்லவே கூடாது என்ற தொழிலாளர்களின் குடியிருப்புக்கே சென்று பார்த்து விட்டான். அவள் வீடு எது என்றுதான் இவனுக்குத் தெரியவில்லை.
யாழினி ஜுரத்தின் காரணமாகத்தான் கல்லூரிக்கு வரவில்லையென்று அறியாதவனோ அவள் மீது கடுங் கோபத்திலிருந்தான்.
அவளுக்கு தன் மீது விருப்பம் இருக்கும் பட்சத்தில் அதைச் சொல்ல என்ன தயக்கம்? ஏன் மறுக்கிறாள்? அச்சப்படுகிறாளா? யாரைப் பார்த்து? எதைப் பார்த்து? அல்லது தன்னை பிடிக்கவில்லையா? குழம்பிப் போனான் யதுநாத்.
ஆனந்தவள்ளி அவனை லண்டன் அனுப்பி வைத்ததில் வேறு வழியில்லாது குழப்பத்திலேயே விமானம் ஏறினான்.
தன்னை அவள் விரும்பி இருந்தால்? இந்த பிரிவு கூட அவள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தன்னையே தேற்றிக் கொண்டு நாட்களை நகர்த்தியவாறு படிப்பில் கவனம் செலுத்தினான்.
கனவிலும், அவன் நினைவிலும் யாழினி வந்து இம்சித்தாள். “ராட்சசி ஏன்டி என்ன கொல்லுற?” அவளைத் திட்டித் தீர்ப்பவன் அவள் நினைவாகவே உறங்கிப் போவான்.
அவன் காதலிப்பதாக நினைத்து ஊர் சுற்றிய சில பெண்களிடமில்லாத ஈர்ப்பு அவனுக்கு யாழினியின் மேல் இருக்க, அவள் அவனோடு இருப்பது போல் கற்பனை செய்து அவளோடு பேசினான்.
அவன் அறையில் மட்டுமல்லாது வெளியே நண்பர்களோடு இருக்கும் பொழுதும் யாழினியிடம் பேச “யாழினி யார்?” என்ற கேள்வியோடு அவனை அவர்கள் விசித்திரமாகப் பார்க்க ஆரம்பித்திருக்க, “அவ என் பொண்டாட்டிடா லூசுப் பசங்களா” அவர்களைத் திட்டி விட்டு காதிலிருக்கும் ஹெட்போனை கழட்டிக் காட்டி சமாளிப்பான்.
இரண்டு வருடப் படிப்புதான் சட்டென்று காலம் உருண்டோடி விடும் என்று பல்லைக் கடித்தவாறு இருந்தவனை ஆனந்தவள்ளி இந்தியாவுக்கு வரவிடவில்லை.
ஒரு கம்பனியை நிர்வாகிக்க அவன் படித்த படிப்பு மட்டும் போதாது, இன்னும் சிலவற்றை அவன் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மேலும் இரண்டு வருடங்கள் அவனை அங்குத் தங்க வைத்து பயிற்சி கொடுக்கலானாள். முத்தம்மாவிடம் கெஞ்சிப்பார்த்தும் எதுவும் நடக்கவில்லை.
யாழினியின் கல்லூரி படிப்பு முடியும்வரையில் அவளுக்குத் திருமணமாகாது என்ற நம்பிக்கை அவனுள் இருந்தது. அவளுக்குத் தன்னை பிடித்திருந்தால் தான் வரும் வரைக்கும் நிச்சயமாகக் காத்திருப்பாள் என்ற நம்பிக்கையும் இருக்கவே அவள் நினைவாக நாட்களை நார்த்தியவன் இந்தியா வந்து சேர்ந்தான்.
வந்தவனை உடனே ஆடைத்தொழிற்சாலையில் விற்பனை பகுதியில் பிரதான பொறுப்பைக் கொடுத்து அமர்த்தி விட்டாள் ஆனந்தவள்ளி.
“என்ன அத்த எந்த அனுபவமும் இல்லாதவனை உச்சாணிக் கொம்புள்ள கொண்டு போய் உக்கார வச்சிருக்குறீங்க? முதல்ல அவனைத் தரமான பஞ்ச எங்க வாங்கணும்? எப்படி வாங்கணும் என்று சொல்லிக் கொடுங்க” ஈஸ்வரமூர்த்தி எகிற,
“எல்லாம் எனக்குத் தெரியும்” மருமகனின் வாயை அடைத்தாள்  மாமியார். 
“என்ன மாமா நாங்க நாயா உழைக்கணும் உங்க சின்ன மகன் மட்டும் நோகாம ஏசில உக்காரனுமா?” கிரிராஜ் ஈஸ்வரமூர்த்தியைக் கேலியாகப் பார்த்தான்.
மாமியாரை முறைக்க முடியாமல் மருமகனை முறைத்த ஈஸ்வரமூர்த்தி “அத்த சொல்லுறதுதானே சட்டம். அவன் மேல ஒரு கண்ணவை. எதையாச்சும் சொதப்பி வைக்க போறான்” என்று விட்டு அகன்றார்.
வந்து இரண்டு நாட்களாக நிறுவனத்தை விட்டு யதுநாத்தால் அசையக் கூட முடியவில்லை. பழைய புதிய கோப்புகளை ஆராயச் சொல்லி முத்தம்மாவின் உத்தரவு. அவைகளைப் பார்த்து முடிக்கும் பொழுது ஒரு வாரம் ஓடியிருந்தது.
யாழினி கல்லூரி படிப்பை முடித்திருப்பாள். இப்பொழுது வேலைக்குச் செல்வாள். எங்குச் செல்வாளாக இருக்கும்? இன்னும் வேலை கிடைக்கவில்லையோ? என்ற சிந்தனையிலேயே இன்று காலை தொழிற்சாலைக்குச் சென்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சியாக அவளே அவன் பி.ஏவாக வந்து நின்றாள்.
தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஈஸ்வரமூர்த்தியின் முன்னால் மிக மிகச் சாதாரணமாகப் பேசியவன். அவளோடு தனதறைக்கு நுழைந்த மறுநொடியே அவளை இழுத்தணைத்து இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.   
இத்தனை நாள் பிரிவு, ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆசை எல்லாவற்றையும் ஒரே முத்தத்தில் கொட்டி வேகத்தைக் கூட்டி இருந்தான்.
அவனது இடது கையோ அவளது இடையில் நுழைந்து அவளை இறுக அணைத்திருந்து. வலது கையோ அவள் கூந்தல் நுழைந்து அவளை அவன் புறம் இழுத்திருந்தது.
யாழினி முற்றாக அவன் வசம் இருக்க, அவளால் அசையக் கூட முடியவில்லை.
அவள் அவளது மூக்குக்கண்ணாடியைக் கூட அணிந்திருக்கவில்லை. ஈஸ்வரமூர்த்தியோடு பேசும் பொழுது அதைக் கழட்டி கைப்பையில் வைத்திருந்தாள்.
அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டதாக சில ஆவணங்களில் கையொப்பம் வேண்டும் அதை யதுநாத்தின் காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதாகவும் கையொப்பம் போட்டுக் கொடுக்கும்படியும் அவர் கூறியதில் கண்ணாடியை உபயோகிக்கும் அவசியம் ஏற்படவில்லை.
மூக்குக்கண்ணாடி அதன் இடத்திலிருந்திருந்தால் யாதுநாத்துக்கு இடைஞ்சலாகத்தான் இருந்திருக்கும். யாழினியின் கவசம் காணாமல் போனதில் அவனுக்குச் சாதகமாகப் போய் இருந்தது.
அவளுடைய உடல் முழுவதும் மின்சாரம் ஊடுருவி மேனி மெலிதாக நடுங்க ஆரம்பித்தது. கண்கள் சொருக அவன் கைகளிலேயே தோய்ந்து சரிந்தாள். அவள் மூச்சுத்திணறும் பொழுதுதான் அவளை  விடுவித்திருந்தான்.
அவளோ இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனை யாரென்றே தெரியாதது போல் பேசினால், சீண்டமாட்டான். சில்மிஷங்கள் செய்ய மாட்டான் என்று அவள் கணக்குப் போட, அவனோ அறைக்குள் நுழைந்த உடனே முத்தமிட ஆரம்பித்திருந்தான்.
அவள் தனது கைகளில் சரணடைந்து விட்டாள். தான் இத்தனை வருடங்கள் காத்திருந்த காதல் கைகூடி விட்டது என்று உவகை கொண்டான்.
“மிஸ் யூ டி. அன்னைக்கி ஏன் டி காலேஜுக்கு வரல. இரண்டு நாளா உன்ன சந்திக்க எங்க எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா? “கிஸ் பண்ணதால கோபப்பட்டு காலேஜுக்கு வராம இருக்கியா என்று நினச்சேன். விருப்பம் இல்லாமதான் நீ அன்னக்கி என்ன கட்டிபுடிச்சியா? ஒரே குழப்பமா இருந்ததுடி. நான் வேற லண்டன் போய் ஆகணும். உன் கிட்ட பேசாம எப்படிப் போறதாம்? உன்ன தேடுறதா? துணியெல்லாம் பேக் பண்ணுறதா சொல்லு?  கடைசி முயற்சியா உன் வீட்டைத் தேடியே வந்துட்டேன். உன் குடியிருப்புக்கு வந்த என்னால உன் வீட்டைத்தான் கண்டு பிடிக்க முடியல. நான் மட்டும் கண்டு பிடிச்சிருந்தேன், அன்னைக்கே உன்ன கல்யாணம் பண்ணி இருப்பேன்” அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் யதுநாத் பேசிக்கொண்டே போனான். 
“என்ன சொல்கிறான் இவன்? வீட்டைத் தேடி வந்தானா? ஆமா நாங்க இருக்கிறது இந்த கம்பனிக்கு சொந்தமான குடியிருப்பு. அதனால்தான் வீடு வரைக்கும் இவன் வராம இருந்தானா? நான் காய்ச்சலில் படுத்தது தெரியாம வீட்டைத் தேடி வந்தானா?” அவள் மனம் அடித்துக்கொள்ள
“யாழினி அவன் உன் அண்ணன் டி” என்றது மூளை.
“அண்ணன் தான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னால் இறுக அணைத்து முத்தமிட்டானா?” அவள் மனம் கேலி வேறு செய்தது. 
அவள் மனதோடு போராடிக் கொண்டிருக்கிறாள் என்று உணராதவனோ அவள் மௌனம் சம்மதமாகத் தெரிய அவள் கையை பற்றிக் கொண்டான்.
அவன் தொடுகையில் உயிர்த்தெழுந்தாள் யாழினி.
அவனை உதறி விட்டு எழுந்து கொண்டவள் அவனுக்கு எந்த பதிலையும் கூறாமல் அந்த இடத்தை விட்டு விறுவிறுவென வெளியேறலானாள்.
“யாழினி யாழினி” என்று அவள் பின்னால் ஓடியவன் அவள் கையை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வந்து ஆபீஸ் அறையின் கதவடைத்தான்.
“ஏய் என்னடி நினைச்சி கிட்டு இருக்க உன் மனசுல? முத்தம் கொடுக்கும் போது மட்டும் அமைதியா இருக்க, பிடிக்காமத்தான் அமைதியா இருந்தியா?” கோபத்தில் அவள் கழுத்தை பிடித்திருந்தான்.
யாழினியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் மட்டும் கொட்ட ஆரம்பித்தது. இவன் கேட்கும் கேள்விக்கு அவன் என்ன பதில் சொல்வாள்?
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா என்று தெரியாமல் இவனிடம் எதுவும் கூறவும் முடியாது. நீ என் அண்ணன் என்று உளறவும் முடியாது. அவள் மனம் அவனுக்கு இசைவதைத் தடுக்க வழி தெரியாமல்தான் அவள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெறுக ஆரம்பித்திருந்தது.
“ஏய் என்னடி ஆச்சு?” யதுநாத் அவளை உலுக்கலானான்.
அதேநேரம் அவன் தொலைப்பேசி இசைக்க, “இது வேற என்றவாறு அதைக் காதில் வைத்தவன்” யாழினியைப் பார்க்க அவள் கழிவறைக்குள் நுழைந்திருந்தாள். 
இவன் பேசி முடிக்கும் பொழுது அவள் முகம் கழுவி அவன் இழுத்து அணைத்ததில் கலைந்த கூந்தலையும் வாரி, துப்பட்டாவையும் ஒழுங்காகப் போட்டிருந்தாள்.
“சொல்லு உனக்கு என்னதான் பிரச்சினை?” கையை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு இவன் கேட்க, அப்பக்கமாக சென்ற சஞ்ஜீவை பார்த்தவள் தான் அவனைக் காதலிப்பதாக அணுகுண்டை யதுநாத்தின் தலைமீது இறக்கி இருந்தாள் யாழினி.

Advertisement