Advertisement

அத்தியாயம் 1
அந்த ஆடை தொழிற்சாலையின் முன் நின்று அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் யாழினி. கோபமும், குரோதமும், வெறுப்பும் மட்டுமே அவள் கண்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
அது அவள் சந்திக்க வந்த இந்த கட்டிடத்தில் இருக்கும் மாமனிதர் ஈஸ்வரமூர்த்தி மீது மட்டுமன்றி தன் மீதும் தான் என்பது தான் உண்மை.
யாழினி வயது இருபத்தி மூன்று. அழகியா? பேரழகியா? என்றெல்லாம் அவள் அவளைப் பற்றி எண்ணிப் பார்த்ததில்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இல்லை. ஆனால் அவள் வட்டக் கண்கள், வில் போன்ற புருவம், சிரித்தாள் கன்னத்தில் குழி விழும். பார்ப்போரை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிதான். சிரிக்கத்தான் மாட்டாள். அவளுக்கு இருக்கும் ஒரே குறை பார்வை குறைபாடுதான். அதற்காக மூக்குகண்ணாடி உபயோகிக்க, அவள் முக அழகே அதனால் குறைந்து போய் இருந்தது.
அவள் சிரிப்பதைத் தொலைத்தது இன்று நேற்றல்ல. அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்து அவள் அன்னையிடம் தந்தையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்த போதே அவள் சிரிக்க மறந்துதான் போனாள்.
யாழினியின் அன்னை கல்பனா. ஆறுமாத கைக்குழந்தையோடு தஞ்சாவூரிலிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து இரவோடு இரவாகத் தனியாக ரயில் ஏறி கோயமுத்தூரில் இருக்கும் இந்த குடியிருப்பு வந்தவள். பக்கத்தில் இருக்கும் ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வர, ஒரு அறை கொண்ட அந்த வீடு அவளுக்கும் அவள் குழந்தைக்கும் தலைக்கும் மேல். வேலைக்குச் செல்லும் பொழுது குழந்தையைப் பார்த்துக் கொள்ளத்தான் சிரமமாக இருந்தது. ஆனால் அவளுக்கு மட்டுமன்றி குழந்தையோடு இருக்கும் தாய்மார்களுக்கு அந்த தொழிற்சாலையில் குழந்தைகளைப் பராமரிக்க ஒரு அறை இருக்கவே யாழினியை அங்கேதான் விட்டுவிட்டாள்.
துணி வெட்டும் பகுதி, தைக்கும் பகுதி, என்று இரண்டு பகுதிகள் இறந்தாலும் மூன்றாவது பகுதியாக பண்டல் பண்டலாக துணிகளை அடுக்கி வைக்கும் பகுதியும் இருக்க, அதில்தான் கல்பனா வேலை பார்த்தாள்.  
அங்கே அவளுக்கு என்ன வேலை என்றால் வரும் துணியை இயந்திரத்தில் பொருத்தி ஓடவிட்டு, கறை இருக்கா? சேதம் இருக்கா? தரமானதா? என்று பரிசோதிப்பதே. இதுதான் இருப்பதில்லையே சிரமமான, பொறுப்பு கூடிய வேலை என்று சொல்லலாம்.
கிடைக்கும் சம்பளம், வீட்டு வாடகைக்கும், வீட்டு செலவுக்கும் போதுமானதாக இருக்க, கல்பனா மகளோடு நிம்மதியாக வாழ்ந்து வந்தாள்.
என்னதான் குழந்தைகளுக்காக அறை ஒதுக்கப்பட்டிருந்தாலும்,  குழந்தைகளோடு சேர்ந்து அந்த தொழிற்சாலை முழுவதும் சுற்றி திரிவதும், விளையாடுவதும் தான் யாழினியின் பொழுதுபோக்கு. அங்கே வேலை பார்ப்போருக்கு அவளை நன்றாகவே தெரியும்.
பாடசாலை செல்ல ஆரம்பித்தபின்தான் யாழினிக்கு பிரச்சினையே ஆரம்பமானது. சமவயது தோழிகள், வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரியை தந்தையின் பெயரை கேட்க இவளோ தெரியாது என்றாள். வகுப்பறையே “கொல்” என்று சிரிக்க, ஏதோ குழந்தை கூறத் தெரியாமல் கூறுவதாக ஆசிரியை மற்ற மாணவர்களை அதட்டி விட்டு நாளை வரும் பொழுது தாய், தந்தை இருவரினதும் பெயரை எழுதிக் கொண்டு வருமாறு கூறினாள்.
 வீட்டுக்கு வந்த குட்டி யாழினி கல்பனாவிடம் தந்தையை பற்றி கேட்க முதலில் அதிர்ந்த கல்பனா எதை எதையோ கூறி குழந்தையை தூங்க வைத்தாள்.
 ஆனால் குட்டி யாழினி படு சுட்டியாக காலையில் எழுந்த உடனே பாடசாலைக்கு செல்ல தயாராகும் பொழுதே நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு தந்தையின் பெயரை எழுதிக் கொடுக்குமாறு அடம்பிடித்தாள்.
 கல்பனாவின் கண்களில் கண்ணீர் முணுக்கென எட்டிப்பார்த்திருக்க, குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் யாழினியின் முதுகில் இரண்டு வைத்து பாடசாலைக்கு அனுப்பி வைத்திருந்தாள்.
 அழுது அழுது ஓய்ந்து முகத்தை தொங்க போட்டவாறே பாடசாலைக்கு வந்த யாழினி ஆசிரியையிடம் அன்னை தந்தையின் பெயரை கூற மறுத்தாள் என்று கூற ஆசிரியைக்கு எதுவோ புரிவது போல் இருக்க, “பரவாயில்லை நீ போய் உக்காரு” என்றாள்.
 அவளது சோகமான தோற்றத்தையும், அவள் கூறியதையும் பிடித்துக் கொண்ட சகமாணவர்கள் பாரதூரம் அறியாமலையே கேலியும், கிண்டலும் செய்ய ஆரம்பித்து நாளடைவில் யாழினி அப்பா பெயர் தெரியாதவள் என்ற பெயரோடு வளரலானாள். இந்த கேலியும், கிண்டலினாலும் யாழினி யாருடனும் ஒட்டாமல் முறைத்துக் கொண்டே திரிய, அவளுக்கு பாடசாலையில் தோழிகளே அமையவில்லை.
 அப்பொழுது யாழினிக்கு பத்து வயது இருக்கும். படிப்பில் படுசுட்டியாக இருந்தாள். வகுப்பாசிரியையும் மற்ற மாணவர்களிடம் யாழினியின் நோட்டைக் கேட்டு எழுதுமாறு கூறி இருக்க, யாழினிக்கு அவளது புத்தகங்களைக் கொடுப்பதில் இஷ்டமில்லை. தன்னை கேலி செய்வோர்க்கு தன் புத்தகங்களை எதற்காகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டது அந்த பிஞ்சு மனம். புத்தகங்களைக் கொடுத்து தோழமையை உருவாக்கிக் கொள்ளத் தெரியவில்லை அந்த சின்ன சிட்டுக்கு.
 தானுண்டு படிப்புண்டு என்றிருக்கும் யாழினி வகுப்பில் முதலாவதாக வருவாள். அவள் யாருடனும் ஒட்டுவதில்லை. உணவைக் கூட பகிருவதில்லை என்ற கோபம் சில மாணவர்களுக்கும் இருக்க அப்பன் இல்லாத இவளுக்கு இவ்வளவு அறிவு ஆகாது என்று “யாழினி உன் அப்பா பேர் என்ன?” “யாழினி உன் அப்பா பேர் என்ன?” என்று கேட்டுக் கேட்டே அவளை வெறுப்பேற்றுவார்கள்.
 அவளும் எத்தனை நாள்தான் பொறுமையாக இருப்பாள்?
யாழினி தனி ஆள் மொத்த வகுப்பும் ஒரு பக்கம். அவளால் என்ன செய்து விட முடியும் என்றுதானே இவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்?
காத்திருந்தாள். வஞ்சம் தீர்க்க காத்திருந்தாள். ஒருநாள் லன்ச் ஹவரில் அனைவரும் வெளியே சென்றிருக்க, அவளை சதா கேலி செய்யும் மாலதியின் கத்தரிக்கோலை எடுத்து  அவளைக் கேலி செய்யும் சரத்தின் பள்ளி பையைக் கத்தரித்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போல் வெளியே சென்று அவர்களின் கண்களுக்குப்படும் இடத்தில் அமர்ந்து கொண்டாள்
லன்ச் ஹவர் போனால் என்ன? பி.டி பீரியட் இருக்கே என்று யாழினி அவள் பாட்டுக்கு அவள் வேலையை செய்தவண்ணம்தான் இருந்தாள்.
 ஐந்தாம் வகுப்பில் தொடங்கி எட்டாம் வகுப்புவரை இது நீடிக்க யாழினிக்கு யார் என்று தெரியாமல் செய்வது விட இன்னாரை மாட்டி விடலாமே என்ற எண்ணம் உருவாக சுப்புலட்சுமியின் பேனாவை திருடி கணேஷின் பையில் வைத்து அதே போல் தனது நோட்டை மாலதியின் பையில் வைத்து விட்டு வெளியேறினாள்.
 வகுப்பறைக்கு வந்த உடனே “மிஸ் என் நோட்ட காணோம் மிஸ்” என்று கண்ணைக் கசக்க, சுப்புவும் அவளது பேனாவை காணவில்லை என்றாள்.
 யாழினி மட்டும் கூறி இருந்ததால் “வீட்டில் மறந்து விட்டு வந்திருப்பாய்” என்று  ஆசிரியை கூறி இருக்கக் கூடும். இருவரும் காணவில்லை என்றதும் அனைவரினதும் பைகள் பரிசோதிக்கப்பட்டு மாலதிக்கும், கணேஷுக்கு சில அடிகள் கையில் விழ “நாங்க எடுக்கல மிஸ்” என்று அழுதனர் அவர்கள்.
 “நீங்க ரெண்டு பேரும்தான் கூட்டு களவாணிகளாடா? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் இத்தனை நாளா எல்லாம் செய்ததா? வகுப்பறையை தூற்ற கணேஷும், மாலதியும் அவமானத்தில் குற்றவாளியை கண்டு பிடித்தே ஆகா வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
 யாரை சந்தேகப்படுவது? யார் மீது சந்தேகப்படுவது? என்று புரியாமல் குழம்பியவர்கள் இரகசியமாக விசாரணையில் இறங்க தங்களது வகுப்பில் மாத்திரம்தான் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது தெரிய வந்ததும், அப்படியாயின் இதை செய்வது கண்டிப்பாக தங்களது வகுப்பை சேர்ந்த யாரோ ஒரு மாணவனோ, மாணவியோதான் என்பதை கண்டு பிடித்த மகிழ்ச்சியில் கணேஷும், மாலதியும் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தனர்.
இவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே யாழினி அடுத்த அடியை எடுத்து வைத்திருந்தாள். அது செம்பகவள்ளியின் கம்பாஸை ரவியின் பையில் வைத்தது மட்டுமல்லாது, மாலதியின் புதிய கத்தரிக்கோலால் பேன்சி ட்ரெஸ் காம்படீஷனுக்காக தயாரான தங்கமணியின் துணியை கத்தரித்து கத்தரிக்கோலையும் அங்கேயே வைத்து விட்டு சென்றிருந்தாள்.
லன்ச் ஹவர் முடிந்து வகுப்பறைக்கு வந்த சரத் பை வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அழ ஆரம்பித்தான். அது அவனின் புது ஸ்கூல்ப்பை. அவன் மாமா வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தான். ஒருவாரம் கூட ஆகவில்லை. தகவல் வகுப்பாசிரியைக்கு பறந்தாலும் இந்த வேலையை யார் செய்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.
 ஆசிரியையும் “யார் விளையாட வரல? யார் வகுப்புல இருந்தாங்க?” என்றுதான் கேட்டாள்.
 கீதாவும் மாலதியும் “நாங்கதான் மிஸ் கடைசியா வந்தோம். நாங்க இத பண்ணல மிஸ்” கீதா சொல்ல
 “ஆமாம் மிஸ்” என்றாள் மாலதி.  
 “அப்போ அதற்கு அப்பொறம் யாரோ போய் பைய வெட்டி இருக்காங்க” என்ற ஆசிரியைக்கு குற்றவாளியை கண்டு பிடிக்கத்தான் முடியவில்லை.
 ஆள் மாறி புத்தகங்கள் கிறுக்கப்படுவதும், கிழிக்கப்படுவதும் நடந்தவண்ணமே இருக்க, யார் செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இதனால் லன்ச் ஹவரில் இருவர் வெளியே இல்லாம தினமும் வகுப்பறையை காவல் காக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது.
 பையை திறந்த ரவி “யாருடைய காம்பாஸ் இது?  நம்ம பைல எப்படி வந்தது?” என்று கையில் எடுத்து பார்த்திருக்க, வள்ளி அவனை திருடன் என்று வகுப்பறையில் உள்ள மாணவரின் முன் கூற காம்பஸாலையே அவள் தலையில் அடித்தவன் தான் திருடவில்லை என்று சண்டை போட பெரிய கலவரமே வெடித்தது.
 ஒருவாறு கணக்கு வாத்தியார் வந்து பிரச்சினையை தீர்த்து வைக்க, தங்கமணி அழ ஆரம்பித்தான். அவன் துணியை யாரோ வெட்டி இருக்கிறார்கள் என்றெல்லாம் அவன் சொல்லவில்லை. நேரடியாகவே மாலதியைத்தான் குற்றம் சாட்டினான். அதற்கு ஏதுவாக அவள் கத்தரிக்கோல் அங்கேயே இருந்ததே.
 “டேய் முதல்ல அழுறத நிறுத்து. அது அவ கத்தரிகோல்ன்னு எப்படிடா சொல்லுற?”
 “அவதான் அதுல குட்டியூண்டு டாம் அண்ட் ஜெர்ரி ஸ்டிக்கர் ஒட்டி வச்சி இருக்கா” என்றான் தங்கமணி.
 “சார் அது என்னுடையதுதான். ஆனா நான் இவன் துணிய வெட்டவே இல்ல” மாலதி உறுதியாகவே கூறினாள்.
 “ஆமாம் சார். லன்ச் ஹவர் முடியிறவரைக்கும் மாலதி என் கூடத்தான் இருந்தா” என்றான் கணேஷ்.
“சே இந்த வகுப்புல இதே பிரச்சினையா போச்சு. ஏதாவது பண்ணிகிட்டே இருக்கீங்கடா… இப்படியே போனா அடுத்த வருஷமும் இதே வகுப்புலதான் இருக்க வேண்டி இருக்கும். என்னால உங்களுக்கு பஞ்சாயத்து பண்ண முடியாது. ஒன்னு பண்ணுங்க, காம்படீஷனுக்கு யாரு பொறுப்போ அந்த மிஸ்ஸையும், உங்க கிளாஸ் மிஸ்ஸையும் போய் பாருங்க” வாத்தி கழண்டு கொண்டார்.
 தங்கமணியோ திரும்பவும் துணி தைப்பதற்கு வீட்டில் பணம் கொடுக்க மாட்டார்கள், மாலதியின் கத்தரிக்கோல்தான் இருந்தது மாலதிதான் செய்திருப்பாள் அவள்தான் பணம் கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்தான்.
 மாலதியோ தான் இதை செய்யவே இல்லை. தான் எதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று பேச கணேசனும் அவளுக்கு துணை நின்றான்.
வகுப்பாசிரியைக்கும் இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று புரியவில்லை. காம்படிஷனை நடாத்தும் ஆசிரியையான கோகிலவாணி பாதிப்பணம் தங்கமணியும், பாதிப்பணம் மாலதியும் கொடுத்து துணியை வாங்குமாறு கூற, இருவரும் வேறு வழியில்லாது அரைமனதோடு சம்மதித்தனர்.
 “சே இப்படி செய்யாத தப்புக்கு காச கொடுக்க வச்சிருச்சு. யார்னு மட்டும் தெரியட்டும்” மாலதி கருவியவாறே இருக்க, கணேஷ் யோசனையாகவே இருந்தான்.
“என்னடா ஒண்ணுமே பேசாம இருக்க?”
 “இல்ல லன்ச் சாப்பிடும் போது யார் யார் எங்க இருக்காங்கனு பார்த்துகிட்டே தான் சாப்பிட்டேன். சாப்பிட்டு முடிச்சதும் எல்லாரும் விளையாட போனாங்க” என்று கணேஷ் சொல்ல
 “ஒருத்திய தவிர” என்றாள் மாலதி.
 “யாரு?”
 “யாழினி”
 “அந்த படிப்ஸ் விளையாட மாட்டா. லைப்ரரிக்குதான் போவா” என்றான் கணேஷ்.
 “யாருக்கு தெரியும்? லைப்ரரிக்கு போறது போல நம்ம கிளாசுக்கு போய் இந்த வேலையெல்லாம் பாக்குறாளோ என்னவோ” யாழினிதான் இதை செய்திருப்பாள் என்று உறுதியாகவே சொன்னாள் மாலதி.
 “இங்க பாரு சந்தேகப்படலாம். ஆதாரம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. முதல்ல ஆதாரம் கலெக்ட் பண்ணலாம்”
 கணேஷ் சொல்லும் பொழுது மண்டையை ஆட்டிய மாலதி வகுப்பறைக்கு சென்ற பொழுது யாழினி கைவேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு “செய்யிறதையும் செஞ்சிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா போல இருக்குறத பாரு அப்பா பேர் தெரியாதவ” என்று சொல்ல யாழினிக்கு கோபம் உச்சத்தில் ஏறியது.
 சற்றும் யோசிக்கவில்லை. மாலதி அவளை கடக்கும் பொழுது அவளது முடியை பிடித்து இழுத்தவள் கையிலிருந்த கத்தரிக்கோலால் அவள் முடியை ஒட்ட நறுக்கி விட்டாள்.
 யாழினி இப்படி ஒரு காரியத்தை செய்வாள் என்று மாலதி கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
ஒருநொடி அதிர்ச்சியில் உறைந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள். 
ஏன் யாழினி கூட இப்படி ஒரு காரியத்தை செய்ய எண்ணி இருக்கவில்லை. அவளை கேலி, கிண்டல் செய்வோரை மறைந்திருந்து பழிதீர்ப்பதுதான் அவளுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. எந்த சூழ்நிலையிலும் நேரடியாக தாக்க அவள் நினைத்ததும் இல்லை.
இன்று பாடசாலை வரும் பொழுதே கல்பனாவோடு பிரச்சினை. நேற்று மாலை வடகம் காய வைத்திருக்கிறாள் அதை இவள் எடுக்க மறந்து போக மழையில் நனைந்ததால் வடகம் எல்லாம் வீணானதில் திட்டிக் கொண்டே இருந்தாள் கல்பனா.
அதனால் யாழினி ஒழுங்காக சாப்பிடவும் இல்லை. பாடசாலையில் கொடுத்த வேலைகளை செய்யவுமில்லை. ஷூ பாலிஸ் போடவுமில்லை. துணியை கூட அவசர அவசரமாக காலையில்தான் அயன் செய்தாள்.
ஏற்கனவே அன்னையின் மீது கடுப்பில் இருந்தவள் மாலதி இவ்வாறு பேசியதும் சற்றும் யோசிக்காமல் அவள் முடியை வெட்டி இருந்தாள்.
அடுத்த நொடி யாழினியும், மாலதியும் அதிபரின் முன் நிற்க, இருவரினதும் பெற்றோர்களையும் உடனடியாக பாடசாலைக்கு வருமாறு அவர் தகவல் அனுப்பிய மறுநொடி அரக்கப்பரக்க அவர்களும் வந்து சேர்ந்திருந்தனர்.
மாலதியை பார்த்ததும் அதிர்ந்த அவள் அன்னை “ஏய் என்ன யார்டி உன் முடிய வெட்டினது?” தினமும் ஆயில் பூசி தலை வாரி விடுவது அவள்தான் அதுவும் முடி நீண்டு வளர வீட்டிலையே அவள் கையால் அவளே தயாரித்த ஆயில்.
மகளை அப்படி ஒரு நிலையில் அவளால் பார்க்கவே முடியவே இல்லை. மாலதியும் அழுதவாறே யாழினியை கைகாட்ட, மாலதியின் அன்னை கத்த ஆராம்பித்தாள்.
அதே நேரம் கல்பனா உள்ளே நுழைய மகள் செய்த காரியம் தெரிய வந்ததும் அங்கேயே யாழினியை போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.
யாழினியின் பிரச்சினை என்னவென்று அதிபருக்கோ தெரியவில்லை. அன்னை கல்பனாவுக்கு புரிந்துகொள்ளும் மனப்பாங்கும் இல்லை.
மாலதியோ அரண்டு பார்த்திருக்க, அவளுடைய தந்தைக்கு “என்ன பெண் இவள் என்னதான் தவறு செய்திருந்தாலும், பெண் பிள்ளையை இப்படித்தான் அடிப்பதா என்றுதான் தோன்றியது.
“நல்லா வேணும்” என்று பார்த்திருந்த மாலதியின் அன்னைக்கும் கல்பனா எவ்வளவு அடித்தும் அசையாது சிலைபோல் நிற்கும் யாழினியை பார்க்கும் பொழுது இந்த அடிகள் எல்லாம் அவளுக்கு புதிது அல்ல நன்கு பழக்கப்பட்டது என்று புரிந்து போனது.
அவளும் ஒரு பெண்ணை பெற்ற தாயல்லவா சட்டென்று மனம் இறங்கி “சரி விட்டுட சொல்லுங்க. திரும்ப இப்படி பண்ணாம பாத்துக்க சொல்லுங்க” என்று மகளோடு கிளம்ப யாழினி கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளோடு கல்பனாவோடு கிளம்பினாள்.
அன்றிலிருந்து யாழினிக்கு தன் மீது, அன்னை மீது சுற்றி இருப்போர் மீது, அனைவரின் மீதும் கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே கொடுத்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகும் அவளை கேலி செய்வதையோ கிண்டல் செய்வதையோ யாரும் நிறுத்தத்தான் இல்லை. இவளும் முறைத்து விட்டு செல்வாளே ஒழிய பதில் சொல்வதை நிறுத்தி இருந்தாள்.
மாலதிதான் யாழினியிடமிருந்து ஒதுங்கிப் போனாள். தன்னை சீண்டுபவர்களை மாட்டிக்கொள்ளாது எவ்வழியேனும் பழிதீர்க்கலானாள் யாழினி.
தன்னுடைய தந்தை யார்? அம்மா ஏன் அப்பாவின் பெயரை கூட சொல்ல மறுக்கின்றாள்? என்ன காரணம்? என் அப்பா எங்கே இருக்கின்றார்? ஏன் என்னை பார்க்க வருவதில்லை? என்ற கேள்விகள் குட்டி யாழினியின் மனதில் முட்டி மோத அதை அவள் கல்பனாவிடமும் கேட்பதில்லை. கேட்டாலும் பதிலுக்கு அடித்தான் கிடைக்கும் என்றும் தெரியும்.
தான் வளர்ந்ததும் தன்னுடைய தந்தையார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் யாழினியின் ஒரே குறிக்கோளாகிப் போனது என்பதை பாவம் கல்பனா அறிந்திருக்கவுமில்லை.
யாழினியின் குழந்தை பருவம் ஒருவித இறுக்கத்தோடு கடந்தது மட்டுமன்றி கல்பனாவோடனா அவளது உறவும் ஓரிரு வார்த்தைகளோடு முடிந்து விடும்.
தன்னிலையே சோகமாக, சதா சிந்தனையில் இருக்கும் கல்பனாவுக்கு மகளின் இந்த மாற்றமெல்லாம் கண்களுக்கு தெரியவில்லை. மகள் நன்றாக படிக்கின்றாள். ஒழுங்காக இருக்கின்றாள் என்பது மட்டும்தான் அவள் கவனத்தில் இருந்தது.
ஆனால் எப்பொழுது படிப்பை முடிப்போம் எப்பொழுது ஒரு வேலையில் சேர்வோம்? எப்பொழுது இந்த வீட்டை விட்டு போவேன்? எப்பொழுது தந்தையை காண்பேன்? என்றுதான் யாழினின் மனதில் சதா ஓடிக்கொண்டு இருக்கும்.
கல்பனா அன்பான அம்மா தான். அவளிடம் அவள் கணவனை பற்றி கேட்டால் மட்டும் பொல்லாதவளாகி விடுகின்றாள். அது தான் பெற்ற மகளாயினும் சரி.
கல்பனா அவளது உலகத்தில் இருக்க, யாழினி அவளது உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளுக்கு கல்பனா அன்னையான மட்டுமன்றி நல்ல தோழியாக இருக்க தவறியதில் யாழினி யாரையும் நம்பாமல், எல்லாவற்றையும் சந்தேகம்கொள்ளும், தான் நினைப்பதுதான் சரி எனும் மனப்பாங்கோடு வளரலானாள்.
ஒருவாறு பிளஸ் டூ பரிட்ச்சை எழுதி பெறுபேறும் வந்திருக்க அவளுக்கு சென்னை கல்லூரியில் இடம் கிடைத்திருக்கவே ஹாஸ்டலில் தங்கலாம் என்று முடிவெடுத்தவளுக்கு அன்னையை விட்டு செல்வதில் பெரும் மகிழ்ச்சி.
இதை எவ்வாறு அன்னையிடம் சொல்வது? சொன்னால் ஏற்றுக்கொள்வாளா? யாழினியின் மனதில் பலவிதமான யோசனைகள் முட்டி மோதிக் கொண்டிருக்க, கல்பனாவும் ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்து சேர்ந்தாள். 
“அம்மா எனக்கு சென்னை காலேஜுல இடம் கிடைச்சிருக்கு”
“ஏய் என்னடி விளையாடுறியா? ஒழுங்கா இங்க எதையாவது படி” கல்பனா அதட்ட
“இங்க படிச்சி உன்ன மாதிரி ஆகா சொல்லுறியா?” குத்தலாகவே கூறினாள் மகள்.
 “எனக்கென்ன குறைச்சல்? இங்க வேல பார்த்துதான் உன்ன வளர்த்தேன். நாங்க இங்கதான் இருப்போம் வேற எங்கயும் போறத பத்தி யோசிக்காத” திட்டவட்டமாக கூற யாழினி அன்னையை முறைத்துப் பார்த்தாள்.
எப்படி சென்னைக்கு செல்வது என்று யாழினி யோசிக்கும் பொழுது கல்பனாவே நாம் சென்னைக்கு செல்லலாம் என்ற கூற புருவம் சுருக்கினாள் யாழினி.
தான் எடுத்த முடிவை அவ்வளவு இலகுவில் மாற்றுபவள் இல்லையே கல்பனா என்று யாழினி யோசிக்கும் பொழுதுதான் கல்பனாவுக்கு ஆடை தொழிற்சாலையின் உரிமையாளர் ஈஸ்வரமூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவி அது யாழினியின் காதை எட்டியது.
யாழினியோ அன்னையிடம் எதுவுமே கேட்கவில்லை. யாழினி அறிந்திருந்தவரையில் கல்பனா அனாவசியமாக எவருடனும் நின்று பேசக் கூட மாட்டாள்.
ஆண்கள் எப்படிப்பட்டவர்கள் எப்படி எல்லாம் பேசுவார்கள், எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்று மகள் வயதுக்கு வந்த நாள் முதலாகவே அறிவுரை கூறுபவள் நிச்சயமாக தப்பான வழியில் சென்றிருக்க மாட்டாள்.
அப்படியே தப்பான வழியில் சென்றிருந்தால் யாழினி குழந்தையாய் இருக்கும் பொழுது சென்றிருக்கலாம். இந்த வயதிலா செல்வாள்? தப்பான வழியிலா செல்ல வேண்டும்? தனக்கு ஒரு துணையை தேடிக் கொண்டிருக்கலாமே. இளமையில் தேவைப்படாத ஆண் தேவை முதுமையில்லையா தேவைப்படப் போகிறது?
ஆனாலும் அன்னைக்கு இப்படி ஒரு அவப்பெயர் வர யார் காரணம்? ஏன்? நெருப்பில்லாமல் புகையுமா? யாழினி என்ன? எது? என்று கல்பனா அறியாமல் விசாரிக்க ஆரம்பித்தாள்.
ஈஸ்வரமூர்த்தி சென்னையில் இருக்கும் ஒரு பெரிய தொழிலதிபர். இந்த ஆடை தொழிற்சாலையை வாங்கி ஆறுவருடங்களுக்கு மேலாகிறது. சென்னையில் மட்டும் அவருக்கு எட்டு ஆடை தொழிற்சாலைகள் இருக்க, அவற்றோடு ஒப்பிடும் பொழுது இது மிகச் சிறியதும், குறைந்த வருமானமும் வரும் ஆடை தொழிற்சாலையாகும்.
ஆடியபாதம்தான் இதற்கு முதல் உரிமையாளர். வயதானவர். ஒரே பெண்ணை அமெரிக்காவில் கட்டிக் கொடுத்து இருக்க, கடைசிக் காலத்தில் பேரன் பேத்திகளோடு இருக்கலாமே என்று சொத்தை விற்றுச் சென்றதாக ஒரு பேச்சு அடிபட்டாலும், ஈஸ்வரமூர்த்தியின் மருமகன் கிரிராஜ் ஆடியபதத்தை மிரட்டி ஆட்டுவித்து எழுதி வாங்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
எது உண்மை? எது பொய்? அது யாழினிக்கு அவசியமில்லை. ஆறு வருடங்களாக ஈஸ்வரமூர்த்தி தான் இந்த ஆடை தொழிற்சாலைக்குச் சொந்தக்காரர். அப்படி இருக்க, இத்தனை வருடங்கள் இல்லாத வதந்தி இப்பொழுது மட்டும் பரவக் காரணம் தான் என்ன? அதைக் கண்டு பிடிக்க அந்த தொழிற்சாலைக்குள்ளே தானே செல்ல வேண்டும்.
ஆடியபாதம் என்றால் இவளை உள்ளே விடுவார். புதிதாக இருக்கும் உரிமையாளர் அவ்வளவு சுலபமாக வேலை செய்யாதோரை உள்ளே விடுவார்களா? மாட்டார்கள்.
நல்லவேளை காவலாளியோ பழைய தாத்தாதான் அவளைத் தாஜா செய்து ஈஸ்வரமூர்த்தியைப் பற்றி மேலும் விசாரித்ததில் தொழிற்சாலையை வாங்கியபின் மூன்று மாதத்துக்கு ஒரு தடவைதான் அவர் இந்த ஆடை தொழிற்சாலைக்கே வருகிறாராம். அவர் மருமகன் தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாராம். அப்படி இருக்க அன்னையோடு அவருடைய பெயர் எப்படி இணைந்தது? மர்மமாகவே இருந்தது.
அன்னையிடம் நேரடியாகக் கேட்க முடியாது. வளமை போல் தன்னை அடிப்பாள். அல்லது கத்துவாள். உண்மையை மட்டும் சொல்லவே மாட்டாள். தான் தான் எவ்வழியிலேனும் கண்டு பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கக் கண்டு பிடிக்காமலே கல்பனாவோடு சென்னையில் குடியேறி இருந்தாள் யாழினி.

Advertisement