Advertisement

அத்தியாயம் 4
ஈஸ்வரமூர்த்தி கோமதி தம்பதியர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் பத்மஜா. இரண்டாவது பிறந்தவன் சஞ்ஜீவ். கடைக்குட்டி யதுநாத்.
கோமதி ஆனந்தவள்ளிக்கும், சோமசுந்தரத்துக்கும் ஒரே பெண்.
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் ஆரம்பித்த நெசவு தொழிலை, இவர்களின் அப்பாக்கள் ஆடை தொழிற்சாலையாக உருமாற்றி இருக்க, சோமசுந்தரத்தின் காலத்தில் அவருக்குச் சென்னையில் இரண்டு ஆடை தொழிற்சாலையும், பருத்தி பஞ்சுகளை நட நிலங்களையும் வாங்கி இருந்தார்.
சொத்துப்பத்து இருந்து என்ன பயன்? ஆண்டு அனுபவிக்க ஆண்வாரிசு இல்லையே, பொட்டச்சிய இல்ல சோமசுந்தரம் பெத்து வச்சிருக்கான் என்று ஒருசில சொந்தபந்தங்கள் பேச, ஒருசிலரோ ஒரே மகளான கோமதி வயசுக்கு வந்த உடனே தங்கள் மருமகளாக்கி சொத்துக்களையும் அடையலாம் எனப் பெண் கேட்டு படையெடுக்கலாயினர்.
அது சின்னப் பெண்ணான கோமதியின் மனதில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சிய சோமசுந்தரம் “அவள் சின்ன பெண் கல்யாண வயதாகும் பொழுது இதைப் பற்றிப் பேசலாம்” என்று சொந்தபந்தங்களை வெறுத்தொதுக்கலானார்.
சொந்தபந்தங்கள் நெருங்குவது தங்களுடைய சொத்துக்காகத்தான் என்று கோமதி சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட அவளுமே சொந்தபந்தத்தில் உள்ள எந்த ஆடவர்களைச் சந்தேக கண்கொண்டு பார்த்ததால் யார் மீதும் பெரிதாக ஈர்ப்பு வரவில்லை.
காலேஜில் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுதுதான் எளிமையாக இருந்த ஈஸ்வரமூர்த்தி அவள் கண்ணில் பட்டான்.
திராவிட நிறம். அளவான உயரம். அலட்டலில்லா பேச்சு. அனைவருக்கும் உதவும் குணம் என்று கோமதியை ஈஸ்வரமூர்த்தி கவர இவளாகவே அவனோடு சென்று பேச அவனும் இவளோடு நட்பாகப் பழக ஆரம்பித்தான்.
நாட்கள் செல்ல செல்ல நண்பர்களாக இருந்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு காதலர்களாக மாறி இருந்தனர்.
கோமதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆனந்தவள்ளி மகளைக் கண்காணிக்க மகள் காதலில் விழுந்தது தெரியவந்தது.
சோமசுந்தரம் மகளைக் கண்டிப்பார் என்று பார்த்தால் பொறுமையாகக் கோமதியை விசாரித்தார்.
“அப்பா அவருக்கு நான் ஒரு பணக்காரி என்றோ, உங்க மக என்றோ தெரியாது. தெரிஞ்சி அவர் என் கூட பழகல”  
“என்னங்க இவ கிட்ட என்ன கேட்டுகிட்டு இருக்கீங்க? என்ன ஜாதியோ? என்ன குலமோ? நமக்கு சரிப்பட்டு வருமோ? இதெல்லாம் நல்லதுக்கு இல்ல. பேசாம இவள நம்ம சொந்தபந்தத்துலையே கட்டி வைங்க” கணவனிடம் கோபப்பட்டாள் ஆனந்தவள்ளி.
நீண்டநேர யோசனைக்குப் பின் வாய் திறந்த சோமசுந்தரம் “அந்த பையன நாளைக்கு என்ன ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லு” என்றார். 
“என்னங்க”
“முத்தம்மா நீ அமைதியா இரு” மனைவியை அடக்கினார் சோமசுந்தரம். 
ஈஸ்வரமூர்த்தியும் சோமசுந்தரம் சொன்ன நேரத்துக்கு அவருடைய ஆடை தொழிற்சாலையை வந்தடைந்தான்.
வணக்கம் வைத்தவனை உட்காருமாறு சைகை செய்த சோமசுந்தரம் “நான் உன்ன எதற்காக இங்க வரச்சொன்னேன் என்று உனக்கு தெரியுமா தம்பி?” என்று கேட்டார். அவர் பேச்சு என்னவோ தன்மையாகத்தான் இருந்தது. ஆனால் குரல் கடுமையாகத்தான் ஒலித்தது.
“படிச்சு முடிச்சு வேலை தேடிகிட்டு இருக்கேன் சார். உங்கள போய் கோமதி பார்க்க சொன்னா. அநேகமா அவங்கப்பாக்கு உங்கள தெரிஞ்சிருக்கும்” என்றவன் வெகுளியாகச் சிரித்தான். தான் சந்திக்க வந்தது இந்த ஆடை தொழிற்சாலையின் உரிமையாளர் என்றதும் கோமதியின் தந்தை உங்க நண்பனாக இருக்க வாய்ப்பில்லை. அநேகமாக உங்க நம்பிக்கையான தொழிலாளியாக இருப்பார் என்றும் கூறினான்.
எளிமையான அவன் ஆடை அவன் வறுமையை பறைசாற்றியதோடு, சோடா புட்டி மூக்குக்கண்ணாடியும், பேச்சின் இடையே வெகுளித்தனமாகச் சிரித்தவனுக்கு உலக அனுபவம் பற்றவில்லை என்று சட்டென்று கணித்தார் சோமசுந்தரம். 
தன் மகள் சொன்னது உண்மைதான். இவனுக்கு கோமதி என் மகள் என்று தெரியவில்லை. வேலைக்கு வந்திருப்பதாக வேறு நினைத்திருக்கிறான் என்று புரிந்து கொண்ட சோமசுந்தரம் சிடுசிடுக்க ஆரம்பித்தார்.
“கோமதி யார் என்று தெரியாத மாதிரி நடிக்கிறாயா? இல்ல நான் யார் என்றே தெரியாத மாதிரி நடிக்கிறாயா?” பட்டென்று மேசையின் மீது அடிக்க, அதிர்ந்தான் ஈஸ்வரமூர்த்தி.
ஒருகணம் ஈஸ்வரமூர்த்திக்கு சோமசுந்தரத்தின் கோபமுகம் ஏன் என்று புரியவில்லை. “என்ன சார் நீங்க, வேலை தேடி வரும் போது முதலாளி யாரு?  இது எந்த மாதிரியான கம்பனி என்று விசாரிக்காம இருப்பேனா?” அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவும் மறக்கவில்லை. அவனுடைய அந்த பதிலே அவன் வெகுளியான குணமுடையவன் என்று புரிந்தது.
“என்ன விளையாடுறியா?அவ என் ஒரே பொண்ணுடா? அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணா எல்லா சொத்தையும் அடையலாம் எங்குறதுதானே உன் திட்டம்” என்று சோமசுந்தரம் ஈஸ்வரமூர்த்தியின் சட்டையைப் பிடித்திருக்க,
“சார், சார் என்ன சார் சொல்லுறீங்க? நீங்கதான் கோமதியோட அப்பாவா?” சோமசுந்தரத்தை பயப்பார்வை பார்த்தவன் “எனக்கு சத்தியமா தெரியாது சார்” என்றவன் அதிர்ச்சியில் அவரிடமிருந்து விடுபடக்கூட முயலவில்லை.  
அவனை உதறிய சோமசுந்தரம் “எப்படி வளர்த்திருக்கேன் எம்பொண்ண? உனக்கு என்பொண்ணு வேணுமா?  அதோ அந்த பெட்டில இரண்டு லட்ச ரூபா இருக்கு அத எடுத்துட்டு ஓடிப்போய்டு. திரும்ப என் பொண்ணு பக்கம் தலை வச்சு படுத்த உன்ன கொலை பண்ணிடுவேன்” என்று மிரட்டலானார்.
“நீங்க எதற்குச் சார் எனக்குப் பணம் கொடுக்குறீங்க? கோமதி உங்க பொண்ணு என்று தெரிஞ்சிருந்தாவே நான் அவ கூட பேசி கூட இருக்க மாட்டேன்.
நான் சாதாரண குடும்பத்துல பிறந்து வளர்ந்தவன் சார். சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க. என்ன வளர்த்ததே எங்கக்கா சார். மாமாவும் சமீபத்துல தவறிட்டாரு. அக்காக்கு ஒருபையன். என்ன விட்டா அவங்களுக்கு யாருமில்ல. எங்கக்கா என்ன வளர்த்தா மாதிரி கிரிய நான்தான் வளர்க்கணும் என்று எனக்கு கொள்ளையாச சார். என்ன புரிஞ்சிகிட்டு மனைவி அமைஞ்சா அக்காவ உக்காரவச்சி சோறு போடுவா, கிரிய தன் புள்ளையா பத்துப்பா இதுதான் சார் என் பேராசை.
என்ன மாதிரி சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவ என்று நினைச்சிதான் கோமதியை காதலிச்சேன். அவ உங்க பொண்ணு என்று தெரியாது சார். என்னால உங்களுக்கோ, உங்க பொண்ணுக்கோ எந்த தொந்தரவும் வராது சார்” என்றவன் சோமசுந்தரத்தின் பதிலையும் எதிர்பாராமல் நடக்கலானான்.
அவன் பேச்சில் உண்மையும், அப்பாவித்தனமும் அப்பட்டமாகத் தெரிந்தது. “கொஞ்சம் இருப்பா. எதுக்காக என் பொண்ண வேணாம் என்று சொல்லுற?”
பணத்தாசை பிடித்தவன் என்றால் தான் கொடுத்த பணத்தை வாங்கிச் சென்றிருக்கலாம். காதல்தான் முக்கியம் என்றால் உங்க சொத்து வேண்டாம் நான் கோமதியை அழைத்துச் செல்கிறேன் என்றிருப்பான். இவன் வேறு ரகம். பதில் தெரிய இவ்வாறு கேட்டிருந்தார் சோமசுந்தரம்.
பதறியவனாகத் திரும்பி “ஐயோ சார் உங்க பொண்ணுக்கு எந்த குறையும் இல்ல. உங்க அந்தஸ்துக்கு மாப்புள பார்ப்பீங்க கண்டிப்பா அது நானில்லை. உங்க பொண்ண கட்டிக்க நான் உங்கள விட சம்பாதிக்கணும். அது இப்போதைக்கு முடியாது. உங்க பொண்ணு ஆசைப்பட்டா என்று என்ன கட்டி வைக்க நினைச்சாலும் எங்கக்காவை விட்டுட்டு நிச்சயமா என்னாலையும் இருக்க முடியாது. அதனாலதான் சொன்னேன். நான் வரேன் சார்.
கோமதிக்கிட்ட நான் தப்பானவன் என்று சொல்லி அவ மனச மாத்திடுங்க சார். இல்லனா அவ காதல்தான் முக்கியம் என்று என் கூட வந்துடுவா. நிச்சயமா ஆடம்பரமாக வாழ்ந்த அவளால குடிசைல வாழ முடியாது. சீக்கிரமே என் கூட வாழுற வாழ்க்கை கசந்திடும். சினிமால வேணும்னா காதலர்கள் சந்தோசமா வாழுறது போல காட்டலாம். ஆனா நிதர்சனம் அதுவல்லவே. கொஞ்சம் நாட்களிலையே அவளுக்கும் எனக்கும் இடைல சண்டை, சச்சரவு என்று வந்து நாம பிரியிரத்துக்கு இப்போவே விலகிடுறது ரெண்டு பேருக்குமே நல்லது. குழந்தை குட்டி என்று ஆனபிறகு தும்பமும், துயரமும் மட்டும்தான் எஞ்சும். என் அக்கா ஒருத்தி போதும் சார். கோமதிக்கு அந்த நிலைமை வேணாம்” புன்னகைத்து விட்டு வெளியேறிச் சென்றான் ஈஸ்வரமூர்த்தி.
ஈஸ்வரமூர்த்தியின் அக்காவின் வாழ்க்கையில் என்ன சிக்கலோ? அந்த அனுபவம் அவனைப் பக்குவப்படுத்தி இருக்க, கோமதி யார் என்று அறிந்த உடன் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துத் தெளிவாக முடிவெடுக்க வைத்திருக்கிறது என்று சோமசுந்தரத்துக்குப் புரிந்து போனது மட்டுமல்லாது, ஈஸ்வரமூர்த்தியின் நேர்மை சோமசுந்தரத்தைப் பெரிதும் கவர்ந்தது. பணத்தாசை பிடித்த சொந்தபந்தங்களை விட தன் மகள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைதான் மேல் என்று முடிவு செய்தவர் கோமதிக்கு ஈஸ்வரமூர்த்தியையே திருமணம் செய்து வைத்தார்.
கோமதியைத் திருமணம் செய்த கையேடு ஈஸ்வரமூர்த்தியின் அக்காவும் அக்கா மகனான கிரியும் ஈஸ்வரமூர்த்தியோடு சோமசுந்தரத்தின் வீட்டில்தான் வசிக்கலாயினர்.
திருமணமாகி முதல் வருடம் கடந்த நிலையில் கோமதி கருத்தரிக்கவில்லை. பொதுவாக இந்த விஷயத்தில் பெண்கள்தான் குற்றம் சாட்டப்படுவார்கள், கேள்விக்குக் கேட்கப்படுவார்கள். ஆனால் இங்கே வீட்டோடு மாப்பிள்ளையான ஈஸ்வரமூர்த்தியைக் கோமதியின் சொந்தபந்தங்கள் கேலி பேசி கேள்வியும் கேட்டனர்.
ஒரு சொந்தக்காரரின் வீட்டில் குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழாவுக்குச் சென்ற இடத்தில் கைகலப்பாகி வீடு வந்திருந்தனர் கோமதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி தம்பதியினர்.
அன்னை மடிதேடி கோமதி நடந்ததைச்  சொல்லி அழ, மகளுக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக ஆனந்தவள்ளிக்கு மருமகனின் இந்த செயல் ஆத்திரத்தை அதிகப்படுத்தக் கோமதியின் முன்னிலையிலையே “முட்டாள் முட்டாள்” என்று திட்டி இருந்தாள்.
“அம்மா அவரை ஒன்னும் சொல்லாத, எனக்காகப் பேசப் போய் தான் அவர் அத்தானை அடிச்சாரு. உனக்கு அவரை பிடிக்கலைன்னா நாங்க இங்க இருக்கல. தனியா போயிடுறோம்” என்றாள் கண்களில் கண்ணீரோடு.
“கோமதி அமைதியா இரு. அம்மா பேசுறதுக்கு கூட கூட பேசாதே” மனைவியை அமைதியாகவே அதட்டினான் ஈஸ்வரமூர்த்தி.     
மருமகனைக் கண்டுகொள்ளாது “அப்போ குறை உன்கிட்டத்தான் என்று நீயாகவே முடிவு பண்ணிட்டியா? யாரு சொன்னா? உன் புருஷனா? இல்ல அவன் அக்காவா?” கோபத்தில் சீறினாள் ஆனந்தவள்ளி.
“எதுக்கு இப்போ அமைதியாகவே இருக்குற அவங்கள பேசுற?” நாத்தனாரை விட்டுக்கொடுக்காமல் கோமதி பேச, அவள் கையை இறுக பற்றிக் கொண்டான் ஈஸ்வரமூர்த்தி.
“இவன் ஒரு முட்டாள். நீயொரு அடிமுட்டாள். முதல்ல போய் டாக்டர பாரு. அப்பொறம் யாருக்கு என்ன குறை என்று தெரியவரும். அதற்குண்டான மருத்துவத்தைப் பார்த்து குறைய நிவர்த்தி செய்ய வேணாம்? அவன் பேசினானாம். இவர் கைநீட்டினாராம்? அறிவிருக்கா? நாளைக்கு நம்ம வீட்டுல விஷேம் என்றா சொந்தபந்தங்க வர வேணாமா? எந்த இனத்துல எப்படி நடந்துக்கணும் என்று தெரியாது. சினிமா ஹீரோ என்று நினைப்பு” மகளையும், மருமகனையும் வார்த்தைகளால் விளாசித்தள்ளினாள்.
வீட்டில் நடந்த களோபரம் சோமசுந்தரத்துக்குத் தெரியாது. தந்தை வீடு வந்த உடன் அழுதவாறே அன்னை கணவனைப் பேசியதை கோமதி கூறி விட்டாள்.
செல்லமகள் அழுதால் சோமசுந்தரத்தின் மனம் தாங்குமா?   மனைவி மருமகனை பேசியது தவறு என்று சோமசுந்தரம் ஆனந்தவள்ளியைப் பேச  “இப்போவும் சொல்லுறேன் ஆத்திர அவசரமென்றா, நம்ம சொந்தபந்தம்தான் வருவாங்க. அவங்கள பகைச்சிகிட்டு பொண்ண வேற இடத்துல கட்டிக் கொடுத்தது நல்லதில்ல. போதாததற்கு அவன் அக்காவும் பையனும் வேற இந்த வீட்டுல தங்கணுமா? எனக்கு என்னமோ சரியா படல. அவங்கள நம்ம பண்ண வீட்டுல தங்க வைங்க” 
சோமசுந்தரத்துக்கு மனைவி சொல்லே மந்திரம். மகள் விஷயத்தில் மட்டும்தான் மனைவி பேச்சைக் கேட்க மாட்டார்.  ஒருவாறு கோமதியிடம் பேசி ஈஸ்வரமூர்த்தியை சம்மதிக்க வைத்து அவர்களைப் பண்ணை வீட்டிலும் தங்க வைத்தார்.  
கணவனுக்குக் குறை இருந்தால் தன்னுடைய மனதை மாற்றி வேறொரு திருமணம் செய்து வைக்க அன்னை நினைப்பதாக எண்ணிய கோமதி மருத்துவரை அணுகவில்லை. யார் சொல்லியும் மருத்துவரை நாடாத கோமதியை ஈஸ்வரமூர்த்தி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்தபின்தான் கோமதியின் கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது அறியவந்தது.
கோமதிக்கு ஈஸ்வரமூர்த்தியோடு திருமணமாகி இரண்டு வருடங்கள் கழித்து மாரடைப்பால் சோமசுந்தரம் இயற்கையை எய்தி இருக்க, கம்பனி பொறுப்புக்கள் அத்தனையும் ஈஸ்வரமூர்த்தியின் வசம் வந்து விடும் என்ற நிலையில், ஆனந்தவள்ளிக்கு அதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. கணவனோடு சேர்ந்து தானும் தொழிலை கவனித்து கொண்டிருந்தமையால் ஆனந்தவள்ளியே மொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ஈஸ்வரமூர்த்தியிடம் பொறுப்புக்களைக் கொடுத்து வேலை வாங்க ஆரம்பித்தாள்.
ஈஸ்வரமூர்த்தியும் மிகக் கவனமாகவும், பொறுப்பாகவும் ஆனந்தவள்ளி சொல்லும் வேலைகளைச் செய்து அவள் நம்பிக்கைக்கு உரியவனாக முயற்சி செய்யலானான். 
மருந்து, மாத்திரை, சத்தான உணவு என்று உட்கொண்டு திருமணமாகி நான்கு வருடங்கள் கழித்து கோமதிக்குப் பிறந்தவள்தான் பத்மஜா.
அவளை பெற்றிடுக்க கோமதி செத்துப் பிழைத்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னொரு குழந்தையைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று மருத்துவர் கூறி இருக்க, சொந்தபந்தங்கள் சும்மா இருப்பார்களா?
பத்மஜாவின் பெயர் சூட்டும் விழாவின் பொழுது “அம்மா போலத்தான் கோமதியும் பொம்பள புள்ளய பெத்து வச்சிருக்கா. இந்த குடும்பத்துக்கு ஆண்வரிசு யோகமே இல்ல போல. கோமதிக்கு ஆறு வருஷம் கழிச்சு வள்ளி பெத்த பையனும் சீக்காளி பையன் அல்பாயுசுல போய்ட்டான்” என்று பேச பத்மஜா கதறி அழுதவள் கண்டிப்பாக ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.
ஆனால் அவள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆனந்தவள்ளி யார் என்ன பேசினாலும் பரவாயில்லை. கோமதி மீண்டும் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று உறுதியாகவே கூறி இருந்தாள்.
பத்மஜா பிறக்க எவ்வாறு மாத்திரை மருந்து என்று உட்கொண்டு பிள்ளையை பெற்றெடுத்தாளோ, அவ்வாறே நான்கு வருடங்கள் கழித்து சஞ்ஜீவையும் பெற்றெடுத்தாள். சஞ்ஜீவுக்கும் யாதுநாத்துக்கும் மூன்று வருடங்கள் வயது வித்தியாசம்.
யாழினி எண்ணியது போல் ஈஸ்வரமூர்த்தியும் ஆணொன்று பெண்ணொன்று போதும் என்று நினைத்திருந்த வேளை பிறந்தவன்தானோ யதுநாத்? அவன் எது செய்தாலும் அது அவரின் கோபத்தை மட்டும்தான் தூண்டியது. அவரது வசவுகளிலிருந்து அவனைக் காத்து ஆதரவு தெரிவிக்கும் ஒரே ஜீவன் முத்தம்மா ஆனந்தவள்ளி தான்.
வண்டி நுழைவாயினுள் நுழைவதைப் பார்த்த ஆனந்தவள்ளி அருந்திக் கொண்டிருந்த தேநீர் கப்பை வைத்து விட்டு அது யார் வண்டி என்று பார்த்தாள்.
அது சஞ்ஜீவின் வண்டி என்றதும் மீண்டும் தேநீர் கப்பைப் கையில் எடுத்தவள் அருந்தலானாள்.
சஞ்ஜீவுக்கு சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம் நிகழ்ந்திருந்தது. சென்னையிலுள்ள தொழிலதிபர்களின் ஒருவரான வல்லவராயனின் ஒரே மகளான நிவேதிதாதான் அவன் கரம்பிடிக்கப் போகும் மணப்பெண்.
வண்டியை விட்டு இறங்கிய சஞ்ஜீவ் பாட்டிக்கு குட் ஈவினிங் சொல்ல, கோமதி மகனுக்கு அருந்த க்ரீன் டீ கொண்டு வந்து கொடுத்தாள். 
அதை அருந்தியவாறே இன்றைய வேலைகளை பாட்டியிடம் ஒப்பிக்கலானான் சஞ்ஜீவ்.
இன்னமும் ஆனந்தவள்ளியின் ஆதிக்கம் ஆடைத்தொழிற்சாலைகளின் மீது இருக்கவே, தினமும் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்வாள்.
“அம்மா இப்போதான் அவன் வந்தான். வந்த உடனே கேட்கணுமா? பொறுமையா கேட்கக் கூடாதா?” கோமதி அன்னையை முறைத்தாள்.
“அன்றாடம் வேலைய அன்றாடம் பார்க்கணும் அம்மா. இல்லனா அதுவே தலைக்கு மேல குவியும்” என்றான் சஞ்ஜீவ்
“அட போடா” கோமதி அலுத்துக்கொள்ளும் பொழுதே யதுநாத்தின் வண்டி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்தவாறே கோமதி உள்ளே சென்றாள். 
அவனது வண்டியைக் கண்டு ஆனந்தவள்ளியின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர அவனையே பார்த்திருந்தாள். 
“முத்தே முத்தம்மா முத்தமொன்று தரலாமா?” பாடியவாறே வண்டியிலிருந்து இறங்கியவன் ஆனந்தவள்ளியைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்து அவளுடைய கிறீன் டீயையே பருகலானான்.
சோமசுந்தரம் ஆனந்தவள்ளியை முத்தம்மா என்று அழைப்பதை அறிந்துகொண்ட யதுநாத் அவளை முத்தம்மா என்றுதான் அழைப்பான்.
  
பேரன் அவ்வாறு அழைக்கும் பொழுது கணவனே அழைப்பது போல் உணருவதாலோ என்னவோ ஆனந்தவள்ளிக்கு யதுநாத்தின் மேல் அலாதிப்பிரியம்.
அவளும் பேரனைக் கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்ச சஞ்ஜீவ் அவர்களைப் பொறாமையாகப் பார்த்தான்.
அவனைக் கோமதி கைக்குள் பொத்திப் பொத்தியே வளர்த்தாள். சஞ்ஜீவும் கோமதியின் இடுப்பை விட்டு இறங்க மாட்டான். எல்லாம் டீனேஜை அடையும் வரைக்கும் தான். அதன்பின் நண்பர்கள், பைக் என்று ஊர் சுற்றினான். படிக்கும் பொழுதே ஈஸ்வரமூர்த்தி தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு கூறி இருக்க, காலேஜ் விட்டால் தொழிற்சாலைக்குச் சென்று விடுவான்.
ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாகச் சென்றவன் நாளாக நாளாக “இது நம்ம தொழில் நாமதான் பார்க்கணும்” என்ற மனநிலைக்கு ஆளானான். தான் ஒரு முதலாளி. இளம் தொழிலதிபன் என்ற மனப்பாங்கு அவனை மற்றவர்களிடமிருந்து ஒதுங்கவும், மற்றவர்களை ஒதுக்கி வைக்கவும் தூண்டியது.
அன்னையின் மடியில் வளர்ந்ததால் முத்தம்மாவிடம் அதிகம் ஒட்டுதலில்லை. தம்பியை அன்னையிடம் ஒட்டவும் விடவில்லை என்றதால் அவன் முத்தம்மாவிடம் ஒட்டிக்கொண்டான்.
இன்று முத்தம்மாவோடு தொழில் ரீதியான பேச்சுக்கள் மட்டும்தான் அவனால் பேச முடியுமே தவிர, மனம்  விட்டுச் சிரித்துப் பேச இயலவில்லை. அதற்காகக் கோமதியிடம் செல்லம் கொஞ்சுகிறான் என்றால் அதுவுமில்லை.
“முத்தம் கொடுத்து என்ன ஏமாத்தலாம் என்று நினைக்காத. உனக்குக் கொடுத்த வேலைய நீ பார்த்தியா? போய் பைலெல்லாம் எடுத்துட்டுவா” யதுநாத்தை அதட்டினாள் ஆனந்தவள்ளி.
அவள் சொன்னதை காதிலையே வாங்காதவன் அங்கே வந்த பொம்மியை தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தான்.
அவள் கல கலவெனச் சிரிக்க “மாமா மாமா நானு நானு” என்று கையை நீட்டி துள்ளிக் குதித்தான் குட்டி.
  
பத்மஜா ஈஸ்வரமூர்த்தியின் அக்கா மகனான கிரிராஜையே திருமணம் செய்து தாய்வீட்டிலையே வாழ்கிறாள். அவர்களுக்கு ஆணொன்று பெண்ணொன்று என்று இரண்டு குழந்தைகள்.
“டேய் பாப்பாவ கீழே இறக்கு” கத்தியவாறே வந்த பத்மஜா தம்பியின் முதுகில் இரண்டு போட்டு “உனக்கு எத்தனை தடவ சொல்லுறது கம்பனில இருந்து வந்தா குழந்தைகளை தூக்காதே என்று” அவனிடமிருந்து பறிக்காத குறையாக பொம்மியை தூக்கிக் கொண்டாள்.
“அவன் கம்பனில என்ன கல்லுடைக்கவா போறான்? குழந்தையை தூக்கினாத்தான் என்ன?” ஆனந்தவள்ளி கேட்கும் பொழுதே குட்டி சஞ்ஜீவின் மடியில் அமர்ந்து அலைபேசியை நோண்ட ஆரம்பித்திருப்பதை பார்த்து பத்மஜாவை முறைத்தாள்.
மூத்தவனும் கம்பனியிலிருந்துதான் வந்திருக்கிறான். அவனிடம் குழந்தை சென்றால் மட்டும் ஒன்றும் சொல்ல மாட்டியா? என்றது முத்தம்மாவின் பார்வை.
“ரெண்டு பேரும் ஆபீஸ்தான் போறாங்க. இவன் ஏசிலையே உக்காந்து வேலை செய்யிறான்” சஞ்ஜீவி பார்த்தவள் “இவன் தொழிலாளர்க்கூட போய் மெசினை ரிபயார் பண்ணிட்டு வந்திருக்கான்” யதுநாத்தை முறைத்தவாறே “அவங்களுக்கு என்ன வியாதி இருக்குமோ. அது என் பிள்ளைகளை தொத்திக்கும்” கழுத்தை நொடித்தாள் பத்மஜா. 
 பேத்தி சொன்னதை ஆனந்தவள்ளி கண்டுகொள்ளவே இல்லை. வந்த உடன் அவன் அவளைத்தான் முத்தமிட்டானே.
“என்னடா? மெசினை ரிபயார் பண்ணினியா? நீ என்ன மெக்கானிக்கா?” என்று பேரனைக் கேட்டு அதட்டியது மட்டுமல்லாது “நீயும் வீட்டுலதான் இருக்க, நானும் வீட்டுலதான் இருக்கேன். இந்த விஷயமெல்லாம் உன் காதுக்கு மட்டும் எப்படித்தான் வருதோ”
கம்பனியில் ஒரு ஈ பறந்தால் கூட உன் புருஷன் உடனே போன் போட்டு சொல்லிவிடுவானே அதுதானே அவன் வேலை என்று பார்வையாலேயே பேத்தியைப் பொசுக்கினாள் ஆனந்தவள்ளி.
“ஆமாம் பாட்டி வேல நடந்துகிட்டு இருக்கும் போதே மெஷின் நின்னிருச்சு. பார்ட் பார்ட்டா கழட்டி டக்குனு என்னனு பார்த்தேன். உள்ள கட்டான துணி பீஸ் நிறைய இருந்தது. மெயின்டைன்ஸ் பண்ணாம வேல பார்த்ததால இந்த நிலம. மெக்கானிக் வேற இல்லையா. வேல நின்னா நமக்கு எவ்வளவு நஷ்டம்?” யதுநாத் கூற,
“மெயின்டைன்ஸ் பொறுப்பு உன்னுடையதுதானே சஞ்ஜீவ். டைலி செக்ஷன் செக்ஷனா பார்க்குறது இல்லையா?”
அவன் எங்கே அங்குச் சென்று பார்க்கின்றான். பி.ஏயை அனுப்புவான். கிரிராஜ் தான் பார்த்துக்கொள்வதாகக் கூறியதால் இவன் பாட்டுக்கு ஏசியறையிலிருந்துக் கொண்டு ஆபீஸ் வேலையை மட்டும் பார்த்திருந்தான். இதைச் சொன்னால் முத்தமாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும் என்று அறிந்தவன் அமைதியானான்.
“கைல தூசி படாம உழைக்கிறது கஷ்டம் பேராண்டி” சஞ்ஜீவை முறைத்தவள் “கோடி ரூபா நஷ்டமானாலும் பரவாயில்ல. நீ மெஷின்ஸ் ரிபயார் பண்ணக் கூடாது. நான் உனக்கு என்ன வேலைக் கொடுத்தேனோ அதை மட்டும் பாரு. புரிஞ்சுதா?” சின்ன பேரனை மீண்டும் அதட்டினாள்.  
“ஐயோ என்ன செல்ல முத்தம்மா. நீ சொன்னா நா எதுனாலும் கேப்பேன்னு தெரியாதா?” கொஞ்சி கெஞ்சி ஆனந்தவள்ளியைத் தாஜா செய்து தனதறைக்குள் நுழைந்திருந்தான்.
“யது வேலையெல்லாம் ஒழுங்கா செய்யிறானா?” சஞ்ஜீவை கேட்டாள் ஆனந்தவள்ளி.
“சொன்ன வேலைய மட்டுமா செய்யிறான்? தேவையில்லாத வேலையும் இல்ல பாக்குறான்” என்றாள் பத்மஜா.
      
“இன்னும் விளையாட்டுத்தனமாகவே இருக்கான் பாட்டி. போகப்போக கத்துப்பான். அப்பா அவனுக்கு புதுசா ஒரு பி.ஏவ நியமிச்சு இருக்காரு”
இந்த தகவல் ஆனந்தவள்ளிக்குப் புதிது. தன்னிடம் கேளாமல் எதற்காக புது பி.ஏ என்று கோபம் வந்தாலும் “அவன் பேர் என்ன?” என்று கேட்க
“அவன் இல்ல பாட்டி அவள். பேர் தெரியல” என்ற சஞ்ஜீவ் உள்ளே சென்றான்.
“பார்த்து பாட்டி உங்க செல்ல பேரன் கட்டினா அவளதான் கட்டுவேன் என்று ஒத்த கால்ல நிக்க போறான்” பத்மஜா கேலியாக சொல்ல புன்னகைத்த ஆனந்தவள்ளி பேரன் அவளை பற்றி தன்னிடம் ஒரு வார்த்தையேனும் கூறவில்லையே என்று யோசனைக்குள்ளானாள்.
தனதறைக்கு வந்த யதுநாத்தோ யாழினியை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

Advertisement