Advertisement

அத்தியாயம் 23
யதுநாத் யாழினியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சஞ்சீவ் வந்து விட்டான். கோமதி அவனைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, யதுநாத்தால் யாழினி கூறியவற்றுக்கு அவளிடத்தில் காரணம் கேட்க முடியவில்லை. அவளை விட்டு சஞ்ஜீவைக் காண சென்றவன் அவனிடம் நலம் விசாரித்தான்.
இரவுணவுக்குப் பின் பெண்கள் மூவரும் வீட்டுக்குள் தூங்கி இருக்க, இரண்டு கயிற்றுக் கட்டிலை போட்டு சஞ்ஜீவும், யதுநாத்தும் வானத்தை பார்த்தவாறு படுத்திருந்தனர்.
இருவரினது அறைக்கும் இருவருமே சென்றதில்லை. இன்று இருவரும் ஒன்றாக இருப்பதுமில்லாமல் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.
“பாட்டி இவ்வளவு சீக்கிரம் மனமிறங்குவாங்க என்று நான் நினைக்கவேயில்லை. நீ நினைச்சிருந்தா அவங்கள எதிர்த்து யாழினிய கல்யாணம் பண்ணியிருக்கலாம். அவங்க சம்மதம் கிடைக்கும் வரைக்கும் இருந்த பாரு, யு ஆர் கிரேட்” என்றான் சஞ்ஜீவ்.
“அவங்களுக்கு என் மேல எவ்வளவு பாசம் என்று எனக்கு நல்லாவே தெரியும். அவங்கள கஷ்டப்படுத்திப் பார்க்க என்னாலையும் முடியாது. என்ன கஷ்டப்படுத்த அவங்களாலையும் முடியாது. எனக்கு யாழினி எவ்வளவு முக்கியமோ, அவங்களும் அவ்வளவு முக்கியம். அவங்களுக்காக இவளையும், இவளுக்காக அவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது.  அதான் பொறுமையாக இருந்தேன்” என்றான் யதுநாத்.
“எல்லாம் நல்ல விதமா நடந்தா சந்தோஷம்தான்” என்று சஞ்ஜீவ் சொல்ல யாழினி கூறியதைக் கூறி அவனை சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியானான்.
“என்ன பேசாம இருக்க?”
“இல்ல உனக்கும் சரஸ்வதிக்கும் எந்த பொருத்தமும் இல்லையே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி எப்படித்தான் குடும்பம் நடாத்த போறீங்களோனு யோசிச்சேன்” சஞ்ஜீவ் தன் முடிவில் உறுதியாக இருக்கின்றான். இந்த முடிவு சிறந்ததுதான். அதற்காக அவன் வாழ்க்கையில் பிரச்சினை வருமோ என்றுதான் கவலையாக கேட்டான்.   
“நீ யோசிக்கும் பொழுது நான் யோசிக்காம இருப்பேனா? உனக்கொண்ணு தெரியுமா? சின்ன வயசுல இருந்தே எங்கப்பா ஏழைகளென்றாலே பணக்காரங்கள ஏமாத்தப்பாக்குறவங்க, பணக்கார பசங்கள ஏழைப் பொண்ணுங்க மயக்கி கல்யாணம் பண்ணி வசதியா வாழ திட்டம் போடுவாங்க உஷாரா இரு, அவங்க கூட எல்லாம் சகவாசம் வச்சிக்காதே என்று அடிக்கடி சொல்லிச் சொல்லியே நம்ம கிட்ட வேலை செய்யிறவங்களோட என்னால ஒட்ட முடியல. கிளாஸ் கிளாஸ் என்று வளர்ந்துட்டேனா.
யாழினி என் வாழ்கைக்குல வந்த பின்னால, அப்பாவை பத்தி உண்மையெல்லாம் தெரிஞ்சிகிட்ட பிறகு முதல்ல அதிர்ந்தாலும், என் பார்வையின் கோணம் மாறினாலும், சட்டென்று அவளைத் தவிர யார் கூடயும் ஒட்டவும் முடியல.
ஆனா சரஸ்வதியையும், அவ குடும்பத்தையும் பார்த்தப்போ எங்கப்பா எவ்வளவு விஷம் என்று புரிஞ்சது. யாரென்றே தெரியாத நமக்கு அவ உதவி செய்யிறத தானே உனக்கு தெரியும். நான் வசதியானவன் என்று அவளுக்கு தெரியாதா? தெரிஞ்சிதான் உதவி செய்யிறாளா? வசதியான ஒருத்தன் கிடைச்சா போதும் அவன மயக்க பாப்பாளுங்க என்று எங்க அப்பா சொன்னது என் மண்டைக்குள்ள ஊறாம இல்ல. 
ஆரம்பத்துல சட்டுனு வந்து பேசி, அக்கறையா நமக்கு உதவினப்போ அவளை கொஞ்சம் சந்தேகமாகத் தான் பார்த்தேன். அது என் அப்பா எனக்குள்ள புகுத்தின குணமாச்சே. அவ்வளவு சீக்கிரத்துல போய்டுமா?
ஆனா அவ பேச்சுல ஒரு தெளிவும், நடத்தையில் நேர்மையும் இருந்தது. தனியா நின்னு பேசினாலும் எங்கப்பா சொல்லுறத போல கொஞ்சி குலாவுற மாதிரி பேசினதே இல்ல, வேலைல நிலைச்சு நிக்கவும், பாஸ மடக்கவும் அந்த மாதிரியான பொண்ணுங்க எப்படி பேசுவாங்க, எப்படியெல்லாம் நடந்துப்பாங்க என்று நமக்கு தெரியாதா?
பக்கத்துக்கு வீடு என்று நமக்கு உதவி செஞ்சாலும், ஒரு எல்லையோடுதான் இருந்தா. நம்மள சந்தேகப்படுறாளோ என்று நினைச்சா அப்படியுமில்ல. நமக்கு உதவி செஞ்சாலும், நம்ம கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காம உதவி செய்யுறா. அவளோட அந்த பண்பு என்ன ரொம்பவும் கவர்ந்தது” சஞ்ஜீவ் மனம் விட்டு பேசிக் கொண்டிருக்க,
“என்ன மச்சான் லவ்வா?” யதுநாத் சட்டென்று கேட்டு விட்டான். சஞ்ஜீவிடம் இவன் இவ்வாறு சகஜமாக பேசியதே இல்லை. அவனும் தான். யாழினி என்பவளால் இருவரும் நெருங்கி வந்திருக்க, எல்லா தடைகளும் உடைந்திருந்தது.
“லவ்? ம்ம்.. பொதுவா லவ் எப்போ வரும்?” சஞ்ஜீவ் வானத்தை பார்த்தவாறே கேட்க,
“லவ் எந்த வயசுல வேணா வரலாம். யாருக்கு யார் மேல வேணா வரலாம். சில ஜோடியை பார்த்து ஆச்சரியம் வரும், சில ஜோடியை பார்த்து பொறாமை வரும்” என்றான் யதுநாத் 
“கரெக்ட். டீனேஜ்ல பார்த்த உடனே லவ் வருதே அத பத்தி என்ன நினைக்கிற?” அவன் முகம் பார்த்து சிரித்தவாறே சஞ்ஜீவ் கேட்டான்.
“ம்ம்.. அது லவ்வே இல்ல தோற்றத்தை வச்சி வரும் ஈர்ப்பு என்று சொல்லுறியா?” இவன் என்ன சொல்ல விழைகிறான் என்று யதுநாத் பார்க்க,
“நீயும் தான் காலேஜ்ல எத்தனை பொண்ணுங்களை லவ் பண்ண அதெல்லாம் ஜஸ்ட் ஈர்ப்புதானே. ஆனா அதே காலேஜ் லைஃப்லதான் யாழினிய சந்திச்ச, இன்னைக்கு வரைக்கும் அவதான் என்று முடிவா இருக்க, சோ காதலுக்கு தோற்றமும் முக்கியம்”
“நீ என்னதான் சொல்ல வர?”
“பாக்குற எல்லாரையும் லவ் பண்ண மாட்டோம். பார்த்த உடனே ஒருத்தங்களை லவ் பண்ணுவோம். பேசி பழகி அவங்கள பிடிச்சாதான் கடைசி வரைக்கும் கூடவே வாழ முடியும்”
“சரிதான். பார்த்த உடனே பிடிக்காத சரஸ்வதியை பேசி பழகின உடனே பிடிக்குது என்று சொல்ல வரியா?”
“கல்யாணம் பண்ணுற அளவுக்கெல்லாம் பிடிக்கல, கல்யாணம் பண்ண முடிவு செஞ்ச பிறகு பேசி பழகுறேன் என்று சொல்லுறேன்”
“டேய் என்னத்தடா சொல்ல வர, புரியிற மாதிரி சொல்லித் தொலை” கடுப்பானான் யதுநாத்.
“அவளை பேசி பழகி இஷ்டப்பட்டு கல்யாணம் செய்ய முடிவு செய்யல. கல்யாணம் பண்ண முடிவு செஞ்ச பிறகு பேசி பழகினேன். அவ குணம் நல்லா இருக்கு. அன்பானவளா இருக்கா, சில விஷயங்களை மாத்தணும்”
“ட்ரெஸ்ஸிங் சென்ஸ், பேசுற ஸ்டைல சொல்லுற”
“ஆமா ஆமா”
“அடப்பாவி லவ் பண்ணுறவங்க காதுல ரத்தம் வரும் வரைக்கும் உளறது போலவே பேசுறியே. பேசாம தூங்கு நாளைக்கு காலைல உனக்காக பொண்ணு கேட்டு போக போறோம்”
“நாளைக்கேவா?”
“பின்ன இன்னைக்கி ராத்திரியா? தூங்கு தூங்கு” போர்வையை இழுத்து போர்த்தியிருந்தான் யதுநாத்.
சஞ்ஜீவுக்கு தூக்கம் வரவில்லை. சரஸ்வதியை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டான். அவளுடனான வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனை அவன் கண் முன் வந்து இம்சித்தது.
  
யதுநாத்தும் தூங்கவில்லை. யாழினி பேசியதுதான் அவன் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ‘பிடிக்கவில்லை’ என்ற எந்த பெண்ணையும் அவன் தொல்லை செய்ததில்லை. ஆனால் யாழினியை அவனால் விட முடியாதே. சரஸ்வதி சஞ்ஜீவ் திருமணப் பேச்சு நல்லபடியாக பேசி முடிக்கட்டும் அதன் பின் தங்களை பற்றி பேசலாம் என்று முடிவு செய்தான்.   
காலை பதினோரு மணிக்கே அனைவரும் சரஸ்வதியின் வீட்டுக்கு கிளம்பிச் சென்றிருந்தனர். வீட்டில் சரஸ்வதியும், முத்தப்பாவும் மட்டும்தான் இருந்தனர்.
நேற்று மாலையே கல்பனா முத்தப்பாவிடம் சரஸ்வதியை சஞ்ஜீவுக்கு பெண் கேட்டு வருவதாக கூறியிருக்க, தோட்டத்து வேலைகளை முடித்துக்கொண்டு நேரங்காலத்தோடு வீடு வந்திருந்தார் முத்தப்பா.
“என்னப்பா உடம்புக்கு ஏதும் முடியலையா? நேரத்தோட வீட்டுக்கு வந்திருக்கீங்க? உங்களுக்குத்தான் தேநீர் போட தண்ணி கொதிக்க வச்சிருக்கேன்” என்றாள் சரஸ்வதி.
“உன்ன பொண்ணு பார்க்க வராங்க. முகத்தை கழுவி சீக்கிரம் ஒரு நல்ல சேலைய கட்டிக்க, தலையை சீவி, பவ்டர் போட்டுக்க” உத்தரவிட்டார் முத்தப்பா.
இரவே கூறியிருந்தால் சரஸ்வதி மறுத்திருப்பாள். அதனால் தான் இப்பொழுது கூறினார். வீட்டுக்கு வருபவர்களை மரியாதைக் குறைவாக அவள் நடாத்த மாட்டாள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.
அவர் நினைத்தது போலவே அவளும் மறுபேச்சின்றி அவர் கூறியது போல தயாராகி வந்தாள். வரவேற்கவும், உபசரிக்கவும் அந்த வீட்டில் அவள்தானே இருக்கின்றாள்.
கல்பனாவைக் கண்டதும் கட்டிக் கொண்டவள் “இவ்வளவு நாள் இருந்தும் இன்னைக்கிதான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?” என்று குறைபட
“எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வேணாமா?” பதில் கோமதியிடமிருந்து வந்தது.
“தம்பி, தங்கச்சி எல்லாரும் ஸ்கூல் போய்ட்டாங்களா?” என்று யாழினி கேட்க, ஆமாம் என்றவள் அவர்களுக்கு தேநீர் கலக்க செல்ல எதுவும் வேண்டாம் என்று மறுத்தாள் கோமதி.  
“மொத தடவ வீட்டுக்கு வந்திருக்குறீங்க ஒன்னும் சாப்பிடலைனா எப்படி?”
“நீ என் பையன கட்டிக்கிட்டா உன் கையால விருந்தே சாப்பிடுறேன்” அவள் மறுக்க முடியாதபடி கோரிக்கை வைக்க, அப்பொழுதுதான் அவர்கள் மாப்பிள்ளை வீட்டார்கள் என்றே சரஸ்வதிக்கு புரிந்தது.
அவ்வளவு நேரமும் மாப்பிள்ளை வீட்டார்கள் வந்தால் பேச கூட ஆளில்லையே என்று பக்கத்து வீட்டாளர்களை அப்பா அழைத்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தாள்.
“உங்க பையன்?” என்று சஞ்ஜீவை நேர்பார்வை பார்த்தவள் “இல்லங்க உங்க பையன என்னால கல்யாணம் பண்ண முடியாது” என்றாள்.
அவள் இப்படி சட்டென்று மறுப்பாளென்று அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. சஞ்ஜீவை பார்த்தவாறே மறுத்ததினால் “நீ ஒரு ஏமாத்துக்காரன்” என்று சொல்லாமல் சொல்கிறாள் என்று அவனது காதுக்குள் ஓதிய யதுநாத் சத்தமாகவே சிரித்து விட்டான்.
“நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசலாமா?” அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாது சஞ்ஜீவ் கேட்க, சரஸ்வதி முத்தப்பாவை பார்த்தாள். அவர் தலையசைந்ததும் அவனை அழைத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றாள்.
அவன் தானே பேச வேண்டும் என்று அழைத்து வந்தான் என்று இவள் அமைதியாக நிற்க,  “நீ என்ன வேணாம்  என்று சொல்லுறதுக்கு என்ன காரணம்?” ஓரளவுக்கு கணித்திருந்தாலும், சுத்தி வளைக்காமல் அவளிடமே நேரடியாக கேட்டான்.
இத்தனை நாட்களில் அவனை அறிந்து வைத்திருந்தவளுக்கும் அவன் இதைத்தான் கேட்பான் என்று தெரியாதா? “உங்கள கல்யாணம் பண்ணா உங்க கூட சென்னைல போய் வாழ வேண்டி இருக்கும். என்னால என் தம்பி தங்கைகளை பிரிஞ்சி இருக்க முடியாது. அவங்களாலையும் என்ன பிரிஞ்சி இருக்க முடியாது. அதுவும் சின்னவன் ஏழு வயசாகியும் இன்னமும் என்ன கட்டிக்கிட்டுதான் தூங்குறான். நான் இல்லனா ரொம்ப வருத்தப்படுவான்”
“அப்போ உனக்கு என்ன பிடிக்காம வேணாம் என்று சொல்லல. உன் தம்பி தங்கைகளுக்காக வேணாம் என்று சொல்லுற?” உதட்டில் மலர்ந்த குறும்புப் புன்னகையோடு கேட்க முழித்தாள் சரஸ்வதி.
சரஸ்வதி மறுக்கக் கூடிய எவ்வளவோ காரணங்களை சஞ்ஜீவும் சிந்தித்துப் பார்க்கத்தான் செய்தான். தோட்டத்தை பராமரிக்க, வீட்டை பார்த்துக்கொள்ள என்றால் ஆள் வைக்கலாம் என்று கூறலாம்.
அன்னையாக இருக்கிறேன். விட்டு வர இயலாது என்றால் இவளை மடக்க இப்படித்தான் பேச வேண்டும் வேறு வழியில்லை.
அன்னை இறந்ததிலிருந்தே தம்பி, தங்கைகளுக்காக வாழ ஆரம்பித்தவள் தனக்காக எந்த ஒரு ஆசையையும் வளர்த்துக்கொள்ளாதவள், நிச்சயனமாக இவன் மீதும் எந்த ஒரு ஈடுபாடுமில்லை. அவனை நேராக நிமிர்ந்து பார்த்தாள் சரஸ்வதி.       
தலையசைத்து மறுத்தவள் “இல்ல இப்போதைக்கு கல்யாணம் பண்ணுறதா இல்ல. அப்படியே பண்ணாலும் சொந்த ஊருளையே யாராவது பார்த்து பண்ணிக்கணும். அப்பதான் கூடப் பொறந்தவங்களையும், அப்பாவையும் பாத்துக்க முடியும்” திட்டவட்டமாக மறுத்தாள்.
அவள் முடிவில் அவள் தெளிவாக இருக்கின்றாள். நகரத்தில் செல்வ செழிப்போடு ஒரு வாழ்க்கை காத்திருக்க, தனக்காக சிந்திக்காமல் தன் குடும்பத்துக்காக சிந்திப்பவளை சஞ்ஜீவுக்கு அக்கணம் ரொம்பவே பிடித்துப் போனது.
“ஆனா நான் உன்னத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீ சரி என்று சொல்லாம என் தங்கச்சி கல்யாணம் நடக்காது. உள்ள ஒருத்தன் உக்காந்து இருக்கானே கிட்டத்தட்ட நாலு வருஷமா என் தங்கச்சிய லவ் பண்ணுறான். இப்போதான் கல்யாணம் பண்ண பாட்டி சம்மதிச்சு இருக்காங்க. என்னால உனக்காக எத்தனை வருஷம் என்றாலும் காத்திருக்க முடியும். உன்னால அவங்க காத்திருக்கணுமா? நீயே முடிவு செய்” சஞ்ஜீவும் தன் முடிவை உறுதியாக கூறினான்.
“யேனுங்க நான் சொல்லுறது உங்களுக்கு விளங்காளையா? என்னால இந்த ஊர விட்டு வர முடியாது”
“சரி வராத கல்யாணம் பண்ணி இங்கயே இரு. நான் வரேன்” இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பது போல் அவன் பேச
“என்ன இவன் புரியாமல் பேசுகிறான்” என்று அவனை முறைத்தாள் சரஸ்வதி.
“நல்லா யோசி உன்னால என் தங்கச்சி கல்யாணம் நடக்காது. உன் முடிவுலதான் நம்ம நாலு பேரோட வாழ்க்கையும் இருக்கு”
அடுத்தவர்களை பற்றி சிந்திப்பவள் நிச்சயமாக யாழினியை பற்றி சிந்தித்து தன் முடிவை சொல்வாள் என்று அவனுக்குத் தெரியாதா?
“என்னமோ தம்பி உன்ன கட்டிக்கிட்டு தூங்கினா தான் தூங்குவான் இல்லனா தூங்க மாட்டான் என்று சொன்னியே, காலத்துக்கும் அவனை உன் கூட வச்சிக்க முடியாது. நான் கூட பதிமூணு வயசு வரைக்கும் அம்மாவை கட்டிக் கிட்டு தூங்கினவன் தான். அப்பாவே விட்டுக் கொடுப்பாரு. அந்த வயசுலதான் ஸ்கூல்ல செக்ஸ்னா என்ன? குழந்தை எப்படி பொறக்கும் அது இது என்று எல்லாம் பசங்க பேச ஆரம்பிச்சாங்க. பேச மட்டுமில்ல நிறைய அந்த மாதிரியான படம் கூட பார்ப்பேன். நம்மளால அவங்க பிரிஞ்சி இருக்காங்களே என்று நானே தனியா படுக்க ஆரம்பிச்சேன்.
உன் தம்பிக்கு ஏழு வயசு தானே. நீ அம்மா இல்லையே அக்கா தானே அக்காக்கு கல்யாணம் ஆனா அவ மாமா கூடத்தான் இருக்கணும் என்ற அளவுக்கு அவனுக்கு புரியும் தானே”
“என்ன இவன் கூச்சமே இல்லாம இப்படியெல்லாம் பேசுறான் என்று சரஸ்வதி வாயடைத்து போய் நிற்க, சஞ்ஜீவ் சங்கடம் இல்லாமல் பேசினான்.
பேச வேண்டும் என்று பேசினானா என்றால் இல்லை. அவளிடம் ஒரு நெருக்கத்தை உணர்ந்தான். அதில் இவள் எனக்கானவள் என்ற உரிமையை எடுத்துக் கொண்டு பேசினான். இவளிடம் தான் பேச முடியும். இவளிடம் மட்டும்தான் பேச முடியும் என்று பேசினான். 
அதை அவள் புரிந்துகொள்ளவும் வேண்டுமே “என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் மனைவி. அந்த உரிமைல பேசிட்டேன். என்ன பத்தி நீ தெரிஞ்சிக்க வேணாம். நானா சொன்னா தானே உண்டு. இதெல்லாம் ரகசியம் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும். ஏன் உன் வாழ்க்கைல இந்த மாதிரி எதுவும் இல்லையா?” என்று கேட்டு அவளை அதிர வேறு செய்தான்.
“என்ன இவன் தன்னை இவன் போல் நினைத்துக் கொண்டானா?” கோபம் வெகுண்டெழ “ஆமா ஒரு நாளைக்கு நாலு வீடியோ ரெண்டு பாட்டில் சரக்கு உள்ள போகலைனா எனக்கு தூக்கம் வராது என்றாள்.
“ஓஹ்… எனக்கு சர்க்கடிக்கிற பழக்கமெல்லாம் கிடையாது. வேணும்னா உனக்கு கம்பனி கொடுக்குறேன்” அதை அவள் கோபத்தில் சொன்னால் என்று அவனுக்கு தெரியாதா? மலர்ந்த புன்னகையை அடக்கியவாறு இவனும் சொல்ல அவனை அடிக்கவே ஆரம்பித்தாள் சரஸ்வதி.  இந்த பேச்சு வார்த்தை அவளையும் அவனிடம் நெருங்க வைத்திருந்தது என்பதை அவள் உணரத்தானில்லை.
“நீ கோபப்படும் பொழுது ரொம்ப அழகா இருக்க சரஸ் கல்யாணத்துக்கு பிறகு உன்ன சீண்டுறதுதான் என் வேலையே. சீக்கிரம் கல்யாணத்துக்கு ஓகே சொல்லு அப்போதான் சீக்கிரமா பொண்ண பெத்துக்கலாம். பொண்ணு பொறந்தா உன் தம்பிக்கு கட்டி வச்சி அவனை உன் கூடவே வச்சிக்கலாம்ல. எப்படி என் திட்டம்” அவளை இழுத்தணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தவன் கண்ணடித்து விட்டு உள்ளே நடக்க திகைத்து நின்றாள் சரஸ்வதி.
சஞ்ஜீவ் புன்னகை முகமாக வர சரஸ்வதி சம்மதித்து விடுவாள் என்ற நம்பிக்கை அனைவருக்குமே வந்தது.
சரஸ்வதிக்கோ யோசிக்க நிறைய விஷயங்கள் இருந்தன. ஒரு பெண் திருமணமானால் கணவனோடு அவன் வீட்டில் தான் இருக்க வேண்டும். என்னதான் சஞ்ஜீவ் தான் இங்கு வந்து செல்வதாக கூறினாலும் அவன் குடும்பம் இதற்கு சம்மதிப்பார்களா? கண்டிப்பாக சம்மதிக்க மாட்டார்கள். தன்னால் யாழினியின் திருமணமும் நிற்க்க கூடாது. அவளுக்காக சஞ்ஜீவை திருமணம் செய்து அவனோடு சென்றால் அவளுடைய  குடும்பத்தைக் கைவிட்டது போல் ஆகி விடாதா?  குழம்பித்தான் போனாள்.
யதுநாத்தை தனியாக சந்திக்காமல் யாழினி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.  அவளிடம் பேச முயன்றவன் முடியாமல் வெளிப்படையாகவே அவளை முறைக்க ஆரம்பித்திருந்தான்.
இதைக் கவனித்த சஞ்ஜீவ் என்ன பிரச்சினை என்று யாழினியிடம் கேட்டிருக்க, அவள் ஒன்றுமில்லையென்றாள்.
யதுநாத்தைக் கேட்டால் அவனும் ஒன்றுமில்லையென்றான்.
சரிதான் போங்கடா என்ற சஞ்ஜீவ் அதன் பின் எதுவும் கேட்கவில்லை.
இரண்டு நாட்களாக சரஸ்வதி யோசனையாகவே இருப்பதைப் பார்த்த கடைக்குட்டி அருள்மொழி அவள் அருகில் வந்தமர்ந்து “அக்கா என்னால தானே நீ கல்யாணம் பண்ண மாட்டேன். வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொல்லுற. நான் உன்ன தொந்தரவு செய்ய மாட்டேன்கா… நீ பக்கத்துக்கு வீட்டு சஞ்ஜீவ் மாமாவையே கல்யாணம் செஞ்சிகிரியா? அவர் காரெல்லாம் வச்சிருக்காரு” என்றான்.
“டேய் என்னடா சொல்லுற?” சரஸ்வதிக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னிடம் பேசிய சஞ்ஜீவ் இந்த சின்னவனிடம் பேசி மனதை கலைக்க முயற்சி செய்தானோ என்று அஞ்சினாள்.  
“நான் படிச்சி பெரியவனாகி கார் வாங்கி உன்ன கார்ல முன்னாடி உக்கார வச்சி கூட்டிட்டு போகணும் என்று எனக்கு ஆச. அதுக்கு ரொம்ப நாள் எடுக்குமே. ஆனா இப்போ மாமா கிட்ட கார் இருக்கே. நீ அவர் கூடவே போகலாம் இல்ல” சஞ்ஜீவை அவள் கணவனாகவே எண்ணி  பேசினான் சின்னவன்.
லட்சுமியும், கந்தனும் அவள் அருகில் வந்து “ஆமாக்கா நாங்க எங்களை பாத்துகிறோம். நீ கல்யாணம் பண்ணி மாமா கூட சந்தோஷமாக இருக்கலாம்” என்றனர்.
அவள் மட்டும்தான் குடும்பத்தை பற்றி நினைப்பாளா? அவர்களும் அவளை பற்றி நினைக்க மாட்டார்களா என்ன?
முத்தப்பா பெரியவன் கரிகாலனிடம் சரஸ்வதிக்கு வரன் வந்ததையும் அவள் குடும்பத்தை நினைத்து மறுப்பதையும் இப்படி கடைசி வரைக்கும் இருந்து விடுவாளோ என்று அச்சமாக இருப்பதாகவும் புலம்ப அதை கேட்டுத்தான் சிறுசுகள் அக்காவிடம் பேச வந்திருந்தனர்.
“ப்ளீஸ் கா ஓத்துக்கோகா…”
“கல்யாணம் பண்ணிகோகா…”
“சம்மதிகா…”
ஆளாளுக்கு அவளை வற்புறுத்தி திருமணத்துக்கு சம்மதமும் வாங்கியிருந்தனர்.
அந்த சந்தோஷமான செய்தியை முத்தப்பாவே வீட்டுக்கு வந்து கூற, அனைவருக்கும் மகிழ்ந்தனர்.
“அடுத்து என்ன நல்ல நாள் பார்க்க வேண்டியதுதான், அண்ணனுக்கும் தங்கச்சிக்கு ஒரே முகூர்த்தத்துல கல்யாணத்த பண்ணிட வேண்டியதுதான்” என்றாள் கோமதி.
“அண்ணனுக்கு மட்டும் தானே பொண்ணு பார்த்தீங்க, எனக்கு மாப்பிளையே பார்களையே” யதுநாத்தின் பக்கம் திரும்பாமலையே யாழினி கூற, கோமதி அதிர்ந்தாள்.
அன்னையின் சம்மதம் கிடைக்கும் வரை யது பொறுமைக் காத்து இங்கு வந்தால் இவள் என்ன சொல்கிறாள்?
“என்ன சொல்லுற? உனக்காகத்தான் யது காத்துக்கிட்டிருக்கானே. சரஸ்வதி சம்மதம் சொல்லணும், சஞ்ஜீவ் கல்யாணத்தோட தன்னுடைய கல்யாணமும் நடக்கணும் என்று சொன்னானே. இப்போ என்ன பிரச்சினை” புரியாது கேட்க,
“அவர் மட்டும் தான் என்ன காதலிச்சாரு. நான் அவரை காதலிக்கவே இல்ல. அவரை அண்ணனாகத்தான் பார்த்தேன்” வாய் கூசாமல் பொய்யுரைத்தவலால் அவன் பார்வையை சந்திக்கவே முடியவில்லை.
“என்ன சொல்லுற?” அதிர்ந்தான் சஞ்ஜீவ். 
கல்பனாவுக்கு நடந்தது எதுவுமே தெரியாதே. “யதுநாத் உன் சொந்த அண்ணன் கிடையாதே. உறவு முறையில மாமன் மகன் தானே. கல்யாணம் பண்ணிக்க முடியும் தானே ஏன் பிடிவாதம் பிடிக்கிற?” என்றாள்.
“அம்மா உனக்கு சொன்னா புரியாதா?” அங்கிருந்தவர்களில் அவளை மட்டும்தான் யாழினியால் அதட்ட முடியும். கத்தினாள். 
யதுநாத் அமைதியாக நின்றிருக்க, “இந்த விஷயம் உனக்கு ஏற்கனவே தெரியுமா?” அவனைப் பார்த்துக் கேட்டான் சஞ்ஜீவ்.
“அவ என்ன லவ் பண்ணலன்னு சொல்லிக் கிட்டு இருக்கா. நீ என்னடான்னா என் கிட்ட கேட்டுகிட்டு இருக்க? அவ கிட்ட என்ன? ஏது? என்று விசாரி” யாழினி மீதிருந்த கோபத்தை சஞ்ஜீவ் மீது காட்டினான் யதுநாத்.
“இப்போ எதுக்கு என் அண்ணன் மேல பாயிறீங்க?” யாழினி அவனை முறைக்க,
“அவன் அண்ணன் தான். உனக்கு நான் யாரு?”
என்னவென்று சொல்வாள்? அவன் ஈஸ்வரின் மகனாக இருந்த பொழுதே அவனை அண்ணனாக ஏற்றுக்கொள்ளாத அவள் மனம் இப்பொழுது மட்டும் அண்ணன் என்று சொல்லி விடுமா?
“ஒரு தடவ சொன்னா புரியாதா? நீங்க ஒரு பிளே பாய். உங்க கண்டாவே எனக்கு பிடிக்காது. உங்கள போய் நான் காதலிப்பேனா? கல்யாணம் பண்ணிப்பேனா? என்ன நிம்மதியா இருக்க விடுங்க” என்றவள் அங்கே நிற்க முடியாமல் தோட்டத்துக்குள் ஓடி மறைந்தாள்.
“இப்போ என்னடா பண்ணுறது? அம்மா சம்மதம் கிடைச்சும் இந்தப் பொண்ணு இப்படி பேசுதே” கவலையாக கூறினாள் கோமதி.
“யத்துக்கிட்ட சம்மதம் சொன்ன பாட்டி, யாழினி கிட்ட கல்யாணத்துக்கு ஒத்துக்க கூடாது என்று மிரட்டியிருப்பாங்களோ” என்று கேட்டான் சஞ்ஜீவ்.
“என்னடா பேசுற? அம்மா அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு யதுவோட சந்தோஷமும் நிம்மதியும் ரொம்ப முக்கியம்”
“அப்போ உண்மையிலயே யாழினி உன்ன லவ் பண்ணலையா? நீ தான்…” என்ற சஞ்ஜீவை கை நீட்டி தடுத்தான் யதுநாத்.
“அவ என்ன லவ் பண்ணுறா. என்ன மட்டும்தான் லவ் பண்ணுறா. என்ன மட்டும்தான் லவ் பண்ணுவா. அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்” என்றவன் வெளியேறி இருந்தான்.
  தோட்டத்தில் போட்டிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து அழுது கொண்டிருந்த யாழினியின் தோளில் விழுந்தது ஒரு கரம்  

 

 

Advertisement