Advertisement

அத்தியாயம் 11
சஞ்ஜீவின் அறைக்கு வந்த யாழினி கதவோடு நின்று விட்டாள்.
“உள்ள வா யாழினி. உன் துணியெல்லாம் சாயங்காலம் உன் வீட்டுக்குப் போய் எடுத்துக்கலாம். இல்ல வேணாம் நாம ஷாப்பிங் போய் புதுசா வாங்கிக்கலாம். உனக்கு பேஷன் என்னான்னே தெரியல” சஞ்ஜீவ் சாதாரணமாகச் சொல்லச் சிரித்தாள் யாழினி.
“சாரி அப்படியே வளர்ந்துட்டேன். ஆனா இப்போ இந்த வீடு, இந்த சொத்து, பணம், அந்தஸ்து எதுவுமே எனக்குச் சொந்தமானது இல்லனு தெரியிறப்போ மனசு ரணமா கொதிக்குது. எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு ஈஸ்வரமூர்த்தி எங்குற லெஜெண்ட என் கையாளையே அடிச்சி கொல்லனும் என்று வெறி வருது” கைமுஸ்டியை இறுக்கியவாறு கர்ஜித்தான் சஞ்ஜீவ்.  
அவன் தோளில் கைவைத்த யாழினி “டேய் அண்ணா! இப்படி கோபட்டா ஒன்னும் வேலைக்கு ஆகாது. அந்தாள கொன்னுட்டு ஜெயில்ல களி திண்ண போறியா? அவர் வாயாலே எல்லா உண்மையையும் சொல்ல வைக்கணும். அவர் இன்னும் என்னவெல்லாம் தப்பு பண்ணி இருக்காரு? யார் யாருக்கு என்ன கொடும பண்ணி இருக்காரு? அவருக்கு மட்டும்தான் தெரியும்” என்றாள்.
“ஆமா யாழினி. நான் கூட நாம கல்யாணம் பண்ண போவதாகச் சொல்லலாம். சொன்னாவே உண்மைய சொல்லிடுவார் என்று சொன்னேன். நல்லவேள நீ கல்யாணம் பண்ணிகிட்டதா டிராமா பண்ணலாம் என்று சொன்ன. கல்யாணம் பண்ணிக்க போறோம் என்று சொல்லி இருந்தா அவர் ஈஸியா நம்மள சமாளிச்சிருப்பாரு”
நேற்று வரை யாழினி என்பவள் யாரோ ஒருத்திதான். கூடப் பிறந்தவள் என்று அறிந்து கொண்ட பின் திருமணம் செய்ததாகக் கூற அவன் மனம் மறுத்தது. முதலில் முடியாது என்று மறுத்தவனை யாழினி பேசியே சம்மதிக்க வைத்திருந்தாள்.
சஞ்ஜீவ் சொன்னதற்கு யாழினி மறுத்ததற்கான ஒரே காரணம் யதுநாத் ஒருவனே. சஞ்சீவ் அண்ணன் என்றால் யதுநாத்தும் அண்ணன் தானே. அவனைப் பொறுத்தவரையில் யாழினி யாரோ. சஞ்ஜீவ் இவளைத்  திருமணம் செய்வதாகக் கூறினால் காதலிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் அவன் சட்டென்று தாலியைக் கட்டி விடுவானோ என்று அஞ்சியே திருமணம் நடந்து விட்டதாக நாடகம் ஆடலாம் என்றாள். ஆனால் அவ்வாறு கூறியும் இவர்கள் நினைத்ததுதான் நடக்கவில்லை.   
“பாத்தியா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று சொல்லியும் எங்கப்பா தி கிரேட் ஈஸ்வரமூர்த்தி எப்படி கமுக்கமா இருந்தாரு. அவர் வாயிலிருந்து வார்த்தையை அள்ளுறதும் ஒண்ணுதான். ஆமை கிட்ட இருந்து இறகை பிடுங்குறதும் ஒண்ணுதான். நாம ஒவ்வொரு அடியையும் ரொம்ப கவனமா எடுத்து வைக்கணும்” மறைந்திருந்து தாக்குவது யாழினிக்கு கைவந்த கலையாச்சே.  தன் அண்ணனிடம் எவ்வாறு காய் நகர்த்த வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாள்.
அவள் திறமையையும், பேச்சையும் வியந்து நோக்கியவன், ஆடையை வைத்து ஒரு மனிதனை எடை போடிடுவது எவ்வளவு முட்டாள் தானம் என்று புரிந்துக் கொண்டவனாக “சாரி யாழினி நீ என் கூடப் பொறந்தவ என்று தெரியாம நேத்து உன் கிட்டத் தப்பா…” என்று சஞ்ஜீவ் ஆரம்பிக்கும் பொழுதே
அவனை கைநீட்டித் தடுத்தவள் “அவர் இரத்தம் தானே நம்ம உடம்புல ஓடுது. அந்த விஷம் நமக்குள்ள கலந்து தானே இருக்கும். நாம தாப்பானவங்களா இருக்குறதுக்கு நாம காரணமில்ல. நம்மள பெத்தவர்தான் காரணம். அதனால நீ என் கிட்ட மன்னிப்பு கேக்குறதோ, நான் உன் கிட்ட மன்னிப்பு கேக்கிறதோ அனாவசியம். நாம அடுத்து என்ன செய்யணும் அத முதல்ல யோசிக்கலாம்” என்றாள்.
“ம்ம்..” என்று அவன் யோசிக்கும் பொழுதே அலைபேசி அடித்தது. யாரென்று பார்த்தவன் அருணாச்சலம் என்று வரவும் யாழினிக்கும் கேட்காத குரலில் பேசலானான்.
யாழினி ஒரு பெருமூச்சோடு நேற்று நடந்தவைகளை நினைத்துப் பார்த்தாள்.
“என்ன என்ன சொல்லுறீங்க? இவள் இவள் என் தங்கையா?” சோமசுந்தரம் என்ற மனிதர் அருணாச்சலத்துக்கு எவ்வளவு முக்கியமானவர் என்று சஞ்ஜீவுக்கு நன்றாகவே தெரியும். தாத்தாவின் புகைப்படத்தைப் பார்த்தாலே தொட்டுக் கும்பிடும் மனிதர் அருணாச்சலம். கண்டிப்பாகப் பொய்யாய் சத்தியம் செய்ய மாட்டார்.
“இவள் எப்படி என் தங்கையாக முடியும்? அப்படியென்றால் இவளுடைய அம்மா. அந்த பொம்பள பொய் சொன்னாளா?” சஞ்ஜீவின் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
“இல்ல அவங்க பொய் சொல்லல” அமைதியாகவே பேசினார் அருணாச்சலம்.
ஒருகணம் ஒன்றும் புரியாமல் குழம்பிய யாழினியும் “இவர் என்ன சொல்கிறார்” என்று பார்த்தாள்.
யாழினியின் அருகில் சென்று அவள் கைக்கட்டை அவிழ்த்து விட்டவர் “நான் சொல்லப் போற உண்மையை உங்க ரெண்டு பேரால நம்ப முடியாம கூட இருக்கலாம். ஆனா எல்லாமே உண்மை”
“அங்கிள் என்ன சொல்லுறதாக இருந்தாலும் சட்டென்று சொல்லுங்க” அவனால் யாழினி போன்ற ஒருத்தியை தன்னுடைய தங்கையென்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும். நான் சொல்லுறது கோமதிக்கும், ஈஸ்வருக்கும் கல்யாணம் நடந்து ஒரு வருஷமோ ஒண்ணனாரை வருஷமோ இருக்கும். பஞ்சு அறுவடை செய்யிற நேரம் ஆலையில் தீ பத்திக் கொண்டதாக போன் வந்ததால உங்க தாத்தா சொல்லி நானும் உங்க அப்பாவும் நம்ம பஞ்சு விலையிற நிலங்களை பார்க்க ஊருக்கு போய்கிட்டு இருந்தோம். டிரைவருக்கு உடம்பு முடியாம லீவ்ல போனதால நாம ரெண்டு பேரும் மாறி மாறி வண்டிய ஓட்டிக்கிட்டு போனோம்.
நைட்ல ட்ராவல் பண்ணா டிராபிக் அதிகம் இருக்காது என்று நான் சொன்னதால ஈவினிங்கே கிளம்பினோம்.  
அன்று நடந்ததை கூறலானார் அருணாச்சலம்.
இரவு பத்து மணியளவில் இரவு உணவை முடித்துக் கொண்ட பின் அருணாச்சலம் வண்டியை ஓட்ட ஈஸ்வரமூர்த்தி தூங்க முயன்றார் அவரால் வண்டியில் பயணிக்கும் பொழுது தூங்க முடியாது என்பதால் தூக்கம் வரவில்லை. ஒரு மணியளவில்  தான் வண்டியோட்டுவதாகக் கூறி அருணாச்சலத்தைச் சற்று நேரம் தூங்கச் சொல்ல அவரும் தூங்கலானார்.
மூன்று மணி தாண்டியிருக்கும் ஈஸ்வரமூர்த்திக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றினாலும் அவரால் வண்டியில் தூங்க முடியாததால் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி வண்டியை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தவர் எப்பொழுது கண்ணயர்ந்தார் என்று தெரியவில்லை வண்டி எதிலையோ மோதத் திடுக்கிட்டு வண்டியை நிறுத்தியிருந்தார்.
அந்த சத்தத்தில் கண்விழித்த அருணாச்சலமும் “என்னாச்சு” என்று பதற
“தெரியல” என்ற ஈஸ்வர் பாதையில் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை பார்த்து நடுங்கலானார்.
வண்டியின் வெளிச்சத்தில் அசைவற்றுக் கிடந்த பெண்ணை பார்த்த அருணாச்சலம் “செத்துட்டாங்களா?” அச்சத்தில் மிரண்டார்.
சோமசுந்தரத்தின் மீதிருந்த பாசம் அவர் மருமகனைக் காக்க எது வேண்டுமானாலும் செய்யத்தூண்ட “சார் முதல்ல வண்டிய விட்டு இறங்கி பின்னாடி போய் உக்காருங்க. யார் கேட்டாலும் வண்டிய நான் ஓட்டியதாக சொல்லுங்க” வண்டியை விட்டு அவசர அவசரமாக இறங்கிய அருணாச்சலம் அந்த பெண்ணை பரிசோதிக்க, மயக்கத்தில் தான் இருந்தாள்.
அருணாச்சலம் கூறியது எதுவும் ஈஸ்வரின் காதில் விழவில்லை. அச்சத்தில் ஓட்டுநர் இருக்கையிலையே அமர்ந்திருந்தார்.
“சார் சீக்கிரம் வாங்க” அருணாச்சலம் போட்ட சத்தம் அந்த இருளைக் கிழிக்க, வண்டியை விட்டு மெதுவாகத்தான் ஈஸ்வர் இறங்கினார்.
“மயக்குதுலதான் இருக்காங்க சார். ஹாஸ்பிடல் கொண்டு போனா காப்பாத்திடலாம்” அருணாச்சலம் சொல்ல நிம்மதியாக அப்பெண்ணிடம் விரைந்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி.   
ஒருவாறு அரைமணிநேரத்துக்குள் மருத்துவமனையில் அப்பெண்ணை அனுமதித்து விட்டு ஊரைப் பார்த்துச் சென்றனர் இருவரும்.
ஆலையில் தீ விபத்தை முடிந்த அளவு சீர் செய்து முடித்தார்கள். அறுவடை செய்த பஞ்சுகளை ஆலையில் நூலாய் மாற்றி, துணியாய் நெய்து கொண்டிருந்த வேளை ஈஸ்வரமூர்த்தியின் அலைபேசி ஒலியெழுப்பியது.
மருத்துவமையிலிருந்துதான் அழைத்திருந்தார்கள். இவர்கள் அனுமதித்த பெண்ணுக்கு நினைவு திரும்பி விட்டதாம்.
பாதையில் யாரோ வண்டியில் அடித்துப் போட்டுப் போய் விட்டதாகத்தான் அருணாச்சலம் கூறி மருத்துவமனையில் அனுமதித்தார். காவல்துறை விசாரணையென்று வரும் பொழுது இவர்களைக் கண்டிப்பாக அழைப்பார்கள், தவிர்க்க முடியாது என்றுதான் ஈஸ்வர் அலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தார்.
அந்த காலத்தில் அலைபேசியை உபயோகிப்பவர்கள் சொற்பமானவர்கள் அதில் ஈஸ்வர் போன்ற வசதியானவர் தயங்காமல் அலைபேசி எண்ணைக் கொடுத்ததில் போலீஸ் அவரை விசாரிக்கவேயில்லை.
நினைவு திரும்பிய பெண்ணும் தான் தன்னுடைய மாமனிடமிருந்து தப்பியோடி வந்ததில் இருட்டில் எந்த வண்டியில் மோதினேன் என்றுக் கூட தெரியவில்லையென்று வாக்கு மூலம் கொடுத்திருக்க, ஈஸ்வருக்கு எந்த பிரச்சினையும் நிகழவில்லை.
சென்னை திரும்பும் பொழுது மருத்துவமனைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று ஈஸ்வர் சொன்னதில் அருணாச்சலமும் சரியென்று கிளம்பிச் சென்றார்.
அவள் ரேணுகா. தலையில் கட்டு, காலில் கட்டு என்று கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். இரத்த வெள்ளத்திலிருந்த பொழுது அவள் அழகு ஈஸ்வரின் கண்களுக்குத் தெரியவில்லை. அச்சத்திலிருந்தவருக்கு ஆராயவும் தோன்றவில்லை.
நான்கு நாட்களில் தேறி இருந்தவள் முகலட்சணம் இன்று அவர் மனதைக் கொஞ்சம் அசைத்திருக்க, “என்ன உதவியென்றாலும் கேளுங்க. எங்க வண்டிலதான் நீங்க மோதி உங்களுக்கு இப்படியாகிருச்சு” உண்மையைக் கூறி ரேணுவைக் கவர்ந்தார்.
“உங்க வண்டில மோதினதாலதான் நான் இன்னைக்கி உயிரோட இருக்கேன். இல்லைனா என் மாமா என்ன கட்டாய கல்யாணம் பண்ணி இருப்பான்” என்று வெறுமையாகப் புன்னகைத்தவள் “என் தோழி தஞ்சாவூரில் இருக்கிறாள். அங்குச் சென்று ஒரு வேலையை தேடிக் கொள்வேன். நீங்கக் கேட்டதற்கு நன்றி” என்றாள்.
“நீங்க இப்போ இருக்குற நிலமைல எப்படி வேலைக்கு போவீங்க? உங்க தோழி உங்கள பார்த்துக் கொள்வாங்களா?” அக்கறையாக விசாரித்தார்.
“எந்த பிரச்சினையுமில்லை. நான் போன் பண்ணிட்டேன். அவ வந்து கொண்டு இருக்கா”
இவர்களின் சம்பாஷணையின் பொழுது அருணாச்சலம் கூடவே தான் இருந்தார். அவருக்கு இது சாதாரணமான சம்பாஷணையாகத்தான் இருந்தது.
ரேணுகா கூறிய தோழியும் வந்து விட இவர்களுக்கு நன்றி கூறி ரேணுவோடு பேசிக் கொண்டிருந்தாள்.
“அருணாச்சலம் இவங்களுக்கு பணம் ஏதாவது கொடுக்கணுமா? கொடுத்தா வாங்கிப்பாங்களா?” ரேணுவோடு ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஈஸ்வரின் மனம் உந்த அருணாச்சலத்திடம் யோசனை கேட்டார்.
அதைப் புரிந்துகொள்ளாத அருணாச்சலமோ “ஆமா சார் ஆக்சிடன்ட் வேற பண்ணி இருக்கோம். நாளை பின்ன ஏதாவது பிரச்சினை பண்ணிடுவாங்க. இப்போவே பணத்தைக் கொடுத்துச் சரி கட்டிடலாம்” என்றார்.
“சரி நீங்க இங்கேயே இருங்க நான் போய் பேசிப் பார்க்கிறேன்” என்ற ஈஸ்வர் அருணாச்சலத்தைத் தவிர்த்து விட்டு ரேணுவைத் தனியாகச் சந்தித்து பணம் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, அவள் வேண்டாம் என்றாள்.
உடனே தன்னுடைய விசிடங் கார்டை கொடுத்தவர் “எப்போ வேணும்னாலும், எந்த உதவியென்றாலும், என்ன கூப்பிடுங்க” என்று விடைபெற்றார்.
“ஏழு வருஷம் கழிச்சி ஒருநாள் உங்க அப்பாவோட அந்த பொண்ண சென்னைல வச்சி பார்த்தேன். அவங்க பேர் ஞாபகம் இல்லையென்றாலும் முகம் எனக்கு நல்லாவே ஞாபகம் இருந்தது. ஏன்னா அவங்க முகலட்சணம் அப்படி. யாழினி உனக்கு உன் அம்மா முகம்தான்” என்றார் அருணாச்சலம்.
தான் தன்னை பெற்ற அன்னை கல்பனாவை போலில்லையென்று யாழினி பல தடவை யோசித்திருப்பாள். அப்படியென்றால் தன்னை பெற்ற அன்னை ரேணுகாவா?
“நீங்க என்ன சொல்லுறீங்க? என் அம்மா கல்பனா இல்லையா?”
“இல்ல உன்னையும் சஞ்ஜீவையும் பெத்தது ரேணுகா”
அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற சஞ்ஜீவ் “என் அம்மா ரேணுகாவா?” கோமதி தன்னை எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தாள். அவள் இடுப்பை விட்டு இறக்கவே மாட்டாளே. கொஞ்சம் உடம்பு முடியாமல் போனாலும் தூங்காமல் அருகிலையே இருப்பாளே. என் முகம் பார்த்தே என்ன பிரச்சினை என்று கேட்கும் கோமதி என்னை பெற்றவள் இல்லையா?
 சஞ்ஜீவின் இதயம் கனத்து வலித்தது. மூச்சை ஆழமாக இழுத்து விட்டவன் “இப்போ அவங்க எங்க இருக்காங்க? ஏன் யாழினி வேற யாரையோ அம்மா என்று சொல்லுறா? நான் எப்படி கோமதி அம்மா கிட்ட?” தன் இதயத்துக்குள் மலையாக எழுந்த கேள்விக் கணைகளை அருணாச்சலத்திடம் அவசரமாக எடுத்து வைத்தான்.
“அவங்களுக்கு என்ன ஆச்சு, நீங்க எப்படி பொறந்தீங்க. ஏன் பொறந்தீங்க யாழினி ஏன் கல்பனா கிட்ட போனா இதெல்லாம் விதியல்ல ஈஸ்வருடைய சதி” 
“நீங்க என்ன சொல்லுறீங்க என்று எனக்குச் சுத்தமா புரியல” நெற்றியைத் தடவியவாறு கூறினாள் யாழினி.
சிறு வயதில் தந்தை பெயர் தெரியாதவள் என்று வளர்ந்தவள் யாழினி. தந்தையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் அவள் ஒரே குறிக்கோளாகிப் போய் இருக்க, இன்று அவள் அன்னையே வேறொருத்தியென்றால் அவள் எவ்வாறு ஏற்றுக்கொள்வாள். அவளால் சுத்தமாக நம்ப முடியவில்லை.
“உங்கம்மாவ ஈஸ்வரோட பார்த்தப்ப கூட நான் தப்பா நினைக்கல. இதைப் பத்தி உங்கப்பா கிட்டக் கேட்டேன். யாரு? எந்த பொண்ணு? என்று மழுப்பப் போனவர் ஒருவழியா ஓஹ்… அந்த பொண்ணா சென்னைலதான் இப்போ வேலை பாக்குறாளாம். எதேச்சையா பார்த்தப்போ என்ன ஞாபகம் வச்சி பேசினா என்றார். அப்போ கூட எனக்கு அவர் மேல் சந்தேகம் வரல.
ஒருநாள் என் மகளோட அவ பர்த்டேக்கு கிப்ட் வாங்க மாலுக்கு கூட்டிட்டு போனேன். அங்க வச்சி ஈஸ்வரையும் ரேணுகாவையும் பார்த்தேன். அப்போ ரேணுகா பிரேக்னன்ட்டா இருந்தா. ஈஸ்வரும் அவங்களும் ரொம்ப அந்நியோன்யமா இருக்குறத பார்த்து எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.
அப்போ கோமதியம்மாவுக்கு பத்மஜாவும், நீங்களும் இருந்தீங்க. அவங்கள காதலிச்சு தானே கல்யாணம் பண்ணிக்க கொண்டார். எதற்காக இந்த பெண்ணோடு இருக்காரு? இவருக்குக் கல்யாணம் ஆனது இந்த பெண்ணுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரிந்துதான் குடும்பம் நடாத்துகிறாளா? அல்லது ஈஸ்வர் இந்த பெண்ணை ஏமாற்றுகிறாரா? எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
ஏன் என்றால் ஈஸ்வரிடம் யாருமே எந்த குறையும் கண்டு பிடிக்க முடியாது. இந்த மாதிரி ஒரு பிள்ளை நமக்கு பிறக்கலையே, இந்த மாதிரி ஒரு மருமகன் நமக்கு இல்லையே, இந்த மாதிரி ஒரு கணவன் நமக்கு இல்லையே என்று பாக்குறவங்க ஈஸ்வர பத்தி பேசவும் பொறாமை படவும் செய்பவர் ஈஸ்வர். அப்படிப்பட்டவர் இப்படியொரு தவறை செய்வார் என்று என்னால கற்பனை கூடச் செய்து பார்க்க முடியல”
“ஒரு நிமிஷம் அங்கிள் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் ரேணுகா என் அம்மானு சொன்னீங்க. இப்போ கோமதியம்மாக்கு நான் பிறந்ததாக சொல்லுறீங்க. ரேணுகா அம்மா பிரேக்னன்ட்டா இருந்ததா வேற சொல்லுறீங்க. அப்போ அவங்க பொண்ணு யாழினி மட்டும் தானே” இது என்ன விடுகதையாக இருக்கு எனும் விதமாக கேட்டான் சஞ்ஜீவ்.
“அப்போ நானும் அப்படித்தான் நினச்சேன். ஆனா ரேணுவை நான் எந்த நிலமைல சந்திச்சேனோ அப்போ எல்லா உண்மையும் தெரிஞ்சிகிட்டேன்” புதிராகவே கூறினார் அருணாச்சலம்.
“நீங்க என்ன சொல்லுறீங்க?”
“மர்மக் கதை சொல்லுறது போலவே சொல்லுறீங்களே சார். நெஞ்சம் திக் திக் எங்குது. கொஞ்சம் திகில் இல்லாம சொல்லுங்க” என்ற யாழினி அங்கிருந்த தண்ணீரை வேறு அருந்தினாள். 
“நான் சொல்லும் போதே கேக்குற உங்களுக்கே இப்படி இருக்கே! அனுபவித்த ரேணுகா சொன்னப்போ கேட்ட எனக்கு எப்படி இருந்திருக்கும்” என்ற அருணாச்சலத்தின் கண்கள் கலங்கி இருந்தன.
அவருக்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள் யாழினி. சஞ்ஜீவ் அவர் அருகில் கூட செல்லவில்லை. இதெல்லாம் அவனுக்குப் பழக்கம் கூட இல்லையே. அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து அசையாது வெறிக்கலானான். 
சில நிமிட மௌனத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார் அருணாச்சலம். “சோமசுந்தரம் ஐயா உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் இந்த விசயத்தைச் சொல்லி இருக்கலாம். பொறுமையா என்ன? ஏது? என்று விசாரித்து இருப்பார். வள்ளியம்மா இப்போதுதான் பொறுமையா கையாளுறாங்க. முன்ன எல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசர முடிவுதான் எடுப்பாங்க. கோபமும் அதிகமா வரும். அதனாலேயே அவங்க கிட்ட இதைப்பத்தி சொல்லப் பயந்தேன். அதுவும் கோமதியம்மா வாழ்கை பிரச்சினை வேற.
முதல்ல ரேணுகா கிட்ட பேசிப்பார்க்கலாம் என்று முடிவு பண்ணி அவங்க எங்க இருக்காங்க என்று ரகசியமா விசாரிக்க ஆரம்பிச்சேன். அதோட உங்க அப்பாவை பின் தொடர்ந்தேன்.
அவங்க திரும்ப தஞ்சாவூர்லயே செட்டில் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அங்க எங்க இருக்காங்க என்று தெரியல. உங்க அப்பா சொந்த ஊருக்குப் போறதாகச் சொல்லி ரேணுகாவைத்தான் பார்க்க போறாரு என்று தெரிஞ்சி கிட்டதும் அவரை பாலோ பண்ணேன்.
உங்கப்பா ஒரு அபார்ட்மெண்ட்டுக்குள்ள போறதப் பார்த்தேன். நான் வண்டிய நிறுத்திட்டு வந்து பார்த்ததுல அவர் எந்த மாடில எந்த வீட்டுக்குள்ள போனார் என்று எனக்கு தெரியல. மாலை நேரம் வேற திரும்பிப் போகலாமா? இல்ல. வந்ததுக்கு எப்படியாவது வீட்டைக் கண்டு பிடிக்கலாமா? என்ற யோசனையிலையே படி வழியா ஏறினேன். மூன்றாம் மாடில ஒரு வீட்டுல சத்தமாக இருந்தது.
யாரோ என்னவோ என்று நான்காம் மாடிக்கு போகலாம் என்று பார்த்தேன். யாரோ ஒரு பொண்ணு “அம்மா” என்று அலறிய சத்தத்தோடு உங்கப்பா வேகமா லிப்டுக்குள்ள நுழஞ்சத பார்த்ததும் கத்தினது ரேணுகா என்று புரிஞ்சது.
உள்ள போய் பார்த்தா தலைல அடிப்பட்டு மயங்கி கிடந்தா அடிச்சது உங்க அப்பா என்றும் புரிஞ்சது. உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்.
தலைல பலத்த காயம் அவங்க உயிரை காப்பாத்த முடியாது, குழந்தையாவது ஆபரேஷன் பண்ணி காப்பாத்தணும் என்று டாக்டர் சொன்னாரு. காடியன் என்று கையெழுத்து போட்டதே நான்தான். பொண்ணு பொறந்தா. குழந்தை ஆரோக்கியமா இருந்ததால வேற வார்டுல வச்சிருந்தாங்க.
அனைய போற விளக்கா கண்ணு முழிச்சி ரேணுகா எல்லா உண்மையையும் என் கிட்ட சொல்லிட்டுதான் உயிரை விட்டா. அப்போதான் சஞ்ஜீவ் ரேணுகாவோட பையன் என்று தெரிஞ்சி கிட்டேன்” என்றவரின் தொண்டையடைத்தது.
“அவங்க அவங்க என்ன சொன்னாங்க?” தான் எப்படி கோமதியிடம் வந்து சேர்ந்தேன்? பெற்ற தந்தையே துரோகம் செய்வாரா? சஞ்ஜீவுக்கு சுத்தமாக புரியவில்லை. 
“ஆரம்பத்துலையே சொன்னேனே நீங்க பிறந்தது விதியல்ல ஈஸ்வர் செஞ்ச சதியென்று. ஆனா உங்க தங்கச்சி பொறந்தது விதியால”
“நீங்க என்ன சொல்லுறீங்க? சொல்லுற ஒண்ணுமே புரியல” சீறினான் சஞ்ஜீவ்.
“என் அண்ணனை இஷ்டப்பட்டு பெத்துக்கிட்டவரு என்ன வேண்டா வெறுப்பா பெத்துக்கிட்டாரா?”  அருணாச்சலம் கூறியதை சரியாக புரிந்துக் கொண்ட யாழினி கேட்டாள்.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் “உங்கம்மா என்ன அப்படியென்ன உண்மைய சொன்னா என்று நீங்க தெரிஞ்சிக்க முன்னாடி உங்க அப்பா எப்படிப் பட்டவர் என்று தெரிஞ்சிக்கணும்.
பள்ளிக்கூடம் படிக்கும் போதே மேடை நாடகம் நடிக்கிறதுல உங்க அப்பா ரொம்ப ஆர்வம் காட்டி இருக்குறாரு. காலேஜ்ல கூட நாடகங்கள் இயக்கி நடிச்சி இருக்காரு. அவருக்குள்ள பல நடிகர்கள். ஈஸ்வர் ஒரு திறமையான நடிகர்.
ஈஸ்வரோட தோற்றம் மத்தவங்கள ஏமாத்தவும், நம்பவும் வைக்க போதுமாக இருந்தாலும் பேச்சு ரொம்பவே உறுதுணையாக இருக்கும்.
கோமதியம்மா எவ்வளவு பணவசதியுடையவங்க என்று தெரிஞ்சி கொண்டே அவர்களோடு நெருங்கிப் பழகிக் காதலிக்க வச்சிருக்காரு. எல்லாமே திட்டம் போட்டு செஞ்சிருக்காரு. ஸ்டேப் பை ஸ்டேப் என்று சொல்லுவோம் இல்ல அப்படி. இதெல்லாம் சினிமால தான் பார்த்திருப்பீங்க. நிஜத்திலும் இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்யிறாங்க” யாழினி மற்றும் சஞ்ஜீவின் அதிந்த முகங்களை பார்த்தவாறே கூறினார் அருணாச்சலம். 
“அப்போ எங்கம்மா அதான் ரேணுகா அம்மாவ காதலிச்சாரா? என்ன வளர்த்த அம்மா கல்பனா எங்கப்பா ரொம்ப நல்லவரு, வல்லவரு வானளவு உயர்ந்த உள்ளம் கொண்டவரு என்று புகழுறாங்களே அவங்களும் அவருக்கு கூட்டா?” குழப்பமாக கேட்டாள் யாழினி.
 “உன்ன முதல் முதலா பாக்டரில பார்த்ததும் கல்பனாவை பத்திதான் விசாரிச்சேன். அவங்க வாழுற வாழ்க்கை பொய்யில்லை. அவங்க நடிக்கவுமில்லை. ஈஸ்வருக்கு கூட்டுமில்ல. ஈஸ்வரோட உண்மையான முகம் அவங்களுக்கு தெரியாது.
சோமசுந்தரம் ஐயாவையே தன்னோட நடிப்புத் திறமையால் ஏமாத்த முடிஞ்ச ஈஸ்வருக்கு கலப்னாவை ஏமாத்துறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே. அதுவும் கல்பனாவுக்கு ஈஸ்வர் என்றா பிடிக்கும்.
சின்ன வயசுல வேணா ஈஸ்வர் நல்லவனா இருந்திருக்கலாம். அப்படியே இருப்பார் என்று கல்பனா நம்பி இருக்கலாம். தன்னோட நடிப்புத் திறமையால் சோமசுந்தரம் ஐயா, கோமதியம்மா பெத்த பசங்க என்று எல்லாரையும்தான் ஏமாத்திகிட்டு இருக்காரு. இதுநாள் வரைக்கும் அவரால நெருங்க முடியாத ஒரே ஒரு ஆத்மா ஆனந்தவள்ளி அம்மா மட்டும்தான்”
  “அம்மாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கொண்டதால் பாட்டிக்கு அப்பாவை எப்போவுமே பிடிக்காது” என்றான் சஞ்ஜீவ் 
“அந்த கோபத்தினால் அவங்களால ஈஸ்வரோட உண்மையான முகத்தை அடையாளம் காண முடியல”
“ஆமா சார் நீங்க எதுக்கு இத்தனை வருஷமா அமைதியா இருந்தீங்க? ஆனந்தவள்ளி அம்மா கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி இருக்கலாமே” யோசனையாகவே கேட்டாள் யாழினி.
“எதிரியாக இருந்தா சொல்லலாம். சொந்த மக வாழ்க்கை என்றும் பொழுது எப்படி சொல்லுறது என்ற தயக்கம், எந்த சாட்சியும் இல்லாம சொல்லவும் முடியாது. எனக்கு எல்லா உண்மையும் தெரியும் என்று ஈஸ்வருக்கு தெரிஞ்சா, தான் காதலிச்ச ரேணுகாவையே கொன்னை ஈஸ்வர் என்ன உயிரோட விடுவாரா?”
“என்ன?” யாழினியும் சஞ்ஜீவும் அதிர்ந்து நின்றனர்.

Advertisement