Advertisement

அத்தியாயம் 10
“வாங்க வாங்க வல்லவராயன் உண்மை என்னவென்று தெரிஞ்சிகிட்டீங்க போல” நேற்று செல்லும் போது பேசி விட்டு சென்றதை வைத்து குத்திக் காட்டும் விதமாக வீட்டுக்கு வந்த வல்லவராயனை கொஞ்சம் நக்கல் கலந்த குரலோடு வரவேற்றாள் ஆனந்தவள்ளி.
“எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க உண்மை என்னானு தெரியாம அவசரப்பட்டு முடிவெடுத்தது தப்புதான். என் மனைவியும் என் மகளும் என் பேச்சு மீற மாட்டாங்க. பெரியவங்க நீங்க எம்பொண்ண பெரிய மனசு பண்ணி ஏத்துக்கோங்க” கைகூப்பினார்.
நிவேதிதா சஞ்ஜீவைதான் திருமணம் செய்துகொள்வேன் என்று அடம்பிடித்தாளா? அல்லது உண்மை என்னவென்று அறிந்த பின் வல்லவராயன் மனம் திருந்தி வந்து விட்டாரா தெரியவில்லை. வீடு தேடி வந்து விட்டார். வந்தவரிடம் நல்லமுறையில் பேசாமல் பெண் எடுக்கிறோம் என்ற திமிரில் கேலியாக பேசி நக்கல் செய்வதும். மரியாதை குறையாக நடத்துவதும் சரியா? நடந்த பிரச்சினையும் சாதாரண பிரச்சினையல்லவே. இவர்கள் பக்கம் நியாயம் இருக்க வல்லவராயனை குற்றவாளி கூண்டில் ஏற்ற முயல்வது எந்த விதத்தில் நியாயம்? 
“அதுதான் தெரியுமே. பொண்ணு பார்க்க வந்தப்போ கூட உங்க வீட்டம்மா ஒரு வார்த்த பேசல. நிச்சயதார்த்தம் நடந்தப்போ கூட ஒரு வார்த்த பேசல. இந்த கல்யாணம் நடக்குறதுல அவங்களுக்கு இஷ்டமில்லாத மாதிரியே இருந்தாங்களே” குத்தலாகவே கூறினாள் பத்மஜா.
வல்லவராயனின் மனைவி கோகிலவாணிக்கு தன்னுடைய ஒரே மகளை தன்னுடைய அண்ணன் மகனுக்குக் கட்டி வைக்க வேண்டும் என்று ஆசை. இவர்களை விட அவர்கள் பண, வசதியில் குறைந்தவர்கள் என்றுதான் வல்லவராயனுக்கு அங்கு சம்பந்தம் செய்ய இஷ்டமில்லை. கணவனை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியாக இருந்தாள்.
ஈஸ்வரமூர்த்திக்கும் கல்பனாவுக்குத் தொடர்பிருப்பதாக அறிந்து வல்லவராயின் திருமணத்தை நிறுத்தி விட்டு வீடு வந்ததும் கோகிலவாணி நிவேதிதாவை தன் அண்ணன் மகனுக்குக் கட்டி வைக்கலாம் என்று பேச்செடுக்க,
மனைவியை அறைய கையோங்கிய வல்லவராயனோ “என் பொண்ணு வசதிக்கு உன் அண்ணன் மகன் பக்கத்துல கூட நிற்க மாட்டான். திரும்ப நீ இத பத்தி பேசினா உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவேன்” என்று மிரட்டினார்.
காலையில் எழுந்த உடனே கல்பனா யாரு? ஈஸ்வரமூர்த்திக்கும் அவளுக்குமான உறவு என்ன? என்று அறிந்த நொடி மீண்டும் ஆனந்தவள்ளியைத் தேடி மகளோடு வந்து விட்டார்.
“அதான் வந்துடீங்களே வாங்க உக்காந்து பேசலாம். நீயும் உக்காருமா” பேத்தியை முறைத்தவாறே நிவேதிதாவையும் அமருமாறு கூறினாள் ஆனந்தவள்ளி. 
அமர்ந்தவாறே “நாம கல்யாணத்த இன்னும் தள்ளிப் போடாம சீக்கிரமா வச்சிக்கலாம். அது விசயமாகத்தான் பேசலாம் என்று வந்தேன். சம்பந்தி எங்க?”
“நேத்து நடந்த சம்பவத்தால் யாருமே கம்பனிக்கு போகல. இருங்க கூப்பிடுறேன்” என்ற கோமதி கணவனை அழைக்கச் சென்றாள்.
“கோமதி அப்படியே குடிக்கவும் ஏதாவது ஏற்பாடு பண்ணு” என்ற ஆனந்தவள்ளி “பத்மஜா நீ போய் சஞ்ஜீவ கூட்டிட்டு வா. உன் தம்பியதான் கூட்டிட்டு வரணும் உன் புருஷன இல்ல. புரியுதா?” கிண்டலாகக் கூறுவது போல் பேத்திக்கு குட்டும் வைத்தாள் முத்தம்மா.
“வணக்கம் சம்பந்தி” என்றவாறு வந்தார் ஈஸ்வர்.
அவரைக் கண்டு அவரருகே சென்ற வல்லவராயன் ஈஸ்வரனின் கைகளைப் பற்றிக் கொண்டு “என்ன மன்னிச்சிடுங்க சம்பந்தி. உண்மை என்னவென்று தெரியாம அவசரப்பட்டு கல்யாணத்த நிறுத்திடுவேன்னு பேசிட்டேன். பிரச்சினை என்று வரும் பொழுது நீங்க கோபப்படாம அமைதியா, நிதானமா, பொறுமையா இருக்கிறதுதான் உங்க வெற்றிக்குக் காரணம்.
நேத்து நீங்க அமைதியா இருந்ததைப் பார்த்து நீங்கத் தப்பு பண்ணிட்டதா நானே தப்பா நினைச்சிட்டேன். ஆனா நீங்கத் தப்பானவர் இல்ல. நீங்க நிதானத்தோடு இருந்ததனாலதான் உண்மை என்ன என்று எல்லாருக்கும் தெரிய வந்தது. உங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சிக்க நான் பெருமை படணும்” ஈஸ்வரமூர்த்தியைப் புகழ்ந்தது தள்ளினார் வல்லவராயன்.
அதைக் கேட்டவாறே படிகளில் இறங்கிய யதுநாத் அங்கேயே நின்று விட்டான் “ஆமா என் விசயத்துல மட்டும்தான் இவர் நிதானம் தவருவாரு. கோபப்படுவார்”
“என்ன சம்பந்தி நீங்கப் பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க. ஒரு மனுஷனுக்கு நிதானம் ரொம்ப முக்கியம். பிரச்சினை என்று வரும் பொழுது சாதாரண மனுஷன் பதட்டமடையத்தான் செய்வான். பதட்டத்துடன் தப்பு பண்ணுவான். நிதானமா யோசிச்சா எந்த தப்பும் செய்ய மாட்டான்” பதுங்கும் புலியும் அவ்வாறுதான் என்று சொல்லாமல் சொன்னார்.  
“சின்ன வயசிலேயே உங்களுக்கு நிறையப் பக்குவம் இருந்திருக்கும், வயசும் அனுபவமும் அத இன்னமும் அதிகப்படுத்தி இருக்கும்” வல்லவராயன் மேலும் புகழ,
“வாங்க உக்காந்து பேசலாம்” ஈஸ்வர் அழைக்கும் நேரம் கோமதி குடிக்கத் தேநீர் எடுத்து வந்தாள்.  
அதைக் கையில் வாங்கிக் கொண்ட வல்லவராயனோ ஆனந்தவள்ளியை ஏறிட்டு “நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பொண்ணு ஈஸ்வர அப்பா என்று தப்பா நினைச்சி ரொம்ப பேசிட்டா. அது காட்டுது தீ போலப் பரவி ஈஸ்வருக்கு, உங்க குடும்பத்துக்கும் கெட்ட பெயரை உண்டு பண்ணிருச்சு. அந்த பொண்ண இந்த குடும்பத்து மருமகளாக்கினீங்கன்னா பேசுறவங்க வாயக் கொஞ்சம் அடக்கிடலாம். என்ன சொல்லுறீங்க ஈஸ்வர்?”
அதைக் கேட்ட யதுநாத்துக்கு குஷியோ குஷி. “அட  நாம எதுவும் செய்ய வேணாம் போலயே எல்லாம் தானாகவே நடக்குதே”
தேநீரை ஒரு மிடறு பருகிய ஈஸ்வரமூர்த்தி மாமியாரைப் பார்த்து “இந்த வீட்டுல எல்லா முடிவையும் அத்தைதான் எடுப்பாங்க. அவங்க எடுக்குறதுதான் முடிவு” புன்னகையோடு கூறினார். அவருக்கு நன்றாகத் தெரியும் யாழினியை யதுநாத்துக்கு ஆனந்தவள்ளி ஒரு காலமும் திருமணம் செய்து வைக்க மாட்டாள் என்று.  
யதுநாத் முத்தம்மா என்ன சொல்லப் போகிறாளோ என்று பார்த்திருக்க, “நீ என்னடா படிய எண்ணிக் கிட்டு இருக்க?” என்றவாறு வந்தான் கிரிராஜ்.
அவன் சத்தத்தில் அனைவரும் அப்பக்கம் திரும்பிப் பார்க்க, காலிலிருக்கும் ஷூவின் பட்டியைக் கட்டுவது போல் குனித்தான் யதுநாத். இல்லையென்றால் இவ்வளவு நேரமும் இவர்களின் பேச்சை இவன் ஒட்டுக் கேட்டது போல் ஆகி விடாதா?  
“முக்கியமான விஷயம் பேசும் போது மூக்கு வேர்த்தா மாதிரி கரெக்ட்டா என்ட்ரி கொடுக்குறதுல இந்த மாமாவை தவிர வேற யாராலயும் முடியாது” முணுமுணுத்தவன் கிரிராஜாவை மனதுக்குள் வசைபாடலானான். 
கிரிராஜ் வந்து அமர்ந்து கொண்டவன் அங்கு என்ன நடக்கிறது என்று கவனிக்கலானான்.  குடும்ப விஷயங்களை இவனிடம் கலந்தாலோசிப்பதுமில்லை. இவனிடம் ஆலோசனை கேட்பதுமில்லை. ஆனால் தான் தான் எல்லாமே என்பது போல் நடந்துகொள்வதில் கிரியை மிஞ்ச ஆளில்லை. 
குழந்தைகளோடு வந்த பேத்தியை முறைத்த முத்தம்மா “உருப்படியா நீ எந்த வேலையையும் செய்யாத. உனக்கு என்ன வேலைக்குக் கொடுத்தேன் நீ என்ன வேலை பார்க்குற?” என்று திட்டினாள்.  
அதில் வல்லவராயன் சொன்னது பின்னுக்கு தள்ளப்பட்டது. அல்லது முத்தம்மா வேண்டுமென்றே பேச்சை திசை திருப்பினாளோ? 
“சஞ்ஜீவ் ரூம்லயே இல்ல. காலையிலையே எங்க போனான்னு தெரியல” என்றாள் பத்மஜா.
“டேய் யது சஞ்சீவ் எங்க போனான்? உனக்கு ஏதாவது தெரியுமா?” கோமதி கேட்க
“பாவம் அவனே அவன் பி.ஏவ சமாதானப்படுத்தி வீட்டுல விட்டுட்டு வர விடியற்காலையாகிருச்சு. அவன் கிட்டப் போய் சஞ்சீவ் எங்க போனான் என்று கேக்குறீங்களே அத்த” நக்கல் செய்தான் கிரிராஜ். 
“எனக்கு என்ன தெரியும்? இந்த வீட்டுல யார் யார் எல்லாம் எங்க போறீங்க? என்ன பண்ணுறீங்க என்று என் கிட்ட சொல்லிட்டா போறீங்க?” கடுப்பானான் யதுநாத். 
“ஏன் மாப்புள நீங்க ஏதாச்சும் வேல கொடுத்த அவனை பாக்டரிக்கு அனுப்பி வச்சீங்களா?” யோசனையாகக் கேட்டாள் ஆனந்தவள்ளி.
“இல்ல நானே இப்போதான் எழுந்து வரேன்” என்று ஈஸ்வர் சொன்னதும் “ஏன் பத்மஜா சஞ்ஜீவ் ரூமை எட்டிப் பார்த்து அவன் இல்லனு வந்து சொல்லுறியா? இல்ல நல்லா பார்த்தியா?” சந்தேகமாகக் கேட்டாள்
மனைவியைக் குறை சொன்னதும் கிரிராஜுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. சட்டென்று எழுந்து விறுவிறுவென வெளியே சென்றவன் சஞ்ஜீவின் வண்டி வெளியே இருக்கிறதா? என்று பார்த்து விட்டு வந்தது இல்லையென்றான். 
“காலையிலையே இவன் எங்க போனான். என் கிட்ட சொல்லாமா?” கோமதி யோசனையாகக் கேட்டாள்.
மூத்த மகன் தன்கைக்குள்ளேயே இருப்பவன் தன்னிடம் சொல்லாமல், தன்கையால் காலை உணவை உண்ணாமல் வீட்டை விட்டுக் கிளம்பாதவன் எங்கு என்றான் என்ற கவலையும், பதட்டமும் கோமதியைச் சட்டென்று தொற்றிக்கொண்டது.
“நானும் எந்த வேலையும் கொடுக்கல, மாப்புளையும் எந்த வேலையும் கொடுக்கலைனா எங்க போய் இருப்பான்? முதல்ல அவனுக்கு போன் போடு” என்றாள் ஆனந்தவள்ளி.
சஞ்ஜீவுக்கு கிரிராஜ் ஒருபுறம் அழைக்க, கோமதி ஒருபுறம் அழைத்துக் கொண்டிருந்தாள். அவன் அலைபேசிதான் எடுக்கப்படவேயில்லை.
எங்கதான் சென்றான் இவன் என்று வீட்டார் கவலையில் இருக்கும் பொழுது சஞ்ஜீவின் வண்டி வாயினுள் நுழைந்தது.
“அதோ வாரான். எங்க போனான் என்று நீங்களே கேளுங்க” என்றான் கிரிராஜ்.
இதோ சஞ்ஜீவ் வந்துட்டான். வல்லவராயனின் கைபொம்மையாக இருக்கும் நிவேதிதாவுக்கும் அவனுக்கும் திருமண திகதியை குறித்து விடுவார்கள் அன்றே தனக்கும் யாழினிக்கும் திருமணத்தை நடாத்தி விட வேண்டும் என்று யதுநாத்தின் மனம் குதூகலத்தில் குதித்த நேரம்,
“ஐயோ அம்மா இங்க வாங்க. சீக்கரம் வாங்க” என்று கத்தினாள் பத்மஜா.
“எதுக்கு டி கத்துற” அவள் முதுகில் அடித்தவாறு கதவருகே வந்த கோமதி அதிர்ச்சியில் உறைந்தாள்.   
“என்னாச்சு” என்றவாறு வந்த கிரிராஜ் “என்ன காரியம்டா பண்ணி இருக்க?” என்று கத்த அனைவருமே வெளியே வந்திருந்தனர்.
சஞ்ஜீவ் யாழினியோடு மாலையும், கழுத்துமாகத் திருமணக்கோலத்தில் வண்டியிலிருந்து இறங்கி வண்டியைப் பூட்டிக் கொண்டிருந்தான். 
அதைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நிற்க, அனைவரையும் தள்ளிக் கொண்டு யாழினியை வந்தடைந்த யதுநாத் அவள் முன்னால் நின்று அவள் கண்களைத்தான் பார்த்தான்.
எது உண்மை? எது பொய்? அவனால் ஒரு கணம் சிந்திக்க முடியவில்லை. சஞ்ஜீவை காதலிப்பதாகச் சொன்னாள். ஒருதலைக் காதலாக இருக்கும் என்று எண்ணினால் அவனும் இவளைக் காதலிப்பதாகக் கூறினாள். அவன் குணத்துக்கு இவளைக் காதலிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை ஒருதலைக் காதலாக இருக்குமோ என்று இவன் சந்தேகம் கொண்ட பொழுது தன்னுடைய தந்தை அவளுடைய தந்தையென்ற சந்தேகத்தினால்தான் யாழினி தன்னை விட்டு ஒதுங்கிப் போக நினைக்கிறாள் என்று நினைத்தான்.
இதுதான் விதியென்று வீடு வந்தவனுக்கு கல்பனா கூறிய உண்மைகள் பத்மஜா மூலம் அறிய வர அவன் அடைந்த நிம்மதி அளவில்லாதது.
இதோ இப்பொழுது வல்லவராயன் தனக்கும், யாழினிக்குத் திருமணம் செய்து வைக்கும்படி வீட்டாரிடம் கூறிய பொழுது எல்லாமே தங்குதடையில்லாமல் நடைபெறுவதாக நினைத்தானே.
அதற்குள் இவள் அண்ணனைத் திருமணம் செய்து கொண்டு வந்து விட்டாள். சஞ்ஜீவுக்கு இவளைச் சுத்தமாகப் பிடிக்காது அதைக் கண்கூடாகப் பார்த்து விட்டான். இவள் அவனைக் காதலிப்பதாகச் சொன்னதும் சுத்தப் பொய். அப்படியிருக்க இவர்கள் எதற்காக திருமணம் செய்தார்கள்? அப்படியென்ன கட்டாயம் நிகழ்ந்தது? ஏன்? ஏன்?  அவள் கண்களுக்குள் தனக்கான காதலைத்தான் தேடினான்.
அங்கிருந்த யாரைப் பார்த்தும் யாழினி அஞ்சவில்லை. யதுநாத்தை நினைத்துத்தான் அஞ்சினாள். அவன் அருகில் வந்து நின்றதும் வெலவெழுத்துப் போனவள் சஞ்ஜீவின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். அதைப் பார்த்து யதுநாத்தின் காதல் கொண்ட மனம் சுக்கு நூறாக உடைந்தது. 
“அப்படியென்றால் இவள் என்னைக் காதலிக்கவே இல்லையா? “இல்லையே! நான் முத்தமிட்ட பொழுது என்னோடு இசைந்தவள் என்னைக் காதலிக்காமலா என் கைகளில் சரணடைந்தாள்?” அவன் காதல் கொண்ட மனம் போராடலானது.  
தன்னிடம் வேலை செய்யும் பெண் தன்னுடைய அண்ணனையே திருமணம் செய்து கொண்டு வந்து விட்டதால் யதுநாத் யாழினியை முறைப்பதாகத்தான் சஞ்ஜீவும் வீட்டாரும் நினைத்தனர்.
யதுநாத் பேச முன்பு அவனைத் தள்ளி விட்ட ஈஸ்வரமூர்த்தி பாய்ந்து சஞ்ஜீவின் கன்னத்தில் அறைந்தவர் “என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” என்று கேட்க,
“பண்ணக் கூடாத ஏதாவது பண்ணிட்டேனா? சொல்லுங்க. அப்பா…” அப்பா என்ற வார்த்தையை அழுத்தமாக கூறியே தந்தையை தீர்க்கமாக பார்த்தவன், அவர் பதில் சொல்லாது மௌனமாகி நிற்கவும் “வா யாழினி உள்ள போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான்.
“இப்போதான் வல்லவராயன் சொன்னாரு உன் புருஷன் எந்த பிரச்சினை வந்தாலும் நிதானம் தவறமாட்டார் என்று. எந்த நேரமும் அப்படி இல்ல என்று நிரூபிச்சிட்டாரு” அந்த நேரத்திலும் மருமகனை மட்டம் தட்டினாள் ஆனந்தவள்ளி. 
மாமியாரின் பேச்சில் சுதாரித்த ஈஸ்வர் “என்னோட பிரச்சினை, எங்க குடும்பப் பிரச்சினை என்றா நிதானமா விசாரிக்கலாம். இது நிவேதிதாவோட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கு” என்று சமாளித்தார்.
சட்டென்று அவளைப் பார்த்த சஞ்ஜீவ் “யாரு இந்த பொண்ணா? அதான்  நேத்தே இந்த கல்யாணம் நடக்காது என்று மிஸ்டர் வல்லவராயன் சொல்லிட்டாரே” என்றவன் “கல்யாணம் பண்ண போற பொண்ணு என்று நான் போன்ல கூட பேசினது இல்ல” முணுமுணுக்க வேறு செய்தான்.
சஞ்ஜீவ் வல்லவராயனின் குடும்பம், பாரம்பரியம், வசதி என்று பார்த்துத்தான் நிவேதிதாவைத் திருமணம் செய்யச் சம்மதம் கூறினான்.
நிச்சயதார்த்தம் நடந்த பிறகு அவளோடு பேச வேண்டும் என்ற சிறு ஆசை எட்டிப் பார்க்க இவனுக்குத் தொழிற்சாலையிலிருந்து வீடு வர இரவாகிறது. இரவில் அழைத்தால் அவள் தூங்கி விட்டாள் என்ற செய்திதான் கிடைக்கும். அவளாக இவனைத் தொடர்புக் கொண்டு பேசியதே இல்லை. இவனும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
திருமணமுறிவு நிகழ்ந்ததுதான் அவனுக்கு அவமானமாக இருந்ததே ஒழிய நிவேதிதாவை இழந்ததாக அவன் கருத்தவே இல்லை. அதை அவன் நன்றாகவே உணர்ந்து கொண்டான். அதனால் சர்வசாதாரணமாக “இந்தப் பெண்ணா?” எனக் கேட்டு அந்நியமாக ஒதுக்கினான்.  
“சின்னவனுக்கு இந்த பொண்ண கட்டி வைக்கலாமென்று சொன்னா. மூத்தவன் கட்டிக்கிட்டு வந்துட்டான். என்ன பண்ணுறது? கோமதி போய் ஆராத்தி தட்ட எடுத்துட்டு வா” அழுதுக் கொண்டிருக்கும் மகளை அதட்டினாள் ஆனந்தவள்ளி.
“அத்த”
“முத்தம்மா”
யதுநாத்தும், ஈஸ்வரமூர்த்தியும் ஒரே நேரத்தில் கத்த
“எதுனாலும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க. அவனை இப்படியே வெளிய நிக்க வைக்க போறீங்களா?” 
பத்மஜா இருவருக்கும் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
“சொல்லு சஞ்ஜீவ் எதுக்கு இப்படிப் பண்ண?” ஆனந்தவள்ளி பொறுமையாக விசாரித்தாள்.
“நேத்து நடந்த பிரச்சினைக்கு ஒருவகைல யாழினியும் காரணம் என்று அவள பார்க்கப் போனேன். அவ பக்க நியாயத்தக் கேட்டேன். மானம் போச்சு மரியாதை போச்சு என்று பேசிகிட்டு இருக்கிறதுக்குப் பதிலா யாழினியையே கல்யாணம் பண்ணிக்கிட்டா ஊர் வாய மூடிடலாம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்”
“நோ’ என்று யதுநாத் கத்த
“இவன் எதுக்கு சும்மா சும்மா கத்துறான்?” என்று அவனைப் பார்த்தான் சஞ்ஜீவ்.
“சரி அதுக்கு ஏன் திருட்டுத் தனமா? பண்ணனும். எங்க கிட்டச் சொல்லி இருக்கலாமே”
“என்ன அத்த விசாரிச்சு கிட்டு இருக்கிறீங்க. இந்த கல்யாணம் செல்லாது” ஆவேசமானார் ஈஸ்வர்.
“பசங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணா, பெத்தவங்களுக்குப் பிடிக்காத கல்யாணத்த பண்ணி வைக்கச் சொல்லி பெத்தவங்கள கம்பல் பண்ணா பெத்தவங்க மனசு ரொம்ப வேதனைப்படும். நான் பட்ட வேதனையும் உங்களுக்கு இப்போ புரியும் என்று நினைக்கிறேன்” சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஈஸ்வரை விடாமல் அடிப்பதில் வள்ளி கைதேர்ந்தவள் என்று நிரூபித்து விட்டு “இந்த மாதிரி நேரத்துல கோபப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது மாப்புள. பொறுமையும், நிதானமும் ரொம்ப முக்கியம்” என்றாள் நக்கலாக.  
“இந்த திருமணம் செல்லாது என்பதற்காக வலீடான ஒரேயொரு ரீசன் சொல்லுங்க நான் ஒத்துகிறேன்” என்ற சஞ்ஜீவ் தந்தையைக் கூர்ந்து பார்த்தான்.
பல்லைக் கடித்த ஈஸ்வரமூர்த்தி நிவேதிதாவையே காரணமாகக் கூறினார்.
“இதெல்லாம் ஒரு காரணமா? கல்யாண மேடை வரைக்கும் வந்து எத்தனையோ கல்யாணம் நின்னு போய் இருக்கு. ஏன் மாப்புள, பொண்ணே மாறி இருக்கு. நமக்கு நிச்சயதார்த்தம் தானே நடந்தது. அதுவும் குடும்பத்தார் விருப்பப்பட்டதுனால. எனக்கோ, நிவேதிதாக்கோ இதுல பெருசா இஷ்டமில்லை” என்றவன் அவளைப் பார்க்க, அப்பொழுதும் அவள் அமைதியாகத்தான் இருந்தாள்.
“சரி நடந்தது நடந்துப் போச்சு நாம இப்போ நடக்க வேண்டியதைப் பத்தி பேசலாமா?” என்றார் வல்லவராயன்.
தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டியவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து விட்டானே என்ற கோபம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர் பேசுவதைப் கிரியும், பத்மஜாவுக்கு ஆச்சரியமாக பார்த்திருக்க, இவர் எதற்கு அடி போடுகிறார் என்று பார்த்தது யதுநாத் தான்.
“ஆமா மாப்புள பொறுமையா, நிதானமா முடிவெடுக்கிற நீங்களே இப்படி ஆவேசப்படலாமா?” அனுபவம் மிக்க ஆனந்தவள்ளிக்கு வல்லவராயன் என்ன சொல்ல முனைகிறார் என்று சட்டென்று புரிந்து போக “நீங்க வாங்க நாம உக்காந்து பேசலாம்” என்றாள்.
“முத்தம்மா” கடுப்பானான் யதுநாத். 
“சும்மா சும்மா கத்தாம இப்படி வந்து உக்காரு” பேரனை இழுத்து தன்னோடு அமர்த்திக் கொண்டவள் “நாம எதிர்பாக்குறது எல்லாமே நடந்திடாதே வல்லவராயன். கடவுள் விருப்பம் எதுவோ அதுதானே நடக்கும்” ஈஸ்வரமூர்த்தியைப் பார்த்தவாறே கூறியவள் “உங்க பொண்ணுக்கும், என் சின்ன பேரனுக்கும் நாம கல்யாணம் பண்ணி வச்சிடலாமா?” வல்லவராயனை பார்த்துக் கேட்டாள். 
“என்ன அத்த பேசுறீங்க?” குறுக்கிட்ட ஈஸ்வரமூர்த்தியைக் கைநீட்டி ஆனந்தவள்ளி தடுத்த போது
“எனக்கு இதுல இஷ்டமில்ல” சொன்னது நிவேதிதாதான்.
“இப்போவாவது வாயத் தொறந்து பேசினியே. எங்க இவங்க சொல்லுறதுக்கு மண்டைய ஆட்டிகிட்டு அமைதியா போய்டுவியோ என்று நினச்சேன்” என்ற யதுநாத் “எனக்கும் விருப்பமில்லை. மேற்கொண்டு இதப்பத்தி பேசாதீங்க” ஆணித்தரமாகச் சொன்னான்.
“ஏன் வேணாம்னு சொல்லுற? அண்ணனுக்குப் பார்த்த பொண்ணு என்றா?” பத்மஜா முறைக்க,
“அண்ணனை கட்டிக்க முடிவு செய்து தம்பிய கட்டிக்கும் சூழ்நிலை உருவாகிருச்சே என்று வேண்டாம் என்று சொல்லுறியா?” மகளைக் கேட்டார் வல்லவராயன். தான் எடுக்கும் முடிவுக்கு மகள் மறுக்க மாட்டாள் என்று இருந்தவரின் நம்பிக்கை கொஞ்சம் ஆட்டம் கண்டது.
“இங்க பாரு யது. நிவேதிதா இந்த வீட்டுக்கு மருமகளாகணும் என்று நான் முடிவு பண்ணேன். அவளை சஞ்ஜீவ் கட்டினாலும் சரி. நீ கட்டினாலும் சரி. கல்யாண மேடைல மாப்பிளை பொண்ணே மாறிப் போறாங்க. அண்ணனுக்குப் பார்த்த பொண்ண தம்பி கட்டிக்கிறதுல என்ன இருக்கு?” முத்தம்மா பேரனை தன் வழிக்குக் கொண்டு வர முயன்றாள்.
“இருக்கு. நிவேதிதா அவனுக்குப் பார்த்த பொண்ணு மட்டுமல்ல எனக்கு அண்ணியாக போற பொண்ணு என்று முடிவு பண்ண பொண்ணு அதனால்தான் வேணாம் என்று சொல்லுறேன்”
“இதையெல்லாம் ஏன் பெரிசு படுத்துற?” கோமதி கவலையாகச் சொல்ல
“அப்பா இவன் ஒரு பிளேபாய். இவனையெல்லாம்  கட்டிக் கிட்டு குடும்பம் நடாத்த முடியாது” என்று நிவேதிதா உறுதியாக மறுக்க, யதுநாத் சட்டென்று யாழினியைத்தான் பார்த்தான்.
குறுகிய காலமே என்றேயானாலும் அவனுக்கு ஏகப்பட்ட காதலிகள் இருந்திருக்கிறார்கள் அவன் அப்படித்தான். இல்லையென்று மறுக்கவும் மாட்டான். அதற்காக அவன் பிளேபாய் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏனெனில் அவன் யாரையும் ஏமாற்றியது கிடையாது.
அங்கிருந்த யார் என்ன நினைத்தால் என்ன?
யாழினி.
யாழினி அவனைத் தப்பாகக் கருதி விடுவாளோ என்ற கவலைதான் சட்டென்று அவனைத் தொற்றிக்கொள்ள அவளைப் பார்த்தான்.
அவளோ எந்த சலனமும் இல்லாமல் சஞ்ஜீவின் அருகில் நின்றிருந்தாள்.
அதில் வெகுண்டவன் “ஆமா நான் பிளேபாய் தான் இதோ என் பி.ஏ யாழினி இவளையும் தான் லவ் பண்ணேன். ஏன் கிஸ் கூட பண்ணேன். இப்போ இவ என் அண்ணனை கல்யாணம் பண்ணிக் கிட்டு வந்திருக்கா. இதெல்லாம் என்ன பெரிய விஷயமா?”
“டேய் என்னடா? சொல்லுற?” கோமதி அவன் முதுகில் அடித்தவாறே கேட்க,
“நான் என்ன பொய்யா சொல்லுறேன்? நான் சொல்லுறது பொய்யா? மெய்யா? என்று அவ கிட்டயே கேளுங்க?”
“இது எப்போ?” என்று சஞ்ஜீவ் யாழினியை நோக்க
“இந்த கல்யாணத்த ஏற்றுக்கொள்ளாம இருக்க வலீடான ரீசன் கேட்டியே இது ஒன்னு போதாதா?” மூத்த மகனை முறைத்தவாறே கேட்டார் ஈஸ்வரமூர்த்தி. தன் மகனின் புதிரான பேச்சை அவர் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை.        
“இஷ்டமில்லாம வலுக்கட்டாயமா முத்தம் கொடுத்தா? என்னதான் பண்ணுகிறதாம்?” சாதாரணமாகச் சொன்னாள் யாழினி.
“ஆஹ்?” பல்லைக் கடித்தான் யதுநாத்.  அவன் முத்தம் கொடுத்த இரண்டு முறையும் அவள் அவன் கைகளில் தஞ்சமடைந்திருந்த தருணம் வேறு அவன் கண்ணுக்குள் வந்து உள்ளம் எரிந்தது.
“அப்பா இது எந்த மாதிரியான குடும்பம் என்று இப்போவாச்சும் உங்களுக்கு புரிஞ்சுதா? நாம கெளம்பலாமா?” நிவேதிதா கத்த வல்லவராயன் ஆனந்தவள்ளிக்கு வணக்கம் வைத்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.
“இங்க பாருங்க அத்த கல்பனா என் தங்கச்சிதான். இவ என் தங்கச்சி பொண்ணாகவே இருக்கட்டும் அதுக்காக தம்பிய காதலிச்சு கூத்தடிச்சவ என்ன நோக்கத்தோடு அண்ணன கல்யாணம் பண்ணிக் கிட்டு வந்திருக்கான்னு தெரியல. முதல்ல இவளை வீட்டை விட்டு அனுப்புங்க” கோபத்தை அடக்கியவாறு கூறினார் ஈஸ்வரமூர்த்தி.
“என்ன பேசுறீங்க? இவன்தான் என்னமோ உளறுறான் என்றால் நீங்களும் உளறுறீங்களா? இவன் சொல்லுற காரணங்களுக்காக யாழினிய இந்த வீட்டை விட்டு அனுப்ப முடியாது. சரியான காரணத்தை நீங்க சொல்லுங்க” தந்தையைச் சீண்டினான். அவர் வாயிலிருந்து இன்று உண்மையை கொண்டு வந்தே ஆகா வேண்டும் என்ற முடிவில் இருந்தான் சஞ்ஜீவ்.
ஈஸ்வரமூர்த்தியால் உண்மையான காரணத்தை ஒருகாலமும் தன் வாயால் கூற முடியாது. அதே நேரம் அவன் புதிரோடு பேசுவது போலும் தோன்ற யாழினியை முறைத்தவர் மாமியாரைத்தான் பார்த்தார். அவருக்கு இப்பொழுது இருக்கும் ஒரே தயவு ஆனந்தவள்ளி மட்டும்தான்.  
அதைச் சரியாகப் புரிந்துக் கொண்ட சஞ்ஜீவ் “யார் என்ன சொன்னாலும் யாழினி என் மனைவி. அவ என் கூட இந்த வீட்டுலதான் இருப்பா” என்றவன் அவள் கையை பற்றியவாறு அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்.
செல்லும் அவளைக் கொலைவெறியோடு பார்த்திருந்தான் யதுநாத்.

Advertisement