அத்தியாயம் 17
ஈஸ்வர் கனவில் எதையோ பார்த்து அலறுகிறார். அவருக்கு கொஞ்ச நாட்களாக கெட்ட கெட்ட கனவாக தென்படுகிறது. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று அன்னையிடம் புலம்பினாள் கோமதி.
“உன் புருஷன் என்ன மகாத்மாவா? அவரு கனவு கண்டாராம். கண்டது எல்லாம் நடக்கப் போகிறதாம். வாயில நல்லா வருது” மகளை திட்டி விட்டு சென்றாள் ஆனந்தவள்ளி.
அச்சத்தின் உச்சியில் ஈஸ்வருக்கு ஜூரமே வந்திருக்க, தொழிற்சாலைக்கு போக முடியாமல் படுத்த படுக்கையாகி, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்தான் தேறி வரலானார்.
அங்கும் ரேணுகாவின் ஆவி அவரை தொல்லை செய்ய, உலகத்தில் எந்த மூலைக்கு சென்று ஒளிந்துகொள்வது என்று புலம்பினார் ஈஸ்வர். 
“பிரதர் இப்படியே போனா எங்கப்பா மெண்டல் ஹாஸ்பிடலுக்குத்தான் போவாரு. உண்மையை சொல்ல மாட்டாரு” யாழினி தலையில் கைவைக்க,
“போய் தொலையட்டும். எங்கம்மாவ காதல் எங்குற பேர்ல ஏமாத்தி கல்யாணம் எங்குற பேர்ல புள்ளைய பெத்து, அந்த புள்ளையையும் அவங்க கிட்ட இருந்து பிரிச்சி. அவங்க இன்னொரு வாரிசை சுமந்தும் அதையே கொல்ல துணிஞ்சு கொடூரன். உண்மையெல்லாம் அம்மா தெரிஞ்சிக்கிட்டாங்க என்று அம்மாவையே கொன்ன பாவி. பைத்தியமா அலையாட்டு” ஆவேசமாக கத்தினான் சஞ்ஜீவ்.
“டேய் அண்ணா. அவரை கொல்லுறதாலையோ இல்ல அவருக்கு பைத்தியம் பிடிக்கிறதாலையோ அவர் முழுசா தண்டனையை அனுபவிக்க மாட்டாரு. சுய புத்தியோடு இருக்கும் போது தண்டனையை அனுபவிக்கனும். ஜெய்ல இருந்தா தான் அது சாத்தியம்” என்றாள் யாழினி.
“ஜெய்ல தான் இப்போ வி.ஐ.பிகளுக்கு ராஜமரியாதை கொடுக்குறாங்களே. நீ சினிமால பார்த்ததில்லையா? எங்கப்பாவை ஜெய்ல தூக்கி வச்சாலும் சொகுசா இருப்பாரு. அதுக்கு அவர் மெண்டல் ஹாஸ்பிடல்ல இருக்கலாம்” என்றான்
“இல்ல எந்த தண்டனையை அனுபவித்தாலும் அவர் சுயநினைவோடு இருக்கணும்” என்று யாழினி வாக்குவாதம் செய்ய, சஞ்ஜீவ் அவளை முறைக்க ஆரம்பித்தான்.
இதற்கிடையில் கணவனை ஒரு கொடூரமான பிசாசு ஆட்டிப் படைப்பதால் பேயோட்ட ஒரு மந்திரவாதியை வரவழைத்திருந்தாள் கோமதி.
வீட்டில், காரியாலயத்தில் என்று மந்திரம் ஓதி பார்த்தவர் எந்த அமானுஷ்ய சக்தியும் இல்லையென்றார்.
ஏதோ ஒரு போலிச் சாமியாரை அழைத்துக் கொண்டு வந்ததாக கோமதியை ஈஸ்வர் திட்டித் தீர்க்க, சாமியாருக்கோ கோபம் வந்து விட்டது.
“என்னையா போலி என்கின்றாய் உண்மையான ஆவிகளை கூட உன் மேல் ஏவி விட என்னால் முடியும். பாதிக்கப்பட்டவன் கோபத்தில் கதறுவதாக எண்ணி பிழைத்து போ என்று விட்டு விடுகிறேன். இங்கு எந்த ஆவியுமில்லை. பிசாசுமில்லை. நீ செய்த பாவம் உன்னை துரத்துகிறது” என்று சென்று விட்டார்.
கோமதி ஒரு தடவை ரேணுகாவின் ஆவியை பார்த்து அலறியிருக்க, பத்மஜா ஒரு தடவை பார்த்து அலறியிருக்க, சாமிகளும், பூசாரிகளும் வீட்டுக்கு வந்த வண்ணமும், பூஜைகள் நடந்தவண்ணமும் தான் இருந்தன. இதில் உண்மையான சாமியார்களும், போலிச் சாமியார்களும் அடங்கும்.
அவர்களுக்கு சேவகம் செய்கிறேன் என்ற பெயரில் கோமதியும், பத்மஜாவும் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்காமல் பூஜை, பரிகாரம் என்று சதா அலைய வீட்டில் கிரிக்கும், பத்மஜாவுக்கும் இடையிலும் பிரச்சினையும், சண்டைகளும் உருவாக ஆரம்பித்தன.
ஆனந்தவள்ளி தங்களை ஒதுக்கினாலும், தம்பியும், தம்பி சம்சாரமும் அன்போடும் அக்கறையாகவும் இருப்பதால் தன் மகனை கை விட மாட்டார்கள். சொந்தம் விட்டுப் போய் விடக் கூடாதென்று பத்மஜா பிறந்ததிலிருந்தே இவள் உனக்கானவள் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவன் கிரி.
அவனும் பத்மஜாவின் மீது உயிராகத்தான் இருந்தான். பத்மஜாவுக்கு, வாரம் ஒருநாள் மறக்காமல் பண்ணை வீட்டுக்கு சென்று அத்தையையும் அத்தை மகனையும் பார்த்து விட்டு வருவாள்.
வெகுளியான மஞ்சுளாவுக்கு பணம், அந்தஸ்து பற்றியெல்லாம் சிந்தனையில்லை. ஈஸ்வரை போல் அதை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. தன் மகன் தம்பி குடும்பத்தோடு இருக்க வேண்டும். அவனுக்கு சொந்தமென்று யாருமில்லை என்ற எண்ணத்தில் பத்மஜாவின் மனதில் “நீ பெரியவளானால் கிரியைதான் கல்யாணம் கட்டிக்கொள்ள வேணும்” என்று விதைக்கலானாள்.
நாளாக நாளாக கிரிக்குள்ளும், பத்மஜாக்குள்ளும் அவர்களின் குறிக்கோளே அதுதான் என்பது போல் அவர்கள் வளர, மஞ்சுளா இறந்த பின் அது உறுதியானது.
மஞ்சுளா இறந்த அன்று கிரி அழுத அழுகையை பார்த்து கிரி அத்தானுக்கு தன்னை விட்டால் யாருமில்லை என்று முடிவு செய்த பத்மஜா ஆனந்தவள்ளியென்ன ஈஸ்வர் மறுத்துமே கிரியைதான் திருமணம் செய்வதாக பிடிவாதம் பிடித்தாள்.  
ஈஸ்வருக்கு தன் மகள் தன்னை விட கோடிஸ்வரனை திருமணம் செய்ய வேண்டும் என்ற நப்பாசை. அக்காவுக்கு எந்த வாக்கும் கொடுத்திருக்கவில்லையே. சொந்தமென்று வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் அவள் தன் மகனை கொண்டு என் மகளை வளைத்துப் போட நினைத்தாளா? இறந்தவளை தூற்றினான்.
பத்மஜாவின் பிடிவாதத்துக்கு முன்னால யாரும் எதுவும் செய்து விட முடியாததால் கிரிக்கே அவளை திருமணம் செய்து வைத்திருக்க, எல்லா விஷயத்திலும், இருவரும் நகமும் சதையும்தான்அவ்வளவு ஒற்றுமையாக இருப்பார்கள்.
ஆனந்தவள்ளிக்கு ஈஸ்வரைக் கண்டாலே பிடிக்காது. அதனாலயே கிரியை பிடிக்காது. ஆனந்தவள்ளியால் கிரி இந்த வீட்டில் சிறு வயதில் கால் பதிக்க முடியாமல் போனதால் அவனுக்கு பத்மஜாவை தவிர மற்றவர்களை அவ்வளவாக பிடிக்காது.
என்னதான் கோமதி மஞ்சுளாவுக்கு அன்பான நாத்தனாராக இருந்தாலும், கிரியிடம் கொஞ்சம் எல்லையோடுதான் பழகினாள் அதற்கு காரணம் பத்மஜா என்றால் அவள் பயந்தா மாதிரியே நடந்தேறியிருந்தது.
சண்டையே வந்திராத கிரி, பத்மஜாக்குள்ளும் பிரச்சினையென்றால் வீட்டார் அமைதியாக இருப்பார்களா?
என்னதான் கிரியை பிடிக்கா விட்டாலும், பேத்தியை சிடுசிடுத்தாலும் அவர்களை பார்க்கும் போது தானும், தன் கணவனை போலவும் இருக்கிறார்களேயென்று பூரித்துதான் போவாள். “யார் கண் பட்டதோ? ஈஸ்வரா?” ஆனந்தவள்ளிக்கு  பெரும் கவலையாக இருந்தது.
வீட்டில் பெரும் யாகம் நடாத்தி. துஷ்ட ஆத்மாக்களை துரத்தியடிக்க ஏற்பாடும் செய்தவள் பத்மஜாவையும், கிரியையும் அழைத்து இருவரினதும் கையை பிடித்து “உங்களுக்கு கல்யாணமான நாளிருந்து பாத்துக்கிட்டுதான் இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு நான் பார்த்ததே இல்ல. இனிமேலும் சண்டை போடாதீங்க. உங்க ரெண்டு பேரையும் என்னால இப்படி பார்க்க முடியாது” கண்கள் கலங்க கேட்டுக் கொண்டாள். 
கிரியோ வாயை பிளந்தான். இதுநாள் வரை ஆனந்தவள்ளி அவனோடு நேரடியாக ஒரு வார்த்தையென்றும் பேசியதில்லை. அதுவும் கையை பிடித்தவாறு பேசுகிறாள் அதிர்ச்சியில் அவனுக்கு வார்த்தையே வரவில்லை.
“என்ன பாட்டி” பத்மஜா ஆனந்தவள்ளியை கட்டிக் கொண்டு அழ,
“ஐயோ பாட்டி அதெல்லாம் சும்மா நாங்க சண்டையெல்லாம் போட மாட்டோம். நான் வேணா சத்தியம் பண்ணிக் கொடுக்குறேன்” என்றான் கிரிராஜ்.
இதையெல்லாம் பார்த்து  இதனால் வீட்டில் வேண்டாத பிரச்சினை. அம்மாவும், அக்காவும் பயந்தது போல் குழந்தைகளோ, பாட்டியோ பார்த்து பயந்திருந்தால் என்ன ஆவது அதனால் இதை நிறுத்தி விடுமாறு யாழினி சஞ்ஜீவோடு சண்டை போட ஆரம்பித்தாள்.
எதுவும் நடக்காது என்று தங்கையை முறைத்தான் சஞ்ஜீவ். அவள் பேச்சைக் கண்டுகொள்ளவேயில்லை.
எதுவோ செய்துகொள் மாட்டிக் கொண்டால் தர்ம அடி நிச்சயம் உண்டு என்று அண்ணனை பதிலுக்கு முறைத்தாள்.
ஆவி, பேய் என்று பணத்தை வீணடிப்பதாக ஆனந்தவள்ளி வேறு கத்த ஆரம்பித்திருக்க,  சரி தங்கை சொல்கிறாளே என்று அறையிலும், காரியாலய அறையிலும் பொருத்தியிருந்த கருவியை அகற்றியிருந்தான் சஞ்ஜீவ்
பணம் என்றதும் பதுங்கும் புலியான ஈஸ்வரமூர்த்தி நிதானமாக யோசிக்க ஆரம்பித்தார். அவர் யோசிக்க ஆரம்பித்தாலே அடுத்தவருக்கு பிரச்சினை என்று தெரியாதா?
ரேணுகா இறந்து இருபத்தியொரு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவளது ஆவி எதற்காக இப்பொழுது தன்னை பழிவாங்க வந்திருக்கின்றாள்? ஆவியாக வருவதென்றால் அவள் இறந்த அன்றேயல்லவா வந்து தன்னை கொன்றிருக்க வேண்டும். அப்படியென்றால் இந்த ஆவி ஆட்டம் கூட யாரோ செய்த ஏற்பாடா? யாரோ என்ன? சஞ்ஜீவும், யாழினியும் தான் செய்திருப்பார்கள் என்று சரியாக கண்டுபிடித்திருந்தார். 
ஆனால் நான் பார்த்த உருவத்தை அருணாச்சலம் ஒரு தடவையாவது பார்க்கவில்லையே அது ஏன்? அப்படியென்றால் அருணாச்சலமும் அவர்களோடு கூட்டா? இருக்காதே. அருணாச்சலம் மாமனார் எனக்காக ஏற்பாடு செஞ்சவர். அவர் ஒருநாளும் எனக்கு எதிரா வேலை செய்ய மாட்டார்.
ஆனால் இத்தனை வருடங்கள் கடந்தும் அவர் ரேணுகாவை சரியாக நியாபகம் வைத்திருப்பது சந்தேகத்தை வரவைக்கிறது.
அடுத்த கணம் மாமனார் சோமசுந்தரம் அருணாச்சலத்தை தன்னிடம் வேலையில் சேர்க்கும் பொழுது “நியாபக ஷக்தி ரொம்ப அதிகம் மாப்புள, ஆட்களை கூட பல வருடங்கள் நியாபகம் வைத்து சரியாக அடையாளம் சொல்லுவான். தம்பிய கூடவே வச்சிக்கோங்க” என்றது நியாபகம் வரவே, அதனால் கூட அருணாச்சலம் கேட்டிருக்கலாம் என்று அவர் மீதிருந்த சந்தேகப் பார்வையை சற்று தளத்தினாலும், தன் கண்களுக்கு மட்டும் எப்படி ஆவி தெரியுது? என்ற சந்தேகம் தீராமல் குழம்பினார்.
கணணியை வைத்து ஆவியை கண்டு பிடிக்கும் ஒரு குழுவை ஈஸ்வர் அழைத்திருந்தார். அதை அருணாச்சலம் சஞ்ஜீவிடம் தெரிவித்திருக்க, நல்லவேளை கருவிகளை அகற்றி விட்டேன். இல்லையென்றால் மாட்டிக்கொண்டிருப்பேன் என்று தனக்குள் கூறிக் கொண்டான். 
அந்த குழு வந்து அறையை சுற்றிப் பார்த்து சோதனை செய்தவர்கள் உண்மையில் எந்த ஆவிகளும் கிடையாது. ஆவிகள் இருப்பது போல் கருவிகள் இருக்குமா என்று பார்க்குறோம் என்று சொல்ல,
“என்னது பேய்கள் இருப்பது போல் தோற்றமளிக்கும் கருவிகள் இருக்கா?” அதிர்ச்சியோடு ஆச்சரியமும் அடைந்தார் ஈஸ்வர்.
“இந்த காலத்துல என்ன சார் இல்ல” என்றவாறே அறையை சோதித்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
உண்மையிலயே ஆவியாக இருக்கக் கூடாது. கருவி ஏதாவது பொருத்தியிருந்தால் அது சஞ்ஜீவும் யாழினியும் தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களை ஒரு வழி செய்ய வேண்டும் என்று கருவிக் கொண்டிருந்த ஈஸ்வர் “ஒண்ணுமே இல்லையா?” ஏமாற்றமாக கேட்டவர் மூக்குக்கண்ணாடியை கழட்டி நெற்றியை தடவலானார்.
“சார் உங்க கண்ணாடியை கொடுங்க” என்று அதை வாங்கிப் பார்த்து விட்டு “உங்க லென்ஸ்லயே விம்பம் உருவாக டிவைஸ் பொருத்தியிருக்காங்க” என்றார் வந்தவர்களில் ஒருவரான ராஜேஷ்.
“என்ன சொல்லுறீங்க? அதனாலதான் நான் பார்த்த உருவத்தை அருணாச்சலத்தால பார்க்க முடியலையா? ஆனா இந்த ரூம்லயும், என் பெடரூம்லயும் மட்டும்தானே தெரியுது” குழம்பிக் கேட்டார் ஈஸ்வர்.
“சூரிய வெளிச்சத்துல இது வேலை செய்யாது. அறை குறிப்பிட்ட வெளிச்சத்துல இருக்கும் பொழுது மட்டும்தான் விகாரமான உருவங்கள் கண்களுக்குத் தெரியும்” என்றார். 
“அட ஆமாம்பா.. அறைக்குள்ள நுழையும் பொழுதுதான் அதிகமா பார்த்திருக்கேன்” என்றார். கோமதியும் பத்மஜாவுக்கு ஆவியை பார்த்து அலறியதை அக்கணம் மறந்துதான் போனார் ஈஸ்வர். ஆவி பயத்தில் மிரண்டுக் கொண்டிருந்தவருக்கு மற்றவர்களை பற்றிய சிந்தனையும், கவலையும், கவனமும் இருக்கவில்லை. அதனால் வீட்டில் நடக்கும் பேச்சுவார்த்தைகளும் தெரியவில்லை. பிரச்சினைகளும் தெரியவில்லை.
அதன்படி அருணாச்சலம் சிக்கவில்லை.
“ஸ்மார்ட் ஒர்க். நீங்க சமீபத்துல உங்க மூக்குக்கண்ணாடியை சரிபார்க்க கொடுத்த இடத்தில் வைத்து லென்ஸை மாற்றி இருக்காங்க”
“அப்போ அறைல எந்த கருவியும் இல்லையா?”
“அறையில் கருவி ஏதாவது இருந்தா அடிக்கடி உங்க ரூமுக்கு வந்து போறவங்கள சந்தேக லிஸ்ட்ல கொண்டு வந்து கண்டு பிடிச்சிருக்கலாம்”
அதைத்தான் ஈஸ்வரும் நினைத்தார். அப்படியாயின் இது சஞ்ஜீவ் மற்றும் யாழினியின் வேலை இல்லையா? அந்த மூன்றாவது நபர் யார்? என்று புரியாமல் குழம்பினார்.
“ஏன் சார் கண்ணாடியை சரி பார்க்க நம்பிக்கையான, சிட்டிலையே பேர் போன இடத்துல தானே கொடுத்திருப்பீங்க. போலீஸ் காம்ப்ளைன் கொடுத்தா யார் பார்த்த வேலை என்று கண்டு பிடிக்கலாம்” என்றார் ராஜேஷ்.
அவர் சொல்வது சரியென்று தோன்ற போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து விசாரணையை தீவிரப்படுத்த சொல்ல, எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.
அருணாச்சலத்தின் மூலம் இதை அறிந்து கொண்ட சஞ்ஜீவ் அதிர்ந்தான். “தான் மட்டும்தான் அவருக்கு எதிரியென்று நினைத்தால் வேறொருவனும் அவரை பழிவாங்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான் போலும். அதுசரி செய்த பாவங்கள் கொஞ்சமா? நஞ்சமா? யார் யாருக்கு என்னென்ன கொடுமைகளை செய்து வைத்திருக்கின்றாரோ?” என்று அருணாச்சலத்திடம் கூறியவன் யாழினியிடமும் கூறினான்.
“நல்லவேளை யாரோ எதுவோ செய்யப் போய் அவர் சந்தேகம் நம்ம பக்கம் திரும்பவில்லை” என்று நிம்மதியடைந்தாள் யாழினி. 
வளமை போல் தொழிற்சாலையிலிருந்து திரும்பும் பேரன்களிடம் அன்றையை வேலைகளை பற்றிக் கேட்க வெளியே அமர்ந்திருந்தாள் ஆனந்தவள்ளி. அங்குதான் பத்மஜாவுக்கு குழந்தைகளுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள்.
சஞ்ஜீவ் யாழினியோடு வந்தவன் வளமை போல் அன்றைய வேலைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் பொழுது யதுநாத்தின் வண்டி நுழைவாயினுள் நுழைந்தது. கோமதியும் ஆவி பிரச்சினை ஓய்ந்தது, வீட்டில் பிரச்சினை ஓய்ந்து கணவன் நிம்மதியாக இருக்கின்றானே என்று கோவிலுக்கு செல்ல தயாராகி வந்தாள். 
இந்த கொஞ்சம் நாட்களான யதுநாத் கூடுதல் கவனம் எடுத்து தொழிற்சாலை வேலைகளை செய்து வருவதை ஆனந்தவள்ளி கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றாள். 
வழக்கத்துக்கு மாறாக யதுநாத் அமைதியாக ஏதோ ஒரு சிந்தனையிலையே இருக்கின்றான். யாழினியை சீண்டுவதுமில்லை. அதிகம் பேசுவதுமில்லை. முறைப்பதுமில்லை. இது எல்லாம் கூட முத்தம்மாவின் கவனத்தில் விழத்தான் செய்திருந்தது. 
அனுபவமிக்க அவளுக்கு தெரியாதா? எதை எந்த நேரத்தில் பேச வேண்டுமென்று? தன் அருகில் அமர்ந்து அன்றைய வேலைகளை ஒப்புவிக்க கோப்பை கையில் எடுத்த பேரனை தடுத்து கொஞ்சம் நாட்களாக நீ ஒரு மாதிரியாக இருக்கிறாய். அது நல்லதுக்கா? அல்லது கெட்டதுக்கா தெரியவில்லை. யாழினிக்கும் சஞ்ஜீவுக்கும் திருமணம் நிகந்து விட்டது. அவள் உன் அண்ணி. நீ அவளை நினைத்து குடித்து உன் வாழ்க்கையை வீணடிக்கலாம் என்று நினைக்கிறாயா? அல்லது வேறு திருமணம் செய்து கொண்டு வாழ முயற்சி செய்கிறாயா என்று கேட்க,
“வல்லவராயன் கிட்ட பேசுங்க, உங்க ஆசைப்படியே நான் நிவேதிதாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.
அவன் திருமணத்துக்கு சம்மதிப்பான் என்று வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. சம்மதம் தெரிவித்தது மட்டுமல்லாது, ஆனந்தவள்ளிக்கு பிடித்த குடும்பத்தில் பெண்ணெடுக்க சம்மதம் தெரிவித்தது மேலும் வியப்பைக் கூட்டியது.
இந்த பேச்சு நிகழும் பொழுது யதுநாத்துக்கு எதிரேதான் யாழினி அமர்ந்திருந்தாள். இதை கேட்டு யாழினியின் மனதில் வலி ஏற்பட்டாலும் இது தானே நிதர்சனம், இது தானே தான் எதிர்பார்த்தது. இது தானே நடந்தேறனும் என்று மனதை தேற்றிக்கொள்ள முயன்றாலும், அவள் முகம் அவள் மனத்தைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று எழுந்து புன்னகையோடு அறைக்கு நடந்தாள்.    
அறைக்கு வந்தவள் தாங்க முடியாமல் அழுது கரையலானாள். சஞ்ஜீவை அண்ணனாக ஏற்றுக்கொண்ட அவள் மனமோ யதுநாத்தை அண்ணனாக ஏற்றுக்கொள்ள முரண்டு பிடிக்கலானது. அது அவள் அவன் மீது வைத்திருக்கும் காதலால் தான் என்று உணராதவளோ அவனை அவளிடமிருந்து ஒதுக்கி வைப்பதிலையே குறியாக இருந்தாள்.
அவனுக்கு திருமணமாகி விட்டால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடும் என்று எண்ணி இருக்க, இன்று அவனே திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த பின் தான் ஆனந்தக் கண்ணீர் தானே வடிக்க வேண்டும். ஏன் தன்னுடைய இதயம் இவ்வளவு வலிக்கிறது என்று புரியாமல் ஏங்கி ஏங்கி அழுதாள்.
யதுநாத் மறுத்தால் அவனால்தான் சஞ்ஜீவ் மற்றும் யாழினியின் திருமணம் தள்ளிப் போகிறது என்று அவனை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற கஷ்டம் ஆனந்தவள்ளிக்கு இருக்கவில்லை.
வல்லவராயனை வீட்டுக்கு சென்று சந்தித்து பேசியதில் நிவேதிதாவே யதுநாத்தை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருந்தாள்.
அன்று மறுத்தவள் இன்று எதற்காக சம்மதித்தாள் என்று யாரும் யோசிக்கவுமில்லை. கேள்வி கேட்கவுமில்லை. யதுநாத் மற்றும் நிவேதிதாவின் சம்மதம் கிடைத்ததில் திருமணத் திகதியை குறித்தாள் ஆனந்தவள்ளி.
தான் போட்ட திட்டம் எதுவுமே நடக்கவில்லை. யாழினியை எதற்காக கல்பனாவிடம் கொடுத்தேன்? யதுநாத் அவளை காதலித்தும் தான் நினனைத்தது நடக்கவில்லையே என்று ஈஸ்வரமூர்த்தி கோபத்தில் குதித்துக் கொண்டிருக்க, அவரின் அலைபேசி அலறியது.
“என்ன மிஸ்டர் ஈஸ்வரமூர்த்தி பையனுக்கும், பொண்ணுக்கும் கல்யாணமாமே. நான் சொல்லுறது பையனுக்கு வேற பொண்ணோட இல்ல உங்க சொந்த பொண்ணோட கல்யாணமாமே. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக்கொண்டு நிக்குறேன். வரேன். ஆதாரத்தோடு வந்து சஞ்ஜீவும், யாழினியும் உங்க பொண்ணு, ரேணுகா உங்க மனைவி என்று சொல்லுறேன். எனக்காக காத்துக் கொண்டு நில்லுங்க” என்றது அந்தக் குரல்.
யார் அழைத்தார்கள்? என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள் ஈஸ்வரமூர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணுக்கு தெரியாத எதிரியை விட, கண்முன்னால் நிற்கும் ஆதாரத்தை அழித்து விடுவதுதான் புத்திசாலித்தனம் என்று ஈஸ்வரரின் குறுக்குப்புத்தி அவருக்கு யோசனை கூற யாழினியை கொலை செய்ய முடிவு செய்தார்.
ஈஸ்வரமூர்த்தி ஒரு பதுங்கும் புலி. எதையுமே திட்டம் போட்டு செய்து முடிப்பவர். அவருக்கு தவறிய ஒரே விஷயம் ரேணுகாவின் மரணம் தான்.
தான் வைத்த மிச்சம்தான் தன்னை துரத்துகிறது என்று அவருக்கு நன்கு தெரியும். ரேணுகா தன்னை காதலித்ததையும் தன்னை மணந்ததையும் அறிந்த ஒரே ஜீவன் ரேணுகாவின் தோழி தான்.
ஒருவேளை ரேணுகா சஞ்ஜீவை பற்றி தோழியிடம் கூறி இருந்தால், அவள் சஞ்ஜீவை சந்தித்து எல்லாவற்றையும் கூறி இருந்தால் அவளோடு சேர்ந்து சஞ்ஜீவ் இதையெல்லாம் செய்வதாக இருந்தால்? என்று அவர் மூளை எடுத்துரைக்க,
அப்படியாயின் யாழினியிடம் அவள் என் மகள் என்று யார் சொன்னது? அவளை நான் கல்பனாவிடம் கொடுத்தது யாருக்கும் தெரியாதே. குழம்பித் தவித்தார் ஈஸ்வரமூர்த்தி.
இல்லை. முதலில் ரேணுகாவின் தோழியை தஞ்சை சென்று சந்திக்க வேண்டும் அவள்தான் சஞ்ஜீவுக்கு உண்மையை கூறியிருந்தால் அவள் குடும்பத்தையே கொன்று விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தோழியை தேடித் சென்றால் அவளோ குடும்பத்தோடு ஆஸ்ரேலியாவில் குடிபெயர்ந்து பத்து வருடங்களாகின்றனவாம். அப்படியாயின் யார்? யோசித்தவருக்கு நியாபகம் வந்தது தலைமை மருத்துவர்.
அவர் இப்பொழுது எங்கு இருக்காரே? என்று அவரை தேடினால் அவர் இறந்து விட்டாராம். அப்படியென்றால் யார்? தன்னிடம் கண்ணாமூச்சியாட்டம் ஆடுவது?
சஞ்ஜீவிடம் உண்மையை கூறியது கூட பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. நான் தான் உன் தந்தை வேண்டுமானால் ஒரு டி.என்.ஏ பரிசோதனை எடுத்துக் பார்க்கலாம் என்று நிரூபித்து விடலாம். 
பிரச்சினையே யாழினிதான். அவள் எதற்காக இந்த பூமியில் ஜனித்தாலோ அதற்கான வேலையே நடக்கவில்லையென்றான பின் அவள் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும். அவள் என் மகள் என்று நிரூபணமானால் வீண் பிரச்சினைகள் உருவாகும். அதற்கு முன் அவளை கொன்று விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
யாழினியை கொல்லவும் வேண்டும். அது இயற்கையாக இருந்தால் நல்லது. ஆனால் சஞ்ஜீவ் தன் சட்டையை அல்லவா பிடிப்பான்.  
எது செய்தாலும் தன் மீது சந்தேகம் வராமல் செய்வதில் ஈஸ்வர் கைதேர்ந்தவர். ஏற்கனவே சஞ்ஜீவ்  தன் மீது சந்தேகம் கொண்டு யாழினியின் பாதுகாவலனாக அவளுடனே இருக்கிறான். அவனை மீறி அவளை கொல்வதென்றால் சிரமம்.
தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் யாழினியை கொன்றதாக அந்த யதுப் பயல மாட்டி விட்டு ஜெய்ல களி திங்க வைக்க முடிஞ்சா நல்லா இருக்கும். அவன் வேற கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிச்சதால அதற்கும் சந்தர்ப்பம் கம்மிதான்.
“யோசி… ஈஸ்வர். யோசி..” பைத்தியம் பிடிக்காத குறைதான். 
முதலில் அவளை தனிமை படுத்த வேண்டும். அவள் சாகும் இடத்தில் யது இருந்தாலே போதும் அவன்தான் யாழினியை கொலை செய்ததாக போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்தார்.
அவளை எவ்வாறு கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவர் அதற்கு அவளை சஞ்ஜீவிடமிருந்து பிரிக்க வேண்டும். தான் எந்த வேலைக்கு கொடுத்தாலும் அவன் செய்ய மாட்டான் அதனால் கோமதியின் மண்டையைக் கழுவி அவனை அவளிடம் பேச வைத்து சஞ்ஜீவை கோமதியோடு வெளியே அனுப்பி வைத்தார்.
அதற்காக ஈஸ்வரமூர்த்தி தேர்வு செய்தது அவர் குடோனுக்கு செல்லும் நாளைத்தான். அவருக்கு உடம்பு முடியவில்லையென்று கூறி தர்மராஜை அழைத்து வேறு யாராவதை அனுப்புமாறு கூறினார்.
“சஞ்ஜீவ் தம்பி அவங்கம்மாவோட கல்யாண வேலையா வெளிய போய் இருக்காராம். யதுநாத் தம்பி பத்மஜா பக்டரிக்கு போய் இருக்காரு”
“அப்போ நாளைக்கு பாத்துக்கலாம்”
“இல்ல சார். இன்னைக்கே வேலைய முடிச்சாகனும். நான் போய் ஒன்னும் பண்ண முடியாதே. நா வேணா யாழினிய அனுப்பவா?” தர்மராஜ் யோசனையாக கேட்க,
“நீங்க போயே வேல நடக்காது என்று சொன்னீங்க. அவ சின்ன பொண்ணு. உங்க அனுபவம் கூட இல்லையே. அவ போய் என்ன பண்ணப் போறா?” தன் நினைத்தது நடக்கிறது என்ற சந்தோஷத்தை மறைத்தவாறே கேட்டார் ஈஸ்வர்.
“இல்ல சார் யாழினி முதல்ல போய் வேலைய கவனிக்கட்டும். நான் யதுநாத் தம்பிக்கு போன் பண்ணி சொல்லி அவரை அங்க அனுப்பிடுறேன்” என்றார்.
“சரி அப்போ நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்ற ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு கிளம்பினார்.
அவர் வேலைக் கொடுத்தால் சந்தேகப்படுவாள் அல்லது உஷாராகி விடுவாளென்று தர்மராஜை அழைத்து தன் திட்டப்படி யாழினியை குடோனுக்கு அனுப்பி வைத்தவர் அவள் உள்ளே சென்றதும் கதவை வெளியே பூட்டி குடோனுக்கே தீ வைக்க ஏற்பாடு செய்தார்.
தன் காதலை ஏற்றுக்கொள்ளாததால் யதுநாத்தான் யாழினியை கொல்ல முயன்றதாக போலீஸ் அவனை கைது செய்திருந்தது.