Advertisement

அத்தியாயம் 3
நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதைத் தேடுவதையும் விடவில்லை.
ஈஸ்வரமூர்த்திக்குச் சென்னையிலேயே எட்டு பெரிய தொழிற்சாலைகள் இருக்க, நான்கை மூத்த மகனான சஞ்ஜீவும், மற்றதை மருமகனான கிரிராஜும் பார்ப்பதாகக் கேள்வி.
மனைவியின் மூலம் கிடைத்த சொத்துக்களை ஈஸ்வரமூர்த்தி சரியாகப் பயன்படுத்தி அசுர வளர்ச்சியடைந்து விட்டார்.
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? என்று யாழினிக்குக் குழப்பமாக இருந்தது. காரணம் அன்னையை விட்டு பணத்துக்காக தற்போது இருக்கும் மனைவியைத் தேர்ந்தெடுத்திருந்தால் தனக்கு அவருடைய மூத்த மகளை விட வயது அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் யாழினி அவர்களை விட இளையவள்.
ஒருவேளை திருமணத்துக்குப் பின்பு அன்னையைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாரா? அப்படியாயின் மாதத்துக்கு ஒரு தடவை அல்லது வருடத்துக்கு ஒரு தடவையாவது வந்து தங்களைப் பார்த்து விட்டுச் சென்றிருக்கலாமே அவர்  தான் வருவதே இல்லையே
தான் காதலே இல்லாமல் ஒருவித ஆசையில், இச்சையில் பிறந்தவளா? அதனால்தான் தந்தை தன்னை வெறுக்கிறாரா? என்னைக் காண வராமல் இருக்கிறாரா? என்று சிந்தித்தவளுக்கு விடையாக அன்னை வேலை பார்ப்பதும் ஈஸ்வரமூர்த்தியின் தொழிற்சாலையில்தான், தாங்கள் குடியிருக்கும் காலனி தொழிலாளர்கள் குடியிருக்கும் காலனிதான் என்று தெரிய வந்ததும் இதுதான் உண்மை என்ற முடிவுக்கு வந்தாள்.
அவள் நினைத்ததுதான் உண்மை என்பதை நிரூபிப்பது போல் அன்று மாலை கல்லூரிக்குச் சென்று வரும் வழியில் திருவல்லிக்கேணியை அடைந்த பொழுது பார்த்தசாரதி கோவில் வரவே கன்னத்தில் போட்டுக் கொண்டவளுக்கு அன்னையின் சாயலில் ஒரு பெண் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிய, கல்பனா இன்று கோவிலுக்கு வரும் நாள் என்று ஞாபகம் வர உற்றுப்பார்த்தாள். அது கல்பனாவின் சேலைதான். அவளிடம் இருக்கும் நல்ல சேலைகளில் இதுவும் ஒன்று. யோசிக்காமல் பஸ்ஸை விட்டு இறங்கினாள்.
ஓட்டமும் நடையுமாக அவர்கள் இருக்கும் இடம் செல்ல அவள் கணித்தது போல் அது அவள் அன்னைதான். சிரித்த முகமாக அந்த மனிதரோடு பேசிக் கொண்டிருந்தாள். யார் அது? வயது அறுபது இருக்குமா? அதற்கும் மேலா? வயதை விடு யாழி முதலில் அவர் யார் என்று கவனி அவள் மனம் கூவ, யாராக இருக்கும்? இவள் யோசிக்கும் பொழுதே கல்பனாவின் தலையைத் தடவிய அந்த மனிதர் வண்டியில் ஏறிக் கிளம்பச் சட்டென்று யோசித்த யாழினி அலைபேசியில் அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
வண்டி அவளைத் தாண்டி சென்றபின் அன்னையை பார்த்தால் கல்பனாவை அங்கே காணவில்லை. கோவிலுக்கு உள்ளே சென்றாளா? அல்லது வெளியே சென்றாளா? தெரியவில்லை. எங்கே சென்றாலும் வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்று எண்ணியவாறே காலேஜ் பஸ்ஸை விட்ட கவலை கூட இல்லாமல் அடுத்த பஸ்ஸை பிடித்து வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் சிந்தனையெல்லாம் யார் அந்த மனிதர்? என்றே இருக்கச் சட்டென்று அவள் அன்னையின் புன்னகை முகம் மனக்கண்ணில் வந்து போக, தான் பார்த்திராத அன்னையின் புன்னகை முகம். அவ்வளவு உரிமையாகத் தலையைத் தடவும் அளவுக்கு அன்னைக்கு நெருக்கமான ஆண் என்றால் யாராக இருக்க முடியும் என்றவள் உதடுகள் “அப்பா” என்று முணுமுணுக்க விழிகளும் அதிர்ச்சியில் விரிந்தன.
தான் பார்த்த உருவத்தை கண்முன் கொண்டு வந்தவள் அவருடைய முகபாவனைகளைப் படிக்க முயன்றாள்.
கல்பனாவைப் பார்த்ததும் சந்தோஷமாகத்தான் தெரிந்தார். ரொம்ப நாள் கழித்துப் பார்ப்பது போலவும் தெரியவில்லை. அப்படியாயின் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களா?
அன்னையின் புன்னகை முகமும், அந்த மனிதரின் செய்கையும் மாறிமாறி வந்து போக, யாழினிக்குச் சந்தேகமாகவே இருந்தது. யார் இந்த மனிதர்? அன்னை வீட்டில் எதையாவது மறைத்து வைத்திருப்பாளோ என்று தேடலானாள்.
எங்குத் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. யாரிடம் கேட்பது? ஒன்றும் புரியாமல் சுற்றிக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென்று ஈஸ்வரமூர்த்தியின் ஞாபகம் வந்தது.
அவர்தான் ஈஸ்வரமூர்த்தியா? தெரியவில்லை. அவரைப் பற்றியும் அவரது தொழிற்சாலைகளைப் பற்றியும் இணையத்தளத்தில் செய்திகள் இருந்ததே தவிர அவருடைய புகைப்படமும் இல்லை. குடும்பப் புகைப்படமும் இல்லை.
யார் இந்த மனிதர்? எவ்வாறு கண்டு பிடிப்பது என்று யாழினி குழம்பித் தவிக்க, முகம் கொள்ளா புன்னகையில் கல்பனா வீட்டுக்குள் நுழைந்தாள். 
அன்னையைக் காணும் பொழுது கோபம், கோபமாக வந்தது. எதுவும் பேச முடியவில்லை. அடித்தால் தடுக்க முடியாத குழந்தையல்லவே யாழினி. உண்மை என்னவென்று அறியாமல் பேசக் கூடாது என்று மௌனம் காத்தாள். 
தான் படம் பிடித்தது ஈஸ்வரமூர்த்தியை தான் என்று யாழினி அறிந்துகொள்ளும் நாளும் வந்தது. அது அவளுடைய கல்லூரி பட்டமளிப்பு விழாவின் போது நிகழ்ந்தது.
அவள் படித்தது ஒரு தனியார் கல்லூரி. அதில் அவளுக்கு இடம் கிடைத்ததே ஆச்சரியம். நல்ல பெறுபேறுகள் வாங்கி இருந்ததால் கிடைத்து விட்டது என்று இவள் நினைத்ததற்கு, அதற்குப் பின்னால் ஈஸ்வரமூர்த்தி இருந்திருக்கிறார் என்று புரிந்தது பட்டமளிப்பு விழாவின் போதுதான்.
ஒவ்வொரு வருடமும் பட்டமளிப்பு விழா நடைபெறும். ஆனால் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே அந்த அரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவதால் அன்று மற்ற மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து விடுவார்கள். இதனாலேயே யாழினிக்கு ஈஸ்வரமூர்த்தியும் இந்த கல்லூரியின் பங்குதாரர் என்று தெரியாமல் போய் இருந்தது.
அவளது பட்டமளிப்பு விழாவின் பொழுது அமர்ந்திருந்தவளுக்குத் தான் அன்னையோடு கோவில் வாசலில் பார்த்த நபரை மேடையில் பார்த்து சற்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த உணர்விலிருந்தாள்.
மேடையிலிருந்த ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கையின் வெற்றியைப் பற்றியும் பேசத் தான் அன்று கோவில் வாசலில் அன்னையோடு கண்டது ஈஸ்வரமூர்த்தியைத் தான் என்றதும் அவள் எந்த மாதிரி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
அவள் மேடைக்கு அழைக்கப்பட்ட பொழுது ஈஸ்வரமூர்த்தி அவளுக்குப் பட்டமளித்ததோடு நலம் விசாரித்தார். தன்னை வந்து காரியாலயத்தில் சந்திக்கும்படியும் தன்னுடைய விசிட்டிங் கார்டையும் கொடுத்தார்.
அவர் பட்டம் கொடுத்த அனைவரோடு கைகுலுக்கியவர் இவளோடு மட்டும் இரண்டு நிமிடங்கள் செலவழித்துப் பேசினார். தனிப்பட்ட அலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவள் கணித்தது தானே உண்மை.
அவருக்கு அவளை நன்றாகவே தெரிந்திருக்கிறது. விலகி இருந்தாலும் கண்காணித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார். ஒருவேளை தன் பின்னால் சுற்றியவனைக் கூட கொன்று புதைத்திருப்பார். முதல் முறையாகத் தன்னை முத்தமிட்டவனை எண்ணி வருந்தினாள்.
தன்னை மகளாக ஏற்றுக்கொள்ள மாட்டாராம். ஆனால் படிக்க வசதியான கல்லூரியில் இடம் கொடுத்து, எடுகேஷனல் லோன் கொடுப்பாராம். மனதுக்குள் துவண்டாள் யாழினி.
தன்னை ஒதுக்கிய தந்தையிடம் ஏன்? என்ற கேள்வியோடு யாழினி ஈஸ்வரமூர்த்தியைக் காண அவருடைய தொழிற்சாலைக்குச் சென்றாள்.
அந்த கட்டிடத்தைப் பார்க்கும் போது யாழினியின் இரத்தம் கொதித்தது. தான் எவ்வாறான வாழ்க்கையை வாழ வேண்டும்? எவ்வாறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். யார் செய்த தவறு? அன்னையா? தந்தையா? இருவருமா? தனக்குப் பதில் கிடைத்தே ஆகா வேண்டும் என்று உள்ளே நுழைந்தாள்.
“ஏம்மா நில்லுமா நீ பாட்டுக்கு உள்ள போற? யார் நீ?”
யாரோ ஒரு பெரியவர் தன்னை தடுத்து நிறுத்தவும் ஈஸ்வரமூர்த்தி தன் தந்தையென்று நாக்கு நுனியில் பதிலிருந்தாலும் அதை அவள் வாயால் அல்ல அவர்தான் யாழினி என் மகள் என்று கூற வேண்டும் என்று அமைதியானாள். 
“ஏம்மா உன்னதானமா. இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?” யாழினியை முறைத்தவர் “கம்பனில எந்த வேலைக்கும் இன்டவியு கூட இல்லையே” தனக்குள் புலம்பினார்.
“என்ன அங்கிள் என்ன பிரச்சினை?” உள்ளே வந்தவாறே கேட்டான் சஞ்ஜீவ்.
யாழினியைப் பார்த்தவனுக்கு அவளின் எளிமையான தோற்றம் முகத்தைச் சுளிக்க வைத்திருந்தது.
பாக்டரியில் அதிகமாக வேலை செய்பவர்கள் ஏழைகள்தான். அவர்களிடத்தில் எல்லையை வகுத்துப் பழகுபவன் அவர்களைக் கையாள அவன் நேரில் செல்லாது அவன் அங்கிள் என்றழைத்த அவனது பி.ஏ தர்மராஜைதான் அனுப்பி வைப்பான்.
அவனைச் சுற்றி இருக்கும் ஸ்டாப் நன்கு படித்தவர்களாகவும், ஆடை விஷயத்தில் நேர்த்தியாகவும், கண்ணைக் கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என்று என்பவன் சஞ்ஜீவ். முதல் பார்வையிலேயே அவனுக்கு யாழினியைப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவன் அவளிடம் நேரடியாகவும் பேசவில்லை.
யாழினியும் அவனை அண்ணாந்து பார்த்தாள். ஈஸ்வரமூர்த்தியின் கார்பன் காபி என்பது போல் நின்றிருந்தவன் அவரை போல் தொப்பையும், வழுக்கைத் தலையுமல்லாது உயரத்தில் சற்று அதிகமாகவும் காணப்பட்டான்.
இவன் தான் எனக்கு அண்ணனா? என்று ஆராய்ச்சி பார்வை பார்த்த யாழினிக்குத் தான் மட்டும் ஏன் தந்தையை போலில்லை என்ற எண்ணம் தோன்றாமலில்லை. தான்தான் அன்னையை போல் கூட தோற்றத்தில் இல்லையே அதற்காகத் தான் ஈஸ்வரமூர்த்தியின் பெண் இல்லையென்றாகி விடுமா?
தன்னை பெற்றவர்களைப் போல் இல்லையென்றால் தாத்தா பாட்டி போல் இருப்பேன் என்று எண்ணிக் கொண்டாள். 
இவள் சிந்தனை இவ்வாறிருக்க யாழினி யார் என்றும் தெரியாது. எதற்காக வந்திருக்கிறாள் என்றும் அறியாமல் முதலாளிக்கு என்ன பதில் கூறுவார் தர்மராஜ்.
“நீங்க போங்க சார். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
தன்னைவிட வயதில் இளையவனைத் தம்பி என்று அழைக்காமல் சார் என்று அழைத்ததிலேயே சஞ்ஜீவ் எப்படிப்பட்டவன் என்று ஓரளவுக்கு யாழினியால் கணிக்க முடிந்தது.
“சீக்கிரம் என்னானு பார்த்து அனுப்பிடுங்க” அவள் எதோ டொனேஷன் வாங்க வந்தவள் என்று நினைத்துக் கூறி விட்டு அகன்றான் சஞ்ஜீவ்.
“ஏம்மா அங்க என்ன பார்வ?”
அவரை சோதிக்காமல் ஈஸ்வரமூர்த்தி கொடுத்த விசிட்டிங் கார்டை கொடுத்தவள் “சார பார்க்கணும்” என்று கூற அதை வாங்கிப் பார்த்தவரோ யோசனைக்குள்ளானார்.  
“என்ன சார் நான் இப்போ உள்ள போகலாமா?” என்றவளின் வார்த்தையில் நக்கல் கொட்டிக் கிடந்தாலும், அவரை சாடி என்ன பயன் என்று குரலை தாழ்த்தித்தான் கேட்டிருந்தாள்.
“போத் ப்ளோ” என்றவர் கார்டை அவளிடமே கொடுக்க அதைப் பெற்றுக்கொண்டவள் மின்தூக்கியை நோக்கி நடந்தாள்.
நடந்து கொண்டிருந்தவள் பார்வை முழுவதும் அந்த தளத்தைச் சுற்றி வர, இயந்திரங்களின் சத்தம் தொலைவில் கேட்பது போல் இருந்தாலும், அவள் இருந்த தளத்தின் தடுப்புச் சுவருக்குப் பின்னால்தான் துணிகளை வெட்டுவது அல்லது தைப்பது நடைபெறுவதாக நினைத்தாள்.
அவள் இருந்த தளத்தில் மின்தூக்கியும் இரண்டு ரிஷப்ஷனிஸ்ட்டும்தான் இருந்தார்கள் அவர்கள் இவளை அணுக முன்தான் தர்மராஜ் அணுகி கேள்வி கேட்டிருந்தார்.
மின்தூக்கிக்காக இவள் காத்துக் கொண்டிருக்க, அங்கே வந்த இரண்டு பெண்கள் இவளை கண்டுகொள்ளாது “இவரு சஞ்ஜீவ் சாருக்கு அப்படியே ஒப்பஸிட். அவர் கைல அழுக்கு படும் என்று யோசிக்கிறாரு. இவர் என்னடான்னா தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை செய்யிறாரு” என்றாள் ஒருத்தி. 
“சஞ்ஜீவ் சார் போல க்ளாஸா இருக்க தெரியல” என்றாள் மற்றவள்.
“கறபடிஞ்சாலும் தங்கம் தங்கம் தாண்டி” என்றாள் முதலாவதாகப் பேசியவள்.
“அமைதியா இருடி இங்கதான் வராரு” யாரை பற்றிப் பேசுகிறார்கள் என்று தலையைத் திருப்பிப் பார்த்த யாழினி அதிர்ந்தாள்.
அங்கே அங்கே அவன் வந்து கொண்டிருந்தான். ஆம். அது அவனேதான். அவளைக் காதலிப்பதாகக் கூறி முத்தமிட்டு மாயமாக மறைந்து போனவன்.
குப்பென்று வியர்வையில் குளித்தவளுக்கு மூச்சு முட்டியது. காய்ச்சல் வந்தவள் போல் உடல் வேறு உதறி ஆட்டம் காண மின்தூக்கியின் கதவு திறக்கவே அப்பெண்களுக்கு முன்னால் அரக்கப்பரக்க உள்ளே நுழைந்து நாலாம் தளத்துக்குண்டான பொத்தானை அழுத்தி இருந்தாள் யாழினி. மின்தூக்கியின் கதவுகள் மூடிய பின்தான் அவளால் சீராக மூச்சு விட முடிந்தது.
அவ்விரு பெண்களும் இவளை ஒரு மாதிரி பார்ப்பதைக் கூட கண்டு கொள்ளாது மூச்சை ஆழமாக இழுத்து விட்டு ஆசுவாசமடைந்தவளுக்கு அப்பொழுதுதான் மின்தூக்கிக்கு வெளியே இவ்விரு பெண்கள் பேசியது ஞாபகத்தில் வந்து “ஆமா அவனை எதுக்கு சஞ்ஜீவோட சேர்த்து பேசினாங்க? அவன் இங்க என்ன பண்ணுறான்? அவனுக்கும் ஈஸ்வரமூர்த்திக்கும் என்ன தொடர்பு?” அவள் மூளை விழித்து கேள்வி எழுப்ப, ஈஸ்வரமூர்த்தியின் இளைய மகன் வெளிநாட்டில் படிப்பதாக அல்லவா சொன்னார்கள் என்பதும் ஞாபகம் வந்தது.
“ஒருவேளை இவன்தான் ஈஸ்வரமூர்த்தியின் இளைய மகனாக இருக்குமோ?” ஏனோ மனம் கூடாது எனக் கூவக் குழம்பி போனாள். 
அவன் ஈஸ்வரமூர்த்தியின் மகனாகவே இருந்தால் என்ன? அல்லது இங்கு வேலை செய்பவனாகவே இருந்தால் தான் என்ன? தான் வந்தது தந்தையைக் கண்டு கேள்வி கேட்க மட்டும் என்று மனதோடு கூறிக் கொண்டவளுக்கு அந்த பதில் உவப்பாக இல்லை.
இல்லை அவன் தன்னுடைய அண்ணனாக இருக்க கூடாது என்று மனம் சொன்னதோடு அவன் தொட்ட இடம் தகிக்க ஆரம்பித்தது.
கையேடு இருந்த பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் நான்காவது தளம் வந்த உடன் ஈஸ்வரமூர்த்தியைக் காணச் செல்லாது வாஷ்ரூமை தேடி ஓடி குழாயைத் திறந்து முகத்தை அடித்துக் கழுவியவள் தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள். 
அவன் அணிந்திருந்த ஆடையை கண்முன் கொண்டு வந்தவளுக்குக் கறைபடிந்த அவன் ஆடைதான் கண்ணுக்குள் நின்றது. அவன் இங்கு என்ன வேலை செய்கிறான் என்று ஒரு முடிவுக்கு அவளால் வர இயலவில்லை.
ஒருவேளை அவன்தான் ஈஸ்வரமூர்த்தியின் இளைய மகன் என்றால் என்ன செய்வது? அவள் மனம் கேள்வி எழுப்ப ஒருகை இடுப்பிலும், ஒருகை நெற்றியிலும் வைத்தவாறு கழிவறையை அளந்தாள்.
“நீ என்ன அவனைத் திருமணமா செய்திருக்கிறாய்? அல்லது காதலிக்கிறாயா? இல்லையே. அவன் கூட உன்னை விட்டுச் சென்றவன் தானே இப்பொழுது உன்னை பார்த்தால் மட்டும் ஓடி வந்து காதல் மொழி பேசவா போகிறான்? என்றது மறுமனம்.
ஒருவேளை அவன் தன்னுடைய அண்ணாக இருந்தால்? என்று மனம் சோகமாக, சொந்த தங்கை என்று தெரியாமல் காதலிப்பதாகவும் கூறி முத்தமிட்டு இருக்கிறான். முத்தம் மட்டுமா கொடுத்தான் சட்டென்று மூளை கேட்ட கேள்வியில் மேனியில் மின்சாரம் பாய்ந்து நடுங்கி நின்றாள். அந்த உணர்விலிருந்து வெளிவரவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட மீண்டும் முகத்தைக் கழுவினாள்.   
“நான் யார் என்று அறிந்தால் அவன் நிலை என்னவாகும்?” கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய விம்பத்தைப் பார்த்தவாறே எண்ணியவளுக்கு அவனை நினைத்து சிறுகவலை எட்டிப் பார்த்தது. “ஏய் முட்டாள் பெண்ணே அவனைப் பற்றி கவலைப் படுவதை விட்டு, நீ உன்னைப் பற்றி யோசி” என்றது அவளது சிறு மூளை.  அடுத்த கணமே தாங்கள் ஈஸ்வரமூர்த்தியின் பிள்ளைகள் என்றால்? அவன் சொகுசாகவும், தான் மட்டும் எதற்காக இவ்வளவு துன்பப்பட வேண்டும் என்று எண்ணுகையில் அவனுக்கு அந்த வலி தேவைதான் என்று தன் விம்பத்தைப் பார்த்து குரூரமாகப் புன்னகை செய்தாள்.
அவன் யாராக இருந்தாலும் தான் வந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்ற முடிவோடு ஈஸ்வரமூர்த்தியைக் காணச் சென்றாள்.
அவரிருக்கும் தளத்தில் தைத்த ஆடைகள் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தபடியால் அவரைத் தவிர அங்கு யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
மின்தூக்கியின் வலது புறத்தில் ஈஸ்வரமூர்த்தியின் காரியாலயம் அளவாக இருக்க, ஆடைகள் வைக்க பெரியதொரு இடத்தை ஒதுக்கி வைத்திருந்தனர்.
ஈஸ்வரமூர்த்தியின் பி.ஏ அருணாச்சலம் இடது புறத்தில் ஒரு கதிரையில் அமர்ந்திருக்க இவள் அவரை அணுகி விஷயத்தைக் கூறி, அவருடைய அனுமதியோடு இவள் உள்ளே செல்ல காத்திருக்க உள்ளே பேச்சுக்கு குரல்கள் கேட்டன.
அவன் அவருடைய அறையில் இருக்கிறான் போலும் அவரோ கறைபடிந்த அவன் சட்டையைக் குறித்து அவனுக்கு வசவுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார்.
“ஏன்டா ஏன்டா இப்படி இருக்க? என் மானத்த வாங்கவே இப்படி எல்லாம் செய்யிறியா? உன்ன யாரு அந்த வேலையெல்லாம் பார்க்கச் சொன்னது? மெஷின் ரிபயார் என்றா மெக்கானிக் பார்த்துக் கொள்வான். அவன் இன்னைக்கு லீவ்னா வெளில இருந்து ஆள் வரும் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தானே. இந்த கறையோடவா மீட்டிங்ல போய் உட்காருவ? உனக்குப் பொறுப்பு கொடுத்தா? நீ வேற வேல பார்க்க போய்டுவ. உன் வேலைய நான் பார்க்கணுமா? உன் பாட்டி உன்ன செல்லம் கொடுத்தே கெடுத்து வச்சிருக்காங்க” அவனைத் திட்டியது போதாதென்று மாமியாரையும் சேர்த்துத் திட்டினார் ஈஸ்வரமூர்த்தி.
“ஆமா அவன் எப்போ வந்து எப்போ மெஷினை ரேபயார் பண்ணுறது? இப்போ வேலை நடக்குது இல்ல. ஒன் ஹவர் வேலை நடக்கலைனா இவ்வளவு லட்சம் நஷ்டம் என்று சொல்ல வேண்டியது” இவனும் சிடுசிடுத்தான்.
“நீ என்ன மெக்கானிக்கா? மெஷின்ல கைய விட்ட நேரம் அது ஆனாகி ஏடாகூடமா ஏதாவது ஆனா உன் பாட்டிக்கு நான்தானே பதில் சொல்லணும்” அவனை நன்றாகவே முறைத்தார்.  
“ஓஹ்… இவன் கடைக்குட்டி எங்குறதால பாட்டி செல்லம் போல” இந்த திட்டு வாங்குறவன் இவருடைய மகனாகத்தான் இருக்க முடியும் என்று இவர்களின் சம்பாஷணையைச் செவிமடுத்த யாழினி முடிவு செய்தாள்.
“என் பேச்சக் கேட்கவே கூடாது என்ற முடிவுல இருக்க இல்ல நீ” ஈஸ்வரமூர்த்தி கத்த
“நான் எது செய்தாலும் அதுல குறை கண்டு பிடிக்கிறதையே வேலையா வச்சிருக்குறீங்க. இத்தனை வருஷம் கழிச்சி பையன் பாரின்ல இருந்து வந்திருக்கானேன்னு பாசமா ஒரு வார்த்த பேசுறீங்களா? எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டு” அவனும் வெறுப்பைக் கக்கினான்.
“தன்னை ஒதுக்கி வைத்தவர் இவனிடமும் பாசம் காட்டுவதில்லை போலும். அதுசரி கடைக்குட்டியா பொறந்திருக்கான் என்றா வேண்டா வெறுப்பா பொறந்திருப்பான் என்று எண்ணினாள் யாழினி.  
“என்னடா கூட கூட பேசிகிட்டு” தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்று கருதாமல் அவனை அடக்க மேசையின் மீதிருந்த பேப்பர் வைட்டை அவன் மீது வீசியடித்தார் ஈஸ்வரமூர்த்தி.
அதை அவன் லாவகமாகப் பிடித்து மீண்டும் மேசையின் மீதே வைக்க, அதே கணம் தொலைப்பேசி அலறி அவரின் கோபத்தைக் கட்டுப்படுத்தியது.
ஈஸ்வரமூர்த்தியின் பி.ஏ. அலைபேசி வழியாக யாழினி வெளியே நிற்பதைக் கூறி இருப்பார் போலும். “கம் இன்” என்றார்.
யாழினி உள்ளே நுழையும் பொழுது சட்டென்று அறை அமைதியானது. அவன் ஈஸ்வரமூர்த்தியின் மகனாக இருப்பானோ என்ற எண்ணத்தில் யாழினி இருந்ததால் அவனைக் கண்டு இவளுக்குப் பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. அவன்தான் இவளைக் கண்டு கண்கள் மின்னப் புன்னகைத்தான். இவளோ அவனை இதற்கு முன் பார்த்தே இராதவள் போல் ஒரு பார்வையை வீசி விட்டு ஈஸ்வரமூர்த்தியை ஏறிட்டாள்.   
அவர் திட்டுக்கள் அவனுக்கு பழக்கப்பட்டவை போலும் காதை குடைந்தவாறு கண்டுகொள்ளாமல் நின்றிருந்தவன் யாழினியை கண்டு கொஞ்சம் அசௌகரியமாகவும் உணர்ந்தான். அது அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
நான்கு வருடங்களுக்கு முன் காலேஜில் மழித்த தாடி மீசையோடு ஒல்லியாக இருந்தவன், இந்த நான்கு வருடங்களில் கருகரு மீசையோடு திடமான தேகத்தோடும் அழகாகவே இருந்தான்.
யாழினியின் கண்கள் தன்னையும் மீறி அவன் புறம் செல்ல, “அவன் உன் அண்ணன். அண்ணன் டி யாழி” என்றது மூளை.  
யாழினியைக் கண்ட ஈஸ்வரமூர்த்தி “வாம்மா. சொன்னது போலவே கரெக்ட்டா வந்துட்ட” யாழினியை வரவேற்றவர் “இந்த பொண்ணு பேர் யாழினி. நீ படிச்ச காலேஜ்தான். காலேஜ் டாப்பரும் கூட. நம்ம காலேஜ்ல படிச்ச ஏதாவது ஒரு ஸ்டூடண்ட்டுக்கு வருஷா வருஷம் நம்ம கம்பனில வேலை வாய்ப்பு கொடுக்கிறது உனக்கு தெரியும்தானே. முதல்வர் ரெகமன் பண்ண பொண்ணு இவதான்” அவனை பார்த்து கூறியவாறே தன் இருக்கையில் வந்தமர்ந்தவர் யாழினியை தன் முன்னால் இருக்கும் இருக்கையில் அமரும்படி சைகையும் செய்தார்.
“என்னது? முதல்வர் சொன்னாரா? அப்போ இவர் அம்மா சொல்லி என்னுடன் பேசலையா? நான் அவர் பொண்ணு என்று வேலைக்கு வரச்சொல்லலையா?” குழம்பிப் போனாள் யாழினி.
“உக்காருமா. நீயும் உக்காரு” அவனோ யாழினியை பார்த்தவாறே அமர, அப்படியாயின் அன்னையும் இவருக்கும் என்ன உறவு என்று யோசித்தவாறே அமர்ந்தாள் யாழினி.
அவள் மண்டைக்குள் அப்படியென்றால் ஈஸ்வரமூர்த்தி என் தந்தை இல்லையா? என்ற கேள்வி தோன்ற மனதுக்குள் ஒரு வித இதம் பரவுவதை உணர்ந்தவளுக்கு அடுத்த கணமே ஈஸ்வரமூர்த்தியும் கல்பனாவும் கோவில் வாசலில் நின்ற தோற்றம் கண்முன் வந்து போனது.
அதைப் பற்றி அன்னையிடம் கேட்க முடியாது இவரிடம்தான் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தவளின் என்ன ஓட்டத்தை ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடப்புக்குக் கொண்டு வந்திருந்தது.  
“இங்க பாரு இவங்கதான் உன் பி.ஏ. பேர் யாழினி” அவனுக்கு இவளை அறிமுகம் செய்தவர் “இவன் எங்க வீட்டுக் கடைசி வாரிசு” என்று அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அவர் பேச்சில் இவள் அவன் ஈஸ்வரமூர்த்தியின் மகன் என்று கணித்திருந்தாலும் அதை அவர் வாய்மொழியாகக் கேட்ட பொழுது இதயம் மெல்ல அதிர்வதை உணர்ந்தாள்.   
“ஹாய் யாழினி. நீ என்ன பாஸ் என்றெல்லாம் கூப்பிட அவசியமில்லை. சும்மா பேர் சொல்லியே கூப்பிடலாம்” கண்சிமிட்டிப் புன்னகை செய்தவனைப் பார்த்து இவள் முழிக்க
“ஹேய் என் பேர் தெரியாதில்ல” அழகாகப் புன்னகைத்தவாறே “யதுநாத்” என்றான்    

Advertisement