Advertisement

மின்னல் – 25

              சரோஜாவிடம் அன்று பேசியபிறகு அவர் எதிரே வந்தால் கூட ஜீவா அப்படி ஒருவர் இருப்பதாகவே கவனித்துக்கொள்வதில்லை.

வேலை நேரத்தில் தன்னிடம் அதன் சமபந்தமாக கேட்பதற்கு மட்டுமே பதில்களும், அதில் ஏதேனும் சந்தேகம் என எழுந்தால் அதனைக்கொண்டு விளக்கமும் என்று இருந்துவிட்டாள்.

சில வார்த்தைகள் மறக்க வைக்கும், சில வார்த்தைகள் மன்னிக்க வைக்கும். சில வார்த்தைகள் எக்காலத்திலும் ஆறாத வடுவாக படிந்துவிடும். அப்படித்தான் சரோஜாவின் பேச்சுக்களும், செயல்களும் ஜீவாவிடம் படிந்துவிட்டது.

ஒரு தாயாய் அவர் பார்வையில் தன்னை பார்த்திருந்தால் தன் நிலை புரியாமல் போயிருக்குமா? என எண்ணாமல் இருக்கமுடியவில்லை அவளால்.

“என்ன ஜீவா? சரோ மேம் சும்மா சும்மா உன்னை பார்த்துட்டு போறாங்க?…” என வானதி கூட கேட்டுவிட்டாள்.

“எனக்கென்ன தெரியும்? அவங்க பார்த்தாங்கன்ன அவங்கட்ட தான் கேட்கனும்…” என்று சொல்லிவிட்டாள்.

ஆனாலும் வானதியிடம் அதற்கு மேலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஜீவாவால். சொல்லிவிட்டாள் அன்று நடந்ததையும், சரோஜா பேசியதற்கு தன் பதிலையும்.

“இதைவிட யாராலையும் பளிச்சுன்னு சொல்ல முடியாது. சரியா திருப்பி குடுத்த நீ…” என வானதி அவளை பாராட்டினாள்.

ஆனாலும் மனதின் வலியை முகத்தில் காண்பிக்காமல் இருக்க முடியவில்லை ஜீவாவால்.

கடந்து செல், தூக்கி எறி என்பது எத்தனை எளிதோ, அத்தனை கடினம் அவற்றை செயல்படுத்துவது என்பது. அதனை அனுபவிக்கும் ஜீவாவும் நன்றாக  உணரத்தான் செய்தாள்.

அன்று பணி முடிந்து இரவு நேரமாகி கிளம்பும் முன்பே சரோஜா வந்துவிட்டார் ரிசப்ஷனிற்கு.

“டூ மந்த்ஸ் பேக் உள்ள ரிஜிஸ்டர் லெட்ஜர் வேணும். அதை சாஃப்ட் காப்பியும் ஆபீஸ் ரூம்க்கு மெயில் அனுப்பிருங்க…” என தேதிகளை குறிப்பிட்டு பொதுவாக சொல்ல ஜீவா பதில் சொல்லாமல் வானதி மட்டுமே பதிலளித்தாள்.

ஜீவா கிளம்புவதற்கு ஆயத்தமாவது தெரிந்தது சரோஜாவிற்கு. எப்படியும் தென்றலும் வராமல் இருக்க பாலா இன்றி ஜீவா செல்ல போவதில்லை என்று தெரியும்.

பின்பு ஏன் இத்தனை அவசரம்? என வாய்வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டு வானதியிடம் பேச,

“நான் இப்ப அனுப்பிடறேன் மேம்…” என்றாள் அவள்.

“அனுப்பிட்டு கிளம்புங்க. இன்னும் நெக்ஸ்ட் ஷிப்ட் ஸ்டாஃப் வரலை தானே? வெய்ட் பண்ணுங்க. அதுக்குள்ளே கிளம்பினா இங்க யார் இருக்க?..” என சொல்லிவிட்டு செல்ல,

“அதிகாரத்தை பாரேன். நாம என்ன அப்படியேவா விட்டுட்டு கிளம்ப போறோம்? இது அடங்காது…” என்றாள் வானதி சரோஜா செல்லவும் கோபமாய்.

“இவங்கலாம் மாறக்கூடிய ஆட்கள் இல்லை. நாம அதுக்காக பார்க்க கூடாது. நீ பேக் பண்ணு, நான் மெயில் அனுப்பிடறேன். பாலாவும் இன்னும் வரலை. டைம் இருக்கு…” என மீண்டும் கணினியின் முன் அமர்ந்தாள்.

“ஓகே, நீ மெயில் மட்டும் அனுப்பு. லெட்ஜரை நான் கொண்டுபோய் குடுக்கறேன். வாங்கிட்டும் போகாம போயாச்சு அந்தம்மா…” என்ற வானதி,

“வாயேன் அப்படியே வீட்டுக்கு போகலாம். என்ன சொல்ற?…” என கேட்க,

“இல்ல வானதி. பாலா வந்திருவாங்க. அதுவும் இல்லாம தென்றல் வீட்டுல தனியா இருப்பா. அவ தைரியமா இருந்துப்பேன்னு சொன்னாலும் மனசு கேட்கலை. பாலா வந்திட்டு இருக்காங்க…”

“ஹ்ம்ம், ஓகே ஓகே. இன்னும் எத்தனை நாள் இங்க இருப்பாங்க கிருஷ்ணா ஸாரோட அத்தை?…”

“திரும்பவும் அவங்களுக்கு இன்ஃபெக்ஷன் ஆகியிருக்குன்னு சொல்லியிருக்காங்க. தெரியலை. உண்மையா இப்ப அவங்க நிலைமை சொல்லிக்கும்படி இல்லைன்னு பாலா சொன்னாங்க….”

“ஹ்ம்ம், அவங்க இத்தனை மாசம் போராடி உயிரை பிடிச்சு வச்சிட்டு இருந்ததே பெரிய விஷயம்ன்னு சொன்னாங்க இங்க உள்ள ஸ்டாஃப்ஸ்…” வானதி சொல்லும் பொழுதே வினோதினி வந்துவிட்டாள்.

“ஹலோ மிசஸ் கிருஷ்ணா…” என்று சீண்டலுடன் சொல்ல ஜீவா கோபமில்லாத முறைப்பாய் பார்த்தாள்.

“நீ முறைச்சுக்கோ, யார் வேண்டாம்ன்னா. நான் அப்படித்தான் கூப்பிடுவேன். நான் தான் அன்னைக்கே சொன்னேனே உனக்கு ட்ரீட்மென்ட் குடுக்கும் போதே? இங்க யாரும் நம்பலை. ஆனாலும் முதல்ல கண்டுபிடிச்சது நான் தான்…” என்று தனது பணி சீருடையின் காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள் வினோதினி.

“ரொம்ப பெருமை தான்…” வானதி கிண்டலடிக்க,

“இல்லையா பின்ன? ஏன் ஜீவா, எங்க உன்னை பிக்கப் பண்ண வர ஸாரை இன்னும் காணும்?…” வினோதினி ஜீவாவிடம் திரும்பினாள்.

“அதானே பார்த்தேன்…” என்று வானதி மீண்டும் கேலியாய் பார்க்க,

“விஷ் பண்ணத்தான் கேட்டேன். உனக்கென்ன?…” என்று வானதியிடம் வாயாடினாள் வினோதினி.

“நான் உங்க விஷ்ஷை சொல்லிட்டேன் சிஸ்டர். அவங்களுக்கும் சந்தோஷம் தான். தேங்க்ஸ் சொன்னார்…” இடையிட்டு ஜீவா வினோதினிக்கான பதிலை தர,

“ஆனாலும் நேர்ல நான் பார்த்து சொல்ற மாதிரி இருக்காதே?…”

“அடடா, அப்ப இங்கயே இருங்க. இப்ப வந்திடுவாங்க. நீங்க இருந்து விஷ் பண்ணிட்டே போலாம்…”ஜீவா சிரிப்புடன் சொல்லவும்,

“ம்க்கும், இன்னைக்கு சரோஜா மேம்கிட்ட நான் திட்டு வாங்கிடனும் அதானே உன் ப்ளான்?…” வினோதினியின் முகம் சலிப்பிற்கு செல்ல,

“நாம வாங்கினதே இல்லைல? என்ன சிஸ்டர்?…” என்று சிரித்த வானதி லெட்ஜரை எடுத்துக்கொண்டு அடுத்த ஷிப்ட் ஸ்டாஃப் வரவும் இடம் விட்டு வெளியே வந்தாள்.

“சும்மா இரு வானதி…” என்ற ஜீவா,

“அப்படியெல்லாம் இல்லை. இன்னைக்கு இன்னும் வரலை. இன்னொருநாள் நிச்சயம் பார்க்கலாம்…” என சொல்ல அவளுக்கும் போன் வந்துவிட்டது பாலாவிடம் இருந்து.

“ஜீவா கிளம்பி வெளில வா. கேட் கிட்ட வெய்ட் பன்றேன்…”

“என்ன உள்ள வரலையா?…”

“இல்லை, வந்தா லேட் ஆகிடும். உன்னை வீட்ல ட்ராப் பண்ணிட்டு இன்னொரு வேலையா வெளில போகனும். உடனே வா. நான் பக்கத்தில வந்துட்டேன்…” என்றவன்,

“லீவ் சொல்லியாச்சா?…” என்றதும் தான் ஞாபகம் வந்தது.

“இன்னும் இல்லையே?…”

“என்ன நீ? காலையில சொல்லியிருந்தேன் தானே? எப்படி மறந்த?…” என கடிந்தவன்,

“ஓகே, மறக்காம சொல்லிட்டு வா…” என சொல்லி துண்டித்துவிட்டான்.

உடனே தனது கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கு தன்னிடத்திற்கு வந்த ஸ்டாஃபிடம் சொல்லிவிட்டு வானதி அருகே வர,

“என்ன கிளம்பியாச்சா? ஸார் எங்க?…” என்றாள் வானதி.

“அவர் கேட் கிட்ட வெய்ட் பன்றார். இப்ப போய் சரோ மேம்க்கிட்ட லீவ்க்கு சொல்லனும். வா உன்னோடவே வந்து சொல்லிட்டு கிளம்பறேன்…”  என்றாள் ஜீவா.

“நானும் அந்த ஃப்ளோர் தான். வாங்க…” என வினோதினியும் உடன் நடக்க,

“ஆமால, நாளைக்கு கோர்ட்க்கு போகனும் இல்லையா? மறந்திட்ட நீ?…” என்ற வானதி சட்டென பேச்சை நிறுத்திவிட்டாள் வினோதினியை கருத்தில் கொண்டு.

“அட ஆமாப்பா, நானும் பார்த்தேன், ந்யூஸ் பேப்பர்ல கூட போட்டிருந்தாங்க. அந்த கேஸ்ல நாளைக்கு ஜட்ஜ்மென்ட்ன்னு…” என்ற வினோதினி,

“நீ ஒன்னும் கவலைப்படாத. தைரியமா இரு. அதான் கிருஷ்ணா ஸார் இருக்கார்ல…” என்று ஜீவாவின் தோளை தட்டிக்கொடுத்தாள் வினோதினி.

வினோதினியின் குணம் முன்பை போலவே இபோதும் மாறவே இல்லை. அதே லொடலொட பேச்சு இருந்தாலும் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பாங்கும், நல்லவிதத்தில் புரிந்து கொள்வதும் என்று இருந்தார்.

“தேங்க்ஸ் சிஸ்டர், புரிஞ்சி பேசினதுக்கு…” என்று வானதி வினோவின் கையை பிடிக்க,

“இதுல புரிஞ்சுக்க தனியா படிக்கனுமா என்ன? அதான் ந்யூஸ்ல எல்லாம் சொன்னாங்களே? அதுவும் இல்லாம தப்பிருந்தா இங்க வேலை பார்க்க முடியுமா என்ன? எல்லாத்துக்கும் மேல கிருஷ்ணா ஸார் கல்யாணமே பண்ணிருக்கார். போதாதா? அதைவிட ஜீவாவோட இந்த ஒருவருஷ பழக்கமே சொல்லுமே…”

வினோதினி அடுக்கிக்கொண்டே செல்ல உண்மையில் ஜீவா நெகிழ்ந்துதான் போனாள்.

“சரி சரி, நான் வார்டுக்கு போறேன். நீங்க கிளம்புங்க…” என்று கிளம்பிவிட்டாள் வினோதினி.

வானதியும், ஜீவாவும் சரோஜா இருக்கும் அறைக்குள் வர அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்துவிட்டு லெட்ஜருக்கு கையை நீட்டினார்.

“மேம், நாளைக்கு எனக்கு லீவ் வேணும்…” ஜீவா நேரடியாக கேட்க,

“ரீசன்?…” என்றார்.

“கோர்ட்டுக்கு போகனும். கேஸ்ல ஜட்ஜ்மென்ட் நாளைக்கு…” என்று சொல்ல,

“ஓஹ் அந்த கேஸா?…” என்ற குரலில் வானதிக்கு கடுப்பானது.

“ஆமா மேம். அதே கேஸ் தான்…” என்றாள் ஜீவா எந்த பாவனையும் முகத்தில் காண்பிக்காமல்.

அதுவே அவளின் அடக்கப்பட்ட கோபத்தையும், துணிவையும் பறைசாற்ற சரோஜாவிற்கு இன்னும் கோபம் மூண்டது.

“செஞ்ச வேலைக்கு உனக்கு இத்தனை திமிர் தேவை தான்…” என்றார் நக்கலுடன்.

“எனக்கு என்ன தேவை, தேவை இல்லைன்னு நான் முடிவு பண்ணிக்கறேன் மேம். நான் லீவ் சொல்ல தான் வந்தேன்…” என்றாள் அப்போதும் அதே குரலில்.

“இல்லைன்னு சொன்னா? எனக்கு அந்த பவர் இருக்கு…” என்றவரை வானதி திகைத்து பார்த்து பதில் பேசும் முன்,

“நான் ஷக்தி மேமை கான்டெக்ட் பண்ணி கேட்பேன். தட்ஸ் ஆல்…” என ஜீவா சொன்னதும் வேகமாய் எழுந்துவிட்டார் சரோஜா.

Advertisement