Advertisement

அத்தியாயம் 15     
விக்னேஷை தேடிச் சென்ற ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மருத்துவமனையில் முடமாகப் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது.
தன்னிடம் வாங்கிய பணத்துக்கு மாடமாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான் என்று பார்த்தால் இவன் மனைவி பிச்சை எடுக்காத குறையாக என் பக்டரில வேலை செய்கிறாள். இவனுக்கு இந்த நிலைமை. பணத்தை என்ன செய்தானோ என்றெண்ணியவாறே சென்று அவனைப் பார்க்க ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்த உடனே அடையாளம் கண்டுகொண்டான். 
“வாங்க சார் என் நிலைமையை பார்த்தீங்களா? பணம் காசுதான் பெருசு என்று என்ன உண்மையா காதலிச்ச கல்பனாவை புரிந்துக்கொள்ளாமல் அவளை ரொம்பவும் கொடுமை படுத்தினத்துக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனையை கொடுத்துட்டாரு” தான் ஒரு சாத்தானிடம் வேதம் ஓதுவதை அறியாத விக்னேஷ் சிரித்தவாறுதான் கூறினான்.
இரவோடு இரவாக கல்பனா தஞ்சாவூரிலிருந்து கோயம்புத்தூர் கிளம்பிச் சென்றதை அறியாமல் அவளைத் தேடாமல், பணம் இருந்தால் போதும், தொல்லை தீர்ந்தது என்று சதா குடித்துக் கொண்டு  அலைந்தவனை லாரி அடித்துத் தூக்கி எறிந்ததில் பல வருடங்களாக மருத்துவமனை வசம்தான்.
அடுத்தவரின் உதவி தேவைப் படும் தறுவாயில் தான், தான் மற்றவர்களுக்குச் செய்த பிழையை உணர்ந்து திருந்துகிறான் மனிதன். விக்னேஷும் அதில் ஒருவன். ஆடிய ஆட்டம்தான் என்ன? கடைசியில் அந்த பணத்தால் கூட அவனைக் குணப்படுத்த முடியாது என்பது தான் உண்மை. 
விக்னேஷின் நிலைமை மட்டுமல்ல அவன் இருக்கும் அரசமருத்துவமனையை பார்க்கும் பொழுதே அந்த புகைப்படத்தை ஒளிபரப்பச் செய்ததற்குப் பின்னால் விக்னேஷ் இருப்பதாகத் தெரியவில்லை.
அவனிடம் புகைப்படத்தைப் பற்றிக் கேட்டால் வருடக் கணக்கில் படுத்த படுக்கையாக இருக்கும் என்னிடம் இதைக் கேட்கவா வந்தாய்? நோயாளியை பார்க்க வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கேள்வி கேட்டு வேறு குடைகிறாயா? “அந்த புகைப்படம் வீட்டில் தான் இருந்தது. வீடே வாடகை வீடுதான். பொருட்களைத் தூக்கிப் போட்டுட்டு ஓனர் வேறு யாருக்காவது வீட்டை வாடகைக்கு கொடுத்திருப்பார். அந்த போட்டோவுக்கு என்ன ஆச்சு என்று எனக்குத் தெரியாது” என்றான்.
அவனிடம் இதற்கு மேல் கேட்டுப் பிரயோஜனம் இல்லை என்று புரிந்துக்கொண்ட ஈஸ்வர் வெளியேறினார்.
பணத்துக்காக அந்த புகைப்படத்தை கைப்பற்றி இருந்தால் விக்னேஷை போல் தன்னை மிரட்டியிருக்கலாம், வீட்டில் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டியே அதை ஒளிபரப்பி பிரச்சினையை உண்டு பண்ணி விட்டார்கள். யார்? என் கண்ணுக்குத் தெரியாத எதிரி? யோசித்தவருக்கு எதுவும் தோன்றவில்லை.
கோமதியைத் திருமணம் செய்த பின் கிடைத்த பணமும் அந்தஸ்தினாலும் தன்னுடைய பெரியப்பாவின் குடும்பத்தின்  மீதிருந்த கோபம் கூட ஈஸ்வரமூர்த்திக்கு கரைந்தோடியிருந்தது. பெரியப்பா தங்களை இவ்வாறெல்லாம் நடாத்தவில்லையென்றால் தான் கோமதியைத் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்க மாட்டேன் என்ற எண்ணம்தான்.
ஆனாலும் தான் வாழ்ந்த வீட்டை மீளப் பெற  வேண்டும் என்ற எண்ணம் உதிக்க பெரியப்பாவிடம் பேசிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் உருவாகவில்லை. அக்காவை கொடுமைப் படுத்திய பெரியம்மாவையும் பெரியப்பாவையும் ஆளை ஏற்பாடு செய்து விபத்துக்குள்ளாக்கி மேலோகம் அனுப்பி வைத்தார் ஈஸ்வரமூர்த்தி.
பெரியப்பாவுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. அவர்களைக் கொன்றுதான் தங்களது வீட்டைப் எடுத்துக்கொள்ள வேண்டுமா? வீட்டை பெரியப்பா பையன் பெயரில் எழுதி வைத்திருப்பதை அறிந்ததும் அவனுக்குப் பணத்தாசைக் காட்டி சூதாட்டத்தில் ஈடுபடச் செய்து சொத்தையெல்லாம் இழக்க செய்து தன்னுடைய வீட்டை ஏலத்தில் வாங்கி இருந்தார்.
எல்லாவற்றையும் திட்டம் போட்டுச் செய்து முடிக்க ஈஸ்வரமூர்த்திக்கு மூன்று வருடங்கள் ஆகி இருந்தன.
அப்படிப்பட்ட ஈஸ்வரமூர்த்தி தலைமறைவான கல்பனாவையும் அவளிடம் கொடுத்த தான் பெற்ற மகளையும் தேடாமலா இருந்திருப்பார். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்திருந்தமையாளையே கோயம்புத்தூரிலுள்ள ஆடை தொழிற்சாலையை வாங்கினார்.
ஆடியபாதத்தை மிரட்டி வாங்கியதாக வதந்திகள் பரவினாலும், அதன் பின்னணியிலிருந்தது ஈஸ்வரமூர்த்தி தான்.
தான் தான் ஆடை உற்பத்தியில் ராஜாவாக இருக்க வேண்டும் என்றுதான் மாமன் இவ்வாறு செய்வதாக கிரி நினைக்க உண்மையான காரணம் ஈஸ்வரமூர்த்தி என்ற மனிதர் மட்டும்தான் அறிந்திருந்தார்.
இவ்வாறு தனது திட்டத்தில் குறுக்கே வந்த அந்நியர்களின் யாராவது கல்பனாவுடனான புகைப்படத்தை ஒளிபரப்பு செய்திருப்பார்களோ? என்ற சிந்தனையிலேயே ஈஸ்வரமூர்த்தி வீட்டை நோக்கிப் பயணப்பட்டார்.
யாழினியிடம் இன்றே தனிமையில் பேசியாக வேண்டும் என்று முடிவு செய்த யதுநாத் அனைவருக்கும் முன்பாக சாப்பிட்டு விட்டு யாழினியின் அறைக்குள் சென்று மறைந்து நின்று கொண்டான்.
அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தவாறு அறைக்குள் வந்த யாழினியின் வாயைப் பொத்தி யதுநாத் அறையை தாழிட அதிர்ந்தவள் அது அவன்தான் என்றதும் அவனிடமிருந்து விடுபட்டு முறைகலானாள்.
“என்னதான் வேணும் உங்களுக்கு?”
“பதில் வேணும்” என்றவனோ அவளது கட்டிலில் போய் சட்டமாக அமர்ந்துக் கொண்டான்.
அவன் கேட்பதற்கு பதில் சொல்லாமல் இங்கிருந்து போக மாட்டான் என்று புரிய “என்ன தெரிஞ்சிக்கணும்” இவளும் தெனாவட்டாகவே கேட்க,
“சஞ்ஜீவும், நீயும் லவ் பண்ணுறதாக சொன்னீங்க, அது பொய்யென்று அவனே சொல்லிட்டான். நீ அவனை சந்திக்கவே சந்தர்ப்பம் அமையாத போது எங்க லவ் பண்ணி இருக்க போற? நீ சொன்னது எல்லாமே பொய். அதற்கு காரணம் கூட எங்கப்பா உன் அப்பா என்ற சந்தேகம்தான்.
அந்த சந்தேகம் உறுதியாகுறது போல, உன் அம்மா கூட அந்த போட்டோ திரைல வந்தது, அப்பொறம் உங்க அம்மா சொன்ன உண்மைகளால என் அப்பா உன் அப்பாயில்லையென்று ஆகிருச்சு.
நீ என் தங்கச்சி என்று தெரிஞ்ச அந்த நிமிஷம் நான் செத்தே போய்ட்டேன். ஆனா கடவுள் அப்படி ஒன்றும் கல்நெஞ்சுக்காரர் இல்லனு சந்தோஷப்பட்டேன். அந்த சந்தோஷம் நீடிக்கல நீ என் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க கொண்டு வந்து நிக்கிற. அதுவும் தாலி கட்டாம” என்று அவளை அலற விட்டான்.
“எனக்கு தெரிஞ்சி சஞ்ஜீவ் உன்ன மிரட்டித்தான் கல்யாணம் செஞ்சி இருக்கான். அதனாலதான் நீ அவனுக்கு ஆதரவாக பேசுற. அவன் உன்ன என்ன சொல்லி மிரட்டுறான் என்று நீ சொன்னாதான் என்னால உன்ன அவன் கிட்ட இருந்து காப்பாத்த முடியும்” என்றவன் அவளையே பார்த்திருந்தான்.
 “இவன் என்ன சொல்கிறான். சஞ்ஜீவ் உன்னை மிரட்டித்த திருமணம் செய்தான் என்கின்றானா? திருமணமே நடக்கவில்லையென்கின்றானா? சட்டென்று யாழினியால் அவன் பேச்சின் சாராம்சம் புரியவில்லை.
நீ என் தங்கையென்றதில் நான் இறந்து விட்டேன் என்றதுதான் அவள் மனதில் ஈட்டியைப் பாய்ந்திருந்தது. அதுதானே உண்மை. 
தந்தையைப் பற்றின உண்மைகள் குடும்பத்தாருக்குத் தெரிய வரும் பொழுதே இவனுக்கும் தெரிய வரட்டும் என்று இருப்பது எதனால்? அந்த உண்மையை இவனிடம் கூறினால் இவன் துடித்துப் போய் விடுவான் என்றுதானே கூற மறுக்கின்றாள்.   
இவன் இவளிடம் காலம் காலமாக காதலித்தவர்களைப் போல் உரிமை எடுத்துக் கொண்டால் அவள் சொந்த அண்ணனையே திருமணம் செய்ததாகப் போட்ட நாடகத்துக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும் அல்லவா.
“அவர் என்னை மிரட்டித் திருமணம் செய்து கொண்டதாக உங்களிடம் யார் சொன்னது? நீங்களாகவே கற்பனை செய்து பேசுவதா?
நான் அவரை காதலித்ததாகச் சொன்னதும் பொய். நாங்க இருவரும் காதலித்ததாகச் சொன்னதும் பொய்தான். அதற்கு காரணம் என்னவென்று நீங்களே சொல்லிட்டீங்க.
நேத்து நடந்த பிரச்சினையால் நான் இந்த வீட்டு மருமகளானாதான் ஆளாளுக்கு பேசுறத நிறுத்துவாங்க. இதற்கு ஒரே வழி நம்ம திருமணம்தான் என்று அவர் சொன்ன பொழுது ஏன் நான் உங்களை திருமணம் செய்ய சம்மதிக்கல என்றுதானே உங்க கேள்வியாக இருக்கணும்” யதுநாத்தின் உயிர்நாடியையே உலுக்கினாள் யாழினி.
“நீங்க ஒரு பிளேபாய் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அது மட்டுமில்ல. இந்த மாதிரியான குடும்பத்துல பிறந்து கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாதவங்களோடதான் உங்க சகவாசம். அதனாலயே எனக்கு உங்கள பிடிக்கல. உங்கள விட கிளாஸா. பார்க்க டீசண்ட்டா இருக்குற உங்க அண்ணன் தான் எனக்கு பொருத்தமா இருப்பார் என்று முடிவு செஞ்சேன். அவரையே கல்யாணமும் பண்ணிக்க கொண்டேன். உங்க கேள்விக்கு பதில் கிடைச்சதா?” முகத்தில் அடித்தது போல் பதில் கூறியவள் வெளியேறுமாறு கதவின் பக்கம் கை நீட்டி இருந்தாள்.
அவளது பதிலில் அவனது சப்த நாடியும் ஒடுங்கியது.
சஞ்ஜீவை போல் இவன் இருந்திருந்தால் யாழினி போன்ற பெண்ணை காதலித்திருப்பானா? என்று கூட யோசிக்காமல் பேசுபவளை என்ன செய்வதாம்? அவனுக்குக் கோபம் எகிறிக் கொண்டு வந்தது.
சஞ்ஜீவ் இவளை மிரட்டி திருமணம் செய்திருப்பான் என்று நினைத்தால் சொகுசாக வாழ்வதற்கு அவன் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டேன் என்று வாய்க் கூசாமல் சொல்கிறாளே.
ஒருத்தன் நான்கு வருடங்களாக அவளை நேசிக்கிறான் என்று தெரிந்தும் சஞ்ஜீவை திருமணம் செய்திருக்கிறாள் என்றால் பணம், அந்தஸ்து, வசதி மட்டும் இவளுக்கு போதவில்லை. கிளாஸா வேணுமாம் கிளாஸா.
சட்டென்று பாய்ந்து அவள் கழுத்தைப் பிடித்தவன்  “உன் ஏழ்மையை தெரிஞ்சிதான் நான் உன்ன காதலிச்சேன். உனக்குள்ள இருக்குற ஈனபுத்தி என் கண்ணுக்கு தெரியல. அதனாலதான் நான் உன் பின்னாடி அவ்வளவு அலைஞ்சும் என் காதலை ஏத்துக்கலயா நீ. எவனாச்சும் பணக்காரன் சிக்கினா போதும் என்று நினைக்கிற பொண்ணுகளை நீ வித்தியாசமானவைதான் டி” கைகொட்டி சிரித்தவன்
“நான் ஒரு பிளேபாய் என்று நீ உன் கண்ணால பார்த்தியா? எத்தனை பெண்கள் வந்து உன் கிட்ட காம்ப்ளைன் பண்ணாங்க” கோபத்தை அடக்கியவனாக இவன் கேட்க,
“யாரும் சொல்ல வேணாம். நீங்க நடந்து கொண்ட முறையே போதும். இப்போ எதுக்கு அதை பற்றி பேசிகிட்டு அதான் இப்போ எனக்கு கல்யாணம் ஆகிருச்சே. போங்க போய் வேற எவளாவது உங்க வலைல விழுவாளான்னு பாருங்க” ரோஜாவாய் அவனுக்கு முகம் காட்ட வேண்டியவள் முள்ளாய் வார்த்தைகளை வீசீனாள். 
அவன் கோபமும் வெறுப்பும் யாழினிக்கு புரியாமலில்லை. அவன் அவள் புறம் திரும்பாமலிருக்க, இந்த பேச்சுக்கள் மிகவும் அவசியம் என்றே பேசினாள்.
அதில் மேலும் சீண்டப்பட்டவனோ “நான் என்னவோ பண்ணிக்கிறேன். நான் என்ன பண்ணனும் என்று நீ சொல்லாதே” கோபமாக யாழினியின் அறையிலிருந்து வெளியேறியவன் வீட்டை விட்டே வெளியேறி இருந்தான்.
அவன் மனம் ஆறவே இல்லை. அந்த கண்கள், அவள் முகம் எவ்வளவு அப்பாவித்தனமான முகம். மணம் வீசும் ரோஜாவாக இருப்பாள் என்று பார்த்தால் முட்கள் மட்டும்தான். விஷம் நிறைந்த முட்கள் மட்டும்தான். யாழினியை திட்டித் தீர்த்தவாறே அளவுக்கு மீறிக் குடிக்க ஆரம்பித்தவன் போதையில் தள்ளாடியவாறு வீடு வர பேரனைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானாள் ஆனந்தவள்ளி. 
இப்படியே விட்டால் இவன் குடித்தே அவன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்வான் என்று புரிய சஞ்ஜீவ் கூறியது போல் இவனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
யதுநாத்தைப் பார்த்து யாழினிக்கு பாவமாக இருந்தாலும், தான் அவனுடைய தங்கை என்ற வேதனையை விட தன்னால் அவன் புறக்கணிக்கப்பட்ட வேதனை ஒன்றும் பெரிதல்ல என்று மெளனமாக பெருமூச்சு விட்டாள்.
சஞ்ஜீவ் அவனுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு ஆனந்தவள்ளியிடம் கூறிய பொழுது வேதனையாகத்தான் இருந்தது. வேறு வழியில்லை. இவ்வாறு பேசினால் தான் அவன் தன்னை விட்டு ஒதுங்கி விடுவான்.
சிலருக்கு சில விஷயங்களை சொல்லிப் புரிய வைக்க முடியாத பட்சத்தில் அவர்களின் இதயத்தைக் குத்திக் கிழித்தாலே போதும் புரிந்துகொள்வார்கள். அதே யுக்தியைத்தான் யாழினியும் கையாண்டிருந்தாள்.
யதுநாத் வீடு வந்த நிலைமையைப் பார்த்து யாரும் எதுவும் பேசவில்லை. அவனைப் பார்த்த ஈஸ்வரமூர்த்திக்கோ சந்தோசம் தாளவில்லை.
“உன்ன எப்படி நாசம் பண்ணலாம் என்று யோசிச்சாலும் நான் மாட்டிக்கொள்ளாம எதுவும் என்னால செய்ய முடியாது. பாசம் காட்டி மோசம் செய்யலாம்னு பார்த்தா, இயல்பாகவே உன் மேல பாசம் வர மாட்டேங்குது. நான் என்ன பண்ண. என் பொண்ண வச்சி என்னெல்லாம் பண்ணனும் என்று நினைச்சேனோ அதுதான் நடக்குது. ரொம்ப சந்தோசம்”
ஈஸ்வரமூர்த்தியின் முகத்தில் மிளிர்ந்த புன்னகையை யாழினி கவனித்தாள். “மகன் குடிச்சிட்டு வந்திருக்காரு. எந்த அப்பாவாவது கண்டிக்காம சிரிப்பாரா? என்ன ஜென்மமோ? அது சரி ஒரு பையன், ஒரு பொண்ணு போதும் என்றிருந்தவருக்கு எக்ஸ்டராவா நானும் அவனும் இருக்குறது கஷ்டமாத்தான் இருக்கும்” என்று முணுமுணுக்க,
“என்ன தனியா பேசிகிட்டு இருக்க?” என்றவாறு அவள் அருகில் அமர்ந்தான் சஞ்ஜீவ்.
யாழினி தான் பார்த்ததைக் கூற, “ஆமா அப்பாக்கு யது என்றாலே ஆகாது. நாம ரெண்டு பேரும் சின்ன வயசுல சண்டை போட்டா என் பக்கம்தான் நிற்பார். நான் தப்பு பண்ணி இருந்தாலுமே. அக்காக்கும் எனக்கும் ஒரு முகம் காட்டினவரு அவனுக்கு மட்டும் எப்பவும் வேற முகம் தான் காட்டுவார். அப்போ, அந்த வயசுல அது சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இப்போ நினைகைள எவ்வளவு தவறு என்று தோணுது”
“என்ன பிடிக்காததற்கு ஒரு காரணம் இருக்குறது போல அவரை பிடிக்காம இருக்கவும் எங்கப்பாக்கு வலுவான காரணம் இருக்கும்” என்றாள் யாழினி.
“அவருக்கு போய் புள்ளையா பொறந்துட்டோமே” தந்தையை வசைப் பாடியவன் “கல்யாணம் பண்ணோம் என்று சொல்லியும் உண்மைய சொல்லாதவரை எப்படி உண்மைய சொல்ல வைக்கிறது?” யோசனையாகக் கேட்டான் சஞ்ஜீவ்.
“மறைமுகமா அவரை தாக்காம நேரடியா தாக்கணும். ஆனாலும் அவரை ஒரு குழப்பத்திலேயே வச்சிருக்கணும்” மறைந்திருந்து தாக்குவதுதான் யாழினியின் பாணியே, அவளே அதை உடைத்து வெளியே வந்தாள்.
“என்ன சொல்லுற?”
“நாம கல்யாணம் பண்ணதுக்கு காரணம் கல்பனா அம்மாவுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்ல என்று ஊர் வாய மூட என்று சொன்னோம். அதே காரணத்தை அவரும் ஏத்துக்கிட்டு கோபமாக இருந்தா உண்மைய ஒருநாளும் சொல்ல மாட்டாரு. நமக்கு ரேணுகா அம்மாவை பத்தி தெரியும். அவங்கதான் நம்ம அம்மா என்று சொல்லணும்”
“சொன்னா… உண்மைய சொல்லுவாரா?”
“இல்ல”
“அப்போ எதுக்கு சொல்லணும்? நாம சொல்லாதவரைக்கும்தான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டாரு. சொன்னா உன்ன ஏதாவது பண்ண பார்ப்பார். என்ன ஒன்னும் பண்ண மாட்டாரு”
“சொல்லுறேன்” என்ற யாழினி பேசியவாறே ஈஸ்வரமூர்த்தியைத் தேடி நடந்தாள்.
ஈஸ்வரமூர்த்தி காரியாலய அறையில் அமர்ந்திருக்க, யாழினி சட்டென்று கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் பின்னால் சஞ்ஜீவ்.
“அடடே வாங்க வாங்க, கல்யாணம் நடந்ததாக நாடகம் போட்டு ரொம்ப டயடா இருப்பீங்க. ஏதாவது சாப்பிடுறீங்களா?” உள்ளே வந்த இருவரையும் நக்கலாக வரவழைத்து தனக்கு இவர்கள் திருமணம் ஆனதாக நாடகமாடுவது தெரியும் என்பதைக் காட்டிக் கொண்டார் ஈஸ்வரமூர்த்தி. 
“அவர் அமைதியாக இருக்குறத பார்த்தா அவர் மனசுல வேற எதோ இருக்கு முதல்ல அது என்னவென்று கண்டு பிடிக்கணும். அதற்கு முதல்ல நாம அவர்கிட்ட பேசணும். ஆ…. அவரை பேச வைச்சு நாம பதில் பேசணும்” என்றவாறுதான் காரியாலய அறைக்குள்ளேயே நுழைந்தாள் யாழினி.
அவள் கூறியதை போலவே ஈஸ்வரமூர்த்தி பேச  “பாத்தியா நான் சொல்லல எங்கப்பா ரொம்ப ஷார்பானவர்னு” கண்களையே அண்ணனுக்குக் கூறினாள் யாழினி. 
“நாங்க எதுக்கு நடிக்கணும். நாங்க நடிக்கிறதா ஏன் நினைக்கிறீங்க?” கேட்டது சஞ்ஜீவ்.
யாழினி நடந்து வரும் பொழுது திரும்ப திரும்பக் கூறியதுதான். அவசரப்பட்டு நாமாக எதையும் கூற வேண்டாம். முதலில் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்வோம். அதை வைத்து அடுத்துப் பேசுவோம் என்றாள். அதன்படிதான் சஞ்ஜீவ் கேள்வி கேட்டான்.
“வேறென்ன எனக்கும் கல்பனாவுக்கு எந்த தொடர்பும் இல்லனு அவ சொன்னதை நம்பாம அந்த போட்டோவை யார் ஒளிபரப்பினானோ அவன் சொன்னதை நம்பிகிட்டு என் வாயால உண்மைய சொல்ல வைக்க” என்று சிரித்தார்.
யாழினியும் சஞ்ஜீவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாழினி எண்ணியது போல் தான் ஈஸ்வரமூர்த்தி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆகா அவர் உண்மையைச் சொல்ல நினைக்கவே மாட்டார்.
 “அதான் என் வளர்ப்பு அம்மா கல்பனாவே சொல்லிட்டாங்களே நீங்க அவங்க அண்ணனு. அவங்க சொன்ன பிறகும் உங்கள சந்தேகப்பட முடியுமா அப்பா” என்றாள் யாழினி.
“என்ன? என்ன? சொன்ன?” அதிர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கு அவள் சொன்னதை கிரகிக்கச் சற்று நேரம் எடுத்தது.
    
அதற்குள் சஞ்ஜீவ் “நீங்க என்ன என் அம்மாகிட்ட இருந்து கோமதி அம்மாகிட்ட வச்சது போல, நீங்க யார் யாருக்கு என்னென்ன செஞ்சிருக்கிறீங்களோ? யார் அந்த போட்டோவை ஒளிபரப்பினங்களோ, யாருக்குத் தெரியும்” என்று சிரித்தான்.
அவன் சொன்னதைக் கேட்டு மேலும் அதிர்ந்தவரை யோசிக்க விடாமல் “உங்க பையன் செத்து போனதற்காக வேற யாரோ பெத்த பையன உங்க மனைவி கிட்ட கொடுத்திட்டீங்க. உங்களுக்கு பொறந்த பொண்ண கல்பனா கிட்ட கொடுத்திருக்கிறீங்க. நான் அவங்க பையனில்லைனு கோமதி அம்மாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?” ரேணுகாவைப் பற்றிக் கூறாமல் தான் ஈஸ்வரின் மகனில்லை என்பது போலவே பேசினான் சஞ்ஜீவ், 
“இந்த நேரத்துல நான் உங்களுக்கு பொறந்த பொண்ணு என்று கோமதிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?” என்று யாழினி கேட்க, அரண்டார் ஈஸ்வர்.
ரேணுகாவைப் பற்றி கூறாமல் பாதி உண்மையை மறைத்தும், பாதி உண்மையை வைத்தும் இவர்கள் பேசுவதால் இவர்களுக்கு ரேணுகாவைப் பற்றி தெரியுமா? தெரியாதா? போட்டோவை ஒளிபரப்பு செய்தவனுக்கு ரேணுகாவைப் பற்றித் தெரிந்திருக்கிறதா? அவன்தான் இவர்களிடம் பாதி உண்மையை கூறினார்களா? என்று குழம்பினார் ஈஸ்வர்.
ரேணுகாவைப் பற்றிய உண்மைகளை தங்களுக்கு தெரியும் என்றால் யாழினியை ஏதாவது ஈஸ்வரமூர்த்தி செய்து விடுவார் என்று சஞ்ஜீவ் அச்சப் பட, ஹலோ பிரதர் உங்களுக்கும் உண்மை தெரியும் என்றால் என்னை ஒன்னும் பண்ண முயற்சி செய்ய மாட்டார். அப்படி ஏதாவது செய்தால் அவர் மாட்டிக் கொள்ள மாட்டாரா? நாம உண்மைய சொல்லுவோம், ஆனா அவரை குழப்பத்திலேயே வைச்சிருப்போம்” என்றாள்.
அதன்படி ரேணுகாவைப் பற்றிக் கூறாது, யாழினியை ஈஸ்வர் பெண்ணாகவும், சஞ்ஜீவை வேறு யாருக்கோ பிறந்தவன் போலவும் பேச ஈஸ்வரமூர்த்திக் குழம்பித்தான் போனார்.
“நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனதாக நாடகம் ஆடுறதாக சொன்னீங்களே. அது உண்மைதான். யாழினிய உங்க பொண்ண இந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு வர ஒரு வழி வேணாமா? யாழினிய கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சினையுமில்ல. அதான் வீட்டாளுங்களே கல்யாணத்த ஏற்பாடு பண்ணிட்டாங்களே. நான் கோமதியோட பையன் இல்ல என்ற உண்மை அவங்களுக்கு அன்னைக்கி தெரிய வரும். யாழினி உங்க பொண்ணு என்கின்ற உண்மையும்” என்றான் சஞ்ஜீவ்.
அவன் பேச்சில் ரேணுகாவைப் பற்றி தெரியாதது போல் இருக்கவே “யாழினி என் பொண்ணு என்று சொல்லுற. அவ அம்மா யாரு? அவளை நான் யாருக்கு பெத்தேன்” தெனாவட்டாகவே கேட்டார் ஈஸ்வர்.
“என் அம்மா பேர் என்னவென்று உங்களுக்கு தெரியாதா? அவங்க கிட்ட இருந்து எதுக்காக என்ன பிரிச்சி கல்பனா அம்மாகிட்ட கொடுத்தீங்க என்று உங்களுக்கு தெரியாதா? ஆனா எங்க அம்மாவை நீங்க என்ன பண்ணீங்கன்னு உங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைச்சுகிட்டு இருக்கீங்க இல்ல. அவங்கள நீங்க கொல்ல முயற்சி செய்யும் பொழுது நான் அவங்க வயித்துல தான் இருந்தேன். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு” என்று சிரித்தாள் யாழினி.
“என்ன பைத்தியம் என்று நினைச்சியா? ஏதேதோ உளறிக்கிட்டு இருக்க?” சீறினார் ஈஸ்வரமூர்த்தி.
 “நீங்க சொல்லலைனாலும் நீங்க ஒருவகை பைத்தியம்தான். பணப் பைத்தியம்” என்று மீண்டும் சிரித்தாள் யாழினி. அவளைத் தொடர்ந்து சஞ்ஜீவ் சத்தமாக சிரித்தான்.
ஈஸ்வரமூர்த்திக்கு அவர்கள் உண்மையை தெரிந்து பேசுகிறார்களா? பொடி வைத்துப் பேசுகிறார்களா? என்று புரியாமல் கோபம் தலைக்கேறியது.
“முதல்ல ரெண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க” என்று கத்தினார்.
“பின்ன இங்க இருந்து உங்க கூட குடும்பம் நடாத்தவா போறோம்” என்றான் சஞ்ஜீவ்
“டேய் டேய் என்னடா பேசுற? அப்பாவைப் பார்த்து என்ன பேச்சு பேசுற?”
“யாரு நீ எனக்கு அப்பாவா? அம்மா சொல்லணும். இவர்தான் உன் அப்பான்னு. கோமதியை என் அம்மா இல்லனு சொல்லுறேன். நீ எப்படி என் அப்பாவாக முடியும்” என்று சீறினான்.
“ஏன்டா நான் உன்ன மாதிரியே இருக்கேனே அது ஒன்னு போதாதா நீ என் புள்ளதான் என்று சொல்ல. யாரோ என்னவோ சொன்னாங்களாம் அத நம்பிகிட்டு இவன் என்ன கேள்வி கேட்க வந்துட்டானாம்” தனக்குள் பேசுபவர் போல் மகனை திட்டினார்.
இவ்வாறு சொன்னால் கண்டிப்பாக அவர் இதை சொல்லித்தான் தன்னை அவர் பக்கம் இழுக்க முயல்வார் என்று என்று சஞ்ஜீவுக்கு நன்றாகத் தெரியும்
“ஆமால்ல. அது எப்படி?” யோசனை செய்வது போல் சஞ்ஜீவ் பாவனை செய்ய
 “உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம். இதெல்லாம் ஒரு கேள்வியா” என்றாள் யாழினி.
“அட ஆமால்ல. ஆனாலும் கடவுள் இப்படி பண்ணியிருக்கக் கூடாதுப்பா…” என்று அவரை கண்டு கொள்ளாது விஞ்ஞானம் பேச
ஈஸ்வரமூர்த்திக்கு என்ன சொல்வது என்றும் புரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. தொப்பென்று இருக்கையில் அமர்ந்து விட, இன்றைக்கு இது போதும் என்று அண்ணனும், தங்கையும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். 

Advertisement