Advertisement

அத்தியாயம் 20
யாழினி சஞ்ஜீவை அண்ணா என்று அழைத்ததை தொடர்ந்து தன்னோடு தனியாக அவளை அவன் அனுப்பியது உறுத்தவே மின்தூக்கியிலிருந்து இறங்கிய யதுநாத் நான்காம் தளத்திலிருந்து படிகளில் ஐந்தாம் தளத்துக்கு ஏறினான். அந்த நேரம் அருணாச்சலம் கூறியது காதில் விழவே அதிர்ந்து நின்றவன் சஞ்ஜீவ் மின்தூக்கியில் ஏறிய உடன் அருணாச்சலத்திடமிருந்து எல்லா உண்மைகளையும் அறிந்து திகைத்து நின்றான்.
தனக்கும், சஞ்ஜீவுக்கும் இடையில் நடக்கும் சண்டையில் ஈஸ்வர் எப்பொழுதுமே சஞ்ஜீவின் பக்கம் தான் நிற்பார். தான் எதை செய்தாலும் அது அவருக்கு தவறாகத்தான் தோன்றும். தான் அவருடைய சொந்த மகனில்லையென்பதினாலென்று இப்பொழுது புரிந்துபோனது.
தன்னுடைய தந்தையென்று நினைத்திருந்த ஈஸ்வர் தன்னை ஒதுக்கும் பொழுது, தூக்கிக் கொஞ்சாத பொழுது என் மனம் எவ்வளவு வேதனையை அனுபவித்தது. தனக்கு மட்டும் ஓரவஞ்சனை ஏன் என்று புரியாமளையே நெஞ்சத்தை அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டான்.
என் நிலைக் கூட பரவாயில்லை சொந்த மகளையே கொல்ல நினைத்த தந்தை என்றால் அவர் எப்படிப்பட்ட மனிதர். மகளை வைத்தே தன்னை வீட்டை விட்டு துரத்த நினைத்திருக்கிறார். இதை யாழினி அறிந்தால் அவள் மனம் எவ்வளவு பாடுபடும். அக்கணமும் அவளுக்காக வருந்தியவன் அமைதியாக சென்று வேலையை கவனிக்க அவளோ சஞ்ஜீவோடு உணவுண்ண செல்ல காத்திருந்தாள்.
இவனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. அவளை அனுப்பவும் மனமில்லை. சஞ்ஜீவ் வந்து அவளோடு உணவுண்ண தன்னை வெறுப்பேத்த அவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் ரசிக்கலானான்.
அதையும் தாண்டி ஈஸ்வரமூர்த்தியை ஒருவழி செய்ய வேண்டும் என்று உள்ளுக்குள் கனன்றுகொண்டுதான் இருந்தது. சஞ்ஜீவும், யாழினியும் என்னவெல்லாம் செய்கிறார்கள், என்னென்ன திட்டம் போடுகிறார்கள் என்று அருணாச்சலத்தை மூலம் அறிந்து கொண்டவன் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது ஈஸ்வரமூர்த்தி மூக்குக்கண்ணாடியை சரிபார்க்கக் கொடுத்த இடத்தில் வைத்து லென்ஸை மாற்றியிருந்தான்.
அச்சத்தின் உச்சியியில் அவர் உண்மைகளை உளறி விடக் கூடும் என்று யதுநாத் எதிர்பார்த்திருக்க, அவரோ அதிலிருந்து மீண்டு வந்து விட்டார்.
சஞ்ஜீவ், யாழினி அறியாமலையே அவர்களுக்கு உதவி ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து அவர்ளை காப்பாற்றியுமிருந்தான்.
அடுத்து என்ன செய்வது? அவர் திட்டம் யாழினியை நான் திருமணம் செய்வதென்றால் அதை உடைக்க வேண்டும் என்றெண்ணியவன் என்ன செய்வது என்ற சிந்தனையில் இருந்த வேலை. ஒருநாள் ஹோட்டலில் நிவேதிதாவை அவளுடைய மாமன் மகனோடு கண்டான்.
இவன் அவர்களை சாதாரணமாகத்தான் பார்த்தான். ஆனால் நிவேதிதா இவனிடத்தில் வந்து கார்த்திக்கோடு தன்னை பார்த்ததை தன் தந்தையிடம் கூற வேண்டாமென்று கேட்டுக் கொண்டாள்.  
ஆகா மொத்தத்தில் அவளுக்கு சஞ்ஜீவை திருமணம் செய்யவும் விருப்பமிருக்கவில்லை. தன்னை திருமணம் செய்யவும் விருப்பமிருக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த பொழுது பேசி விட்டு சென்றிருக்கின்றாள் என்று புரிந்துகொண்ட யதுநாத் அவளை வைத்து ஒரு திட்டம் போட்டான்.
“சரி சொல்ல மாட்டேன். என் பாட்டி உங்க வீட்டுக்கு கல்யாணம் பேசி வருவாங்க நீ சம்மதிக்கணும்” கூலாக இவன் சொல்ல
“என்ன அன்னைக்கி நான் மறுத்ததற்கு என்ன கல்யாணம் பண்ணி பழி வாங்க போறியா? அதுக்கு நான் கார்த்திக்கை பத்தி வீட்டுலையே சொல்லிடுவேன்” என்றாள் நிவேதிதா.
“சொல்லுறதாக இருந்தா நீ சஞ்ஜீவ் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே சொல்லி இருப்ப, நீ கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கணும் என்றா என் பாட்டி வந்தா ஓகே சொல்லு. நீ ஓகே சொன்னாதான் நான் யாழினிய கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்றான் யதுநாத்.
“யாழினி சஞ்ஜீவ் வைப் தானே” குழம்பினாள் நிவேதிதா.
“அத சொன்னா நீ என்ன லூசா நீன்னுதான் பார்ப்ப, உனக்கு உண்மை தெரியும் போது புரியும்” என்றவன் அவளிடமிருந்து விடைபெற்றான்.
அவன் எதிர்பார்த்தது போல் ஆனந்தவள்ளியும் அவன் திருமண பேச்சையெடுக்க, வல்லவராயன் வீட்டுக்கு சென்று நிவேதிதாவை பெண் கேட்கும்படி இவனே அனுப்பி வைக்க, நிவேதிதா சம்மதமும் கூறியிருந்தாள்.
ஈஸ்வரமூர்த்தி நினைத்தது நடக்கவில்லையென்றால் அடுத்து அவர் என்ன செய்வார்? தன்னை கொல்ல முயற்சி செய்வாரா?  நிச்சயமாக தன்னை கொல்ல முயல்வார். தன்னை மட்டுமல்லாது யாழினியையும் கொல்ல முயல்வார்.
அதை எவ்வாறு செய்யக் கூடும் என்று யோசித்தவனுக்கு பாக்டரியில் வைத்து அவரால் எதுவும் செய்ய முடியாது வெளியே செல்லும் பொழுது விபத்து போல் சித்தரிக்க வாய்ப்பிருக்கு அது போல் அவர் ஏதாவது செய்தால் அவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தவன் முதலில் செய்தது அவருடைய அலைபேசியையும், காரியாலய தொலைபேசியையும் கண்காணித்ததுதான்.
அவனையும், யாழினியையும் ஒரே நேரத்தில் தீர்த்துக்கட்ட ஈஸ்வர் திட்டம் தீட்டுவார் என்று யதுநாத் நினைக்க, பத்மஜா பாக்டரியில் இருந்தவன் ஈஸ்வர் பாலையாவிடம் பேசியதை கேட்டு பதறியவாறே யாழினியை அழைத்து எச்சரிக்கை செய்ய முயன்றால் அவளது அலைபேசி எடுக்கப்படவேயில்லை. அவன் தானே வேலைபார்க்கும் பொழுது அலைபேசியை சைலன்ட் மூடில் வைக்க சொல்லியிருந்தான்.
டிராபிக்கில் மாட்டிக் கொண்டு முயன்ற மட்டும் வேகமாக வந்தாலும் யாழினி தீக்குள் மாட்டியதை அவனால் தடுக்க முடியவில்லை. எப்படியோ அவள் உயிரை காப்பாற்றி விட்டான். எதிர்பார்க்காத விதமாக ஈஸ்வரமூர்த்தியின் வாயால் எல்லா உண்மையையும் கூறவும் வைத்தான்.   
“என்ன முழிக்கிறீங்க? ஸ்டோர்ரூமுக்கு தீ வச்சதுக்கு உங்க கைக்கூலிய போலீஸ் எப்பயோ தூக்கிட்டாங்க, தீ வைக்க சொன்னதுக்காக உங்க மேல கேஸ் பைல் பண்ணுவாங்க. நீங்களும் உங்க கைக்கூலியும் பேசின கால் ரெகார்டஸ் போலீஸ் கிட்ட இருக்கு” என்ற யதுநாத் சட்டையை உதறி விட்டு எழுந்து வெளியே செல்ல, மாறன் எஸ்.ஐ.கௌதமை பார்த்தான்.
அவன் பார்வையை புரிந்துகொண்டவன்  ஈஸ்வரை இழுக்காத குறையாக அழைத்து சென்றான். 
காவல்நிலையத்தில் நடந்த அனைத்தையும் காணொளி மூலம் பார்த்திருந்த சஞ்ஜீவும், யாழினியும் யதுநாத் எல்லா உண்மையையும் அறிந்திருந்தானா? என்று அதிர, அவன் தங்கள் கூடப் பிறந்த சகோதரன் இல்லையென்ற உண்மை மேலும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அவன் என் தம்பியில்ல என்ற உண்மை எனக்குத் தெரியாது யாழினி. தெரிஞ்சிருந்தா உன் கிட்ட அந்த உண்மையை நானே சொல்லி உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிருப்பேன். சாரி” அவள் தலையை தடவியவன் “எங்கப்பா யது சின்ன வயசுல எப்படியெல்லாம் ஒதுக்கி வைப்பார் என்று எனக்கு நல்லாவே தெரியும். நீ சொன்னது போல, அவனை ஒதுக்கி வைக்க, அவருக்கு வலுவான காரணம் இருக்கத்தான் செய்யுது. எப்படியோ அவர் வாயாலையே எல்லா உண்மையையும் சொல்ல வச்சிட்டோம். அவர் இனிமேல் ஜெயில்லதான்” சந்தோஷமாகவே கூறினான் சஞ்ஜீவ். 
ஆனால் யாழினியால் ஆனந்தப்பட இயலவில்லை. அவள் பிறக்கும் முன்பே கொல்ல துணிந்த தந்தை அவளை உயிருடன் விட்டு வைத்து கல்பனாவின் குழந்தையை அவளிடமிருந்து பிரித்து இவளை அவளிடம் ஒப்படைத்தது எதற்காக? யதுநாத்தும் இவளும் காதலிக்க வேண்டும் அதனால் அவன் வீட்டில் பிரச்சினையாகி ஆனந்தவள்ளியே அவனை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்றல்லவா?
இன்று தன்னால் அனைத்து உண்மைகளும் வெளி வந்து விடுமோ என்று அஞ்சி தன்னை கொல்லத் துணிந்தது மட்டுமல்லாது அந்த பழியை யதுநாத் மேல் போட்டு அவனை ஜெயிலுக்கு அனுப்ப வேறு திட்டம் போட்டிருக்கிறார். ஒரு தந்தையாக ஈஸ்வர் அவளுக்கு இழைக்க வேண்டிய அத்தனை கொடுமைகளையும் இழைத்து விட்டார்.
அவளுக்கு மட்டுமா? ஈவு, இரக்கமே இல்லாமல் யதுநாத்துக்கு எந்தமாதிரியான கொடுமையை செய்ய எண்ணியிருக்கிறார். அவர் நினைத்தபடியே அவனும் இவளை விரும்ப ஆரம்பித்து விட்டான். ஏன் தீக்கி இரையாகி கருகி இறந்து விடுவேனோ என்ற நொடியில் தன் மனமும் அவனை பார்க்க மாட்டோமா என்றுதானே துடித்தது. அம்மா என்று கல்பனாவின் ஞாபகமும் வரவுமில்லை. அண்ணா என்று சஞ்ஜீவின் ஞாபகமும் வரவில்லை.
“யது என் அண்ணன் என்று நான் என் மனதில் பதிய வைக்க முயன்ற ஒவ்வொரு நொடியும் எவ்வளவு வலித்தது ஏன் என்று இப்பொழுது புரிகிறது. அது நான் அவன் மீது கொண்ட நேசத்தினால் மட்டும்தான்.
சஞ்ஜீவ் சொந்த அண்ணன் என்று தெரியாமல் அவனை காதலிக்கிறேன் என்று கூறியது வேண்டுமானால் ஈஸ்வர் என் தந்தையா? இல்லையா? என்று கண்டுபிடிக்க என்று இருக்கலாம். திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாக வீட்டில் கூறலாம் என்று அண்ணன் கூறியும் சொந்த அண்ணனையே திருமணம் செய்ததாக நாடகமாடியது என் அண்ணன் என்று நினைத்துக் கொண்டிருந்த யதுநாத் அவசரப்பட்டு என் கழுத்தில் தாலி கட்டி விடக் கூடாது என்பதினால் தானே. அவனை நினைத்து தானே எந்த பெண்ணுமே எடுக்கக் கூடாத, எடுக்கக் தயங்கும் ஒரு முடிவை நான் எடுத்தேன். அப்படியொரு முடிவை எடுக்கக் காரணம் அவன் என் மீது வைத்திருந்த காதல் என்று நான் நினைத்தாலும், என் மனமும் அவன் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அவன் நல்லதுக்காக என்று கூறினாலும், அவன் பால் ஈர்க்கப்படும் என் மனதை தடுக்கவும் அது வழி வகுத்தது.   
அப்பா எப்பேர்ப்பட்ட சதிக்காரராக இருந்தால் இப்படியொரு நீண்டகால திட்டத்தை போட்டிருப்பார். அருணாச்சலம் சார் உண்மையை கூறாவிடில் என்னென்ன விபரீதங்கள் நேர்ந்திருக்கும்? இந்த உண்மையை அறிந்து கொண்ட பின் யதுநாத்தின் முகத்தை என்னால் பார்க்கவே முடியாது. ஒருநாளும் அவர் போட்ட திட்டம் நிறைவேற்றவே கூடாது. நான் யதுநாத்துக்கு கிடைக்கவே கூடாது” மனதுக்குள் புலம்பினாள் யாழினி.
கௌதம் அழைத்துக் கொண்டு செல்லும் ஈஸ்வரின் முன்னால் வந்து நின்ற கோமதி அவரை கன்னம் கன்னமாக அறைய அவளை யாருமே தடுக்கவில்லை.
“உன்ன எவ்வளவு நல்லவன் என்று நினச்சேன். நான் மட்டுமா என் அப்பாவையும் ஏமாத்தி…” அவளுக்கு வார்த்தையே வர வில்லை. ஈஸ்வரனின் கழுத்தை தன் இரு கைக்கொண்டு நெரித்தவள் “செத்துப்போ… செத்துப்போ…” என்று வெறிபிடித்தவள் போல் கத்த விலங்கு போட்ட கைகளோடு ஈஸ்வர் அவளை தடுக்க முயன்றார். 
சற்று நேரம் பொறுத்த மாறன் கோமதியை ஈஸ்வரிடமிருந்து பிரித்தெடுத்தான்.
மொத்த குடும்பத்தையும் அங்கு பார்த்த ஈஸ்வர் அதிர்ந்தாலும், சாதாரணமாக இருப்பது போல் நிற்க,
“இப்படி மூஞ்ச வச்சிக்கிட்டு தான் எங்களை எல்லாம் ஏமாத்தி இருக்கிறார்” என்றான் கிரி.
பத்மஜா தந்தையை பார்க்கவேயில்லை முகத்தை திருப்பிக் கொண்டாள்.
ஆனந்தவள்ளி கத்தவில்லை. ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அமைதியாக ஈஸ்வரமூர்த்தியை பார்த்திருக்க, “என்ன அத்த அமைதியாக இருக்கீங்க, உங்க பையன கொன்னதுக்கு நீங்க நாலு வார்த்த நறுக்குன்று கேக்க மாட்டீங்களா? ரெண்டு அடி அடிக்க மாட்டீங்களா?” அந்த நிலையிலும் ஆனந்தவள்ளியை பார்த்து நக்கல் செய்தார் ஈஸ்வர்.
“உன்ன பார்த்தப்போவே உன்ன எனக்கு பிடிக்கல. அது என் பொண்ணு உன்ன காதலிச்சதால என்று இத்தனை வருஷம் எனக்கே நான் சொல்லிக் கொண்டாலும், அதையும் தாண்டி எதுவோ ஒன்று உன் மீது நம்பிக்கை வர விடாம பண்ணிக் கொண்டே இருந்தது. அதனாலதான் கம்பனி பொறுப்பைக் கூட உன் கிட்ட கொடுக்காம இன்னைக்கு வரைக்கும் என் கிட்ட வச்சிருக்கிறேன்” என்றாள் ஆனந்தவள்ளி.
“சொத்து என்ன அத்த சொத்து. உங்க கிட்ட இருந்தாலும், நான் அனுபவிச்சு கிட்டு தானே இருந்தேன். என்ன கொஞ்சம் சுதந்திரமா முடிவெடுக்க முடியாம, செலவு பண்ண முடியாம இருந்தது அவ்வளவுதான். ஆனா உங்க ஏமாளி பொண்ண வச்சி எனக்கு தேவையானதை நான் பண்ணிக்கிட்டேன்” என்றதும் கோமதி முறைத்தாள்.
“என்ன மாமா உயிரோடு இருந்திருந்தா நான் நினைச்சதெல்லாம் நடந்திருக்கும். என் கெட்ட நேரம் அவர் போய் சேர்ந்துட்டாரு. நீங்க இருந்துட்டீங்க” என்றார் ஈஸ்வர்.
“அப்போ எங்கப்பாவையும் நீதான் கொன்னியா” கோமதி மீண்டும் அவர் மீது பாய,
“சே சே அவர் நல்லவர், எனக்கு சப்போர்ட் பண்ணுறவர் அவர போய் கொல்ல நினைப்பேனா? உங்கம்மாவையும் யதுநாத்தையும் கொல்லலாம்னு நினச்சேன். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பரலோகம் போனா சந்தேகம் வராதா? அப்பொறம் போலீஸ், விசாரணை என்று வீண் பிரச்சினையை உண்டு பண்ணும் என்று விட்டுட்டேன்” என்றார்.
அனைவரும் “அடப்பாவி…” என்று முறைத்துக் கொண்டிருக்க,
“நீ செய்த அனைத்துக்கும் சாகுறவரைக்கும் ஜெய்ல இருந்தாலும் பத்தாது. உனக்கெல்லாம் சீக்கிரம் மரணம் வரவும் கூடாது. தினம் தினம் சாகுறது போல கொடிய வேதனையை நீ அனுபவிக்கனும்” இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வேதனையை கேவலாக வெளியிட்டவாறே சாபமிட்டாள் ஆனந்தவள்ளி.
யதுநாத் முத்தம்மாவை அணைத்து ஆறுதல் படுத்த “என்ன மன்னிச்சுடு யது. வருஷா வருஷம் உங்கப்பாக்கு உன் கையால திதி கொடுக்க வச்ச என்னால, அவன்தான் உன் அப்பான்னு சொல்ல முடியல. ஒரு அயோக்கியன உன் அப்பான்னு சொல்ல வச்சிட்டேன். அதுவும் உன் அப்பாவை கொன்னவன” அவனை கட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தினாள் முத்தம்மா.
“என் நல்லதுக்கு தானே பாட்டி உண்மையை சொல்லாம இருந்தீங்க. உங்க மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும். அவர் பண்ணதுக்கு அவர் அனுபவிப்பார். வாங்க வீட்டுக்கு போகலாம்”   
 ஈஸ்வரமூர்த்தியென்ற மாமனிதர் கைது. சொத்துக்காக செல்வந்தரின் மகளை திருமணம் செய்து கொண்டவர் ஆசைக்காக மற்றுமொரு பெண்ணை மணந்துக் கொண்டுள்ளார். அப்பெண்ணுக்கு பிறந்த மகனை செல்வந்தரின் மகளுக்கு பிறந்ததாக கூறி இத்தனை வருடங்களாக வளர்த்தும் வந்துள்ளார். இரண்டாவதாக பிறந்த மகளை கொல்ல முயற்சி செய்த பொழுது இரண்டாவது மனைவி உண்மையை அறிந்து கொண்டதால் அவரை கொன்று விட்டார்.
இன்றைய நாளிதழில் ஈஸ்வரமூர்த்தி கைதான செய்திதான் பரபரப்பான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தது.
“நான் அப்போவே சொன்னேன். நமக்கு இந்தக் குடும்பம் வேண்டாமென்று. நல்லவன், வல்லவன், நாணயமானவன் என்ற ஈஸ்வரோட உண்மையான முகத்தை பார்த்தீங்களா? இப்பவும் நம்ம பொண்ண அந்த வீட்டு மருமகளாகத்தான் அனுப்பப் போறீங்களா?” நிவேதிதாவின் அன்னை கணவனிடம் கோபமாக பேச
“அப்பா உங்க விருப்பம் தான் என் விருப்பம் என்று நீங்க சொல்லுற எல்லாத்துக்கும் நான் அமைதியா சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போ நிலைமை மாறி விட்டது”
“ஒன்னும் மாறல. சஞ்ஜீவ இல்லையே உனக்கு கட்டி வைக்க போறேன். யதுநாத்த. அவன் ஆனந்தவள்ளி அம்மாவோட சொந்த பேரன்” என்றார் வல்லவராயன்.
“யாரு அவனா? அப்பன் ஒரு மெண்டல். முறையில்லாமல் பிறந்தவன் அவனுக்குத்தான் என் பொண்ண கொடுக்க போறீங்களா?” கத்தினாள் கலைவாணி.
“அப்பா யதுநாத்துக்கு எந்த குறையுமில்லைதான். நமக்கு பிறக்கப் போகும் பிள்ளைகள் குறையில்லாமல் பிறப்பார்கள் என்று என்ன நிச்சயம்? அவர்கள் அவனுடைய அப்பாவை போல் பிறந்து விட்டால் என்ன செய்வது?” என்று கேட்ட நிவேதிதா மனதால் யதுநாத்திடம் மன்னிப்பும் கேட்கலானாள்.
நேற்று மாலையே தொலைக்காட்ச்சி செய்தியில் ஈஸ்வரமூர்த்தி கைதான செய்தி ஒளிபரப்பட்டிருக்க, நேற்றிரவு யதுநாத் நிவேதிதாவை அழைத்து பேசியிருந்தான்.
“வாழ்க்கையில் நமக்கு சந்தர்ப்பம் சில நேரங்கள் தான் கிடைக்கும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க பாரு” என்றான்.
“அப்பா கார்த்திக் நீங்க பார்த்து வளர்ந்த பையன் தானே. சொத்துப்பத்து இல்லையெங்குறதை விட அவன்கிட்ட எந்த கெட்டப் பழக்கமும் இல்லையே. அவன் என்ன நல்லா பார்த்துப்பான். எனக்கும் அவனை பிடிக்கும். நான் அவன் கூட வாழ்ந்தால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பேன்” என்றாள்.
யதுநாத் இல்லையென்றால் வேறொரு வசதியான வீட்டுப் பையனை கொண்டு வந்து நிறுத்துவார். இன்றே சொல்லிவிட வேண்டும் என்று கூறி விட்டாள்.
“பணம், காசு, அந்தஸ்து என்று பார்க்குறீங்க பாத்தீங்களா? அந்த ஈஸ்வர் எப்படிப்பட்டவன் என்று? அதே போல இந்த சமூகத்துல உங்களை போல எல்லோரும் நேர்மையா உழைக்கிறவங்க என்று சொல்ல முடியுமா? என் அண்ணன் சொத்து சேர்த்து வைக்கல. நல்லவர், நேர்மையானவர். உண்மையானவர். நாலு பேருக்கு உதவி செய்யக் கூடியவர் என்ற நல்ல பெயரை சேர்த்து வச்சிருக்காரு. அவரை பார்த்துதான் எங்க வீட்டு படியேறி வந்து என்ன பொண்ணு கேட்டீங்க. பெண்ணெடுக்கலாம். பொண்ணு கொடுக்க கூடாதோ? யாரோ எவனோ? எப்படிப் பட்டவனோ என்று பொண்ணை கட்டிக் கொடுத்து தினம் தினம் பொண்ணு சந்தோசமா இருக்காளா? என்று மனசுக்குள்ள புழுங்குறதை விட என் அண்ணன் பையனுக்கு கட்டி வைங்க, என் பொண்ண ஒழுங்கா பாத்துக்கலைனா நானே அவன் காத திருகுறேன்” என்றாள் கலைவாணி.
“அம்மா…” என்று நிவேதிதா முறைக்க, வல்லவராயன் யோசிக்க ஆரம்பித்தார்.
 வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் கிடந்தனர். ஒருவழியாக ஈஸ்வரனின் பிரச்சினை ஓய்ந்தது. முத்தம்மாவிடம் பேசி யாழினியை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான் யதுநாத்.
“வல்லவராயன் போன் பண்ணினாரு அவர் பொண்ணுக்கு அவர் சம்சாரத்தோட அண்ணன் பையனையே பேசி முடிச்சிட்டாராம்” ஆனந்தவள்ளி தகவலாக குடும்பத்தாருக்கு கூற,
“இது ஏற்கனவே தெரிஞ்ச செய்தி தானே” என்பது போல் அமைதியாக நின்றிருந்தான் யதுநாத்.
“பாட்டி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” யதுநாத் கூறும் பொழுதே
“பாட்டி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்று ஆரம்பித்தாள் பத்மஜா.
“என்ன?” எனும் விதமாக அனைவரும் அவளை பார்க்க,
“நானும் இவரும் குழந்தைகளோடு தனியா போய்டலாம் என்று இருக்கோம்” என்றாள்.
“என்ன பேசுற?” கோமதி எகிற
“அத்த இது அவ முடிவு இல்ல. என் முடிவு. மாமாவ பிடிக்காததால பாட்டி என்ன இந்த வீட்டுக்குள்ளயே விட்டதில்ல. பத்துவ கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டேன். கம்பனிலையும் பொறுப்புகளைக் கொடுத்தீங்க. யது யார் என்ற உண்மை எனக்கு தெரியும். பாட்டி மெல்ல மெல்ல அவனுக்கு எல்லா பொறுப்பையும் கொடுக்க முனைகிறாங்க, பத்துவுக்கும், சஞ்ஜீவுக்கும் எந்த சொத்தையும் கொடுக்க மாட்டாங்க என்று மாமாகிட்ட நானே அடிக்கடி புலம்பி இருக்கேன். அப்போ நல்லவர் மாதிரி என் வாய அடைப்பாரு. அவர் மறுமுகம் இப்படி இருக்கும் என்று சத்தியமா நினச்சிக்க கூட பார்க்கல.
எங்கம்மா சொந்தம் விட்டுப் போக்க கூடாது என்றுதான் பத்மஜாவை நான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று ஆசைபட்டாங்க. அவங்க ஆசைப்படி பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு எந்த சொத்தும் வேணாம். நான் படிச்ச படிப்புக்கு ஒரு வேலையை தேடுகிறேன்”
“என்ன பேசுற? வாடகை வீட்டுல வாய்க்கும், வயித்துக்கு பத்தாம அல்லல் பட போறீங்களா? குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வாங்க? குழந்தைகளை பார்க்காம எங்களால இருக்கத்தான் முடியுமா? ஸ்கூல் பீஸ், அது, இது, லொட்டு லொசுக்கு என்று எவ்வளவு செலவு இருக்கு” கோமதி கோபமாக பேச ஆனந்தவள்ளி அவளை கைநீட்டி தடுத்து அமைதி படுத்தினாள்.
“எனக்கு பொறந்தது ஒரு பொண்ணு ஒரு பையன்தான். என் பேர பசங்களுக்கு இடையில நான் எந்த வித்தியாசமும் பார்த்ததில்ல. பொண்ணா பொறந்துட்டாளேன்னு பேத்தியை நான் ஒதுக்கினதும் இல்ல. அவ பேர்ல பாக்டரி ஆரம்பிச்சேன். அது அவளுக்குத்தான். பண்ணை வீடும் அவ பேர்லதான் எழுதி இருக்கேன். தனியாக இருக்கணும் என்றா அங்க போய் இருங்க. ஈஸ்வர் பண்ணதுக்கு வேற யாரும் பொறுப்பாக முடியாது. எதையெதையோ நினைச்சி ஆளாளுக்கு ஒவ்வொன்னத்தையும் பண்ணி என் நிம்மதிய குழப்பாதீங்க” ஆனந்தவள்ளி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே நுழைந்தான் சஞ்ஜீவ்.
“நீ என்னமோ சொல்லப் போனியே ஆனந்தவள்ளியின் பார்வை யதுநாத்தின் புறம் இருக்க,
“அதான் சஞ்ஜீவும் யாழினியும் அண்ணன் தங்கை என்ற உண்மை தெரிஞ்சி போச்சே. யாழினி ஈஸ்வரோட பொண்ணு. அதை நிரூபிக்க சஞ்ஜீவ கல்யாணம் பண்ணது போல ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சாங்கன்னு புரிஞ்சி போச்சே. இப்போ நான் யாழினிய கல்யாணம் பண்ணிக்கொள்ளுறதுல எந்த பிரச்சினையுமில்லையே” என்றான்.
பேரனை முறைத்த ஆனந்தவள்ளி “அவ ஈஸ்வரோட பொண்ணு என்ற ஒன்னு போதாதா? நான் இந்த கல்யாணம் வேணாம் என்று சொல்ல. அது மட்டுமில்லாம எங்கயாவது அண்ணனும், தங்கையும் கல்யாணம் பண்ணது போல நாடகம் ஆடுவாங்களா? ஊரு, உலகம் என்ன பேசும், நம்ம சொந்தபந்தம் காரி துப்பமாட்டாங்க? நான் உசுரோட இருக்குறவரைக்கும் அவன் பொண்ணு இந்த வீட்டு மருமகளாக முடியாது” ஆவேசமானாள் முத்தம்மா.
“என்ன பாட்டி நீங்க, கல்யாணம் பண்ணதாக சொன்னாங்க, அந்த பொண்ணு கழுத்துல தாலிய கூட கட்டிக்கிட்டு வரல” பத்மஜா யாழினிக்காக பேச
“என் பொண்ணு வாழ்க்கையை பங்கு போட்டவ பொண்ணு இந்த வீட்டு மருமகளா? ஒரு நாளும் நடக்காது”
“அத்த கொஞ்சம் சொல்லுங்க” கிரி கோமதியை ஏறிட, என்ன சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தாள் அவள்.
“அப்போ நான் கிளம்புறேன். நானும் அந்த அம்மாக்குத்தான் பிறந்தேன். இந்த வீட்டில் அம்மா இருப்பாங்க, பாட்டி இருப்பாங்க. என் தங்கைக்கும் இடமிருக்கும் என்று வந்தேன். என் தப்புதான். என்னதான் எங்கப்பா அம்மாவ கொன்னே இருந்தாலும், என் அம்மா அப்பாக்கு ரெண்டாம் தாரம் தானே. என் தங்கையை கொல்ல பார்த்திருந்தாலும் அவள் அவருக்கு பிறந்தவர் தானே. நான் மட்டும் என்னவாம். இந்த அம்மாகிட்ட பால் குடிச்சி வளர்ந்திருந்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தது அந்த அம்மாதான். அது இல்லையென்றாகி விடுமா? உங்களுக்கு யது இருக்கான். என் தங்கைக்கு யாருமில்ல. நான் மட்டும்தான் இந்த நேரத்துல நான் அவ கூடத்தான் இருக்கணும்” என்ற சஞ்ஜீவ் வெளியேற
“டேய் சஞ்ஜீவ் நில்லுடா, நில்லுடா…” என்றவாறே அவன் பின்னால் ஓடினாள் கோமதி.
யாழினியை ஒருகாலமும் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சஞ்ஜீவ் தான் தூக்கி வளர்த்த பேரன். பாசம் இல்லாமல் போய் விடுமா? என்ன செய்வது என்று திகைத்து அமர்ந்து விட்டாள் முத்தம்மா.

Advertisement