Advertisement

அத்தியாயம் 12
ஈஸ்வரமூர்த்தியுடைய குழந்தைப் பருவம் பெற்றோருடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் உயிரே அக்கா மஞ்சுளாதான்.
பாடசாலை செல்லும் பொழுது திருமணத்துக்குச் சென்ற அன்னையும் தந்தையும் கார் விபத்துக்குள்ளானதில் தந்தை இறந்து விட, அன்னை முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டதில் படுத்து படுக்கையானாள். இவர்களின் பொறுப்பு ஈஸ்வரின் பெரியப்பாவின் வசமானது.
பெரியம்மா வந்த உடனே இங்கிருந்தால் பாதுகாப்பாக இருக்காது என்று கூறி அம்மாவின் நகைகள், துணிமணியென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். அக்கா மஞ்சுளா வாயில்லா ஜீவன். எதிர்த்துப் பேச மாட்டாள். ஈஸ்வருக்கு என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை.
படுத்த படுக்கையாக இருக்கும் அன்னை அவனை அழைத்து “பெரியப்பா நம்மளை ஏமாற்றி விடக் கூடும். எக்காரணத்தைக் கொண்டும் எதிலையும் கையெழுத்துப் போடாதே” என்றாள். 
பாடசாலைப் படித்துக் கொண்டிருந்தவனுக்கு அன்னை சொன்னது புரியவில்லை. அன்னைக்கு ஒழுங்காக மருத்துவம் பார்ப்பதில்லை. கேட்டால் அவளுக்கு இருக்கும் வியாதிக்கு எந்த மருத்துவமனையிலும் மருந்தில்லையென்றார். அதைக் கூட ஈஸ்வரமூர்த்தி நம்பினான்.
அக்காவின் படிப்பை நிறுத்தி அன்னையைப் பார்த்துக்கொள்ள வைத்திருந்தனர். பெற்ற மகளை விட யார் நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள்? காசு பணத்துக்கு வருபவர்கள் ஒழுங்காகப் பார்க்க மாட்டார்கள் என்ற பேச்சு வேறு. அதைக் கூட ஈஸ்வரும், மஞ்சுளாவும் ஏற்றுக் கொண்டனர்.
தந்தை பெரியப்பாவோடு சேர்ந்து வட்டித் தொழில்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் மருத்துவச் செலவுக்குத் தந்தை கொடுத்த பணம் முழுவதும் செலவாகி விட்டது என்றார். தந்தையைத் தவிர அவர் தொழிலைப் பற்றி யாருக்கும் தெரியாது. ஆகையால் பெரியப்பா சொன்னதைத்தான் இவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.
குத்தகைக்குக் கொடுத்திருந்த இரண்டு ஏக்கர் வயலில் வருமானம் வந்து கொண்டிருந்தது. குத்தகை பணத்தையும் பெரியப்பாவே வசூலிக்க ஆரம்பித்து, ஆரம்பத்தில் ஏனோ தானோ என்று ஊருக்காகவும், உறவுகளுக்காகவும் செலவழித்துக் கொண்டிருந்தவர்கள் போகப் போகச் செலவையும் குறைத்தார்கள், சாப்பாட்டுக்குக் கூட பணம் கொடுக்காமல் இருக்க, ஈஸ்வர் பெரியப்பாவின் வீட்டு வாசலில் அவருக்காகக் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவும்தான் சொந்தங்களே தங்களை ஏமாற்றுவதை பாடசாலை வாழ்க்கை முடியும் தறுவாயில்தான் புரிந்துகொண்டான்.
அதைப் பற்றி பெரியப்பாவிடம் கேட்டு சண்டை போட ஈஸ்வரின் கன்னத்தில் அறைந்தவர் “ஏன்டா என்னையே கேள்விக் கேக்குறியா? உங்கப்பா வீடு கட்ட கடன் வாங்கினது என் கிட்ட. அதுக்கு உங்க நிலத்தையும், வீட்டையும் எழுதி எடுத்துக்கிட்டேன். வெளிய துரத்தம்மா பாவம் பார்த்து சீகாழி உன் அம்மாவுக்கு மருத்துவமும் பார்க்கிறேன் என்னைச் சொல்லணும்” என்று சத்தம் போட இது என்ன புதுக் கதை என்று புரியாமல் முழித்தான்.  
அன்னையிடம் வந்து இதைப் பற்றிக் கேட்டால் அவர் சொல்வது எல்லாமே சுத்தப் பொய். நீ அவசரப்பட்டு எதையும் கேட்டு உன் படிப்பைக் கெடுத்துக் கொள்ளாதே. ஊருக்காகத்தான் உன்னைப் படிக்க வைக்கிறார். இல்லையென்றால் உன்னையும் கூலி வேலைக்கு அனுப்பி இருப்பார். எப்படியாவது நன்றாகப் படி. பணம் சம்பாதி. பணத்தால் மட்டும்தான் இவர்களை அடக்க முடியும் என்றாள்.
ஈஸ்வரின் அன்னை எந்த அர்த்தத்தில் சொன்னாளோ? அவன் மனதில் அது நஞ்சாகத்தான் விழுந்திருந்தது.
ஈஸ்வர் ஊரிலிருந்தால் பிரச்சினை செய்வான் என்று அவனைச் சென்னையிலுள்ள கல்லூரியில் சேர்த்தார் அவனுடைய பெரியப்பா.
அவன் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் அன்னை இறந்து விட்டாள். மஞ்சுளா எந்தக் குறையுமில்லாமல் நன்றாகக் கவனித்துத் தான் பார்த்தாள். ஆனால் முறையான மருத்துவம் கிடைக்காததால் அவள் ஆயுள் முடிந்து விட்டது. இது ஈஸ்வருக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் அன்னையை அடக்கம் செய்து விட்டு வந்த பின் பெரியப்பாவிடம் சென்று சண்டை போடத்தான் இல்லை.
அவருடன் மோத தன்னிடம் எது இல்லையோ அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் உருவாகி இருந்தது.
அவன் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மஞ்சுளா அழுதுக் கொண்டே தம்பியை வழியனுப்பி வைத்தாள். இனி அவள் பெரியம்மாவின் எடுபிடி என்றும் ஈஸ்வருக்குத் தெரியும். அவனால் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. பதுங்கும் புலியாக இருக்க முடிவு செய்தான்.
அன்னை இறந்து மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. அக்காவுக்குத் திருமணம் ஊருக்கு வருமாறு பெரியப்பாவிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவும், “என்ன திடீர் திருமணம்?” என்று கேட்டவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அடித்துப் பிடித்து ஊருக்கு வந்தால் மஞ்சுளாவை விட இருபத்தைந்து வருடங்கள் வயது வித்தியாசமான ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்திருந்தனர்.
அதுவும் மூன்றாம் தாரமாக. ஈஸ்வர் சண்டை போடவில்லை, கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அக்காவைத்தான் பார்த்தான். அவள் அழுது கரையாமல் சிரித்துக் கொண்டுதான் இருந்தாள்.
அமைதியாகச் சென்று விசாரித்தான். “அம்பது வயசு ஆனா என்ன? அவருக்கு ஏகப்பட்ட சொத்துடா… பெரியம்மா கிட்ட அடி உதை வாங்கம இருப்பேன்டா” என்றாள்.
மஞ்சுளா ஒரு வெகுளி. பாவம் பெரியம்மாவிடமிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்று நினைத்து விட்டாள்.
அவளின் கணவனும் முதல் தாரத்து பிள்ளைகளும் கூட வட்டித் தொழில் பார்ப்பவர்கள்தான். கூடவே கட்டப் பஞ்சாயத்து, ஆளைக் கடத்தி பணத்தை வசூலித்து கொடுப்பது என்று ஏகப்பட்ட வேலைகளைப் பார்ப்பவர்கள். ஆள் பலம், பண பலம் என்று பின்புலம் பக்கபலமாகத்தான் இருந்தது. 
மஞ்சுளாவின் திருமணத்தோடு ஊரோடு இருந்த சம்பந்தம் விட்டுப் போனதோடு பணமும் அதிகாரமும் இருந்தால் மட்டும்தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்று புரிந்துகொண்டவன் பணத்தைக் குறுக்கு வழியில் சம்பாதிக்க முடிவு செய்தான்.
அக்கா திருமணம் செய்த குடும்பம் பணம், வசதி என்று இருந்தாலும் சமூகத்தில் அவர்களைப் பார்த்து மரியாதை கொடுப்பதை விட ஒதுங்கித்தான் போகிறார்கள். ஈஸ்வருக்கு அவ்வாறான ஒரு வாழ்க்கை வேண்டாம். தன்னை எல்லோரும் மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும், நம்ப வேண்டும் என்று எண்ணினான்.  
களவெடுப்பதை விட, கொள்ளையடிப்பதை விடச் சிறந்த முறை காதலிப்பது அதற்குத் தகுதியானவள் கோமதி என்பதைக் கண்டு பிடித்து அவளை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்தான்.
அந்த காலகட்டத்தில்தான் மஞ்சுளாவின் கணவர் இறந்து விட அவரின் முதல் தாரங்களின் பிள்ளைகள் ஏமாளியான இவளுக்கு எந்த சொத்துக்களையும் கொடுக்காமல் ஊரை விட்டு அடித்தே துரத்தியிருந்தனர். ஈஸ்வரமூர்த்தியே கதியென்று வந்தவள் கர்ப்பமாக வேறு இருந்தாள்.
சட்டத்தின் மூலம் அவர்களோடு போராடவும் முடியாது. தன்னிடம் பணபலமோ ஆள் பலமோ கிடையாது என்று நன்கு அறிந்துகொண்ட ஈஸ்வரமூர்த்தி தன்னை நிலை நிறுத்திகொள்ளக் கோமதியைப் பற்றிப் பிடித்துக் கொள்வதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தான்.
அதற்கு முதலில் சோமசுந்தரம் எப்படிப்பட்டவர்? குடும்பப்பின்னணி. குறிப்பாக குடும்பத்தில் ஒரே மகளாகவே தேடியவனுக்குக் கடல் போல் சொத்துக்களோடு அவனுக்கென்றே கிடைத்தவள்தான் கோமதி.
அவளைத் திருமணம் செய்து ஒரு வருடத்திலேயே ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து அடுத்த தலைமுறை வாரிசை மாமனாரின் கையில் கொடுத்து அவரை வீட்டில் ஓய்வெடுக்க வைத்து விட்டு தொழிற்சாலைகளின் பொறுப்புக்களை தன் கையில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணினான்.
தன்னை மிஸ்டர் பெர்பெக்ட் என்று மற்றவரிடம் காட்டிக் கொள்வதில் ஈஸ்வர் என்றுமே விரும்பக் கூடியவன். தான் எது செய்தாலும் அதில் யாருமே எந்த குறையையோ, குற்றத்தையோ கண்டு விடக் கூடாது என்று எண்ணுபவன்.
அப்படிப்பட்டவன் ரேணுவின் மேல் வண்டியை மோதி அவள் இறந்ததாக நினைத்த நொடி தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் சீட்டுக்கட்டுக்களாகக் கலைந்து விட்டதாக ஆடித்தான் போனான்.
அதே ரேணுவை மருத்துவமனையில் பார்த்த பொழுது எந்த பெண்ணிடமே ஏற்படாத இனம் புரியாத ஒரு உணர்வு ரேணுவின் மேல் சட்டென்று உண்டானது.
பல நாடகங்களில் கதாநாயகனாகக் காதல் மொழி பேசி நடித்த ஈஸ்வருக்கு அந்த உணர்வு என்னவென்று புரியாமலில்லை. பணம் கொட்டிக் கொடுத்த கோமதியின் மேல் தோன்றாத உணர்வு அது. எத்தனை பெண்களின் கையை பிடித்து மேடையில் காதல் வசனங்களைப் பேசி இருப்பான். வசனங்களில் மட்டும் இருந்த காதலை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து கொண்டது ரேணுவைப் பார்த்த பொழுதுதான்.
ரேணுகா சாதாரண ஒரு பெண்தான். இவளால் தன்னுடைய திட்டம்? எதிர்காலம், வாழ்க்கை நிலைகுலைவதா? கூடாது. மூளை எடுத்துக் கூறினாலும் குரங்காய் தாவும் மனம் கேட்கவில்லை. விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு வந்து விட்டான்.
ரேணுகா இவனை தொடர்புகொள்ளவுமில்லை. இவன் அவளைத் தேட முயற்சி செய்யவுமில்லை. காதலா? பணமா? என்ற தராசில் ஈஸ்வரமூர்த்தியின் பார்வை எப்பொழுதுமே பணத்தின் மீதே இருக்க, கோமதியின் சொத்துக்களை எவ்வாறு அடைவது. தங்களை ஏமாற்றிய பெரியப்பா குடும்பத்தை எவ்வாறு பழி தீர்ப்பது என்று யோசித்தான்.
கோமதிக்குக் குழந்தை பிறக்கும் முன்பாகவே சோமசுந்தரம் இறைவனடி சேர்ந்திருக்க, தொழிற்சாலையின் பொறுப்புக்கள் அனைத்துமே தன் கைவசம் வந்து விடும் என்ற நிலையில் ஆனந்தவள்ளியின் தலையீடு கோபத்தைத் தூண்டினாலும் பேரனைக் கையில் கொடுத்தால் ஆனந்தவள்ளியை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தான்.
கோமதியைக் காதலிக்க வைக்க, முடிந்தவனால் கர்ப்பம் தரிக்க வைக்க முடியவில்லை. அவளுடைய கர்ப்பப்பை பலவீனமானத்தில் அவள் குழந்தையே பிரசவிக்கக் கூடாது என்று மருத்துவர் கூற, சொந்தக்காரரின் காதுகுத்து விழாவின் போது ஈஸ்வர்தான் மனைவிக்காகப் பேசுவது போல் சாதாரணமான பேச்சைத் தூண்டி விட்டு கோமதியின் மனதில் குழந்தை பெற்றுக்கொண்டே ஆகா வேண்டும் என்ற விதையைப் போட்டான்.   
பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றுக்கொடுத்து விட்டு கோமதி இறந்தால் கூட ஈஸ்வருக்குக் கவலையில்லை. பிள்ளையைக் கவனித்து மாமியாரிடம் அனுதாபத்தைச் சம்பாதித்து சொத்துக்களை அடைய வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். ஆனால் விதி கோமதிக்குப் பிறந்தவள் பத்மஜா.
மனைவியால் வேறு பிள்ளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. தனக்கு ஆண் வாரிசு கிடைக்காதா? ஈஸ்வரமூர்த்திக்குக் கவலை தொற்றிக்கொள்ள பத்மஜாவின் பெயர் சூட்டும் விழாவின் பொழுது சொந்தபந்தங்களே அந்த பேச்சையெடுத்து கோமதியை ஏற்றி விட்டிருந்தனர். கோமதியும் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்று மீண்டும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளலானாள்.
“ஹலோ நான் ரேணு பேசுறேன் ஈஸ்வர் சாரா”
ஆனந்த அதிர்ச்சியில் மிதந்த ஈஸ்வரமூர்த்தியோ “வாட் எ பிளேசன்ட் சப்ரைஸ். இத்தனை வருஷம் கழிச்சி கூப்பிட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?”
“என்ன சென்னைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க இனிமேல் அங்கதான். அங்க எனக்கு தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க என்று பார்த்தேன். உங்க ஞாபகம் வந்தது” என்றாள் ரேணு.
“நல்ல விஷயம் தானே. நீங்கத் தங்க நானே வீடு பார்த்து வைக்கிறேன். உங்க ஆபீஸ் எங்க”
அவளாக அழைக்கும்வரை ஈஸ்வர் ரேணுவை தொடர்புகொள்ள முயற்சி செய்யவில்லை. அவள் அழைத்த பின் மீண்டும் அவன் மனம் அடிக்க ஆரம்பித்தது. விவரங்களைப் பெற்றுக் கொண்டவன் எல்லா ஏற்பாட்டையும் செய்து கொடுத்தான். அவன் வந்து போக வசதியாகக் கொஞ்சம் ஒதுக்கு புறமான வீடுதான்.
மருத்துவமனையில் இருந்தவளோ மாமனிடமிருந்து தப்பியோடி வந்தவள். பதட்டமும், கவலையுமாக முகம் வாடியிருக்கும் பொழுதே ஈஸ்வரின் மனத்தைக் கொள்ளைக் கொண்டவள். இப்பொழுது இருப்பவளோ தனக்கென்று ஒரு வேலையையும் தேடிக்கொண்டு சுதந்திரமாக சந்தோஷமாக இருப்பவள். அவள் முகப்பு பொலிவு ஈஸ்வரை மேலும் ஈர்க்க, ரேணு என்பவள் அவனுக்கு இன்றியமையாதவள் என்றானாள்.
கோமதியை எவ்வாறு தன் பேச்சில் கவர்ந்தானோ அவ்வாறுதான் ரேணுவையும் கவர்ந்தான். இவனாகக் காதல் மொழி பேசவில்லை. உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர வைத்தே அவள் வாய் மொழி மூலம் காதலைச் சொல்ல வைத்திருந்தான்.
கோமதியின் கதை வேறு அவளைத் திருமணம் செய்யத் திட்டம் போட்டான். ஆனால் ரேணுவை அவனால் திருமணம் செய்ய முடியாது. அவளுக்கு உண்மை தெரியும் வரை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தவன் எந்த உண்மையையும் அவளிடம் கூறவில்லை.
இந்த நிலையில் கோமதி மீண்டும் கருவுற்றாள். பிரசவத்தின் போது குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு கோமதி இறந்து விட்டால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வென்று ரேணுவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவன் மனம் குதூகலிக்க,
கோமதியா? ரேணுகாவா? என்று வரும் பொழுது சோமசுந்தரத்தின் மகளால் தான் தனக்கு சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்கும். ரேணுகாவால் அதை பெற்றுத் தர முடியாது. பணம் இருந்தால் ரேணுகாவைப் போன்ற ஏராளமான பெண்களை அடையலாம். என்றது அவன் மனம்.
“டேய் முட்டாளே பிரசவத்தில் குழந்தை இறந்து கோமதி பிழைத்து விட்டால் என்ன செய்வாய்? அல்லது பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்வாய்?” என்று அவன் மூளை ஞாபகப்படுத்தி எச்சரிக்கை செய்தது.
அப்பொழுதுதான் ஈஸ்வரமூர்த்தியின் குரூர புத்தி வேலை செய்தது. தனக்கு ஆண் வாரிசு வேண்டும். தன்னுடைய வாரிசை சுமப்பவள் ரேணுகாவாக இருந்தால் என்ன? கோமதியாக இருந்தால் என்ன? ரேணுவின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அது ஆண் குழந்தையென்றானால் கோமதிக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை உருவாகும் பொழுது குழந்தையை மாற்றி வைக்கலாம் என்று முடிவு செய்தவன் ரேணுவுக்கு நம்பிக்கை கொடுக்க, அவளை வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து மனைவியாக்கிக் கொண்டான். அவள் மீதிருந்த காதலோடு கூடிய மோகம் மெல்லக் மெல்ல கரைந்து ஈஸ்வரமூர்த்தி சுயநலம் மிக்க மனித மிருகமாகிக் கொண்டிருந்த தருணம் அது. 
அவன் நினைத்தது போல் ரேணுவும் கர்ப்பமானாள். இருந்த ஒரே பிரச்சினை கோமதிக்குச் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பில்லை ஆபரேஷன் செய்ய வேண்டும் அதுவும் முப்பத்தியாறாம் வாரம் முழுமையடைந்த உடன் என்று மருத்துவர் கூறியிருக்க, ரேணுவுக்கு ஒரு மாதம் தள்ளித்தான் திகதி இருந்தது.
“என்ன செய்வது? என்ன செய்வது? என்ன செய்வது? என்று யோசித்தவன் கோமதி மருத்துவமனையில் அனுமதித்த அன்று ரேணுவை சந்திக்க வந்து மாடிப்படியில் எண்ணெய்யைக் கொட்டி அவளை வழுக்கி விழ வைத்து கோமதி அனுமதித்திருந்த அதே மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.
அவன் நினைத்தது போலவே கோமதிக்கு பிறந்ததும் பெண் குழந்தை தான். இறந்துதான் பிறந்தது. தலைமை மருத்துவர் சோமசுந்தரத்துக்கு வேண்டப்பட்டவர் என்பதினால் அவரின் உதவியோடு குழந்தையை மாற்றி இருந்தான்.
அதுவும் ரேணுவை தனக்கு நன்கு தெரியும் என்றும், காதலனால் ஏமாற்றப்பட்டு விட்டாளென்றும், குழந்தை இருந்தால் இன்னொரு வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்க மாட்டாள். அவளுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது குழந்தையால் போக மாட்டேன் என்கின்றாள். அவள் எதிர்கால வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் குழந்தை கோமதிக்கு உயிர் கொடுக்கட்டும் என்று பேசி அவரை சம்மதிக்க வைத்திருந்தான்.
சோமசுந்தரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கும். மருத்துவருக்கும் ஈஸ்வருக்குத் தெரிந்த ரகசியமாகச் சிலவருடங்கள் பாதுகாக்கப்பட்டு ரேணு அவளாகவே கண்டு பிடித்துச் சாகும் தறுவாயில் அருணாச்சலத்திடம் கூறி இருந்தாள்.
தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு.

Advertisement