Advertisement

அத்தியாயம் 24
யாழினி பேசியவைகளைக் கேட்டு யதுநாத்துக்கு தன் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தான் என்ன முட்டாளா? எத்தனை பெண்களை காதலித்திருக்கின்றேன். அவர்கள் தன் கையில் விருப்பத்தோடு சரணடைந்த தருணகங்களை அறிந்திருந்தவனுக்கு யாழினி தன்னை காதலிப்பது தெரியாதா?
அவர்களுக்கும் இவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாயம் தன்னை விரும்புகிறாயா? என்று அவர்களின் வாய்மொழி மூலம் அறிந்து கொண்ட பின்தான் அவர்களோடு பழகி இருந்தான். ஆனால் யாழினியின் விருப்பத்தை அவன் கேட்கவேயில்லை.
கேட்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இருக்கவில்லை. அவளை பார்த்த கணம் தோன்றிய காதலை அவளிடம் ஒப்புவித்த பொழுது அவள் மறுத்து முறைத்த பொழுதும் தன்னுடைய காதல் அவளை மாற்றி விடும் என்று எண்ணினான்.
என்னதான் அவள் இவனை விட்டு விலகி ஓடிய பொழுதும் கல்லூரியின் இறுதி நாளன்று அவளை முத்தமிட்ட பொழுது அவள் இசைந்து கொடுத்த நொடியில் அவள் மனதை உணர்ந்து கொண்டான்.
அவளும் தன்னை விரும்புகிறாள் என்று தெரிந்த நொடி அவள் கிடைத்த சந்தோசத்தில் எல்லை மீறி விட்டான். அதில் வெகுண்டெழுந்தவள் அவனை அடித்தாள் தான். 
எந்த பெண்தான் காதலனிடம் காதலை சொன்ன கணம் இப்படி ஒரு செயலை எதிர்பார்ப்பாள். அதுவும் காதலை சொல்ல அழைத்து வந்த யதுவோ அவளிடம் காதலைக் கூட சொல்லாத போது யாழினி அவனை அடித்ததில் தப்பே இல்லையே. 
பல பெண்களிடம் பிரேக் அப் சொன்ன பொழுது அறை வாங்கியவனுக்கு யாழினி அடித்ததெல்லாம் மனசில் பதியக் கூட இல்லை. அவன் சிந்தனையில் இருந்ததெல்லாம் அவளும் தன்னை விரும்புகின்றாள் என்பது மட்டும்தான். அந்த நம்பிக்கையில் தானே நான்கு வருடங்கள் அவளை பிரிந்து வெளிநாட்டில் இருந்தான்.
நான்கு வருடங்கள் கடந்த பின் அவளை சந்தித்த உடன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் முத்தமிட்டான் அப்பொழுதும் யாழினி அவனுக்கு இசைந்து கொடுத்து தன் மனத்தைக் கூறி விட்டாளே. சஞ்ஜீவை காதலிப்பதாக கூறி குழப்ப முயன்றாலும் அவள் குட்டுதான் உடனே உடைந்து விட்டதே.
சஞ்ஜீவை திருமணம் செய்து கொண்டேன் என்ற பொழுதும் அவன் காதல் அழிந்ததா? இல்லையே. ஈஸ்வர்தான் இருவரினதும் தந்தை அதனால்தான் இவள் தன்னை ஒதுக்குகின்றாள் என்று எண்ணி இருக்க, அவள் பிரச்சினையே வேறு என்பது அவள் அவனை திருமணம் செய்ய மறுப்பதில் தெரிகிறது.
எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லாமல் இல்லையே அவளிடம் பொறுமையாக பேசி என்னவென்று கேட்கலாம் என்று அவள் சென்ற திசையை நோக்கி நடந்தான்.
தான் சம்மதம் கூறிய மறுகணமே தந்தை சஞ்ஜீவின் வீட்டாரை சந்தித்து தன் விருப்பத்தைக் கூறியது சரஸ்வதிக்கு சரியாக தோன்றவில்லை. சஞ்ஜீவிடம் பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் சில இருக்க அவனைக் காண சென்றவளுக்கு யாழினி கத்திப் பேசுவது தெளிவாகவே கேட்டது.
“என்னடா இவன் நாலு வருஷமா லவ் பண்ணுறாங்க, நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கலைனா இவங்க கல்யாணம் நடக்காது என்று சொன்னான். இங்க என்னடான்னா இவ இப்படி பேசிகிட்டு இருக்கா?” என்னதான் நடக்குது இங்க?”அங்கேயே நின்ற சரஸ்வதி கண்டது வெளியே வந்த யாழினி அழுதவாறே தோட்டத்துப் பக்கம் செல்வத்தைத் தான்.
இந்த பேச்சு பேசியவளுக்கு இவ்வளவு அழுகை ஏன்? என்ற சந்தேகம் வலுக்கவே அவள் பின்னால் சென்ற சரஸ்வதி அவள் தோளில் கை வைத்திருக்க, அவளைக் கட்டிக் கொண்டு மேலும் அழுதாள் யாழினி.  
“என்ன பிரச்சினை என்று சொன்னா தானே யாழினி உன் கண்ணீருக்கு அர்த்தம் சொல்ல முடியும்” அவள் முதுகை நீவி விட்டவாறே சரஸ்வதி கூற
“என்னால முடியல அண்ணி. நெஞ்சு ரணமா கொதிக்குது. எங்கப்பா என்ன உசுரோட விட்டு வச்சதே நான் அவரை கல்யாணம் பண்ணி ஏமாத்தணும் என்று. எல்லா உண்மையையும் தெரிஞ்ச பிறகு நான் எப்படி அவரை கல்யாணம் பண்ணுறது. எங்கப்பா ஜெயிக்கக் கூடாது. ஒரு காலமும் ஜெயிக்கக் கூடாது” விசும்பலோடு ஆவேசமானாள்.
சஞ்ஜீவ் சரஸ்வதியிடம் எல்லா உண்மைகளையும் கூறியிருந்ததால் யாழினி கூறிய உடனே அவள் என்ன சொல்கின்றாள் என்று அவளுக்கு சட்டென்று புரிந்தது.
யாழினியோடு பேசலாம் என்று வந்த யதுநாத்தும் யாழினி கூறியதைக் கேட்டு விட்டான். 
அவள் இப்படியொரு முடிவில் இருப்பாள் என்று அவன் கனவில் கூட சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. தன்னை காதலித்து ஏமாற்ற சொந்த மகளையே ஈஸ்வர் மறைமுகமாக வளர்த்திருப்பதைத் தெரிந்து கொண்ட நான் தானே அவளை வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
என்ன இவள் முட்டாள் தனமான முடிவை எடுத்திருக்கின்றாள். கோபமாக அவள் முன் நின்றவன் “ஆமா உன் அப்பா உன்ன பெத்து வளர்த்ததே என்ன காதலிச்சு ஏமார்த்தத்தான் இல்ல. இத எப்படி நான் மறந்துட்டேன். நான் தானே உன்ன வேணாம்னு சொல்லணும். நீ எப்படி என்ன வேணாம்னு சொல்லலாம்” என்றதும் இரு பெண்களும் அதிர்ந்தனர்.
“என்ன முட்டாளாக்க பாக்குறியா? நீ என்ன லவ் பண்ணவே இல்லனு சொல்லுவ, நான் வந்து உன்ன சமாதானப்படுத்த வேணுமா?  அதெல்லாம் முடியாது. நீ என்ன வேணாம்னு சொல்லக் கூடாது நான்தான் உன்ன வேணாம்னு சொல்லணும்” அவளோடு மல்லுக்கு நிற்க,
“அப்போ நீங்க என்ன லவ் பண்ணுறேன்னு சொன்னது எல்லாம் பொய்யா?” கண்களில் நீரை நிறைத்தவாறு அவனை முறைத்தாள் யாழினி.
“நான் உன்ன லவ் பண்ணது கிடக்கட்டும் நீ என்ன லவ் பண்ணியா? இல்லையா?”
“லவ் பண்ணேன் தான். இப்பவும் லவ் பண்ணுறேன் ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” தலையசையத்தவாறு இவள் மறுக்க,
“ஆமா ஆமா லவ் பண்ணுவாளாம் கல்யாணமும் பண்ணிக்க மாட்டாளாம் கேட்டா அண்ணான்னு வேற சொல்லுவாளாம். பாத்தீங்களா சரஸ்வதி இவ சொல்லுறத?” சிரிப்பு எட்டிப்பார்க்க, கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்தான் யதுநாத்.
“என்னடா நடக்குது இங்க” என்று இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த சரஸ்வதியிடம் யதுநாத் முறையிடவும் யாழினியின் பேச்சு என்ன சின்னப் புள்ளத்தனமாக இல்ல இருக்கு என்றுதான் எண்ணத் தோன்றியது.  
 அவன் சிரிப்பை கட்டுப்படுத்த திணறுவதைக் கண்டு கொண்டவள் “இவர் பேசியே அவ வாயால காதலிக்கிறேன்னு சொல்ல வச்சிட்டாரே. நாம இங்க வேடிக்க பாத்துகிட்டு நிக்கிறதைத்தான் நம்ம கிட்ட கேள்வியா கேட்டு குறிப்பு காட்டுறாரோ” அவர்களின் பிரச்சினையை அவனே பார்த்துக்கொள்வான் என்று புரிய சிந்தித்தவாறே பதில் சொல்லாது நழுவினாள் சரஸ்வதி.
“நான் என்ன பண்ண? எங்கப்பா ஜெய்க்கக் கூடாது” முகம் சுணங்கினாள் யாழினி.
“அதான் அவர் ஜெயிலுக்கு போய்ட்டாரே” என்றவாறு அவளை நெருங்கி அணைத்துக்கொள்ள யாழினி அவனைக் கட்டிக் கொண்டு விசும்ப ஆரம்பித்தாள்.
“நீ என்ன காதலிக்கிறது ஏமாத்தவா? இல்லையே. அப்போ எப்படி உங்கப்பா ஜெயிப்பாரு. கண்டதையும் யோசிச்சு உன்னையே நீ கஷ்டப்படுத்துவியா. லூசு. நாம சந்தோஷமாக வாழ்ந்து அவருக்கு பல்பு கொடுத்துடலாம் சரியா”
அவன் பேசியதும் அணைத்து ஆறுதல் படுத்தியதும் அவள் மனதை குளிர்விக்க, அவன் இல்லாமல் தான் இல்லையென்று உணர்ந்த்துக் கொண்டாள்.
அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “என் பொண்ணைத்தானே கல்யாணம் பண்ணி இருக்க நான் தான் ஜெயிச்சேன் என்று அவர் சொல்ல மாட்டாரா?” யதுநாத்தை சீண்ட ஈஸ்வர் எப்படியும் பேசுவார் அதனால் தங்களுக்குள் பிரச்சினை வரும். யதுநாத்தின் நிம்மதி குலையும் என்றெல்லாம் சிந்தித்துதான் யாழினி திருமணத்துக்கு மறுத்தாள். அவள் மனதில் இருந்த அச்சம் நீங்காமல் அவனையே ஏறிட்டுக் கேட்க,
தாடையை தடவி யோசித்தவன் “பொறக்கும் முன்னே கொல்லப் பார்த்தாரு, பொறந்த பிறகு தூக்கிக் கொடுத்துட்டாரு. நீ எப்படி அவர் பொண்ணாக முடியும்? நீ கல்பனா அத்த பொண்ணு சரியா. அவர் பேச்செல்லாம் கேட்கக் கூடாது. என் பேச்சு மட்டும் தான் கேட்கணும். சரியா. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம். பாட்டியாலா லேட் ஆச்சு. நீயும் என்ன காய போடாத” என்றவன் மெதுவாக அவள் இதழ் நோக்கி குனிய, அவள் மூக்குக்கண்ணாடி அவன் மூக்கின் மேலே மோதி தடை போட யாழினி புன்னகைத்தாள்.
“இது வேற, நீ நெஞ்சுல சாஞ்சி இருக்கும் போதே ஏதோ குத்திக்கிட்டு இருந்தது. உன்ன சமாதானப்படுத்துற நோக்கத்துல அதை கவனிக்கல. உன் மூக்குக்கண்ணாடி ரோஜாவுக்கு முள் வேலி போல எனக்கு தொந்தரவாக இருக்கு. முதல்ல இந்த முள்ள நீக்கிடனும்” எனறவன் அதை அவன் கையில் ஏந்தி அவள் இதழ் நோக்கி குனிந்திருந்தான்.
தோட்டத்துப் பக்கமிருந்து சரஸ்வதி வரவும் அவளை யோசனையாக பார்த்த சஞ்ஜீவ் அவளை ஏறிட யாழினியும் யதுநாத்தும் அந்தப்பக்கம்தான் நிற்கிறார்கள் என்றாள்.
“யாழினி அழுதுகிட்டே போனா. யது கோபமா போனா. அவள அடிச்சாலும் அடிப்பான்” என்றவாறு அப்பக்கம் செல்ல
அவன் கையை பிடித்துத் தடுத்தவள் “அவரு உங்கள வேணா அடிப்பாராக்கும் உங்க தங்கச்சி எல்லாம் அடிக்க மாட்டாரு” என்று சிரிக்க,
“என்ன கிண்டலா?” என்று சிரித்தவன் அவள் கையை தங்கைக்குள் பொத்தி வைத்துக்கொண்டான்.
“அவங்க அவங்க பிரச்சினையை பேசி சமாதானமாவங்க நான் வந்தது உங்க கிட்ட பேச” என்ற சரஸ்வதி தன்கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை.
“பேசணுமா? இல்ல. எக்ரிமண்ட் போட போறியா?”
“என்ன?” புரியாது சரஸ்வதி கேட்க,
“அதான் ஊர விட்டு வர மாட்டேன். வீட்டை விட்டு வர மாட்டேன். தப்பியோடதான் தூங்குவேன். நைட்டுல சரக்கடிப்பேன். என்றியே இன்னும் ஏதாச்சும் மறந்து போனத சொல்ல வந்தியா?” என்று கேட்டு அவள் முறைப்பையும் பெற்றுக்கொண்டான்.
“கல்யாணம் பண்ணா சின்னவனை பிரியனும் இன்னும் மூணு வருஷம் போகட்டும் என்றுதான் யோசிச்சேன். நான் இப்போ வந்தது அத பத்தி பேச இல்ல. ஆமா நீங்க என்ன ஊரு உலகத்துல பொண்ணே இல்லாத மாதிரி என்னையே கல்யாணம் பண்ணனும் என்று அடம் பிடிக்கிறீங்க? கண்டதும் காதல் என்று சினிமாக் கதையெல்லாம் சொல்லாதீங்க” என்றவளோ காரணத்தைக் கேட்டு நின்றாள். 
உண்மைதானே இவளை பார்த்த உடன் காதல் வந்தது என்றால் அபத்தம். ஆனால் இப்பொழுது அவளை ரொம்பவே பிடிக்கிறது. திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பொழுது இந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சயமாக சஞ்ஜீவ் முழித்திருப்பான்.
“வேறென்ன உன் குடும்பத்து மேல நீ வச்சிருக்கிற பாசம் தான். குடும்பத்தையே இவ்வளவு அன்பா பாத்துகிற நீ கட்டின புருஷன பாத்துக்க மாட்டியா? எனக்கா உன் குடும்பத்தை கொஞ்சம் விட்டுக்கொடு. உன் குடும்பத்துக்காக நான் மகனாக இருந்து எல்லாம் செய்யிறேன்” என்றவனை சரஸ்வதிக்கும் பிடிக்கத்தான் செய்தது. 
மெதுவாக அவன் தோள் சாய முனைய யாழினியும், யதுநாத்தும் ஒருவரையொருவர் அணைத்தவாறு சிரித்து பேசிக்கொண்டு வர சரஸ்வதி சஞ்ஜீவிடமிருந்து தன் கையை விடுவித்துக்கொள்ள முயன்றாள்.  
வலுக்கட்டாயமாக அவள் கையை பிடித்துக் கொண்டவன் “ரொம்ப பண்ணா இடுப்புல கைய வைப்பேன்” என்று மிரட்ட, அவனை முறைத்து விட்டு அமைத்தியானாள் சரஸ்வதி.
என்னதான் சகஜமாக பேசினாலும் சில விஷயங்களை மற்றவர்களின் முன்னிலையில் சட்டென்று செய்து விட முடியாதே. நகரத்தில் வளர்ந்த சஞ்ஜீவுக்கு சாதாரணமாக இருக்கும் சில விஷயங்கள் சரஸ்வதிக்கு வித்தியாசமாக தென்படுவது இயல்பு. இந்த சின்ன விஷயத்தையே மிரட்டி செய்ய வைக்க வேண்டிய சஞ்ஜீவ் மற்ற விஷயங்களை எவ்வாறு செய்ய வைக்க போகிறானோ?
“என்னடா ஒருவழியா பேசி சமாதானப்படித்திட்ட போல” சஞ்ஜீவ் இருவரையும் மாறி மாறி ஏறிட்டவாறே கேட்க,
“சீக்கிரம் கல்யாண தேதிய பிக்ஸ் பண்ண சொல்லு இல்லனா இன்னும் ஏதாச்சும் பிரச்சினையை கிளப்பிடுவா. இவ இல்லனா வேற யாராச்சும் கிளப்பிடுவாங்க” யதுநாத் தீவிரமான முகபாவனையில் சொல்ல பெண்கள் இருவரும் சிரித்தனர். 
சரஸ்வதியின் வீட்டில் சம்மதம் கிடைத்து விட்டதை  ஆனந்தவள்ளிக்கு தெரிவித்ததும், அடுத்த முகூர்த்தத்திலையே திருமணத்தை வைக்கலாம் என்று கூறியவள் அனைவரையும் சென்னைக்கு கிளம்பி வரும்படி கூறியிருக்க, மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் தான் இவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து அவளை அனுப்ப வேண்டுமா? அதுவும் சென்னைக்கு என்று முத்தப்பா கவலைக்குள்ளாக, தான் அவளை நன்றாக பார்த்துக்கொள்வதாகவும், கல்யாணத்துக்கு துணி எடுக்க வேண்டும், இதர வேலைகள் வேறு இருக்கின்றன என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தான் சஞ்ஜீவ்.
சரஸ்வதி குடும்பத்தை கல்பனா மற்றும் யாழினியோடு ஆனந்தவள்ளியின் மற்றுமொரு வீட்டில் தங்கவைத்திருக்க, கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பொழுதுதான் கல்பனாவை வெளியே அழைத்து வந்த சஞ்ஜீவ் மற்றும் யதுநாத் சரஸ்வதி யார் என்ற உண்மையையே அவளிடம் கூறி இருந்தனர்.
“என்னப்பா சொல்லுற? எம்பொண்ணு உசுரோடதான் இருக்காளா? அந்தப்பாவி கொன்னு இருப்பான்னு நினைச்சி மனச தேத்திக்கிட்டேன்” என்றவள் இதுநாள்வரை யாரிடமும் தன் பிள்ளை எங்கே என்று கேட்கவுமில்லை. என்ன ஆயிற்று என்று கேட்கவுமில்லை ஏன் என்று யதுநாத் மற்றும் சஞ்ஜீவுக்கு புரிந்தது.
நீடாமங்கலத்துக்கு செல்ல முடிவெடுத்தது முதல் அங்கு நடந்தவைகளை நினைத்துப் பார்த்தவள் “என் பொண்ண கண்டு பிடிச்சது மட்டுமில்லாம அவளை என்னோட சேர்த்து வைக்க கல்யாணமும் பண்ணிக்கிறியே, ரொம்ப நன்றிப்பா…” கண்கள் கலங்கினாள் கல்பனா. 
ஆனந்தவள்ளி தான் சரஸ்வதியை பார்த்ததில்லையென்று பார்க்க வந்திருந்தாள். வந்தவள் கோமதியின் மூலம் யதுநாத்தும், சஞ்ஜீவும் கல்பனாவை அழைத்துக்கொண்டு சரஸ்வதியை பற்றி சொல்ல சென்றிருப்பது அறிந்து குதித்தாள்.
“பெத்த அம்மாவுக்கு இவதான் பொண்ணு என்று தெரிஞ்சா மட்டும் போதுமா? பொண்ணுக்கு இவதான் அம்மா என்று தெரிய வேணாமா?” சரஸ்வதியை அழைத்து தங்களது குடும்பத்தில் நடந்த குளறுபடிகளை பற்றி தெரியுமா என்று கேட்க அவளும் தெரியும் என்றாள். 
“எல்லா விஷயமும் தெரியுமா? கல்பனாவின் காணாமல் போன குழந்தையை கண்டு பிடித்தது கூட தெரியுமா?” என்று கேட்க, இல்லையென்றாள்.
“அந்த குழந்தையே நீதான். உன்ன பிரிய உன் அம்மா எந்த விதத்திலும் காரணம் இல்ல. அம்மாவும் பெண்ணும் பிரிஞ்சிருந்தது போதும். அந்த பாவம் என் குடும்பத்துக்கு இனியும் வேண்டாம்” என்றாள். அதிர்ந்து நின்றாள் சரஸ்வதி.
யாழினி பத்மஜா மற்றும் கிரியோடு முத்தப்பா மற்றும் சரஸ்வதியின் சகோதரர்களை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் சென்றிருக்க, சரஸ்வதியும், கல்பனாவும் மட்டும்தான் வீட்டில் இருந்தனர்.
கல்பனாவை யதுநாத்தும், சஞ்ஜீவும் அழைத்து சென்ற பொழுதுதான் ஆனந்தவள்ளி கோமதியோடு வந்திறங்கிருந்தாள். 
கல்பனாவை ஒருவாறு சமாதானப்படுத்தி சஞ்ஜீவும், யதுநாத்தும் அழைத்து வர, அவளை கட்டிக் கொண்டு “நீ தான் என் அம்மாவா?” எனக் கேட்டு ஓவென அழ ஆரம்பித்தாள் சரஸ்வதி. 
கல்பனா மாத்திரம் உண்மையை தெரிந்துக் கொண்டால் போதும், சரஸ்வதி அறிய அவசியமில்லையென்று சஞ்ஜீவும், யதுநாத்தும் பேசி முடிவெடுத்திருக்க, அவள் எப்படி அறிந்துக்கொண்டாளேன்று இருவரும் அதிர்ந்தனர்.
ஆனந்தவள்ளிதான் உண்மையை கூறினாள் என்றதும் சரஸ்வதியை சஞ்ஜீவ் திருமணம் செய்யக் கூடாதென்று ஆனந்தவள்ளி உண்மையை கூறி பிரச்சினை செய்ய முனைகிறாளோ என்று அவளை சந்தேகமாக பார்த்தனர் இருவரும்.
“ஏம்மா அப்போவே சொல்லல. ஊருல இருக்கும் பொழுதே சொல்லி இருக்கலாம்ல” கண்ணீரோடு சரஸ்வதி கேட்க,
“எனக்கே இன்னிக்கிதான்மா தெரியும்” கல்பனா மகளை அணைத்துக் கொண்டாள்.
“என்ன ரெண்டு பேரும் முறைக்குறீங்க? கல்யாணத்துக்கு பிறகு உண்மை தெரிஞ்சா நீ அவளை ஏமாத்தினது போல ஆகாதா? கல்பனா அவ அம்மா அத தெரிஞ்சிக்க எல்லா உரிமையும் அவளுக்கு இருக்கு. யது நீ போய் கல்யாண வேலைய பாரு. சஞ்ஜீவ் வரமாட்டான்” என்றவள் கிளம்பி சென்று விட்டாள்.
“இந்த பாட்டி நல்லவங்களா? கெட்டவங்களா? புரிஞ்சிக்கவே முடியல” ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் இருவரும்.
ஒருவழியாக அன்னையும் மகளும் சமாதானமடைந்த பின்னர்தான் சரஸ்வதியின் கண்களுக்கு சஞ்ஜீவ் தென்பட்டான்.
அவனை முறைத்து விட்டு அறைக்குள் சென்று மறைய, அவள் பின்னாலையே சென்றவன் “சாரி உன் கிட்ட சொல்ல வேணாம் என்று முடிவெடுத்தது நான் தான். அது என் முடிவு மட்டுமல்ல உன் முடிவும் தான்” அன்று அவளிடம் கேட்ட பொழுது அவள் தானே அவனுக்கு அந்த யோசனையை கூறினாள் என்பதை ஞாபகப்படுத்தினான்.    
“தன்னைடமே யோசனை கேட்டு முடிவு செய்தானா?” அவனை கூர்மையாக பார்த்தவள் “இந்த திருமணம் என்ன எங்கம்மாவோட சேர்த்து வைக்க மட்டும் தானா?” என்று கேட்க,
அவள் கேட்ட தொனியிலையே கோபம் வெளிப்பட்டதை புரிந்து கொண்டவன் புன்னகைத்தான்.
அவளைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அடம் பிடித்ததற்கு பின்னால இப்படியொரு காரணத்தை அவள் ஒரு காலமும் சிந்தித்துப் பார்க்க மாட்டாளே.
அதை புரிந்துகொண்டவன் “பொண்ணு பார்க்க வந்தப்போ கூட இது மட்டும்தான் காரணம் ஆனா பார்த்துட்டு போகும் போது உனக்காகவும் உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம் ஒன்னும் தப்பில்ல என்று என்ன எண்ண வச்சிட்ட” என்றவன் சிரிக்க,
“என்ன சொல்கிறான் இவன்?” என்று முறைத்தாள் சரஸ்வதி.  
அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டவன் “கல்பனா அத்தைக்காகத்தான் உன்ன கல்யாணம் பண்ண முடிவு செஞ்சேன். அது என்னோட தனி முடிவு. யாரும் வற்புறுத்தவுமில்லை. நான் என்ன முடிவு செஞ்சேனோ அதேயேதான் நீயும் சொன்ன. தோற்றத்திலும், செல்வாக்கிலும் வேணும்மா நானும் நீயும் பொருத்தமில்லாம இருக்கிறதா பாக்குறவங்க சொல்லலாம். ஆனா நாம எண்ணங்கள் ஒரே மாதிரிதான் இருக்கு. இல்லனா கல்பனா அத்தை பொண்ண நான் எதுக்கு கல்யாணம் பண்ண முடிவு செய்யணும்?” நானும் உன்னை போல் அடுத்தவர்களுக்காக வாழ்பவன்தான் என்று சஞ்ஜீவ் கூற, அவனை நன்றாகவே முறைத்தாள் சரஸ்வதி.
“இப்படி சுய தம்பட்டம் அடிக்கக் கூடாது” என்றவளோ அவனை அணைத்துக் கொண்டு “என்ன பிடிச்சிதான் கல்யாணம் பண்ணுறீங்கன்னு நம்பி கிட்டு இருந்தேன் இப்படி ஏமாத்திட்டீங்க” என்று சிரித்தாள்.
“பார்த்த உடனே பிடிக்கல, பழக, பழக பிடிக்குது. வேணும்மா கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்சம் நாள் பேசி பழகி, லவ் பண்ணலாமா?”
“ஐயோ என் தம்பிக்கு பொண்ணு பெத்துக் கொடுக்குறீங்கன்னு சொன்னீங்களே” அதிர்ச்சியடைவது போல் கேட்க சத்தமாக சிரித்தான் சஞ்ஜீவ். 
எங்கே உண்மையை அறிந்து கொண்ட சரஸ்வதி திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பதைபதைப்பில்தான் அவள் பின்னால் வந்திருந்தான் சஞ்ஜீவ். கொஞ்சம் நாட்கள்தான் பழகியிருந்தாலும் அவள் தன்னை புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு விட்டாள். நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி இருந்தால் கூட அவன் மனம் சமன் பட்டிருக்காது, இந்த வார்த்தை அவன் காதில் தேனை வார்த்து மனதில் பாலை வார்த்திருந்தது.
சரஸ்வதிதான் கல்பனாவின் மகள் என்று தன்னிடம் கூறவில்லையென்று யதுநாத்தோடு யாழினி சண்டை போட, “அம்மா தாயே, அவங்களுக்கே சொல்லக் கூடாது என்றுதான் இருந்தோம். பாட்டி சொல்லிட்டாங்க. என்ன பிரச்சினை வரப்போகுதோனு நான் பயந்துகிட்டு இருக்கேன். நீ வேற சரஸ்வதிக்கு தெரிஞ்ச உண்மைய கத்தி அவங்க குடும்பத்துக்கு சொல்ல போறியா?” என அதட்ட அமைதியானாள் யாழினி.
வேறொரு சூழ்நிலையாக இருந்தால் “உன் பொண்ணு கிடைச்ச உடன் என்ன மறந்திட மாட்டியே, என் கிட்ட பாசமா இருக்கல உன் பொண்ணு கிட்ட மட்டும் பாசமா இருக்க” என்று யாழினி குறை பட்டிருப்பாளோ. ஈஸ்வர் கல்பனாவுக்கு செய்த அநியாயமும் விக்னேஷ் செய்த கொடுமைகளையும் அறிந்த பின் இந்த மாதிரியான எந்தக் கேள்வியும் அவளுக்கு எழவே இல்லை. ஆனந்த்தக் கண்ணீர்தான் வடித்தாள். 
முத்தப்பாவுக்கோ, அந்த குடும்பத்தில் எவருக்குமே எந்த உண்மையையும் கூறாது, அவர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்காது சரஸ்வதியின் கன்யாதானம் முத்தப்பாவின் கைகளால் செய்யப்பட சஞ்ஜீவ் அவள் கழுத்தில் மூன்று முடிச்சி போட, அதே முகூர்த்தத்தில் யாதுநாத் யழினியின் கழுத்தில் தாலி கட்டினான்.
ஈஸ்வர் என்ற தனி மனிதனால் இவர்களின் வாழ்க்கை எப்படியோ திசை மாறிப் போய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் யதுநாத் யாழினியின் மீது கொண்ட காதலாலும், யாழினி தந்தையை தேடும் முயற்சியாலும் ஈஸ்வரின் முகமூடி கிழிக்கப்பட்டு இன்று சிறைவாசம் சென்று விட்டார்.
புதுமணத்தம்பதியர்களின் இல்லறம் சிறக்க வாழ்த்தி விடைபெறுவோமாக.
நன்றி
வணக்கம். 
BY
MILA

Advertisement