Advertisement

அத்தியாயம் 16
அனைவரும் தொழிற்சாலைக்குச் செல்ல கிளம்பி வர யாழினியை வீட்டிலையே இருக்கும்படி கூறி இருந்தான் சஞ்ஜீவ்.
“வீட்டில் இருப்பதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ பாக்டரிக்கு கிளம்பி வந்தால் அப்பா உனக்கு ஏதாவது வேலைக் கொடுத்து தனியாக அனுப்பி விடக் கூடும். அவ்வாறு அனுப்பி உன்னை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு. ரிஸ்க் எடுக்க முடியாது” யாழினி மறுத்தும் அவளை வர வேண்டாம் என்று சஞ்ஜீவ் விட்டுச் சென்றான்.
படிகளில் இறங்கி வந்த யதுநாத் யாழினி சஞ்ஜீவை வழியனுப்பி வைப்பதைப் பார்த்துக் கடுப்பானான்.
“என்ன மேடம் கல்யாணம் ஆகிருச்சேன்னு வேலைக்கு லீவு போட்டீங்களோ? பாஸ கல்யாணத்துக்கும் இன்வைட் பண்ணல. கல்யாணத்துக்கு லீவும் கேட்கல. நீங்களா லீவ் எடுத்துக் கிட்டீங்களா? பெரிய வீட்டு மருமகளாகிட்ட திமிறுல நீங்களே வேலைய விட்டு நின்னுடலாம்னு முடிவு செஞ்சிட்டீங்களோ” எள்ளலாகவே கேட்க,
யதுநாத் பேசியத்திக் கேட்டு “வீட்டுல மூத்த பையன மயக்கி கல்யாணம் பண்ணிக் கொண்டா வீட்டுச் சாவிக்கொத்தை கைப்பற்றலாம் என்ற நினைப்பாக்கும்” என்று கோமதி பேச
“இவளுக்கு இந்த நினைப்பு வேற இருக்கா?” பத்மஜா வாய் விட்டே கேட்டிருந்தாள். 
“வீட்டிலிருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று வீட்டிலிருந்தால், வேண்டாத வம்பெல்லாம் வரும் போல் இருக்கே” என்று யோசித்த யாழினி “இல்ல பாஸ் அவர் வேற வேலையா வெளிய போய்ட்டுதான் பாக்டரிக்கு வருவாராம். அவரை வழியனுப்பி வச்சிட்டு இதோ நானும் கிளம்பிட்டேன்” என்றவள் கைப்பையை எடுக்க அறைக்குச் சென்றாள்.
அவள் மீது கோபத்தில் இருப்பவன் அவளை விட்டுட்டுத்தானே பக்டரிக்கு கிளம்பிச் செல்ல வேண்டும். அவனோ அவள் வரும்வரை வாசலில் தவம் கிடந்தான்.
அவளுக்கு தங்களது வீட்டிலிருந்து பாக்டரிக்கு பஸ்ஸில் வர வழி தெரியாது. என்னதான் அவள் மீது கோபம் இருந்தாலும் அவள் வழி மாறி சென்று ஏதாவது ஆகி விட்டால் என்ற அவன் காதல் கொண்ட இதயம் கொஞ்சமே கொஞ்சம் அவளுக்காகப் பதை பதைத்துக் காத்துக் கிடக்க யாழினியோ அவனைக் கடந்து சென்றாள்.
பல்லைக் கடித்தவன் அவளை இழுத்து வண்டியில் அமர்த்தி இருக்கை பட்டையையும் போட்டு விட்டு வண்டியைக் கிளப்பி இருந்தான்.
இதைப் பார்த்த கோமதி “ஏன் டி எப்பயும் இல்லாம அவன் அவளை திட்டுறானே என்று நானும் சந்தோஷப்பட்டேன். இவன் என்னைக்கி அவளைத் திட்டி இருக்கான். திட்டுறது போலத் திட்டி அவளை அவன் கூடவே கூட்டிட்டு போய்ட்டான் பார்த்தியா”
“ஆமா. சஞ்ஜீவ் அவளை வீட்டுல இருக்க சொன்னதை நானே கேட்டேன். நாம வேற தேவையில்லாம பேசி அவளை அவன் கூட அனுப்பி வச்சிட்டோம். என்ன நடக்கப் போகுதோ” பதறினாள் பத்மஜா.  
வண்டியில் அமர்ந்திருந்த யாழினி எதுவுமே பேசவில்லை. தான் அவ்வளவு பேசியும் இவன் தன்னை விடாது துரத்துகின்றானே என்ற கோபம் அவளுக்குக் கனன்றது.
அவளுக்கு எங்கே தெரியப்போகிறது அவனது காதலின் ஆழமும், வலியும், வேதனையும்.
அவனிடம் உண்மையைக் கூறியிருந்தால் அழுது கரைந்தாவது மனதைத் தேற்றி இருந்திருப்பான். இப்படி அவனை முள்ளாய் மாறி குத்திக் கிழித்தாலும் அவள் மீது கொண்ட காதலால் அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று எண்ணி அவளை நெருங்கி வருகிறானே.
அவனிடம் உண்மையைக் கூறினால் அவன் உடைந்து விடுவான் என்று இவளாய் நினைத்துச் சொல்லாமல் தவிர்ப்பதும், அதனால் இவன் இவளை வெறுப்பதும், காதலால் நெருங்குவதும் என்று கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கும்.
யதுநாத்தின் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பவே அதைப் பார்த்தவன் புருவம் உயர்த்தினான்.  யோசனையாகவே வண்டியோட்டியவன் யாழினியிடம் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே பாக்டரியை வந்தடைந்தான்.
இவர்கள் உள்ளே வரும் பொழுது சஞ்ஜீவ் தர்மதுரையோடு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தான். யாழினியைப் பார்த்து புருவம் உயர்த்தியவன் அவளருகே வந்து “உன்னைத்தான் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி வீட்டில் இருக்கச் சொன்னேனே” என்று யதுநாத்திடம் அவளைக் கோர்த்து விட்டான்.
“அப்படியா?” எனும் பார்வையை யாழினியின் புறம் வீச இவள் என்னவென்று சொல்வாள்? இருவரையும் முறைக்கவும் முடியவில்லை. பல்லைக் கடித்தவாறு அமைதியாக நின்றிருந்தாள்.  
சஞ்ஜீவை பார்த்து “அவ என் பி.ஏ. நான் லீவ் கொடுக்கவுமில்லை. வேலைய விட்டு போறதா ரெசிக்னேஷன் லெட்டர் கொடுக்கவுமில்லை. பின்ன எப்படி வீட்டுல இருக்கலாம். ஆ… வேலைக்குச் சேரும் பொழுதே எக்காரணத்தைக் கொண்டும் இரண்டு வருடங்களுக்கு வேலையை விட்டு நிற்கக் கூடாது என்று எக்ரிமெண்ட்டுல சைன் பண்ணி இருக்கா” என்றான்.
“இது வேறயா?” என்று யாழினியைப் பார்த்தவன் “சரி போ… உன்ன என் கூட வேலை செய்ய ஏற்பாடு செய்யிறேன்” என்றான் சஞ்ஜீவ். 
சொன்னவன் நேராகச் சென்றது தந்தையை காணத்தான். யாழினி என் மனைவி என்று ஆரம்பித்தவனைக் கேலியாக ஈஸ்வரமூர்த்திப் பார்க்க, “சரி கூடிய சீக்கிரம் ஆகப் போறவ. அவ இனிமேல் என் கூட என் ஆபீஸ்ல வேலை பார்க்கட்டும்” என்றான்.
அவனுக்கு எந்த பதிலையும் கூறாமல் அலைபேசியை எடுத்து யதுநாத்தை அழைத்த ஈஸ்வரமூர்த்தி யாழினியை அழைத்துக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.  
“இப்போ எதுக்கு அவனை வர சொல்லுறீங்க?” பல்லைக் கடித்தான் சஞ்ஜீவ்.
அவன் என்ன பேசினாலும் நேற்று என்னை அலறவிட்டதற்கு உனக்கு இருக்குடா என்பதைப் போல் காதை குடைந்தவாறு அமர்ந்திருந்தார்.
யதுநாத்தோடு யாழினியும் வந்து சேர ஈஸ்வரமூர்த்தி கூறும் முன்பாகவே சஞ்ஜீவ் யாழினி தன்னோடுதான் வேலை பார்க்க வேண்டும் என்று கூறினான்.
“ஒரு விசயத்த முதல்ல புரிஞ்சிக்கணும் பிரதர். உறவு, வீட்டு பிரச்சினை எல்லாம் வீட்டோட வச்சுக்கணும், பாக்டரிக்கு வந்தா வேலைய மட்டும்தான் பார்க்கணும்” என்றான் யதுநாத்.
“யாரு எத சொல்லுறது என்ற விவஸ்த்தையே இல்ல” யாழினி முணுமுணுக்க, அது யதுநாத்தின் காதில் தெளிவாக விழுந்து மெல்லிய புன்னகையை முகத்தில் தோற்றுவித்திருந்தாலும் சிரமப்பட்டு அடக்கியவன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டதோடு அவள் புறம் திரும்பவேயில்லை.
“அது எனக்குத் தெரியாதா? யாழினி விசயத்துல நீ” என்று சஞ்ஜீவ் ஆரம்பிக்கும் பொழுதே
“அதான் அவனே சொல்லிட்டானே. இதுக்கு மேல என்ன இருக்கு?” என்ற ஈஸ்வரமூர்த்தி வெளியேறினார்.
சஞ்ஜீவும் யாழினியும் திருமணமானதாக நாடகமாடுவது தெரியும். யாழினி யதுநாத்தோடு  இருந்தால் அவள் மனம் அவன் புறம் சாயும், அவனும் அவளை விடமாட்டான் என்று திட்டம் போட்ட ஈஸ்வர், தான் அங்கிருந்தால் சஞ்ஜீவ் பேசியே யாழினியை அவனோடு தங்க வைத்துக் கொள்வான் என்று புரியக் கிளம்பி விட்டார்.
“நான் பார்த்துக்கிறேண்ணா… உன் கூட தானே வேலைக்கு வரப்போறேன். உன் கூடத்தான் வீட்டுக்கு போகப்போறேன். மதியம் உன் கூடத்தான் சாப்பிடப் போறேன். நீ ப்ரீயாகிறப்போ வந்து என்ன பாத்துக்க” என்ற யாழினி யதுநாத்தை பார்த்தவாறே கூற,
அவள் சஞ்ஜீவை “அண்ணா” என்றா அழைத்தாள். தன் காதில் சரியாகத்தான் விழுந்ததா? அல்லது தனக்கு அவ்வாறு கேட்டதா? ஒரு நொடி குழம்பியவனை இவர்கள் சிந்திக்க விட்டால் தானே  
“சரி போ…” என்று சஞ்ஜீவ் சொன்னதும் “வாங்க பாஸ்” என்று யதுநாத்தை அழைத்தாள் யாழினி.
அவளோடு மின்தூக்கியில் நுழைந்தவனோ மூன்றாம் தளத்துக்கான பொத்தானை மாத்திரமன்றி நான்காம் தளத்துக்குண்டான பொத்தானையும் சேர்த்து அழுத்த யாழினி அவனைக் கேள்வியாக ஏறிட்டாள்.
“நீ ஆபீஸ் போ… எனக்கு இந்த ப்ளோர்ல வேலை இருக்கு” என்றவன் அவளின் பதிலையும் எதிர்பாராமல் வேகமாக வெளியேறி இருந்தான்.
“என்ன சார் தம்பிய சமாளிக்க முடியலையா?” அருணாச்சலம் சஞ்ஜீவை பாவமாகப் பார்க்க,
“அவன் கிட்ட உண்மைய சொல்லவும் முடியல, அவன் வேற யாழினிய லவ் பண்ணுறேன்னு லூசுத்தனமா சுத்திக் கிட்டு இருக்கான். உண்மை தெரிஞ்சா அவன் நிலைமை என்னவாகுமோ என்ற பயத்திலையே அவன் கிட்ட சொல்லாம இருக்கேன்”
“என்ன சொல்லுறீங்க? அப்போ உங்க அப்பா நினைச்சதை சாதிச்சிட்டாரா?” உளறி இருந்தார் அருணாச்சலம்.
யதுநாத்தை பற்றிய உண்மைகளை அறிந்திருக்கும் சிலரில் அருணாச்சலமும் ஒருவர். ஆகையால் ஈஸ்வரமூர்த்தி யாழினியைக் யதுநாத்தின் பி.ஏவாக நியமனம் செய்ததே காரண காரியத்தோடு தான் என்று சந்தேகப்பட்டார். அவர் சந்தேகப்பட்டது போலவே யதுநாத் யாழினியை காதலிக்க ஆரம்பித்திருக்க, வருந்தினார்.
“நீங்க என்ன சொல்லுறீங்க? எனக்கு புரியல” சஞ்ஜீவ் புருவம் உயர்த்தினான்.
“அத விடுங்க சார். அவர் யாருக்கு என்ன நல்லது பண்ண போறாரு. கெடுதி மட்டும் தானே நினைப்பார். அவர் வாயால் உண்மைய சொல்ல வைக்க என்ன பண்ண போறீங்க? நான் ஏதாவது உதவி செய்யணுமா?” குடும்ப இராச்சியங்களை குடும்பத்தார்தான் கூற வேண்டும். என்னதான் தன்னிடம் நம்பிக்கை வைத்து நல்ல விதமாகப் பேசினாலும் இந்த விஷயத்தைத் தான் சொல்லலாகாது என்றே மறைத்தார் அருணாச்சலம்.
“எங்களுக்கு உதவி செய்ய நீங்க மட்டும்தான் இருக்கிறீங்க அங்கிள். இன்னும் எதுக்கு என்ன சார் என்று கூப்பிடுறீங்க. தம்பி என்றே கூப்பிடுங்க ப்ளீஸ்” என்றவனை அருணாச்சலம் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் பார்த்தார்.
“சொல்லுங்க தம்பி என்ன உதவி செய்யணும்?” மன நிறைவோடு கேட்டார்.
“கல்பனா அம்மாக்கு பெண் கொழந்த பொறந்ததாக சொன்னீங்க. அந்த குழந்தையை எங்கப்பா என்ன பண்ணார் என்று உங்களால கண்டு பிடிக்க முடியுமா? அந்த காலத்து சீசீடிவியுமில்ல. ஹாஸ்பிடல் ரெகார்டும் இருக்காது”
“கவலை படாதீங்க தம்பி எப்படியாவது கண்டு பிடிக்கிறேன்” என்றார் அருணாச்சலம்.
அவருக்கு நன்றி கூறிய சஞ்ஜீவ் மின்தூக்கியினுள் நுழைந்தான்.  
மதிய உணவுக்காக யாழினி சஞ்ஜீவின் அறைக்குச் செல்ல காத்திருக்க, யதுநாத்தோ  அவளைச் செல்ல விடாது வேலைக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.
“யாழினி பசிக்கலையா?” என்றவாறு சஞ்ஜீவ் யதுநாத்தின் அறைக்குள் நுழைந்ததும் தான் அவள் முகத்தில் புன்னகையே வந்தது.
அதைப் பார்த்து யதுநாத்துக்கு கடுப்பாக இருந்தாலும் அமைதியாகவே “என்ன இந்த பக்கம்” என்று விசாரித்தான். 
அவனது கேள்வியிலும் யாழினியின் முக மாற்றத்திலும் என்ன நடந்திருக்கும் என்று புரிந்துகொண்டவன் “இங்கயே சாப்பிடலாம்” என்று கொண்டு வந்த உணவை கடைபரப்பியவாறே “யது நீயும் எங்களோடு ஜோஇன் பண்ணிக்கிறியா?” என்று கேட்டான்.
இதுநாள் வரை வீட்டில் காலை உணவைத் தவிர இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்டதில்லை. சஞ்ஜீவ் அழைத்ததுமில்லை. யதுநாத் அழைத்ததுமில்லை. யாழினியின் பக்கம் இவன் இனி திரும்பவே கூடாது என்று சஞ்ஜீவ் அழைக்க,
அதைப் புரிந்துகொண்டு “இல்ல நீங்க சாப்பிடுங்க. எனக்கு பசிக்கல” என்றான்.
பசிக்கவில்லை என்று சொன்னானே தவிர, இருவரையும் கண்களாலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சஞ்ஜீவ் யாழினிக்கு ஊட்டி விடுவதென்ன, யாழினி சஞ்ஜீவுக்கு பரிமாறுவதென்ன, அவள் சாப்பிடும் பொழுது உதட்டில் ஒட்டியிருந்த சோற்றுப் பருக்கை இவன் எடுத்து விட, அவன் இருமினால் இவள் தண்ணீர் கொடுப்பதென்று  பார்ப்போருக்கு அவர்கள் அன்னியோன்னியமான தம்பதியர்களாகத்தான் தோன்றும். ஆனால் வெகுநாள் பிரிந்திருந்த சகோதரர்கள் கூட பாசமாக ஊட்டிக் கொள்வார்களேயானால் இவ்வாறுதான் இருக்கும் என்று அந்த இரு உள்ளங்கள் மட்டும்தான் அறிந்திருந்தன.
யதுநாத்தை வெறுப்பேற்ற ஊட்டிக்கொள்ள ஆரம்பித்தவர்கள் உண்மையான பாசம் ஊற, சிரித்துப் பேசியவர்களாக அவனை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவர்கள் மீது வெறுமையான பார்வையை வீசிக் கொண்டிருந்தான் யதுநாத்.  
விழாவில் நடந்த அசம்பாவிதம் அரசால் புரசலாக தொழிசாலையிலுள்ளவர்களுக்கு தெரிய வந்திருந்தாலும், சஞ்ஜீவ், யாழினி திருமண செய்தி தெரிய வந்திருக்கவில்லை.
யாழினியை யதுநாத்தோடு பார்த்தது, சஞ்ஜீவ் அவளிடம் ஓடிச் சென்று பேசியது என்று சிலர் கண்களில் விழுந்திருக்க, விழாவுக்கு வந்தவர்களுக்கு கல்பனா கூறிய உண்மை மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தது.
யதுநாத் கொடுத்த வேலை விஷயமாக இரண்டாம் மாடியிலுள்ள துணிகள் தைக்கும் பகுதிக்கு வந்தவள் தைத்த சாம்பல் துணிகளை சேகரித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது சில பெண்கள் யாழினியின் காதுபடவே அவளைத் திட்ட, அதிர்ந்தவள் அதைக் கண்டுகொள்ளாது வந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அங்கு வந்த ஈஸ்வரமூர்த்தியின் காதிலும் அவர்கள் யாழினியைத் திட்டுவது விழுந்திருக்க, கண்டும் காணாதது போல் சென்று விட்டார்.
நினைவு தெரிந்த நாளிலிருந்து அன்னையின் அன்புக்காக ஏங்கியவள், அவளது பாசம் கிட்டவில்லையென்றதும் தந்தையை தானே தேடினாள். அவளுக்கு மட்டும் ஏன் இப்படியொரு தந்தை அமைந்து விட்டார் என்று உள்ளம் வெம்பியவள் அவர்கள் திட்டியதை விடச் சொந்த தந்தையே புறக்கணிப்பதையும், தன்னை வெறுப்பதையும் தாங்க முடியாமல் உதடு கடித்து அழுகையை அடக்கியவாறு மின்தூக்கியில் ஏறினால் அங்கும் இவளைப் பற்றித்தான் பேச்சு.
விம்மும் உள்ளத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அறைக்கு வந்தவள் சாம்பிள் துணிகளை அங்கேயே  போட்டு விட்டு கழிவறைக்குள் ஓடி கதவைச் சாத்தியிருந்தாள்.
யாழினி அறைக்குள் வரும் பொழுதே முகம் சிவந்திருப்பதைக் கவனித்த யதுநாத் “யாழினி கதவைத் திற, என்னாச்சு?” என்று கதவைத் தட்டலானான்.
“நீ இப்போ கதவை திறக்கலைனா நா கதவை உடைச்சிக் கொண்டு உள்ள வந்துடுவேன்” என்று இவன் கத்த
தன்னால் நிம்மதியாக அழக் கூட முடியாதா? என்ற கோபத்தில் கதவைத் திறந்தவள் அவனை வசைபாட ஆரம்பித்தாள்.
யதுநாத்துக்கு அவளைப் பார்த்து கோபம் வரவில்லை. சிரிப்பாக இருந்தாலும் அமைதியாக இருந்தான்.
திட்டி முடித்தவள் சாம்பிள் துணிகளை அவன் கையில் கொடுத்து விட்டு அவளுக்குக்  கொடுத்த மற்ற வேலையில் மூழ்கினாள். 
விழாவில் நடந்ததைக் கொண்டு ஆளாளுக்கு பேசுவதாகவும், கேள்வி கேட்பதாகவும் அவன் காதுக்கும் வந்திருக்க, அதை அவன் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. கண்டிப்பாக யாரோ யாழினியை ஏதாவது கூறி இருப்பார்கள் என்று புரிந்து போக,   “சாரி உன்ன தனியா அனுப்பினது என் தப்புதான்” என்றான்.
“உங்க தப்பு ஒண்ணுமில்ல. கூடவேவா வர முடியும். வேலைய பார்க்கணும் இல்ல” என்றவள் அவனைத் திட்டியதற்காக மன்னிப்புக் கூட கேட்கவில்லை.
தான் அன்னையின் வயிற்றில் இருக்கும் பொழுதே தன்னைக் கொல்லத் துணிந்தவர், தன்னை மகளாக ஏற்றுக்கொள்ளாதவர் தன்னை யார் அவமதித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்தான். அவர் தன்னைக் கண்டுகொள்ளவில்லையென்று தான் கவலையடைவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று தன்னையே திட்டிக் கொண்டாள். எரிந்து கொண்டிருந்த அவள் உள்ளத்தில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க,
அவளையே சில கணங்கள் யோசனையாக பார்த்திருந்த  யதுநாத் தனதிருக்கையில் வந்தமர்ந்து வேலையில் மூழ்கினான்.
அவன் வேலையில் மூழ்கும்வரையில் காத்திருந்தவள் அலைபேசியை எடுத்து நடந்ததை அண்ணனுக்குக் குறுஞ்செய்தியாகத் தட்டி விட்டாள். வீட்டுக்குச் செல்லும் வரையிலும் அவளிடத்தில் பொறுமையில்லை. நெஞ்சம் தீயாய் எரிந்துகொண்டிருக்க, ஈஸ்வரமூர்த்தியை ஏதாவது செய்தே ஆகா வேண்டும் என்று எண்ணினாள்.
சின்ன வயதில் அவளைக் கேலி செய்தவர்களை அவள் தனியாகத்தான் பழிவாங்கினாள். அவளுக்கு உதவி செய்ய யாரும் இருக்கவுமில்லை. தனக்கு இருப்பது ஈஸ்வரமூர்த்தியின் எண்ணங்களும், சிந்தனையும் என்று நொந்து கொண்டவள், அவர் இரத்தமல்லவா என் உடம்பில் ஓடுகிறது என்று மெதுவாக முணுமுணுக்க வேறு செய்தாள்.
தன்னை கேலி செய்தவர்கள் கூடச் செய்வது தவறு என்று தெரியாமல் செய்தார்கள். அந்த வயதில் நான் கோபத்தில் செய்தேன். ஆனால் ஈஸ்வரமூர்த்தி என்கிற ராட்சசன் எல்லாம் தெரிந்து செய்தவன் அவனை சும்மா விடக் கூடாது என்று கருவிக் கொண்டாள். என்ன செய்வது? அவர் நிம்மதியை எவ்வாறு கலைப்பது என்று இவள் சிந்திக்க,
சஞ்ஜீவிடமிருந்து “டென்சன் ஆகாதே” என்ற பதில் வந்தது.
அந்த சத்தத்தில் அவள் புறம் திரும்பிய யதுநாத் “வேலை செய்யும் பொழுது மொபைலை ஆப் பண்ணி வைக்கலாம்ல” என்றான்.
அவனை முறைத்தவள் அலைபேசியை சைலன்ட் மூடில் போட்டாள். ஆனால் அவளால் வேலையில் முழுமனதோடு ஈடுபடத்தான் முடியவில்லை.
“என் தங்கையை கஷ்டப்படுத்தியது தந்தையானாலும் சும்மா விட மாட்டேன்” என்று சஞ்ஜீவ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பி இருக்க, அதை யாழினி பார்க்கவே இல்லை. யதுநாத் கொடுத்த வேலையை செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள்.
இங்கே ஈஸ்வரமூர்த்தியின் அலைபேசி அலறியதில் அவருக்கு குறுஞ்செய்தியில் வந்த புகைப்படத்தைப் பார்த்து அரண்டு விட்டார் மனுஷன்.
ரேணுகாவின் இளமைக்கால புகைப்படமொன்றை ப்ரைவட் நம்பரிலிருந்து யாரோ அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
“யார் இதை அனுப்பி இருப்பார்கள்? ரேணுகாவை பற்றிய உண்மைகளை தெரிந்தவர்கள் யார்?” என்று நடுங்கித்தான் போனார். 
இந்த புகைப்படத்தை அனுப்பியவற்றின் நோக்கம்தான் என்ன? பணமா? பணமாக இருந்தால் தன்னை அழைத்து பிளாக்மெயில் செய்திருப்பார்களே. வேறு என்ன? பதுங்கும் புலியான ஈஸ்வர் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தார்.
தான் கல்பனாவின் மகளல்ல உனக்கு பிறந்தவள் என் அன்னையை நீ கொல்ல முயன்றது எனக்குத் தெரியும் என்று கூறிய யாழினியின் மீது ஈஸ்வரமூர்த்திக்கு சந்தேகம் வர அவளை அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார்.
“நீ தான் எனக்கு இந்த போட்டோவை அனுப்பியதா?” என்று நேரடியாகவே கேட்டு அவள் முகபாவனைகளை படிக்க முயன்றார்.
“யார் இவங்க?” என்று யாழினி அவரை திருப்பிக் கேட்டவள் “ஓஹ்… இவங்கதான் என் அம்மாவா?” என்று ரேணுகாவின் புகைப்படத்தை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தவள் அந்த புகைப்படத்தை தன் அலைபேசிக்கு மாற்றிக் கொண்டாள்.
அவள் செய்கைகளை நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருந்த ஈஸ்வரமூர்த்திக்கு யாழினி பொய் சொல்வது போல் தெரியவில்லை.
ஆம் சஞ்ஜீவ் தான் அவருக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தான்.
அது அவரை பதட்டமடையச் செய்யும் என்று தெரிந்தே அனுப்பி இருந்தான். புகைப்படத்தை அவருக்கு அனுப்பியதை பற்றி யாழினிக்கு குறுஞ்செய்தி தட்டி விட்டிருந்தாலும் அவள் அலைபேசி அமைதியாக இருந்ததில் அவள் அதை கவனிக்கவில்லை. அதனால் ஈஸ்வரமூர்த்திக்கு புகைப்படத்தை அனுப்பியது இவர்கள்தான் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. 
“இவ உன் அம்மா என்று நான் சொன்னேனா? உன் அம்மா கல்பனா” என்று ஈஸ்வரமூர்த்தி சீற,
“நான் தான் சொன்னேனே என் அம்மா வயித்துல இருக்கும் பொழுது நீங்க பண்ண எல்லாத்தையும் நான் கேட்டுகிட்டு இருந்தேன் என்று. என்ன அப்பா, அம்மா முகம்தான் தெரியல. அப்பா நீங்க என்று கண்டு பிடிச்சிட்டேன். அம்மா யார் என்கிறதையும் இதோ நீங்களே சொல்லிட்டீங்க. வறேன்ப்பா…” என்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
“இவர்களுக்கும் தனக்கும் நடுவில் இருந்து கொண்டு விளையாடும் மூன்றாவது மனிதர் யார்? ரேணுகாவை பற்றி யாழினிக்கு தெரிந்திருக்கவில்லை. நானாகத்தான் அவளை அழைத்து கூறி விட்டேன். அவள் ரேணுகாவை பற்றி தோண்டித் துருவ ஆரம்பித்து விடுவாள். இப்பொழு என்ன செய்வது?” குழப்பத்துக்குளாகி, பதட்டத்துக்குமுள்ளானார் ஈஸ்வரமூர்த்தி.
நாட்கள் நகர நகர ஈஸ்வரமூர்த்தியின் நிம்மதி பறிபோனது. ரேணுகா தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மாத்திரமன்றி, ஈஸ்வரமூர்த்தியோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவர் அலைபேசிக்கு வந்த வண்ணம் இருக்க, அதை யார் அனுப்புகிறார்கள்? எதற்காக அனுப்புகிறார்கள் என்று அறியாமல் குழம்பித் தவித்தார்.
போதாததற்கு சஞ்ஜீவும், யாழினியும் வேறு அவர் முன்னிலையில் சிரித்துப் பேசி அவரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.
அடுத்து ரேணுகாவின் ஆவியை தனது காரியாலய அறையில் பார்த்து அலறி மயங்கி விழுந்தார் ஈஸ்வரமூர்த்தி.
தொழிற்சாலைக்கு ஈஸ்வரமூர்த்திதான் அனைவருக்கும் முன்னாடியே வருவார். அவரது காரியாலையம்தான் ஐந்தாம் மடியில் இருக்கும். அந்த மாடியில் அவரையும் அருணாச்சலத்தையும் தவிர யாரும் இருக்கவும் மாட்டார்கள்.
காலையில் வந்து கதவை திறந்தவர் யாரோ ஒரு பெண் முதுகு காட்டி நிற்பதிக் கண்டு அதிர்ந்து “யார்மா நீ. நீ எப்படி என் ரூமுக்குள்ள வந்த?” என்று கேட்டதும் தான் தாமதம்,  அவர் புறம் திரும்பிய  ரேணுகாவாக இருந்த உருவம் சட்டென்று கொடூர உருவமாக மாறி அவர் அருகில் வந்து நிற்க மயங்கி சரிந்தார் ஈஸ்வர்.
அருணாச்சலம்தான் வந்து அவரை தட்டியெழுப்பி தண்ணீர் புகட்டியிருந்தார்.
“பேய் பேய்” என்று ஈஸ்வர் கத்த
“பேயா? என்ன சார் சொல்லுறீங்க?” அருணாச்சலம் முழிக்க, “ஒன்றுமில்லை” என்று சுதாரித்தார்.
இதை பற்றி அருணாச்சலம் சஞ்ஜீவிடம் கூற,  தான் தான் தந்தையை மேலும் கலவர படுத்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அவரது காரியாலய அறையில் ரேணுகாவின் ஆவி இருப்பதாக அவரை நம்ப வைக்க முயன்றதாக கூறினான்.
“ஏன் தம்பி எது பண்ணாலும் கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுங்க. நான் ஒரு ஹார்ட் பேர்ஷன்” என்று சொல்ல சஞ்ஜீவ் சிரித்தான்.
அடுத்து வந்த நாட்களில் ஈஸ்வரமூர்த்தியின் தூக்கம் பறிபோனது. காரியாலய அறைக்குள் நுழையவே பயந்தார்.
அவரது காரியாலயத்துக்கு வெளியே இருக்கையை போட்டு அமர்ந்திருந்த அருணாச்சலத்தை தன்னோடு அமர்த்திக்கொள்ள “நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகிட்டு இருந்தேன். இப்போ உங்கப்பாவையே பார்த்துகிட்டு இருக்க வச்சிட்டீங்களே” சஞ்ஜீவிடம் புலம்பித்தீர்த்தார் அருணாச்சலம்.
“நல்லது அங்கிள் எங்கம்மா ஆவி அவர் கண்ணுக்கு மட்டும்தான் தெரியும். தெரியணும். உங்க கண்ணுக்கு தெரியாக் கூடாது” என்றான்.
அவ்வாறே அருணாச்சலம் கூட இருக்கும் பொழுதே ரேணுகாவின் ஆவி ஈஸ்வரின் அருகில் வந்து நிற்க, ஈஸ்வர் அருணாச்சலத்திடம் ஓடி வந்திருந்தார்.
“என்ன சார்?”
“பேய் பேய் ரேணுகாவோட பேய்”
“ரேணுகாவோட பேயா? ரேணுகா? நீங்க எக்சிடண்ட் பண்ண பொண்ணு இல்ல. அந்த பொண்ணு எதுக்கு பேயா அலையிறா? ஆமா, அந்த பொண்ணு எதுக்கு பேயா வந்து உங்கள பயமுறுத்தணும்?” அச்சப்படுவது போல் நடித்தவாறே கண்களை நாளா புறமும் சுற்றி அறையை அளந்தவர் தன் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றார் அருணாச்சலம்.
சுதாரித்த ஈஸ்வரமூர்த்தி அமைதியானார். 
காரியாலய அறையில் மட்டுமல்லாது வீட்டிலும் ரேணுகாவின் ஆவி தெரிய ஆரம்பித்திருக்க, கனவிலும் அலற ஆரம்பித்தார் ஈஸ்வர். என்ன? ஏது? என்று கேட்கும் கோமதியிடம் கூட பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார்.

Advertisement