Advertisement

மணியோசை கேட்டதும், அத்தனை நேரம் அளவளாவி கொண்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் இருக்கைகளுக்கு திரும்பி வந்து, அமைதியாய் அமர்ந்தனர். மாணவர்களின் வணக்கங்களுக்கு தலையசைத்தபடி, ஆசிரியரும் உள்ளே நுழைந்தார். வழக்கமான பணிகளை செய்து முடித்த பின், ஆசிரியர் பாடம் கற்பிக்க ஆயத்தமானார்.

கரும்பலகையில் சில சொற்கள் எழுதி, அவற்றின் பொருளை விளக்கும்படி மாணவர்களை கேட்டார். அனைவரும் உற்சாகமாய் பதில்களை உரக்கச் சொல்ல, மூன்றாம் வரிசையில் அமர்ந்திருந்த மதுமிதா மட்டும் ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.

இருமுறை அழைத்தும் அவள் சிலை போலவே அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் சென்ற ஆசிரியர், “மதுமிதா!” குரல் உயர்த்தி அழைத்து, தோளினை பிடித்து உலுக்கினார். அதில் சுயத்திற்கு வந்தவள், இருக்கும் இடம் புரியாது தடுமாறி நின்றாள்.

“உன் கவனமெல்லாம் எங்க இருக்கு மதுமிதா?” ஆசிரியர் திடமாய் கேட்க,

“மன்னிச்சிருங்க டீச்சர்!” பணிவாய் சொன்னவள், “அது…அது… பெண்கள் சாரணர் (Girls_Scouts) வகுப்பில், “சத்துள்ள திண்பண்டங்கள்” போட்டி ஒண்ணு அறிவிச்சிருக்காங்க. அதுல நான் எப்படியாவது ஜெயிக்கணும்.” கவலை ததும்பிய குரலில் பதிலளித்தாள். அதைப்பற்றி தான் சிந்தித்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.

மதுமிதா திறமைசாலி, கடும் உழைப்பாளி என்றாலும், போட்டி என்று வந்த போது, தானே முதல் இடம் பெற வேண்டும் என்ற எண்ணமும் அவளுக்கு அதிகரித்தது. தோல்வியுற்ற பல தருணங்களில், அவள் மனவுளைச்சலுக்கு ஆளானதையும் ஆசிரியர் கவனித்திருக்கிறார்.

வெற்றி-தோல்வியை தாண்டி, உண்மையான உழைப்பும், முயற்சியும் தான் முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை என்று அவளுக்கு பாடம் புகட்ட எண்ணினார்.

“சரி! மதியவுணவு இடைவேளையில், என்ன வந்து பாரு!” திடமாய் சொல்லி, வகுப்பில் கவனம் செலுத்த சொன்னார்.

மதியவுணவு இடைவேளையில்….

“என்ன திண்பண்டம் செய்யலாம்னு நினைக்குற?” தன்னை சந்திக்க வந்திருக்கும் மதுமிதாவிடம் வினவினார் ஆசிரியர்.

“ராகி, கம்பு போன்ற தானியங்களின் கலவையில் செய்யக்கூடிய உருண்டை, கேழ்வரகு முறுக்கு, மக்காச்சோளம் பர்பி, வரகு அரிசி தட்டை, இப்படின்னு நிறைய இருக்கு டீச்சர். ஒண்ணொண்ணும் ஒவ்வொரு வகையில் நல்லா இருக்கும். எதை செய்தால் பரிசு கிடைக்கும்னு குழப்பமா இருக்கு!” போட்டியில் வெற்றி பெருவதை பற்றியே கவலை கொண்டவளாய் பேசினாள்.

“ம்ம்…! போட்டி நடக்க இன்னும் மூன்று வாரம் இருக்குல்ல?” வினவினார் ஆசிரியர்.

“ஆமாம் டீச்சர்!”

“சரி! சிறப்பான திண்பண்டங்கள் நான்கு மட்டும் தேர்ந்தெடுத்து, செஞ்சிட்டு வா. அதை, நம்ம, இங்க ஆசிரியர்கள் சாப்பிடும் அறையில் வைக்கலாம். ஆசிரியர்கள் அவற்றை சுவைத்து, அவங்களுக்குப் பிடித்த திண்பண்டத்திற்கு வாக்களிக்கட்டும். எதுக்கு நிறைய வாக்கு எண்ணிக்கை வருதோ, அதையே போட்டிக்கு செஞ்சு எடுத்துட்டு போ, சரியா!” யோசனை சொன்னார்.

அதை கேட்ட மதுமிதாவிற்கு எல்லையில்லா மகிழ்ச்சி. உற்சாகமாய் வீடு திரும்பியவள், அடுத்த நாளே, அனைத்தையும் தயார் செய்து, கொண்டு வந்தாள். திண்பண்டங்கள் மிகவும் சுவையாக இருந்ததால் அனைத்தும், கண்மூடித் திறக்கும் முன் தீர்ந்துவிட்டது. வாக்குகளை கணக்கெடுக்கையில், நான்கு விதமான திண்பண்டங்களுக்கும், ஏறக்குறைய ஒரே அளவு வாக்குகள் வந்திருந்தன.

அதைப்பற்றி அறிந்த மதுமிதா முகத்தில் மீண்டும் வருத்தம். போட்டிக்கு எதைக் கொண்டுபோவது என்ற குழப்பம்.

ஆனால் அவற்றைச் சுவைத்த தலைமை ஆசிரியர், மதுமிதாவின் திறமைகளைப் பற்றி அறிந்து, அவளை அழைத்துப் பேசினார்.

“நீ கொண்டுவந்த எல்லா திண்பண்டங்களும் ரொம்ப அருமையா இருந்துது மதுமிதா!” மனதார பாராட்டினார்.

“நன்றி ஐயா!” அவளும் பணிவாக பதிலளித்தாள்.

“உனக்கு சிரமம் இல்லேன்னா, அடுத்த வாரம் நடக்குற நம்ம பள்ளி ஆண்டு விழாவுக்கு, இதையெல்லாம் செஞ்சு எடுத்துட்டு வர முடியுமா மா!”

அவர் கேட்டது தான் தாமதம்; மதுமிதா கண்கள் விரிய, உற்சாகமாய் சம்மதம் என்று தலையசைத்தாள். அவளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதாக அவர் மேலும் விவரங்கள் சொல்ல, அதையெல்லாம் கவனமாக உள்வாங்கியவள், நன்றி கூறி விடைப்பெற்றாள்.

பள்ளி ஆண்டு விழா நாளும் வந்தது. ஆரவாரமும், கொண்டாட்டமும் நிறைந்த அந்த விழாவில், மதுமிதா செய்த திண்பண்டங்களை பற்றிய பாராட்டுகளுக்கும் குறைவு இல்லை.

விழாவின் சிறப்பு விருந்தினராய் பங்கெடுத்துக் கொள்ள வந்த உணவுத்துறை அதிகாரி அவற்றை ருசித்தார். அவற்றின் நற்குணங்களை அறிந்தவர், தலைமை ஆசிரியரிடம் விவரங்களை கேட்டறிந்து கொண்டார். மதுமிதாவை அழைத்துப் பாராட்டவும் செய்தார்.

இத்தனை சத்து நிறைந்த திண்பண்டங்கள், பள்ளி உணவகத்தின் பட்டியலில் அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார்.  அதை, முதலில் அவர்கள் பள்ளி உணவகத்தில் செயல்படுத்தி பார்க்கும்படியும் ஆலோசனை சொன்னார். தலைமை ஆசிரியரும் உடனே செவிசாய்த்தார்.

காலம் தாழ்த்தாமல், தொடர்ந்து வந்த திங்கட்கிழமை அன்றே, மதுமிதாவின் பாரம்பரியம் நிறைந்த சத்தான திண்பண்டங்கள், பள்ளி உணவகத்தில் விற்பனைக்கு தயாரானது. அவள் “பெண்கள் சாரணர்” குழு நடத்தவிருந்த போட்டியில் பங்கெடுத்து கொள்ளும் முன்னரே, பள்ளி வளாகத்தில் பிரபலமானாள்.

வெற்றி-தோல்வியை பற்றி கவலைப்படாமல், மகிழ்ச்சியாக அந்த போட்டியில் கலந்துக் கொண்டாள். உண்மையான உழைப்புக்கும் முயற்சிக்கும் தோல்வியே இல்லை என்று தெளிவாக உணர்ந்தாள். எதிர்காலத்தில் நிகழ்ந்த போட்டிகளிலும், தன்னம்பிக்கை மட்டுமே கொண்டவளாய், உற்சாகமாய் பங்கெடுத்துக் கொண்டவள், முயற்சியே முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை என்று கண்டறிந்தாள்.

Advertisement