Advertisement

அத்தியாயம் 18
சஞ்ஜீவிடம் யாரெல்லாம் உண்மையை கூறக் கூடும் என்று ஈஸ்வரமூர்த்திக்குச் சந்தேகம் வந்ததை போல் ஈஸ்வரமூர்த்தி உண்மையை கூறாவிடில் வீட்டாருக்கு உண்மையை யார் மூலம் தெரிவிப்பது என்று சஞ்ஜீவ் யாழினியோடு சேர்ந்து யோசித்ததில் அருணாச்சலம் கூறிய தகவல்களிலிருந்து அவர்களுக்குத் தெரிந்தது ரேணுகாவின் தோழியும், தலைமை மருத்துவம்தான்.
தலைமை மருத்துவர் இறந்து விட்டார். ரேணுகாவின் தோழியோ குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து விட்டதாகத் தெரியவர ஒருவாறு அவளைக் கண்டு பிடித்து விசாரித்ததில் அவளுக்கு ரேணுகா ஈஸ்வரைக் காதலித்ததை பற்றி மட்டும்தான் தெரிந்திருந்ததே தவிர, ஈஸ்வர் சஞ்ஜீவை கோமதிக்குக் கொடுத்ததைப் பற்றியோ, ஈஸ்வரின் மறுமுகத்தைப் பற்றியோ தெரியவில்லை. 
தெரிந்திருந்தால் அவளை அழைத்து வந்து கூறி இருக்கலாம். கூறி இருந்தால் வீட்டார் நம்பி இருப்பார்களா? சந்தேகம்தான். ஆனால் நிரூபிக்க உயிரோடு இருக்கும் ஆதாரம் யாழினியல்லவா அவளுடைய டி.என்.ஏ பரிசோதனை முடிவு போதாதா? போதும் ஆனாலும் இவ்வளவு முயற்சியும் ஈஸ்வரன் வாயால் உண்மையைக் கூற வைக்கத் தானே. அதனால் ஈஸ்வரால் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று சஞ்ஜீவும், யாழினியும் யோசிக்கவேயில்லை.
தன்னால் யாரெல்லாம் பதித்திருக்கிறார்களென்று ஈஸ்வருக்குத் தெரிந்தாலும், யார் பழிவாங்கக் கிளம்பி வருவார்கள் என்று அவருக்குத் தெரியாதா? அதனால் தானே பதுங்கும் புலியான ஈஸ்வர் யாரை நேரடியாகத் தாக்க வேண்டும், யாரை மறைமுகமாகத் தாக்கி அழிக்க வேண்டும் என்று நன்கு அறிந்து, புரிந்து காரியத்தில் இறங்குவார்.
ரேணுகாவின் தோழிக்கு எந்த உண்மையும் தெரியவில்லை. தெரிந்தாலும் அவளிருப்பதோ தொலைத் தூரம். சஞ்ஜீவும், யாழினியும் அல்லாமல் மூன்றாவதாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு இருக்கும் ஒரே ஆதாரம் உயிரோடு இருக்கும் யாழினி. அதனால் தானே யாழினியைக் கொல்ல திட்டமிட்டார் ஈஸ்வர்.
தான் எந்தவகையிலும் மாட்டிக்கொள்ள கூடாதென்று தர்மதுரையிடம் கூறிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பியர் குடோனில் வேலை செய்யும் பாலையாவை அலைபேசியில் அழைத்தார்.
“சொல்லுங்க ஐயா? நான் என்ன பண்ணனும்?” அவன் கேட்ட தொனியிலையே தெரிகிறது அவன் ஈஸ்வரின் கைகூலியென்று.
“நான் ஒரு பொண்ணு போட்டோ அனுப்பி இருந்தேனே, அவ இன்னைக்கு குடோனுக்கு வருவா. என் சின்ன பையன் வந்தா மட்டும் அவளை குடோன்ல வச்சி பூட்டி தீ வச்சிடு. முக்கியமா அவ சாகனும். பொருள் சேதாரம் கம்மியாக இருக்கணும். தீ இயற்கையா பத்திக்கிட்டது போலவும் இருக்கணும். அப்போதான் இன்சூரன்ஸ் க்ளைம் பண்ணி பணம் வாங்கலாம்” என்றார்.
“சரிங்க ஐயா. அப்படியே பண்ணிடுறேன்” என்றான் அந்த கைக்கூலி.
கோமதி அழைத்ததால் சஞ்ஜீவால் போகாமல் இருக்க முடியவில்லை. யதுநாத் யாழினிக்கு வேலை கொடுந்திருந்தமையால் அவளை அழைத்துக் கொண்டும் செல்ல முடியவில்லை. ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டுத்தான் சென்றான் சஞ்ஜீவ். 
சஞ்ஜீவ் கோமதியோடு சென்றதால் யதுநாத் பத்மஜா பக்டரிக்கு செல்ல வேண்டியிருந்தது. யாழினிக்கு வேலை இருப்பதால் அவளை அங்கேயே விட்டுச் சென்றான். இல்லையென்றால் அவனே அவளை அழைத்துக் கொண்டு சென்றிருப்பானே.
தன் உயிருக்கு ஆபத்து என்று அறியாமல் தர்மராஜ் கூறியதால் குடோனுக்கு கிளம்பிச் சென்றாள் யாழினி. மறக்காமல் தர்மராஜ் யதுநாத்துக்கும் அழைத்து விஷயத்தைக் கூற,
“ஆமாம் அங்கிள் இன்னைக்கி குடோனுக்கு போகணும் எனக்கு நியாபகம் இருக்கு. சஞ்ஜீவுமில்லை இல்ல. அதனால நான் அங்கதான் போய்கிட்டு இருக்கேன்” என்றான். 
“ஆனந்தவள்ளி அம்மாவுக்கு ஏத்த பேரன்தான். எள் என்றால் எண்ணெய்யா வந்து நிக்குறாரு. அப்படியே சோமசுந்தரம் ஐயாவை போல” சிலாகித்துக் கொண்டார் தர்மராஜ். 
குடோனுக்கு சென்ற யாழினியை பற்கள் தெரிய வரவேற்றான் பாலையா.
“ஸ்டார்க் எல்லாம் வந்திருச்சா?”
“ஆமாம் மேடம் கலர் வேற, ப்ரிண்டட் வேற, துணி வகை வேறயா பிரிச்சி அடுக்கி வச்சிருக்கோம். எந்த துணி, எவ்வளவு? எத்தனை பண்டில் வந்திருக்கு என்று லிஸ்ட் இந்த புத்தகத்துல இருக்கு. நீங்க ஒரு தடவ செக் பண்ணிடுங்க. டெனிம் மெடிரியல் மட்டும் இந்த தடவ குறைவா தான் வந்திருக்கு, குடோன்ல இடம் இல்லாததனால் அத மட்டும் ஸ்டோர் ரூம்ல போட்டிருக்கேன்” என்றான்.
“ஸ்டோர் ரூம் பாதுகாப்பானதா? எலிகள் எதுவும் இல்லல. துணிய கடிச்சி சேதம் பண்ணிடப் போகுது”
“ஐயோ மேடம் அப்படி எந்த பிரச்சினையும் இல்ல. டைலியும் மறந்தடிக்கிறோம். செக் பண்ணுறோம்”
“மருந்தடிக்கிறோம் என்று ஓவரா அடிச்சி துணிய சேதம் பண்ணிடாதீங்க” பாலையாவை பார்த்த உடனே யாழினிக்கு பிடிக்கவில்லை. என்னதான் அவன் “நாங்க, நாங்க” என்று பன்மையில் பேசினாலும். நான் இல்லாமல் இங்கு ஒரு அணுவும் அசையாது என்பது போல் தான் உடல் மொழியும் தோரணையும் இருந்தது.
“ஐயாவுக்கு நஷ்டம் வருவது போல் ஏதாவது செய்வோமா என்ன?” என்றான்
அவனை சந்தேகமாக பார்த்தாள் யாழினி. தான் வேலை செய்யும் இடம் இது. தன்னால் ஏதாவது பிரச்சினை நிகழ்ந்தால் தனக்கு வேலை போய் விடும். நஷ்டம் ஏற்பட்டால் பலபேருக்கு வேலை போய் விடும் அதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று பேசியிருந்தால் அவன் நல்லவன் என்று கணிக்கலாம். இவன் பேச்சில் ஈஸ்வருக்கு இருக்கும் விசுவாசம் தனியாக தெரிகிறது.
“அதை ஆராயவா வந்தேன்? வந்த வேலையை பாப்போம்” தலையை உலுக்கிக் கொண்டவள் குடோன் இருக்கும் பக்கம் நடந்தாள்.
“மேடம் முதல்ல ஸ்டோர் ரூம்ல இருக்கும் மெட்டீரியல் பார்த்துடுங்க. அத முடிச்சிட்டு குடோனுக்கு போய்ட்டிங்கனா யதுநாத் சாரும் வந்துடுவார்” என்றான்.
“யதுநாத் சார் வரேன்னு சொன்னாரா?” பாலையா எந்த நோக்கத்தோடு கூறினான் என்பதை யதுநாத் என்ற பெயர் சிந்திக்க விடாமல் தடுத்திருந்தது.
“சரி போலாம்” என்று பாலையாவோடு யாழினி நடக்க,
அவன் அலைபேசி அடிக்கவே “மேடம் நீங்க உள்ள போங்க, நான் பேசிட்டு வரேன்” என்று விட்டு அகல, யாழினி உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றால் மின் குமிழ் எரிந்துக் கொண்டுதான் இருந்தது. ஸ்டோர் ரூம் என்றாலும் கொஞ்ச பெரிய அளவாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு விதமான வாசனை வீச மூக்கை பொத்தியவள் “எலி மருந்தா இம்புட்டு நாறுது? எலிக்கு மட்டும் மருந்ததடிக்கிறாங்களா? இல்ல துணி பழுதடையாம இருக்கவும் மருந்தடிக்கிறாங்களா?” துணிகளை பட்டியலில் உள்ளபடி சரி பார்க்க ஆரம்பித்தவள் பாலையா வெளியே கதவை பூட்டியதை கவனிக்கவில்லை.
நேரம் செல்லச் செல்ல அந்த அறையில் புகை சூழ யாழினியின் கண்கள் எரிய ஆரம்பித்தன. எதனால் புகை மருந்தாலா? யாழினி மூக்குக்கண்ணாடியை கழட்டி கண்ணை கசக்கியவாறு கலங்கிய கண்களை துடைத்து விட்டு சிரமப்பட்டு கண்களை திறக்க, பெரிய வெளிச்சம் தான் அவள் கண் முன் தெரிந்தது. அறை தீப்பற்றி எரிவதை புரிந்து கொண்டவள் கதவின் பக்கம் செல்ல முயல, சட்டென்று எல்லா பக்கம் தீப் பரவ யாழினி நடுவில் மாட்டிக் கொண்டாள்.
குடோனுக்கு வண்டியை வேகமாக செலுத்திக் கொண்டு வந்த யதுநாத் குடோன் பக்கம் செல்ல ஸ்டோர் ரூமிலிருந்து  புகை வருவதை பார்த்தவன் அங்கே ஓடினான்.
கதவு வெளியே பூட்டப்பட்டிருப்பதை பார்த்தவன் இது திட்டமிட்டு செய்யப்பட்டது என்று புரிந்து போனாலும், அதை யார் செய்தது என்று இப்பொழுது ஆராயும் நேரமல்ல என்று கதவை திறக்க, ஜுவாலை அவன் முகத்திலடித்தது.
இரண்டடி பின் வாங்கியவன் கண்டது அறையின் நடுவே மயங்கி கிடந்த யாழினியைத்தான்.
தீயை பார்த்து வேலை பார்க்கும் சிலர் ஓடி வந்திருக்க, பாலையாவும் ஓடி வருவது போல் வந்தான்.
“என்னாச்சு? என்னாச்சு? எப்படி தீ பிடிச்சிருச்சு?” ஒண்ணுமே தெரியாதது போல் அவன் கேட்க, யதுநாத் யாருக்கும் பதில் சொல்லாமல் நெருப்புக்குள் குதித்தான்.
அதை பார்த்து கத்திய ஊழியர்கள் நெருப்பை அணைக்க முயற்சி செய்யலாயினர். சிலர் தண்ணீர் ஊற்ற, சிலர் தீயணைக்கும் கருவைகளைக் கொண்டு முயன்றனர்.
யாழினியின் அருகில் வந்திருந்த யதுநாத் அவளை ஆராய சுற்றிலும் தீப்பரவியத்தில் வெளியே செல்ல முடியாமல் நடுவில் மாட்டிக் கொண்டவள் அதிக புகையில் சுவாசிக்க முடியாமல் மயங்கி இருந்தாள்.
கதவருகே தீ கொஞ்சம் அடங்கியதும், அவளை தூக்கிக் கொண்டு வெளியேறிய யதுநாத் மருத்துவமனைக்கு விரைந்தான். செல்லும் வழியே மருத்துவமனைக்கு அழைத்திருக்க வழியில்லையே அவளை மருத்துவ அவசர ஊர்தியில் ஏற்றியிருந்தான்.
யாழினியை பார்க்கும் பொழுதே யதுநாத்தின் பதட்டம் கூடியிருந்தது. மயக்கத்தில் இருப்பவள் மருத்துவமனை செல்லும்வரையில் தாங்குவாளா? என்ற சந்தேகம் தோன்றவே அவசர ஊர்தியில் ஏற்றி முதலுதவிக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தான்.
யாழினியை தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதித்து யதுநாத் வெளியே காத்திருக்கையில் போலீஸ் வந்து யாழினியை கொல்வதற்கு குடோனுக்கு தீ வைக்க முயன்றதாகவும் யாழினி ஸ்டோர் ரூமில் இருந்ததால் அதற்கு தீ வைத்திருக்கிறான் என்று அவனை கைது செய்து விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
யதுநாத்துக்கோ ஒன்றும் புரியவில்லை. தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பவள் அவன் உயிர். அவளை அவன் கொல்ல முயன்றானா? என்ன உளறுகிறார்கள் இவர்கள்? முயற்சி என்ன? அப்படியொன்றை அவன் நினைத்துக் கூட பார்ப்பானா?
அருணாச்சலத்தை அழைத்தவன் யாழினி தனியாக இருப்பதை மட்டும் கூறி அலைபேசியை அனைத்து விட்டு போலீசாரோடு கிளம்பினான்.
 யதுநாத்தை காவல்துறை கைது செய்ய காரணமாக அமைந்தது பாலையா. யதுநாத் யாழினியை மீட்க முயற்சி செய்யும் பொழுதே போலீசுக்கு தகவல் கூறியிருந்தான்.  
உண்மையில் ஸ்டோர் ரூமில் டேமேஜான துணிகளைத்தான் போட்டு வைத்திருந்தான். நொடியில் தீப்பற்றக் கூடிய கெமிக்கலை துணிகளுக்கு தெளித்து வைத்திருந்தவன் யாழினியை உள்ளே அனுப்பி தீயை பற்ற வைத்து விட்டு கதவை வெளியே பூட்டி விட்டான்.
கெமிகளின் வாசம்தான் யாழினியின் மூக்கை துளைத்திருந்தது. அது எந்த விதமான கெமிக்கல் என்று அறியாதவளோ எலி மருந்து என்று எண்ணி இருக்க, மின் குமிழின் வெளிச்சத்திலும், கெமிகளின் அதீத வாசத்திலும் தீ பரவுவதை கவனிக்கவில்லை. புகை மூட்டத்தால்தான் தீ பற்றுவதையே கண்டு கொண்டாள்.
கதவின் பக்கம் சென்றால் வெளியே பூட்டியிருந்தது. கதவை தவிர சுற்றியும் தீ பரவியிருக்க, இன்னும் சற்று நேரத்தில் கதவில் தீ பற்றிக்கொள்ளக் கூடும், யாராவது தீ பற்றுவதைக் கண்டு அனைத்துக், தன்னை காப்பாற்றினால் தான் உண்டு. ஆனால் தீயை வைத்ததே வெளியே கதவை பூட்டியவனாகத்தான் இருக்க வேண்டும் என்று கணித்த யாழினி புகையின் காரணமாக மூச்சு விட முடியாமல் மயங்கிச் சரிந்தாள்.
யதுநாத் வந்து அவளை மீட்க முயற்சி செய்யும் பொழுதே, தீ அணைப்பு துறைக்கு அழைக்க வேண்டிய பாலையா அழைத்தது காவல் நிலையத்துக்கு. “குடோனுக்கு தீ வச்சிட்டாங்க” என்று இவன் கத்த போலீஸ் விரைந்தோடி வந்திருந்தது. 
போலீஸ் விசாரிக்கும் பொழுது கதவு வெளியாக பூட்டியிருந்ததாகவும், சின்னையா வெளியே நின்றிருந்ததாகவும், எங்களை பார்த்த உடன் கதவை உடைத்ததாகவும், உள்ளே சென்று ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு வந்ததாகவும், அந்த பெண்ணை காரில் கிடத்தி அழைத்து சென்று விட்டார் என்று கூறினான்.
மொத்தத்தில் ஸ்டோர் ரூமின் கதவை வெளியே பூட்டி அறைக்கு தீ வைத்ததே யதுநாத் தான். எங்களை பார்த்ததும், அவர் அந்த பெண்ணை கொல்ல முயன்றார். நாங்கள் பார்த்ததும் அந்த பெண்ணை காப்பாற்ற முயல்வது போல் நாடகமாடுகிறார் என்ற விம்பத்தை உருவாக்கினான்.
பாலையாவின் வாக்கு மூலம் மாத்திரமன்றி அங்கிருந்த இன்னும் சிலரின் வாக்கு மூலமும் யதுநாத் தான் கதவருகே நின்றிருந்தான். கதவை பூட்டிக் கொண்டிருந்தானா? திறக்க முயன்றானா? தெரியவில்லையென்று கூறியிருக்க, குழம்பிய போலீஸார் யதுநாத் யார்? அவன் யாரை தூக்கிச் சென்றான் என்று விசாரித்ததில் அவள் யாழினி. யதுநாத் காதலிக்கும் பெண். ஆனால் அவன் அண்ணனின் மனைவி என்று தகவல் கிடைத்திருக்க, இது காதல் விவகாரம். தான் காதலித்த பெண். தன்னுடைய அண்ணனை திருமணம் செய்த கோபத்தில் அவளை கொல்ல யாதுனாத்தான் தீ வைத்திருப்பான் என்று போலீசாரே முடிவு செய்திருந்தனர். 
விசாரித்ததில் யாழினியை யதுநாத் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறான் என்று தெரிய வந்ததும் உடனடியாக சென்று அவனை கைதும் செய்தனர்.
யதுநாத்தை தேடி போலீஸ் வீட்டுக்கும் சென்றிருக்க, அவன் கைதானத்தை அறிந்த ஆனந்தவள்ளி தர்மராஜோடு காவல் நிலையம் கிளம்பினாள்.
இதையறிந்த ஈஸ்வரமூர்த்திக்கு குஷியோ குஷி. ஆனால் யாழினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாள் என்று அறிந்ததும் பல்லைக் கடித்தார்.
“அவனுக்கு ஒரு வேலைய கொடுத்தா ஒழுங்கா செய்ய மாட்டானா? அவ சாகணுமே பொழச்சி கிட்டா பிரச்சினையாச்சே அவ நிலைமை என்னான்னு தெரியலையே” பாலையாவை அழைத்து யாழினியை தீக்காயங்களுடனா யதுநாத் அழைத்து சென்றான் எனக் கேட்க,
“எங்க சார் தீ வச்சி பத்து நிமிஷம் கூட ஆகல சின்னையா வந்துட்டாரே. அவ விரல் நகத்துக்கு கூட ஒன்னும் ஆகி இருக்காது” என்றான்.
“அடப் போடா. எவ்வளவு அழகா திட்டம் போட்டுக் கொடுத்தேன் இப்படி சொதப்பிட்டியே. அவ மட்டும் உயிரோடு இருந்தா உன்ன கைகாமிப்பா. நீ என்ன” கடுப்பானார் ஈஸ்வர்.
“கவலைப் படாதீங்க சார். ஹாஸ்பிடல் போய் அவ கதையை முடிச்சிடுறேன்”
“கிழிச்ச. நீ அந்த பக்கம் போயிடாத, நான் போய் என்ன நிலவரம்னு முதல்ல பாக்குறேன். அவ பொழச்சிகிட்டானா நானே என் கையாள அவளை போட்டு தள்ளுறேன்” அலைபேசியை அணைத்த ஈஸ்வரமூர்த்தி மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். 
அங்கு சென்றால் சஞ்ஜீவோடு அருணாச்சலம் தீவீர சிகிச்சையின் முன் அமர்ந்திருந்தார்.
“இவன் எப்போ இங்க வந்தான்? யார் சொன்னாங்க?” என்ற சிந்தனையோடு அருணாச்சலத்தை நெருங்கினார் ஈஸ்வர்.
“என்னாச்சு?”
சஞ்ஜீவ் அவரை முறைத்தவாறே எழுந்துகொள்ள போக, அவன் தோளில் கை வைத்து அழுத்தி அவனை தடுத்த அருணாச்சலம் “வாங்க சார். யாழினி மேடமோட போன்ல இருந்து சாரோட நம்பருக்கு போன் வரவும் எனக்கு போன் பண்ணி சீக்கிரம் ஹாஸ்பிடல் கிளம்ப சொன்னாரு இங்க வந்தா யாருமே இல்ல” தான் ஏன் இங்கு சஞ்ஜீவோடு இருக்கிறோம் என்ற ஈஸ்வரன் கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்த அருணாச்சலம் தொடர்ந்தார்.
“யாழினி அம்மாவுக்கு தீக்காயம் ஒன்றுமில்லை. ஆனால்….” தீக்காயம் இல்லையென்றதும் ஈஸ்வரின் முகம் கோணியது. ஆனால் என்றதில் பிரகாசமாக அருணாச்சலத்தை கூர்ந்து கவனித்தார்.
“நுரையீரலில் புகை நிறைந்ததால் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கினவங்க கோமாவுக்கு போய்ட்டாங்க. அதிக நேரம் கெமிக்கல் புகையில் இருந்ததால பிரைன் டேமேஜ் வேற ஆகியிருக்கு. உயிரை காப்பாத்த முடியாது என்று டாக்டர் சொல்லுறாங்க” என்றவர் ஆழமாக மூச்சை இழுத்து விட்டார்.
சந்தோசத்தில் “நிஜமாவா?” என்றவர் சஞ்ஜீவ் முறைத்த முறைப்பில் முகத்தில் கவலையை கொண்டு வந்து “அப்படியா? அச்சோ…” என்றார்.
“சார் யாழினி அம்மாவைதான் காப்பாத்த முடியல அநியாயமா போலீஸ்ல மாட்டிக்கிட்ட யதுநாத் தம்பிய காப்பாத்திடுங்க” என்றார் அருணாச்சலம்.
“ஆமா இங்க இருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன்தான் போறேன்” என்ற ஈஸ்வர் ஆனந்தமாக கிளம்பிச் சென்றார்.
“எதுக்கு அங்கிள் என்ன அமைதியா இருக்கும்படி சொன்னீங்க. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்தாள ரெண்டு மிதி மிதிச்சாதான் ஆத்திரம் அடங்கும்” ஆவேசமானான் சஞ்ஜீவ். 
“அவர் வாயால உண்மைய வெளிக் கொண்டு வர பொறுமை ரொம்ப முக்கியம் தம்பி. அதான் யாழினிக்கு ஒன்றுமில்லை என்று டாக்டர் சொல்லிட்டாரே. நான் சொன்னதை நீங்க அழுது கிட்டே சொல்லி இருந்தாலும் அவர் நம்பி இருக்க மாட்டாரு. நான் சொன்னதும் எப்படி நம்பிகிட்டு கிளம்பிட்டாரு. நீங்க மட்டும் கோபப்பட்டிருந்தா காரியமே கெட்டிருக்கும்” அருணாச்சலம் புரியவைக்க முயல, அமைதியானான் சஞ்ஜீவ்.
துணிகளில் தீப் பரவ என்னவகையான கெமிக்கலை கலந்தானோ? மேலும் ஐந்து நிமிடங்கள் புகையில் இருந்திருந்தால் யாழினியின் நிலை இதுதான் என்று மருத்துவர் கூறியதைத்தான் அருணாச்சலம் ஈஸ்வரிடம் கூறி அவரை இங்கிருந்து அனுப்பியிருந்தார். அவர் என்ன யாழினியின் நிலைமையை விசாரிக்கவா வந்தார். அவள் உயிரோடு இருக்கிறாளா? தன் திட்டம் சொதப்பி விட்டதா என்று தெரிந்துகொள்ளவே வந்தாரென்று அருணாச்சலத்துக்கு தெரியாதா?
காவல் நிலையத்தில் விசாரணையறையில் அமர்ந்திருந்தான் யதுநாத்.
அவனுக்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. சஞ்ஜீவ் கோமதியோடு கிளம்பும் பொழுதே அவனிடம் வந்து எக்காரணத்தைக் கொண்டும் யாழினியை தனியே விடாதே என்று விட்டுத்தான் சென்றான்.
சரி சரி என்றவன் வேலை இருப்பதனால் தானே பத்மஜா பாக்டரிக்கு தனியாக கிளம்பி சென்றான். யாழினிக்கு வேலை இருப்பதினால் தானே அவளை இங்கு விட்டு சென்றான். அவள் குடோனுக்கு வந்து சேர்வதற்குள் வந்து விடலாம் என்று நினைக்க, ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டவன் வந்து சேர ஐந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டது. கதவை உடைத்து அவளை வெளியே எடுக்க, ஐந்து நிமிடங்கள்.
ஆக மொத்தத்தில் பத்து நிமிடங்கள் புகையில் இருந்திருப்பாள் அந்த பத்து நிமிடங்கள் போதும் அவள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை சும்மா விடக் கூடாது. யதுநாத்தின் உள்ளம் கொதித்துக் கொண்டிருக்க, அந்த அறையை திறந்துக் கொண்டு வந்தான் மாறன் வெற்றி மாறன் {அட நம்ம மணிமாறன் பா… காதலா? சாபமா? ஹீரோ}
நான்கு பக்கமும் கருப்பு நிறத்திலான கண்ணாடியிலான அந்த அறையில் எதுவுமே இல்லை. ஒரு மேசை இரண்டு இருக்கைகள் எதிரெதிரே போடப்பட்டிருக்க, ஒன்றில் யதுநாத் அமர்ந்திருந்தான்.
“காதலிக்கிறேன் என்ற பெயருல ஒரு பொண்ணு பின்னால லோ லோன்னு அலைய வேண்டியது. அவ முடியாது, மாட்டேன்னு சொன்னா கொலை பண்ணுவியா?” என்றவன் மேசையின் மீது ஓங்கி அடித்தான்.
உள்ளே வந்தவன் அவன் பாட்டில் பேசி யதுநாத்தை வெறுப்பேத்த, இவனோ அவனை முறைத்தான்.
“என்னடா முறைக்கிற? ஆளும் மண்டையும். ரைட்டுல விட்டா உன் மூஞ்சி லெப்ட்ல திரும்பிக்கும். ஆனா திரும்ப ரைட்டுக்கா திரும்பவே திரும்பாது. எதுக்குடா பிடிக்கல என்று சொல்லுற பொண்ணுகளா பார்த்து டாச்சர் பண்ணுறீங்க? இப்போ பாரு உன்னால அந்த பொண்ணு உசுருக்கு போராடிகிட்டு இருக்கா. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும். உன் தோலை உரிச்சு தொங்க போடுறேன். 
என்னடா நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ அமைதியாகவே இருக்க? உன் பாட்டி உன்ன பார்க்க வந்தாங்களே அவங்க உன்ன இங்க இருந்து கூட்டிகிட்டு போய்டுவாங்க என்று நினைப்பா? அவங்களால ஒன்னும் புடுங்க முடியாது. கோட்டு கேஸுன்னு அலைய வேண்டியதுதான்”
கதவை தட்டி விட்டு உள்ளே வந்த எஸ்.ஐ கௌதம் “சார் இவரோட அப்பா வந்திருக்காரு இவரை பார்க்கணுமாம்”
“பார்க்கட்டும், பார்க்கட்டும். பாசத்தை பொழியட்டும்” என்றவன் உள்ளே வந்த ஈஸ்வரை நக்கலாக பார்த்தவாறே வெளியேறினான். 
“அப்பா பார்த்தீங்களாப்பா எப்படி பேசிட்டு போறான்னு. நான் யாழினிய கொல்ல முயற்சி செய்ததா சொல்லுறாங்க. நான் போய் யாழினிய கொல்ல பார்ப்பானா? நான் அவளை எவ்வளவு லவ் பண்ணேன் என்று வீட்டுல இருக்குற எல்லாருக்குமே தெரியும். உங்களுக்கு தெரியாதா? சொல்லுங்கப்பா. அவங்க கிட்ட சொல்லுங்கப்பா. நான் என் யாழினிய கொல்லலைனு சொல்லுங்கப்பா” ஈஸ்வரமூர்த்தியை பிடித்து உலுக்கலானான்.
சலனமே இல்லாமல் அவனை பார்த்திருந்தவர் அவன் பிடித்து உலுக்கவும் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “அவளை கொல்ல திட்டம் போட்டதே நான்தான். அந்த பழியை உன் மேல போட்டு உன்ன ஜெயிலுக்கு அனுப்ப பிளான் பண்ணதும் நான்தான்” என்றார்.
“என்ன? என்ன சொல்லுறீங்க? ஏன்?” அதிர்ச்சியோடு கேட்டான் யதுநாத்.
“அது எதுக்கு உனக்கு. யாழினி சீரியஸ் கண்டிஷன்ல இருக்கா. அவ செத்துட்டா அந்த பழி உனக்கு வந்துடும். நீ உள்ள போய்டுவ அது போதும் எனக்கு”
ஈஸ்வரை பார்த்து உதடு வளைத்து புன்னகைத்த யதுநாத். “ஆனா எனக்கு அது போதாதே. எதுக்காக நீங்க யாழினிய கொன்னு என் மேல பழியை போடுறீங்க என்று நான் தெரிஞ்சிக்கணும்” என்று கேட்டான்.
அவன் உடல்மொழியில், குரலிலும் சட்டென்று வந்த மாற்றம் ஈஸ்வரன் கவனத்தில் வந்திருந்தாலும் தந்தை எதற்காக இவ்வாறு கூறுகிறார் என்று அதிர்ந்தவனின் குரல் என்று கருதினார்.
“அதான் சொன்னேனே. நீ அத தெரிஞ்சிக்க வேண்டியதில்லைனு”
“எத? நான் உங்க பையன் இல்ல எங்குறதயா? இல்ல யாழினி உங்க சொந்த பொண்ணு, சொந்த ரெத்தம் எங்குறதயா?” என்று கேட்டு ஈஸ்வரை அதிர வைத்தான் யதுநாத்.
“இது… இது உனக்கெப்படித் தெரியும்?” ஆட்காட்டி விரலை நீட்டி அவனை அதிர்ந்து ஈஸ்வர் நோக்க,
“உங்க லென்ஸை மாத்தினதே நான் தான்” என்று மேலும் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான்.
“நீயா? கண்ணுக்குத் தெரியாத அந்த மூணாவது எதிரி நீயா?” ஈஸ்வர் அதிர்ந்து நோக்க,
“எனக்கு வேண்டியது பதில். யாழினி உண்மையிலயே உங்க பொண்ணுதானா? எதுக்கு உங்க சொந்த பொண்ணையே கொல்ல பார்த்தீங்க? அவளை கொன்னு எதுக்கு என் மேல பழியை போட போறீங்க? உங்களுக்கும் எனக்கும் என்ன பகை?”
சத்தமாக சிரித்த ஈஸ்வர் “பாதி உண்மைய தெரிஞ்சி கிட்டு தான் ஆடினியா? அப்போ முழு உண்மையையும் தெரிஞ்சிகிட்டே ஜெயிலுக்கு போ” யதுநாத் யார் என்ற உண்மையை கூற ஆரம்பித்தார்.

Advertisement