Advertisement

அத்தியாயம் 2
கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு தொடர்பில் இருப்பதாக ஒருசிலர் பேசினாலும் ஒருசிலர் அதை நம்பவில்லை. கல்பனாவை அடைய முடியாத ஆண்கள்தான் இவ்வாறு பேசுவதாக பெண்களும், அவள் மீது பொறாமை கொண்ட பெண்கள்தான் இவ்வாறு பேசுவதாக ஆண்களும் கூறினர். ஆனால் யாரும் அவளிடம் நேரடியாக வந்து உனக்கும் முதலாளிக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்கும் அளவுக்கு யாரிடமும் கல்பனாவும் நெருங்கிப் பழகவுமில்லை.
மாறாக யாழினி பாடசாலை செல்லும் பொழுதும், வரும் பொழுதும் இதுநாள்வரை இல்லாத கயவர் கூட்டம் அவளை சுற்றி வட்டமிட்டு கண்டபடி பேச, அதை பார்த்த பெண்கள் சிலர் அவர்களை துரத்தியும் அடித்தனர். கல்பனா ஒழுங்காக இருந்தால் இவர்கள் எதற்கு இந்த சின்ன பெண் பின்னால் அலைவார்கள் என்று ஒரு பெண் பேச, அதற்கு மற்றுமொரு பெண்ணோ அவள் சரியாகத்தான் இருக்கிறாள் என்று கல்பனாவுக்கு வக்காலத்து வாங்கினாள்.
இவ்வாறுதான் ஈஸ்வரமூர்த்தி பற்றி யாழினிக்கு தெரியவந்தது. அன்னை மீது நம்பிக்கை இருந்தாலும், அவள் இங்கு தனியாக இருந்தால் இந்த கயவர்கள் அவளை எந்த நிலைமைக்கு ஆளாக்குவார்கள் என்றெல்லாம் யாழினி சிந்திக்கவில்லை.
“சென்னைக்கு வந்து எங்கே தங்குவது? நான் ஹாஸ்டல்லயே தங்கிக்கிறேன். நீ ஊர்லயே இரு. தெரியாத ஊர்ல நீ எப்படி இருப்ப? யாரோ என்னவோ பேசுறதுக்காக ஊர விட்டு வரணுமா?” யாழினி கல்பனாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.
இவள் காதுக்கும் இந்த விஷயம் வேற வந்திருக்கா? கொஞ்சம் அதிர்ந்த கல்பனா, யாழினி அதை நம்பவில்லை என்றதும் நிம்மதி அடைந்தாள். தன் மகள் தன்னை நம்பியது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் எந்த விதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது
“ஏன் சென்னை உனக்கு ரொம்ப தெரிஞ்ச ஊரா? தனியா போய் நீ சமாளிச்சு வாழ்ந்துடுவியா? உன்னால முடியுமா?” தான் எவ்வளவு வாழ்க்கையில் பட்டுட்டோம் என்பதை ஒரு நொடி நினைத்துப் பார்த்தவள் தன் மகள் அப்படி ஒரு நிலையில் இருக்கக் கூடாது என்றுதான் பேசினாள்.
அன்னை தன்னை பொத்திப் பொத்தி பாதுகாப்பது தெரியாமல் யாழினி “ஆமா நான் வழி தவறி போறது போலவே பேசு. எத்தனை நாளைக்குத்தான் உன் கைய புடிச்சுகிட்டு போறதாம்” என்று முணுமுணுக்க,
“என்னடி” கல்பனா கோபமாக கேட்டாள்.
“சென்னைக்கு போறது என்றா சும்மாவா? வாடகைக்கு வீடு தேடணும். அதுவும் காலேஜுக்கு பக்கத்துல. வீடு கிடைச்சாலும் மூணு மாசம் இல்லனா ஆறு மாசம் முன்பணம் கொடுக்கணும். அங்க போய் நீ என்ன வேல பார்க்க போற? நீ வேற வேலை தேடணும். நீ சம்பாதிக்கிறது வாடகைக்கும், வீட்டு செலவுக்கும் சரியா இருக்கே! கையிருப்பும் இல்லாம இத்தனையும் எப்படி செய்யிறது?” கைகளை கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து கொண்டவள் அன்னையை தீர்க்கமாக பார்த்தாள்.
“உன் காலேஜுல இருந்து அஞ்சு கிலோமீட்டருக்குள்ள ஒரு பக்டரில எனக்கு வேல பாத்திருக்கேன். வீடும் பாக்டரிக்கு பக்கத்துலதான். வீடும் பிரச்சினை இல்ல. முன்பணம், வாடகை எல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு” முறைத்தவாறே சொன்னாள் அன்னை.
இதற்கு மேல் அன்னையோடு பேச முடியாது அடிதான் விழும் என்று புரிய, “எதுவோ பண்ணு” சென்னை செல்ல ஆயத்தமானாள் யாழினி.
ஒருவாறு யாழினி பாடசாலை முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்க, அவள் என்ன படிக்கிறாள் என்று கூட கல்பனாவுக்கு தெரியவில்லை. ரொம்ப செலவாகுமோ என்று அச்சத்தோடு கேட்க, B.com தான் படிக்கிறேன். எடியூக்கேஷன் லோன் வாங்கி இருக்கேன் நான் பாத்துக்கிறேன்” என்றாள்.
சொன்னது போல் சும்மா இருக்காமல் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் வகுப்பும் எடுத்தாள். ஞாயிறு அன்று ஒரு சூப்பர் மார்க்கட்டில் வேலைக்கும் சேர்ந்தாள்.
சென்னை சூழ்நிலை, காலநிலை, மக்கள் என்று எல்லாவற்றுக்கும் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ள யாழினிக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டன.
ஒருவாறு காலேஜில் தன்னை பொருத்திக் கொண்டவளுக்கு பாடசாலையில் போன்றே யாருடனும் ஒட்ட முடியவில்லை. யாரை பார்த்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுது அப்பா பெயரோடு அறிமுகப்படுத்திக்கொள்ள, இவள் மட்டும் அன்னை பெயரோடு அறிமுகமானாள். 
யாரும் எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் எங்கே பேசினாள் “உன் அப்பா பேர் என்ன? என்று கேட்பார்களோ என்ற அச்சத்தில் ஒதுங்கியே நின்றாள்.
பாடசாலைக்கு நடந்தே சென்று வந்தவளுக்கு காலேஜுக்கு பஸ்ஸில் சென்று வருவது புதிதாகவும், வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது.  மழை வந்தால் தூரல் அவள் முகத்தில்பட்டு உடல் சில்லிட அதை ரசிக்கலானாள். ஜன்னலோரம் அமர்ந்தவளின் கூந்தல் காற்றில் ஆட முகத்தில் விழுவதும், அவள் கூந்தலை காதோரம் ஒதுக்குவதும் என்று கூந்தலோடு விளையாடினாள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ ஆரம்பித்தாள்.
ஆனால் அவள் காலேஜ் சேர்ந்த நொடியிலிருந்து இரண்டு கண்கள் அவளை ரசித்துக் கொண்டிருந்ததை யாழினிதான் அறிந்திருக்கவில்லை. அவளது செய்கைகளைச் சுவாரஸ்யமாகப் பார்த்த அவனது விழிகள் பொக்கிஷமாக மனதில் பத்திரப்படுத்திக் கொண்டன.
என்னதான் எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது என்று மேலோட்டமாக தோன்றினாலும் யாழினியின் ஆழ்மனதில் ஈஸ்வரமூர்த்தியை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டுதான் இருந்தன. விடை காணாத இந்த புதிருக்கு ஊரில் இருந்திருந்தால் விடை கண்டிருக்கலாம். இங்கிருந்துக் கொண்டு எவ்வாறு விசாரிப்பது ஒன்றும் செய்ய இயலாது. சோகமானாள் யாழினி.
இருக்கும் பிரச்சினை பத்தாதென்று கல்லூரியில் சீனியர் ஒருவன் அவளை காதலிப்பதாக வந்து நின்றான்.
அவன் வேறு யாருமல்ல முதன் முதலாக அவள் கல்லூரியினுள் நுழைந்த பொழுது அவளை ரேகிங் செய்த சீனியர் குரூப்பில் இருந்தவர்களில் ஒருவன்.
கல்லூரியில் ராகிங் செய்வார்கள் என்று தெரியும். இவர்களைப் பார்த்ததும் ஒதுங்கிப் போனவளைக் கைதட்டி அழைத்தும் இவள் காது கேளாதவள்போல்தான் நடந்தாள்.
ஓடிவந்து சூழ்ந்து கொண்டால் இவளும்தான் என்ன செய்வாள்?
“என்ன கூப்டுறது காதுல விலல? நீ பாட்டுக்கு போற” ஒருவன் எகிற
“கூப்டீங்களா அண்ணா. வேற யாரையோ… உங்க ப்ரெண்ட்ஸ்ஸனு… நினச்சேன்” பவ்வியமாகப் பதில் சொன்னாள் இவள்.
“இதோடா அண்ணணாமே” இன்னொருவன் சொல்ல
“எங்களுக்கெல்லாம் அண்ணன் ஒருவன் இருக்கான் வந்து ஸலாம் போட்டு போ…” என்றான் ஒருவன்
இவளும் பயந்தவாறுதான் போனாள்.
இவளை அவன் ரசித்துப் பார்த்ததும், அவளை சுவாரஸ்யமாக பார்த்ததும் இவளுக்குத்தான் புரியவில்லை.
“உன் பேரென்ன”
“யாழினி அண்ணா”
“அய்யராத்து பொண்ணா? அண்ணான்னு கூப்டுற” என்று கலாய்க்கக் கூட்டமே சத்தமாக சிரித்தது.
“இல்ல அண்ணா” புத்தகங்களை பற்றிப் பிடித்தவாறு மருண்ட பார்வை பார்த்தவளைப் பார்த்த நொடியே அவனுக்கு பிடித்துத்தான் போய் இருந்தது.
என்ன படிக்கிறாள்? எந்த கிளாஸ் என்றெல்லாம் விசாரித்தவனின் பார்வை மூக்குக்கண்ணாடிக்குள் இருந்த அவள் விழிகளை நேர்பார்வை பார்த்திருந்தன.
“டேய் தங்கச்சிய பத்திரமா வழியனுப்பி வைங்க” என்று சொல்ல கூட்டம் மீண்டும் “ஓஹ் ஒஹ்” என்றது.
இவர்களின் பேச்சின் அர்த்தம் இவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அங்கிருந்து வந்து விட்டால் போதும் என்றிருக்க, அவளை போகச் சொன்னதும் சிட்டாக பறந்திருந்தாள். 
அவன் பெயர் கூட இவளுக்குத் தெரியாது. இவள் காலேஜ் சேர்ந்து நான்கு மாதங்கள் கூட முழுவதாக ஆகவில்லை. அதற்குள் காதல், கத்தரிக்காய் என்று வந்து நிற்கின்றான்.
முகத்தில் அடித்தது போல் அவள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினாலும் அவன் கேட்பது போல் தெரியவில்லை. அவள் பஸ் ஏறும் பொழுது காட்ச்சி கொடுப்பவன் அவள் கல்லூரி பஸ்ஸில் எறியபின் அவளோடு ஏற ஆரம்பித்தான். அவனும் அவன் நண்பர்களும் இவளுக்காகப் பாடல்கள் பாட, இவளோ அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இவளுக்காகத்தான் கல்லூரியிலும் தோழிகள் கிடையாதே. நெருங்கி வருவோரிடமும் விலகித்தான் இருந்தாள். அதனாலேயே அவனுக்கும் இவளை எவ்வாறு நெருங்குவது என்றும் புரியவில்லை.
ஆனாலும் விடாமல் இவள் செல்லும் இடமெல்லாம் செல்ல ஆரம்பித்தான். இவள்தான் அவனைக் கண்டு கொள்ளவில்லை. அவனும் விடுவதாக இல்லை.
காதலைச் சொன்னான் இவள் மறுத்து விட்டாள். செல்லும் இடமெல்லாம் வந்தாலும் அவனாக வந்து பேசவில்லை. அதனால் இவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அவள் வேலை பார்க்கும் சூப்பர்மார்க்கட்டிக்கு வர ஆரம்பித்ததும்தான் யாழினிக்கு உதற ஆரம்பித்தது. இவன் ஏதாவது பிரச்சினை செய்யப் போய் வேலையை விட்டுத் தூக்கி விடுவார்களோ? என்ற அச்சம் வேறு. ஆனால் அவன் அப்படி எதுவும் செய்யவில்லை. சுற்றி சுற்றி அவளை சைட் அடித்து விட்டு எவ்வளவு பேர் வரிசையில் நின்றாலும் இவளிடம் வாங்கிய பொருளுக்கு பில்லும் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவான்.
அவள் பில் போடும் பொழுது சரியாக அவனது அலைபேசி அடிக்கும். “ஆ முத்தம்மா சொல்லு முத்தம்மா… ஆ வாங்கிட்டேன். ஓஹ்… யாழி பேசுறாளா? சொல்லு யாழி உனக்கு என்ன பிடிக்கும்? சாக்லாட்டா? ஐஸ் கிரீமா? இல்ல வேற ஏதாவது என்றாலும் சொல்லு நான் வாங்கித் தரேன்” அவள் பில் போட்டு முடித்து பையைக் கையில் கொடுக்கும் வரைக்கும் பேசுபவன். “வரேன்” என்று விட்டுக் கிளம்புவான்.
அந்த யாழினியே இவள்தான் என்று அறியாமல், “அப்பாடா அவன் வம்பு செய்யவில்லை” என்றெண்ணியவாளாக அவனையும் பாராமல் காரியத்தில் கண்ணாக பில் போட்டு முடித்தவள் அடுத்த வாடிக்கையாளரை நோக்க ஒரு பெருமூச்சோடு வெளியேறுவான் இவன்.
வீடுவரை அவன் வருவதில்லை. அது ஏன் என்று அவளுக்கும் புரியவில்லை. அறிந்துகொள்ளும் எண்ணமோ, ஆர்வமோ அவளுக்கு இல்லை. இருந்திருந்தால் அவனிடம்தானே கேட்டிருக்க வேண்டும். கேட்டால் பேசிப் பழகச் சந்தர்ப்பம் அமைந்திருக்கும். அவன் யாரு? என்ன? என்று அவனைப் பற்றி அறிந்து கொண்டு, அவனை புரிந்துகொள்ள வாய்ப்பு கூட அமைந்திருக்கும். இதயத்துக்கு இரும்புத் திரை போட்டு வைத்திருக்கும் யாழினியின் மனதை அவன் திறப்பானா? 
காஜேஜில் இறுதியாண்டில் படிக்கும் அவன் படிப்பை முடித்து காலேஜை விட்டுச் செல்லும் நாளும் வந்தது.
இத்தனை நாள் பொறுமையாக இருந்தவன் கண்டீனுக்கு சென்று கொண்டிருந்தவளின் இடதுகையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு யாருமில்லாத இடத்துக்குச் சென்றான்.
“ஏய் என்ன பண்ணுற? கைய விடு” என்று இவள் கத்த
“கொஞ்சம் நேரம் அமைதியா இருடி. பேசத்தான் கூட்டிகிட்டு வந்தேன்” என்றான் அவன்.
“உன் கிட்டப் பேச எனக்கு ஒண்ணுமே இல்ல” என்றவள் அவன் பிடித்திருந்த கையை விடுவித்துக் கொள்ள மறுகையைக் கொண்டு முயற்சி செய்ய, அவள் திமிறியதில் மூக்குக்கண்ணாடி சரியவே கண்ணாடியைக் கழட்டி கையில் வைத்துக் கொண்டாள்.
“ஆனா எனக்கு இருக்கே. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டி. நான் உன்ன ரொம்ப லவ் பண்ணுறேன்டி. ஏன்டி என்ன படுத்துற? என் பீலிங்க்ஸ புரிஞ்சிக்கவே மாட்டியா?” யாராவது வந்து விடுவார்களோ என்று குரலில் ஒருவித பதட்டமும், யாராவது பார்த்தால் தப்பாக நினைத்து விடுவார்களோ அதனால் இவள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற கவலையிலும் இவள் தன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் முரண்டு பிடிக்கிறாளே அவளுக்குப் புரிய வைக்கவும் உருகியவாறே பேசியவன் அவள் மூக்குக்கண்ணாடியைக் கழட்டவும் அவள் கண்களையே பார்த்திருந்தான்.
யாழினியைப் பற்றியோ, அவள் குடும்பத்தைப் பற்றியோ கல்லூரியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. அறிந்துகொள்ளும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை. அதனாலே இவன் தன் பின்னால் காதல் என்று வந்து நிற்கின்றான் என்று எண்ணினாள் யாழினி.
தான் அப்பா பெயர் தெரியாதவள் என்று கூறினாலே போதும் தலை தெறிக்க ஓடிவிடுவான் இவன். அவனை இளக்காரமாகப் பார்த்தவள் “நான் காலேஜ் வந்தது படிக்க, காதலிக்க இல்லை” என்று சொல்ல அவனுக்கோ இவளை இன்னுமே பிடித்து விட்டது. 
“நான் மட்டும் காதலிக்கவாடி வந்தேன். நானும் படிக்கத்தான் வந்தேன். உன்ன பார்த்த பிறகுதான் இப்படி ஆகிட்டேன்” என்றவனுக்கோ புன்னகைத் தானாக மலர்ந்திருக்க யாழினி அவனை நன்றாக முறைத்தாள்.
இவள் முறைக்க அவன் இவள் கண்களை ரசிக்கலானான்.
“நீ லூஸானதுக்கு நான் பொறுப்பாக முடியாது” இவள் கோபமாகப் பேச
அவள் கோபம் கூட இவனுக்குக் காதலாகத் தெரிய “நீதான் காரணம் என்று சொல்லுறேன். பொறுப்பாக முடியாது என்று பேசினா எப்படி? கூடவே இருந்து குடித்தனம் பண்ணி பைத்தியத்துக்கு வைத்தியம் பாரு” பற்றி இருந்த கையை விடாமல்தான் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருந்தான் அவன்.
காதல்மொழியெல்லாம் யாழினிக்குப் புதிது. ஒரு சினிமாவுக்குத்தான் போய் இருக்கின்றாளா? அல்லது ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாடல்தான் கேட்கின்றாளா? லைப்ரரியில் புத்தகங்களைத் தான் படிக்கின்றாள். கதை புத்தகங்களை படித்திருந்தாலாவது காதலைப் பற்றி அறிந்து கொண்டு அவன் உணர்வுகளை புரிந்துகொண்டிருப்பாள்.
களிமண்ணிடம் போய் காதலைச் சொல்வதும் இவளிடம் காதலைச் சொல்வதும் ஒன்று என்று அறியாமல் பினாத்திக் கொண்டிருப்பவனை என்னவென்று சொல்வது?
“இங்க பாரு ஒழுங்கு மரியாதையா என் கைய விடு”
“நீ எனக்குப் பதில் சொல்லு. காலேஜ் முடிச்ச பிறகு உன் வீட்டுல கல்யாணத்துக்கு மாப்பிள பார்ப்பாங்க. அது ஏன் நானாக இருக்கக் கூடாது”
“திருமணமா? அவளுக்கா? நடந்திடுமா? அதைப் பற்றி அவள் சிந்திக்கக் கூட இல்லையே. அப்படியே நடந்தாலும் இவனுடனா? அன்னை சம்மதிப்பாளா? முதலில் இவன் வீட்டில், இவன் குடும்பத்தார் சம்மதிப்பார்களா? ஏன் அப்பா இல்லாதவள் என்றால் இவனே சம்மதிப்பானா?” என்றெல்லாம் இவள் எண்ணம் ஓடிக்கொண்டிருக்க,
“என்னடி செல்லம் நம்ம வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க என்றுதானே யோசிக்கிற? பேசமா தப்பு பண்ணி குழந்தையோட போய் நிப்போமா? அவங்களே கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க” அவள் சீரியஸ்ஸாக சிந்திப்பதைப் பார்த்து அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவரக் கேலி தான் செய்தான்.
ஆனால் அவளுக்கு அவனே அந்நியன். அவன் சொல்பவை எல்லாம் கேட்டுச் சிரிப்பு வருமா? முதலில் அவன் செய்வது கேலி என்று கூட அவளுக்குப் புரியவில்லை. கோபம்தான் வந்தது. மூக்குக்கண்ணாடியை வைத்திருந்த கையாளையே அவனை அறைந்தாள். மடித்திருந்த கை என்பதனால் அடி என்னவோ பலமாகப் படவில்லை. ஆனால் கண்ணாடியின் மடிப்புப் பகுதி கன்னத்தைப் பதம் பார்த்திருக்க வலியில் துடித்தவன் “ரொம்ப பண்ணற நீ உன்ன…” கோபப்பட வேண்டியவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
சத்தியமாக யாழினி இதை எதிர்பார்த்திருக்க மாட்டாள். திமிரிக் கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் கண்ணாடியைப் பிடித்திருந்த கையினாலையே கன்னத்தைப் பிடித்தவாறு அவனையே பார்த்திருந்தாள். 
அதிர்ச்சி மட்டுமல்ல அவள் உடல் முழுவதும் மின்சாரம் தாக்கியது போல் ஓர் உணர்வு அது என்னவென்று கூட அவளால் சொல்லத் தெரியவில்லை. என்னதான் ஒரு ஆடவன் கையை பற்றி இருந்தாலும் வராத அச்சமும், பதட்டமும் அவளைத் தொற்றிக் கொண்டு இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தை எடுக்க மொழி மறந்து நின்றிருந்தாள்.
விழிவிரித்துப் பார்த்தவளின் அழகில் மயங்கியவன் அவள் அனுமதி இல்லாமலே அவள் இதழ்களைக் கவ்வி இருந்தான்.
அவளோடு பேச வேண்டும் என்றுதான் அழைத்து வந்தான். முத்தமிட வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. தனிமை கொடுத்த தைரியத்தை விட ஆசை காதலியின் பார்வைதான் அவனைத் தூண்டி இருந்தது.
அதிர்ச்சியையும் தாண்டிய இதயம் வேகம் கூட யாழினிக்கு அவனைத்  தள்ளி விட வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை.
அந்த உணர்வு அவளுக்குப் புதிது. இதற்கு முன் உணர்ந்ததில்லை. புதுவித அனுபவமும், ஒருவித சுகத்தையும், சுவையையும் கொடுக்க கண்கள் சொருகலானாள். திமிரிக் கொண்டிருந்தவள் மெல்ல மெல்ல தளர்ந்து அவனுக்கு ஒத்துழைத்தாள். அவள் கைகளோ அவன் கழுத்தை மாலையாக கோர்த்துக் கொண்டன. 
அவள் சம்மதம் கிடைத்ததில் அவனுக்கு அவளை விடவே மனம் வரவில்லை. அவள் சிணுங்கல் அவனை மேலும் தூண்டி விட அவன் கைகளோ எல்லை மீற ஆரம்பித்திருந்தன.
மெல்ல மெல்ல அவள் பெண்மை விழித்துக்கொள்ள விதிர் விதித்து போனவள் சட்டென்று அவனைத் தள்ளி விட்டாள்.
என்ன நடந்தது என்று ஒரு நொடி அவளுக்கும் புரியவில்லை. அவனுக்கும் தெரியவில்லை.
தலையைக் கோதி தன்னை சமன் செய்ய அவன் முயல “பொறுக்கி நாயே” காலிலிருந்த செப்பலைக் கழட்டி அவனைச் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் யாழினி.
“யாழினி…. என்னடி பண்ணுற?” தனக்கு ஒத்துழைத்தவள் ஏன் கோபப்படுகின்றாள் என்று புரியாமல் இவன் அவளைத் தடுக்க முயற்சி செய்ய, தன்னை தொடக் கூடாத இடத்தில் தொட்டு விட்டான் என்ற கோபத்தில் அவள் அடித்துக் கொண்டிருந்தாள்.
யாரோ வருவது போல் இருக்க “போதும்… யாரோ வராங்க” அவள் கையிலிருந்த செப்பலைப் பிடுங்கி கீழே போட அவசர அவசரமாகத் தன்னை ஆராய்ந்தவள் அமைதியானாள்.
யார் முன்னிலையிலும் கேலிப்பொருளாக யாழினி விரும்பவில்லை. கத்தி கூச்சலிட்டு இவனை அவமானப்படுத்தினால் பழிவாங்க பின்னாலையே அலைவான். கல்லூரியில் ஏற்கனவே ஒரு பெண் அத்தனை பேரின் முன் ஒருவனை அடித்து விட்டாள் என்பதற்காக அவள் மீது அசிட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது கண்ணுக்குள் வந்துபோக இதை இத்தோடு விட்டு விடுவதுதான் சரி என்று மனதுக்குத் தோன்றச் செப்பலை மாட்டியவள் விறுவிறுவென நடக்கலானாள்.
அவளோடு பேச வந்தவனோ பேசாமலேயே நடந்ததை நினைத்து இருமனநிலையில் நின்றிருந்தான்.
தான் செய்தது தவறு. அவளிடம் வாய் மொழியாகச் சம்மதம் பெற்றிருக்க வேண்டும் என்றது அவன் மனம்.
அவள் மனதிலும் அவன் மீது விருப்பம் இருக்கிறது இல்லையென்றால் இசைந்து கொடுப்பாளா? என்று கேட்டது மறு மனம்.
அவளிடம் மீண்டும் எவ்வாறு பேசுவது? இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி அமையுமா? வெளிநாடு வேறு செல்ல வேண்டுமே என்ற கவலையிலே யாழினியைத் தேடி ஓடினான். ஆனால் அவளோ கல்லூரியை விட்டு வீட்டுக்கே சென்றிருந்தாள்.
தனக்கு என்ன நடந்தது? என்ற சுய ஆராய்ச்சியிலேயே பேருந்தில் சென்று கொண்டிருந்தாள் யாழினி.
அவன் கொடுத்த முத்தத்தின் தித்திப்பு இன்னும் அவள் உதடுகளை இருக்க, மெதுவாக உதட்டைத் தொட்டுப் பார்த்தாள்.
அதன் இனிமையும், சுகமும், கண்களை மூடினால் தான் அனுபவிப்பது போல் பிரம்மை தோன்ற, அந்த உணர்வு என்னவென்று புரியாமல் குழம்பினாள்.
“யாரோ ஒருவனின் எச்சில் தன்னுடைய நாவில் கலந்து விட்டது அதைச் சுவை என்று எண்ணுகின்றாயே முட்டாள். முட்டாள்” தன்னையே திட்டிக் கொண்டவள் துப்பட்டாவால் உதடுகளை அழுத்தித் துடைத்தாள்.    
“உதட்டை மட்டுமா தொட்டான்? பொறுக்கி நாய் முதல்ல வீட்டுக்குப் போய் குளிக்கணும்” சத்தமாகவே முணுமுணுத்திருக்க,
“ஏதாவது பிரச்சினையா” அருகில் அமர்ந்திருந்த பெண் கேட்டாள். 
தலையசைத்து இல்லை என்றவள் அவனைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று எண்ணினாலும் நடந்த சம்பவம்தான் கண்ணுக்குள் வந்து வந்து போனது.
வீட்டுக்கு வந்தவளிடம் “என்னடி இன்னைக்கி நேரகாலத்தோடு வந்திருக்க?” கல்பனா கேட்க,
“நீ இன்றைக்கு பக்டரிக்கு போகல?” சந்தேகமாக இவள் கேட்டாள்.
“காலையிலிருந்து தலை வலிக்கிறதென்று லீவு போட்டேன். சாப்டியா? ஏதாவது சமைத்து சாப்பிடு” என்ற கல்பனா படுத்துக் கொண்டாள்.
அன்னை சொன்னதைக் காதில் வாங்கியவள் நேராக சென்றது குளியலறைக்குத்தான். அவன் தொட்ட இடமெல்லாம் தகிக்க, சோப் போட்டு பரபரவென தேய்த்துக் குளித்து விட்டு வந்தாள்.
அதன்பின்தான் அவள் மனம் கொஞ்சம் ஆறியது. வயிறும் காந்த ஆரம்பித்தது. மினி பிரிஜ்ஜில் இருந்த தோசை மாவில் மூன்று தோசைகளை வார்த்தவள் அவசரத்துக்குக் கார சட்னி செய்து சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கத்தையும் போட்டாள்.
கனவில் வந்தான் அவன். முத்தம் கொடுத்தான். பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்றான். அடுத்த கணம் ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் அவள் மடியில் தவழ, கல்பனா அவளைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தாள். அவனோ இவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
யாழினியால் கண்களைத் திறக்க முடியவில்லை தலை விண் விண் என்று வலித்தது. பினாத்தலானாள்.
சத்தம் கேட்டு வந்த கல்பனா அவளைத் தொட்டு எழுப்ப, உடல் அனலாய் கொதித்தது.
“நேரம் கெட்ட நேரத்துல தலைக்கு குளிக்கிற. உடம்பு சுடாம வேற என்ன பண்ணும்?” வழமைபோல் கல்பனா மகளை வைய ஆரம்பித்தாள்.  
அன்னையின் சத்தத்தில் சிரமப்பட்டுக் கண்திறந்தவள் எழுந்தமர,
“இரு இரு கசாயம் வச்சி தரேன். முதல்ல தலையை தொட, ஈரத் தலையோடயே படு. அப்பொறம் காய்ச்சலை தேடிக்க” மகளை திட்டியவாறு கசாயம் வைத்துக் கொடுத்தாள்.
ஒருவாரம் யாழினி படுத்தப்படுக்கையாக இருந்தாள். தலையை தூக்க முடியாத அளவுக்கு சளி வேற பிடித்திருந்தது. கல்பனாவின் கசாயம் வேலை செய்யவில்லை. மருத்துவரிடம் சென்று ஊசி போட்ட பின்தான் தேறி வந்தாள்.
என்னதான் திட்டினாலும் கல்பனா மகளைக் கண்ணும் கருத்துமாகத்தான் பார்த்துக் கொண்டாள். திட்டியவாறே பார்த்தால் பாசம் புரியுமா?
ஆனால் யாழினியை அவன் சதா இம்சை செய்தான். கனவிலும், அவள் நினைவிலும் இருந்து இம்சை செய்தான். அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடிய யாழினி காலேஜ் செல்லவே அஞ்சினாள்.
ஒருவாறு உடம்பு தேறி வந்தவள் அஞ்சியவாறே காலேஜ் பஸ்சுக்காக காத்திருக்க, அங்கே அவனை காணவில்லை. பெரும் நிம்மதியை உணர்ந்தாள்.
வழமைக்கு மாறாக காலேஜ் பஸ் அமைதியாக இருக்க, அனைவருமே அதை பற்றித்தான் பேசினார்கள். அவளுக்கும் அந்த சத்தம் இல்லாமல் எதையோ இழந்ததை போல் உணர்ந்தாள். அது என்னவென்றெல்லாம் அவள் ஆராய்ச்சி செய்யவில்லை. தினமும் அவனை எங்கே எல்லாம் பார்த்தாளோ அங்கே எல்லாம் அவன் காட்ச்சி கொடுக்காததால் அவன் காலேஜை விட்டு சென்றதை அறிந்து கொண்டவள் “இவ்வளவுதான் அவன் காதல்” என்று கூறிக் கொண்டாள்.
இவளை சந்திக்க கூட முடியாமல் அவன் வெளிநாடு சென்றது இவளுக்குத்தான் தெரியவில்லை.
தினமும் எதோ ஒருவகையில் அவனை நியாபகப்படுத்திக் கொண்டிருந்தவனை துரத்தியடிக்கவே அவள் ஈஸ்வரமூர்த்தியை கண்டு பிடித்திருந்தாள்.
அதுவும் தன் அன்னை கல்பனாவோடு கோவில் வாசலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் ஈஸ்வரமூர்த்தி.

 

அவன் அவன் என்று சொல்லி கடைசி வரைக்கும் அவன் பேர சொல்லல.

Advertisement