Advertisement

“எவ்வளவு துணிச்சல் உனக்கு?…” என்று பேசவதற்கு முன்,

“நிறுத்துங்க மேம்., அவ என்ன உங்களுக்கு எதிரியா? இத்தனை தூரம் இளக்காரமா பேசறீங்க? உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. ஏதோ புரியாம கோவத்துல பேசறீங்கன்னு பார்த்தா இது ரொம்ப இருக்கே?…”

“வானதி, அவ கூட சேர்ந்து உனக்கு…” என வானதியிடம் திரும்ப,

“பேசுங்க மேம், நான் ஒன்னும் அவளை மாதிரி உங்களுக்கு பொறுமையா பதில் சொல்லமாட்டேன். இங்க வேலை செய்யாததுக்கு கேள்வி கேட்க உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு. ஆனா பர்சனல் ஸ்பேஸ்ல தலையிட எந்த ரைட்சும் இல்லை…” என்ற வானதி,

“நீ ஏன் ஜீவா பொறுமையா இருக்க? இப்பவே வா மேனேஜ்மென்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணுவோம். இப்படி பர்சனல் அட்டாக் பன்றாங்க, மெண்டலி டார்ச்சர் பன்றாங்கன்னு. அங்க இவங்க இதே மாதிரி பேசட்டும் பார்ப்போம்…” என்றதும் சரோஜா நடுங்கி போனார்.

“என்ன மேம்? இங்க ரூல்ஸ் தெரியும் தானே? சேவைக்காக நடத்தப்படற ஹாஸ்பிட்டல். அவங்களை விடவா உங்களுக்கு இது பெரிய விஷயமா போச்சு? ஷக்தி மேமும், ஷேஷா ஸாருமே இவங்க கல்யாணத்தை அவங்க வீட்டுல வச்சு நடத்தி வச்சிருக்காங்க…”

“இதுல இருந்து தெரிய வேண்டாமா உங்களுக்கு? அம்மா மாதிரி வயசுல இருக்கறவங்க. ஒரு பொண்ணோட வலியை புரிஞ்சுக்க முடியலை. நீங்க என்ன உங்க பொண்ணுங்களுக்கு நல்லதை சொல்லி குடுத்திட போறீங்க?…” என்றாள் கோபத்துடன்.

“வானதி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்…” என்றார் அவளை.

“நீங்க மைண்ட் பண்ணுனீங்களா? இல்லையே? இந்த விஷயத்துக்கு சமபந்தப்பட்ட ஜீவா கம்ப்ளைன்ட் சொல்லனும்னு இல்லை. நேர்ல பார்த்த நானே போய் சொல்லலாம். ஆக்ஷன் எடுப்பாங்க. என்ன நடக்கும்ன்னு தெரியும் தானே?…”

வானதியின் பேச்சில் ஆடிப்போனார் சரோஜா. உண்மை தானே? இது மேலிடத்திற்கு தெரிந்தால் தன் வேலை மட்டுமா போகும்? மௌனமாக நிற்க,

“மேம் நாளைக்கு நான் லீவ். இதை சொல்ல தான் வந்தேன். இன்பார்ம் பண்ண வேண்டியது என் கடமை. அது முடிஞ்சது…” என சொல்லிவிட்டு வானதியை இழுத்துக்கொண்டு ஜீவா வெளியேறினாள்.

“எதுக்குடி இழுத்துட்டு வந்த? இன்னும் நல்லா நாலு கேள்வி கேட்டிருப்பேன்ல?…”

“நல்லா கேட்ட போ. அவங்க முகமே வெளுத்து போச்சு. ரொம்ப பயந்திட்டங்க. இதுக்கு மேல நீ பேச ஒண்ணுமில்லை. விடு. சிலர் அப்படித்தான்…”

“இப்படியே விட்டா நாளைக்கு எல்லார்கிட்டையும் இதை காட்ட தோணும். இத்தனை நாள் கண்டிப்பானவங்கன்னு வயசுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருந்தா இவங்க இவங்களுக்கு எல்லாரும் பயந்து அடங்கி இருக்காங்கன்னு நினைச்சு சுத்திட்டிருந்திருக்கு…”

வானதி சொல்லிய தன்மையில் ஜீவாவிற்கு சிரிப்பு வந்துவிட அவளின் தோளில் கைபோட்டு அணைத்துக்கொண்டவள்,

“போதும்டி பட்டாசு. சரியான வாய் உனக்கு…” என சிரிக்க,

“யப்பா, உனக்கு கூட என்னை உரிமையா டி சொல்ல வருதே?…” என்று ஜீவாவை கிண்டலாய் பேசினாள்.

அதில் லேசான ஆதங்கமுமே தூறியிருக்க, ஜீவாவுக்கு புரியாமல் இல்லை அவள் பேச்சை.

“கூப்பிட கூடாதுன்னு இல்லை. ஆசை தான். ஆனா…”

“ஆனா நெருங்கி இருந்தா உண்மையை சொல்லிருவேன்னு விலகி நின்ன அதானே? சரியான தேய்ஞ்ச ரெக்கார்ட். போடி போடி…” என்று கிண்டலாய் சொல்லி இருவரும் கேட் அருகே வர பாலா காரில் சாய்ந்தபடி நின்றுகொண்டு இருந்தான்.

அதுவரை போனில் பேசிக்கொண்டிருந்தவன் ஜீவாவை பார்த்ததும் பேசி முடிக்கவும் சரியாக இருந்தது.

“நீங்க என்ன இந்த பக்கம்?…” என வானதியை பார்த்து கேட்டுக்கொண்டே மொபைலை பாக்கெட்டில் வைத்தவன் ஜீவாவை பார்த்தான்.

மலர்ந்த முகத்துடன் இதழ்களில் குடிகொண்ட சிரிப்புடன் அவளை பார்க்க தெவிட்டவில்லை. ஜீவாவின் புன்னகை பாலாவின் இதழ்களிலும் தொற்றிக்கொண்டது.

“சும்மா பேசிக்கிட்டே வந்தோம். அதான். நான் இந்த பக்கம் போய்டுவேன் ஸார்…” என்றாள் வானதி.

“லீவ் சொல்லிட்டியா ஜீவா?…” என மனைவியிடம் அவன் கேட்க,

“நான் லீவ் சொல்லி, இவ சரோ மேமை மிரட்டி. இழுத்துட்டு வரதுக்குள்ள சரியா போச்சு…” என்ற ஜீவாவை புரியாமல் பார்த்தான்.

“போகும் போது சொல்றேன். இப்ப கிளம்புவோம். தென்றல் தனியா இருப்பா…” என்று வானதியிடம் சொல்லிக்கொண்டு காரில் ஏறிவிட்டாள்.

பாலாவும் வந்தமர அவனின் முகத்தில் அத்தனை டென்ஷன். அதற்குள் அவனுக்கு சசிகரன் அழைத்துவிட்டான்.

அழைப்பை காரில் இருந்த ப்ளூடூத்தில் கனெக்ட் செய்தவன் பேச ஆரம்பிக்கும் முன்,

“கிருஷ்ணா நான் கேள்விப்பட்டது உண்மையா?…” என்றதும் விஷயம் அவனுக்கு தெரிந்துவிட்டதில் பாலாவிற்கு சங்கடமாக இருந்தது.

“உண்மை தான் சசி. நீ என்ன டிசைட் பண்ணிருக்க? போகலாம்ன்னா சொல்லு, நான் கூட வரேன். இல்லை தனியா போறதா இருந்தாலும்…”

“இல்லை நான் போகலை. எனக்கு சரியா தோணலை இது. வேணும்னு பன்றாங்களோ?…” என்றான்.

“அப்படி தெரியலை. நிஜமாவே அங்க சண்டை தான். பெருசாகறதுக்குள்ள தடுத்துட்டாங்க. அதுக்குள்ளே ஸார்க்கு அடிபட்டிருச்சு…”

“ஹ்ம்ம்…” என்று சசிகரன் பேசாமல் நிறுத்த,

“டேய் என்னடா சைலன்ட் ஆகிட்ட? ஒருவேளை உன்கிட்ட மனசுவிட்டு பேச கூட கூப்பிடலாமே? நான் வரேன். போய்ட்டு வரலாம்…” என்றான் பாலா.

“இல்லை, இஷ்டமில்லை. விடுடா. ஓகே, இது உண்மையான்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன். குட்நைட்…” என்று சொல்லி அவன் அழைப்பை துண்டித்துவிட பெருமூச்சொன்று எழுந்தது பாலாவிடம்.

“என்னாச்சு? யாருக்கு யாருக்கு சண்டை?…” என்றாள் ஜீவா.

“ஹ்ம்ம்…” என்று ஒரு கையால் நெற்றியை துடைத்துக்கொண்டு அவன் அவளை பார்த்தான்.

“பாலா உங்கக்கிட்ட தான்?…”

“என்கிட்டே தான். என்ன சொல்லு?…” அவன் அவளிடம் அவன் கேட்க அவன் பேச்சை மாற்றுகிறானோ என்று அவள் அதை விடுத்து வேறு பேசினாள்.

“தென்றல் என்ன செய்யறா? வீட்டுல இருந்து தான் வரீங்களா இப்போ? போன்  பண்ணினேன் கிளம்பறதுக்கு முன்னாடி. படிச்சிட்டு இருக்கேன்னு சொன்னா…”

“ஆமா, வீட்டுல இருந்து தான் கிளம்பினேன். அதை விடு. என்ன சொன்னாங்க உங்க சரோ மேம்?…” என்றவனிடம் நடந்ததை சொல்ல,

“பேஷ் பேஷ்…” என்று சிரித்தான்.

“கிண்டலா உங்களுக்கு? சும்மாவே அவங்க அட்வான்டேஜ் எடுக்கறேன்ற மாதிரி பேசிட்டு இருக்காங்க. இதுல இந்த வானதி வேற கொம்பு சீவற மாதிரி மிரட்டிட்டா…”

“யாராச்சும் ஒரு ஆள் அதட்டி வைக்கனும் தானே? அந்த அளவுக்கு இறங்கினது அவங்களோட தப்பு. அதோட பலனை அவங்க அனுபவிக்காங்க…” என்றான் சாதாரணமாக.

“ஹ்ம்ம்…” என்று வெளியே வேடிக்கை பார்க்க திரும்ப,

“ஜீவா…” என்று அவளின் கையை எடுத்து தனது நெஞ்சில் பதித்துக்கொண்டான்.

“என்னாச்சு பாலா?…” என்றாள் மீண்டும் அவனின் குரலிலும், செய்கையிலும்.

“நத்திங்…” என்று வீட்டின் அருகே சற்று தள்ளி காரை ஓரமாய் நிறுத்திவிட்டான்.

“என்ன பன்றீங்க? வீடு வந்திருச்சு…”

“தெரியும்டி. கொஞ்ச நேரம் பேசாம இரு…” என்று கண்ணை மூடி சாய்ந்தான்.

சிறிது நேரம் அவளும் அமைதியாக இருக்க பாலவாகவே விஷயத்தை சொன்னான்.

“டென்ஷனாவே இப்படியே லைப் போகுதேன்னு உஅங்கு சலிப்பா இல்லையா?…” என கேட்க அவள் முகத்தில் சிறு புன்னகை.

“என்ன திடீர்ன்னு?…”

“சும்மா தான் கேட்கனும்னு தோணுச்சு. நீ சொல்லு…” என்றான்.

“அதெல்லாம் இல்லை. சொல்ல போனா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கே எனக்குன்னு ஒரு உறவு. நான் தேடினாலும் கிடைக்காத ஒரு உறவா நீங்களாவே என்னை உங்க வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்தீங்க. இதுல எப்படி எனக்கு சலிப்பு வரும்?…” அவனை எதிர் கேள்வி கேட்டாள்.

“நமக்கு எதுக்குமே நேரமில்லை. சந்தோஷமா பேசி, விருப்பு வெறுப்புகளை தெரிஞ்சுக்க கூட முடியலை. கல்யாணம் ஆனதுல இருந்து கோர்ட், கேஸ்ன்னு அலையறோமேன்னு உனக்கு தோணுமோன்னு நினைச்சேன்…”

“இப்ப எதுக்காக இந்த பேச்சு? எனக்கு புரியலை. என்னவோ பேச வந்துட்டு வேற என்னவோ பேசறீங்க?…” என்றதும்,

“நீ ஏன் என்னை கேள்வி கேட்டுட்டு நான் பதில் சொல்லலைன்னதும் அதை அப்படியே விட்டுட்ட?…”

“இது ஒரு விஷயமா? சொல்லனும்னா நீங்களே சொல்லுங்க…” என்றவளை முறைத்தான்.

“என்ன என்ன முறைப்பு? எனக்கு சொல்லுங்கன்னு சண்டை போடனுமா என்ன?…” என்றாள் சிரித்துக்கொண்டே.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன். கொஞ்சம் என்னை தட்டி கேட்கலாம் நீ…”

“கேட்கலாமே?…” என்றவள் அவனின் தோளில் தட்டி,

“என்னவாம்? என்ன விஷயம்?…” என்று கேட்டு அவள் கேட்டதில் அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

“கொழுப்புடி உனக்கு…” என்று அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

“கார்ல வச்சுட்டு என்ன பன்றீங்க? முதல்ல இறங்கி வாங்க…” என்று கதவை திறக்க முயல அதுவோ லாக் செய்யப்பட்டிருந்தது.

“வீட்டுக்கு போனா தென்றல்ன்னு சொல்லி பக்கத்துல வரமாட்ட…”

“யார் நானா?…” என்று அவனை முறைக்க,

“ஓகே, நான் தான், போதுமா?…” என்றவன் முகம் மீண்டும் பழையபடி மாறியது.

“நாளைக்கு கோர்ட்ல ரொம்ப பாதுகாப்பா இருக்கனும். தென்றலை உன் பக்கத்துலையே வச்சுக்கோ. முக்கியமா நான் சொல்ற இடத்துல தான் இருக்கனும். தனியா எங்கயும் போய்ட கூடாது…” என்றான் பூடகமாக.

“பாலா…” என அவனின் கவலையான முகத்தில் இவள் திகைத்தாள்.

“போலீஸ் கஸ்டடில வச்சு அரங்கநாதனுக்கும் மயூரனுக்கும் இடையில கைகலப்பு ஆகிருச்சு. அதுல அரங்காநாதன்க்கு மைல்ட் இஞ்சூரி…”

“ஓஹ், எப்படி அத்தனை பேர் இருக்கும் போதே?…”

“சேர்த்து விசாரணை பண்ணிருக்காங்க. இதுல மயூரன் பெயிலுக்கு மூவ் பண்ணியும் கிடைக்காம போனதோட, அரங்கநாதன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால அங்கயே ஹைப்பர் ஆகி அட்டாக் பண்ண ஆரம்பிச்சிருக்கார். இது யாருமே எக்ஸ்பெக்ட் பண்ணாத ஒண்ணு…”

“ஓஹ்…” என்றவள் இதில் என்ன பேசுவதென்று தெரியாமல் பார்த்தாள்.

 “ரொம்ப டென்ஷனா இருக்கீங்களா பாலா?…” என்றவளின் கையை பிடித்துக்கொள்ள,

“ப்ச், இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா என்னவோ தோணுது….” என்று தன் நெஞ்சை நீவிவிட்டான்.

இருவருக்கும் அந்த சூழ்நிலையை கடக்கவே நேரம் பிடித்தது. எத்தனை நேரம் மௌனமாய் இருவரின் அருகாமையில் ஆறுதலை தேட? தென்றல் அழைத்துவிட்டாள் ஜீவன்யாவிற்கு.

“தென்றல்…” என்று அவள் மொபைலை எடுத்து காண்பிக்கவும்,

“வந்துட்டோம்ன்னு சொல்லு…” என்று காரை கிளப்பி வாசலுக்கு சென்றான்.

இரவு உணவு முடிந்தது மறுநாள் என்னென்ன கேள்விகள் வருமென்று இருவருக்கும் சொல்லிவிட்டு அதற்கு அவர்களின் பதிலையும் கேட்டு திருப்தியுற்றவனாக உறங்க சென்றான்.

ஆனால் அந்த உறக்கம் தான் வரும் நிலையில் இல்லை பாலாவை போல ஜீவாவிற்கும்.  

Advertisement