Advertisement

அத்தியாயம் 19
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும்  நண்பர்கள். தாங்கள் சம்பந்தியாக வேண்டும் என்று அவர்கள் ஆசைக் கொண்டாலும் இருவருக்கும் இருந்தது ஆண் வாரிசுதான். அடுத்த தலைமுறையில் பிறந்த ஆனந்தவள்ளியையும், சோமசுந்தரத்தையும் திருமணம் செய்து வைத்து தங்களது கனவை நனவாக்கிக் கொண்டனர் குடும்பத்தினர்.
அவ்வளவு பணவசதி படைத்தவர்கள் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அவர்களுக்குள் திருமணம் செய்துகொண்டது குடும்பத்தாரை அதிதிருப்திக்குள்ளாக்கியது.
சிலர் வெளிப்படையாகவே பேசியிருந்தாலும், சிலர் வஞ்சம் தீர்க்க காத்திருந்தனர்.
ஆனந்தவள்ளி கோமதியை பெற்றெடுத்த பொழுது அவளுக்கு இரத்தக் கொதிப்பு அதிகமாக இருந்தது. ஆபரேஷன் செய்துதான் குழந்தையை வெளியே எடுத்திருந்தனர். கருப்பை வேறு பலவீனமாக இருந்தது. ஆனந்தவள்ளிக்கு மருத்துவரீதியான சில பிரச்சினைகள் இருக்கவே இன்னொரு குழந்தையை பற்றி நினைக்கக் கூடாது மருத்துவர் அறிவுரைக் கூறி இருக்க, அதுவே உறவுகளுக்கு பேச சந்தர்ப்பமாக அமைந்தது.
“என்னது ஆண் வாரிசு கிடையாதா? சொந்தபந்தத்தை பகைச்சிகிட்டு கல்யாணம் பண்ணா சாபம் தான். அதான் ஆண் வாரிசுக்கு இடமில்லாம போச்சு” ஆளாளுக்கு வாயில் வந்ததை பேச ஆரம்பிக்க, மனமுடைந்து போனாள் ஆனந்தவள்ளி.
தான் இறந்தாலும் பரவாயில்லை. இந்த குடும்பத்துக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று ஆனந்தவள்ளியின் பிடிவாதத்தினால் பிறந்தவன் தான் யாதவ். கோமதி பிறந்து ஆறாண்டுகள் கழித்து பிறந்தவன் ஆனந்தவள்ளிக்கு சந்தோஷதைக் கொடுக்கவில்லை.  
குழந்தை உண்டாகும் பொழுதே இரத்தக் கொதிப்பு, அதற்கவள் எடுத்துக் கொண்ட மாத்திரையின் காரணமாக யாதவ் மூளைவளர்ச்சி சற்று குன்றியவனாகத்தான் பிறந்தான். 
சிறுநீரக கோளாறு வேறு. பிறந்து விட்டான். ஆனால் மருத்துவர்கள் அவனுக்கு கொடுத்த கால அவகாசம் ஆறே மாதங்கள் தான்.
அந்த ஆறு மாதமும் மருத்துமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் கிடந்தான். ஆனந்தவள்ளி கண்ணீரும் கம்பலையுமாக கிடக்க, வீட்டாரோ கோயில், குளம் என அலைந்தனர்.
மருத்துவர் என்ன கடவுளா? உயிர் கொடுப்பவனுக்குத் தான் தெரியும் உயிரை எப்பொழுது எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன ஆறு மாதங்கள் ஒரு வருடங்களாகியும் யாதவ் உயிரோடு இருந்தான்.
அதன்பின் அவனை வீட்டுக்கு அழைத்து வந்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தனர். சாதாரண குழந்தைகளை விட வேலைகளை மெதுவாகத்தான் செய்யலானான். ஐந்து வயதில் தான் ஒழுங்காக நடந்தான். ஆறு வயதில் தான் தெளிவாக பேசினான்.
“ஆண் வாரிசு வேண்டும் என்று கேட்டேன். கடவுள் குறையோடு கொடுத்து என்னை சோதிக்கிறான். என்னை சோதித்தால் பரவாயில்லை. அவனை எதற்காக சோதிக்கிறான்” தினமும் கண்ணீர் வடிப்பாள் ஆனந்தவள்ளி. 
சொந்தபந்தங்கள் யாதவை சோமசுந்தரத்தின் குடும்ப வாரிசாக கருதவே இல்லை. அவர்களை பொறுத்தவரையில் கோமதி ஒருத்தி மட்டும்தான் சோமசுந்தரத்தின் வாரிசு. அதனாலயே அவள் வயதுக்கு வந்த உடனே ஆளாளுக்கு அவளை பெண் கேட்டு வந்து நின்றனர்.
பெண் கேட்டு வந்ததுமில்லாமல் யாதவ் நாளை இறந்து விடுவானே என்று பேசியதால் தான் சோமசுந்தரத்துக்கு சொந்தபந்தத்தின் மீது வெறுப்பு வந்தது.
ஆனால் ஆனந்தவள்ளி அவ்வாறு நினைக்கவில்லை. சொந்தபந்தத்தை எதிர்த்து, அவர்களை பகைத்துக் கொண்டு தாங்கள் திருமணம் செய்ததனால் தானோ யாதவுக்கு இந்த சாபம் என்று கருதி அஞ்சினாள்.
அதனால்தான் கோமதி ஈஸ்வரைக் காதலிப்பதாக வந்து நின்ற போது கடுமையாக எதிர்த்தாள். சொந்தபந்தம் முக்கியம் என்று பேசினாள். 
அவளுடைய அச்சத்தையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளாமல் சோமசுந்தரம் குள்ளநரியான ஈஸ்வருக்கு கோமதியை திருமணம் செய்து வைத்து மேலோகம் சென்று விட்டார்.
மஞ்சுளாவை தான் கவனித்து பார்த்துக்கொள்வது போல் ஈஸ்வர் யாதவை ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொள்வார் என்று கோமதி நினைத்திருக்க, ஈஸ்வரோ யாதவ் என்று இறந்து போவான் என்று காத்திருக்கலானான்.
ஆனால் மருத்துவத்துறை வளர்ச்சியடைந்தநிலையில் அவனுக்கு மூளையில் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் ஓரளவுக்கு சரியாகக் கூடும் என்று அவனை பரிசோதித்த மருத்துவர் கூறியிருக்க, அது சம்பந்தமாக ஆனந்தவள்ளி அவனை அழைத்துக் கொண்டு அமெரிக்க பயணப்பட்டாள்.
அப்பொழுது கோமதிக்கு பத்மஜாவும், சஞ்ஜீவும் இருந்தனர்.”ஆபரேஷன் செய்யப் போய் இருக்குறத விட நிலைமை மோசமானால் என்ன செய்வது அத்த? அவன் இருக்குறத போலவே இருக்கட்டுமே”  ஈஸ்வர் அவர்களை எதையெதையோ சொல்லி தடுத்துப் பார்த்தான். முடியாத பட்சத்தில், “ஆபரேஷன் செய்யப் போய் செத்துத் தொலையட்டும்” கருவிக்கு கொண்டான்.
ஆனால் ஈஸ்வர் நினைத்ததற்கு மாறாக யாதவ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஒரு இந்தியனுக்கும், அமெரிக்க பெண்ணுக்கும் பிறந்த பெண்ணான லூசியை சந்தித்தான்.
லூசி ஒரு தாதி. இவனிடத்தில் ரொம்ப அன்பாக இருந்தாள். அறுவை சிகிச்சை முடிந்த பின்னும் ஒன்றரை மாதங்கள் அவன் மருத்துவமனை வசம்தான். அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர் கூறியது போலவே அவனிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
தலையை ஒரு பக்கம் சாய்த்து ஒரு பக்கம் வளைந்து நடப்பவன் நேராக நடக்க ஆரம்பித்திருந்தான். முன்பை விட தெளிவாக பேசினான். இருந்தாலும் சின்ன சின்ன குறைகள் இருக்கத்தான் செய்தது. முன்பை விட மகன் நன்றாக இருப்பதைக் கண்டு ஆனந்தவள்ளி ஆனந்தக் கண்ணீரே வடித்தாள்.
ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இருந்து விட்டு யாதவை அழைத்துக் கொண்டு ஆனந்தவள்ளி வீடு வந்தால் அவனை பார்க்க சொந்தபந்தங்கள் சூழ்ந்திருந்தனர்.
இதுநாள்வரை அவனைக் கண்டுகொள்ளாதவர்கள் அவன்தான் இந்த வீட்டு வாரிசு, சோமசுந்தரம் இருக்க வேண்டிய இடத்தில் இனி அவன்தான் இருக்க வேண்டும் என்று பேசியதோடு அவனுக்கு ஒரு திருமணத்தையும் செய்து வைக்க வேண்டும் என்று பேசலாயினர். பேசியதோடு மட்டுமல்லாது பெண் கொடுக்கவும் போட்டி போட்டனர். இதை பார்த்த ஆனந்தவள்ளி அவர்கள் எவ்வளவு சுயநலம் மிக்கவர்கள் என்று புரிந்துக் கொண்டாள்.
நடப்பவற்றை அமைதியாக பல்லைக் கடித்தவாறு பார்த்திருந்தான் ஈஸ்வர். கோமதி ஒரே மகள் அவளுக்குத்தான் மொத்த சொத்து என்றுதானே அவளை திருமணம் செய்து கொண்டேன். மூளை வளர்ச்சி இல்லாத இவனை தள்ளி விட்டு கொன்றிருந்தால் இன்று இந்த பிரச்சினை வந்திருக்குமா? இவனுக்கு திருமணம் ஒரு கேடா? இன்னைக்கு கல்யாணம் அதற்கு பிறகு வாரிசா? விடக் கூடாது. இவனுக்கு அந்த ஆசையே வரக் கூடாது” கருவலானான் ஈஸ்வர். ஆனால் கடவுளின் முடிவோ வேறு விதமாக இருந்தது.   
யாதவுக்கு வண்டியோட்ட கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அக்கறையாக கற்றுக் கொடுக்க, கோமதியும் கணவனை அன்பாக பார்த்திருந்தாள். ஈஸ்வர் அத்தோடு விடவில்லை. அவனை பாருக்கு அழைத்து சென்று மதுவின் சுவையையும் மெதுமெதுவாக பழக்கி விட்டான். ஆனந்தவள்ளியிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றும் புத்திமதி கூறியிருந்தான்.
எத்தனை நாட்கள் மறைக்க முடியும்? ஆனந்தவள்ளியிடம் மாட்டிக் கொண்ட யாதவ் அதுதான் அவனுக்கு உலகத்தில் கிடைத்த ஒரே சுகம் என்பது போல் பேசினான்.
கோமதி கண்ணீர் வடிக்க, அவளை அணைத்து ஆறுதல் படுத்துவது போல் உதடு வளைத்து கேலியாக புன்னகைத்தவாறு நின்றிருந்தான் ஈஸ்வர்.
“எப்படியிருந்த உன்ன இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது உன்ன இப்படி பார்க்கத்தானா? இதுக்கு நீ பழையபடியே இருந்திருக்கலாம்” என்று கண்ணீர் வடித்தாள் ஆனந்தவள்ளி. 
    
“வேகமாக வண்டியோட்டுறதே தனி கிக் மாப்புள” என்று ஈஸ்வர் யாதவை ஏற்றி விட்டிருக்க, ஒருநாள் நன்றாக குடித்து விட்டு வேகமாக வண்டியோட்டி யாதவ் விபத்துக்குள்ளாகி இறந்தே போனான்.
“அவனை அமேரிக்கா சென்று குணப்படுத்தியது இப்படி காவு கொடுக்கத்தானா? ஐயோ கடவுளே” என்று கதறினாள் ஆனந்தவள்ளி.
அவன் இறந்து ஒரு மாதம் கூட செல்லவில்லைல் லூசி ஆனந்தவள்ளியை சந்திக்க வந்தாள். கைக்குழந்தையோடு வந்த அவளை ஆனந்தவள்ளியிடம் அழைத்து வந்ததே ஈஸ்வர்தான்.
யாரோ, எவளோ, உதவி கேட்டு வந்திருப்பாள் என்றுதான் நினைத்தான். வீட்டுக்கே வந்திருக்கின்றாள், துரத்தியடிக்கவும் முடியவில்லை. பிள்ளையை வேறு கையில் வைத்திருக்கின்றாள். இவளை வைத்து அத்தையிடம் நல்ல பெயரை சம்பாதிக்கலாம் என்று ஈஸ்வர் ஒரு கணக்குப் போட, அது அவனுக்கு ஆப்பாகத்தான் முடிந்தது.
ஆனந்தவள்ளியை சந்தித்த லூசியோ, மருத்துவமனையில் வைத்து தனக்கும் யாதவுக்கும் நடுவே ஒருநாள் உறவு ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் உண்டான கருதான் இந்த குழந்தையென்றும், தனக்கு இப்பொழுது பாற்றிக்கோடு திருமணம் நிகழ இருப்பதாகவும், அதனால் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்றும் யாதவ் இப்பொழுது முற்றாக குணமடைந்திருப்பானல்லவா? அவனிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு செல்ல வந்ததாகவும் கூறினாள்.
அவள் உண்மையை கூறுகிறாளா? பொய் கூறுகிறாளா? என்றெல்லாம் ஆனந்தவள்ளி ஆராயவில்லை. உண்மையை சொன்னால் அவள் என்ன சொல்கிறாள் என்று கூட அவள் கவனத்தில் இல்லை. ஆசையாசையாக பெற்றெடுத்த மகன் இறந்து விட்ட துயரத்தில் இருந்தவளுக்கு லூசி பேசிய எதுவுமே கருத்தில் பதியவில்லை. அறையிலிருந்த மாலையணிவித்திருந்த யாதவின் புகைப்படத்தைக் காட்டினாள்.
லூசியின் தந்தை ஒரு இந்தியன். அவள் தோற்றமும் ஒரு இந்திய பெண் போன்று இருந்தாலும், கலாச்சாரத்தை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. யாதவ் இறந்து விட்டான் என்று கூட தெரியாமல் “ஓஹ்… வேறு திருமணம் செய்து கொண்டானா? அவன் மனைவி குழந்தையை வளர்ப்பாளா? அல்லது நான் அநாதை ஆசிரமத்தில் விடவா?” என்று கேட்டதும்தான் ஆனந்தவள்ளி லூசி ஏதோ கூறினாளே என்று திரும்ப விசாரித்தாள்.
அவள் கூறிய விடயம் அதிர்ச்சிதான். இது உண்மையா? என் மகன் எப்படி ஒரு பெண்ணோடு?” ஒரு தாயாக ஆனந்தவள்ளியால் ஒரு கணம் இப்படி ஒரு நிகழ்வை கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. குழந்தை சிணுங்கவே எட்டிப் பார்த்தவளுக்கு, தன் கணவனே மறுஜென்மம் எடுத்திருப்பது புரிய எதையும் யோசிக்காமல் குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டாள். 
ஆனந்தவள்ளி குழந்தையை ஏற்றுக்கொண்டதும், லூசி அங்கிருந்து கிளம்பி விட்டாள். கோமதிக்கு குழந்தையையே பார்த்து எந்த சந்தேகமும் வரவில்லை. தந்தையை போலவும், தன் தம்பியை போலவும் இருக்கும் மருமகன் தங்கள் இரத்தம்தான் என்றே பேச பல்லைக் கடித்தான் ஈஸ்வர்.
“ஒருவழியா ஒருத்தன மேல்லோகம் அனுப்பி வச்சா அவனுக்கு புள்ளைன்னு ஒன்னு வந்து நிக்குது. என்ன கிரகமோ. இத எப்படி கொல்லுறது?”
“கோமதி இது உன் தம்பி புள்ளனா யாரும் நம்பவும் மாட்டாங்க. தம்பி புள்ளனா அம்மா எங்கன்னு கேப்பாங்க. ஊருக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனா குழந்தைக்கு கிட்ட என்ன காரணம் சொல்லுறது? வளர வளர, அவன் அம்மாவை தேடுவான். தேடி போனா வீணான பிரச்சினைகள் வரக் கூடும். அந்த பொண்ணு முறையா உன் தம்பிய கல்யாணம் பண்ணவுமில்லை. அவ வேற வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ ஆரம்பிச்சிட்டா. தன்னோட பெத்தவங்க இப்படித்தான் என்றால் இவன் மனமும் கஷ்டப்படும். என் பேரனுக்கு அப்படியொரு நிலைமை வரக் கூடாது. இந்த குழந்தைக்கு நீ தான் அம்மா” என்ற ஆனந்தவள்ளி ஈஸ்வரை பார்த்து “நீதான் அப்பா” என்று சொல்லாமல் சொன்னாள். 
என்ன இருந்தாலும் தங்கள் குடும்ப வாரிசல்லவா விட முடியுமா? “சரிம்மா” என்று கோமதி ஒத்துக் கொண்டாலும் மூன்று வயதான சஞ்ஜீவால் திடீரென்று கிடைத்த தம்பியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலயே யதுநாத்தின் பொறுப்பு மொத்தமும் ஆனந்தவள்ளியின் வசமானது.
யதுநாத் கொஞ்சம் வளர்ந்ததும் ஆனதவள்ளியிடம் அன்னையான கோமதி தன்னிடம் ஏன் பாசம் காட்டுவதில்லையென்று கேட்டதற்கு “நீ பொறந்தப்போ உன் அம்மா ஆறு மாசமா படுத்த படுக்கையா கெடந்தா. சொல்ல போனா உன்ன பெத்துக்கவே கூடாது என்றுதான் எல்லாரும் சொன்னோம். பிடிவாதமா பெத்துக்கிட்டா. புள்ளய பெத்தவளுக்கு புள்ளைக்கு பால் கொடுக்கக் கூட முடியாம படுத்து கெடக்குறாளே என்று எல்லாருக்கும் கவலை. உன் அக்கா “அம்மா எழுந்து வா, வா” என்று சொல்லிகிட்டே இருப்பா” என்று கூறியதெல்லாம் சஞ்ஜீவ் பிறந்த பொழுது என்ன நடந்ததோ அதைத்தான்.
இதனால் சஞ்ஜீவ் தன்னை வெறுப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான் யதுநாத். யதுநாத்துக்கும் சஞ்ஜீவுக்கும் மூன்று வருடங்கள் வித்தியாசம் என்பதனால் சஞ்ஜீவுக்கு யதுநாத் யார் என்ற உண்மை தெரியவில்லை. ஆனால் பத்மஜாவுக்கும், யதுநாத்துக்கும் ஏழு வருடங்கள் வயது வித்தியாசம் யதுநாத்தை தத்தெடுத்து வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருந்தாள். கிரிராஜ் அவளை விட நன்கு வருடங்கள் பெரியவன் அவன்தான் யதுநாத் யார் என்ற உண்மையை அவளிடம் கூறி இருந்தாள். அவன் சொந்த இரத்தம் என்பதினால்தான் இன்றுவரை கோபத்தில் கூட அவனிடம் பத்மஜாவும், கிரியும் உண்மையை கூறாது இருக்கின்றனர் .  
“நான் உங்களுக்கு பிறந்தவன் இல்லையெங்குறதனாலையா உங்களுக்கு என் மேல இத்தனை வெறுப்பு. சின்ன வயசுல குட்டி குட்டி காரெல்லாம் படிக்கட்டுல வச்சி விளையாடிகிட்டு இருப்பேன். ஒரு குட்டிக் கார் உங்க கால்ல மிதிபட்டு உங்களுக்கு வலிச்சதுனு கார எட்டி உதைக்கிற சாக்குல, என்ன எட்டி உதச்சீங்க. அப்போ கூட கோவத்துல பண்ணிட்டீங்கனு நினச்சேன். வேணுமேன்னுதான் பண்ணீங்கன்னு இப்போ புரியுது. அன்னைக்கு நான் படீல உருண்டு, தலை பட்டு மயங்கி என்னென்னவோ ஆகி போச்சு. அது வெறும் அடி கிடையாது கொலை முயற்சி இல்லையா?” ஈஸ்வரமூர்த்தியின் எதிரே அமர்ந்திருந்த யதுநாத் கேட்டான். 
“ஆமா செத்திருந்தா இன்னைக்கு நீ இங்க உக்காந்திருக்க வேண்டியதில்லை” கேலியாக உதடு வாளைத்தார் ஈஸ்வர்.
அவரின் பேச்சை காதிலையே வாங்காதவன் “நானும், சஞ்ஜீவும் சண்டை போட்டா அவன் உங்க பையன் எங்குறதால அவன் பக்கம் நிப்பீங்க, என் பக்கம் நியாயம் இருந்தாலும் என்ன பிரச்சினை என்று கூட கேக்க மாட்டீங்க, இதெல்லாம் இப்போ புரியுது” யோசனையாக கூறுவது போல் கேட்டான் யது.
“ஆமா அவன் என் ரெத்தம் டா…”
“ஆனா யாழினியும் உங்க ரெத்தம் தானே! என்ன தீர்த்துக் கட்ட அவளை எதுக்கு கொல்ல பாக்குறீங்க?” என்றவனோ காற்சட்டையில் பையில் மடித்து வைத்திருந்த சஞ்ஜீவ் மற்றும் யாழினியின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கையை ஈஸ்வரிடம் கொடுத்தான்.
“இதெப்படி உன் கிட்ட? அட நான் தான் உனக்கு அவங்க நடிக்கிறாங்கனு மெஸ்ஸேஜே  தட்டி விட்டேன். யாழினிய நீ மடக்கி கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்த்தா இதைத்தான் கண்டு பிடிச்சியா?” யாழினி இறந்து விடுவாள். அந்த பழி உன் மீது. இனி இந்த காகிதத்துக்கு அவசியமே இல்லை என்பது போல் பேசினார் ஈஸ்வர்.  
அவர் கூறுவதை மறுக்காமல் ஒத்துக் கொண்டவன். “யாழினிய சஞ்ஜீவ் மிரட்டுறான் என்றுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். உங்க மெஸேஜ் தான் அவங்க நடிக்கிறாங்க என்ற சந்தேகத்தை எனக்குள் தோற்று வித்தது. இந்த report சஞ்ஜீவோட அறையை துலாவினதுல கிடைச்சது. ஆனா எனக்கிருக்குற சந்தேகமே யாழினி என் கிட்ட சொல்லி நாம ரெண்டு பேரும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்திருக்கலாம். அவ ஏன் சஞ்ஜீவ் கூட எடுத்தா?” சந்தேகமாக கேட்பது போல் ஈஸ்வரை பேசத் தூண்டினான் யதுநாத்.
“ஹாஹாஹா நீயும் அவளும் டெஸ்ட் எடுத்திருந்தா அண்ணன், தங்கையென்று வந்திருக்குமா? அதனாலதான் எடுக்கல. சஞ்ஜீவும் யாழினியும் ஒரே அம்மாவுக்கு பொறந்தவங்க. ரெண்டு பேருமே என் ரெண்டாவது மனைவி ரேணுகாவுக்கு பொறந்தவங்க. அத இந்த சஞ்ஜீவ் பய எப்படித்தான் கண்டு பிடிச்சானோ” ஈஸ்வருக்கு இந்தக் கேள்விக்குத்தானே இன்னும் பதில் கிடைக்கவில்லை. சஞ்ஜீவிடம் உண்மையை யார் கூறியது என்று தெரியாமல் தானே தேடிக் கொண்டிருக்கின்றார்.
“என்ன சொல்லுறீங்க? சின்ன வீடு வச்சிருந்தீங்களா? எங்கம்மா கோமதிக்கு துரோகம் பண்ணீங்களா?” அதிர்ந்தவன் போல் கண்களை விரித்தான் யதுநாத்.
“அடப் போடா… சின்ன வீடு பெரிய வீடு என்று சொல்லிக் கிட்டு. ரேணுகா என் ஆசைநாயகி. நான் காதலிச்சு கல்யாணம் பண்ணவ”
“அப்போ அம்மா… ஐ மீண்ட் கோமதி அம்மா… அம்மா இல்ல. அத்த. அவங்க யாரு?”
“பணம், பணத்துக்காக மட்டுமே அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளாலதான் பணம், சமூக அந்தஸ்து, மரியாதை, எல்லாம் கிடைச்சது. அதனாலதான் அவளுக்காக ரேணுகாவுக்கு பொறந்த சஞ்ஜீவையே தூக்கிக் கொடுத்தேன். ரேணுகாகு இன்னொரு குழந்தை பொறக்கக் கூடாது என்று இருந்தேன். ஆனா பொறந்துட்டாளே யாழினி பொறந்துட்டாளே. குழந்தையை மட்டும் கொல்லலலாம்னு நினச்சேன். சஞ்ஜீவ மாத்தி வச்சதை ரேணுகா தெரிஞ்சி கிட்டா அதனால அவளை கொல்ல வேண்டியதா போச்சு. யாழினி பொழச்சிகிட்டா.
அவ இந்த உலகத்துக்கு வந்ததற்கான காரணம் இருக்க வேணாம். என்ன புரியலையா? நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு உன்ன உன் பாட்டி வீட்டை விட்டு துரத்தனும் என்று நினச்சேன். ஆனா சஞ்ஜீவ் அவளை கல்யாணம் பண்ணதா நாடகமாடி அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து பிரச்சினை பண்ண பார்த்தான். அதான் அவளைக் கொன்னு பழியை உன் மேல போட்டா நீ ஜெயிலுக்கு போய்டுவ, நான் என் குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேனில்ல” சோம்பல் முறித்து தெனாவட்டாக கூறினார் ஈஸ்வர். 
“அடப்பாவி… இவ்வளவு பெரிய அயோக்கியன் என்று தெரியாம உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணி இத்தனை வருஷம் உன் கூட குடும்பம் வேற நடத்தி இருக்கேனே. உன்ன…” கோமதி கத்த
“அமைதியா இருங்கம்மா அவர் கொடுக்குற வாக்குமூலத்தை வச்சுதான் அவரை அரெஸ்ட் பண்ண முடியும்” என்றான் மாறன்.
யதுநாத்தை கைது செய்து அழைத்து வந்தது மாறனின் காவல் நிலையத்துக்குத்தான். அவனை பார்த்த மாறனோ “இவன் நம்ம காலேஜாச்சே. ஷாலியோட கிளாஸ்மேட் இல்ல” யோசனையாக சென்று யதுநாத்திடம் பேச்சுக் கொடுத்தான்.
யதுநாத்துக்கு ஷாலினியை நியாபகம் இருந்தது. எஸ்.ஐ. கௌதமிடம் டீ கொண்டுவரச் சொன்ன மாறன் யதுநாத்திடம் என்ன நடந்தது என்று விசாரித்தான்.
ஆரம்பத்திலிருந்தே நடந்ததைக் கூறியவன் தனது தந்தையான ஈஸ்வர் மீதுதான் தனக்கு சந்தேகம் என்றும் கூறினான்.
“எத வச்சு சொல்லுறீங்க?”
“பர்ஸ்ட் அந்த ஆளு என் அப்பாவே இல்ல. அது மட்டும் எனக்கு உறுதியா தெரியும். என் அப்பா யார் எங்குற உண்மை எனக்குத் தெரியும். அவரை எப்படி கொன்னாரு என்று அவர்தான் சொல்லணும்”
“நீ என்ன சொல்லுற என்று எனக்கு புரியல”
“யாழினியும் சஞ்ஜீவும் கல்யாணம் பண்ணதா வந்து நின்னாங்க. சஞ்ஜீவ் அவளை மிரட்டி கல்யாணம் பண்ணதா தான் நான் நினச்சேன். ஆனா அவ என்ன கண்டபடி பேசி துரத்தியடிச்சா. ஆனாலும் அவளை சுத்திதான் என் மனசு இருந்தது.
ஒருநாள் அவ கூட ஆபீஸ் போகும் போது எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது. அதுல சஞ்ஜீவும், யாழினியும் கல்யாணம் பண்ணவே இல்ல. நடிக்கிறாங்க என்று. அதை அனுப்பினவங்களுக்கு உண்மைய என் கிட்ட சொன்னா என்ன லாபம்? என்ற சிந்தனை, பொய் சொல்லி விளையாடுறாங்களா? என்ற குழப்பம் எனக்குள்ள உழன்றுக் கொண்டு இருக்கும் பொழுது யாழினி சஞ்ஜீவ “அண்ணா” என்று கூப்பிட்டா. என் காதுல சரியா தான் விழுந்ததா என்று நான் ஆராய கூட முடியல சஞ்ஜீவ் யாழினிய என் கூட போக சொன்னான்.
பொதுவா அவளை என் கூட தனியா அனுப்ப மாட்டான். அதுவே எனக்கு சரியா படல, சட்டென்று மின்தூக்கியில இருந்து இறங்கி அவன் கூட தனியா பேசலாம்னு போனேன்.
ஆனா அவன் அருணாச்சலம் சார் கிட்ட பேசிகிட்டு இருந்தான். அவங்க பேசிக்கிட்டே விஷயங்கள்ல யாழினிய எங்கப்பா ஈஸ்வர் ஆபீஸ்ல வேலைக்கு சேர்த்ததே நான் அவளை காதலிக்கனும் என்றுதான் அது நடந்திருச்சு என்று சொன்னாரு. நான் சஞ்ஜீவ விட்டு அருணாச்சலம் சார வற்புறுத்தி எல்லா உண்மையையும் வாங்கிட்டேன் என்று தன்னுடைய தந்தைதான் யாதவ் அன்னை லூசி என்றும் கூறினான்.
“இவ்வளவு அதிர்ச்சியான உண்மையை தெரிஞ்ச உடனே உன் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று என்னால புரிஞ்சிக்க முடியும்” பெருமூச்சு விட்டான் மாறன்.
“பாட்டி நான் நல்லா இருக்கணும் என்றுதான் உண்மையை மறச்சாங்க. யாழினி நான் அவ அண்ணன் என்று நினைக்கிறா. அதனால இவ்வளவு பெரிய சிக்கல் வரும் என்று யாருக்கு தெரியும்? அது கூட பரவால்ல அவளை பெத்த அப்பாவே அவளை கொல்லப் பார்த்திருக்கான். அவ நிலைமையை நினைச்சதான்…” முகத்தை துடைத்துக் கொண்டான் யதுநாத்.
“அப்படியென்றா இந்த தீ விபத்துக்கு பின்னாடி மிஸ்டர் ஈஸ்வர்தான் இருக்கிறதா சொல்லுற?”
“ஆமா. சஞ்ஜீவும், யாழினியும் போராடுறது அவர் வாயலையே உண்மையெல்லாம் சொல்ல வைக்க”
“வச்சிடலாம் டோன்ட் ஒர்ரி” புன்னகைத்தான் மாறன்.  
சஞ்ஜீவை அழைத்து தனக்கு அனைத்து உண்மையும் தெரியும் என்று கூறிய யதுநாத் ஈஸ்வர் மருத்துவமனைக்கு கண்டிப்பாக வருவார் வந்தால் எவ்வாறு பேச வேண்டும் என்று அருணாச்சலம், மற்றும் சஞ்ஜீவுக்கு கூறலானான்.
மாறன் யதுநாத்தை வைத்திருந்த அறை நான்கு புறமும் கருப்புநிற கண்ணாடியிலான அறை. ஒரு பக்கம் மட்டும் இன்னொரு அறையோடு இணைந்திருக்க, அந்த அறையில் ஈஸ்வர் சஞ்ஜீவை தவிர மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தனர்.
ஈஸ்வர் வந்து யதுநாத்தை பார்க்க வேண்டும் என்று கேட்க, எஸ்.ஐ மஞ்சுளா கத்த ஆரம்பித்தாள்.
“மேடம் போங்க மேடம் நான் பாத்துக்கிறேன் மேடம்” என்று அவளை அனுப்பி வைத்த எஸ்.ஐ கௌதம் “சார் நீங்க எவ்வளவு பெரிய ஆளு மேடமுக்கு நீங்க யார்னு தெரியல. அதான் வீட்டுல புருஷன் மேல இருக்குற கோபத்தை உங்க மேல காட்டிட்டு போறாங்க” தொப்பியைக் கழட்டி தலையை சொறிந்தவாறே கூறியவன் “உங்களுக்கு என்ன சார் வேணும்” காசுக்காக எதுவும் செய்பவன் போல் பணிந்தான் கௌதம்.
 அதை புரிந்துக் கொண்டு ஈஸ்வர் அவனிடம் ஒரு கட்டு பணத்தைக் கொடுத்து யதுநாத்தை பார்க்க வேண்டும் என்றான் “சார் விசாரிச்சிகிட்டு இருக்காரு. ரூம்ல சீசீடிவி கூட வேலை செய்யல. ஒழுங்கா பதில் சொல்லலைனா அடிச்சிடப் போறாரு”
“என்ன சீசீடிவி வேலை செய்யலையா?” அந்த தைரியத்தில் தான் ஈஸ்வர் யதுநாத்திடம் எல்லா உண்மைகளையும் கூறி இருந்தார்.
கூறினார் என்பதை விட யதுநாத் கேள்விக் கேட்டே உண்மையை கூற வைத்திருந்தான்.
“அவ்வளவுதானா?”
“என்ன அவ்வளவுதானா?” ஈஸ்வர் முழிக்க,
“காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டிய கொன்ன, பெத்த பொண்ண கொல்ல பார்த்த, மச்சானை திட்டம் போட்டு கொன்ன, என்ன கொல்ல முடியாது என்று வேற மாதிரி வீட்டை விட்டு துரத்த திட்டம் போட்ட, இதெல்லாம் தனியாத்தான் பண்ணியா இல்ல உன் அக்காவும் கூட்ட, அக்கா பையன் அந்த கிரியும் கூட்டா” என்று யதுநாத் கேட்டதும்தான் தாமதம்.
மொத்த குடும்பமும் முறைக்க, “டேய் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா. செத்துப் போன என் அம்மா மேல சத்தியம்” என்றான் கிரிராஜ்.
   
இவர்கள் பேசுவதுதான் ஈஸ்வருக்கு, யதுநாத்துக்கும் கேட்காதே, “செத்துப் போன எங்க அக்கா ஒரு லூசு. அவ பெத்ததும் ஒரு லூசு. அவனை போய் என் பொண்ணு கல்யாணம் பண்ணி இருக்கா, அவளுக்கு எப்பேர்ப்பட்ட மாப்புளைய பார்த்து வச்சிருந்தேன். கோடீஸ்வரனா பார்த்து வச்சிருந்தேன். அவ என் பொண்ணுதானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு” என்றதும் பத்மஜாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ம்மா… இந்தாள போய் நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்க, பாட்டி திட்டும் போது பாட்டி மேல எவ்வளவு கோபப்பாப்பட்டிருக்கேன். சாரி பாட்டி” என்றாள்.
யார் என்ன பேசினாலும் ஆனந்தவள்ளி அமைதியாகத்தான் இருந்தாள்.
“அப்போ நான் கிளம்புறேன். நீ ஜெய்ல களி தின்னு” என்று ஈஸ்வர் எழுந்துகொள்ள, அவர்கள் அமர்ந்திருந்த மேசையின் அடியிலிருந்து ஒரு மினி மைக்கை எடுத்து மேசையில் வைத்த யதுநாத் “மாறன் சார் எல்லாம் ரெகார்ட் ஆச்சுல்ல” என்று கேட்க,
உள்ளே வந்தவாறே “ஆச்சு ஆச்சு… சார் கிளம்புங்க மாமியார் வீட்டுக்கு போலாம். ஆனந்தவள்ளி அம்மா வீட்டுக்கு என்று நினைச்சீங்களா? புழல் ஜெயிலுக்கு” என்றான் மாறன்.
  அதிர்ந்து நின்றார் ஈஸ்வரமூர்த்தி.

Advertisement