Advertisement

அத்தியாயம் 14
யாழினியையே கவனித்துக்கொண்டிருந்த யதுநாத் அவளின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்க, சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி.
தான் பெற்ற தன் மகனைப் பற்றி ஈஸ்வருக்குத் தெரியாதா?   அவனை ஆசைப்பட்டா பெற்றார்? இஷ்டப்பட்டுப் பெற்றார். அவன் எவ்வாறு இருக்க வேண்டும். யாரோடு பழக வேண்டும். என்ன செய்ய வேண்டும். எல்லாமே அவர் எண்ணம், அவர் செயல், அவர் திட்டம். அப்படியிருக்க யாழினியை அவன் திருமணம் செய்ததாக வந்து நின்றதும் கோபத்தில் அறைந்தார் தான். நிதானமாக யோசித்ததில் அவன் ஏதோ பொடி வைத்து பேசுவதாகப் புரிந்து போக, அமைதியாகக் கவனித்தார்.
அவனுக்கு ரேணுகாவை பற்றிய உண்மைகள் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை கல்பனாவுக்கு எனக்கும் தொடர்ப்பிருப்பதாக நினைக்கிறானா? அதனால யாழினிய கல்யாணம் செய்ததாக நாடகம் ஆடுகிறானா?
ஆம் சஞ்ஜீவின் பேச்சை வைத்தே ஈஸ்வரமூர்த்தி யாழினியும், சஞ்ஜீவும் நாடகமாடுவதைக் கண்டு பிடித்து விட்டார்.
“அதற்கு எதற்காக நாடகம் ஆடணும்? என் கிட்டக் கேட்டாலே நானே சொல்லி இருப்பேனே.
நான் சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு அவன் கிட்ட யார் என்ன சொல்லி இருப்பாங்க?
நிச்சயமாக கல்பனா இல்ல. பின்ன யாரு?” அறையை அளந்தவாறு யோசித்தவரின் மனதில் ஒரே பெயர்தான் வந்தது. அது விக்னேஷ். “அவ புருஷன் விக்னேஷ். அவனாகத்தான் இருக்கும். புருஷனும் பொண்டாட்டியும் என் கிட்ட ஆட்டைய போட்ட பணத்தோட தலைமறைவாகிட்டாங்கனு என்று நினைச்சி கிட்டு இருந்தேன். கல்பனா இந்த நிலமைல இருக்கா என்றா அவ புருஷன் என் பணத்துல ஏகபோகமா இருப்பானாக்கும். அவனை அன்னைக்கே கொன்னு இருக்கணும். கொல்லாம விட்டது தப்பு.
கொஞ்சம் யோசிச்சு சரியாக திட்டம் போட்டிருந்தா ரேணுகாவை கொன்னு அந்த பழியை விக்னேஷ் தலைல கட்டி இருக்கலாம். எங்க அவ சஞ்ஜீவ் பத்தின உண்மைகளை தெரிஞ்சிகிட்ட டென்ஷன்ல அவசரப்பட்டுட்டேன்.
பரவால்ல சாகுறப்பக் கூட பொண்ண பெத்துக் கொடுத்துட்டு போய்ட்டாளே”
அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார் ஈஸ்வர்.
ரேணுகாவின் உயிர் அடங்கட்டும், அந்த தகவல் அவள் தோழிக்குச் செல்லட்டும், அவள் தன்னை அழைக்கட்டும் என்று ஈஸ்வர் காத்திருக்க, மருத்துவமனையிலிருந்து ஈஸ்வருக்கு அழைப்பு வந்திருந்தது.
ரேணுகா வழமையாகச் செல்லும் மருத்துவமனையென்று அறியாமல் அருணாச்சலம் அவளை அங்கு அனுமதித்திருக்க, ரேணுகா தனக்குப் பிரசவம் நிகழ்ந்தால் கணவனுக்கு அழைக்குமாறு அங்கிருந்த தாதியொருவரிடம் ஈஸ்வரின் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தது அந்த நேரத்தில் ஈஸ்வருக்கு உதவியிருந்தது. ரேணுகாவை இரத்த வெள்ளத்தில் பார்த்த அந்த தாதியோ ஈஸ்வரை அழைத்து விட்டார்.
“அவ்வளவு அடிச்சும் ஹாஸ்பிடல் போய்ட்டாளா? இல்ல யாராச்சும் அட்மிட் பண்ணங்களா? குழப்பத்திலையே சென்றவருக்கு அருணாச்சலத்தைக் காண முடியவில்லை. இறந்த ரேணுகாவைத்தான் பார்க்க முடிந்தது.
“என் மனைவிக்கு என்ன ஆச்சு? ஆக்சிடண்ட்டா? யார் கொண்டு வந்து அட்மிட் பண்ணாங்க?” ஒன்றும் அறியாதவன் போல் ஈஸ்வர் கேட்க,
“வழுக்கி படில விழுந்துட்டாங்க போல உங்க பிளாட்டுல உள்ள யாரோதான் கொண்டு வந்து சேர்த்தாங்க. அவர் இப்போதான் வெளிய போனார்” என்ற தாதி அருணாச்சலத்தைத் தேடினார்.
உண்மையை அறிந்து அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற அருணாச்சலம் மூச்சு முட்டுவது போல் இருக்க வெளியே உள்ள மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்திருந்தார்.
அருணாச்சலம்தான் மருத்துவமனையில் அனுமதித்தார் என்று அறியாத ஈஸ்வர் “தான் அடித்த பின் படியில் இறங்கும் பொழுது ரேணுகா மீண்டும் விழுந்திருப்பாள், அதைப் பார்த்த யாரோ கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள் என்று எண்ணினான். 
“உங்களுக்கு பொண்ணு பொறந்திருக்கா. எட்டு மாசத்துல பிறந்ததினால் உங்க குழந்தை பேபி வார்டுல இருக்கா” என்று தாதி கூறியதும்
“பொறக்கவே கூடாது என்று நினச்சேன். பொறந்துட்டா. என்ன பண்ணுறது? ஏதாவது அநாதை ஆசிரமத்துல விட வேண்டியதுதான்” என்றவாறு குழந்தையைப் பார்க்கலாம் என்று செல்லும் பொழுதுதான் கல்பனாவை அனுமதித்தது ஞாபகம் வந்தது. தாதியிடம் கல்பனா தன்னுடைய தங்கையென்று கூறி விசாரிக்க,
“ஏன் சார் உங்க குடும்பத்துல ஏதாவது பிரச்சினையா? உங்க மனைவி விழுந்து இறந்துட்டாங்க, குறைப்பிரவசத்துல குழந்தையும் பிறந்தது. உங்க தங்கச்சிக்கு அதே நிலைமை” சந்தேகமாக கேட்டார்.
சட்டென்று அதைப் புரிந்துகொண்டு “தங்கச்சினா கூடப் பிறந்த தங்கச்சி இல்லமா. என் பக்கத்து வீட்டு பொண்ணுமா. புருஷன் ஒரு குடிகாரன். யாருமில்ல. அந்த பொண்ண நான் அட்மிட் பண்ண வந்ததுல என் பொண்டாட்டி கவனக் குறைவா வெளிய வந்து விழுந்துட்டா” என்று சமாளித்தார்.
“நல்லது பண்ண உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை” வருத்தத்தோடு கல்பனாவின் குழந்தையும் அதே வார்டாலதான் இருக்கு என்றதும்
இரண்டு குழந்தைகளையும் பார்த்தவரின் குறுக்குப் புத்தி ஒரு கணக்குப் போட்டது. “உனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கும், உன் புருஷன் என் கிட்ட ஆட்டயப் போட்ட பணத்துக்கும் நீ என் குழந்தையை வளர்க்கணும் கல்பனா” என்று கல்பனாவிடம் யாழினியை வைத்தவர் கல்பனாவுக்குப் பிறந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டார்.
“எதுக்காக என் பொண்ண உனக்கு வளர்க்கக் கொடுத்தேன். எல்லாம் அந்த யதுப் பயலாலதான். ஆனா நீ உன் புருஷனுக்கு பயந்து தஞ்சாவூரை விட்டு போயிட்ட.  பதினேழு வருஷம் கடந்து என் பொண்ண ரேணுகாவோட சாயல்ல உன்னோடு கோயம்புத்தூரில் பார்த்தப்போ பல வருஷமா நான் போட்ட திட்டம் கை கூடும் என்ற நம்பிக்கையே வந்தது.
ரேணுகா என் ஆசைநாயகி. என்ன மயக்கி எப்படி வச்சிருந்தாளோ! எம்பொண்ணு யதுநாத்த அப்படி வச்சிருக்கணும் என்று முடிவு பண்ணேன். அவ அம்மா அழகும், திறமையும் கொஞ்சமாவது பொண்ணுகிட்ட இருக்காதா?”  தான் காதலித்து மணந்த ரேணுகாவை மாத்திரமன்றி தான் பெற்ற மகளையும் கேவலமாக எண்ணியவர்
“ஸ்கொலசிப் கொடுத்து படிக்க சென்னைக்கு வர வளச்சு, வேலையும் போட்டுக் கொடுத்து யதுநாத்துக்கு பி.ஏவாக நியமனம் பண்ணா. எனக்கே ஷாக் கொடுக்குற விதமா அவன் அவளை ஏற்கனவே காதலிக்க ஆரம்பிச்சுட்டான்.
நான் கோடு போட ஆரம்பிக்கும் பொழுதே ரோடு வேல நடக்குதுன்னு அவன் ரூம்ல நான் பொறுத்தின ரகசிய கேமரா மூலம் கண்காணிச்சதுல ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எம் பொண்ணு நான்தான் அவ அப்பா என்று கண்டு பிடிக்க சி.பி..சி.ஐ.டி வேல பார்த்திருக்கா.
கல்பனாவோட அவ எடுத்துகிட்ட போட்டோவ யதுநாத் ரூம்ல அவ பார்க்குறத கேமரா மூலம் நான் பார்த்ததனால என்னால சாதாரணமா இருக்க முடிஞ்சது. இல்லனா நானே போட்டோவ பத்தி கேட்டிருப்பேன். ஒருவேளை கேட்டிருந்தா எம்பொண்ணு சந்தேகப்படாம இருந்திருப்பாளோ?
எங்க அந்த கல்பனா அவளை பத்தி என் வீட்டுல தெரிய வேணாம்னு சொன்னா, தெரிஞ்சா வீண் பிரச்சினையாகும் என்றா. என்னமோ அவ என் கள்ளகாதலி போல. அவ எல்லாம் ஒரு ஆளு. அவ சொன்னதுக்காகவா சொல்லாம இருந்தேன்?
யாழினிய எனக்கு தெரியாது என்றா தானே யதுநாத் யாழினிய காதலிச்சா அவனை வீட்டை விட்டு துரத்த வசதியா இருக்கும். வேலைக்கு வந்த, வசதியில்லாத பொண்ண காதலிக்கிறான், குடும்பத்துக்கு பொருத்தமில்லாத வேலைய பார்க்குறேன், அடங்க மாட்டேங்குறான் என்று வீட்டை விட்டு துரத்தலாம் என்று நான் திட்டம் போட்டா, என் பையனும் பொண்ணும் எனக்கு எதிரா சதி பண்ணுறாங்களா?
கல்பனா பேசினத்தையே யாழினியும், சஞ்ஜீவும் நம்பலைனா விழால அந்த போட்டோவ வச்சது விக்னேஷாகத்தான் இருக்கணும். அதனாலதான் ரெண்டு பேரும் நாடகம் ஆடுறாங்க. இதுல இவங்க என் பசங்க என்று தெரியாம அத்த வேற கல்யாணம் பண்ணி வைக்க போறாங்களாம்! நடக்க விட்டுடுவேனா? என் பெரிப்பா குடும்பத்தையே ஒண்ணுமில்லாம பண்ண எனக்கு சல்லிப்பய விக்னேஷ் எல்லாம் ஒரு ஆளா?”
ஈஸ்வரமூர்த்தி விக்னேஷை கண்டு பிடிக்க கிளம்ப, யதுநாத்தும் அவனது அறையில் யாழினியை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
உண்மை எதுவுமே அறியாத யதுநாத்தோ “நிச்சயமாக சஞ்ஜீவும் யாழினியும் காதலர்கள் கிடையாது. சஞ்ஜீவுக்கு யாழினியை சுத்தமாகப் பிடிக்காது. அது யாழினி என்று மட்டுமல்ல அவன் குணமே அப்படித்தான். சின்ன வயதிலிருந்தே அவனைப் பார்க்கின்றேன். அப்படிப்பட்டவன் நிச்சயமாக யாழினியை இஷ்டப்பட்டு திருமணம் செய்திருக்க வாய்ப்பில்லை. அவளை மிரட்டித்தான் திருமணம் செய்திருக்கணும் அப்படி என்ன சொல்லி மிரட்டியிருப்பான்? அவள் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறாள்?”
ஈஸ்வரமூர்த்தியைப் போல் அவர்கள் நடிப்பதகாக யதுநாத்தால் சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் அவர்கள் நடிக்க வேண்டிய அவசியம் என்ன? அதற்குண்டான காரணம் என்ன? என்று அவனுக்குத்தான் தெரியாதே.
யாழினியை சஞ்ஜீவ் மிரட்டித் திருமணம் செய்ததால்தான் பாட்டி அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறும் பொழுது யாழினி அதிர்ச்சியடைந்தாள். இருவரும் பேசி புரிந்துகொண்டு திருமணம் செய்திருந்தால் அவள் அந்த அளவுக்கு அதிர்ச்சியடைய அவசியமில்லையே. அதுவும் அவளைக் காதலிக்கும் நான் இந்த வீட்டில் இருக்கும் பொழுது என்னைக் திருமணம் செய்யாமல் அவனைத் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டிருப்பாளா? நிச்சயமாக சஞ்ஜீவ் யாழினியை மிரட்டித்தான் திருமணம் செய்திருப்பான். அம்மா கீழ் அறையில் தங்கிக் கொள்ளும்படி கூறிய பொழுது அவள் முகத்தில் நிம்மதி பரவியத்தைக் நான் கண் கூடாகப் பார்த்தேனே.  
யதுநாத் யாழினியையே பார்த்திருந்தால் சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் சிந்தித்திருப்பான். இவர்கள் நடிப்பதைக் கண்டு பிடித்திருப்பான். யாழினியைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனால் சுற்றி நடப்பதை எவ்வாறு கவனிக்க முடியும்?
என்னதான் நடந்தது என்று யாழினியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவள் வாயைத் திறந்தால் தான் தன்னால் அவளை சஞ்ஜீவிடமிருந்து மீட்க முடியும் என்று முடிவு செய்தவன். யாரும் அறியாமல் அவளை சந்திக்க முடிவு செய்தான்.
கல்பனா கிளம்பி அவள் வீட்டுக்கே சென்றிருந்தாள். அழுதவாறு செல்லும் அன்னையைப் பார்க்கையில் யாழினிக்குக் கவலையாகத்தான் இருந்தது.
கோமதி “என்ன மகளை வேலைக்கு அனுப்பும் பொழுதே என்னால பண்ண முடியாததை நீ பண்ணு என்று சொல்லிக் கொடுத்து அனுப்பிட்டு அவளும் என் பையன மயக்கி கல்யாணம் பண்ணிட்டா. நீயும் இங்கயே தங்கலாம் என்று நினைக்கிறியா?” என்று சீற
“எனக்கு உடம்புல தெம்பிருக்கு வேலை செஞ்சி பொழச்சிப்பேன்” என்றவள் மகளைத்தான் பார்த்தாள். அது உன்னால் தான் இந்த அவப்பெயர் என்ற குற்றப் பார்வையல்ல.
தன்னை தன்னுடைய தந்தை அதீத அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்த்ததால் தான் வழிகெட்டு போனது போல் தன்னுடைய பெண் சென்று விடக் கூடாது என்று அவளைக் கண்டிப்போடு வளர்ப்பதாக பாசத்தை வெளிக்காட்டாமல் கோபத்தை மட்டும் காட்டி வளர்த்தது தப்போ? அதனால்தான் இவள் தன்னிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்தாளோ,
அடித்தாலும் எத்தனை இரவுகள் யாழினி தூங்கிய பின் அவளைக் கட்டிக் கொண்டு அழுதிருக்கிறாள். எல்லாம் அவள் நல்லதுக்காக என்றுதானே. ஆனால் தான் வளர்த்த முறையும் தப்பாக்கி விட்டதே! என்றுதான் பார்த்தாள்.
நல்லவர் வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ஈஸ்வரமூர்த்திக்கே மறுபக்கம் என்று ஒன்றிருக்கும் பொழுது சதா சோகத்தில் இருக்கும் கல்பனாவுக்கு என்ன பிரச்சினையோ? அவள் தன்னிடம் பாசமாக இருக்காமல் கண்டிப்பாக நடந்து கொண்டதற்கும் ஒரு காரணம் இருக்கும். என்று அன்னையைப் பார்த்திருந்த யாழினிக்கு இப்பொழுது புரிந்தது. ஆனாலும் அவளை ஆறுதல் படுத்தவோ, அவளிடம் உண்மைகளைக் கூறி இப்போதைக்கு அவளை பதற்றமடையச் செய்யவோ முடியாது.
ஈஸ்வரமூர்த்தியின் மீது பாசம் வைத்து, நம்பிய ஜீவன்களில் அவளும் ஒருத்தி, பாதிக்கப்பட்டவள். உண்மையை அறிந்தால் அவரை என்ன செய்வாளோ இப்போதைக்கு அவளை அவள் பாட்டில் விட்டு விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தவாறே அண்ணனை பார்த்தாள்.
“என்ன எங்க பாக்டரில தானே வேலை பாக்குற? இன்னும் அங்கேயே வேலை பார்க்கலாம் என்று எண்ணமா? உனக்கு வேலையும் போச்சு. வீட்டையும் இப்போவே காலி பண்ணு” கோமதி விடாமல் காய
“அப்பப்பப்பா…. நீங்க கல்யாணம் பண்ணா உங்க புருஷன் கூட உங்க நாத்தனார், போனஸா அவங்க பையன் என்று ரெண்டு பேர் இந்த வீட்டுல தங்கினாங்க. என் மாமியார் தங்க முடியாதா? அவங்க ஒன்னும் இங்க தங்க வேணாம். அவங்கள நான் வெளில தங்க வச்சிக்கிறேன். போதுமா. போங்க போய் வேலைய பாருங்க” சஞ்ஜீவ் கோமதியை அடக்க,
இங்கிருந்தால் இன்னும் பிரச்சினை அதிகம் தான் ஆகும் என்று யாழினியிடம் எதுவுமே பேசாமல் அங்கிருந்து அழுதவாறே கிளம்பியும் விட்டாள் கல்பனா.
“என்ன மாப்புள நானும் என் அம்மாவும் ஓசி சோறு என்று குத்திக் காட்டுறியா?” கிரிராஜ் எகிறினான். 
“இந்த வீட்டுல யார் என்ன பேசினாலும், அதற்கு உதாரணம் கூறும் வகைலதானே நீங்க இருக்கிறீங்க மாமா, போங்க போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க, இருக்குற பிரச்சினை பத்தாதென்று நீங்க ஏதாவது புதுசா கிளப்பாதீங்க” என்று விட்டு சென்றான் யதுநாத்.
அவனை முறைத்து விட்டு சஞ்ஜீவை பார்த்தால் அவன் அலைபேசியோடு அப்பவே கிளம்பி இருக்கக் கோபமாக மனைவியின் புறம் திரும்பினால் அவளோ யாழினியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். கிரியால் பல்லைக் கடிக்க மட்டும்தான் முடிந்தது.
“அம்மா நீ என்ன அமைதியாகவே இருக்க?” அன்னையிடம் கோமதி கோபப்பட
“சரித்திரம் திரும்புது என்று சொல்லுவாங்களே அதுதான் இது. எனக்கு பிடிக்காதது இந்த வீட்டுல நடந்தது. இப்போ உனக்குப் பிடிக்காதது நடக்குது. அவ்வளவுதான்” என்று விட்டுச் சென்றாள் ஆனந்தவள்ளி.
“அத்த…” என்று கிரிராஜ் ஆரம்பிக்கும் பொழுதே
“ஏற்கனவே நான் கடுப்புல இருக்கேன் கிரி. இன்னும் ஏதாச்சும் பேசி என்ன வெறுப்பேத்தாத” அவனை கோமதி திட்டி விட்டுச் செல்ல,
“ஆமா ஆளாளுக்கு பந்தாடத்தான் இந்த வீட்டுல நான் இருக்கேன்” புலம்பினான் கிரி.
அருணாச்சலத்தை அழைத்த சஞ்ஜீவ் கல்பனாவின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சுடிதார் வேண்டும் என்று யாரையோ அழைத்து பேசுவதை யதுநாத் கேட்டுக் கொண்டிருந்தான்.
யாழினியோ சஞ்ஜீவின் அறையில் தங்க வேண்டாம் என்றதில் சந்தோசமாக பத்மஜாவை பின் தொடர்ந்து வந்தவள் அவளுக்குக் கொடுத்த அறையில் தஞ்சம் புக,
“சீக்கிரம் குளிச்சிட்டு வா. குடும்பத்துக்கு வந்த மருமக சாமி கும்புட வேணாம்”
“குளிக்கவா? நான் தான் எந்த துணியும் கொண்டு வரலையே”
“ஆமா வீட்டை விட்டு கல்யாணம் பண்ணிக்க மட்டும் தெரியுது. வெறுங்கையோட வந்ததுக்குத் துணிமணியாவது கொண்டு வரத் தெரியல. இரு மாத்திக்க புடவை எடுத்து வரேன்” என்றாள்.
இந்த வீட்டில் இருக்கும் மூண்டு பெண்களும் புடவைதான் கட்டுவார்கள்.
“புடவையா? எனக்குப் புடவை கட்ட தெரியாது” என்று யாழினி சொல்ல
“இது வேறயா? விளங்கும்” பத்மஜா கத்த
“எதுக்கு இப்போ கத்துற?” என்றவாறு வந்த யதுநாத் யாழினிக்குத் தேவையான துணிகள் அடங்கிய பையை அவள் கையில் கொடுத்தான்.
“டேய் என்ன டா இது? கல்யாணம் பண்ணுறவன் ஒருத்தன் குடும்பம் நடத்துறவன் இன்னொருத்தனா? ஐயோ அம்மா… இந்த அநியாயத்தை பாருங்க” பத்மஜா கத்தியவாறு கோமதியைத் தேடி ஓடினாள்.
“இவன் வாங்கிய துணியா? நான் துணி இல்லாமல் அல்லல் படுவது இவனுக்கெப்படி தெரியும்? பையை இவனிடமிருந்து வாங்கியது தவறோ” யாழினி குழப்பத்தில் முழித்தாள்.  
யாழினியை எவ்வாறு சந்திப்பது என்று யதுநாத் யோசிக்கும் பொழுதுதான் சஞ்ஜீவ் அலைபேசியில் சுடிதார் வேண்டும் என்று அளவு தெரியாமல் உளறியவாறு இருப்பதைக் கண்டான்.
“ஆஹ்… கட்டாய தாலிய கட்டிட்டு வீட்டுக்கு நல்ல புருஷனா நடிக்க போறியா? யாழினிய எப்போ நான் லவ் பண்ண ஆரம்பிச்சேனோ அப்போவே அவளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கி வச்சிருக்கேண்டா. அவ அளவு கூட தெரியலைனா எப்படி?” என்றவன் கையில் கிடைத்த துணிகளை ஒரு பையில் திணித்தவன் அவளைத் தேடி வந்து விட்டான்.
“என்ன பாக்குற? உனக்காக நான் வாங்கி வச்சதுதான். ஆபத்துக்கு பாவமில்லன்னு போட்டுக்க” என்றவன் சென்று விட்டான்.
இப்பொழுது அவளோடு பேச முடியாது. பத்மஜா எந்த நேரத்தில் கோமதியை அழைத்துக் கொண்டு வந்து விடுவாளோ தெரியாதே. பத்மஜா கத்திய கத்தில் அவன் அங்கு நின்றால் அவள் பையைத் திருப்பிக் கொடுப்பாளோ என்ற அச்சம் வேறு. அதனால் சட்டென்று கிளம்பி விட்டான். 
பையில் சுடிதார் மட்டுமல்லாது உள்ளாடைகள், சோப், டூத் ப்ரஷ் என எல்லாமே இருக்க, சட்டென்று யாழினியின் கண்கள் கலங்கின.
தன்னை எவ்வளவு நேசித்திருந்தால் தனக்காக எல்லாம் வாங்கி வைத்திருப்பான். இவனிடம் எவ்வாறு உண்மையைக் கூறுவது? கூறினால் தாங்குவானா? தன்னால் கூறத்தான் முடியுமா? தான் கூறாவிட்டாலும் என்றோ ஒருநாள் உண்மையை அறிந்துக் கொள்ளத்தான் போகிறான். நான் அவனுடைய தங்கையென்று அறிந்துக் கொண்டால் அவன் நிலைமை என்னவாகும்? முதன் முறையாக யதுநாத்துக்காக வருந்தினாள் யாழினி.
காதலுக்கு யார் யாரோ எதிரிகளாக இருப்பார்கள். காதலைப் பிரிக்க, ஏதேதோ காரணங்களைக் கூறுவார்கள். ஆனால் இப்படியோருக் காரணம் வரலாற்றில் கூட இடம் பெற்றிருக்காது. இப்படியொரு சூழ்நிலை உருவாக முழுக்க காரணமே ஈஸ்வரமூர்த்தி என்ற தனி மனிதன் தான். அதற்கான தண்டனையை அவர் அனுபவித்தே ஆகா வேண்டும். யதுநாத் யார் என்ற உண்மையை அறியாத யாழினியோ மேலும் ஈஸ்வரமூர்த்தியின் மீது கோபம் கொண்டாள்.
அடுத்த கணமே “ஆமா என் அளவெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்?” என்று யோசித்தவள் கண்களுக்குள் அன்று கல்லூரியில் நடந்த சம்பவம் வந்து போக, ஈஸ்வரமூர்த்தியின் மீதிருந்த கோபம் யதுநாத்தின் மேல் பாய்ந்தது. அவனை வசைபாடியாவாறே குளியலறைக்குள் புகுந்தாள்.
யாழினியின் அறையின் முன் நின்று கோமதி கத்த ஆரம்பிக்க அவளோ சாவகாசமாகக் குளித்து விட்டு வந்தாள்.
“எதுக்கு இப்போ வீட்டை மீன் மார்க்கட் மாதிரி மாத்துற? நீ கல்யாணம் பண்ணப்போ நான் இப்படி கத்திக் கூப்பாடு போடல” என்றவாறு வந்த ஆனந்தவள்ளி “ஏனம்மா முதல்ல போய் பூஜையறைல விளக்கேத்தி சாமி கும்பிட்டு தாலிக்கு குங்குமம் வச்சிக்க’ என்று யாழினியைப் பார்த்துச் சொல்ல அவளோ படிகளில் இறங்கிக் கொண்டிருந்த சஞ்ஜீவை பார்த்து முழித்தாள். 
தாலி என்ன? மஞ்சள் கயிற்றை கூட கழுத்தில் கட்டாதவள் இப்பொழுது இவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாள் ஏதாவது செய் என்றுதான் அவனைப் பார்த்தாள்.
“அதான் ஊரக கூட்டி தாலிக்க கட்ட ஏற்பாடு பண்ணுறதா சொன்னீங்களே” என்று சஞ்ஜீவ் ஆரம்பிக்க,
“அதனால நீ கட்டின தாலிய கழற்றி வச்சிட்டாளா?” யாழினியின் கழுத்தைப் பார்த்தவாறே கேட்டாள் பத்மஜா.
“நான் எங்க தாலி கட்டினேன். நாங்க ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணோம்” என்றான்.
“என்ன?” என்று பெண்கள் மூவரும் அதிர்ந்து நோக்க,
இதனால் ஏதாவது பிரச்சினை வருமா? என்று கவலையாக அண்ணனை நோக்கினாள் யாழினி.
“நடந்ததோ திடீர் திருமணம். மிரட்டி தாலி கட்டி இருந்தாலாவது இவர்கள் சொல்வதை நம்பலாம். ரெஜிஸ்டர் மேரேஜ் என்ன உடனடியாக செய்ய முடியுமா? கல்யாணமே நடந்தா மாதிரி தெரியல” முதன் முதலாக இவர்களின் பேச்சில் சந்தேகம் கொண்ட யதுநாத் சஞ்ஜீவை கூர்ந்து கவனிக்கலானான்.
“தாலி காட்டினா எங்க தாலிய கழட்டி எரிஞ்சுடுவீங்களோ என்று ஸ்ட்ரைட்டா ரெஜிஸ்டர் மேரேஜே பண்ணிக் கிட்டேன். இப்போ நீங்களே ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்க போறீங்க ரெண்டு முறை தாலி கட்டுற அவசியம் எனக்கும் இல்ல” கோமதியைப் பார்த்தவாறு சஞ்ஜீவ் கூற
“அட, அட, அட, மாப்பிளைக்கு என்ன ஒரு தொலைநோக்கு பார்வை” கிண்டலாகச் சிரித்தான் கிரிராஜ்.
“எனக்கு பசிக்குது வா யாழினி சாப்பிடலாம். நைட்டு  பூரா தூங்கவுமில்ல” சாதாரணமாக சஞ்ஜீவ் கூறி விட்டுச் செல்ல
“ஆமா நேத்து நைட் வீட்டுக்கு வராம நீ எங்க இருந்த? இவ கூடத் தான் இருந்தியா?” கோமதி கோபமாகக் கேட்க
“ஆமா அதுக்கு என்ன இப்போ? எனக்கு பசிக்குது என்று சொன்னேன். சாப்பாடு போடுவீங்களா? மாட்டீங்களா?” 
“நான் சாப்பாடு போடலைனா நீ சாப்பிட மாட்டியா என்ன?”
“அதான் சாப்பாடு போட ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்காளே நீங்க வேற அத்த” கிரி ஏத்தி விட
“ஏன் எனக்கு ரெண்டு கையில்லையா? ஒரு கையாள பரிமாறிக்கிட்டே சாப்பிடுவேன்” என்ற சஞ்ஜீவ் யாழினியை வா என்று அழைத்துக்கொண்டு சென்றான். 
சாப்பிட வந்தமர்ந்த யதுநாத்தின் கவனம் முழுக்க சஞ்ஜீவ் மற்றும் யாழினியின் மீதுதான் இருந்தது. 
சஞ்ஜீவ் அவன் பாட்டில் பரிமாறிக் கொண்டு சாப்பிட யாழினி அவள் பாட்டில் பரிமாறிக் கொண்டு சாப்பிட்டாள். இருவருக்கிடையில் எந்த பேச்சு வார்த்தையுமில்லை. சிறு புன்னகையுமில்லை.
காதலர்கள்தான் ஊட்டி விட வேண்டும் என்றில்லையே புரிந்து கொண்டு திருமணம் செய்தவர்கள் சேர்ந்து வாழத்தானே எண்ணுவார்கள். சாப்பாட்டைச் சாக்காய் வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு அன்பை வளர்க்க முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இவர்கள் எதோ சிந்தனையிலேயே சாப்பிடுகிறார்கள். பசிக்காகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் ருசிக்காக அல்ல என்பதை அவர்களைப் பார்த்தே புரிந்து கொண்டான் யதுநாத். 
அவன் சந்தேகம் மேலும் வலுப்பெறத்தையடுத்து அனைவருக்கும் முன் சாப்பிட்டு முடித்தவன் கை கழுவி விட்டு சென்று விட்டான்.
“சரிப்பா உன் கல்யாணத்தை எப்போ வைக்கலாம்” கேட்டது ஆனந்தவள்ளி தான்.
தந்தையின் வாயால் குடும்பத்தாரின் முன்னிலையில் உண்மையை வரவழைக்கத்தான் இந்த திருமண நாடகமே. இப்போதைக்கு வேண்டாம் என்றால் வீண் பிரச்சினை நிகழலாம்.
“உங்க எல்லாருக்கும் எப்போ வசதியோ அப்போ வச்சிக்கலாம். எங்க கல்யாணத்தோட யதுவோட கல்யாணத்தையும் வைக்கலாமே. அவன் யாழினி மேல ஒரு… என்ன சொல்லுறது? உங்களுக்கே புரியுதே” என்றான்.
சஞ்ஜீவ் கூறுவதிலையும் உண்மை இருப்பதால் இவர்களின் திருமணத்தோடு யதுநாத்துக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் ஆனந்தவள்ளி.
சாப்பிட்டு அறைக்குள் வந்த யாழினியின் வாயைப் பொத்தி கதவை தாழிட்டிருந்தான் யதுநாத். 

Advertisement