Advertisement

அத்தியாயம் 21
தீக்குள் சிக்கி தீக்காயங்கள் ஏதுமின்றி யாழினி உயிர் பிழைத்தாலும், நுரையீரலை நிறைத்த புகையால் சதா அவள் இருமிக் கொண்டேயிருந்தாள்.
அவள் முதுகை நீவி விட்டவாறே கலகலங்கியவாறு கல்பனா அவள் அருகிலையே அமர்ந்திருந்தாள்.
சஞ்ஜீவ் கூறியதற்கு இணங்க அருணாச்சலம் கல்பனாவை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் குடி வைத்திருந்தார்.
தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பவளை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியவில்லை. தன்னுடைய மருமகன் ஒரு மாலில் கடை வைத்திருக்கின்றான். மினி சுப்பர்மார்கட்தான். மேற்பார்வை பார்க்கும் வேலைதான் செய்வீங்களா என்று கேட்டிருக்க, அது தனக்கு தெரியாத வேலையென்று மறுக்கப் போனவளோ, எந்த வேலையென்றால் என்ன கற்றுக்கொள்கிறேன் என்று அங்கு வேலைக்கும் சேர்ந்து ஒரே வாரத்தில் காற்றும் கொண்டாள்.
மாமனாரின் முதலாளியின் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் அருணாச்சலத்தின் மருமகனும் மரியாதையோடு வேலையை கற்றுக்கொடுத்தான்.
வேலை கிடைத்து விட்டது. தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது. வாடகைக்கு சிறியதாக ஒரு அறையை பார்த்துக் கொண்டு சென்று விடுவதாக அருணாச்சலத்திடம் கல்பனா கூற,
“உன் அண்ணனாக என்னை நினைத்துக் கொள்ளுமா. சில விஷயங்களை என்னால் வெளிப்படையாக இப்பொழுது சொல்ல முடியாது. கொஞ்சம் நாட்கள் பொறுத்துக்கொள் எல்லா உண்மையும் உனக்கே தெரிய வரும். அதன்பின் நீயே முடிவெடு” என்றார்.
இன்னும் அவள் அந்த வீட்டில்தான் இருக்கின்றாள். தொலைக்காட்ச்சியில் ஈஸ்வரமூர்த்தி கைதான செய்தியோடு கூறிய உண்மைகளை அறிந்து மயங்கி சரிந்தவள் தான். உடனே யாழினியை காண மருத்துவமனைக்கு ஓடினாள்.
“ஐயோ என்ன மன்னிச்சுடு யாழினி என் புருஷன் பண்ண கொடுமையால் உன்ன சரியா கவனிக்காம விட்டுட்டேனே. பாவி உன்ன தூக்கி சுவத்துல அடிச்சதுல உன் கண்பார்வை வேற மங்களா போச்சே. உன் அம்மா உயிரோட இருந்து உன்ன வளர்த்திருந்தா உன்ன நல்லா வளர்த்திருப்பாங்க” தான் பெத்த மகளை ஈஸ்வர் என்ன செய்திருப்பானோ என்ற சிந்தனைக் கூட இல்லாமல் தான் வளர்த்த மகள் தன் மீது கோபமாக இருக்கின்றாள் என்று தெரியும். தான் அவளை பெற்ற அன்னையில்லையென்று அறிந்தால் எங்கே தன்னை வெறுத்து விடுவாளோ என்று தாயுள்ளம் ஏங்க ஓடி வந்திருந்தாள்.  
“நீங்கதான் அம்மா என்ன மன்னிக்கணும். நீங்க பாசம் வச்ச ஒரே காரணத்துக்காக நீங்க பெத்த பொண்ண உங்க கிட்ட இருந்து பிரிச்சி பெரிய பாவத்தை பண்ணிட்டாரு எங்கப்பா. அவர் பொண்ணு இந்த பாவிய நீங்க வளர்த்திருக்கீங்க” இருமியவாறே யாழினி அழ,
“ஐயோ என் தங்கமே அப்படி சொல்லத்தேடி.. நீ பாவியில்ல. ஒரு பாவமும் அறியாத உன்ன பாசமா வளர்க்காத நான்தான் பாவி” என்று கதறினாள் கல்பனா.
இவர்களின் பாசப் போராட்டத்தைப் பார்த்து சஞ்ஜீவும் கண்கள் கலங்கினான். அவனுக்கும் கோமதிக்கு நடுவில் இருக்கும் உறவும் இவ்வாறுதான். கல்பனா யாழினிக்கு பாசத்தைக் காட்டாமல் வளர்த்தாள் ஆனால் கோமதி பாசத்தியூட்டி வளர்த்தவள் அவள் மனம் எவ்வளவு பாடுபடும். எப்படியெல்லாம் கதறுவாள். எவ்வளவு கண்ணீர் வடிப்பாள் என்று இவனுக்குத் தெரியாதா? 
ஆனந்தவள்ளியின் கோபம் தணிந்து யதுநாத்தும் யாழினியும் ஒன்று சேர வேண்டுமானால் அவன் கோமதியை பிரிந்திருப்பது அவசியம் என்று அன்னையை பாராமல் இருக்கின்றான். 
பேசியது, அழுதது என்று இருமி, இருமி, மூச்சு விட சிரமப்பட்டு மருத்துவ உதவியை யாழினி நாடவேண்டியதாக, சஞ்ஜீவும், கல்பனாவும் அவளை பேச விடுவதேயில்லை.
மூன்று நாட்கள் மருத்துவமனையிலிருந்த யாழினி கல்பனாவின் குடியிருப்புக்கு வந்து விட்டாள். சஞ்ஜீவும் அவளும் அண்ணன் தங்கையென்ற உண்மைதான் ஆனந்தவள்ளியின் குடும்பத்தாருக்கு தெரிந்து விட்டதே. இனி அவள் அந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
யதுநாத் வந்து தன்னை சந்திப்பானா? சந்தித்தால் அவனிடம் எப்படி முகம் கொடுத்து பேசுவது? என்ற பதட்டத்திலும், குழப்பத்திலும் இருந்தவளுக்கு நிம்மதி தரும் விதமாக யதுநாத் அவளை சந்திக்க வரவேயில்லை.
இதைத்தானே அவள் எதிர்பார்த்தாள் என்று மனதை தேற்றிக்கொண்டாலும், மனதின் ஓரம் வலிக்கச் செய்யும் பொழுதெல்லாம் கேவலானாள். கேவும் பொழுது இருமலானாள்.
“அப்பா சஞ்ஜீவ் என்னால எம்பொண்ண இந்த நிலையில பார்க்க முடியல. அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம். பேச வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா. இருமலால் இரத்தம் வருமான்னு எனக்கு பயமாக இருக்கு” என்றாள் கல்பனா.
“அத்த அவளுக்கு ஒண்ணுமில்ல. ஸ்ட்ரோங்கான கெமிக்கல் கலந்த புகையில அதிக நேரம் இருந்ததினாலதான் இருமல் இருக்கும், கொஞ்சம் நாள்ல சரியாகிடும் என்று டாக்டர் சொன்னாரே. அவ பேசத்தான் போன்ல ஆப் டௌன்லோட் பண்ணிக் கொடுத்திருக்கேன். அவ எதுக்கு வாய தொறந்து பேசுறா?” தங்கையை கடிந்துகொள்ளவும் முடியாமல், கல்பனாவுக்கு விளக்கமளித்தான்.     
புதிய தொழிற்நுட்பத்தின் உதவியால் டைப் செய்தால் பேசும் ஆப் இருக்க, யாழினி என்ன சொல்ல நினைக்கிறாளோ அதை டைப் செய்த உடனே அது கூறி விடுவதால் மற்றவர்களுக்கு இலேசாக இருந்தது. அது அவளுக்கு பழக்கப்படாததால் இவள் வாயை திறந்து பேசி இருமி கல்பனாவை பயமுறுத்துகிறாள்.
“நீ எனக்கு அண்ணன் என் அம்மா உனக்கு அத்தையா?” யாழினி டைப் செய்த உடன் அலைபேசி குரல் எழுப்ப சஞ்ஜீவ் சிரித்தானே ஒழிய பதில் ஏதும் சொல்லவில்லை.
கல்பனாவை அம்மா என்று அழைப்பதில் அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கோமதிக்குத்தான் இல்லை. கல்பனாவையென்ன ரேணுகா உயிரோடு இருந்திருந்தால் அவளை அம்மாவென்றழைக்க விட்டிருப்பாளா? தெரியாது.
தன்மீது அவள் எவ்வளவு பாசமாக இருப்பாள் என்று அவனுக்கு நன்கு தெரியும். கல்பனாவை அம்மாவென்று அழைக்க போய் அவளோடு சண்டை போட்டாலும் ஆச்சரியமில்லை. அம்மா என்றால் அவனுக்கு கோமதிதான். அவள் மனதை புண்படுத்த அவன் தயாராக இல்லை. சஞ்ஜீவை பாராமல் அவள் எப்படித்தான் இருக்கின்றாளோ.
அவனாலும் கோமதியை பார்க்காமல், பேசாமல், இருக்க முடியாது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யாழினியும், யதுநாத்தும் ஒன்று சேர வேண்டும் என்பதினால்தான்.
“மூணு வாரமாகப் போகுது என்னப்பா இன்னும் சரியாகாம இருக்குது? எனக்கு பயமாக இருக்கு” கவலையாக கூறினாள் கல்பனா.
“சாதாரண புகையில்லையே கெமிக்கல் கலந்த புகையில்லையா சைட் எபெக்ட் இருக்கத்தான் செய்யும். ப்ரெஷ் ஏர்ல நல்லா மூச்ச இழுத்து விடச் சொல்லி டாக்டர் சொல்லுறாரு. இந்த சென்னைல ப்ரெஷ் ஏர்கு நாம எங்க போறது? யாழினி நாம தஞ்சாவூர் போகலாமா? அங்கதான் சுத்தமான காத்து இருக்கு” என்றான்.
அண்ணன் எதோ பொடி வைத்து கூறுவது போல் இருக்கவே சந்தேகமாக அவனை பார்த்தவள் என்னவென்று சைகையாலையே கேட்க, ஒன்றுமில்லையென்று இவனும் சைகை செய்தான்.
தானிருக்கும் மனநிலையில் இடமாற்றம் மிகவும் அவசியம் என்று உணர்ந்தவள் சரியென்று சொல்ல கல்பனாவோடு கிளம்பியிருந்தனர்.
தான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதினால் கல்பனா ஊரின் சிறப்பை பற்றியும், கோவில்களை பற்றியும் பேசிக் கொண்டே வந்தாள்.
“நாம நீடாமங்கலம் போறோம்” என்றான் சஞ்ஜீவ்.
“ஓஹ்… நான் போனதில்லப்பா… எங்க ஊரு பட்டுகோட்டைல, பொறந்தது, வளர்ந்தது, படிச்சது” என்ற கல்பனா விக்னேஷின் நியாபகம் வரவே மேற்கொண்டு பேசாமல் அமைதியானாள்.
அவள் கையை தட்டிக் கொடுத்த யாழினியோ “இந்தியால இத்தனை ஊர் இருக்க நாம எதுக்கு நீடாமங்கலம் போறோம்” என்று அண்ணனை சந்தேகமாக கேட்டாள்.
தனக்கும் தெரியாத கேள்விக்கு பதிலை சஞ்ஜீவ் என்னவென்று சொல்வான்.
ஈஸ்வரை சந்தித்த சஞ்ஜீவ் கல்பனாவின் மகளை என்ன செய்தீங்க? எந்த அநாதை ஆசிரமத்தில் விட்டீங்க? என்று சட்டையை பிடிக்காத குறையாக கேட்டிருக்க, கல்நெஞ்சம் கொண்ட ஈஸ்வர் அவனை நக்கலாக பார்த்தாரே ஒழிய எந்த பதிலையும் கூறவில்லை.
யாழினி மருத்துவமனையில் இருக்கும் ஒருநாளில் அருணாச்சலம் சஞ்ஜீவிடம் “கல்பனாவின் குழந்தையை ஈஸ்வர் எந்த அநாதை ஆசிரமத்திலும் விடவில்லை. இறந்து பிறந்த குழந்தைக்கு பதிலாக அந்தக் குழந்தையை வைத்திருக்கிறார். அதை ஒரு தாதி பார்த்தும் இருக்கின்றாள். கேட்டதற்கு என் மனைவி இறந்து விட்டாள். அன்னை இல்லாமல் என் மகள் வளர்வதற்கு பதிலாக, தாய்ப்பால் குடித்து அன்னை தந்தையோடு வளரட்டும். குழந்தை இல்லாத அந்த அம்மாக்குக்கு என் மகள் சந்தோஷத்தைக் கொடுக்கட்டும். என்னாலான உதவியை அந்த குடும்பத்துக்கு மறைமுகமாக இருந்து செய்வேன் என்று கூறி இருக்கிறார். அதை கேட்டு நெகிழ்ந்து போன தாதி இதை யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார்.
ஈஸ்வர் கைதான செய்தியை தொலைக்காட்ச்சியில் பார்த்திருக்கிறார். இவரை எங்கோ பார்த்த ஞாபகம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை நான் சென்று விசாரிக்கவும் நடந்ததை கூறினார். ஈஸ்வரின் உண்மை முகம் உலகத்துக்கு தெரியாமல் இருந்திருந்தால் அவர் நல்லவரென்று அந்த தாதி உண்மையை கூறாமல் இருந்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கும்” ஒரு தனி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் எத்தனை பெயரை எவ்வளவு பாதிக்கிறது என்று புலம்பினார் அருணாச்சலம்.  
“ஒரு மனிதன் எவ்வளவு பாவங்களை செய்ய முடியுமோ அவ்வளவு பாவங்களை அவர் செய்து, சேகரித்து வச்சிருக்கார்” பொருமிய சஞ்ஜீவ் “அந்த பொண்ணு இப்போ எங்க இருக்கா?” என்று கேட்க, தான் சேகரித்த தகவலை கூறினார் அருணாச்சலம். 
நீடாமங்கலத்தில் இருக்கின்றாளாம். ஐந்து சகோதர சகோதரிகளுக்கு இவள்தான் மூத்தவளாம். ஐந்தாவது குழந்தை பிறந்த போது அன்னை இறந்து விட்டாளாம். படிப்பு எட்டாம் வகுப்புதானாம். தந்தையோடு விவசாயம் செய்கின்றாளாம்.
ஒத்த பெண்ணாகா வாழ வேண்டியவள் நான்கு சகோதர்களை பார்த்துக் கொண்டு தான் யாரென்றே தெரியாமல் யாருக்கோ உழைத்துக் கொட்டுகிறாள். என்ன ஒரு அவலநிலை. தான் பார்த்தே இராதவளை நினைத்து பெருமூச்சு விட்டான் சஞ்ஜீவ்.
அவளிடம் எவ்வாறு உண்மையை சொல்வது? சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? சொல்லி கல்பனாவோடு அவளை சேர்த்து வைக்க வேண்டுமல்லவா. தன் குடும்பத்தை விட்டு வருவாளா? சஞ்ஜீவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
நீடாமங்கலத்தில் சொந்தபந்தம் என்று யாருமில்லை. லாட்ஜில் தாங்கிக்கொள்ளலாம் பெயரே தெரியாத அவளை எவ்வாறு சந்திப்பது? பக்கத்தில் இருந்தால் தானே வசதியாக இருக்கும் என்று சஞ்ஜீவ் அருணாச்சலத்திடம் கூறியிருக்க,
“அவங்க நிலத்துக்கு பக்கத்து நிலத்த யதுநாத் தம்பி வாங்கிட்டாராம். நீங்க போய் சேருறதுக்குள்ள வீட்டையும் ஒழுங்கு படுத்தி வைக்கிறதா சொன்னாரு”
அதற்குள் இந்த விஷயத்தை யதுநாத்தின் காதில் போட்டு விட்டாரா? அவன் இதற்கு ஏற்பாடும் செய்து விட்டானா? யதுநாத் அலைபேசி அழைப்பு விடுத்திருந்தும் கோமதியை பற்றி பேச எடுத்திருப்பானோ என்று எண்ணி சஞ்ஜீவ் எடுக்கவேயில்லை. ஒருவேளை இதைக் கூறத்தான் எடுத்திருப்பான். அருணாச்சலம் இருவருக்கும் நடுவில் நிற்பதால் எல்லாம் சுமூகமாக நடந்தேறியது.  
“நீங்க ஒரு டபுள் ஏஜென்ட் அங்கிள்” சிரித்தான் சஞ்ஜீவ்.
“நீங்க எல்லோரும் ஒண்ணா ஒத்துமையா இருந்தா போதும்” புன்னகைத்தார் அருணாச்சலம்.
“வீடு ரொம்ப நல்லா இருக்கு” கல்பனா கூறிக்கொண்டிருக்க, யாழினி வீட்டையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சஞ்ஜீவ் பதில் சொல்லாது பக்கத்து  வீட்டை பார்வையிட்டான். பக்கத்துக்கு வீடு என்றாலும் பத்து மீட்டர் தொலைவில் இருந்தது. கல் வீடுதான். சுண்ணாம்போ, சீமெந்தோ பூசப்பட்டிருக்கவில்லை. வீட்டை சுற்றி மூங்கில் வேலி. வெளியே மிளகாய், ஊறுகாய், கொத்தமல்லி, என்று என்னென்னவோ காய போட்டிருந்தாள். ஒரு நாய் வேறு காவலுக்கு தூங்கிக் கொண்டிருந்தது. அவளைக் காணோம்.
“என்ன பார்த்துகிட்டு இருக்க?”
யாழினியின் குரலில் சுதாரித்தவன் “கண்ணுக்கெட்டிய தூரம் பச்சை பசேலென்று இருக்கு. நல்லா ஆழமா மூச்ச இழுத்து விடு” என்றது மட்டுமல்லாது செய்தும் காட்டினான்.
“ஏங்க யாருங்க? ஊருக்கு புதுசா? யோகா மாஸ்டரா? மூச்சு பயிற்சி செய்யிறீங்களா? இதோ இவளுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க”
“எவ அவ” என்று சஞ்ஜீவ் முறைக்க, யாழினி சத்தமாக சிரித்தாள்.
சிரித்தது மட்டுமல்லாமல் இரும வேறு செய்ய, “என்னங்க உடம்பு முடியலையா? இருங்க இருமலுக்கு கசாயம் வச்சி தரேன்” என்றாள் அவள்.
“இந்த இருமலுக்கு கசாயமெல்லாம் குடிச்சா சரிவராது” சஞ்ஜீவின் பேச்சை பொருட்படுத்தாமல் நடந்தவளை அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது.
புடவை தான் அணிந்திருந்தாள். பின்னியிருந்த கூந்தலை கொண்டையிட்டு துணியால் கட்டியிருந்தாள். இடுப்பில் சொருகியிருந்த முந்தியும், தூக்கி சொருகியிருந்த புடவையும் அசல் கிராமத்துக்காரிதான். தான் எதிர்பார்க்கும் “கிளாஸ்” என்பது அவள் ஆடையிலுமில்லை. பேச்சிலுமில்லை தலையை உலுக்கிக் கொண்ட சஞ்ஜீவ் இன்று முகம் சுளிக்கவில்லை. அவளை ரசிக்கவுமில்லை.
“அது உங்க அக்காவா?” யாழினி பாவாடை தாவணியில் இருந்த சிறுமியிடம் கேட்க,
“ஆமா” என்றவளுக்கு பதினான்கு வயது இருக்கும்.
“வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க” யாழினி பேச ஆள் கிடைத்ததும் ஆப் மூலம் பேச ஆரம்பிக்க, அதை வினோதமாக பார்த்தவாறு அவளும் பதில் சொல்லலானாள்.
“அண்ணா கல்லூரி படிக்கிறாங்க, நானும் தம்பிகளும் ஸ்கூல் போறோம். விளையாட போய் இருக்காங்க. வந்துடுவாங்க”
வேலிக்கு அங்கிருந்து அவள் பதில் சொல்ல “அப்படியாயின் கசாயம் வைக்க சென்றவள் தானோ கல்பனா அத்தையின் மகள்” சஞ்ஜீவின் பார்வை அவளது வீட்டின் புறம் சென்றது.
“உன் பேரென்ன. உன் அக்கா பேரென்ன?” சஞ்ஜீவ் சட்டென்று கேட்க, பெண்கள் இருவருமே அவனை கூர்ந்து பார்த்தனர்.
“கிராமத்துக்காரங்க, சினிமா ஹீரோயின் பெயரா வச்சிருப்பாங்க, பண்ணி நேமாதான் இருக்கும்” சிரித்து சமாளிக்க,
“என் பெயர் லட்சுமி அக்கா பேர் சரஸ்வதி. எங்க பேர்ல என்ன குறையாக கண்டீங்க?” சின்னவள் முறைக்க,
“தெய்வீகமான பேருமா… சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” அவள் தலையை தடவி சமாளிக்க, தோளில் துண்டோடு அங்கே வந்தவரை பார்த்து “அப்பா” என்றவாறு அவள் ஓடிவிட்டாள்.
“அக்கா அப்பாவோட விவசாயம் பார்குறா, தம்பி காலேஜ் போறான். மத்தவங்க ஸ்கூல். இது குடும்பம். எங்க அப்பாவும் இருக்காரே” யாழினி பெருமூச்சு விட,
“இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?”
“அந்த பொண்ணுக்கு என் வயசுதான் இருக்கும். அக்காவும், தங்கச்சியும் வரும் போதே பார்த்தேன். எதையோ தீவிரமா பேசிகிட்டு வந்தாங்க. நாம யாரோ எவரோ என்று ஒதுங்கி போகாம அந்த பொண்ணு கசாயம் வைக்க போச்சு. அம்மா இருந்திருந்தா அம்மா கிட்ட சொல்லி வச்சி கொடுக்கிறேன்னு சொல்லி இருப்பா. கேக்கமாலையே உதவி செய்யிறதுதான் ஊர்க்காரங்க. அந்த குட்டிக்கு தம்பிகனா உசுரு போல, பேசும் போதே எப்படி முகம் மலர்ந்த பாத்தியா? அப்பாவ பார்த்ததும் எப்படி துள்ளிக் குதிச்சிகிட்டு ஓடிருச்சு”
“ம்ம்” என்ற சஞ்ஜீவ் ஒன்றும் பேசவேயில்லை. ஏற்கனவே அவளிடம் உண்மையை கூறி எவ்வாறு புரிய வைப்பது. கல்பனாவோடு எவ்வாறு சேர்த்து வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றான். இதில் அவள் இந்த குடும்பத்தார் மீது வைத்திருக்கும் பாசத்தை பெருமை பேசினால் அவளிடம் இவன் எவ்வாறு உண்மையை கூறுவதாம்?   
சொன்னது போல் சரஸ்வதி கசாயம் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள். கூடவே கருப்பட்டி, வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, தொட்டுக்க கார சட்னி என்று கடைபரப்பினாள்.
“யாரிந்த பொண்ணு?” என்று கல்பனா கேட்க, யாழினி பக்கத்து வீட்டு பெண் என்றதும்
“பக்கம்தான் என்ன கொஞ்சம் நடந்து வரணும்” என்று சிரித்தாள்.
“கள்ளம் கபடமில்லாத அழகான சிரிப்பு உனக்கு” கல்பனா மனதார சொல்லி அவள் கன்னம் தடவ கல்பனாவின் கையை பற்றிக் கொண்டாள்.  
“எங்கம்மாவுக்கு இருக்கும் அதே சிரிப்புனு அப்பா அடிக்கடி சொல்லுவாரு. என்ன அம்மா தான் கூட இல்ல” புன்னகைத்தாள்.
அவளின் புன்னகையில் எவ்வளவு வலி மறைந்திருக்கின்றது என்று அங்கிருந்தவர்களுக்கு புரியாமலில்லை.
“என்ன உன் அம்மாவை நினைச்சுக்க. என்ன தேவைனாலும் என் கிட்ட கேளு, என் கூட பேசு”
கல்பனா அதை உணர்ந்து சொன்னாளா? சஞ்ஜீவ் அதிர்ந்து விழித்தவன், நடப்பது விதியா? சூழநியையா என்று பார்த்திருந்தான்.
“இப்படி வெளிய காத்தாட வந்து சாப்பிடுங்க, பயணப்பட்டு வந்து களைப்பாக வேறு இருப்பீங்க, ராவைக்கு சமைப்பீங்களா? இல்ல ஏதாச்சும் பண்ணிக் கொடுக்கட்டுமா?”
“இல்ல வரும் போதே இன்ஸ்டன் நூட்லஸ் வாங்கிட்டு வந்தோம். இன்னைக்கு நைட் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். காலைல போய் பொருளெல்லாம் வாங்கிட்டு வரணும்” என்றான் சஞ்ஜீவ். 
அவளுக்கு எதற்கு சிரமம், உறவென்று அறியாமையே உதவி செய்கிறாள். உறவென்று அறிந்தால் இவ்வளவு இணக்கம் காட்டுவாளா? அவளை யோசனையாக பார்த்திருந்தவனின் மனதில் இதுதான் ஓடியது.
“ஐயே… அதத்தான் நகரத்துல சாப்பிடுவீங்களே. எங்க தோட்டத்துல பறிச்ச கத்தரிக்கா குழம்பும், வெண்டக்கா பொரியலும் பண்ணி சாதம் வடிச்சிக் கொடுக்குறேன் சாப்பிடுங்க. காலைல போய் வாங்குறத வாங்கி சமைச்சி சாப்பிடுங்க” என்றவள் கிளம்பி சென்றாள்.
“என்ன இவள்? வலுக்கட்டாயமாக சமைத்துக் கொடுக்கிறேன் என்கின்றாளே. வேண்டாம் என்றாள் கேக்க மாட்டாளா?” சஞ்ஜீவ் செல்லும் அவளை முறைத்தான்.
குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வரேன் என்று கல்பனா உள்ளே சென்றிருக்க, “டேய் அண்ணா உண்மையை சொல்லு. இந்த பெண்ணுக்காக தானே நீ இந்த ஊருக்கு வந்த” ஆப்பை பயன்படுத்தாமல் ரகசியமாக கேட்டு சஞ்ஜீவை அதிர வைத்தாள் யாழினி.
ஆனால் அவன் அவன் சிந்தித்தும் பார்க்காத ஒன்றை அவள் கூற, இவன் முழிக்கலானான்.
“என்ன லவ்வா? தொர எப்போ? எங்க? இந்த கிராமத்துக்காரிய பாத்தீங்க? வந்ததுல இருந்து அந்த வீட்டு பக்கமே கண்ணு போச்சு. தங்கச்சிகிட்ட பேர கேட்டாச்சு. பேரு கூட தெரியாமத்தான் தேடி வந்தீங்களோ? இதுல தங்கச்சிக்கு ப்ரெஷ் ஏர் வாங்க வந்ததாக சாக்கு போக்கு வேற. பாத்துகிட்டே இருந்தா எப்படி சட்டுபுட்டுனு கல்யாணத்த பேசி முடிச்சிடவா?”
“ஏய் என்ன உளறுற?”
“நான் உளறுறேனா? நீ பாக்குற பார்வைதான் சரியில்லை” கல்பனா வரவே அவர்கள் பேச்சு தடைபட்டு போனது.
 “என்னடா இது வம்பா போச்சு. நான் எதை நினைத்து பார்த்தேன் யாழினி என்ன நினைக்கிறாள்? அவள் எனக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவள். அவளை போய் நான் காதலிப்பதா? கேலி செய்வதற்காக கூட அவ்வாறு கூற விரும்பாதவன் நான் என்னிடம் போய்” யாழினி கூறுவதை பெருத்துபடுத்தக் கூடாது” என்றெண்ணிக்கொண்டான். 
நீடாமங்கலம் வந்து பத்து நாட்களிலையே சரஸ்வதியின் குடும்பத்தோடு யாழினியும், கல்பனாவும் கூடிக்குலாவ ஆரம்பித்திருந்தனர். சஞ்ஜீவ் கொஞ்சம் ஒதுங்கி இருந்தாலும், நன்றாகத்தான் பேசினான்.
இத்தனை நாட்கள் கவனித்ததில் சகோதரர்களை படிக்க வைப்பதில் சரஸ்வதி பெரிதும் ஆர்வம் காட்டினாள். அவளது தம்பி தங்கைகளில் படிப்பு செலவை தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக கூறினால் கல்பனாவோடு வந்து விடுவாளோ? கூறித்தான் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான் சஞ்ஜீவ்.
இவன் அவளை தனியாக எவ்வாறு சந்தித்து பேசுவது என்று சிந்திக்க, சந்தர்ப்பம் அவனை தானாகவே தேடி வந்திருந்தது.
நிலவை வெறித்தவாறு இவன் அமர்ந்திருக்க, “ஏனுங்க தொர தூக்கம் வரலையா? வானத்த பாத்து அப்படி என்ன யோசிக்கிறீங்க?” என்று வந்து நின்றாள் சரஸ்வதி.
“இங்க என்ன டீவி இருக்கா பார்க்கா?  அதான் வானத்த பார்த்துகிட்டு இருக்கேன். நீ தூங்காம என்ன செய்யிற?”
“மூங்கில் வேலியில்ல கயிறு அருந்திருச்சோ, மூங்கில் உடைஞ்சிருச்சோ தெரியல ஆட்டுக்குட்டி புகுந்து ஓடியிருக்கு. அதுக்கு வேற காயம். தெருக்கோடி மருத்துவர்கிட்ட மருந்துப்போட்டு கொண்டுவந்தேன். இப்போதான் வேலியை சரிபண்ணே” என்றவள் கையில் கத்தி இருந்தது. கயிறை வெட்ட எடுத்து சென்றிருப்பாள் போலும்.
“எந்த பக்கம்? தனியாவா வந்த?”
“நிலவு வெளிச்சம் போதும்” சரஸ்வதி கூறும் பொழுதே
“அப்படிக் கேளுங்க தம்பி. இவங்கமா செத்ததுல இருந்து தம்பி தங்கைகளுக்கு அம்மாவா இருக்கா. வீட்டுல எல்லா வேலையைகளையும் இவ இழுத்து போட்டு செய்யிறா. ஒரு வேலை அதுங்கள பார்க்க விடுறதில்லை. கல்யாண வயசு இவளுக்கு. வரன் பார்க்க ஆரம்பிச்சா தட்டி கழிக்கிறா. இவ வாக்கப்பட்டு போனா கூடப்பொறந்ததுகள யாரு பாப்பாங்கனு கேக்குறா? அதுக்காக இப்படியேவா இருக்க முடியும்?” அங்கே வந்த சரஸ்வதியின் தந்தை முத்தாப்பா கவலையாக கூறினார்.
“இதுதான் சமயம் இவளிடம் பேசிவிடலாம்” என்று நினைக்கையில் முத்தப்பாவைக் கண்டு “இவர் எதுக்கு இப்போ என்ட்ரி கொடுக்குறாரு” என்று முறைத்தவன் அவர் கூற்றில் முழித்தான்.  
அவன் அதை யோசிக்கவே இல்லையே. அவளுக்கும் யாழினியின் வயது தானே. ஒரு அண்ணனாக யதுநாத்தோடு யாழினிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணும் அவன் இந்த பெண்ணின் வாழ்க்கையை பற்றி நினைக்க தவறி விட்டானே.  
அவள் திருமணமாகி வேறு வீடு சென்றால் கல்பனாவையும் அவளையும் சேர்ப்பது எவ்வளவு சிரமம். உண்மையை அறிந்தால் ஒருவேலை அவள் கணவன் பிரச்சினை கூட செய்ய வாய்ப்பிருக்கே. அப்படி ஆனால் அந்த பாவமும் எங்கப்பாவைதான் சேரும்.
“அப்போ நீயே அவளை கல்யாணம் பண்ணிக்க, கல்பனாவோட சேர்த்து வச்சது போலவும் ஆச்சு. அவ குடும்பத்தை பார்த்தது போலவும் ஆச்சு” என்றது அவன் மனசாட்ச்சி.
அதை உணர்ந்தவன் அதிர்ந்தான். “இவளையா? யாழினிக்காக கல்யாணம் செய்யலாம், ஏன் கல்பனாவுக்காக கூட செய்யலாம். ஆனால் அவ எனக்கு என்ன உறவு?  டேய் தங்கப்பா சொந்த தங்கச்சியையே கல்யாணம் பண்ணேன் சொல்ல வச்சிட்ட, இங்க ஒருத்தி தங்கச்சி முறையா? இல்லையானு தெரியாம புலம்ப வச்சிட்ட. உன்னால எத்தனை பேரோட வாழ்க்கை பிரச்சினையாகி இருக்கு. உனக்கெல்லாம் நல்ல சாவே வராது” புலம்பினான் சஞ்ஜீவ்.

Advertisement