Advertisement

தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு.
ஈஸ்வர் ரேணுவிடம் என்ன எதிர்பார்த்தானோ அது கிடைத்து விட்ட பின்னும் ரேணுகாவை விடவில்லை. ஆனால் ஈஸ்வர் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாதே.
சந்தோசமாக இருக்கும் பொழுது கணவன் தொழில் விஷயமாக வெளியூர் செல்வதாகக் கூறுவதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத ரேணு குழந்தையை இழந்து மன உளைச்சலில் இருக்கும் பொழுது கணவனின் அருகாமை இல்லாமல் பெரிதும் துவண்டாள்.
நடந்த வாக்குவாதத்தில் ஈஸ்வரே தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகக் கூறி விடத் துடித்துப் போனாள் ரேணு. 
“ரேணு இங்க பாரு ரேணு. என்ன பாரு ரேணு. சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் கோமதியை கல்யாணம் பண்ணிகிக்க வேண்டியதா போச்சு. எப்போ உன்ன சந்திச்சேனோ அப்போவே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு கல்யாணம் ஆகிருச்சு என்றுதான் உன்ன தொடர்புக் கொள்ளாமலே இருந்தேன்.
நீ சென்னைக்கு வந்தது. நீயாகவே என்ன தொடர்பு கொண்டதும் உன்ன பார்க்க முடியுதே என்ற சந்தோஷத்துல இருந்தேன். நீ என்ன காதலிப்ப என்று சத்தியமா நான் நினச்சிக் கூட பார்க்கல. நீயே என்ன காதலிக்கிறாதா சொன்னப்போ நான் உன்ன எப்படி விடுறது சொல்லு?” 
அவன் தோளிலும் மார்பிலும் அடித்தவளை இறுக்கி அணைத்துத் திட்டமிட்டு செய்தவற்றைக் கூட தானாக நடந்தவைகள் எனக் கூறி ரேணுகாவை தன் பேச்சால் சமாதானப் படுத்தினான்.
நடந்தவைகளைக் அவன் கூறுகையில் நிகழ்ந்த ஒவ்விரு சம்பவம் உண்மைதானே. அவன் இவளிடம் காதலிப்பதாக கூறவுமில்லை. இவளை சந்திக்க முயலவுமில்லையே. இவள்தானே அவனை அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று அலைபேசியில் கொஞ்சினாள். அவனை காதலிப்பதாக பிதற்றினாள்.
ஈஸ்வரனின் பேச்சில் ஏமார்ந்து அவனை முழுவதுமாக நம்பி ரேணுகா மீண்டும் அவனோடு வாழ ஆரம்பித்தாள்.
அவளுக்கு மீண்டும் தஞ்சாவூரிலேயே வேலை கிடைக்க, பேச்சுத் துணைக்காகத் தோழியாவது இருக்கிறாள் என்று ஊருக்கே சென்று விட்டாள்.
இதனால் அடிக்கடி அவளால் ஈஸ்வரை சந்திக்க முடியவில்லை. ஈஸ்வர்தான் அவளைச் அடிக்கடி சென்று சந்தித்து விட்டு வந்தான்.
அவ்வாறு செல்லும் பொழுதுதான் பெரியப்பா குடும்பத்தையும் பார்த்தான். தன்னுடைய சொந்த வீடு ஏலத்தில் வரவும் அதை வாங்கினான். அந்த நேரம் கல்பனாவைச் சந்தித்து அவள் விக்னேஷை திருமணம் செய்ய உதவி செய்தான்.
ஆனால் அவனோ ரேணுகாவை சந்திக்க வந்த ஈஸ்வரை மடக்கி கல்பனாவோடு ஈஸ்வர் இருந்த புகைப்படத்தைக் காட்டி, மிரட்டி பணம் பறிக்களானான்.
ஈஸ்வர் விக்னேஷுக்கு பயந்து ஒன்றும் அவனுக்குப் பணம் கொடுக்கவில்லை. அவன் வாயை அடைக்கவே பணம் கொடுத்தான்.
இந்த புகைப்படம் ஆனந்தவள்ளியின் கையில் சிக்கினால் வேண்டாத கேள்விகளைக் கேட்டு அவனை மேலும் அடக்கி வைக்க முயல்வாள். சொத்தைக் கைப்பற்றும் வரைக்கும் மிஸ்டர் பெர்பெக்ட் என்ற விம்பம் உடையாமல் காக்க வேண்டியது அவசியம்.
அந்த கால கட்டத்தில்தான் ரேணுகா மீண்டும் கர்ப்பமடைந்தாள். அதைக் கணவனிடம் அலைபேசி வழியாகக் கூறாமல் நேரிலேயே கூறி அவன் அடையும் சந்தோஷத்தைக் காண அவன் வரும் வரை ஆவலாகக் காத்திருந்தாள்.
ஆனால் ஈஸ்வரால் ஐந்து மாதங்களாக அவளை சென்று பார்க்க முடியவில்லை. அதைப் புரிந்துகொண்டு அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இவளே சென்னை சென்று அவனைச் சந்தித்தாள்.
அப்பொழுதுதான் அருணாச்சலம் இவர்களை பார்த்திருக்கிறார்.
மகாநடிகனான ஈஸ்வரமூர்த்தியால் தன்னிடம் இதை ஏன் கூறவில்லையென்று ரேணுகாவிடம் சிடுசிடுக்கக் கூட முடியவில்லை.
ரேணுகா என்பவளால் எந்த பிரச்சினையும் நிகழாது. ஆனால் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையால் நிச்சயமாக வரும்காலத்தில் பிரச்சினை வரும். என்னைத் தொடர்புக்குக் கொள்ள முடியாமல் போனால் இதோ இப்பொழுது என்னைத் தேடி வந்ததை போல் குழந்தையோடு ரேணுகா வீட்டு வாசலில் வந்து நின்றாலும் நிற்பாள்.
இந்தக் குழந்தை பூமியில் ஜனிக்கவே கூடாது. என்ன செய்வது? என்ன செய்வது? என்ன செய்வது? ஈஸ்வருக்குள் இருந்த மிருகம் கூக்குரலிடலானது.
ரேணுவோடு ஈஸ்வர் இருந்த நேரம் சஞ்ஜீவ் விழுந்து அடிபட்டதாக அலைபேசி அழைப்பு வரக் கூடவே அவனுக்கு இருப்பது அரிதான இரத்தம் கோமதியின் இரத்தம் பொருந்தவில்லை. தந்தையான உங்க இரத்தம்தான் பொருந்தும் உடனே வரவும் என்று கூறவும் கிளம்பிச் சென்றவனுக்கு தன்னுடைய இரத்தமும் சஞ்ஜீவுக்கு பொருந்தவில்லையென்றதும் அவனுக்கு இருப்பது ரேணுவின் இரத்தம் என்று புரிந்தது.    
“என்ன இது வீட்டுல யாரு இரத்தமும் குழந்தைக்கு பொருந்தல” ஆனந்தவள்ளி புரியாது கேட்க
“அரிதான இரத்த வகை அப்படித்தான். பெத்தவங்க இரத்தம் கூட பொருந்தாம போக வாய்ப்பு இருக்கு” என்று விட்டு சென்றார் தாதி.
ஈஸ்வருக்கு வந்த அலைபேசி அழைப்பு ரேணுகாவின் காதிலும் விழுந்ததால் தனக்கு இருக்கும் இரத்த வகையே கோமதியின் மகனுக்கு எவ்வாறு இருக்கக் கூடும்? என்று சந்தேகம் கொண்டு ஈஸ்வரை பின் தொடர்ந்து வந்தவள் சஞ்ஜீவை முதன் முதலாகப் பார்த்தாள். பார்த்த நொடியே ஏதோ இனம் புரியாத உணர்வு உள்ளுக்குள் ஊற இரத்த தானமும் செய்தித்தாள்.
அப்பொழுது அவளை அடையாளம் கண்டு கொண்ட தலைமை மருத்துவர் அமெரிக்காவிலிருந்து எப்பொழுது வந்தாய்? திருமணம் ஆகிவிட்டது போல் இருக்கிறது. எத்தனையாவது குழந்தை என்று கேட்டார்.
தன்னை இவருக்குத் தெரியுமா? என்ற குழப்பத்தோடு நான் அமேரிக்கா சென்றதாக யார் உங்களிடம் கூறியது? என்று வினவினாள் ரேணுகா.
ஈஸ்வர்தான். நீங்களும் ஈஸ்வரும் தோழர்கள்தானே என்கிறார் அவர்.
சஞ்ஜீவ் ஈஸ்வரமூர்த்தியை உரித்து வைத்திருந்தான். அதனால் அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் எதுவோ தப்பாக இருப்பதாக மட்டும் அவள் ஆழ்மனம் கூறிக் கொண்டே இருக்க சஞ்ஜீவை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு தலைமை மருத்துவரைக் காணச் சென்றாள்.
நேரடியாகக் கேட்டால் எந்த உண்மையையும் கண்டறிய முடியாது என்று புரிந்துகொண்டவள் தலைமை மருத்துவரைச் சந்தித்து “என் குழந்தை நல்லா இருக்கான் இல்ல டாக்டர். எந்த பிரச்சினையும் இல்லல. அவன் நல்ல இருந்தா போதும்” என்றாள்.   
“அன்னைக்கி நீ உன் குழந்தையைக் கொடுத்தது உனக்குத் தெரியுமா? ஈஸ்வர் சொன்னாரா? தெரிந்தும் நீ அமைதியா பேசுகிறாய் என்றால் உனக்கு எவ்வளவு பரந்த மனசு. அன்று கோமதி இருந்த நிலையில் குழந்தையைக் கொடுத்தது எவ்வளவு நல்லது.  இதுதான்மா விதி. பெத்த அம்மாவே இரத்தம் கொடுத்து காப்பாத்த வச்சிருக்கான் கடவுள். உன் பையனுக்கு ஒன்னும் இல்ல”
ரேணுகாவின் இதயம் அதிர்ச்சியில் ஒருநொடி நின்று போனது. குழந்தை இறந்து விட்டது என்று அறிந்த நொடி எவ்வளவு கண்ணீர் வடித்தாள். தான் ஏமார்ந்து விட்டோம்  என்றவளுக்குக் கண்ணீர் வரவில்லை.
அவள் யாரைக் காதலித்தாளோ அவனே கயவனாகி அவள் பெற்றக் குழந்தையை அவளிடமிருந்து பிரித்து. அவளிடம் இறந்து விட்டதாகப் பொய் கூறி. அவன் முதல் தாரத்திடம் கொடுத்து விட்டான். ஏன்? ஏன்? ஏன்? இதற்கான பதிலை அவள் ஈஸ்வரமூர்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டேயாக வேண்டும். தன் மகனைக் கோமதியிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் வேண்டும்”
ரேணுகாவுக்கோ பேசாமல் கோமதியை நேரில் சந்தித்துப் பேசலாமா? அல்லது குழந்தையைக் கடத்திக் கொண்டு சென்று விடலாமா? என்றெல்லாம் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்திருக்க, கோமதியும் ஒரு தாய்தானே இவ்வாறு சிந்திப்பது தவறு என்று ரேணுகாவின் தாயுள்ளம் கனிந்தது.
எதைச் செய்தாலும் சரியாகச் செய்ய வேண்டும். தான் ஏதாவது  செய்யப் போய் சஞ்ஜீவ் பாதிக்கப்படவும் கூடாது.  என்னிடம் பொய்யுரைத்த ஈஸ்வர் நிச்சயமாகக் கோமதியையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பான். தான் பெற்ற குழந்தையென்று நினைக்கும் குழந்தை தன்னுடையது இல்லையென்றால் எந்த தாய்தான் தங்குவாள்? முதலில் ஈஸ்வரிடம் பேசிப் பார்க்கலாம். அதன்பின் முடிவு செய்யலாம் என்று இங்கு அழுது கரைந்து நேரத்தை வீணடிப்பது பிரயோஜனமில்லை என்ற முடிவோடு மருத்துவமனையிலிருந்து கிளம்பினாள். ரேணுகா செய்த தவறே அதுதான். அவள் நேரடியாகச் சென்று கோமதியைச் சந்தித்துப் பேசி இருந்தால் இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள். யாழினியும் அவளோடு இருந்திருப்பாள்.
சஞ்ஜீவ் மருத்துவமனையிலிருந்தமையால் ஈஸ்வரால் ரேணுகாவை வந்து பார்க்க முடியவில்லை. ரேணுகாவின் தோழியின் அன்னை இறந்து விட்டதால் இவளும் தஞ்சாவூர் கிளம்பிச் சென்று விட்டாள்.
விக்னேஷின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்க, அவனை ஒருவழி செய்ய வேண்டும், அதே நேரம் ரேணுவின் வயிற்றில் இருக்கும் தன்னுடைய குழந்தையையும் கொன்று விட வேண்டும் என்று தஞ்சாவூருக்குக் கிளம்பினார் ஈஸ்வர். அவரை பின் தொடர்ந்தார் அருணாச்சலம்.
வழமையாகத் தஞ்சாவூர் சென்ற உடனே ரேணுகாவை பார்க்கச் செல்பவன் இந்த முறை ஹோட்டலில் தங்க. அருணாச்சலத்தால் ரேணுகா இருக்கும் இடத்தை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை.
அறைக்கு வந்த உடனே ஈஸ்வர் எங்கும் செல்ல மாட்டார் என்று நினைத்த அருணாச்சலம் குளிக்கச் செல்ல, ஈஸ்வரோ விக்னேஷை காணச் சென்றான்.
கல்பனாவின் வீட்டுக்குச் சென்றால் கல்பனா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளை மருத்துவமனையில் சேர்த்தவன் அங்கு ரேணுகாவை பார்த்தான்.
கல்பனாவோடு ஈஸ்வரைப் பார்த்த ரேணுகா மருத்துவமனையென்றும் பாராமல் அவனோடு சண்டை போட ஆரம்பித்தாள்.
அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்து வண்டியில் அமர்த்தி கல்பனா யார் என்று புரிய வைக்க முயல, அவளோ சஞ்ஜீவை பற்றிக் கேட்டு அவனை அதிர வைத்தாள்.  
“சொல்லுங்க ஈஸ்வர். எதுக்காக என் பையன உங்களுக்குப் பிடிக்காத பொண்டாட்டிக்கு கொடுத்திருக்குறீங்க? என்ன காரணம் சொல்லி என்ன சமாதானப்படுத்தப் போறீங்க?”
 “இவளுக்கு எல்லா உண்மைகளும் தெரிந்து விட்டதா? எப்படி?” “நீ என்ன சொல்லுற?” ஒன்றும் தெரியாதது போல் நடிக்க முயன்றான்.
“டாக்டர் என் கிட்ட எல்லாம் சொல்லிட்டார். தெரியாத மாதிரி நடிக்காதீங்க”
கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்த ஈஸ்வர் “நமக்கு பொறந்த குழந்தையை கைல வச்சிருந்தேன் அந்த நேரம் வந்த அத்த அது கோமதிக்கு பொறந்த குழந்தையென்று தூக்கிட்டு போய்ட்டாங்க. என்னால ஒன்னும் பண்ண முடியல. சரி கோமதிக்கு பொறந்த குழந்தையை உன் கிட்ட கொடுத்திடலாம் என்று பார்த்தேன். அந்த குழந்தை இறந்து போச்சு. டாக்டர் வேற நீ யாரு? என்ன? என்று குடைய ஆரம்பிச்சாரா, எனக்கு வேற வழி தெரியாம வாயில வந்த பொய்ய சொன்னேன். கோமதிக்குத்தான் வேற குழந்தை பிறக்காதே. உனக்கு அப்படியா? எத்தனைக் குழந்தை வேணும்னாலும் பிறக்கும்” கண்கள் கலங்க வழமையாக நடிக்க ஆரம்பித்தான்.
இந்த தடவை ரேணுகா ஈஸ்வரனின் கண்ணீருக்கோ, பேச்சிலையோ மனம் இறங்கவில்லை. “என்ன பண்ணுவீங்களோ! ஏது பண்ணுவீங்களோ! எனக்கு என் பையன் வேணும்” என்றவள் வண்டியை விட்டு இறங்கிச் சென்று விட்டாள்.   
ஹோட்டலறையை வந்தடைந்தவனுக்கு நிம்மதி பறிபோய் இருந்தது. ரேணுகாவால் எந்த பிரச்சினையும் வராது. குழந்தையால் மட்டும்தான் பிரச்சினை வரும் என்று எண்ணி இருக்க, ரேணுகாவே பெரும் பிரச்சினையாகி அவன் கண்முன் நிற்க, அவளையே கொன்று விட்டால் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று குரூரமாக நினைத்தான்.
ஆனால் அவளை எவ்வாறு கொல்வது? எதையும் திட்டமிடாமல் செய்ய முடியாதே. இப்பொழுதே கொன்றால் தான் குழந்தையும் சேர்த்தே கொல்லலாம். குழந்தை பிறந்து விட்டால் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கக் கூடும்.
ரேணுவை அவள் தோழியைத் தவிர யாரும் தேட மாட்டார்கள். கண்டிப்பாக அவளிடம் என்னைப் பற்றிக் கூறி இருப்பாள். என்னைப் பற்றின உண்மைகளைக் கூறி இருக்க வாய்ப்பில்லை. ரேணு காணாமல் போனால் என் மீது சந்தேகம் வரும். அவள் மரணம் விபத்தாக இருக்க வேண்டும்.
அறையை அளந்தவாறே சிந்தித்தவன் “மாலையானதும் ரேணுவை வெளியே அழைத்துச் செல்லலாம். அவளை மயங்க வைத்து வண்டியை மலையிலிருந்து உருட்டி விடலாம் என்று முடிவு செய்தான்.
வண்டி எங்கு என்று வீட்டில் கேட்டால் என்ன சொல்வது? என்ன சொல்வது? திருடு போய் விட்டது என்று சொல்லலாம்” அருணாச்சலம் அவனை பின் தொடர்வதையறியாமல் திட்டத்தை அமுல் படுத்த ரேணுகாவைக் காணச் சென்றான்.
வந்தவனிடம் “என்ன முடிவு செய்திருக்குறீங்க?” என்று கேட்டாள் ரேணுகா.
“வா வெளிய போய் பேசலாம். லோங் ட்ரைவ் போய் ரொம்ப நாளாச்சில்ல” என்றான் ஈஸ்வர்.
“எனக்கு மூட்டில்ல” என்றவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முற்பட, அவன் திட்டமறியாமல் ரேணுகா மறுத்துப் பேச இருவருக்கிடையிலும் வாக்குவாதம் ஆரம்பமானது.
“சஞ்ஜீவ பெத்துக் கொடுத்தப்போவே நான் கொட்டின எண்ணெய்ல வழுக்கி நீ செத்துத் தொலைஞ்சிருந்தா என் வாழ்க்கைக்கு விடிவு காலம் பிறந்திருக்கும்” என்று கத்த ஆரம்பித்தான்.
“அடப்பாவி அப்போ நான் தானாக விழலையா?” ரேணு அதிர்ச்சியடைய
“சஞ்ஜீவ பெத்துக்க தாண்டி உன்ன கூடவே வச்சிக்கிட்டேன். ஆனாலும் இன்னமும் உன் மேல எனக்கு மோகம் இருக்கு” என்றவனை அருவருப்பாகப் பார்த்தவள் இங்கிருந்தால் நிச்சயமாக இவன் கொன்று விடுவான். பக்கத்து பிளாட்டில் உள்ளவர்களும் தீபாவளிக்கு ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். உதவிக்கு யாரையாவது அழைக்க வேண்டும் என்று ஓட முயன்றாள்.
அதை புரிந்திகொண்டவன் அங்கிருந்த சிறிய அலங்கார வெள்ளிச் சிலையால் அவளின் தலையில் பலமாகப் பலமுறை தாக்கினான்.
அவன் திட்டம் நிகழவில்லை. அவள் போட்ட சத்தத்தில் யாரேனும் வந்து விடக் கூடும். இன்னும் சற்று நேரத்தில் இவள் இறந்து விடுவாள் அதன் பின் வந்து நாடகமாடலாம் என்று ஈஸ்வர் உடனே கிளம்ப அங்கு வந்த அருணாச்சலம் ரேணுகாவை மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
இறக்கும் தறுவாயில் அவரிடம் எல்லா உண்மையும் கூறி விட்டே இறந்தாள் ரேணுகா.
தனக்குத் தெரிந்த உண்மைகளை சஞ்ஜீவுக்கும் யாழினிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார் அருணாச்சலம்.

Advertisement