Advertisement

அத்தியாயம் 22
யதுநாத் அருணாச்சலம், மற்றும் தர்மராஜின் உதவியோடு தொழிற்சாலைகளின் மொத்த பொறுப்பையும் தனியாக பராமரிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் முத்தம்மாவிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவள் எந்த கேள்விக் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. தொழிற்சாலை விஷயங்களை தர்மராஜ் அல்லது அருணாச்சலத்தின் மூலம் ஒப்படைத்து விடுவான்.
சஞ்ஜீவ் வீட்டை விட்டு போனது கோமதியால் தாங்க முடியவில்லை. என்னதான் ஈஸ்வர் குழந்தையை மாற்றி இருந்தாலும் அவள் கையில் தூக்கியது பாலூட்டியது, பிணியாலோ, விழிப்பினால் சிணிங்கினாலோ, பசியால் அழுதாலோ இரவு முழுவதும் கண்விழித்து கவனித்து, அவள் வளர்த்தது சஞ்ஜீவையல்லவா. அவனுக்காக யாழினியை என்ன? கல்பனாவை கூட ஏற்றுக்கொள்வாள்.
அவன் வீட்டை விட்டு செல்வதா? அன்னையிடம் மன்றாடிப் பார்த்தாள். ஆனந்தவள்ளி பிடிவாதமாக நின்றிருக்க, “என் பையன் வந்தால் தான் நான் இந்த வீட்டுக்கு வருவேன்” என்று பத்மஜாவோடு பண்ணை வீட்டுக்கு கிளம்பி விட்டாள். 
பத்மஜாவின் குழந்தைகள் இல்லாமல் வீடே வெறிச்சோடி கிடந்தது. வேலையாட்கள் இருந்தாலும், கோமதிதான் சமைப்பாள். காலை உணவுக்காக வீட்டார் அனைவரும் அமர்ந்திருக்க, பத்மஜாவுக்கு, அவளும் பரிமாறுவார்கள். இன்று உணவு மேசையில் யதுநாத்தும், முத்தம்மாவும் மட்டும்தான்.
அவனோ இவளிடம் பேசுவதில்லை. ஆனால் வேலையாட்களிடம் முத்தம்மா சாப்பிட்டாளா? மாத்திரை போட்டாளா என்று மறக்காமல் கேட்டுக்கொள்வான்.
அவனை தன்கைக்குள் கொண்டுவர முத்தம்மா சாப்பிடாமல் இருந்தால் “நான் உன் பேரன் முத்தம்மா” என்று இவனும் சாப்பிடாமல் பிடிவாதம் பிடித்தான். ஆனந்தவள்ளிதான் இறங்கி வர வேண்டியதாகிற்று.
யாழினியை சஞ்ஜீவின் தங்கையாக ஏற்றுக்கொள்ள முடியும், இந்த வீட்டு பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியும், யதுநாத்துக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனந்தவள்ளியின் மனம் மறுத்தது.
அவள் ஈஸ்வரின் மகள் என்று கூறியது கூட கோபத்தில் கூறியது. ஆனந்தவள்ளி ஒன்றும் பழமையில் ஊறியவள் இல்லை. ஈஸ்வரின் உண்மையை முகத்தை வீட்டாருக்கு சொல்ல சஞ்ஜீவும், அவளும் திருமணம் செய்ததாக கூறியதைக் கூட ஏற்றுக்கொள்ளத்தான் செய்தாள்.
சொந்தபந்தங்கள் முக்கியம் என்று கூறிக் கொண்டிருந்தவள் சஞ்ஜீவுக்கும், யதுநாத்துக்கும், ஆளாளுக்கு பெண் கொடுக்க போட்டி போட்டாலும், அவர்கள் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லையென்று தங்கள் வசதிக்கு ஏற்ப போல்தான் பெண் எடுப்பதாக முகத்துக்கு நேராக கூறி விட்டாள். ஆனால் யாரும் அவளை பகைத்துக் கொள்ளவுமில்லை. எதிர்க்கவுமில்லை. பின்னால் புறணி பேசினாலும் முகத்துக்கு நேராக இன்முகமாகத்தான் நடந்துக்கொண்டனர். இவர்கள் இவ்வளவுதான் எனும் விதமாக அவர்களை பார்த்து தலையை உலுக்கிக் கொண்டாள் ஆனந்தவள்ளி.
யதுநாத்துக்கு மட்டுமல்லவே சஞ்ஜீவையும் அவள் பேரானாகத்தானே பார்த்தாள். இருவருக்கிடையில் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லையே. பார்த்திருந்தால் நிவேதிதாவை யதுநாத்துக்கு தானே பேசியிருப்பாள். மூத்தவன் சஞ்ஜீவுக்கு பேசி இருப்பாளா?
கோமதியின் காதலை எதிர்த்ததற்காக அவள் காதலுக்கு எதிரியுமல்ல. அவளை பொறுத்தவரையில் யதுநாத் திருமணம் செய்யும் பெண் வல்லவராயன் போன்று பின்புலம் பக்கபலமாக இருக்க வேண்டும். அதுதான் அவனுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கருதினாள்.
ஈஸ்வரை அவள் என்றுமே நம்பவில்லை. தான் இல்லாத காலத்தில் ஈஸ்வர் என்றுமே யதுநாத்துக்கு பிரச்சினையாக அமையாக் கூடும் என்று நினைத்தாள். அதனால் ஈஸ்வரை அடக்கி வைக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்க, ஈஸ்வர் கல்பனாவோடு பேசுவதை எதேச்சையாக பார்த்த தர்மராஜ் ஆனந்தவள்ளியிடம் கூறியிருந்தார். சோமசுந்தரத்துக்கு அருணாச்சலம் எப்படியோ ஆனந்தவள்ளிக்கு தர்மராஜ் அப்படித்தான்.
கல்பனா யார்? என்ன? என்று விசாரிக்க சொன்னவளுக்கு இருவரும் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படமே கையில் கிடைக்க, தர்மராஜை வைத்து ஒரு திட்டம் போட்டாள்.
எழுபத்தைந்தாம் ஆண்டுவிழாவில் பொழுது அந்த புகைப்படத்தை ஒளிபரப்பி ஈஸ்வரை மானபங்கப்படுத்தி ஒரு மூலையில் உக்கார வைக்க வேண்டும். அதில் கோமதியின் வாழ்க்கை பாதிக்கப்படுமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. கோமதி அந்த புகைப்படத்தை கண்டிப்பாக நம்ப மாட்டாள். கண்ணை மூடிக் கொண்டு கணவனை நம்புவாளென்று ஆனந்தவள்ளிக்கு தெரியும். அதனால்தான் சற்றும் தயங்காமல் தர்மராஜை வைத்து புகைப்படத்தை ஒளிபரப்ப செய்திருந்தாள்.  
இதனால் ஈஸ்வரை ஓரம்கட்டி யதுநாத்துக்கும், சஞ்ஜீவுக்கும் தொழிற்சாலை பொறுப்புக்களைக் கொடுக்கலாம் என்று எண்ணி இருந்தாள். அதுவும் இருபது விகிதம் பத்மஜாவுக்கும், இருபத்தி ஐந்து விகிதம் சஞ்ஜீவுக்கும், ஐம்பத்தியைந்து விகிதம் யதுநாத்துக்கும் என்றுதான் முடிவு செய்திருந்தாள்.
ஆனால் அவளே எதிர்பார்க்காத விதமாக யாழினி ஈஸ்வரை பேசியது, சஞ்ஜீவ் அவளை திருமணம் செய்ததாக கூறியது, அவளை யதுநாத் காதலிப்பதாக கூறியது என்று வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் நிகழ்ந்து விட்டது.
ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. தான் ஓரம்கட்ட நினைத்த ஈஸ்வருமில்லை. சஞ்ஜீவ் தன் சொந்த பேரனுமில்லை. யதுநாத்துக்கே சொத்து முழுக்க கொடுக்க முடியும். தான் நினைத்தை போன்றதொரு குடும்பத்தில் அவன் திருமணம் செய்தால் அவன் வாழ்க்கை சிறக்கும். தன் எண்ணத்தில் நிலைத்து நின்றாள் முத்தம்மா.
யதுநாதோ யாழினியை முத்தம்மாவின் சம்மதத்தோடு திருமணம் செய்ய காத்திருந்தான். அவன் ஒன்று விடலைப்பையன் இல்லையே கல்லூரி செல்லும் பொழுது ஏற்பட்ட காதல் போல் இதுவும் கடந்து போகும் என்பது போல் யாழினியை முத்தம்மா நினைத்திருந்தால் அது நடக்காது. “அந்த வயதைக் கடந்து விட்டேன். அவளைத்தான் திருமணம் செய்வதாக முடிவாக இருக்கிறேன். அதுவும் முத்தம்மாவின் சம்மதத்தோடு போய் சொல்லுங்க” தர்மராஜிடம் கூறி விட்டிருந்தான். அவனுக்குத் தெரியும் அவன் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் தர்மராஜ்தான் முத்தம்மாவிடம் ஒப்புவிக்கிறாரரென்று.  
யதுநாத் மனம் மாறுவான் என்று ஆனந்தவள்ளியும், ஆனந்தவள்ளி மனம் இறங்கி வருவாள் என்று யதுநாத்தும் பிடிவாதமாக காத்திருக்கின்றனர். 
“அத்த உங்கம்மாக்கு இருக்குற பிடிவாதம்தான் யதுவுக்கும் இருக்கு. இரண்டு பேருமே இறங்கி வரமாட்டாங்க. இதனால உங்களுக்கு உங்க பையன் கிடைக்க மாட்டான். நீங்கதான் ஏதாவது செய்யணும்” பொம்முவுக்கு ஊட்டிவிட்டவாறே கிரி சொல்ல, கோமதி யோசிக்கலானாள்.
யதுநாத் நீடாமங்கலத்தில் நிலம் வாங்கியிருந்தால் கண்டிப்பாக அருணாச்சலத்தின் மூலம் சரஸ்வதியை பற்றியும் அறிந்திருப்பான் என்று புரிந்து கொண்ட சஞ்ஜீவ் அவனை அழைத்திருந்தான்.
“சொல்லுடா… நான் எடுத்தா பேச மாட்ட. உன்ன மாதிரி நான் இருக்க முடியுமா?” கிண்டலாகவே ஆரம்பித்தான் யதுநாத்.
“தம்பி என்று நினைச்சுகிட்டு இருந்தவன் மச்சானாக போறான். கால கொடுமைடா. எல்லாம் எங்கப்பான சொல்லணும். இங்க ஒரு பிரச்சினை என்ன பண்ணுறது என்று தெரியல. நான் ஒரு முடிவெடுத்திருக்குறேன். அது சரியா வருமான்னு கூட தெரியல” அடியும், இல்லாமல் நுனியும் இல்லாமல் புலம்பினான் சஞ்ஜீவ். 
“என்ன பிரச்சினை என்று சொன்னாதான் உதவி செய்யணுமா? அட்வைஸ் மட்டும் பண்ணா போதுமானு தீர்மானிக்க முடியும்” என்றான் யதுநாத்.
“சரஸ்வதியை பத்தி அருணாச்சலம் அங்கிள் சொன்னாரா?” என்று சஞ்ஜீவ் கேட்க, அவளை பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான் இவன்.
“எங்கப்பன் பண்ண வேலையால உண்மைய சொன்னா அவ குடும்பத்தை விட்டு வருவாளான்னு சந்தேகமாக இருக்கு. பொண்ணுனா கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போறவதானே. அம்மா வீட்டுக்கு வந்தாதான் என்ன? நாளைக்கு அவளுக்கு கல்யாணம் நடக்கும் இந்த உண்மையால பிரச்சினை வருமோனு பயமா இருக்கு” சஞ்ஜீவ் புலம்ப,
“சரஸ்வதிகிட்ட எப்படி உண்மைய சொல்லுறது என்று யோசிக்கிற நீ கல்பனா அத்தைகிட்ட எப்படி சொல்லுறது என்று யோசிச்சியா? சொன்னா அவங்க இப்போவே அவங்க வீட்டு வாசல் போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க” என்றான்
“ஆமா அதனாலதான் யாழினிகிட்ட கூட இன்னும் சொல்லல. முதல்ல சரஸ்வதிகிட்ட சொல்லிட்டு அத்தைகிட்ட சொல்லலாம்னு இருக்கேன்”
“அதான் எப்போ சொல்ல போற?”
“பேசாம அவளை கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு போய்டலாமான்னு தோணுது. அப்பொறம் சொல்லிக்கலாம்”
“யாரு நீ? காதலிச்சா கூட பரவாயில்ல கல்யாணம் பண்ணிக்கலாம். உனக்குத்தான் வேலை பார்க்கக் கூட கிளாஸா, மாஸா வேணுமே. உனக்கும் அவங்களும் செட் ஆகாது. அவசரப்பட்டு கல்யாணம் பண்ண முடிவெடுக்காத காலத்துக்கும் எடுத்த முடிவு தப்போ என்று தோணி அவங்களையும் கஷ்டப்படுத்தி நீயும் நிம்மதியில்லாம இருப்ப”
“அதெல்லாம் கல்யாணம் நடந்தா சரி வரும். எல்லாரும் காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களா என்ன?” சஞ்ஜீவ் வியாக்கியானம் பேச,
“முதல்ல அவங்களுக்கு உன்ன பிடிக்கணுமே, உன்ன வேண்டாம்னு சொல்லிட்டா”
“ஏன் எனக்கு என்ன குறைச்சல். ஹண்டசம்மா, படிச்ச, பணக்காரனா சீமைல இருந்து தொர மாப்புளையா வந்தா வேணாம்னு சொல்லுவாளா?” அலைபேசி வழியாக அவனை முறைக்க முடியாமல் இவன் நின்றிருக்க,
“ஆமா ஆமா அப்படி இருக்குறவங்கள கிராமத்துல ஏமாத்துக்காரங்க என்று சொல்லுறாங்களாம்” சிரித்தான் யதுநாத்.
“உனக்கு போன போட்டு பிரச்சினைக்கு வழி சொல்லுன்னு சொன்னா, எனக்கு அவளுக்கும் வாய்க்கால் தகராறு உண்டு பண்ணுவ போல இருக்கே போன வை” என்று சஞ்ஜீவ் சொல்ல
“உன் தங்கச்சி என் வருங்கால பொண்டாட்டி எப்படி இருக்கா?” சிரிக்காமல் யதுநாத் கேட்க,
“நக்கல்தாண்டா உனக்கு. யாழினி ஹாஸ்பிடல்ல இருக்கும் போது கூட வந்து பார்க்காதவன் நீ. இப்போ மட்டும் என்னவாம்?” சிடுசிடுத்தான்.
“இங்க பாட்டி சூடா இருக்காங்க, அவங்க சம்மதம் கிடைச்ச உடனே வரேன்” என்றான்.
“அதானே அவங்க சம்மதிக்கணும், இவங்க சம்மதிக்கணும் என்று காலம் காத்திருக்குமா என்ன? நீ வந்து தாலி கட்டி கூட்டிட்டு போ”
“நீயெல்லாம் ஒரு அண்ணன். உனக்குன்னு வரும் போது இதையே உனக்கும் சொல்லுறேன். உன் முடிவு என்னனு பார்க்குறேன்”
“பார்க்கலாம், பார்க்கலாம்” அலைபேசியை அனைத்து விட்டு திரும்ப சரஸ்வதி அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள்.
“ஆகா இவ எதுக்கு முறைக்குறான்னு தெரியலையே. இவள பத்தி பேசுனத கேட்டுட்டாளோ? செத்தேன்” சஞ்ஜீவ் புன்னகைத்து சமாளிக்க,
“தங்கச்சிக்கு மாப்புள பாக்குறீங்களா? மாமா வேல பாக்குறீங்களா?” சரஸ்வதி கேட்ட கேள்வியில் சத்தமாக சிரித்தான்.
அவளை பற்றி பேசியது அவளுக்கு கேட்டிருக்கவில்லையென்ற சிரிப்பு.
“என்ன சிரிப்பு வெக்கமா இல்ல” அவள் அதட்ட
“ஒரு நிமிஷம் எங்க குடும்பக் கதையை கேளுமா… அப்பொறம் திட்டலாம்” என்றவன் ஈஸ்வரமூர்த்தி என்பவர் என்னெல்லாம் செய்தார் அதனால் யாழினி, யதுநாத், உட்பட யாரெல்லாம் பாதித்திருக்கிறார்கள் என்று கூறியவன் சரஸ்வதியை பற்றியும் கூறினான். ஆனால் அவளை கண்டு பிடித்ததாக கூறவில்லை.
“அடக் கொடுமையே. கூழோ கஞ்சியோ இந்த வாழ்க நிம்மதியா இருக்கு” என்றாள்.
ஆமாம். அவள் நிலையில் அது நிம்மதியான வாழ்க்கைதான். குடும்பத்தார் எந்த பிரச்சினையும் செய்வதில்லையே. 
இவளது பிரச்சினையை இவளிடம் கேட்கலாம் என்று கல்பனாவின் மகளை கண்டு பிடித்தால் அவள் இப்பொழு இருக்கும் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்காமல் அவளை கல்பனாவிடம் எவ்வாறு சேர்ப்பது என்று கேட்க,
“அவங்களுக்கு ஒரு அண்ணன் பையன் இருந்தா அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் பக்குவமா உண்மைய சொல்லலாம். இல்ல சொல்லாம கூட விட்டுடலாம். கல்பனா அம்மாக்கு மட்டும் அவதான் பொண்ணுன்னு தெரிஞ்சா போதாதா?” என்றவள் அவனது பதிலையும் எதிர்பார்க்காமல் வீட்டுக்கு கிளம்பியிருந்தாள். 
சிந்தித்து பார்க்கையில் அவள் சொல்வதும் சரிதான். அவளிடம் உண்மையை கூறி வீணாக அவளை கவலையடைய செய்ய வேண்டுமா? அவளிடம் சொல்லாமல் அவளை திருமணம் செய்து கல்பனாவிடம் சேர்க்கலாமே. இப்போது கல்பனாவிடம் உண்மையை கூறினால் யது கூறியது போல் அவள் வீட்டு வாசலுக்கு சென்று பிரச்சினை செய்தாலும் செய்வாள். திருமணம் நடந்த பிறகு பக்குவமாக கூறி, அவளை சமாதானப்படுத்தி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
ஆனால் சரஸ்வதியை எவ்வாறு திருமணம் செய்வது? பெண் கேட்க வேண்டிய கோமதியோ சென்னையிலல்லவா இருக்கின்றாள். யதுவும், யாழினியும் ஒன்று சேராமல் சஞ்ஜீவ் சரஸ்வதி திருமணம் நிகழாது. கல்பனா மகளோடு சேர்வது கனவுதான்.
இந்த இரண்டு வாரத்தில் யாழினியின் இருமல் முற்றாக நின்றிருந்தது. ஆப்பை உபயோகிப்பதை நிறுத்தியிருந்தாள்.
ஆனாலும் சரஸ்வதியின் கசாயம் சிகிச்சை ஓய்ந்தபாடில்லை. கை, கால் வலி என்று கூறினாலே போதும் கசாயம், ரசம் என்று கிளம்பி விடுவாள்.
“இதெல்லாம் எங்கம்மா கத்துகிட்ட?” அவள் இதமாக பிடித்து விட்டாலே போதும் தலை வலி மாயமாக மறைந்து விட ஆச்சரியமாக கேட்டாள் கல்பனா.
“என்கப்பத்தாவோட அப்பா நாட்டு வைத்தியராம். அவரு கிட்ட கொஞ்சம் கத்துக்கிட்டாங்களாம். கல்யாணத்துக்கு பிறகு இங்கயே தங்கிட்டதால மருத்துவம் பத்தி அவ்வளவாக தெரியலையாம். தெரிஞ்சதை அம்மாக்கு சொல்லிக் கொடுத்தாங்களாம். அம்மா சொல்லிக் கொடுத்ததுதான்” என்றாள் சரஸ்வதி.
“உணவே மருந்து என்று  சும்மாவா சொன்னாங்க?” கல்பனா கூறிக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி வருவதைக் கண்டு எழுந்து கொண்டாள்.
கோமதியும் யதுநாத்தும் வண்டியிலிருந்து இறங்க “யார் இவங்க உங்க வீட்டாளுங்களா?” சரஸ்வதி கேட்கும் பொழுதே வண்டிச் சத்தம் கேட்டு வெளியே வந்த யாழினி யதுநாத்தைக் கண்டு கல்பனாவின் பின் மறைந்து நின்றாள்.
“என்ன இவ பொண்ணு பார்க்க வந்தா மாதிரி ஒளிஞ்சி நின்னு பாக்குறா? கிராமத்துக்கு வந்ததும், கிராமத்துக்காரியாகிட்டாளா?” யாழினியை அவன் ஏற, இறங்க பார்க்க, முன்னால் வந்து கோமதியை வரவேற்றவள் அவனை முறைத்தாள்.
அவனுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்ததனால் அவனை பார்த்த உடன் சட்டென்று கல்பனாவின் பின்னால் மறைந்தாள் தான். அவன் பார்த்த பார்வையில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஓடியொழிவது? அவன் வந்து பேசத்தான் செய்வான். பேசினால் தன் மறுப்பை சொல்லித்தானே ஆகா வேண்டும் என்று முன்னால் வந்து கோமதியை வர வரவேற்றாள்.
“வாங்க, வாங்க” என்ற சரஸ்வதியை பார்த்து “நீ தான் சரஸ்வதியா?” என்று கோமதி கேட்க,
“என்ன உங்களுக்கு தெரியுமா?” சரஸ்வதி ஆச்சரியமாக கேட்டாள்.
சஞ்ஜீவ் கல்பனாவின் மகளை கண்டு பிடித்து விட்டதாக கூறியிருக்க, அவள்தான் இவளோ என்று தான் கோமதி கேட்டிருந்தாள்.
எங்கே சஞ்ஜீவ் கூறினான் என்று கோமதி கூறுவாளோ என்று “யாழினி சொன்னா” என்றான் யதுநாத். 
“நான் எப்போடா… சொன்ன?” என்று அதற்கும் முறைத்தாள் அவள்.
சரஸ்வதியை ஆராய்ச்சி பார்வை பார்த்த கோமதிக்கு அவளுக்கும், சஞ்ஜீவுக்கும் எந்த விதத்திலும் பொருந்தாது என்று புரிந்து போக சஞ்ஜீவுக்கு எவ்வாறு புரிய வைப்பது என்று யோசித்தாள்.    
கல்பனா உள்ளே வரும்படி அழைக்கவும் கல்பனாவிடமும் நலம் விசாரித்த கோமதி சஞ்ஜீவ் எங்கே என்று கேட்க, தங்களது தோட்டத்திலும் காய்கறிகள் பயிரிடலாம் என்று விதைகளை வாங்க முத்தப்பாவோடு சென்றிருக்கிறானாம் வந்துவிடுவான் என்றாள் சரஸ்வதி.
அவள் தான் பொன்னு விலையிற ஏன் இப்படி போட்டு வைக்கிறீங்க என்று கேட்டிருக்க, இங்கே இருக்குறவரைக்கு ஏதாவது நடலாம் என்று யாழினியும், கல்பனாவும் வற்புறுத்த கிளம்பியிருந்தான்.
அதைக் கேட்டு கல்பனாவும், யதுநாத்தும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனந்தவள்ளி தன்னிலையிலிருந்து இறங்கி வராததால் அவளை தேடி சென்ற கோமதி என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று அன்னையிடம் நேரடியாக கேட்டாள்.
“என் பையன் போன் பண்ணியிருந்தான் ஈஸ்வர் யார் யாருக்கோ அநியாயம் பண்ணி இருக்காரு. ஆனா உங்களுக்கு என்னை எங்கம்மாகிட்ட இருந்து தூக்கிக் கொடுத்து நல்லதுதானே பண்ணி இருக்காரு. சொல்லப் போனா உங்களுக்கு மட்டும்தான் நல்லது பண்ணி இருக்காரு” என்றான். அவன் சொல்லுறது ஒருவகையில் உண்மைதான்.
கல்பனாவோட பொண்ண கண்டு பிடிச்சிட்டானாம். அந்த பொண்ண கல்பனாவோட சிக்கல் இல்லாம சேர்த்து வைக்க ஒரே வழி அந்த பொண்ண அவன் கல்யாணம் பண்ணி அம்மாவையும், பொண்ணையும் கூடவே வச்சிக்கிறது தான் என்று சொல்லுறான். ஆனா பொண்ணு கேட்டு போகவும், கல்யாணம் பண்ணி வைக்கவும் அம்மா நான் வேணுமாம். நான் இல்லாம ஒன்னும் நடக்காது என்று சொல்லுறான்”
“போக வேண்டியது தானே அதுக்கு எதுக்கு இங்க வந்து நிக்கிற?”
“தங்கச்சி இருக்கும் போது அவளுக்கு கல்யாணம் பண்ணாம அவன் கல்யாணம் செய்வானா? என் அம்மா நீ இருக்கைல நான் மட்டும் போய் பொண்ணு கேக்குறதுதான் அழகா?” அன்பாக பேசி அன்னையை மடக்க பார்த்தாள். 
“ஆமா எல்லாத்தையும் என்னை கேட்டு செய்யிறவ பாரு” நொடித்தாள் ஆனந்தவள்ளி.
“இங்க பாருமா… நெஞ்ச பிடிச்சிக்கிட்டு ஹாஸ்பிடல் போய் படுத்துகிட்டு ஐயோ என் உசுரு போக போகுது. என் பையன பார்க்காம, என் உசுரு போய்டுமோனு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணவும் எனக்குத் தெரியும். அப்படி பண்ணா பொண்ணு பாசத்துல நீ சஞ்ஜீவ போன்ல கூப்பிட மாட்டியா? அவன்தான் யதுக்கும் யாழினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்ல மாட்டானா? அன்னைக்கே அவன் கல்யாணத்த நான்தான் பண்ண மாட்டேனா?”
“என்னடி மிரட்டுறியா?” அன்னை முறைக்க,
“பத்மஜா இதைத்தானே பண்ணா? பதறியடிச்சு கல்யாணம் பண்ணிவைக்கலையா?”
“ஓஹ்… அவள் தான் உன்ன ஏத்திவிட்டு அனுப்பினாளா?”
“நான் என்ன குழந்தையா? ஏன் யது எவ்வளவு பிடிவாதக்காரன் என்று உனக்குத் தெரியாதா? அவனாக போய் யாழினி கழுத்துல தாலிய கட்டி கூட்டிகிட்டு வந்தா உனக்கு அவமானமாக இருக்காதா? அவன் ஏன் அமைதியாக இருக்கான். உன் சம்மதத்தோட, உன் ஆசிர்வாதத்தோட அவன் கல்யாணம் நடக்கணும் என்று தானே. நீ ஏன் அவனை புரிஞ்சிக்காம இருக்க?”
யதுநாத்தை சந்த்தித்து நீ ஏன் பாட்டியிடம் யாழினியை திருமணம் செய்வதை பற்றி பேசுவதில்லையென்று கோமதி கோபமாக கேட்டிருக்க,
“பாட்டி என்ன புரிஞ்சி மனசு மாறுவங்க அத்த” என்றதோடு மௌனமானான்.
“ஏன் யாருமே என் மனச புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க?” என்றவாளோ தான் யதுநாத் எந்த மாதிரியான குடும்பத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசைக்கொள்வதாக கூறினாள். 
“நீ ஆசைப்படுறது தப்பு என்று நான் சொல்லலமா…” அன்னையை அணைத்துக் கொண்டவள் “அவன் ஒரு பொண்ணு மேல ஆசைப்பட்டுட்டானே. மனசுல ஒருத்திய வச்சிக்கிட்டு எப்படி இன்னொரு பொண்ணு கூட குடும்பம் நடாத்த முடியும். உன் சந்தோஷத்துக்காக நடிக்கத்தான் முடியும். எந்த கஷ்டத்தையும் அவனுக்கு கொடுக்கக் கூடாது என்று நினைக்கிற நீ, அவனுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்க போறீயா?. யோசீ”
அதன் பின்தான் ஆனந்தவள்ளி யதுநாத், யாழினியின் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். தன்னால் நெடுந்தூரம் பயணம் செய்ய முடியாது. சஞ்ஜீவுக்கு சரஸ்வதியையும் அவன் விருப்பப்படியே பேசி முடிக்கும்படி கூறியிருந்தாள். 
 வரும் வழியெல்லாம் சரஸ்வதியை பற்றித்தான் கோமதி யதுநாத்திடம் கேட்டுக்கொண்டு வந்தாள்.
“எனக்குத் தெரியல அத்த, ஒன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணனும், இல்ல வீட்டுல பார்த்த பொண்ண பிடிச்சு போய் கல்யாணம் பண்ணனும். ரெண்டும் இல்லாம, பிராயச்சித்தம் பண்ணுறேன். தங்கையை வளர்த்த அம்மா பொண்ண சேர்த்து வைக்கிறேன் என்று தனக்கு பொருத்தமே இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணா அவன் வாழ்க நல்லா இருக்குமா சொல்லுங்க?”
“என்னடா சொல்லுற? பொருத்தமில்லன்னு சொல்லுற? என்ன பிரச்சினை?” கலங்கினாள் கோமதி.
“உங்களுக்கே தெரியும். சஞ்ஜீவ் துணி எடுத்தாலும், பிராண்டட் என்று பாக்குறவன். சாப்பிட போனாலும் பைஸ்ட்டார் ஹோட்டல். அவசரத்துக்கு ரோட்டுக்கடைல சாப்பிட மாட்டான், தண்ணி கூட குடிக்க மாட்டான். அப்படிப்பட்டவன் கிராமத்துல வளர்ந்த பொண்ண கல்யாணம் பண்ணா சரிவருமா?”
“ஆமாடா” யோசனையாகவே வந்தவளுக்கு சரஸ்வதி சொல்லித்தான் சஞ்ஜீவ் விதை வாங்க சென்றிருக்கிறான் என்றதும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது, அவன் வந்த உடன் பேசலாம் என்று இருந்தாள்.
யாழினியிடம் வந்த யதுநாத் “எப்படியிருக்க?” என்று கேட்க,
“எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள்.  
அவளை பார்க்க வராததால் கோபமாக இருக்கிறாள் என்றெண்ணியவன் “பாட்டி நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்” முகம்கொள்ளா புன்னகையில் இவன் கேட்க,
“நம்ம கல்யாணமா? நான் தான் அன்னைக்கே சொன்னேனே நான் உங்கள காதலிக்கவே இல்லனு. எதுக்கு திரும்பாத திரும்ப வந்து அவமானப்படுறீங்க?” அவன் தன்மானத்தை சீண்டினாள் யாழினி. 
இவள் என்ன சொல்கிறாள்? தான் இவள் அண்ணன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் அதனால்தான் தன்னை ஒதுக்குகிறாள். வேண்டாமென்று கூறுகிறாள். காதலிக்கவில்லையென்று பொய்யுரைக்கிறாள் என்றெண்ணினால் உண்மையனைத்தையும் அறிந்த பின்னும் இவள் மறுக்க காரணம் என்ன? உண்மையிலயே இவளுக்கு என்னை பிடிக்கவில்லையா? நான் மட்டும்தான் இவளை காதலித்தேனா?” முற்றாக குழம்பினான் யதுநாத்.
சரஸ்வதியை பெண் கேட்டு சென்றால் சஞ்ஜீவை திருமணம் செய்ய அவள் மறுக்க, அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் சஞ்ஜீவ். சத்தமாகவே சிரித்து விட்டான் யதுநாத். 

Advertisement