Advertisement

அத்தியாயம் 13
அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள்.
“இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க” கத்தினான் சஞ்ஜீவ்.
“பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட எந்த அண்ணனும் செய்யக் கூட பாவத்தை நீங்க செஞ்சிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக இந்த உண்மைய சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேனே ஒழிய என் கல்லறைவரைக்கும் இந்த உண்மைய யார் கிட்டயும் சொல்லுற எண்ணம் எனக்கு இருக்கல. 
ஈஸ்வர் செஞ்ச பாவம் ஈஸ்வரோடு போகட்டும். இத சொன்னா அதனால பாதிக்கப்படப் போவது நீங்களும் கோமதியம்மாவும் தான். உங்க ரெண்டு பேர் பாசத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு அம்மா பையன பிரிச்சிவச்ச பாவம் என்னைச் சேர வேணாம் என்று இத்தனை வருஷமா இருந்துட்டேன்.
ஆனா என் கண் முன்னால இறந்த ரேணுகாகு எப்படி நியாயம் செய்யப்போகிறேன் என்ற குற்றவுணர்ச்சியும் என்ன வாட்டாமல் இல்ல.
இதுதான் விதி போல. ஈஸ்வர் செஞ்ச பாவத்தை மறைக்கப் பார்த்தாலும் கடவுள் மன்னிக்கத் தயாராக இல்லை என்று நிரூபித்து விட்டார்”
“நீங்க என்ன சொன்னாலும் நான் எதையும் நம்ப மாட்டேன்” என்றான் சஞ்ஜீவ் பிடிவாதமாக.
“எங்க அப்பா தப்பானவரா இருக்க வாய்ப்பே இல்ல. அப்படியே  நீங்கச் சொன்ன கதைல பெரிய ஓட்டையே இருக்கு. என்னையும் இவளையும் பெத்தது ஒரே அம்மானு சொன்னீங்க. இவ எப்படி அந்த கல்பனா கிட்ட போனா என்று சொல்லவே இல்லையே. என்ன ரேணுகா கிட்ட இருந்து தூக்கி கோமதியம்மா கிட்டக் கொடுத்தது போல இவளையும் எங்கப்பாதான் மாத்தினார் என்று சொல்லுறீங்களா? எங்கப்பா ஒன்னும் கொடூரன் இல்ல” என்றான் உறுதியாக.
யாழினி இன்னுமே அதிர்ச்சியிலிருந்து மீளவே இல்லை. இவ்வாறு கூட நடக்குமா? என்றே அவள் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
“நீங்கதான் ஈஸ்வரனின் மகன் என்று யார் பார்த்தாலும் அடையாளம் கண்டு கொள்வாங்க. ஏன்னா உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை அப்படி. ஆனா உங்க தங்கச்சி அப்படி இல்லையே. அதனாலதான் உங்களால நம்ப முடியல. ஒன்னு பண்ணுங்க ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்துப் பாருங்க நான் சொல்லுறது உண்மை என்று உங்களுக்குப் புரியும்” என்ற அருணாச்சலம் யாழினியைப் பார்த்தார்.
“நீ என்னம்மா நான் சொல்லுறது உண்மையா? பொய்யா? என்று கூட சொல்லாம திகைச்சி போய் நிற்கிற?” 
“என்ன?” என்று அவரை பார்த்தவள் “சினிமா கதை சொல்லுற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க. நம்புறதா? கூடாதா? இப்படியெல்லாம் கூட நடக்குமா? ஒன்னும் புரியல” என்றவள் அங்கிருந்த தண்ணீர் குவளையிலிருந்து தண்ணீரை அருந்த ஆரம்பித்தாள்.
நீரை அருந்தி ஆசுவாசமடைந்தவளுக்கு யதுநாத்தின் முகம் சட்டென்று ஞாபகத்தில் வர “அப்போ அவன் என்ன அண்ணன் தானா? இல்லனு சொல்லி கொஞ்சம் நேரம் சந்தோசப்பட முடியல அதுக்குள்ள” என்ற அவளது சிந்தனையை மனசாட்சி காரி துப்பியது. 
“ஈஸ்வர் ஒரு கொடூரன். என்னவெல்லாம் செஞ்சிருக்குறான். நீ அத விட்டுட்டு உன் அண்ணனைக் காதலிக்க முடியல, கல்யாணம் பண்ண முடியல என்று பீல் பண்ணுறியா? அதுசரி நீ யார் பொண்ணு? தி கிரேட் ஈஸ்வரமூர்த்தியின் பெண்ணல்லவா” தலையை உலுக்கிக் கொண்டவள் யதுநாத்தை பற்றிச் சிந்திக்கக் கூடாது என்று நினைத்தாள்.
“சரி அங்கிள் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்” யாழினியைப் பார்த்தவாறே கூறினான் சஞ்ஜீவ்.
அவனைப் பொறுத்த வரையில் ஈஸ்வர் ஒரு நல்ல தந்தை. நல்ல வழிகாட்டி. அன்பான கணவர். கோமதியிடம் சண்டை போட்டும் அவன் பார்த்தது இல்லை. குழந்தைப் பருவத்தில் அவனையே பத்மஜாவையோ அடித்தது கூட இல்லை. அப்படிப்பட்ட நல்ல மனிதர் எப்படித் தப்பானவராக இருக்க முடியும்?
ஆனால் அருணாச்சலம் யாழினியைக் காப்பாற்றக் கதை சொல்லி ஈஸ்வரைக் குற்றவாளியாக்க அவசிமும் இல்லை என்று சஞ்ஜீவுக்கு தெரியும். எதையுமே கண்மூடித்தனமாக நம்புவதை விட ஆதாரத்தோடு நம்புவதுதான் உசிதம் என்று  டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என்றான்.
“நீ என்னம்மா சொல்லுற?” யாழினியையும் கேட்டார் அருணாச்சலம்.
“ஆ… பண்ணலாம்” அரைமனதோடு ஒத்துக் கொண்டாள். 
யாழினியைப் பொறுத்தவரையில் அவளைப் பெற்றது வளர்த்தது எல்லாமே கல்பனா. திடீரென்று அருணாச்சலம் என்ற மனிதர் சொல்லும் கதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குத் தடையாக இருந்ததும் யதுநாத்தின் மேல் அவளுக்குப் பூத்த காதல்தான்.
ஈஸ்வரமூர்த்திதான் தன்னுடைய தந்தையாக இருப்பார் என்று ஆவேசமாக ஆடை தொழிற்சாலைக்குள் வந்தவள் யதுநாத்தை கண்டதும் அடங்கி விட்டாள்.  
அவளறியாமலையே அவன் ஈஸ்வரமூர்த்தியின் மகனாக இருக்கக் கூடாது என்று நினைத்தாள். அவன் ஈஸ்வரமூர்த்தியின் மகனாகிப் போனதில் காதல் கைகூடவில்லை என்ற விரக்தி அவள் நெஞ்சில் புகைச்சலாகக் கிளம்பி யதுநாத் இவள் யார் என்று அறிந்து துன்பப் பட வேண்டும் என்று எண்ணினாள்.
அடுத்த கணம் ஈஸ்வரமூர்த்தி தன் தந்தையாக இருக்கக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டாள். அவள் மனம்தான் ஒவ்வொரு முறையும் அலைக்கழித்ததே ஒழிய அவள் யதுநாத்தைக் காதலிப்பதை உணரவில்லை. அவனை விட்டு ஒதுங்கி நிற்கவும், அவனை ஒதுக்கி வைக்கவும் மட்டுமே நினைத்தாள்.
தந்தையில்லாமல் தான் பட்ட துன்பம், பள்ளிக்கூடத்தில் கேட்ட அவப்பெயர் என்று கல்பனா மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் புகைப்படத்தைத் திரையில் பார்த்ததும் ஆவேசமாகக் கத்தினாள். ஈஸ்வர் தனது தந்தையில்லையென்று சஞ்ஜீவ் மூலம் அறிந்தவள் மனம் பெற்ற நிம்மதி யதுநாத்தை எண்ணி என்று அவள் உணரத்தான் இல்லை.
இப்பொழுது அருணாச்சலம் உண்மையைக் கூறியும் அதைப் பற்றிக் கவலைப் படாமல் இருமனநிலையில்தான் இருக்கின்றாள். அதைக் கூட உணராமல் இருக்கின்றாள் யாழினி.
“சரி வாங்க உடனே போய் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்திடலாம்” என்ற சஞ்ஜீவை முறைத்த யாழினி கைக்கடிகாரத்தைக் காட்டினாள். மணி அதிகாலை  நான்கைத் தாண்டி இருந்தது.
“என் ப்ரெண்ட் லேப் தான். இந்நேரத்துக்கும் அவன் அங்கதான் இருப்பான்” இன்றே இதற்கொரு முடிவை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இருந்தது.
“டி.என்.ஏ டெஸ்ட் எல்லா லேப்லயும் பண்ண மாட்டாங்க” மீண்டும் அண்ணனை முறைத்தாள் யாழினி.
“அது எனக்கு தெரியாதா? என் ப்ரெண்ட் என்று சொன்னேனே அவன் என்ன பெட்டிக் கடைல போல லேப் வச்சிருக்கான் என்று நினச்சியா?” சீறினான். இவளா என் தங்கையென்று இன்னுமே சஞ்ஜீவின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.  
“அட போடா… கிளாசுக்கு பொறந்தவன்” யாழினி முணுமுணுக்க, 
“சரி வாங்க போலாம்” என்று அவர்களை அழைத்துச் சென்றது அருணாச்சலம்.
அது சாதாரண லேப்பல்ல  ஆராய்ச்சி கூடம் போலும். சென்னையில் இப்படியும் ஒரு லேப்பா என்று யாழினி வாயை பிளக்க, அவளைப் பார்த்து உதடு வளைத்தான் சஞ்ஜீவ்.
அவன் கூறியது போல் அவன் நண்பன் அங்குதான் இருந்தான். கைகுலுக்கி விஷயத்தைக் கூற “ஜஸ்ட் போர் ஹவர்ஸ்ல கொடுத்திடுறேன்” என்றான்.
“என்ன? அவ்வளவு சீக்கிரம் முடியுமா? இரண்டு வாரம் மூன்று வாரம் ஆகாதா?” யாழினியின் பொது அறிவு விழித்துக் கொண்டு கேள்விக் கேட்டது.
“ஆகும். ஆளாளுக்கு ஆகும்” கண் சிமிட்டி சிரித்தவன் “இப்போ தான் சயன்ஸ் இன்னும் வளர்ந்திருச்சே” என்று இவர்களின் உமிழ்நீரைச் சேகரித்ததாக கொண்டு சென்றான்.
பரிசோதனை முடிவுகள் வரும் வரை மூவரும் அங்கேயே காத்திருந்தனர். முடிவும் வந்தது. அருணாச்சலம் கூறிய அனைத்தும் உண்மையென்றானது.
அன்பான தந்தையின் மறுமுகத்தை சஞ்ஜீவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதிர்ந்து அமர்ந்திருந்தான்.
பல நிமிடங்கள் கரைந்த பின்தான் “சார் நான் எப்படி கல்பனா அம்மா கிட்ட… அதை நீங்க சொல்லவே இல்லையே” யாழினி புரியாது கேட்டாள்.
“அது எனக்கும் தெரியல. ரேணுகா ஐ.சி.யுல இருந்ததால குழந்தையை வேற வார்டுலதான் வச்சிருந்தாங்க. ரேணுகா இறந்ததும் அவ சொன்ன உண்மைகளோட அதிர்ச்சி தாங்க முடியாம எனக்கு மூச்சு முட்டிருச்சு. வெளிய போய் காத்தாட உக்காந்துட்டு வந்து பார்த்தா ஈஸ்வர் அங்க நின்னிருந்தாரு. ஈஸ்வர் என்ன பார்த்துட்டா பிரச்சினையாகும் என்று குழந்தையை எடுத்துட்டு கிளம்பலாம் என்று பார்த்தேன். நல்லா இருந்த குழந்தை இறந்துட்டதாக சொன்னனாங்க. அப்போ இருந்த மனநிலைல என்னால எதையுமே யோசிக்க முடியல. உன் முகத்துல ரேணுகாவோட சாயல் தெரிஞ்சதும் கல்பனா யாரு என்ன என்று விசாரிச்சேன்.
கல்பனாவும் அன்னைக்கிதான் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவளுக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் அறிக்கை என் கைக்கு வந்தததும். ஈஸ்வர் ஏதாவது தில்லு முள்ளு செஞ்சிருப்பாரு என்று நினச்சேன்.
அது மட்டுமில்ல. தான் கொல்ல நினைச்ச பொண்ண எதுக்கு பாக்டரில வேலைக்கு கொடுத்து தன் கூட வச்சிருக்கணும்? எதோ திட்டம் போடுறாரு?” ஒருவேளை அப்படியும் இருக்குமோ என்று அவர் சிந்திக்க,
“அவர் என்ன திட்டம் போட்டாலும் அது எதுவுமே நடக்காது” என்றாள் யாழினி.
“ஆமா. பெத்த அம்மா சொல்லித்தான் அப்பா யார் என்று தெரிஞ்சிக்கிறோம். இவர் நம்ம அம்மாவையே கொன்னு, நம்மள பிரிச்சி பெரிய தப்பு பண்ணிட்டாரு” அருணாச்சலம் கூறிய உண்மைகளை உள்வாங்கி உண்மையென்னவென்று புரிந்து கொண்ட சஞ்ஜீவ் முகம் தெரியாத தன்னை பெற்ற அன்னையை நினைத்து வருந்தியதோடு,
கூடப் பிறந்தவளையும் நினைத்து வருந்தியவன். “சின்ன வயசுல இருந்தே பணம், பணக்காரங்களோடதான் பழகணும் என்று எனக்குள்ள புகுத்தினதே அவர்தான். அதனாலதான் என்னால சாமானிய மக்கள் கூட சட்டென்று பழக முடியிறதில்ல. உன்னைப் பார்த்த உடனே எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல” யாழினியை பார்த்து கண்கள் கலங்க கூறினான்.
மற்றவர்கள் யாரோ, எவரோ, இவள் சொந்த இரத்தம் அல்லவா, பார்த்த உடனே மனதில் பாசம் ஊறியிருக்க வேண்டாமா? அதை சொல்லத் தெரியாமல் புலம்பினான்.
“என்ன மாதிரி எந்த ஏழைப் பெண்ணையும் நீ காதலிக்கக் கூடாது, கல்யாணம் பண்ணக் கூடாது என்றுதான்” கேலியாக யாழினி புன்னகைத்தாலும் அதுதான் உண்மையெனும் விதமாக அருணாச்சலம் தலையசைத்து ஆமோதிக்க, சஞ்ஜீவும் தன் வாழ்க்கையுடன் தந்தை கூறிய அறிவுரைகளை சம்பந்தப்படுத்திப் பார்த்தவன் ஒத்துக் கொண்டான்.
“சரி அத விடுங்க உண்மையெல்லாம் தெரிஞ்சிகிட்டீங்க இப்போ என்ன பண்ண போறீங்க” அருணாச்சலம் கேட்க,
“எல்லா உண்மையையும் அவர் வாயால அவரையே சொல்ல வைக்கணும்” என்ற யாழினி அவரைக் கடத்தி மிரட்டினால் என்ன என்று கேட்க,
“அவரைக் கடத்தினாலும், அவர் மகன் என்னைக் கடத்தினாலும் அவர் உண்மைய சொல்ல மாட்டார். அவர் உண்மைய வீட்டார் முன்னிலையில் சொல்லணும். அவர் செஞ்ச குற்றங்களை ஒத்துக்கணும்” தானும் யாழினியும் திருமணம் செய்யப் போவதாக கூறினாலே போதும் எல்லா உண்மைகளையும் ஈஸ்வர் கூறி விடுவார் என்றான் சஞ்ஜீவ்
யதுநாத்தை நினைத்து மறுத்த யாழினியும். சொல்லவில்லையென்றால் என்ன செய்வது? ஆகையால் திருமணம் ஆகி விட்டது என்று கூறலாம். ஆகி விட்டது என்றால் நிச்சயமாக கூறுவார் தானே” என்றாள்.
இவர்கள் திருமணம் ஆனதாக கூறியும் ஈஸ்வர் வாயை திறக்கவே இல்லை. எந்த உண்மையையும் கூறவே இல்லை.
 என்ன செய்வது என்று யாழினி யோசித்துக் கொண்டிருக்க, அருணாச்சலத்தோடு அலைபேசியில் உரையாடி விட்டு வந்தான் சஞ்ஜீவ்.
 “சார் என்ன சொன்னாரு?”
“அப்பா உண்மையெல்லாம் சொல்லிட்டாரா? என்று கேட்டாரு? இங்க நடந்ததை சொன்னேன். அவர் அமைதியாக இருக்கிறதை பார்த்தால் உன்னை ஏதாவது செய்து விடக் கூடும் என்று சொல்லுறாரு. உன்ன கவனமா இருக்ககச் சொன்னாரு”
“என்ன என்ன செஞ்சிடப் போறாரு?” என்றவள் “அவரை விடு உன் கூட உன் ரூம்லதான் தங்கணுமா?” என்று கேட்டாள். 
சஞ்ஜீவ் அண்ணன் தான். சின்ன வயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்திருந்தால் இந்த தயக்கம் இருந்திராது. யாழினிக்கு கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. சகோதரிகளோடோ, அல்லது தோழியுடனாவது அறையை பங்கு போட்டுக் கொண்டிருந்தால் அண்ணன் தானே என்று கொஞ்சமாவது மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருப்பாள்.
சட்டென்று கிடைத்த உறவு. ஏற்றுக்கொண்டே ஆகா வேண்டிய கட்டாயம். இருவரும் ஒன்றாக இருந்தால் தான் தந்தையை ஒருவழி செய்து விட முடியும் என்பதுவும் தெரியும்.
இருந்தாலும் ஒரு வளர்ந்த ஆண் மகனோடு ஒன்றாக எப்படி ஒரேயறையில் தங்குவது. 
 “ஆமா நான் பெட்டுல தூங்குறேன் நீ கீழ தூங்கு. சினிமா பார்த்ததில்லையா? பிடிக்காத புருஷன் பொண்டாடினா அப்படித்தான் இருப்பாங்க” என்றவன் சிரித்தான். அவனும் தான் சிறு வயதிலிருந்து அறையை பங்கு போட்டுக் கொண்டதில்லையே அதை சொல்லாமல், எவ்வளவு பிரச்சினை கண்முன் இருக்கு இவளுக்கு தூங்குறதுதான் பிரச்சினையா? என்று நினைத்தான்.
“ஹலோ பிரதர். அது புருஷன் பொண்டாட்டி. நான் உன் சிஸ்டர்” என்று முறைக்க,   
அவள் தலையில் கொட்டியவன் “நான் மட்டும்தான் அண்ணனா? யது யாரு? அவன் என்ன என்னென்னமோ சொல்லுறான்?” கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்க கொண்டவன் அண்ணனாக குறுக்கு விசாரணை செய்ய ஆரம்பிக்க, யாழினிக்கு வியர்க்க ஆரம்பித்தது.
“அவன் ஒரு லூசு…” என்று ஆரம்பித்தவளை கைநீட்டி தடுத்தவன்
“இங்க பாரு யாழினி நானும் யதுவும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா ஒத்துமையா வளரல. ஆனாலும் அவன் எப்படிப் பட்டவன் என்று எனக்கு நல்லாவே தெரியும். ஒரு விசயத்த முடிவு பண்ணானா அதுல உறுதியா இருப்பான். பிடிவாதக்காரன். உன் விஷயத்துலையும் அப்படித்தான். நான் கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று கூறலாம் என்று சொல்லியும் என்ன கல்யாணம் ஆனதா நாடகம் ஆடலாம் என்று நீ சம்மதிக்க வச்சதும் யதுனாலதான் என்று இப்போ புரியுது. என்ன நடந்தது என்று தெரிஞ்சிகிட்டாதான் என்னால அவனை சமாளிக்க முடியும். இல்லனா வீணான பிரச்சினைகள் ஏற்படும். புரியுதா?”
சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள் அவனை காலேஜில் சந்தித்தது முதல் கம்பனியில் நடந்தது வரை கூறினாள். தன் மனப் போராட்டங்களை மறைக்க முயன்றவாறு கூறும் பொழுது சஞ்ஜீவின் முகத்தைக் கூட பாராமல் தான் கூறினாள்.
கேட்ட சஞ்ஜீவுக்கு பெரும் அதிர்ச்சி. “உண்மையென்னவென்று தெரியாம இருந்திருந்தா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட ஆகி இருக்கும். எவ்வளவு பெரிய பாவம்” அதற்கு மேல் அவனுக்கு வார்த்தையும் வரவில்லை. சிந்திக்கவும் முடியவில்லை. பத்மஜா வந்து கதவை பலமாக தட்டினாள்.  
சஞ்ஜீவ் சென்று கதவை திறந்ததும் “உன் அம்மா வந்து கத்திக் கிட்டு இருக்காங்க. வந்து என்னானு பாரு” முகத்தை சுளித்தவாறே கூறியவள் தம்பியை முறைத்து விட்டு சென்று விட்டாள்.
“வேற யாரு எங்கப்பாதான் உன்ன வீட்டை விட்டு துரத்த உன் வளர்ப்பு அம்மாவ வர சொல்லி இருப்பாரு. வா ஒரு போபோமான்ச போட்டுட்டு வரலாம்” என்றான்.
சஞ்ஜீவ் கூறியது போல்தான் நிகழ்ந்திருந்தது.
காலையில் நேரம் சென்றுதான் கண்விழித்தாள் கல்பனா. மகளைக் காணாது அவள் வேலைக்கு சென்று விட்டாளோ என்று நினைத்தவள். நேற்று நடந்த பிரச்சினையில் இனிமேல் தன் மகளால் அங்கு வேலைக்கு போக முடியாதே என்று உணர்ந்து கொண்ட பின்தான் மகள் எங்கு சென்றிருப்பாள் என்று அலைபேசிக்கு அழைத்தாள். அது எடுக்கப் படவேயில்லை.
எங்குதான் சென்றாளோ? மகளை வசை பாடியவளுக்கு மனவேதனையில் ஏதாவது செய்து கொள்வாளோ? தாயுள்ளம் கவலையடைய யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல் காத்திருந்தாள். மாலை நெருங்கும் பொழுதுதான் வாசற்படியில் அருகே விழுந்திருந்த யாழினியின் கைப்பையைக் கண்டெடுத்தாள்.
எங்கு சென்று தேடுவாள்? பொறுத்துப் பொறுத்து பார்த்தவள் யாழினி வீட்டுக்கு வராமல் போகவே தனக்கு உதவி செய்ய இருக்கும் ஒரே ஆத்மாவான ஈஸ்வரமூர்த்தியை அழைத்தாள்.
அழைத்தவளுக்கோ ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து வசை மழைதான் கிடைத்தது.
அதன் சாராம்சத்தில் யாழினி சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டதை அறிந்துக் கொண்டவள் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். தான் செய்த அதே தவறை தன் மகளும் செய்து விட்டாளே என்ற கோபத்தில் மகளைக் காண ஈஸ்வரமூர்த்தியின் வீடு தேடி வந்து விட்டாள்.
கல்பனாவின் வாழ்க்கையில் நடந்த எதுவும் யாழினிக்கு தெரியாது. தன்னுடைய தந்தையான ஈஸ்வரமூர்த்தியின் மறுமுகத்தைக் அறிந்துக் கொண்டவள் கல்பனாவின் வாழ்க்கையிலும் ஏதாவது நிகழ்ந்திருக்கும், அதனால்தான் அவள் தன்னை காதலிக்க கூடாது, ஆண்களை நம்பவே கூடாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள். அவள் எதையோ இழந்தது போலவும், எதிலையும் பிடிப்பே இல்லாமல் இருப்பதற்கு காரணமும் அவளுடைய கடந்தகால வாழ்க்கை என்று புரிந்துக் கொண்டாள்.
பெறா விட்டாலும் வளர்த்தவள் அன்னை தானே! அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது? என்ற சிந்தனையிலையே சஞ்ஜீவோடு இவள் நடக்க வீட்டார் அனைவரும் அங்குதான் நின்றிருந்தனர்.
கல்பனா கோபமாக நின்றிருந்தவள் யாழினியைக் கண்டதும் பாய்ந்து வந்து அடிக்க முனைய அவளை சஞ்ஜீவ் மட்டுமல்லாது யதுநாத்தும் இழுத்து தடுத்திருந்தனர். 
“இவன் வேற” சஞ்ஜீவ் தம்பியை முறைக்க, அவனோ யாழினியை பார்த்து “ஆர் யூ ஓகே?” என்று கண்களாளேயே கேட்டுக் கொண்டிருந்தான்.
   
இவனை வேறு சமாளிக்க வேண்டுமா? என்று யாழினையை மறைத்தவாறு நின்றுக் கொண்ட சஞ்ஜீவ் “சொல்லுங்க அத்த. என்ன விஷயம்”
“இங்க பாருங்க தம்பி. உங்க கூட எனக்கு பேச ஒன்னும் இல்ல. நான் என் பொண்ணு கிட்ட பேசுகிறேன்”
“சரி பேசுங்க. அதுக்கு எதுக்கு அடிக்க கையோங்குறீங்க” சஞ்ஜீவ் கேட்க முன்னால் கேட்டான் யதுநாத்.
“ஒரு பையனுக்கு ரெண்டு பொண்ணுங்க சண்டை போட்டா ரெண்டு பேரையும் கட்டி வச்சிடலாம். இங்க ஒன்னும் பண்ண முடியாது. அண்ணன் தம்பி வேற” மனைவியின் காதுக்குள் கூறி நக்கலாக சிரித்தான் கிரிராஜ்.
“எதுல விளையாடுறது என்றில்லையா?” கணவனை முறைத்தாள் பத்மஜா
“யாழினி வா வீட்டுக்கு போலாம்” மகளின் கையை பிடித்து இழுக்க முயன்றாள் கல்பனா.
கல்பனாவின் கையை தட்டி விட்டவள் “எனக்குத்தான் கல்யாணம் ஆகிருச்சே. நான் உன் கூட எப்படி இருக்குறது? என் புருஷன் கூட இல்ல இருக்கணும். நான் உன் கூட இருக்க தகுந்த காரணம் சொல்லு” ஈஸ்வரமூர்த்தியை பார்த்தவாறே கூறினாள்.
“யாரை கேட்டு கல்யாணம் பண்ண? பெத்த அம்மா என்ன கேக்க வேணாம்?” தான் அன்பு செலுத்தும் ஈஸ்வர். தன்னிடம் அன்பை மட்டுமே காட்டும் ஈஸ்வர் இன்று பேசியதில் கோபத்தோடு வந்தவளுக்கு அங்கிருந்த யாருமே கண்களுக்கு தெரியவில்லை. மகளை இங்கிருந்து அழைத்து செல்லவே முனைந்தாள்.
பெற்ற அம்மா என்றதில் முகமே தெரியாத ரேணுகாவை நினைத்து பெருமூச்சு விட்ட யாழினி. கல்பனாவின் குழந்தையை ஈஸ்வர் என்ன செய்திருப்பாரோ? அதை அறிந்தால் இவள் என்ன செய்வாள்? என்ற எண்ணமும் அந்த கணம் வந்தது.
“ நான் என்ன யாரோ தெரியாத குடும்பத்திலையா கல்யாணம் பண்ணேன். உன் அண்ணன் பையன் தானே” அண்ணன் என்றதை அழுத்திக் கூறினாள் யாழினி.
“அதை தான் நானும் கேட்கிறேன். நேத்து அவ்வளவு பேசினவ. இன்னைக்கி என்னடான்னா திடிரென்று கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்து நின்னா என்ன அர்த்தம்”
“என்ன அர்த்தம் என்றா உங்க மகள் பேசினது தவறு. அப்படி ஒன்னும் இல்லனு ஊர் வாய மூட வேணாம் அதுக்குதான்” என்றான் சஞ்ஜீவ்.  
“அப்போ யாழினிக்கு இஷ்டமில்லாம அவளை கடத்தி கட்டாயத் தாலி கட்டினியா?” என்று சஞ்ஜீவின் சட்டையை பிடித்திருந்தான் யதுநாத்.
ஒருவேளை அப்படி ஏதாவது நடந்திருக்குமோ? என்று அனைவரும் யாழினியை பார்க்க, யதுநாத்தை பிடித்து தள்ளி விட்டவள் “எதுக்கு அவர் மேல கை வைக்கிற? அவர் ஒன்னும் கட்டாய தாலி கட்டல. நாங்க ரெண்டு பேரும் பேசித்தான் கல்யாணம் பண்ணோம்” என்றாள்.  
அதை யதுநாத் நம்ப மறுத்தான். சஞ்ஜீவுக்கு யாழினியை சுத்தமாக பிடிக்காது. பேசி புரிய வைத்து இந்த திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை. நிவேதிதாவுடனான திருமணம் நின்ற வேதனை, குடும்பத்துக்கு நிகழ்ந்த அவமானம் என்று யாழினியை பழிவாங்க கட்டாய தாலி கட்டியதாகவே எண்ணினான்.
ஆனால் இவள் எதற்காக உண்மையை கூறாமல் அவனுக்கு ஆதரவாக பேசுகிறாள்? என்ன சொல்லி இவன் என் யாழினியை மிரட்டிக் கொண்டு இருக்கின்றான். இருவரையும் பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இதை எவ்வாறு கண்டு பிடிப்பது? ஏதாவது வழியில் கண்டு பிடித்தே ஆகா வேண்டும். யதுநாத்தின் சிந்தனை இவ்வாறே ஓடிக்கொண்டிருந்தது.
“அம்மாவும் பொண்ணும் நல்லா நடிக்கிறீங்க டி. இவ என் புருஷன மயக்கப் பார்த்தா ஒன்னும் வேலைக்கு ஆகல என்றதும், பொண்ண அனுப்பி என் பையன வளைச்சி போட்டுட்டா. இப்போ ஒன்னும் தெரியாதது போல இங்க வந்து நாடகம் ஆடுறா. அம்மா நீங்க என்ன இன்னும் அமைதியா பார்த்துகிட்டு இருக்கீங்க. முதல்ல இந்த சாக்கடைங்கள இழுத்து வெளிய தள்ளுங்க” என்று கத்தினாள் கோமதி.
“அம்மா. என்ன இப்படியெல்லாம் பேசுறீங்க?” கோமதி இவ்வாறெல்லாம் பேசுபவளல்லவே. சஞ்ஜீவால் எந்த ஆதாரமும் இல்லாமல் உண்மையை கூறவும் முடியாதே.
“என்னடா? நேத்துவரைக்கும் நான் என்ன சொன்னாலும் கேப்பவன், நான் கிழிச்சு கோட்ட தாண்டாதவன். இன்னைக்கி எவளையோ கல்யாணம் பண்ணிக்க கொண்டு வந்தா கொம்பு முளைக்குமா?”
“கோமதி கொஞ்ச நேரம் பேசாம இரு” ஆனந்தவள்ளி சொல்ல
“என் வாய எதுக்கு அடைக்கிறீங்க? இதுக்கு ஒரு முடிவு சொல்லுங்க” அன்னையை முறைத்தாள்.
“எனக்கு பிடிக்காத கல்யாணத்த நீ பண்ணிக்கிட்டப்போ எனக்கும் இப்படித்தான் இருந்தது நான் ஏத்துக்கலையா?”
“நான் என்ன யாருக்கும் சொல்லாம வீட்டை விட்டு போய் திருட்டு தனமாகவா கல்யாணம் பண்ணேன்? அப்பா சம்மதத்தோடு தானே பண்ணேன்”
“அதுக்கு உன் பையன் கட்டின தாலிய கழட்டி இந்த பொண்ண அவ வீட்டுக்கு அனுப்ப சொல்லுறியா?” என்று ஆனந்தவள்ளி சீற திருதிருவென முழித்தாள் யாழினி. 
திருமணம் செய்ததாக நாடகம் ஆடலாம் என்று சொன்னாலே ஒழிய மஞ்சள் கயிராவது கழுத்தில் கட்டிக்கொள்ள அவள் சம்மதிக்க வில்லை.
“அதான் சினிமால பொய்யாய் தாலி கட்டுறாங்களே. இது நீயே கட்டிக்கிறது தானே” என்று சஞ்ஜீவ் புரிய வைக்க முயன்றும் யாழினி மறுத்து விட்டாள்.
வேறு வழியில்லாது பெரிய ரோஜாமாலைகளாக இரண்டை கழுத்தில் அணிந்துக் கொண்டு வந்திருக்க யாழினி துப்பட்டாவை நன்கு கழுத்தில் சுற்றியிருந்தாள்.
அதை பார்த்தே இவர்கள் திருமணம் செய்து விட்டார்கள் என்று எண்ணி கலவரமான வீட்டார்கள் மேற்கொண்டு எதையும் ஆராயவுமில்லை. ஈஸ்வரமூர்த்தி உண்மையை சொல்லவுமில்லை.
  
அன்னைக்கு கூறியதை கேட்டு ஒரு நொடி திகைத்த கோமதிக்கு அவ்வாறு செய்ய முடியாது என்று தெரியும். சஞ்ஜீவ் யாழினியை அழைத்துக் கொண்டு மாடிப் படியேறி சென்றதிலிருந்து கணவன் புலம்பிய புலம்பல்கள்தான் கோமதியை இவ்வாறு பேச வைத்திருந்தது.
“இங்க பாரு கோமதி நடந்தது நடந்து போச்சு. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி எதற்கு எனர்ஜிய வேஸ்ட் பண்ணுற? அந்த பொண்ண ஏத்துக்க வழிய பாரு”
“சஞ்ஜீவ் இப்படியொரு காரியம் பண்ணதால பேசுற நீங்க, யது இப்படியொரு காரியம் பண்ணா பேசியிருப்பீங்களா?” சட்டென்று கேட்டு விட்டாள்.
இது என்ன புதுக் கதை இருவருமே கோமதியின் மகன் தானே. ஆனந்தவள்ளியின் பேரன் தானே அப்படி என்ன வேற்றுமையை காண்கிறாள்? யதுநாத் புரியாது முத்தம்மாவை பார்க்க,
“நான் வளர்த்த நீயும் வழிதவறிதான் போன. உன் பொண்ணும் கட்டினா உன் புருஷனோட அக்கா பையனைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சு கட்டிக்கிட்டா. நீ வளர்த்த சஞ்ஜீவும் அப்படித்தான். யது மட்டும் என் பேச்சு கேட்பானா என்ன? அதான் நிவேதிதாவை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னானே” மகளை முறைத்தவாறே சமாளித்தாள்.
சுதாரித்த கோமதியும் அமைதியானாள்.
“உன் பாட்டி நடிகை தாண்டி” கிரிராஜ் மனைவியின் காதைக் கடிக்க,
“நீங்க எதையாவது உளறி வச்சீங்க. நானே உங்கள போடுவேன்” என்று மிரட்டினாள் பத்மஜா. 
“ஒரு நல்ல நாளா பார்த்து ஊரறிய இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த பண்ணி வைக்கலாம். வேற வழி?” முத்தம்மா தன் முடிவை சொல்ல சஞ்ஜீவும் யாழினியும் ஒன்றாக அதிர்ந்தனர்.
“அப்போ அதுவரைக்கும் இவ கீழ உள்ள அறையில் தங்கிக்கட்டும்” என்று கோமதி சொல்ல  நிம்மதியாக உணர்ந்தாள் யாழினி. அவள் முக மாற்றங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான் யதுநாத்.
யார் என்ன பேசினால் என்ன? ஈஸ்வரமூர்த்தியிடம் மட்டும் மயான அமைதி. 

Advertisement